அழகியசிங்கர்
இந்தப் பகுதியில் இப்போது எழுதப் போவது பேயோன் கவிதைகள் பற்றி. ‘வாழ்வின் இயக்கத்தில் மனிதனின் தனிமை’ என்ற புத்தகம் 2016ல் வெளிவந்துள்ளது. அதில் அவருடைய எல்லாக் கவிதைகளையும் தொகுத்து புத்தகமாகக் கொண்டு வந்துள்ளார்கள்.
அதில் ஒரு வேடிக்கையான கவிதையைப் பற்றி இங்குக் குறிப்பிட விரும்புகிறேன்.
நம் முன்னாள் வாழ்ந்த ஒருவரை நையாண்டிப் பண்ணி கவிதை எழுதுவது சமீபத்தில் நடக்கும் நிகழ்ச்சி. சிறுகதையிலோ கவிதையிலோ அவர் ஒரு பாத்திரமாக மாறி தென்படுவார்.
குறிப்பாக நகுலனைப் பலர் பகடி பண்ணி எழுதியிருக்கிறார்கள்.
பேயோன் ஒரு கவிதையில் அப்படி எழுதியிருக்கிறார்.
நகுலனும், அவர் கவிதைகள், சிறுகதைகள், நாவல்கள் எல்லாவற்றிலும் பல எழுத்தாளர்கள் உயிருள்ள பாத்திரங்களாக உலா வருவார்கள்.
பேயோன் இன்று புகழ்பெற்ற கவிஞர். அவர் நையாண்டித் தனத்திற்கு அளவே இல்லை. எதையும் சாதாரணமாக எடுத்துக்கொண்டு படு சீரியசான விஷயங்களைச் சொல்லி விடுவார்.
எந்தக் கவியரங்கக் கூட்டங்களிலோ இலக்கியக் கூட்டங்களிலோ அவர் கலந்து கொள்வது இல்லை. இலக்கிய உலகில் தற்பெருமை இல்லாத கவிஞர்.
இவர் தான் யார் என்பதையே பிரகடனப்படுத்த விரும்பவில்லை.
இவர் கவிதை ஒன்றைத் தருகிறேன்.
தேவையானவை
பெங்களூர் தக்காளி – 2
குடை மிளகாய் – 1
கோஸ் – 1/4 கிலோ
காரட் – 3
வெண்டைக்காய் – 1/4 கிலோ
தேங்காய் – அரை மூடி
வெங்காயம் (சிறியது) – 5
பச்சை மிளகாய் – 4
துவரம் பருப்பு – 1/4 கப்
உளுத்தம் பருப்பு – 1/4 கப்
கொத்துமல்லி – 1 ஈர்க்கு
கறிவேப்பிலை – 2 ஈர்க்கு
பெருங்காயம் – 25 கிராம்
கடுகு – 1 டீஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ப
நான்கு இன்ச் ஆணி – 8
இது என்ன கவிதை என்று ஒருவர் கேட்கக் கூடும். ஒரு முறை சுஜாதா அவர்கள் வண்ணான் கணக்கு எழுதினாலே கதைதான் என்று சொல்லியிருக்கிறார்.
இக் கவிதையில் காய்கறிகளை அடுக்கி எழுதியிருக்கிறார். காய்கறிகள் வாங்கும்போதே மளிகைச் சாமான்களையும் வாங்குவதற்கு லிஸ்ட் போட்டிருக்கிறார்.கடைசியில் நான்கு இன்ச் ஆணிதான் எட்டு என்று பொருந்தாமல் எழுதியிருப்பது என் பார்வையில் படுகிறது. இதில்தான் கவிதை வெளிப்படுகிறது.
இதைப் படித்தவுடன் என்ன இப்படியெல்லாம் கவிதை எழுதியிருக்கிறாரே என்று சிரித்துக்கொண்டேன்.
பெரும்பாலும் இத் தொகுப்பில் காதல் கவிதைகள் என்ற பெயரில் கிண்டலடித்துத்தான் கவிதைகள் எழுதி உள்ளார்.
‘சாயல்’ என்ற கவிதையைப் பார்ப்போம்.
பழைய காதலி சாயலில் யாரோ
ஒருத்தியைத் தெருவில் பார்த்தேன்
பம்மிப் பதுங்கி அவளைக் கடந்து
பாதுகாப்பான இடத்திலிருந்து
திரும்பிப் பார்த்தேன்
அவளேதான் யாரைப் போலவோ
ஆகிவிட்டிருற்தாள்.
பள்ளிக்கூடத்தில் படிக்கும் குழந்தைகள் படும்பாட்டை ‘வாய்க் குழந்தை’ என்ற கவிதையில் வெளிப்படுத்துகிறார்.
டம்ளரில் மீதமிருக்கும்
ஒரு சொட்டு பாலைக் குடிக்க
பெரிதாகத் திறக்கிறான்
வாயைக் குட்டிப் பையன்
அவன் ஸ்கூல் பேகையே
உள்ளே போடலாம் போல
சிரிக்கும்படி சாதாரணமாக எழுதப்பட்டிருக்கும் கவிதையில் உள் அர்த்தமும் கிண்டலுடன் வெளிப்படுகிறது. வாசிப்பவரைக் கொஞ்சம் யோசிக்க வைக்கத் தவறவில்லை.
இப்போது ‘சேவ் நகுலன்’ என்ற கவிதையை எடுத்துக் கொள்வோம்.
நகுலனை விட்டுவிடுங்கள்
அவரெல்லாம் நல்ல கவிஞர்
சிக்கனமாக, அழகாக, மர்மமாக
எழுதுவார் வயதானவர்
உங்களுக்கும் எனக்கும் உண்மையிலேயே
புரிகிறதோ இல்லையோ
தத்துவங்கள் பொதிந்த கவிதைகளவை
புரிந்த வரைகூட
படிக்கும் ஒவ்வொரு கவிதையும்
ஒவ்வொரு வரியும்
சிந்தனைப் போதையேற்றும்
ஆமாம், அவர் தனியாகத்தான் இருந்தார்
தனிமை பற்றி எழுதினார் அழகாகக்
கருப்பு வெள்ளைப் படங்கள் எடுத்து
அவரை அஞ்சலிப் பாப்பாவாக்கி அழகுபார்த்தனர்
நீங்களும் அவர்களில் ஒருவராகாதீர்கள்
நம் சடங்குகளுக்கு அவர் ஆளல்ல
சிலரைப் போலவர் வாட்டசாட்டமாக,
ஐம்பது வயதாக இருந்தால்
இவ்வளவு சீந்துவீர்களா?
இதைக் கடைப்பிடியுங்களேன்:
நீ ஒருவரை நேசித்தால் அவரை விட்டுவிடு
அவர் உன்னிடம் திரும்பி வந்தால்
அவர் உன்னுடையவர்.
உத்தரவாதமாகச் சொல்கிறேன்
அவர் உங்களிடம் திரும்பிவர மாட்டார்
அவர் அந்த மாதிரி ஆளில்லை
அவர் இன்னும் வாழ வேண்டியிருக்கிறது
நண்பர்களே, நகுலனை விட்டுவிடுங்கள்
அவருடன் திருமதி சுசீலாவையும்தான்
நிலைமை கைமீறிப் போய்க்கொண்டிருக்கிறது
ஆகவே நகுலனை விட்டுவிடுங்கள்
வேறு எவனாவது கிடைக்காமலா போய்விடுவான்
நன்றாகத் தேடிப்பாருங்கள்
ஆனால் நகுலனை விட்டுவிடுங்கள்.
கூடவே திருமதி சுசீலாவையும்.
இந்தக் கவிதையின் தலைப்பு ‘சேவ் நகுலன்’. இந்தக் கவிதை எந்த ஆண்டில் எழுதப்பட்டிருக்கிறது என்று தெரியவில்லை. அந்தக் குறிப்பு புத்தகத்தில் இல்லை. ஆனால் கவிதையைப் படிக்கும்போது நிச்சயம் நகுலன் உயிரோடு இருந்திருக்க வேண்டுமென்று தோன்றுகிறது.
முதலில் நகுலனுக்கு ஏதோ ஆபத்து வந்து விட்டதுபோல் கவிகுரலோனின் கூப்பாடு இருக்கிறது. நகுலனை விட்டு விடுங்கள் அவரெல்லாம் நல்ல கவிஞர் சிக்கனமாக, அழகாக, மர்மமாக எழுதுவார் என்கிறார் கவிகுரலோன். முக்கியமாக அவர் வயதானவர். வயதானவர் என்பதாலேயே அவரை யாரும் தொந்தரவு செய்யாதீர்கள் என்கிறார்.
அடுத்த வரி இன்னும் கிண்டல். உங்களுக்கும் எனக்கும் உண்மையிலேயே புரிகிறதோ இல்லையோ என்கிறார் கவிகுரலோன். புரியாமலேயே நகுலனைப் பற்றி எல்லோரும் பேசுகிறோம். எழுதுகிறோம் நகுலன் தத்துவங்கள் பொதிந்த கவிதைகளைப் புரிந்த வரை கூட ஒவ்வொரு கவிதையும் ‘சிந்தனைப் போதையேற்றம்’ என்கிறார் கவிகுரலோன். அவரைப் புகைப்படங்கள் எடுத்து அஞ்சலி பாப்பாவாக மாற்றி விடுகிறார்கள் என்கிறார் கவிகுரலோன். இந்தக் குரலிலும் கிண்டல் தொனித்தாலும், அப்படிச் செய்வதை நகுலன் விரும்பமாட்டார் என்ற அக்கறை குரலும் தென்படுகிறது.
நீங்களும் அவர்களில் ஒருவராகாதீர்கள் என்கிறான் கவிகுரலோன். நகுலனைச் சடங்காக்கிக் கொண்டாடுவதால் நாமும் அவருடன் ஒன்ற முயற்சி செய்வதாகக் கூறுகிறார் கவிகுரலோன்.
இந்தக் கவிதையின் நடுப்பகுதியில் ஒரு சிறந்த கருத்தைப் பதிவு செய்கிறார் கவிகுரலோன்.
இதைக் கடைப்பிடியுங்களேன். ‘நீ ஒருவரை நேசித்தால் அவரை விட்டுவிடு. அவர் உன்னிடம் திரும்பி வந்தால் அவர் உன்னுடையவர்.’ உண்மையில் அப்படித்தான். இதுதான் நடைமுறை. உத்தரவாதமாகச் சொல்கிறார். நகுலன் உங்களிடம் திரும்பி வர மாட்டார் என்கிறார். உண்மையில் யார் தயவுக்காகவும் நகுலன் யாரையும் அண்டியதில்லை. அவர் இயல்பு அது. அதைத்தான் கவிகுரலோன் வெளிப்படுத்துகிறார். அவர் இன்னும் வாழ வேண்டியிருக்கிறது என்று சொல்லும்போது இந்தக் கவிதை எழுதியபோது நகுலன் உயிரோடு இருந்திருக்கிறார் என்ற எண்ணம் ஏற்படுகிறது.
நகுலனை விட்டுவிடுங்கள் அவருடன் திருமதி சுசீலாவையும் தான். கவிகுரலோனுக்கு சுசீலா ஒரு கற்பனைப் பாத்திரம் என்று தெரியும். நிலைமை கைமீறிப் போய்க்கொண்டிருக்கிறது என்று கூறும்போது நகுலனை அவராலேயே காப்பாற்ற முடியவில்லை என்று தோன்றுகிறது.
நகுலனை விட்டு விட்டு வேறு யாரையாவது தேடச் சொல்கிறார். யாராவது கிடைக்காமலா போய் விடுவான் என்ற கிண்டல் தொனியும் இதில் வெளிப்படுகிறது. நன்றாகத் தேடிப் பாருங்கள் என்கிறார். நகுலனையும் அவருடன் சுசீலாவையும் விட்டுவிடச் சொல்கிறார். இந்த சேவ் நகுலன் என்ற கவிதையில். இன்னும் பல பேயோன் கவிதைகள் சிறப்பாக எழுதப்பட்டுள்ளது. எல்லாக் கவிதைகளையும் பகடித் தன்மை மேலோங்கி நிற்கிறது.
அபத்தமாகக் காதல் கவிதைகளை எழுதிக் குவிக்கும் கவிஞர் ஒருவர் பேயோன் கவிதைத் தொகுதியைப் படித்தால் காதல் கவிதைகளை எழுதாமல் ஓடிவிடுவாரென்று தோன்றுகிறது.
15.01.2021
- “எலி” – சிறுகதை அசோகமித்திரன் (1972)
- இருப்பதோடு இரு
- கவிதையும் ரசனையும் – 9
- புதியனபுகுதல்
- நான்கு கவிதைகள்
- மூட முடியாத ஜன்னல்
- மாசறு பொன்னே
- தோள்வலியும் தோளழகும் – சுக்கிரீவன்(பகுதி 1)
- மொழிபெயர்ப்பு கவிதைகள் – ஜரோஸ்லவ் செய்ஃர்ட்
- பல்லுயிர் ஓம்பல்
- அட கல்யாணமேதான் !
- “விச்சுளிப் பாய்ச்சல்” (ஓரு கழைக்கூத்தாடிப் பெண்ணின் கதை)