கடலோரம் வாங்கிய காற்று

author
0 minutes, 0 seconds Read
This entry is part 6 of 16 in the series 31 ஜனவரி 2021

குணா (எ) குணசேகரன்

அறிகரி பொய்த்தல் ஆன்றோர்க்கு இல்லை

குறுகல் ஓம்புமின் சிறுகுடிச் செலவே

இதற்கு இது மாண்டது என்னாது அதன் பட்டு

ஆண்டு ஒழிந்தன்றே மாண் தகை நெஞ்சம்

மயில் கண் அன்ன மாண் முடிப்பாவை

நுண் வலைப் பரதவர் மடமகள்

கண் வலைப் படூஉம் கானலானே

மூத்தகுடி சொல்லிக் கேட்டதில்லை காதல் இல்லையென்று, காதல் நடந்ததில்லையென்று, காதலைக் கண்டதில்லையென்று.

நாம் நடந்த பாதையிலே நல்லதுவோ கெட்டதுவோ ஐம்புலனும் உணர்வதும் மெய்தானே.

நேரம் ஒரு பொருட்டல்ல, வயிறென்று உண்டென்றால் பசியென்று உண்டல்லோ, இல்லையென்று சொல்வதற்கு துறந்த முனி நானில்லை

வந்தும் போனது, திரும்ப வந்தது, சிறு ஈயல் முடியுங்கால் பசியும் மறைந்து போம், சில நேரம் காத்திருக்கும் மறுபடியும் தட்டி பார்க்கும்

மெய்யும் வாயும் இணைந்து போட்ட நெடுங்கால ஒப்பந்தம். சொல்வதைக் கேட்பதில்லை. சொல்லாமல் உணர்த்திவிடும் ‘பசி’

பசி வந்திட பத்தும் பறந்திடுமாம். நாம் உணர்ந்து செய்வதில்லை

உணரத் தலைப்படுவதுமில்லை, உணர்ந்து உணர்வித்தவை

‘காதல்’ வரும் வரை. ‘காதல்’ உணர்வு வரும் வரை

காதல் என்ற சொல் நம்மோடு கலந்து விடும் வரை

மாற்றி எழுத உள்ளூர உந்திய உணர்வு…

‘காதல் வந்திட பத்தும் பறந்து போம்’.

காற்றாட நடந்து போனேன். கடலோரம் வந்த காற்று..

திசை கொண்டு வந்ததில்லை… விசை கொண்டு முடிவானதில்லை…

கடலோரம் வாங்கிய காற்று… ஒவ்வொரு நாளும் வித்தியாசமாய்… வெவ்வேறு பரிணாமங்களில்… மிதமானதாய்… ஆக்கிரோஷமாய்… அசுரத்தனமாய்… வெவ்வேறு நேரங்களில்… ஆனால் இருந்து கொண்டே தான் இருக்கும். அலைகள் உள்ள வரை… அலைகள் உண்டான வரை.

அன்று வரை… உணர்ந்த காற்றுக்குள் வித்தியாசம் தெரியவில்லை… அவளைக் காணும் வரை…

பாண்டிச்சேரி கடற்கரைக்கு காற்று வாங்கப் போனவர்கள் நிச்சயம் அவளைப் பார்க்காமல் இருக்க முடியாது.

மனித நடமாட்டம் உணர்ந்து அவள் கடை அங்கு பரிணமிக்கும்… தினமும் மாலை நேரங்களில்… விடுமுறை நாட்களில் பெரும்பாலான நேரங்களில்…

காற்று வாங்க வருபவர்களுக்குள் நிச்ச்யம் உருவாகும் உள்ளுணர்வு… ஏதேனும் கொறிக்க வேண்டுமென்று… தாகம் தணிக்க வேண்டுமென்று.. அவள் இருப்பாள்… அவளுக்கென்று நிழலை கொடுக்க ஒரு குடை, சுற்றிலும் கொறிக்க, தணிக்க…

வித்தியாசமான கடை. யாரையும் நாடி அவள் போனதில்லை. வேண்டுவோர் வருவர், வேண்டியதை எடுப்பர், உரிய விலை எழுதியிருக்கும், அருகில் உள்ள பெட்டியில் போட்டு விட்டுச் செல்வர்.

அவள் அமர்ந்திருப்பாள்… ஒரு புத்தகத்தை படித்துக் கொண்டு… இல்லை தொடைக் கணிணியை பார்த்துக்கொண்டு. அவளைப் பார்த்ததும் ஒருவித ஈர்ப்பு.

எனக்குள் ஒரு சந்தேகம்…

அவள் கவனிக்கிறாளா… யாரேனும் பொருளை எடுத்துக் கொண்டு விலையை தரவில்லையென்றால்…

வெகுநாட்களாய் கவனிக்கிறேன்… நான் பார்த்தவரை அப்படி ஒரு நிகழ்வு நடந்ததில்லை. எனக்கு மட்டும் ஏன் அப்படி தோன்ற வேண்டும்.

அன்று சற்று முன்னரே வந்து விட்டேன். கடல் காற்று இதமாய் வருடியது. தொலைவில் தானியங்கி வாகனத்தில் அவள் வந்து கொண்டிருந்தாள். ஒவ்வொரு நாளும் அந்த வாகனத்தைப் பார்த்திருக்கிறேன். இப்பொழுது தான் தெரிந்தது அது அவளது என்று. அவள் வாகனத்தை நிறுத்தி விட்டு, தாங்கி நடந்து, கடையை பரப்பி விட்டு அமர்ந்து கொண்டாள், எப்பொழுதும் போல்.

அவளைப் பார்த்ததும் எனக்குள் ஒரு குறுகுறுப்பு. பச்சென்று என்னவோ செய்தது. தினமும் போல் எனக்கு வேண்டியதை எடுத்துக் கொண்டு அன்று சற்று நிதானித்து அவளையே பார்த்தேன். பேச வேண்டும் போலிருந்தது. என்னவென்று பேச… எப்படி பேச… எப்படி தொடங்க… தயக்கத்துடன் சென்றுவிட்டேன்.

அந்த குறுகுறுப்பு எனக்குள்ளேயே தங்கிவிட்டதாய் உணர்ந்தேன். அவள் இருக்கும் போது… அவள் இல்லாத போது… என்னவென்று சொல்லத் தெரியவில்லை. எனக்குள் சில மாற்றங்கள். மற்றவர்கள் உணர்ந்தார்கள்.

அன்று அப்படித்தான். நண்பனுடன் வந்தேன். கடற்காற்று சற்று நிதானமாக… எனக்குள் அந்த நிதானம் இல்லை. அவளைக் காணோம். இல்லையென்றதும் பரபரப்பு… வேறு எங்காவது மாறி அமர்ந்திருப்பாளோ என தேடினேன். இல்லை… அவள் வரவில்லை. அவள் எங்கிருப்பாள்… எங்கு தேடுவேன். சின்ன ஊர் தான். எப்படியும் கண்டு பிடித்து விடலாம்… எனக்குள் எண்ண ஓட்டம் தான் ஓடியது. எதையோ தொலைத்து விட்ட பரபரப்பு.

“என்ன தேடுகிறாய்? என்னவாயிற்று உனக்கு, கொஞ்ச நாட்களாய்… நீ நீயாக இல்லை. உனக்குள் சில மாற்றங்கள்” – அவன் கேட்டான்.

சமாளித்தேன். அவன் சமாதானமாகவில்லை… அது அவன் பார்த்த பார்வையில் தெரிந்தது. திரும்பவும் கேட்டான். சொன்னேன்.

“அவள் யாரென்று தெரியுமா?” – கேட்டான்.

நான் பார்த்த பார்வை அவனுக்கு உணர்த்தியிருக்க வேண்டும். அவன் தொடர்ந்தான்.

“அவள் மெடிக்கல் ஸ்டூடண்ட்”.

சொன்னதும் எனக்கு ஜிவ்வென்றது. என்னைச் சார்ந்தவர் பற்றி இன்னமும் தெரிந்து கொண்ட சந்தோஷம். அவனையே பார்த்தேன்.

“அவளும் அம்மாவும் இருக்கிறார்கள். வேறு யாரும் இல்லை.” – அவன் சொல்லச் சொல்ல அநேக காலம் தெரிந்தது போன்ற உணர்வு.  அன்று அவனை விட்டு போக மனமில்லை. இன்னும் அவன் சொல்ல வேண்டும், நிறைய தெரிய வேண்டும் என்ற உணர்வு தான் மேலோங்கியிருந்தது.

இருட்டி விட்டது. கடற்காற்று சில்லென்று உறைத்ததும் தான் கிளம்பி போனோம். அந்த தாக்கம் என்னை விட்டுப் போகவில்லை.

அவளை எப்போது பார்ப்போம்… எங்கு பார்ப்போம்… ஏன் வரவில்லை… இனி வருவாளா… அவன் சொன்னானே, அவள் இருக்குமிடம் பற்றி… போய் பார்ப்போமா…

உந்துதல்கள் மேலோங்கியிருந்தது.

மறுநாள் விடுமுறை. காலையிலேயே எழுந்து விட்டேன். நடந்தேன். அவள் இருப்பதாக நண்பன் சொன்ன தெரு வந்ததும், உள்ளுக்குள் பலவித உணர்வுகள். நான் ஏன் இப்படி ஆனேன். இந்த வயதிலும் இப்படி ஆகுமோ? இது தான் அந்த பொறியா…தலைக்கு மேல் அடிக்கும் என்பார்களே அது தான் இதுவா…

அவள் வீட்டை கடக்கும் போது பரபரப்பு. அவளைக் காணவில்லை. எங்காவது தென்பட மாட்டாளா… பார்க்க மாட்டோமா… என்ற அடங்க மறுத்த உணர்வுகள். எப்படியும் பார்த்து விடுவோம் என்ற உள்ளுணர்வு… பார்க்கவில்லை. கடந்து போனதும் எதையோ இழந்து விட்ட உணர்வு.

மெல்ல நடந்தேன். காற்றின் வருடல் தேவையென உணர்ந்தேன். திரும்பி நடந்தேன்… கடற்கரை நோக்கி. எப்பொழுதும் போல்… அங்கு அவள். இவ்வளவு சீக்கிரமாய்… எனக்குள் ஆச்சர்யம்… ஆனந்தம்…

“ஹாய்” – சொன்ன என்னை ஆச்சர்யத்துடன் பார்த்தாள்.

“என்ன இவ்வளவு சீக்கிரம்” – கேட்டாள்.

“உங்களை விடவா?

அவள் புன் முறுவலித்து சொன்னாள். “ஏதோ முன்னாடி வந்தா வாக்கிங் போறவங்க வருவாங்கல்ல. கொஞ்சம் அதிகமா கிடைக்கும், அதான்”.

சொன்னவளையே பார்த்தேன். அவளுக்கு அந்த பார்வை குறுகுறுத்திருக்கும் போல… பார்வையை தாழ்த்திக் கொண்டாள்.

தொடர்ந்தேன். “கஷ்டமாயில்லை?”

“கஷ்டம் பார்த்தா…? அம்மாவால முடியுது. இங்க வர்றவங்களுக்கு இது தேவை. நான் இடைத் தரகர். அவங்க கொடுக்கறது எங்களுக்கு தேவை. அவ்வளவு தான். சேவைன்னு வெச்சுக்கலாம், ரெண்டு பக்கமும்.” – அவள் சொன்னது யோசிக்கத் தோன்றியது.

ஒவ்வொரு நாளும் ஒரு பேச்சு… ஒவ்வொன்றைப் பற்றி… வயதுக்கு மீறிய முதிர்ச்சி… அவளுக்குள். ஆழ்ந்த உணர்தல்கள். தீர்க்கமான எண்ணங்கள். தெளிந்த தீர்மானங்கள்… வாழ வேண்டியது பற்றி. எந்த ஒரு பேச்சிலும், நான் இப்படி என்ற எண்ணம் இல்லவே இல்லை. நான் நினைத்தது என்னால் முடியும் என்ற அதற்கான புரிதல்கள்.

பேசப்பேச எனக்குள் இருந்த உணர்வுகள் அதிகரிக்கவே செய்தன. உணர்வுகள் புரிதல்களாய்… புரிதல்கள் பிணைப்புகளாய்… பாசமாய்… தெளிந்த ஒரு நீரோடையாய் எங்களுக்குள் பரிணமிப்பதாய் உணர்ந்தேன். அவளுக்குள்ளும் இருப்பதாய் நினைத்தேன்.

சொல்ல மட்டும் தயக்கம்.

அன்று மப்பும் மந்தாரமுமாய்… வாடைக் காற்றுடன் கூடிய சில்லென்ற கடற்காற்று. அது அவளை தடை செய்யவில்லை. வந்திருந்தாள். வழக்கம் போல… நடப்பவர்களும்… அந்த தட்பநிலை பிடித்தவர்களும்…

லேசான தூறல் வலுவடைந்தது. அவள் கடையை மூடி கிளம்ப யத்தனித்தாள். தானியங்கி வாகனத்தை இயக்கினாள். சட்டென்று ஒரு பள்ளத்தில் சக்கரம் மாட்டியது. அந்த மழைக்கு அதைப்பற்றி கவலையில்லை. அவள் எவ்வளவோ முயன்றும் வெளிவர முடியவில்லை.

“உதவட்டுமா? – என்றேன்.

மறுத்து பேசவில்லை. ஆமோதித்தது போலிருந்தது. தூக்கி விட்டேன். ஒதுங்க இடம் வெகு தூரம்… அருகில் கட்டிடங்கள் இல்லை.

“ஆட்சேபணை இல்லையெனில், என் காரில் ஒதுங்கி, மழை விட்டதும் போகலாம்” – சொன்னதற்கு அவள் மறுப்பு தெரிவிக்கவில்லை.

தூக்கி அருகிலிருந்த என் காரில் இருத்தினேன். அவள் அருகாமை பிடித்திருந்தது. இன்னும் வலுப்படுத்தியது. அது காமமாயில்லை. என்னோடு இருந்து விடேன் என்று சொல்லத்தோன்றியது.

மழை விடும் பாடில்லை. முடிந்தவரை காருக்குள் அடக்கியிருந்தேன். தானியங்கி வாகனத்தை அடக்க முடியவில்லை. காத்திருந்தோம்.

அநேகம் பேசினோம். வாழ்க்கை பற்றி… வாழ வேண்டியது பற்றி… குறிக்கோள் பற்றி…

“என்னோடு வாழ சம்மதமா? நான் உறுதுணையாய் இருப்பேன்” – என்று இறுதியில் கேட்டேவிட்டேன்.

அவள் அமைதியாய் இருந்தாள்.

மழை விட்டது. எல்லாவற்றையும் வாகனத்தில் எடுத்து வைத்து புறப்பட்டாள். எதுவும் சொல்லவில்லை. எனக்குள் அநேக குழப்பம். மெதுவாக அவளைத் தொடர்ந்தேன்.

அவள் வீடும் வந்தது. அவள் வீட்டுக்குள் செல்லும் போது என்னைப் பார்த்து நின்றாள். காரை நிறுத்திவிட்டு இறங்கினேன்.

“அம்மா” – என்றபடி உள் சென்றாள்.

ஒரு பேரிளம் பெண் வெளிவந்தார். அவளின் அழகு எங்கிருந்து வந்ததென்று தெரிந்தது.

“சுரேஷ் சொன்னது இவரைத் தான்” – அவள் அம்மாவிடம் சொன்னதும் புரிந்தது.

அவள் சும்மா பேசவில்லை. தெரிந்தே பேசியிருக்கிறாள். என் நண்பன் சொல்லி தெரிந்திருக்கிறார்கள்.

“வாங்க தம்பி” – அவளின் அம்மா சொன்னதில் அநேக அர்த்தங்கள்.

கடலின் காற்று உள் வந்து என்னை வருடி ‘நண்பா என்னை மறந்து விடாதே’ என்று சொல்லிச்சென்றதாய் உணர்ந்தேன்.

“அநேக நாட்கள் பேசாமலே பார்த்துக் கொண்டிருந்ததாய் சொன்னான். சுரேஷ் இவளது அண்ணன் முறை”

சொன்னதும் எனக்குள் என்னைப் பற்றிய வெட்கம் வந்தது. என் மானம் போனதென்று நினைக்கவில்லை.

அவளைப் பார்த்ததும் என்ன படித்திருப்பாள் என்று யோசிக்கவில்லை. தொடர்ந்ததாய் நினைக்கவில்லை. உயர்வு தாழ்வு தோன்றவில்லை. உடல் ஊனம் தெரியவில்லை. காமம் தலை தூக்கவில்லை. ஒன்று மட்டும் தெரிந்தது. அது என்ன காதலா… அது தான் காதலா… இவ்வளவு நாள் அதைப் பற்றி பொருட்டாகவே நினக்காத எனக்குள்ளும் வந்து நின்றதுவே…

வருடிச் சென்ற, வீசிச்சென்ற, கடலோர காற்று எங்களுக்குள் விதைத்து வளர்த்து விட்ட அது வந்திட எல்லாம் மறைந்தது.

– குணா (எ) குணசேகரன்

Series Navigationகவிதையும் ரசனையும் – 10 – “பூஜ்ய விலாசம்” நெகிழன் கவிதைத் தொகுதிபக்கத்து வீட்டுப் பூனை !
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *