ஸிந்துஜா
சாமண்ணா இருந்த அந்தத் தெருவில் மொத்தம் இரண்டு கட்டிடங்களில்தான் குடும்பங்கள் வாழ்ந்தன. மற்ற கட்டிடங்கள் பலவிதமான வியாபாரிகளால் ஆளப்பட்டுக் கொண்டிருந்தன. நாலு மளிகைக்கடைகள், ஒரு ரைஸ் மில், ஸ்கூட்டர் ரிப்பேர் ஷாப், ஸ்டேஷனரி கடை, காய்கறிகள் விற்கும் அரசு ஸ்தாபன ஹாப்காம்ஸ், ஒரு நர்சரி, மங்களூர் பட்டர் நடத்தும் ஸ்நாக் பார், ஒரு டெய்லரிங் ஷாப், இரண்டு மருந்துக் கடைகள், மினி பல்பொருள் அங்காடி ஒன்று, டாக்டர் லலிதா என்று பெயர்ப் பலகை தொங்கிய விஷ்வாஸ் கிளினிக், மேலே கணினி நிலையம், கீழே ஜெராக்ஸ் கடை, ஒரு மட்டன் இறைச்சி ஸ்டால் என்று பரவிக் கிடந்தன.
சாமண்ணா குடியிருந்த ஸ்டோரில் மொத்தம் பதினாலு குடும்பங்கள் இருந்தன. கொஞ்சம் சௌகரியத்தை முன்னிட்டுக் கட்டப்
பட்டிருந்தால் ஏழு அல்லது எட்டுக் குடும்பங்கள்தான் அங்கு குடியிருந்திருக்க முடியும். சாமண்ணாவும் அவனது பெற்றோரும் இருந்த வீடு என்கிற முன்னூறு அடிக் கூட்டை அவர்கள் தந்து கொண்டிருந்த வாடகைக்கு வசதியான வீடு என்றுதான் நினைத்துக் கொள்ள வேண்டியிருந்தது.
சாமண்ணாவின் வீட்டுக்கு வலது புறம் இருந்த ஸ்கூட்டர் ரிப்பேர் ஷாப் , நர்சரி, மருந்துக்கடைகளைத் தாண்டி மற்றொரு கட்டிடம் இருந்தது. அங்கு இருந்தவர்கள் சௌகரியமாக வாழ்ந்தார்கள் என்று வெளியே இருந்து பார்க்கும் போதே தெரிந்து விடுகிற மாதிரி அந்தக் கட்டிடத்தின் கீழ்ப்புறம் இரண்டு வீடுகளும் அவற்றிற்கு மேலே இரண்டு வீடுகளும் மட்டுமே இருந்தன. யாரோ ஒருவரோ அல்லது இருவரோ வசதியானவர்கள் என்று தெரிவிப்பது போல இரண்டு கார்கள் அந்தக் கட்டிட வாசலில் நின்றன. சாமண்ணா போகும் போதும் வரும் போதும் சில ஆண்களையும் பெண்களையும் பார்த்தான். அவர்களின் நிறைவான உடம்புகளுக்கு நேர் எதிராக மிகவும் குட்டையான உடைகளை அணிந்தவர்களாக இருந்தார்கள். பள்ளத்தில் இருப்பவன் மேட்டுக்குப் போக ஆசைப்படுகிறான். மேட்டில் இருப்பவனுக்கோ
பள்ளத்தில் இருப்பவனைப் போல பாவனை செய்வதில் ஈடுபாடு இருக்கிறது.
அன்று காலை அவனும் அவனது அப்பாவும் டிபன் சாப்பிட்டுக் கொண்டிருக்கையில் சாமண்ணாவின் அம்மா ” உன் பிரெண்டு லெப்டன், பொண்டாட்டியை விட்டுட்டு ஓடிப் போயிட்டானாமே” என்றாள்.
சாமண்ணா திடுக்கிட்டு அம்மாவைப் பார்த்தான்.
“என்னது, நிஜமாவா?” என்றார் அப்பா.
“ஆமா. நாம வெளியூருக்கு கிளம்பின ரெண்டாவது நாள்ல ஆச்சாம். இன்னிக்கி காலையிலே அடுத்த வீட்டுகார அம்மா சொன்னாங்க, அவங்க வீட்டுலே வேலை பார்க்கிற வேலைக்காரி சொன்னான்னு.”
“அதெப்படி? அந்த பில்டிங்லே ஒண்ணு நடந்தா கால் கை முளைச்சு அரைமணிக்குள்ளே இந்தக் காம்பவுண்டுக்குள்ளே வந்திருமே!”
என்றார் அப்பா.
“ஆமா. ஆனாக்க நாமதான் டெல்லி டூர் போயிட்டு நேத்தி ராத்திரிதானே வந்தோம் !”
சாமண்ணா காப்பியை உறிஞ்சிக் குடித்தபடியே கேட்டுக் கொண்டிருந்தான். அந்த ‘லெப்டன்’ என்பவன் உண்மையில் இடதுகைக்காரன் அல்ல. ஒரு தடவை அவன் தெருவில் நடந்து வந்த போது அவன் மேல் குடிபோதையில் எதிரே வந்த ரிக் ஷாக்காரன் வண்டியை ஏற்றி விட்டான். அப்போது இரவு மணி எட்டு இருக்கும். வழக்கம் போலத் தெருவிளக்குகளில் பாதிக்கும் மேலானவை
எரியாமல் செத்துக் கிடந்தன. அடிபட்டவன் சிகிச்சை எடுத்துக் கொண்டு வந்த பின்னும் கிட்டத்தட்ட பத்து நாள் வரை இடது
கையை உடம்புக்குச் சற்றுத் தள்ளி ஏதோ வெளிப் பாகம் போல வைத்து நடமாடினான். சற்றுக் காலம் கழித்து அவன் கை இயல்பான நிலைக்கு வந்து விட்டது.ஆனால் இங்கே இருப்பவர்கள் வாயில் என்னவோ அவன் லெப்டனாகி விட்டான்.
ரிக் ஷாவில் அடிபட்டுக் கொண்ட அன்று அந்த மனிதனுக்குச் சற்றுப் பின்னால் சாமண்ணா நடந்து வந்து கொண்டிருந்தான். ரிக் ஷா இடித்துக் கீழே விழுந்த அந்த மனிதன் வலி பொறுக்க முடியாமல் “ஐயோ !” என்று சத்தம் எழுப்பியதைக் கேட்டு சாமண்ணா அவனருகில் ஓடி வந்தான். சாமண்ணா குனிந்து அவன் கையைப் பார்த்தான். கீறல்களினால் ரத்தம் கசிந்து கொண்டிருந்தது. “ஐயோ, கையைத் தூக்க முடியலையே !” என்று அவன் கத்தினான். சாமண்ணா ரிக் ஷாக்காரனைத் திட்டி விட்டுத் தன்னருகே வரச்
சொன்னான். இருவரும் சேர்ந்து அடிபட்டவனை ரிக் ஷா வில் ஏற்றிக் கொண்டு விஷ்வாஸ் கிளினிக் போனார்கள். டாக்டரின் சிகிச்சை முடிந்ததும் அதே ரிக் ஷாவில் அடிபட்டவனின் வீடு வரை சென்று கொண்டு விட்டு வந்தான் சாமண்ணா. போகிற வழியில் அந்த மனிதன் தன் பெயர் சலபதி என்று சொன்னான். வீட்டுக்குள் போனதும் அவர்களைப் பார்த்து அவனது மனைவி பதறி விட்டாள். சாமண்ணா அவளிடம் சீரியஸாக எதுவும் இல்லை என்றும் டாக்டர் சலபதியை இரண்டு வாரம் ரெஸ்டில் இருக்க வேண்டும் என்று கூறியதாகவும் சொன்னான். அவள் சாமண்ணாவுக்கு நன்றி கூறி விட்டு அவன் ஒன்றும் சாப்பிடாமல் போகக் கூடாது என்று குளிர்ந்த பாதாம் பால் கொண்டு வந்து கொடுத்தாள்.
சாமண்ணா நாலைந்து நாள்கள் கழித்து சலபதியின் வீட்டுக்குச் சென்றான்.
அவனைப் பார்த்ததும் சலபதி “வா, வா” என்றான்.
ஹாலில் சலபதி ஒரு சாய்வு நாற்காலியில் அமர்ந்து இரு கால்களையும் ஒரு ஸ்டூலின் மீது வைத்திருந்தான். அவன் ஒரு கையில் பெட்ஸி என்று அடிக்கிற சிவப்பில் அட்டை போட்ட புத்தகம் இருந்தது. அன்று இரவில் பார்த்ததை விட இப்போது காலை வெளிச்சத்தில் பார்க்கையில் அவன் சுமாரான தோற்றத்தில் இருப்பது போல் சாமண்ணாவுக்குப் பட்டது. படுத்திருக்கும் போது குட்டையானவன் போல இருந்தான். முப்பது முப்பத்தி ஐந்து வயதிருக்குமா அவனுக்கு?
சாய்வு நாற்காலிக்கு அருகில் சில புத்தகங்கள் தாறுமாறாகத் தரையில் கிடந்தன. சற்றுத் தொலைவில் இருந்த சோபா ஒன்றின் மீது ஒரு சட்டையும் கால்சராயும் கும்மியிருந்தன. மற்றொரு சோபாவில் அன்றைய தினசரி பிரித்துப் போடப்பட்டுக் கிடந்தது. ஒரு மூலையில் இரண்டு சிகரெட் துண்டுகள் தென்பட்டன. ஹாலில் சிகரெட்டின் மணம் புகைந்து கிடந்தது.
“நீங்க எப்படி இருக்கீங்கன்னு பாக்கத்தான் வந்தேன்” என்றான் சாமண்ணா.
“பரவாயிலே. நல்ல வேளை, நீ அன்னிக்கி வந்தே. அந்த இருட்டிலே அடிபட்டுக் கிடக்கேன். பாத்துகிட்டே நாலஞ்சு பேர் போறான். அந்த ரிக் ஷாக்காரனும் நீ வராட்டா ஓடிருப்பான். இந்த இடம் கொஞ்சம் தட்டுக் கெட்ட ஏரியாதான். நான் இங்க குடிவரப்போ மனுஷங்களை விடக் கடையெல்லாம் ஜாஸ்தி இருக்கும் போதே நினைச்சேன்” என்றான் அவன்.
“இப்ப வலியெல்லாம் குறைஞ்சிருச்சா?” என்று கேட்டான் சாமண்ணா.
“பரவாயில்லே. நாளைக்கி ஆபீசுக்குப் போகலாமான்னு பாக்கறேன்” என்றான் சலபதி.
“ஐயோ, டாக்டர் ரெண்டு வாரம் ரெஸ்டுன்னு சொன்னாங்களே.”
“டாக்டரை விட ஆபீஸ் பெரிய பாஸ் ஆச்சே” என்றான் சலபதி. பிறகு உள்ளே திரும்பி “முனியம்மா, சாமண்ணாவுக்குக் காப்பி கொண்டா” என்றான்.
ஐந்து நிமிஷம் கழித்து சலபதியின் மனைவி காப்பி எடுத்துக் கொண்டு வந்து அவர்கள் இருவருக்கும் கொடுத்தாள். இவள் பெயர் முனியம்மாவா? நம்ப முடியாதவன் போல் அவன் சலபதியையும் அவன் மனைவியையும் பார்த்தான்.
அவன் குழப்பத்தைப் புரிந்து கொண்டவள் போல “என் பேரு மினி. அதைத்தான் அந்த லட்சணத்திலே கூப்புடுறாரு” என்றாள் சலபதியின் மனைவி.
“முனியம்மா ! ரொம்ப நல்லா இருக்கில்ல இந்தப் பேரு?” என்று வாய் விட்டுச் சிரித்தான் சலபதி.
சாமண்ணாவுக்கு சிரிப்பு வரவில்லை. ஆனால் மேலுக்குச் சிரித்து வைத்தான். மினி சாமண்ணாவை நன்றியுடன் நோக்கினாள். அவள் பார்க்கும்படியாக இருந்தாள். சற்று நீளமான முகம் மட்டும் கொஞ்சம் குறுகியிருந்தால் மிகவும் அழகாக இருப்பாள் என்று சாமண்ணா நினைத்தான். சலபதியை விடச் சற்றுப் பெரியவள் போலக் காணப்பட்டாள்.
சாமண்ணா சலபதியிடம் “நீங்க பிரைவேட்லே வேலை பாக்குறீங்களா?” என்று கேட்டான்.
“இல்லே. கவர்மென்டிலே. ஏன்?”
“பிரைவேட்லேதான் சாகக் கிடந்தாக் கூட ஆபீசுக்கு வந்து செத்துப் போடாம்பாங்க. கவெர்மென்டிலேன்னா ஜாலியா லீவு போடலாமே. கேக்க யாரு இருக்காங்க?” என்றான் சாமண்ணா.
“சபாஷ், நல்லா சொன்னே” என்று சிரித்தாள் அங்கேயே நின்றிருந்த மினி.
சலபதி மனைவியை முறைத்துப் பார்த்தான்.
“நீயே சொல்லுப்பா. இந்தக் கையை வச்சுக்கிட்டு அசைக்க முடியாம கெடக்காரு. குளிக்கிறது, பேப்பர் படிக்க எடுத்துக் கொடுக்கறது, டைனிங் டேபிள்லே இருக்கறதை சாப்பிடறதுக்கு எடுத்துப் போடறதுன்னு எல்லாத்துக்கும் நான் வேண்டியிருக்கு. ஆபீஸ்லே ஒரு ஃபைலை
நகர்த்தணும்னாக் கூட ஒரு ஆள் வேணும். இல்லியா?” என்று சாமண்ணாவிடம் மினி சொன்னாள்.
“சரி, அப்ப நீயே என்னை ஆபீசுக்குக் கூட்டிகிட்டுப் போ ” என்றான் சலபதி
“ஆமா. அது ஒண்ணுதான் பாக்கி” என்று மினி உள்ளே சென்றாள்.
“உனக்கு எவ்வளவு வருஷ சர்வீசு கவர்மெண்டுல?” என்று சலபதி சாமண்ணாவிடம் கேட்டான்.
அவன் கேலியைப் புரிந்து கொண்டு சாமண்ணா புன்னகை செய்தான்.
“நீ சொல்லுறது தப்புன்னு சொல்ல மாட்டேன். எல்லாரும் சேர்ந்து அப்படிக் கெடுத்து வச்சுட்டாங்க . ஆனா உனக்கு ஒண்ணு தெரியுமா? சின்ன இடம்னா ஒரே ஒரு ஆளு, பெரிய ஆபீஸ்னா மொத்தமே நாலஞ்சு பேருதான் கவர்மென்டிலே உழைச்சுக் கொட்டணும். மத்த எல்லாருக்கும் சேத்து வேலை பாத்துகிட்டு இருக்கணும். இந்த ஒரு ஆளோ , இல்ல இந்த நாலஞ்சு பேரோ இல்லாட்டா கவர்மெண்ட்டே ஆணி கழண்ட சக்கரந்தான். இது எனக்கு மேலே இருக்கற ஆபீஸருக்குத் தெரியும், என் டிபார்ட்மெண்டு செகரட்டரிக்குத் தெரியும், என் மினிஸ்டருக்குத் தெரியும். ஆனா யாரும் இது பத்தி மூச்சு விட மாட்டாங்க” என்றான்.
சாமண்ணா ஆச்சரியத்துடன் அவனைப் பார்த்தான். தற்பெருமையை எவ்வளவு அழகாக வார்த்தைப் பந்தல்களால் கெட்டிக்காரத்
தனமாக மறைத்துத் தோள் தட்டுகிறான்? அதே சமயம் மனைவியை மூன்றாம் மனிதன் முன் தலை குப்புறக் கவிழ்ப்பதில் அவன் அடையும் ஆனந்தம்! யூஸ்லஸ் பெக்கர்.
அதற்கடுத்த ஒரு மாதத்தில் அவன் சலபதியின் வீட்டுக்கு மூன்று நான்கு முறைகள் போய் வந்தான். அவன் சென்ற சமயம் எல்லாம் சலபதி வீட்டில் இருந்தான். ஒரு ஞாயிற்றுக் கிழமை சன் டிவியில் ஏதோ பாட்டு நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்தவன் அவன் வந்ததும் “வா, வா, உட்காரு, என்ன அருமையா பாட்டுக்கு ஸ்டெப்ஸ் போடறா பாரு!” என்று மகிழ்ந்து கொண்டிருந்தான். அந்த ஸ்டெப்ஸ் போட்டுக் கொண்டிருந்தவளின் இடுப்பு முக்கால் திரையை மறைத்துக் கொண்டிருந்தது. அதை மீறி இவன் எப்படிப் பாதங்களைத் தேடிக் கண்டு பிடித்துப் பாராட்டுகிறான் என்று சாமண்ணாவுக்கு ஆச்சரியமாக இருந்தது.
இன்னொரு நாள் ஒரு ஆங்கிலச் சேனலில் மோதியைத் திட்டிக் கொண்டு இருந்தார்கள். சலபதி உன்னிப்பாக அதைப் பார்த்துக் கொண்டிருந்தான். அவர்கள் வசவு அதிகமாகும் போது அவன் கைதட்டி ரசித்தான். அவனருகில் மௌனமாக உட்கார்ந்திருந்த சாமண்ணாவைப் பார்த்து “நீ மோடி ஆளா?” என்றுகேட்டான். சாமண்ணா அவனுக்குப் பதில் சொல்லவில்லை. “முனியம்மாவும் பெரிய மோடி சப்போர்ட்டர்” என்றான். அவள் அப்போது அங்கு இல்லை. அவள் அவன் டிவி பார்க்கும் சம்யங்களிலில் எல்லாம் ஹாலுக்கு வந்ததில்லை என்று சாமண்ணா கவனித்திருந்தான்.
மற்றொரு நாள் இரவு எட்டு மணி வாக்கில் சாமண்ணா சலபதியைப் பார்க்கப் போனான். கதவைத் திறந்த மினி அவனைப் பார்த்துப் புன்னகை செய்தபடி “வா, வா” என்றாள்
“பாஸ் எங்கே? வாசல்லே கார் நிக்குதே?”என்றான்.
“பாத்ரூம்லே இருக்காரு. குளிச்சு முடிச்சாச்சு. வந்துருவாரு” என்றாள்.
அவன் டீபாய்க்கு அருகில் இருந்த சோபாவில் உட்கார்ந்தான். அவன் பார்வை டீபாயில் மேல் விழுந்தது. தடித்த புத்தகம். எடுத்துப்
பார்த்தான். ‘தி ஹேண்ட்மெய்ட்ஸ் டேல்’ . மார்கரெட் அட்வுடையது . பிளாசம் புக்சில் அவன் வாடகைக்கு எடுத்துப் படித்திருக்கிறான்.
அவன் மினியைப் பார்த்து “இது எப்படி இங்கே வந்திச்சு?” என்று கேட்டான்.
“அப்படீன்னா?”
“இதை பாஸ் படிக்கிறாரா?” என்று ஆச்சரியம் வழியும் குரலில் கேட்டான்.
“எதுக்கு இவ்வளவு ஆச்சரியம்?” என்று அவள் கேட்டாள்.
சாமண்ணா “இல்லே, முதல் நாள் வந்தப்போ அவரு ஹெரால்டு ராபின்சைக் கையிலே வச்சிருந்தாரே. அதிலேந்து இதுக்குன்னா, பெரிய ஹை ஜம்ப் ஆச்சேன்னு…” என்று தயங்கியபடி சொன்னான்.
மினி அவனை உற்றுப் பார்த்தாள்.
“சாரி, ஏதாவது தப்பா சொல்லிட்டேனா…?”
அவள் புன்னகை செய்தாள். “இந்த வீட்டிலே படிக்கிறது அவர் ஒருத்தர்தானா என்ன?”
அவளது பதில் அவனை உற்சாகப்படுத்திற்று. “லவ்லி!” என்றான். “இது ஆளைப் புரட்டிப் போடற புஸ்தகம், இல்லியா?”
“நானும் ஒரு ஆஃரெட்தான்” என்றாள் மினி.
அவன் திடுக்கிட்டு அவளைப் பார்த்தான்.
அவள் அவன் சாப்பிட ஏதாவது கொண்டு வருகிறேன் என்று கிச்சன் பக்கம் சென்றாள். அவன் கையில் வைத்திருந்த புத்தகத்தைப் புரட்டினான். அப்போது குளித்து விட்டு வெளியே வந்தான் சலபதி. சாமண்ணாவின் கையில் இருக்கும் புத்தகத்தைப் பார்த்து விட்டு “உனக்கும் இந்த மாதிரிக் கிறுக்குப் புஸ்தகம்லாம் பிடிக்குமா?” என்று கேட்டுக் கொண்டே அருகிலிருந்த அறைக்குச் சென்றான்.
உடை மாற்றிக் கொண்டு வெளியே வந்தவன் “இன்னிக்கி உனக்கு டின்னர் இங்கேதான்” என்றான்.
“எதுக்கு எனக்கு இந்தத் தண்டனை?” என்று சிரித்தான் சாமண்ணா..
“தினமும் நான் ஒருத்தனே கஷ்டப்படுறது சரியா?” என்றான் சலபதி.
கிச்சனில் இருந்து கேட்டுக் கொண்டிருந்த மினி “சரி, அப்ப நாம மூணு பேரும் வெளியே போய் சாப்பிட்டு விட்டு வரலாம்” என்றாள்.
சலபதி “அப்ப பூரிக்குப் பண்ணி வச்சிருக்கிற மசாலா, பெசஞ்சு வச்சிருக்கிற மாவு எல்லாம் என்ன ஆகுறது?” என்றான்.
மினி வெளியே வந்து சலபதியைப் பார்த்துச் சிரித்தாள். ‘உனக்கு எதற்கு இந்த வீண் பேச்சு எல்லாம்?’ என்று அந்த சிரிப்பு கேட்டது போல சாமண்ணா உணர்ந்தான்.
அன்று அவர்கள் வீட்டில்தான் அவன் சாப்பிட்டான். மினி நன்றாகச் சமைத்திருந்தாள். “பூரி கிழங்கு சூப்பர்” என்று அவன் மினியிடம் சொன்னான்.
அவள் “அடிச்சு விடாதே. வெளியிலே போய் சாப்பிட்டிருக்கலாம்” என்று சிரித்தாள்.
சலபதி சாமண்ணாவைப் பார்த்து “உப்பு குறைச்சலா இல்லே?” என்று கேட்டான்.
மினி அவன் தட்டில் ஒரு ஸ்பூன் உப்பைப் போட்டாள்.
சாமண்ணா மறுத்தும் அவள் பூரிகளை அவன் தட்டில் போட்டுக் கொண்டிருந்தாள். “இன்னும் ஒரு தடவை போட வந்தா நான் தட்டையும் தூக்கிகிட்டு எங்க வீட்டுக்குப் போயிருவேன்” என்றான் சாமண்ணா. பிறகு “அம்மாடி, எழுந்திருக்க முடியாது போல இருக்கே?” என்று முக்கினான்.
“சும்மா எதுக்கு ஸீன் போடறே?” என்றாள் மினி.
சாமண்ணா கை கழுவக் கிளம்பும் போது சலபதியும் எழுந்தான். சாமண்ணா சலபதி சாப்பிட்ட தட்டைப் பார்த்தான். மினி போட்டு விட்டுப் போன உப்பு அப்படியே அவன் தட்டில் இருந்தது.
& & &
சாமண்ணா ஒன்பதரை மணிக்கு வீட்டை விட்டு கிளையன்ட் ஆபீசுக்குக் கிளம்பினான். அடுத்த ஒரு வாரம் அங்குதான் ஆடிட் வேலை.
போகிற வழியில் மினியைப் பார்த்து விட்டுப் போகலாம் என்று நடந்தான். மினியின் வீட்டு அழைப்பு மணியை அடித்த போது சில நிமிஷங்களுக்குப் பதிலில்லை. அப்போது காலை ஒன்பதைரை இருக்கும். ஒரு வேளை அவள் வெளியே சென்றிருக்கிறாளோ? மறுமுறை மணியைக் குத்த அவனுக்கு விருப்பம் இருக்கவில்லை. அங்கிருந்து கிளம்பலாம் என்று அவன் நினைத்த போது கதவு திறந்தது. மினி எதிர்ப்பட்டாள். சற்றுக் கலைந்தாற் போலிருந்தாள். படுக்கையிலிருந்து எழுந்து வந்தவள் போலிருந்தாள். உடையை, தலை மயிரை, நெற்றியைச் சீர் செய்து கொண்டு வருவதில் தாமதம் ஏற்பட்டிருக்க வேண்டும் என்று அவனுக்குத் தோன்றியது. அவனைப் பார்த்து அவள் புன்னகை செய்யவில்லை.ஆனால் லேசாகத் திறந்த கதவை முழுவதுமாகத் திறந்து விட்டு வீட்டுக்குள் திரும்பினாள். அவன் அவளைப்
பின் தொடர்ந்தான்.
ஹால் சுத்தமாக இருந்தது.
அவனை சோபாவில் உட்காரச்சொல்லிவிட்டு எப்போது வந்தாலும் அவன் விரும்பிக் குடிக்கும் பிளாக் டீ குடிக்கிறானா என்று கேட்டாள். வேண்டாம் என்றான். அவனுக்கு எதிரே உட்கார்ந்து கொண்டாள்.
“எப்ப எல்லாரும் டில்லிலேந்து திரும்பி வந்தீங்க?” என்று கேட்டாள்.
“நேத்தி ராத்திரி” என்றான். “இன்னிக்கிக் காலையிலே பக்கத்து வீட்டுக்காரங்க சொன்னாங்கன்னு எங்கம்மா சொன்னாங்க.”
அவள் மௌனமாக இருந்தாள். வீடும் மௌனத்தை அனுஷ்டித்தது போல இருந்தது. சுவர்க்கோழியின் விடாத ஓசை மட்டும் அந்த நிசப்தத்தில் மிகத் தெளிவாகக் கேட்டது.
“மூணு வாரமா எனக்குக் கேக்கற ஒரே சத்தம் இதுதான்” என்றாள் அவள். “அது தேடித் தெடிக் கூப்பிடறதுனாலே வர்ற சத்தம் இது. என்னைப் போல அதுவும் தேடாம இருந்தா இந்த சத்தமும் இங்கே இருக்காது.”
“ஏன், யாரும் இங்கே வரலையா?”
“எதுக்கு? துக்கம் கேக்கறதுக்கா? அப்பிடி யார் வரதுக்கு இருக்காங்க?”
“சொந்தக்காரங்க. அப்பா, அம்மா?”
“ஜாதி விட்டுக் கலியாணம்னு ரெண்டு தரப்பு மனுஷங்களும் அப்பவே வெட்டிக்கிட்டு போயிட்டாங்க . அவங்களா இப்ப வரப் போறாங்க?
அப்பிடியே வந்தாலும் அவங்களால் என்ன செய்ய முடியும்? ஓடிப் போனவனை கூப்பிட்டு இங்க கொண்டு வந்து கட்டி வைப்பாங்களா? அது எப்படி நிலைக்கும்? ஒரு தடவ ஓடின காலு அப்புறமும் ஓட்டத்திலேயேதானே கண்ணை வச்சிருக்கும்? அப்படி எதுவும் செய்ய முடியாதவங்க நீ கண்டிப்புல வச்சிருக்கணும்னு பார்வையாலேயே வச்சுத் துப்புவாங்க. எது பண்ணினாலும், எப்பிடிப் பண்ணினாலும் ஊசி ஏறுறது என்னவோ என்னோட நகக் கண்ணுலதானே?”
“ரொம்பக் களைப்பா இருக்கீங்களே. ஒரு மாசத்துக்கு மின்னே பாத்தா உடம்பான்னு ஒட்டிக் கிடக்கே” என்றான்.
“ரெண்டு வாரமா இங்க உள்ளுக்குள்ளேதானே கெடக்கேன்” என்றாள் மினி.”வெளியே எங்கையும் போகணும்னே இருக்கலே'”
அவன் திடுக்கிட்டு “அப்ப சமையலு, சாப்பாடு, காய்கறி, சாமானு எல்லாம்?” என்று கேட்டான்.
“நின்னு போச்சு. முதல் பத்து நா கையிலே இருந்த கறிகாய், சாமான்களை வச்சு ஏதோ பண்ணிக்கிட்டு இருந்தேன். இப்ப நாலஞ்சு நாளாச்சு. என்னவோ சாப்பாட்டுலேயே லயிக்கலே. பசியே போயிடுச்சு. ஓடிப் போனவன் செத்துப் போயிருந்தாக் கூட மனசிலே இவ்வளவு துக்கம் இருக்காது. அவன் கூட இருந்த போதும் ஏதோ குகையில் இருக்கற மாதிரிதான் இருந்திச்சு. சந்தோஷத்தையும் சுதந்திரத்தையும் வெளியே வச்சுப் பூட்டிட்டு உள்ளே இருந்த மாதிரி. இப்போ இது வேறே மாதிரி. கட்டு இல்லே. ஆனா வெளியிலே போக தயக்கமாயிருக்கு. இப்பிடி மனுசாளைப் பாக்கறது பேசறது எல்லாம் நின்னு தனியா இருக்கறப்போதான் இல்லாததையும் பொல்லாததையும் நினைக்க வச்சு மனசைப் போட்டு உழட்டுது. இந்த மூணு வாரத்திலே நான் பாக்கற முதல் முகம் உன்னோடதுதான். நீ வருவேன்னு நான் எதிர்பார்க்கலே. ஆனா மனசிலே எங்கியோ ஒரு மூலையிலே நீ வருவேன்னும் தோணிச்சு. என்ன நீ எனக்கு ரெண்டு மாசமா பழக்கத்திலே இருந்திருப்பியா?” என்றாள்.
அவன் தலையசைத்தான் ஆமென்பது போல.
“தினமும் இன்னிக்கி செத்துப் போயிடணும்னு நினைப்பேன். ஆனா தைரியம் இல்லையே. உண்மையிலேயே வாழறதுக்கு இல்லே, சாகறத்துக்குதான் ரொம்பத் தைரியம் வேணும். ஆனா அது இப்ப கொஞ்சம் கொஞ்சமா வந்துகிட்டு இருக்குன்னு நினைக்கிறேன். இன்னிக்கி வந்திருக்கே நீ. என்னைப் பாத்திட்டே. யார் கண்டாங்க? நாளைக்கோ இன்னும் ரெண்டு நாள் கழிச்சோ வந்திருந்தா நீ என் பொணத்தைப் பார்க்க வந்தவங்கள்லே ஒருத்தனா இருந்திருப்பியோ என்னவோ?” என்றாள்.
“இப்பிடியெல்லாம் பேசாதீங்க. தான் செஞ்சது சரின்னு அந்தாளை நினைக்க வைக்காதீங்க” என்றான் சாமண்ணா கடுமையான குரலில்.
அவள் அவனை உற்றுப் பார்த்தாள். லேசான அதிர்ச்சி அவள் முகத்தில் தென்பட்டது. பிறகு “ஓ, அப்படியும் இதைப் பார்க்கலாமோ?” என்றாள்.
சாமண்ணா அவளை நோக்கினான். மிகுந்த வேகத்துடன் வீசும் காற்றில் நடுங்கி ஆடும் செடியைப் போலத் தோன்றினாள்.
“இதோ பாருங்க, யாரும் யாரையும் காப்பாத்த முடியாது. நம்மளை நாமளேதான் காப்பாத்திக்கணும் அல்லது அழிச்சிக்கிடணும்.
யாரைத்தான் யார்தான் காபந்து பண்ணிகிட்டே இருக்க முடியும்? அதுவும் இருபத்தி நாலு மணி நேரமும்? எதுக்காக சாப்பிடாம இருக்கணும்?” என்று கேட்டபடி தோளில் மாட்டிக் கொண்டிருந்த பையிலிருந்த டிபன் பாக்ஸை எடுத்தான். “இது லஞ்சுக்குன்னு நான் வீட்லேர்ந்து எடுத்திட்டுப் போறது. முதல்லே இதைச் சாப்பிடுங்க” என்றான்.
அவள் அதட்டல் போடும் வாத்தியருக்குப் பயந்து பணியும் மாணவியைப் போல அதைக் கையில் வாங்கிக் கொண்டாள். சாமண்ணா டைனிங் டேபிள் மீதிருந்த வாட்டர் பாட்டிலை எடுத்து வந்து டீபாயில் வைத்தான். அவள் லஞ்ச் பாக்ஸைத் திறந்து அதிலிருந்த சாதத்தை எடுத்துச் சாப்பிட்டாள். அவள் சாப்பிட்டு முடிக்கும் வரை மௌனம் அவர்களை அடை காத்தது. அவள் சாப்பிட்டு முடித்து விட்டு உள்ளே போய்க் கையைக் கழுவிக் கொண்டு வந்தாள் . அவன் அருகில் வந்து உட்கார்ந்து கொண்டு அவனது வலது கையை எடுத்துத் தன் இரு கைகளுக்குள் வைத்துக் கொண்டாள். அவன் விடுவித்துக் கொள்ள முயலவில்லை. மூன்று கைகளும் சில்லென்றிருந்தன. உயிர் இல்லாத போது இருக்கும் ஜில்லிப்பு.
மினி அவனிடம் “பிளாக் டீ குடிக்கிறாயா?” என்று கேட்டாள்.
“வேண்டாம்” என்றான் அவன்.
அவள் அவனைப் பார்த்துக் “கொஞ்ச நேரம் இங்கேயே இரேன். பேசிக்கிட்டு இருக்கலாம்” என்றாள்.
சாமண்ணா “இல்லே, நான் கிளம்பணும்” என்று எழுந்தான்.
அவள் முகம் விழுந்து விட்டது.
.