குணா (எ) குணசேகரன்
“காமம் காமம்” என்ப, காமம்
அணங்கும் பிணியும் அன்றே, நுணங்கிக்
கடுத்தலும் தணிதலும் இன்றே, யானை
குளகு மென்று ஆள் மதம் போலப்
பாணியும் உடைத்து, அது காணுநர்ப் பெறினே.
ஊருக்கு ஒரு தேர் தான். ஒருத்திக்கு ஒருவன் தான். மாறு பட்டால்…
கள்ளத்தோணி ஏறி கரை தேடி வந்த போது, அவளையே பார்த்துக் கொண்டிருந்ததுவோ, இல்லை அவளும் நோக்கி இருந்ததுவோ அவனுக்கு அவள் மேல் ஓர் ஈர்ப்பு வந்தது.
கரையோரம் ஒதுங்கிய போது, எங்கு செல்வோம், என்ன செய்வோமென்றிருந்தது. அகதிகள் முகாம் அடைக்கலம் கொடுத்தது.
பிழைப்பைத் தேடி காலை நேரத்தில் சென்று, மாலை திரும்பும் குழுவினர்க்கு மத்தியில்…
கைக்குழந்தை காரணத்தால் அவள் போகவில்லை. பச்சிளம் தேகம்.
அவனுக்குள் ஒரு கிளர்ச்சி. காத்திருந்தான். அவன் தங்கிப் போனான். வேண்டுமென்றே… வேறு காரணம் காட்டி.
அந்நிய தேசத்தில் ஒரு அத்து மீறல். எல்லை இல்லை அதற்கு. எங்கும் நடக்கும் நிதர்சனம்.
எது மிகைக்க உருவாகும். என்னதுக்கு பரிணமிக்கும். அவனுக்கு புது வாசம்… அல்லது வெவ்வேறு வாசம், அவளுக்கு…
இதன் சூத்திரம் தானென்ன? இனக்கவர்ச்சி மட்டும் இல்லையிது. உள்ளுக்குள் தங்கிய ஆதங்கம். காத்திருந்து அடைந்துவிட்ட சந்தோஷம். யாருமில்லா நேரம். தவறென்று தெரிந்தும் விட்டுப்போன எதையோ பெற்றுவிட்ட பூரிப்பு. ஆழப்பதித்ததினால் ஆழ்ந்து பதிந்துவிட்ட உள்ளூரக் கிளர்வூட்டல். உதிர்ந்துவிட்ட உணர்வுகளின் செறிவூட்டிய கொழுந்துத்தீ.
நித்தம் தொடர்ந்த இது, வெகு நாட்கள் தொடரவில்லை.
அவனுக்குள் இருந்த இச்சை குறைந்ததுவோ… புது வாசம் ஒன்று தென் பட்டதுவோ… மெல்ல குறைத்துக் கொண்டான். வேலைக்குப் போவதாய் முனைப்பட்டான். சிறுகச் சிறுக மறைத்துக் கொண்டான்.
அவளுக்குப் புரிந்தது. பட்சி பறக்கத் தலைப் பட்டதென்று. இருந்தும் காத்திருந்தாள். எது கொண்டு…?
கட்டுடல் தேகமா… தனித்து விடப்பட்ட வெறுமையா… அவளுக்குள் அவன் தெளித்து விட்ட தூறல்களா… வேறு வித தேடுதலின் முடிவுரையா… இல்லை தொடக்கமா… என்னவென்று சொல்லத் தெரியவில்லை.
உள்ளுக்குள் ஒரு வெறித்தனம் கூடிக் கொண்டிருந்தது. அவன் மீது வெறுப்பென்றும் சொல்லத் தெரியவில்லை. அவன் வந்துவிட்டால் அது மறைந்து விடும் என்று உணர்ந்திருந்தாள். ஆனால் அவன் விட்டுச்சென்ற எதுவோ ஒன்று, அவளை மாற்றியிருந்தது.
அவளுக்குள் அநேக எண்ண ஓட்டங்கள்…
எனக்கென்ன உரிமை? எனக்கு யாரவன்? கள்ளத்தோணியில் பார்த்தவன். என்னைக் களவாடிய தேகன். காமத்தைத் தவிர வேறில்லை. வெளியில் சொல்ல அவனுக்கும் இஷ்டமில்லை, எனக்கும் திராணியில்லை. இத்தோடு முடிய வேண்டியது தான், என எண்ணியவளுக்குள் சில மாற்றங்கள்.
சில நாட்கள் ஓடின. அவளுக்குள் அவனின் தேடல் மிகுந்தது. வெளிச் சொல்ல முடியாத வித்தியாச உணர்வுகள்.
இன்னது தான் என்றில்லை… அகதிகள் முகாம் சிதறுபட்டது. இதுவும் ஒரு காரணம். அவன் இல்லாது போனதற்கு. – இது அவள் நினைத்தது. அவனை அங்கு காணவில்லை
கள்வனின் காதலிக்கு களவுபட்டதைச் சொல்லல் தான் தகுமோ? இருந்தும் பரிணாமம் நிற்பதாயில்லை. கள்வன் களவாடிய போது விட்டுச்சென்றது வெளிப்படத் தொடங்கியது.
களவாடியவன் கொடுப்பதும், களவு பட்டவர் பெறுவதும், இங்கு தான் நடக்கும்.
களவு எது?… அங்கீகாரமில்லாத கொடுக்கல் வாங்கல். அனுமதி என்றால் காதல்… அனுமதி பெற்றால் திருமணம். இல்லையென்றால் களவு. காமத்தின் உச்சம் களவு. களவுக் காதல் கள்ளக் காதல்.
அவளைக் கொண்டவனுக்கு பூரிப்பு… அவன் இன்னும் அதிகம் கொண்டதாய்… அடுத்த வாரிசு வரப் போவதாய்.
நாட்கள் நகர்ந்தாலும், அவனைக் காண மாட்டோமா என்ற உள்ளுணர்வு. எங்கும் காணவில்லை.
உள் நாட்டு கலவரங்கள் ஒரு முடிவுக்கு வந்து விட்டன. இரு நாட்டவரும் ஒப்பந்தம் போட்டு, திருப்பி அனுப்ப வழி வகுத்தார்கள். அகதி முகாம்கள் குறைந்து மறைந்தே விட்டன. எங்கேனும் பார்ப்போமா என்ற எண்ணம் மட்டும் அவளுக்குள் இருந்தது.
கள்ளத்தோணியில் வந்தவர்களை நல்ல தோணியில் திரும்ப அனுப்பி வைத்தார்கள். அகதியாய் இல்லாமல்… அடையாளம் வேண்டி… சொந்த மண்ணைத்தேடி…
போய்ச்சேர்ந்த போது தான் தெரிந்தது, விட்டு வந்த எதுவும் அங்கு சொந்தம் இல்லையென்று. அவர்கள் அடைத்த இடத்தில், சொந்த மண்ணிலேயே அகதி என்பது மறைந்து கைதிகளாய்… அடையாளங்கள் மறைந்து, புது அடையாளத்தோடு, இன்னொரு வேலிக்குள்… இருந்தும் மண்ணின் மைந்தனாய்… புதியதோர் வாழ்க்கை தொடங்கி… சிறுகச் சிறுக அடையாளம் அடைந்து, உத்தரவாதம் பெற்று, வேலியிலிருந்து வெளியேறி வாழத் தலைப்பட்டார்கள்.
கைக்குழந்தையாய் இருந்தவள் சொந்த மண்ணில் வளர்ந்து விட்டாள்.
அந்நிய மண்ணில் அவதாரம் பூண்டவன் இதோ பள்ளி இறுதியில்…
பிள்ளை வளர வளர, அவனை நேரிலேயே பார்ப்பதாய் ஓர் உறுத்தல். கொண்டவர்க்கு செய்யும் துரோகமா வென்று. அவருக்கு சந்தோஷம் தான். கல்மிஷமில்லாத மனதை கலங்கப் படுத்த தோன்றவில்லை. இவன் உன் பிள்ளையில்லை என்பதை சொல்லாமல் விட்டு விட்டாள்.
வருடங்கள் கடந்தோட… வெகுநாட்களுக்குப் பிறகு, ஏதேச்சையாய் வெல்வெட்டித்துறை மருத்துவமனையில் அவனைப் பார்த்தாள்… அவளைக் கொச்சைப் படுத்தியவன்… அப்படியும் சொல்ல முடியாது. அவளும் தான் காரணம். அந்த தருணத்தில் கொச்சையாக நினைக்கவில்லையே… கண்முன்னே வளர்பவனை பார்த்துக் கொண்டு, எப்படி கொச்சை என்பது.
பாலியல் நோய் சிகிச்சைப் பிரிவில்… ஒரு பெண்ணோடு… விசாரித்துத் தெரிந்தது அவன் மனைவியென்று.
நிச்சயம் அவனின் செய்வினை.
எத்தனை பேரைத் தொட்டாய், எங்கிருந்து பெற்றாய், உன்னைச் சார்ந்த அவளையும் வதைக்கிறாயே…
மனதுக்குள் இருந்தாலும் வெளிக் காட்ட முடியவில்லை.
சில நாட்கள் கழித்து வீதியோர நிழற்குடையில் பார்த்தாள். வெகு நாட்களாய் அங்கேயே தங்கி விட்டான் போலும். அடிக்கடி அங்கேயே தென்பட்டான். அங்கேயே சுற்றி வரத் தொடங்கி விட்டான் போலும். அந்த காலத்தில் தென்பட்ட இளமைத் துடிப்பு அவனிடத்தில் தொலைந்து போயிருந்தது. வேறு எதிலும் நாட்டம் இல்லாதவன் போல்…
அவளுக்கு உள்ளுக்குள் அநேக சிந்தனைகள்… ஏதேனும் சங்கடப் படுத்துவானோ… சரிவரத்தானே போய்க் கொண்டிருக்கிறது நம் வாழ்க்கை… இவன் ஏன் இப்பொழுது…
என்ன நடந்தாலும் சரி… எதிர் கொள்ள வேண்டியது தான்.
ஊழ்வினை உறுத்து வந்தூட்டும்.
ஒரு நாள் அவள் மகன் அவனை கூட்டிக் கொண்டு வந்தான். “ அம்மா அவர் பாவம். பசிக்கும் போலே, ஏதாவது கொடுக்கலாம் தானே…?” அவனின் வளர்ப்பு அப்படி. ஒவ்வொரு கால கட்டத்திலும் வளரும் பிள்ளையைப் பார்த்து வருகிறாள். நிச்சயம் அவனாய்த் தானிருக்கும்.
அவன் வெறித்து நோக்கினான் எங்கேயோ… அவன் ஒரு நிலையில் இருந்தானா இல்லையா புரியவில்லை. கொடுத்த உணவை வேகம் வேகமாக உண்டான். ஒரு பசி கொண்ட மிருகத்தின் செயல் தான் தெரிந்தது. போய்விட்டான். பின் அவ்வப்போது பசியெடுக்கும் நேரமெல்லாம் வாசலில் வந்து நிற்பான். பசியாறிப் போவான். அவளுக்கு அப்பொழுதும் அவன் வந்து நின்ற கோலம் தான் நினைவில் வந்தது. இப்பொழுது வேறு பசி.
ஒரு நாள் அவளவர் கேட்டார்.
“இவனை எங்கேயோ பார்த்திருக்கிறம் தானே? அவளுக்கு சுருக்கென்றது.
“நானும் அப்படித்தான் எண்ணியம்” அவள் சொன்னாள்.
அவர் யோசித்து, “நாம் கள்ளத் தோணியில் போகையிலே வந்தான் போலும். இவன் ஏன் இப்படி ஆகிப் போனவன். சரீரம் சரிப்பட்டு இயல இல்லை போலும். க்ஷீணம் கொண்டிருக்கிறவன். ஓஸ்பிடலில் சேர்க்க வேணும்” – சொன்னவனைப் பார்த்தாள்.
“இது என்ன சங்கடம். வேண்டுமென்றால் அவன் போவான் தானே? சொன்ன அவளை ஒரு மாதிரியாகப் பார்த்தார்.
கேட்காமல் கொண்டு சேர்த்தார். அவ்வப்போது போய் பார்க்கவும் செய்தார்.
“கனகேசன் துறை தானாம். அவன் மனைவியும் போன வாரம் தான் இறந்து போயினவள். சொல்லிக் கொள்கிறாற் போல் யாரும் இல்லையாம். அங்கு சொல்லிக் கொண்டார்கள்.” அவர் சொன்னதைக் கேட்டதும் அவளுக்குள் என்னவோ செய்தது. நீ கொடுத்த ஒன்று விருட்சமாகி… உனக்கென்று யாருமில்லையா…
நீ விட்டுச் சென்றதும் தவறாய்த் தோன்றவில்லை. அந்த நேரத்தில் நிலை தடுமாறி அவனோடு சென்றிருந்தால், அவள் மகள் ஓடுகாலியின் மகளாயிருப்பாள். அவன் செய்ததும் சரிதான் போலும். அது தான் காலத்தின் கட்டாயம்.
ஏன் இங்கு வந்தான். செய்த குற்றத்திற்கு மன்னிப்பு வேண்டியா… எனக்கும் தானே அதில் பங்குண்டு… என்றால் எனக்கென்ன தண்டனை… அவனுக்குத் தெரியுமா, அவனைக் கூட்டி வந்தவன் அவன் பிள்ளையென்று… அதைச் சிந்திக்கும் மனநிலையில் அவன் இருப்பதாய் தோன்றவில்லை.
களவு போனாலும், களவு செய்தாலும், நம் கைவிட்டு போய்விட்டால் அது நம்மதில்லை… அது நம் கூடவே இருந்தாலும்.
அன்று வெளியிலிருந்து வந்தவர் ஒரு நிலையில் இல்லை. என்னவென்று சோதித்த போது சொன்னார். “அவன் இறந்து போயினன். ஓஸ்பிடலில் என் நம்பரை கொடுத்திருந்தன். கூப்பிட்டு விட்டார்கள்.” – அவர் சொன்னதும், அவளுக்குள் ஒரு சலனம். எதையோ இழந்து பட்டதாய் தோன்றியது. வெளிச் சொல்ல இயலாத, வெளிக் காட்ட இயலாத சோகம். வெளிப் படுத்தி விடுவாளோ என்று சிறு பயம்.
அவரைக் கேட்டாள் “என்ன செய்யப் போகிறீர்கள்”
“என்னவென்று தெரியவில்லை. கொஞ்ச நாள் நம்மைச் சார்ந்தனன். அநாதை என்று தள்ளத் தோன்றவில்லை”
“அதற்கு…”
சொன்னதை அவர் பொருட்படுத்தவில்லை. மருத்துவமனைக்கு புறப்பட்டார். அவளும் சென்றாள். இறந்த உடலை வாங்கி ஈமச் சடங்குகள் செய்தார்கள். இறுதிச் சடங்கினை பிள்ளையை செய்யச் சொன்னாள். மருத்துவமனைக்கு செல்லத் தயங்கியவள் இதைச் சொன்னதும் அவளை ஒரு மாதிரியாகப் பார்த்தார்.
அவருக்கு ஏதேனும் புரிந்ததோ இல்லையோ… அவள் தன் கடமையை முடித்த நிம்மதி.
இதற்குத் தான் வந்தான் போலும்… தெரிந்தோ தெரியாமலோ…
காமம் என்றாலும், களவு என்றாலும், கலவு என்றாலும் கர்மம் ஒன்றுள்ளது. அது என்றும் நம்மை விட்டுப் போகாது.
– குணா (எ) குணசேகரன்