நீறு பூத்த நெருப்பு

This entry is part 7 of 12 in the series 28 பெப்ருவரி 2021

 

ஜோதிர்லதா கிரிஜா

(1.7.1975 மங்கை-யில் வந்தது. கவிதா பப்ளிகேஷன்ஸ்-இன் தொடுவானம் எனும் சிறுகதைத் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது.)

      அந்தப் பெரிய வீடு தனது இயல்பான கலகலப்பை இழந்து சந்தடியற்று விளங்கிற்று. ‘சங்கு வாத்தியார்’ என்று ஊராரால் அழைக்கப்படும் சங்கர சாஸ்திரிகள் மாடியில் தம்மறையில் கண்களை மூடுவதும் திறப்பதுமாய்ப் பெருமூச்செறிந்த வண்ணம் குறுக்கும் நெடுக்குமாய் நடை போட்டுக்கொண்டிருந்தர்ர்.

       ‘பாவி! சண்டாளி! இப்படிப் பண்ணிப்பிட்டாளே கடைசியிலே! இந்தப் பூனையும் பாலைக் குடிக்குமாங்கிறாப் போல குனிஞ்ச தலை நிமிராம – போத்தின தலைப்பு விலகாம – இருந்திண்டிருந்த அவளுக்கு எப்படி அவனுடைய தொடர்பு ஏற்பட்டிருக்கும்? அன்னிக்கு விச்சு வாத்தியார் ஜாடையாய்ப் பேசினப்போ எனக்குக் கோவம் வந்துதே. ஆனா என்னுடைய குடும்பத்திலே என்னென்ன வெல்லாம் நடந்துண்டிருக்குங்கிறதைப் பத்தி ஊர்க்காராளுக்குத் தெரிஞ்சு போயிருக்கிறதுலே பாதியைக் கூடத் தெரிஞ்சுக்க எனக்குத் துப்பு இல்லாம போயிடுத்தே! …’

      கடந்த மாதம் அமாவாசையன்று விடியற்காலையில் – ஐந்து மணி இருக்கும் – வாத்தியார்கள் சிலர் ஆற்றில் குளித்துக் கொண்டிருக்கையில் வழக்கம் போல் அவர்களுள் கிளம்பிய ஊர் வம்பு எதிலோ தொடங்கிப் பின்னர் பல விஷயங்களையும் தொட்டுவிட்டுக் கடைசியில் இந்தக் காலத்துப் பெண்கள் கெட்டுப் போகத் தொடங்கியிருக்கும் சமூகப் பிரச்சினையில் வந்து நின்ற போது சங்கு வாத்தியாரின் குடும்பத்தைப் பற்றிய சாடைமாடையான பேச்சில் விச்சு வாத்தியார் ஈடுபட்டது அவரது நினைவில் கிளர்ந்தது. அதற்கு முந்திய நாள் அவ்வூர்க் கண்மாயில் ஒரு-நாள் குழந்தை ஒன்று பிறந்த மேனியாக மிதந்து கொண்டிருந்தது பற்றிய பேச்சுக்கு அவர்கள் தாவிய போதுதான் இந்தக்  காலத்துப் பெண்கள் கெட்டுப் போகத் தொடங்கியுள்ளது பற்றிய பேச்சு அவர்களிடையே பலவாறாகவும் அடிபடலாயிற்று.

      தன் தங்கையைப் பார்ப்பதற்காக அவ்வப்போது பட்டணத்துப் பக்கம் போய்வரும் வழக்கமுள்ள சீனுதான் அவர்கள் அனைவரிலும் கொஞ்சம் நாகரிகமானவனாகக் காணப்பட்டான். மற்றவர்களைப் போல் அவன் காவியேறிய வேட்டியைக் கட்டுவதில்லை. அடிக்கடி நீலம் போட்டுத் துவைத்த வெள்ளை ஆடைகளையே அவன் அணிந்தான். குடுமிதானே என்கிற அசட்டையின்றி அதைப் படியப்படிய வாரி முடிந்திருப்பான். ஆங்கிலச் சொற்களை அடிக்கடி தன் பேச்சில் கலப்பான். புரிகிறதோ, இல்லையோ, இந்து நாளிதழும் கையுமாக அலைவான். அங்குக் கூடியிருந்தவர்களில் அவனே வயதிற் சிறியவன்.

      அவன் சொன்னான்: “ஏங்காணும் பொண்ணுகள் கெட்டுப் போயிட்டதைப் பத்திப் பேசறீர்? நாமெல்லாம் ரொம்ப யோக்கியமோ? தவிர, அவா கிட்ட டீமாரலைசேஷன் ஏற்படத் தொடங்கியிருக்குன்னா அதுக்கு யாருங்காணும் காரணம்? நாமதான் காரணம். … எல்லாத்துக்கும் சாஸ்திரத்தை இழுக்கத் தெரியறதே நமக்கு, விடோஸ்  ரீமேரியேஜ்ங்கிறதை பத்தி என்னிக்காவது நாம சிந்தனை பண்ணியிருக்கோமா? இன்னும் அது ஏட்டளவிலெதான் இருக்கு? கன்னி கழியறதுக்கு முந்திக் கணவன் போயிட்டா, அந்தப் பொண்ணுக்கு மறு கல்யாணம் பண்ணி வைக்கணும்னு வசிஷ்டரே சொல்லியிருக்காரேங்காணும்?” – சீனுவின் பேச்சை எல்லாரும் கவனித்தார்கள்.

      இந்தக் கட்டத்தில் சிவராம வாத்தியார் கிண்டலாய்க் குறுக்கிட்டார்: “கன்னி கழியாதவாளுக்குத்தானேப்பா மறு விவாகம் பண்ணச் சொல்லியிருக்கார் வசிஷ்டர்?”

       “சரி. வசிஷ்டரை விட்டுத் தள்ளுங்கோ. விவேகானந்தர் என்ன சொல்லியிருக்கார்? ஒரு விதவை மறுமணம் செய்துக்கறதோ செய்துக்காமெ இருக்கிறதோ அவளுடைய சொந்த விஷயம்னு சொல்லியிருக்கார். அதிலே தலையிடறதுக்கோ, அவ மேல கட்டாயக் கைம்மையைத் திணிக்கிறதுக்கோ யாருக்கும் அதிகாரம் கிடையாதுன்னு சொல்லியிருக்கார். …”

       “அவர் கலியுகச் சாமியார். வேறே எப்படிங்காணும் பேசுவார்?” என்று குறுக்கே பாய்ந்தார் ராமண்ணா வாத்தியார்.

       “சிவ சிவா! இதென்ன அசிங்கம் பிடிச்ச பேச்சு? வேற விஷயமே அகப்படல்லியா பேசறதுக்கு? கேக்கறதுக்கே நாராசமாயிருக்கு!” என்று, அவர்களில் மூத்தவர் என்கிற முறையில், சங்கு வாத்தியார் கண்டனக்குரல் எழுப்பிய போது அங்கே சட்டென்று ஓர் அமைதி நிலவிற்று. சில கணங்களுக்கு யாருமே வாயைத் திறக்கத் துணியாத அந்த அமைதியில் ஓர் இறுக்கம் இழைந்து கிடந்ததாகச் சங்கு வாத்தியாருக்குத் தோன்றிற்று.

       “சங்கு மாமாவுக்குக் கோவம் வராப்பலே இருக்கு. நியாயந்தானே?” என்று ஒருக்கணித்தாற்போல் கழுத்தைச் சாய்த்துத் திருப்பியபடி ரங்கு வாத்தியார் தம்மருகே நின்றிருந்த சிவராம வாத்தியாரைப் பார்த்துச் சொன்ன போது அவர் குரலில் விரவி நின்ற கேலியும், அப்போது அவர் சிவராமனைப் பார்த்துக் கட்டாயம் கண்சிமிட்டியிருப்பார் என்பதும் சங்கு வாத்தியாரிடமிருந்து தப்பவில்லை. ஒரு கணம் அவர் உடம்பு ஆடிப் போயிற்று. அவர் முகம் சிவந்து போனதைக் கவனித்துவிட்டோ என்னவோ, “குடும்பத்துலே விதவைப் பெண்களை வெச்சிண்டிருக்கிறவா கொஞ்சம் நாக்கை அடக்கிப் பேசணும். அந்த அசிங்கம் நம்மாத்துலேயே நாளைக்கு நேர்ந்துடக்கூடும்கிற பயம் அவாளுக்கு இருக்கிறது நல்லது,” என்று – சங்கர சாஸ்திரிகளை மட்டந்தட்டுவதற்கு எப்போதடா வாய்ப்புக் கிடைக்கும் என்று காத்துக்கொண்டிருந்தவர் போன்று – அவருடன் நல்ல உறவில் இல்லாத சுப்புணி வாத்தியார் சொன்னபோது, உண்மையில் சங்கு வாத்தியாருக்கு ஒரு மாதிரித்தான் ஆய்விட்டது. அவர்கள் ஏதோ பொடி வைத்துப் பேசிக் கொள்ளுகிறார்கள் என்பது கண்கூடாக அவரது உள்ளுணர்வுக்குப் புரிந்ததும், அது தமக்குப் புரிந்ததாகவோ, அல்லது அதனால் தாம் பாதிக்கப்பட்டதாகவோ காட்டிக்கொள்ள அவர் விரும்பாமையால் முகத்தை மாறுதலற்று வைத்துக்கொள்ள அவர் முற்பட்டார்.

      அவர் சுடச்சுட ஏதேனும் கேட்கக்கூடியவர்தான். அப்படிக் கேட்பதன் வாயிலாகச் சேதிகள் தமக்குக் கிடைக்குமோ என்கிற ஆவல் அவருள் எழுந்ததும் உண்மைதான். ஆனாலும், ஒருகால் அவனோடு பேசுவதால் அவன் வாரியிறைக்கக்கூடிய சொற்கள் – அவற்றில் சிறிதேனும் உண்மை இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பின் – அல்லது அவரை அவரை வம்புக்கு இழுப்பதற்காக வேண்டுமென்றே சொல்லப்பட்டவையாக இருப்பினும் கூட – தம்மை எந்த அளவுக்குப் பாதித்துவிடுமோ என்று அஞ்சியவராய்ச் சங்கு வாத்தியார் தமது ஆத்திரத்தை விழுங்கிவிட்டு மூக்கைப் பிடித்துக்கொண்டு தண்ணீரில் முங்கி முங்கி எழுந்தார்.

      வீடு திரும்பும் வழியில் யாரும் யாருடனும் வழக்கம் போல் கலகலவென்று பேசிக் கொள்ளவில்லை.

      வழியில் சுப்புணி வாத்தியார், “மனுஷனுக்கு விஷயம் தெரிஞ்சு போயிருக்குமோ? ஒரு மாதிரி ஆயிட்டாரே?” என்று சற்றே தணிந்த குரலில் – சங்கு வாத்தியாரை எட்டாத அளவுக்குத் தணிந்த குரலில்  அல்லாமல், அவர்  காதைச் சென்றடைய வேண்டும் என்பதற்காகவே போல் கொஞ்சம் மட்டும் தணிந்த குரலில் – சொன்னதைக் காதில் வாங்கிக்கொண்ட சங்கு வாத்தியார் சிறுமைப்பட்டுப் போனார். அந்தக் கணத்திலிருந்து அவர் அமைதியற்றுப் போனார். அவர்கள் தம் குடும்பத்தைப்பற்றித் தமக்குத் தெரியாத எதைத் தெரிந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை உடனே தெரிந்து கொள்ளாவிடில் தலை வெடித்துவிடும் போன்ற பரபரப்புக்கும் அமைதியின்மைக்கும்  அவர் ஆளானார்.

      கால் கட்டைவிரலைப் பார்த்தபடி நடக்கும் தம் மகள் கோமதியைப் பற்றி அவதூறாக அந்த ஊரில் ஏதோ பேச்சு அடிபடுகிற உண்மையைத் தம் காதுக்கு எட்டவைக்கிற முயற்சியே அன்றைக் காலைப் பேச்சு என்பது அவருக்குத் தெளிவாகத் தெரிந்தது. இருந்தாலும், அதைப் பற்றி அவர்களிடமே எவ்வாறு கேட்பது என்று அவர் தயங்கினார். ஆனால், அன்று மாலைப் பொழுதுக்கு மேல் அவரால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. தம் நெருங்கிய நண்பரும் தம்மீது மிகுந்த மரியாதையுள்ளவருமான – தற்போது உபாத்தியாயத் தொழிலிலிருந்து ஓய்வு பெற்றுவிட்ட – ராமசேஷ வாத்தியாரைக் கண்டு பேசுவது என்கிற முடிவுக்கு அவர் வந்தார். அவரது  வீட்டில் வாத்தியார்கள் அடிக்கடி கூடிப் பேசுவார்கள். கிட்டத்தட்ட ஒரு தலைவரைப் போல் அவரை அவர்கள் யாவரும் மதித்து வந்தார்கள். எப்படியும் அவருக்கு அந்தச் சமாசாரம் எட்டியிருக்கும் என்று அவருக்குப் பட்டதால், இருட்டத் தொடங்கியதன் பிறகு அவர் ராமசேஷ வாத்தியாரின் வீட்டை அடைந்தார். சற்று நேரம் பொதுவாகப் பேசிக் கொண்டிருந்ததன் பிறகு சங்கு வாத்தியார் விஷயத்துக்கு வந்தார்.

       “உன் காதுக்கு அந்த விஷயத்தை எட்டப் பண்ணணும்னுதான் அவா அப்படிப் பேசியிருக்கான்னு நினைக்கிறேன். மனசு கலங்காம அமைதியாக் கேளு. உம் பொண்ணு கோமதியைப் பத்தின சமாசாரந்தான் அது. என் காதுலெ கூடப் பராபரியா விழுந்தது …” என்று தயங்கித் தயங்கி அவர் பேச முற்பட்ட போது சங்கு வாத்தியாருக்குப் படபடவென்று வந்து விட்டது.

      விஷயம் இன்னதென்று முழுவதும் கேட்டுத் தெரிந்து கொள்ளுவதற்கு முன்னாலேயே  தமது குடும்ப கௌரவம், அதைக் கட்டிக் காக்கும் பொருட்டு அதுகாறும் தாம் பட்டிருக்கும் பாடு, அதை மீறிக்கொண்டு நிகழ்ந்துவிட்ட  ஒழுக்கக்கேடு ஆகியவை பற்றிய எண்ணங்கள் அவரை அலைக்கழிக்கலாயின.

       “கோமதியைப் பத்தி என்ன பேசிக்கிறா ஊர்ல? … யாரோட சம்பந்தப்படுத்திப் பேசறா? எங்க வம்சத்துப் பெண்கள்லாம் நெருப்புங்காணும்! ஒருவேளை ஒருதலைப்பட்சமான விஷயமா இருக்கலாம் …” என்று பொரிந்து கொட்டிய சங்கு வாத்தியாருக்குத் தம் மகளுடன் தொடர்பு படுத்திப் பேசப்படும் ஆள் யாராக இருக்கும் என்று ஊகிக்க முடியவில்லை. அப்படி ஏதும் இருக்கவே முடியாது என்று நம்பிய – இருக்கவே கூடாது என்று விரும்பிய – அவரது மூளை ஒன்றுமே நினைத்துப் பார்க்க இயலாத அளவுக்கு மரத்துப் போனது.

        “மெட்ராசிலேர்ந்து இந்த ஊருக்குப் புதுசா வந்திருக்கனோல்லியோ, அவன் தான்  அந்தப் பையன். முப்பதுலேர்ந்து முப்பத்தஞ்சுக்குள்ளே இருப்பன். ஆறு மாசத்துலே ஊரை விட்டுப் போயிடுவனாம்.  தற்காலிகமா வந்திருக்கான்னு சொல்றா. … அதாண்டா, நம்ம புகையிலை இன்ஸ்பெர்க்டர் இருக்காரோல்லியோ? அவரோட மச்சினன் …”

      சங்கு வாத்தியார் திகைத்துப் போனார். ‘அவனுடைய அறிமுகம் கோமதிக்கு எப்படி ஏற்பட்டது? எப்படி அவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டிருக்கும்? அதுவும் அவதூறான பேச்சுக் கிளம்புகிற அளவுக்கு எப்படி …ஓகோ! … ஆற்றங்கரைக்குத் தினமும் போகிறாளே? கோயிலுக்கும்தான். அங்கே பழக்கம் ஏற்பட்டிருக்கும் …ஆனால் நிச்சயம் இது ஒருதலைப்பட்ச விஷயமாகத்தான் இருக்க வேண்டும். அனுடைய நடவடிக்கைகளை மட்டும் கவனித்துவிட்டு என் மகளின் எதிரொலி என்ன என்பதைக் குறித்துச் சிறிதும் கவலைப்படாத இந்த ஊர் ‘ஒரு பிடி அவல் கிடைத்த கதையாய்’ வம்பு பேசுகிறது …’ என்றெல்லாம் எண்ணி அவர் ஆறுதல் பெற முயன்றார். இருந்தாலும் மனம் அமைதியடைய மறுத்தது. கோமதி இப்படி ஒரு வம்புப் பேச்சுக்கு இடம் வைத்திருக்க வேண்டாம் என்று அவர் வருந்தலானார்.

       “ஓகோ! அந்தப் பையனா? நான் கூடப் பார்த்திருக்கேனே அவனை? ஆமா? கல்யாணம் ஆனவனா? ஆகாதவனா?” – இப்படிக் கேட்டுவிட்டுச் சங்கு வாத்தியார் தமது கேள்வி உள்ளடக்கிய அர்த்த்மின்மையைச் சட்டென்று உணர்ந்தவராய்  நறுக்கென்று கீழுதட்டைக் கடித்துக்கொண்டார். தம் கேள்வியின் அசட்டுத்தனம் குறித்து ராமசேஷ வாத்தியார் சிந்திப்பதற்குத் துளியும் நேரம் கொடுக்க விரும்பாதவராய், “அவன் பிரும்மசாரியா இருந்தா என்ன, கல்யாணமானவனா  இருந்தா என்ன?  ஒரு தகவலுக்காகக் கேட்டேன். அவ்வளவுதான் …” என்று தொடர்ந்தார், மிக அவசரமாக. 

       “கல்யாணம் ஆகாதவன் தானாம்.”

       “என்ன பேசிக்கிறா எல்லாரும்?”

       “அடிக்கடி கோயில்லேயோ, இல்லேன்னா ஆத்தங்கரையிலேயோ ரெண்டு பேரும் சந்திச்சுப் பேசறான்னு கேள்வி. … நானே அதைப் பத்தி உங்கிட்ட பேசணும்னு  இருந்தேன். அதுக்குளள நீயே வந்துட்டே.”

… சங்கு வாத்தியார் அறுந்து தொங்கிய முகத்துடன் அவரிடம் விடைபெற்றுக் கொண்டார்.

 ‘வெறும் பேச்சுப் பழக்கம் மட்டுந்தானா, இல்லைன்னா …’ – மேலே சிந்திக்கவும் கூசி அவர் கண்களை மூடி மூடித் திறந்தார். அன்றைக் காலைப் பேச்சில் அடிபட்ட கண்மாயில் மிதந்த ஒருநாள் குழந்தை பற்றிய நினைவு திடீரென்று அவர் மனத்தில் கிளர்ந்து அவருள் குமட்டலை விளைவித்தது. அதைப் பெற்றவள் கடந்த ஏழெட்டு மாதங்களாக வீட்டை விட்டு வெளியே தலை காட்டாது உள்ளேயே அடைந்து கிடக்கும் – கணவனால் தள்ளிவைக்கப்பட்ட – சுந்தரி என்று அந்த ஊரில் பேச்சு அடிபட்டது அவரது நினைவில் தோன்றி அவரைப் படபடக்கச் செய்தது. நடக்கக் கூடாதது எதுவும் நடந்து விடுமுன் கோமதியைக் காப்பாற்றும் பரபரப்பில் அவர் கால்களை எட்டிப் போட்டார்.

      … சிந்தித்துக்கொண்டே நடந்த அவரது நினைவில் அவருடைய விதவைத் தங்கை தோன்றினாள். அவள் தம் தங்கை என்பதையும் மறந்து அவளைக் கையெடுத்துக் கும்பிட வேண்டும் போல் அவருக்குத் தோன்றிற்று. தம்மைக் காட்டிலும் ஐந்து ஆண்டுகள் இளைய அவள் திருமணமான மறு ஆண்டே – கணவனுடன் தலை தீபாவளியை மட்டும் கொண்டாடியிருந்த நிலையில் – பூவையும் பொட்டையும் இழந்தும், அன்றிலிருந்து இன்றளவும் மாசற்ற நடத்தையினளாய்த் தம்மோடு நிழலாய் வாழ்ந்து வருவதைப் பற்றி எண்ணிப் பார்த்த அவர் கண்களில் ஈரம் கசிந்தது.

       ‘கோமதியாவது ஆம்படையானோட ஆறு மாசம் வாழ்ந்துட்டுத் திரும்பி வந்தா. அபிராமி ஒரு நாள் கூட வாழல்லியே. அபிராமி! நெருப்பாய் வாழ்ந்து வந்திருக்கிற உன்னாட்டமேதான் கோமதியும் இருக்கணும்….’

       … வீட்டுக்குப் போனதன் பிறகு கோமதியைத் தனியே பார்த்து அது பற்றிக்

கேட்டு, உண்மை இருப்பின் – பெரும்பாலும் உண்மை இராதுதான்! – கண்டித்து வைக்க வேண்டும் என்று அவர் முடிவு செய்து  கொண்டார். கடந்த சில நாள்களாகத் தம் தங்கையைப் பீடித்துள்ள இதய நோயின் விளைவாக அந்தச் சேதியை அறிய நேரின் அவள் மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாவாள் என்பதால், அது பற்றி அவள் அறிதலாகாது என்று அவர் முடிவு செய்தார்.

      அன்றிரவு பத்து மணிக்கு மேல் கோமதியைத் தனியாகப் பார்த்துப் பேசும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. அபிராமி தூங்கிப் போயிருந்தாள். அரிக்கேன் விளக்கின் முன்பாக ஏதோ ஒரு தமிழ்ப் புத்தகத்தைப் படித்தபடி ஒருக்களித்துப் படுத்துக் கொண்டிருந்த கோமதியின் முன்னால் அவர் சென்று நின்றார். கோமதி மரியாதையாக வாரிச் சுருட்டிக்கொண்டு எழுந்து உட்கார்ந்து கொண்டாள்.

       “கோமதி! உங்கூடக் கொஞ்சம் பேசணும். என் ரூமுக்கு வரயா?” – கோமதி தான் படித்துக் கொண்டிருந்த புத்தகத்தின் மூலையை அடையாளத்துக்காக மடித்து வைத்து விட்டு அவரைப் பின்பற்றி அவரது அறைக்குச் சென்றாள்.

       அறைக்குள் நுழைந்ததுமே அவர் அயர்ச்சியுடன் நாற்காலியில் சாய்ந்தார். கோமதி சுவரில் சாய்ந்து நின்றிருந்தாள். ஏதும் கேட்பதற்கு முன்னால் சங்கு வாத்தியார் தம் மகளை நெடுமையாக நோக்கினார். தாம் கேள்விப்பட்டது உண்மையாக இருப்பின், தாம் பேசவிருப்பதை ஊகித்துக் கோமதி மிரண்டு போயிருப்பாள் என்றெண்ணிய அவர் கோமதி சற்றும் அஞ்சாமல் தம் கண்களைச் சந்தித்ததைக் கண்ணுற்றதும், ‘இவள் அப்படியெல்லாம் நடந்து கொள்ளக் கூடியவளே இல்லை. இது வெறும் அபவாதம்!’ என்கிற முடிவுக்கு உடனே தாவினார். இருப்பினும், கேட்டு விடுவது நல்லது என்று அவருக்குத் தோன்றியது.

       “அம்மா, கோமதி! ஊர்லெ உன்னைப்பத்தி என்னென்னமோ பேசிக்கிறாளேம்மா? அதெல்லாம் உண்மையா?”- பளிச்சென்று மின்னிய மகளின் கண்களில் கள்ளம் இருக்கவே முடியாது என்று நம்பிய சங்கு வாத்தியார் நம்பிக்கையோடு அவள் சொல்லப் போகிற பதிலுக்காகக் காத்திருந்தார். பதில் சொல்லுவதற்குக் கோமதி எடுத்துக்கொண்ட இரண்டொரு வினாடிப் பொழுது கூட அவருக்கு நரகமாக நீண்டது.

       “என்னைப்பத்தி என்ப்பபா பேசிக்கிறா? நீங்க கேக்கற தொண்ணும் எனக்குப் புரியல்லியே?”

       கோமதியின் கண்களை ஆழ்ந்து நோக்கிய அவர் ஒரு கணமே தயங்கிவிட்டு, “அந்தப் புகையிலை இன்ஸ்பெர்க்டர் மச்சினனோட நீ நெருங்கிப் பழகிண்டிருக்கியாமே? அது உண்மையாம்மா?” என்று கேட்டார்.

      “இல்லேப்பா! சுத்தப் பொய்! … அவர் தன் அக்கா பொண்ணோட கோயிலுக்கு வந்தப்போ அந்தப் பொண்ணும் நானுந்தான் பேசினோம். அவர் எங்க கூட நின்னுண்டிருந்தார். அவ்வளவுதான் … ரெண்டு மூணு தரம் அந்த மாதிரி ஆச்சுங்கிறதைத் தவிர எங்களுக்குள்ளே நேரடிப் பேச்சுவார்த்தை ஏதும் நடக்கல்லேப்பா!” என்ற கோமதி அழலானாள்.

       ‘இந்த அழுகையில் உண்மை இருக்குமா, இல்லே, பெண்மைக்குரிய ஆகாத்தியமா?’ என்று ஒரு கணம் போல் அவருக்கு ஐயம் விளைந்தாலும், கோமதி அழுதே பார்த்தறியாத அவர் பதறிப் போனார்.

        “அழாதே கோமதி! நான் உன்னை நம்பறேன். ஒரு தகப்பன்கிற முறையிலே உன்னைக் கண்டிக்க வேண்டியது என் கடமை இல்லையாம்மா? ஒண்ணும் மனசுலே வெச்சுக்காதே! … போய்ப் படுத்துக்கோ, போ …”

       கோமதி கண்களைத் தேய்த்தபடி அப்பால் நகர்ந்தாள். சங்கு வாத்தியாரின் கண்களிலும் கண்ணீர் நிறைந்தது. மகளின் பேச்சை நம்பத் தோன்றியதால், நெஞ்சில் கனத்துக் கொண்டிருந்த பெரிய சுமையைக் கீழே இறக்கி வைத்தாற்போன்ற நிம்மதியுடன் அவரும் படுக்கச் சென்றார். …

       பல வாரங்களுக்குப் பின்னர் ஒரு நாள் கடைசியில் அவர் சற்றும் எதிர்பாராத அந்த நிகழ்ச்சி நடந்துவிட்டது. அவருடைய உயிருக்குயிரான கோமதி அவரையும் தன்னைத் தாய்க்கு ஈடாகக் காத்து வந்த அத்தை அபிராமியையும் துறந்து ஓடிப் போனாள். அவரால் நம்பவே முடியவில்லை.

      நடை போடுவதை நிறுத்திய அவர், அவளுக்கு என்ன நேர்ந்திருக்குமோ என்று தம்மைக் கவலைப்பட வைக்காமல், கோமதி வக்கணையாக எழுதி வைத்துச் சென்ற கடிதத்தை எடுத்து மறுபடியும் படிக்கலானார். பார்வையை மறைத்த கண்ணீரை மேல் துண்டினால் ஒற்றித் துடைத்தவாறு அவர் அதைப் படித்துக்கொண்டே பெருமூச்செறிந்தார்.

       ‘அன்புள்ள அப்பா அவர்களுக்கு. என் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளுவதற்காக  உங்களையும் அத்தையையும் பிரிந்து செல்லத் துணிந்துவிட்ட என்னை மன்னித்துக்கொள்ளுங்கள். அன்றொரு நாள் நீங்கள் கேட்ட கேள்விகளுக்குப் பொய்யான பதில்களைச் சொன்னதற்காகவும் என்னை மன்னியுங்கள் …’ – கடிதத்தில் இருந்தவை இந்த இரண்டே வரிகள்தான். அந்தக் கடிதத்தைச் சுக்கல் சுக்கலாகக் கிழிக்கப் போன அவர் ஏதோ நினைத்துக்கொண்டு ஒரு புத்தகத்துள் அதைச் செருகி வைத்துவிட்டுத் திரும்பவும் நடக்கலானார்.

      இன்றும் வழக்கம் போல் கோமதி கோயிலுக்குப் போனாள். ஆனால் திரும்பி வரவில்லை. இரவு ஒன்பது மணியான போதுதான் சங்கு வாத்தியார் தம் வீட்டுக்குத் திரும்பி வந்தார். வீடு அமைதியாக இருந்தது. அபிராமி சுவரில் சாய்ந்தவாறு உட்கார்ந்திருந்தாள். வீட்டில்  நிலவிய அமைதியில் ஏதோ மாறுபாட்டை அவர் முகர்ந்தார். மனசில் ஏதோ நெருடினாற்போல் இருந்தது.

       “கோமதி எங்கே?” என்று அவர் கேட்டார்.

       “கோயிலுக்குப் போறேன்னுட்டுப் போனா,” என்று அபிராமி பதிலிறுத்தாள்.

       “மணி ஒன்பதாயிடுத்தே? நான் போய்ப் பார்த்துட்டு வறேன்,” என்று அவர் கிளம்பினார்….

 ஊர் முழுவதும் சுற்றிவிட்டு அவர் திரும்பிய போது பத்து மணிக்கு மேல் ஆகிவிட்டது. கை, கால்கள் கழுவி வந்த அவரிடம் அபிராமி ஒன்றும் பேசாது அந்தக் கடிதத்தைக் கொடுத்தாள்.

 “எங்கே இருந்தது கடுதாசி?” என்ற அவரது பதற்றம் மிகுந்த கேள்விக்குப் பதில் சொல்லாமல் அபிராமி வாயைப் பொத்திக்கொண்டு அழலானாள்.

 அவர் நடுங்கிய கைகளால் மூக்குக் கண்ணாடியைத் தேடி எடுத்து மாட்டிக்கொண்டு தம்மறைக்குச் சென்றார். அபிராமி சுவரில் சாய்ந்து உட்கார்ந்தவாறு கண்ணீர் பெருக்கிக் கொண்டிருந்தாள்.

 … கண்களைத் துடைத்துக்கொண்டு தம்மறையை விட்டு வெளியே வந்த அவர் கூடத்துச் சுவரில் மாட்டப் பெற்றிருந்த கோமதியின் மணக்கோலப் புகைபடத்தை எடுத்து அதன் சட்டங்களை அப்புறப்படுத்திய பின்னர், அதைச் சுக்கல் சுக்கலாகக் கிழித்தெறிந்தார்.

 “ஏண்ணா அதைக் கிழிச்சுட்டே? கொழந்தை ஞாபகத்துக்கு அது ஒண்ணுதானே இருக்கு?” என்று அரற்றிய அபிராமியை அவர் வருத்தத்தோடு நோக்கினார்.

 ‘இவளுக்கும் இது ஒரு பெரிய அதிர்ச்சியாகத்தான் இருக்கும். இவளும்தான் தன் பதினான்காம் வயதில் – கணவனுடன் ஒரு நாள் கூட வாழாத நிலையில் – பிறந்த வீடே கதியென்று திரும்பி வந்தாள். ஐம்பத்தைந்து வயதைத் தாண்டிவிட்ட இவளை – அந்தக் காலத்துப் பரம்பரையைச் சேர்ந்த இவளை – இப்போது இந்தக் குடும்பத்தில் நிகழ்ந்துவிட்ட இந்த அசிங்கம் எப்படிப் பாதிக்குமோ? … நெருப்பாக வாழ்ந்து வந்துள்ள இவள் கோமதியின் செயலை எப்படித் தாங்குவாள்?’

தமக்கும் மகளுக்குமிடையே அன்றொரு நாள் நடந்த உரையாடலைப் பற்றி ஏதுமறியாத அபிராமி அந்தக் கடிதத்தை முழுவதுமாகப் புரிந்து கொண்டிருக்க மாட்டாள் என்று கருதிய அவர் ஊரில் அடிபட்ட வம்புப் பேச்சையும், அது  குறித்துத் தங்களிடையே நடந்த பேச்சின் போது கோமதியின் ஆகாத்தியத்தையும் அவளிடம் கூறிவிட்டுச் சிறு பிள்ளை போல விம்மலானார்.

 குறுக்கே பேசாது அவர் சொன்னதையெல்லாம் கேட்டுக்கொண்ட அபிராமி, தானும் கண்ணீர் சிந்தியவாறே, “அண்ணா! இப்ப நான் உங்கிட்ட ஒரு உண்மையைச் சொன்னா நீ கோவிச்சுக்க மாட்டியே?” என்றாள்.

 ‘இவள் வேறு புதிதாக என்ன வெடியைத் தூக்கி வீசப் போகிறாளோ’ என்கிற திகைப்புடன் அவர் இடுங்கிக் கிடந்த கண்களால் அவளைப் பார்த்தார்.

 “என்ன?”

 “நீ அதிர்ச்சியடையாம இருக்கணும்.”

 சங்கு வாத்தியார் கசப்புடன் சிரித்தார். “இனிமே  என்னை எந்த அதிர்ச்சி என்ன பண்ணிப்பிடும், அபிராமி? குனிஞ்ச தலை நிமிராத கோமதி ஓடிப்பானதை விடவா பெரிய அதிர்ச்சி ஒண்ணு இருக்கப் போறது?”

 அபிராமி உடனே பேசாமல் சற்று நேரத்தை மௌனத்தில் கழித்தாள்.

 “எதுவாயிருந்தாலும் சொல்லிப்பிடு, அபிராமி.”

 “என்னை மன்னிச்சுடு, அண்ணா. கோமதியுடைய சமாசாரம் பூராவும் ஆரம்பத்திலேருந்தே எனக்குத் தெரியும்.”

 “என்னது! உனக்கு ஆரம்பத்திலேருந்தே தெரியுமா?”

 “ஆமா … என்னோட மனப்பூர்வமான ஆசீர்வாதத்தோட தான் அவ கிளம்பிப் போயிருக்கா, அண்ணா!”

 பேசியது அபிராமிதானா இன்றேல் அவளுள்ளிருந்து ஏதேனும் பேய்-பிசாசுதான் பேசுகிறதோ என்று மலைத்தவர் போல் சங்கு வாத்தியார் இமைகள் விரிய நின்றார்.

 “உங்கிட்டேர்ந்து மறைச்சதுக்காக என்னை மன்னிச்சுடு, அண்ணா! … ரெண்டு மாசத்துக்கு முந்தி நானே அந்தப் பையனைப் பார்த்துப் பேசினேன். கோமதியைக் கண் கலங்காம – கைவிடாம – நன்னா வெச்சுக்கறேன்னு எனக்குச் சத்தியம் பண்ணிக் குடுத்திருக்கான். … ரொம்ப நல்ல பையனாத் தெரியறான்.  .. நீ அவளுக்குப் பண்ணிப் போட்டிருந்த நகைநட்டையெல்லாம் உங்கிட்டக் குடுக்கச் சொல்லி கோமதி எங்கிட்டக் குடுத்துட்டுப் போயிருக்கா. … நான் என்னுடைய நகைகளை யெல்லாம் என்னோட கல்யாணப் பரிசா அவகிட்டக் குடுத்து அனுப்பிச்சுட்டேன். … அண்ணா! என்ன இருந்தாலும் அவளைப் பெத்தவன் நீதான். அவ மேலெ உனக்கு இருக்கிற உரிமை எனக்கு இல்லைதான். இருந்தாலும் என்னை மன்னிச்சுடு, அண்ணா!”

 சங்கு வாத்தியாருக்குக் கண்களை இருட்டிக்கொண்டு வந்தது.  ‘அபிராமி! அபிராமி! நீயா இப்படி யெல்லாம் பண்ணினே? நீயா இப்படி யெல்லாம் பேசறே?’ என்று அவர் மனசுக்குள் பொருமித் தீர்த்தார்.

 “முப்பது வருஷத்துக்கு முந்தி உங்கிட்ட வேதம் படிச்சுண்டு இருந்தானே – சிவகுரு – அவனை உனக்கு ஞாபகம் இருக்கா? ஒரு நாள் அவன் இப்படித்தான் என்னை ஓடி வந்துடச் சொன்னான் … அண்ணா! இப்ப நான் சொல்லப் போற விஷயத்துக்காகவும் என்னை மன்னிச்சுடு. … எனக்கு அவனை ரொம்பப் பிடிச்சிருந்தது.  ஆமாண்ணா! … ஆனா, அவன் சொன்ன யோசனையைக் கேக்கற தைரியம் எனக்கு இல்லே. பொம்மனாட்டிகள் பெட்டிப் பாம்புகளா அடங்கிக் கிடந்த காலமில்லையா அது? அந்தக் காலத்திலேயே இருபத்தஞ்சு வயசான ஒரு அறுத்துப் போன பொண்ணைப் பார்த்து ஒருத்தன் ‘என்னோட ஓடி வந்துடு’ன்னு சொன்னது பெரிய காரியந்தான். ரொம்பப் பெரிய அதிசயந்தான்!  ஓடிப் போயிட்டாத்தான் என்ன’ன்னு நானும் நினைச்சேன். … அப்படி அருவருப்பா என்னைப் பார்க்காதே, அண்ணா! … ஆனா எனக்குப் பயமாயிருந்தது. … நான் அவனோட ஓடிப்  போகாததுக்குப் பயம் மட்டும்காரணம்னு சொல்ல முடியாது. அப்பாவும் அம்மாவுமாயிருந்து என்னை வளர்த்துக் கல்யாணம் பண்ணிக் குடுத்த உன்னை – தங்கை அறுத்துப் போயிட்டாங்கிறதுக்காகத் தன் கல்யாணத்தை ஒத்திப் போட்டுண்டே இருந்த உன்னை – அனாதையா விட்டுட்டுப் போறதுக்கோ, அவமானத்துக்கு ஆளாக்குறதுக்கோ நான் பிரியப்படல்லே … என்னுடைய வாழ்க்கை மாதிரி கோமதியுடைய வாழ்க்கையும் ஆயிடக் கூடாதேங்கிறதுக்காகத்தான் ………”

… மேற்கொண்டு அபிராமி பேசியது எதுவும் அவர் செவிகளில் ஏறவில்லை. ஏனெனில் அவர் மயக்கமுற்றுச் சாய்ந்துவிட்டார்.

…….

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Series Navigationசர்வதேச புத்தகக் கண்காட்சியில் இலங்கை எழுத்தாளரின் நூல்கள்வடக்கிருந்த காதல் – இரண்டாம் பாகம்
author

ஜோதிர்லதா கிரிஜா

Similar Posts

Comments

  1. Avatar
    jananesan says:

    1975ல் இப்படியொரு கதையை ஜோதிர்லதா எழுதியதே பாராட்டத்தக்க விஷயம் தான்.இப்படியான கதைகள் சம்பிரதாயத் தளைகளை அறுத்து அந்த சமூகத்துப் பெண்கள் முன்னேறக் காரணமாக இருந்தது என்பதை நினைக்கத் தூண்டியது. வாழ்த்துகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *