இலக்கியமும் காசநோயும்! – (மார்ச் 24, உலக டி. பி. தினம்)

author
4
0 minutes, 31 seconds Read
This entry is part 2 of 7 in the series 21 மார்ச் 2021

                                    

                                   .                             

                                                மீனாக்ஷி பாலகணேஷ்

            மார்ச் 24, உலக டி. பி. தினம் – அதற்கு இப்போது என்ன? வருடாவருடம் இந்தவிதத்தில் பலப்பல தினங்கள் வந்து போகின்றன. என்ன பெரிதாக சாதித்து விட்டார்கள்? இதென்ன பெரிய கொண்டாட்டமா? இப்படிப்பட்ட கேள்விகள் காதில் விழத்தான் செய்கின்றன.

            முதலில் ஒரு சிறு சம்பவத்தை விவரிக்கிறேன்.

                                                ————————————–

            மார்ச் மாதம் 24ம் தேதி, வருடம் 1882. பெர்லின் நகரில் உடற்கூறு இயல் ஸ்தாபனத்தின் கூட்டம் அந்தச் சிறிய அறையில் நடைபெறவிருந்தது. ஜெர்மனியின் புகழ்வாய்ந்த விஞ்ஞானிகள் அங்கு குழுமியிருந்தனர். பால் எர்லிக் (Paul Ehrlich), முக்கியத்துவம் வாய்ந்த  பேராசிரியர் ருடால்ஃப் விர்ஷோ (Rudoph Virchow), தொற்று நோய்களை எதிர்த்துப் போராடிவந்த அத்தனை புகழ்வாய்ந்த ஜெர்மன் அறிவியலாய்வாளர்களும் அங்கிருந்தனர்.

            அந்தச் சிறிய மனிதர், ஒரு மருத்துவர், தனது முகத்தில் மூக்குக் கண்ணாடியைத் தள்ளிச் சரிசெய்துகொண்டு பேச எழுந்தார். தனது ஆராய்ச்சிப் பேப்பர்களைத் தட்டுத் தடுமாறி அடுக்கிக் கொண்டார். பேச ஆரம்பித்ததும் குரல் சிறிது நடுங்கியது. சுதாரித்துக்கொண்டு, மிகுந்த தன்னடக்கத்துடன், ஏழிலொரு மனிதனைச் சாகடித்துவந்த அந்த பாக்டீரியாவைப் பற்றி விளக்கலானார். அதைப்பற்றித் தான் செய்த ஆராய்ச்சிகளை ஆதியோடந்தமாகச் சான்றுகளுடன் விளக்கினார். மற்ற விஞ்ஞானிகள் விரிந்த விழிகளுடன், பேசாமல், ஆர்வத்துடன் அவருடைய விளக்கங்களைக் கேட்டனர்.

            நீண்டதொரு உரைக்குப்பின் தனது நாற்காலியில் அமர்ந்தவர், கைக்குட்டையை எடுத்து தனது முகம், கழுத்து என அரும்பியிருந்த வியர்வையைத் துடைத்துக் கொண்டார். மற்றவர்களின் முகத்தை ஆவலுடன் நோக்கினார். தன்னை ஏதாவது விளக்கம் கேட்பார்கள் என எதிர்பார்த்தார். அனைத்து விஞ்ஞானிகளும் விர்ஷோவின் முகத்தையே நோக்கினர். அவர்தான் அவர்களுடைய அறிவியல் உலகின் சக்கரவர்த்தி. யாருடைய ஆராய்ச்சியையும் பற்றிய அவரின் கணிப்பே மிகச் சரியானதாக உலகத்தினரால் ஏற்றுக்கொள்ளப்படும். ஒரு சிறு முகச்சுளிப்பால் பலவிதமான அனுமானங்களையும் அவரால் உடைத்தெறிந்துவிட முடியும். எல்லாக்கண்களும் இப்போது அவர்மீது பதிந்திருக்க, அவர் மெல்ல இருக்கையை விட்டெழுந்தார்; தனது தொப்பியை அணிந்துகொண்டார்; ஒரு வார்த்தை கூடப் பேசாமல் அந்த அறையை விட்டு வெளியேறினார்.

            உரையாற்றிய மருத்துவர் பெயர் டாக்டர் ராபர்ட் காச் (Robert Koch). பல ஆண்டுகள் சலிக்காமல் ஒருமனத்தினராய் ஆராய்ச்சிசெய்து டி. பி. (Tuberculosis) எனும் காசநோய்க்கான காரணத்தை, அது ஒரு பாக்டீரியா எனக் கண்டறிந்திருந்தார். சாமானியமான கண்டுபிடிப்பல்ல அது. உலகின் அனைத்து ஆராய்ச்சியாளர்களையும் உலுக்கிப்போட்ட ஆராய்ச்சி! உலகமே அவரைக் கொண்டாடியது! 1905ல் இதற்காக அவருக்கு நோபல் பரிசும் அளிக்கப்பட்டது.

            ஒரு நூற்றாண்டு கழிந்தபின்பு, இதனைக் கொண்டாடி அவரைப் போற்றும் விதத்தில், அவர் தனது ஆராய்ச்சி முடிவுகளை வெளியிட்ட தினமான மார்ச் 24ம் தேதியை உலக டி. பி. தினமாக அறிவித்தது உலக சுகாதார நிறுவனம். டி.பி. எனும் காசநோயைக் கொண்டாட அல்ல!!!

            ஒருவரிடமிருந்து மற்றொருவருக்குக் காற்றின் மூலம் பரவும் (இருமல், கோழைத்துளிகள்) இந்த பயங்கரமான தொற்றினை அழிக்க, அதனுடன் போராட, ‘காச்’சின் கண்டுபிடிப்பு முதற்படியாக, முக்கியமாக விளங்கிற்று. பெரியம்மைபோல இதுவும் அழிக்கப்படும்வரை, யாரும் கொண்டாட்டத்தைப்பற்றி எண்ணவேயில்லை. நமக்கே நமக்கான சுகாதாரமுறைப் பாடங்களை நினைவுபடுத்திக்கொண்டு அதனைச் செயல்படுத்துவதில் ஈடுபடுவதன் மூலம் நமது பங்களிப்பை அறிவிக்கிறோம்.

            எத்தனையோ தொற்றுநோய்கள் (Infectious diseases). இதில் டி. பி.க்கு என்ன தனி இடம்? அப்படிக் கேளுங்கள். சில விவரங்களைக் காணலாமா?

            30கோடி ஆண்டுகளுக்கு முன்னமே டி. பி. உலகில் இருந்துவந்ததாகக் கூறப்படுகிறது. என்னவெல்லாமோ பெயரிட்டு அழைக்கப்பட்டது. எலிகளால் பரப்பப்பட்ட ‘பிளேக்’ போல இது ‘வெள்ளை பிளேக்’ (white plague) எனப்பட்டது. பெரும்பாலும் இது ‘எலும்புருக்கி நோய்’ (Consumption) எனக் கூறப்பட்டது. மெல்லமெல்ல பல்கிப்பெருகும் டி. பி. பாக்டீரியாக்கள் நோய்வாய்ப்பட்ட உடலைச் சிறிது சிறிதாக அழித்து, எலும்பும் தோலுமாக்கி (எலும்புருக்கி) கடைசியில் சாவில் கொண்டு முடிப்பதனால் இப்பெயர்! ‘இறப்புக்களின் தலைவன்’ (Captain of the men of death) எனும் அடைமொழியையும் சேர்த்துக் கொண்டது.

            தற்காலத்தில் டி. பி. ஆனது, நுரையீரல் சம்பந்தப்பட்ட (Pulmonary), சம்பந்தப்படாத (Extra-pulmonary), என்றும் மருந்துகளுக்குக் கட்டுப்படுவது (Dryg-sensitive), அவற்றை எதிர்ப்பது (drug-resistant), பலமருந்துகளையும் எதிர்ப்பது (Multi drug resistant) எனப் பல்வேறு வடிவங்கள் எடுத்துள்ளது.

            டி. பி. மனித சமுதாயத்தினுடன் 9,000 ஆண்டுகளாகத் தொடர்பு உள்ளதொரு தொற்று! எகிப்திய மம்மிகளின் உடலில் இக்கிருமி இருந்தது அறிவியல் சோதனைகள் மூலம் அறியப்பட்டுள்ளது. காச் தனது ஆராய்ச்சி முடிவைத் தெரிவிப்பதன் முன்பு இந்நோய் பற்றிய எண்ணங்கள் பலவாறாக இருந்தன. ‘மைகோபாக்டீரியம் டியூபர்குலோசிஸ்’ (Mycobacterium tuberculosis) எனும் பாக்டீரியாவே இதன் காரணி என்று ‘காச்’சின் ஆராய்ச்சி நிரூபித்தது. பி. சி. ஜி. (B.C.G vaccine) எனப்படும் வாக்சினும் வெகுவிரைவிலேயே கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் காசநோயைப் பூரணமாகக் கட்டுப்படுத்த முடியவில்லை. ஆராய்ச்சிகள் இன்றும்கூடத் தொடருகின்றன.

            இது ஒரு தொற்றுநோய்; ஒருவரிடமிருந்து மற்றவருக்கும், முக்கியமாகக் குடும்பத்தினருக்கும் பரவும் தொற்று என்று நீண்ட நாட்கள் அறியாமல் இருந்தனர். இதனைப்பற்றி அறிந்து கொண்டதும் நோயாளிகளை அவர்களுடைய வீடுகளிலிருந்து கூட்டிச்சென்று, டி. பி. சானடோரியம் என்ற இடங்களில் தங்கவைத்து, அங்கு நோயாளிகளுக்குச் சிகித்சை அளிக்கப்பட்டது; நல்ல சூரிய ஒளி (வைட்டமின் D), ஆரோக்கியமான சத்தான உணவு, நீண்ட ஓய்வு ஆகியன இதற்கு இன்றியமையாதவையாகக் கருதப்பட்டன.  

                                    ———————

            16, 17, 18ம் நூற்றாண்டுகளில் காசநோய் ஐரோப்பாவிலும் மற்ற துணைக்கண்டங்களிலும் மிக அதிகமாக இருந்தது. 25% மக்கள் இந்நோயால் பாதிக்கப் பட்டிருந்தனர். இதனை ‘ரொமான்டிக் நோய்’ (Romantic disease) என்றே கூறலாயினர். பிரபல நாவல்களின் கதாநாயகிகள் சோகைபிடித்த முகம், உடலுடனும், மிகுதியான நோய்வாய்ப்பட்டு இருப்பதாகவே சித்தரிக்கப்பட்டனர்.

            விக்டர் ஹ்யூகோ (Victor Hugo) 1862-ல் எழுதிய தமது ‘பரிதாபத்துக்குரியவர்கள்’ (Les Miserables) எனும் நாவலில் முக்கிய பாத்திரமான ‘ஃபான்டின்’ என்பவளை எலும்புருக்கி நோய் உள்ளவளாகச் சித்தரித்திருப்பார். மேலும் ‘நோத்ருதாமின் முதுகு வளைந்த மனிதன்’ (The Hunchback of Notre Dame) எனும் நாவலில் அவர் சித்தரிக்கும் பரிதாபத்துக்குரிய பாத்திரம்கூட எலும்புருக்கி எனக் கூறப்படும் டி. பி.யால் தனது முதுகெலும்பு வளைந்து கூனலான சூழ்நிலை கொண்டதாகக் காண்பிக்கப்படுபவனே!

            ரஷ்யப் படைப்பாளி தஸ்தயாவ்ஸ்கி தனது புகழ்பெற்ற நாவலான ‘குற்றமும் தண்டனையும்’ (Crime and Punishment) என்பதிலும் மற்ற நாவல்களிலும்கூட எலும்புருக்கி நோயால் பாதிக்கப்பட்ட மனிதர்களைச் சித்தரித்திருப்பார். ஒரு தாய் இருமி இருமித் தனது கைக்குட்டையை ரத்தத்தினால் நனைத்துவிடுவதனைப் படிக்கும் நமக்கு உடலெல்லாம் பதறும்!

            டிக்கன்ஸ் எழுதிய பல ஆங்கில நாவல்களிலும் (டோம்பியும் மகனும்- 1848), இன்னும் சிலவற்றிலும் டி. பி. யால் நோயுற்றிருக்கும் பலர் சித்தரிக்கப்பட்டுள்ளனர்.

            இவற்றையெல்லாம் எதற்காகப் பட்டியலிடுகிறேன்? காசநோய் எனும் இது அக்காலத்தில் யாருக்கும் புரிபடாத, பிடிபடாத, குணப்படுத்த இயலாத ஒரு பெரிய நோயாக இருந்தது. அதனால் எல்லோராலும் முக்கியமாக இலக்கியம், இசை அனைத்திலும் விலாவரியாக விளக்கியும் புனைந்தும் எழுதப்பட்டது!! இந்த புனைவு நவீனங்களில் முக்கியமானது தாமஸ் மன் (Thomas Mann) எழுதிய ‘மாஜிக் மலை’ (The Magic Mountain) என்பது. இது ஸ்விட்சர்லாந்தில் டஃபாஸ் (Davos) எனப்படும் இடத்திலமைந்த ஒரு சானடோரியத்திலிருக்கும் காச நோயாளிகளின் வாழ்வு, அபிலாஷைகள், கோணங்கித்தனங்கள், அவர்களுள் சிலருக்கு ஏற்படும் பரிதாப முடிவுகள் ஆகியவற்றை வாழ்க்கையின் பலவிதமான கோணங்களிலிருந்தும் நமக்குப் படம் பிடித்துக் காட்டுகிறது. காசநோய் எடுக்கும் பலவிதமான அவதாரங்களையும் விளக்குகிறது. சாமர்செட் மாமும் தமது அனுபவங்களைத் தழுவி ‘சானடோரியம்’ எனும் ஒரு நெடுங்கதையை எழுதியுள்ளார். இது ஸ்காட்லாண்டைப் பின்புலமாகக் கொண்டுள்ள ஒரு சானடோரியத்தில் நிகழ்வதாகும்.

            கதைகளில் மட்டுமல்ல, உலகமே வியக்கும் எழுத்துக்களைப் படைத்த கவிஞர்களும், கதாசிரியர்களுமே இந்தக் காசநோயால் மிகச்சிறு வயதிலேயே இறப்பைத் தழுவியுள்ளனர் என்பது வருந்தத்தக்க செய்தியாகும். கவிஞர்களான கீட்ஸ், ஷெல்லி, எழுத்தாளர்களான ஜேன் ஆஸ்டென் எனப்பலரும் மிக இளம் வயதான 25, 27, 41 -ல் டி. பி.யால் பாதிக்கப்பட்டு இறந்தனர் என்பது அதிர்ச்சியான செய்தி!

            எலும்புருக்கி நோய் மிகவும் பரவலாக இருந்ததனால் நோய்க்காளான கதாபாத்திரங்கள், நோயின் தீவிரம், நோயாளியின் அவலநிலை ஆகியன விரிவாகக் கதைகளில் எழுதப்பட்டன. ‘உண்மையான தோட்டக்காரன்'(The Constant Gardener) எனும் நாவல் டி. பி. சம்பந்தமான மருந்து கண்டுபிடிப்பைப்பற்றி, சில குழுக்கள் செய்யும் அடாவடித்தனங்களைக் கூறுகிறது.

            ஆபெரா (Opera) எனும் மேற்கத்திய இசைநாடகங்களும் டி. பி.யை விட்டுவைக்கவில்லை. ஆபரா கதாநாயகிகளும் சிலர் டி. பி. யில் இறந்து போகின்றனர். மேற்கத்திய சினிமா உலகமும் பாத்திரங்களுக்கு அனுதாபத்தையும் பாத்திரப்படைப்புக்கு வலுவும் சேர்க்க டி. பி. காட்சிகளை விரிவாகப் படமெடுத்தன.

            நமது தமிழ்நாட்டிலும் ‘பாலும் பழமும்’ திரைப்படத்தில் சிவாஜி கணேசன் காசநோய் மருத்துவர், ஆராய்ச்சியாளராகவும் அவரது மனைவியான சரோஜாதேவி அந்நோய் வந்து துன்புறுபவராகவும், படத்தின் முழுக்கதையுமே இந்தப் பின்புலத்தில்தான் நகரும். இப்போது புற்றுநோய் எடுத்துக் கொண்டுள்ள இடத்தை அக்காலத்தில் காசநோய் பிடித்திருந்தது எனக்கூறினால் மிகையாகாது. வேறு ஏதாவது திரைப்படங்கள் இருந்தனவா எனத் தெரியவில்லை.

            ஓரிரு கதைகளோ நாவல்களோ இதனைக் களமாகக் கொண்டிருந்திருக்கவும் வாய்ப்புண்டு.

            சமீபத்தில் பழைய புத்தகங்களைக் குடையும்போது ‘கமலம்’ என்ற தி. ஜாவின் ஒரு நெடுங்கதையைத் திரும்பப் படிக்க நேர்ந்தது. கதையின் பாத்திரப்படைப்பையும், நிகழ்ச்சிகளை நகர்த்திச்செல்லும் அமைப்பையும், சூட்சுமமாக ஒரு ‘புதிரை’ இறுதிவரை பொதிந்து வைத்துத் தக்க தருணத்தில் முடிச்சவிழ்க்கும் நயத்தையும் திரும்பவும் ஒருமுறை ரசிக்கக் கிட்டிய வாய்ப்பு!

            அட! இங்கும் டி. பி. ஒரு முக்கிய பங்கு வகிக்கிறதே! எல்லாமாக இருக்கும் ஒரு இளம் ‘வேலைக்காரனை’ (அல்ல எனக் கடைசியில்தான் தெரிய வரும்) அவனைப் பிடித்திருக்கும் நோயிலிருந்து விடுவிக்க எல்லா முயற்சிகளையும் எடுத்துக்கொள்ளும் எஜமானியம்மாளைக் கண்டு வியப்பிலாழ்ந்தேன். அவளுடைய வாழ்விற்கே அதுதான் அர்த்தமோ என்னவோ! அருமையான கதை! நான் சொல்லித்தான் தெரிய வேண்டியதில்லை. படித்தவர்கள் அறிவார்கள்.

                                    ————————————-

            இதிலிருந்து தெரியும் ஒரு பேருண்மை என்னவென்றால், காசநோய் என்பது 16-வது நூற்றாண்டிலிருந்து மனிதர்களை உளரீதியாகவும் உடல்ரீதியாகவும் அலைக்கழித்தும் ஆட்டிப்படைத்தும் வருகிறது என்பதனைத்தான்.    தன்னால் ஜெயிக்க இயலாத ஒன்றினை மனிதன் பலவாறும் நோக்கி வியந்தும் பயந்தும் வருகிறான் என்பது தெளிவாகிறது.

            காசநோய், எலும்புருக்கி, டி. பி., எனும் இதனை வெற்றிகொள்ளப் பல முயற்சிகள் உலகெங்கும் தொடர்கின்றன. வெற்றிப்பாதை நோக்கி டி. பி.க்கே உரித்தான ஆன்டிபயாடிக்குகளும், மற்ற ஆராய்ச்சிகளும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.

            இந்த ஆண்டுக்கான 2021- உலக டி. பி. தினச் செய்தி- கடிகாரத்தின் முள் நகர்ந்து கொண்டிருக்கிறது என்பதாகும். அதாவது ஆராய்ச்சியாளர்கள், மருத்துவர்கள், பொதுமக்கள், உலகத் தலைவர்கள் ஆகியோர் நாமே, நமக்கு வைத்துக்கொண்ட கெடு நெருங்கிக் கொண்டுள்ளது என்பதற்கான அறிவுறுத்தல்.

            நம்புவோம்! வெற்றி பெறுவோம்!

                        ———————————————-

           

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Series Navigationபெரு வெடிப்பு நேர்ந்து பிரபஞ்சம் துவங்க வில்லை. எப்போதும் இருந்துள்ளது பிரபஞ்சம். துவக்கமும் முடிவும் இல்லாதது.சரித்தான்
author

Similar Posts

4 Comments

  1. Avatar
    ஸிந்துஜா says:

    தி.ஜா. நூற்றாண்டு நாளில் ஒரு வித்தியாசமான நினைவூட்டல்.எழுத்தாளருக்கு பாராட்டி.

  2. Avatar
    jananesan says:

    இலக்கியமும் காசநோய் என்னும் இப்பத்தியில் இன்னும் சில தகவல்களை சேர்த்து குறிப்பிட வேண்டியுள்ளது. தமிழ்ச்சிறுகதையின் பிதாமகன் எனப்போற்றப்படும் புதுமைப்பித்தன் காசநோயால் பாதிக்கப்பட்டு தன் முப்பத்தொன்பது வயதில் அமரரானவர். மணிக்கொடி படைப்பாளிகளில் குறிப்பிடத் தக்கவரான எம்.வி.வெங்கட்ராம் காசநோயால் பாதிக்கப்பட்டு மீண்டவர்.தமிழக நாட்டுப்புற இலக்கியத்தின் முன்னத்தி ஏர்களில் ஒருவரான கி.ராஜநாராயணன் காசநோயால் முப்பத்தைந்து வயதிலேயே பாதிக்கப்பட்டு நோயை வென்று மீண்டு இன்று வயதுதொன்னூற்று ஒன்பதில் வெற்றிநடை போடுகிறார்.இன்னும் பல படைப்பாளிகள் இருக்கவும் கூடும்.நம் வேண்டுகையும் விழைவும் யாதெனில் காசநோய் முதலான உயிர்க்கொல்லி நோய்கள் வெல்லத்தக்கவையே என மெய்பித்து மானுடம் முழங்க வேண்டும் என்பதே. நன்றி.

  3. Avatar
    Dhanasekar R says:

    காச நோய் பரவாமல் தடுக்க
    சூரிய ஒளி, காற்றோட்டம்,
    சத்துணவு அவசியம்.
    சைவர்களுக்கு பொட்டுக்கடலை, கருப்பட்டி, வெல்லம், பச்சை நாடன் பழம், கருப்பு உளுந்து களி கஞ்சி, பதநீர்.

    அசைவம் சாப்பிடு வோர்
    நன்கு சமைக்கப் பட்ட
    மாமிச உணவு, + மேற்கண்ட சைவ உணவு.

    எல்லாவற்றையும் விட முக்கியம் : மருத்துவர் அறிவுரைப்படி மருந்து, மாத்திரைகளை தொடர்ந்து உட்கொள்ளுதல்.

    நாமே, இருமல் நின்று விட்டது,
    உடல் வலி இல்லை,
    எடை கூடி விட்டது என்று மருந்து மாத்திரைகளை எடுத்துக் கொள்வதை நிறுத்தக் கூடாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *