இந்துத்துவம் என்பது ….

This entry is part 1 of 9 in the series 18 ஏப்ரல் 2021

(“சரவணா ஸ்டோர்ஸ்” எனும் 30.12.2001 தேதி  இதழில் வந்தது. “மாற்றம்” எனும் சேது-அலமி பதிப்பகத்தின் தொகுப்பில் உள்ளது.)

      விக்டர் வியப்புடன் கோபாலனைப் பார்த்தான்: “மெய்யாலுமா நீங்க பி.எஸ்ஸி. பட்டதாரி?”                                                         கோபாலனுக்குச் சிரிப்பு வந்தது. கசப்பான சிரிப்புத்தான்: “ஆமா, விக்டர். வேற வேலை கிடைக்கல்ல. என் படிப்புக்கு ஏத்த வேலை கிடைக்கிற வரையில பஸ் ஓட்டலாமேன்னு இந்த வேலைக்கு வந்திருக்கேன்.”                  “உங்க படிப்புக்குத் தக்கன வேலை கிடைக்கல்லைங்குறதுக்காகத்தான் கார் டிரைவிங் கத்துக்கிட்டீங்களா?”                                              “இல்லே, விக்டர். எங்க வீட்டிலயே கார், லாரி எல்லாம் இருந்திச்சு. அதனால நான் மாணவனா இருந்தப்பவே டிரைவிங் கத்துக்குறதுக்கான வாய்ப்பு எனக்குக் கிடைச்சுது. கத்துக்கிட்டேன்.”                                  “கார், லாரி எல்லாம் சொந்தமா இருக்கிற  அளவுக்குச் செல்வாக்குள்ள நீங்க … பெறகு … எப்படி ….” – தொடங்கியதை முடிக்க முடியாத தயக்கத்துடன் விக்டர் சொற்களைப் பாதி வாக்கியத்தில் நிறுத்திக்கொண்டான்.                     “என்ன செய்யிறது, விக்டர்? எல்லாம் எங்க நேரம். எங்கப்பாவுக்குச் சொந்தமா அஞ்சு லாரிங்க இருந்திச்சு. இன்னொரு நண்பரோட சேர்ந்து ட்ரான்ஸ்போர்ட் கம்பெனி ஆரம்பிச்சு நடத்தினாரு. அதாவது லாரி செர்வீஸ் … அந்தப் பார்ட்னர் மோசடி செஞ்சதால எங்கப்பாவுக்கு  ஏகப்பட்ட நஷ்டமாயிடிச்சு. வாழ்ந்து கெட்ட குடும்பம் எங்களது. கைக்காசெல்லாம் கிட்டத்தட்ட கரைஞ்சு, நான் உடனே ஏதாவது வேலை தேடிக்கிட்டே ஆக வேண்டிய நிர்ப்பந்தம். அதான்!”                                                     “சே! கேக்குறதுக்கே கஷ்டமாயிருக்கு. என்ன மனுசங்களோ! நாளைக்குக் கர்த்தர் நம்மை தண்டிப்பாருங்குற அச்சம் இருந்தா இப்படித் தப்புப் பண்ணுவாங்களா?”

              விக்டர் அலுத்துக்கொண்டு சொன்ன சொற்கள் கோபாலனுக்கு ஒரு நிம்மதியைக் கொடுத்தன. அவன் விக்டரைப் பார்த்து நன்றியுடன் புன்னகை புரிந்தான்.

       “சரி. அப்ப ஆல் த பெஸ்ட்! … நான் பத்தாவது வகுப்பில ஃபெயில்… அதனால இந்த டிரைவர் வேலையில எனக்கு முழுத் திருப்திதான், கோபால். உங்க படிப்புக்குத் தகுந்த பெரிய வேலை – சர்க்கார் வேலை, பாங்க் வேலை இது மாதிரி – கிடைக்கணும்னு கர்த்தரைப் பிரார்த்திக்கிறேன்….”

       “தேங்க்யூ! சரி. அப்ப நான் பஸ்ல ஏறி உக்காந்துக்கறேன்…”                   “சரி. போயிட்டு வாங்க…”

       விக்டர் கிளம்பிப் போய்விட்டான். பேருந்தில் ஏறி ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்துகொண்ட கோபாலன் கைக்கெடியாரத்தைப் பார்த்தான். பேருந்து புறப்பட இன்னும் பதினைந்து நிமிடங்கள் இருந்தன. நடத்துநர் மாணிக்கம் பேருந்தில் ஏறி அமர்ந்திருந்த பயணிகளில் முக்கால்வாசிப் பேருக்கு மேல் பயணச்சீட்டுகளை விநியோகித்து முடித்துவிட்டான். முன்னிருக்கைகள் இரண்டு மட்டுமே மிச்சம் என்பதைத் தன்னிருக்கையில் இருந்தபடியே கோபாலன் கவனித்தான். தன் கைப்பையைத் திறந்து அதனுள்ளிருந்து ஒரு பிள்ளையார் படத்தை எடுத்துத் தனக்கு எதிரே ஒட்டினான். முன் யோசனையுடன் அவன் எடுத்து வந்திருந்த ஒட்டுநாடாவும் சிறு கத்தரிக்கோலும் அதற்கு உதவின. ஊதுபத்திகளும் ஏற்றினான். பிள்ளையாரின் படத்துக்குக் குங்குமம் இட்டான். பிறகு கண் மூடிப் பிரார்த்தித்தான்: “கடவுளே! எந்தச் சிக்கலும் இல்லாமல் எல்லாம் நல்லபடியாக முடிய வேண்டும்!”

      மேட்டுப்பட்டியிலிருந்து செங்கல்பட்டிக்கு இன்றுதான் புதிதாகப் பேருந்து விடப்படுகிறது. சரியான பாதை போடப்பட்டதே ஒரு மாதத்துக்கு முன்புதான். அந்த இரண்டு ஊர்களுக்குமிடையே இருபத்தைந்து கிலோ மீட்டர்த் தொலைவுதான். பெரும்பாலும் கட்டைவண்டிப் பயணம், சைக்கிள் பயணந்தான். இப்போது முதன் முறையாகப் பேருந்துப் போக்குவரத்து அறிமுகப்படுத்தப்பட்டதில் மேட்டுப்பட்டி மக்களுக்கெல்லாம் ஒரே மகிழ்ச்சி. அதற்கு முயற்சி மேற்கொண்ட தங்கள் சட்டசபை உறுப்பினரை நன்றியோடு  நினைவுகூர்ந்து தங்களுக்குள் பேசிக்கொண்டார்கள். செங்கல்பட்டி மக்களுக்கும் அதே போல் மகிழ்ச்சியாகத்தான் இருக்கும் என்று கோபாலன் நினைத்துக்கொண்டான்.

       சற்றுப் பொறுத்து, எல்லாருக்கும் பயணச் சீட்டுகளைக் கொடுத்து முடித்த பின், நடத்துநர் மாணிக்கம் முன் வரிசையில் காலியாக இருந்த ஓர் இருக்கையில் அமர்ந்து, “இன்னும் பத்து நிமிசம் இருக்கு, தம்பி. நேத்து வெள்ளோட்டம் பாத்த ரூட் நல்லா நெனப்பு இருக்குதில்ல?” என்றான்.

       “இருக்கு, மாணிக்கண்ணே…”                                              “நாலே ட்ரிப்தான் விடச் சொல்லி உத்தரவு. நாளைக்கு விக்டர் வராப்ல.”                                                                    “ஆமாமா.”                                                               “எவ்வளவு நாளா இந்த ரூட்ல பஸ் விடணும்னு கேட்டுட்டிருக்குறாங்க சனங்க! எனக்குத் தெரிஞ்சு பத்து வருசமாக் கேட்டுட்டு இருக்குறாங்க.”               “ஆமா. நானும் கேள்விப்பட்டேன்.”                                         “என்ன? பிள்ளையார் படம் ஒட்டிட்டீங்க போல!”                              “ஆமா. கம்-டேப் எல்லாம் நேத்தே எடுத்து வச்சுட்டேன். எங்கப்பாவோட யோசனை.”                                                                    “நல்லதுதானே? இந்தக் காலத்துல யாரு அப்பா-அம்மாவுடைய யோசனையெல்லாம் கேக்குறாங்க?”

       கோபாலன் சிரித்தான்.

       … சரியாக எட்டேமுக்காலுக்கு மாணிக்கம் “ரைட்!” என்று கூவ, கோபாலன் பிள்ளையார் படத்தை நோக்கிக் கண் மூடிக் கணம் போல் வேண்டிக்கொண்டபின் பேருந்தைக் கிளப்பினான். …

       … முகம் கழுவிக்கொண்டு வந்து நாற்காலியில் அமர்ந்த மகன் கையில் சுடச்சுடக் காப்பியைக் கொடுத்த மீனாட்சி, “என்னடா? முத நாளே வத்தி வரண்டு போயிட்டே? டில்லியிலேருந்து பிரயாணம் பண்ணி வந்தவன் மாதிரி தெரியறே?” எனறு சிரித்தாள்.

      எதிரே அமர்ந்திருந்த சதாசிவம், “போகப் போகச் சரியாயிடும், ”என்றார் சிரித்தபடி.

       “ம்! ஏதோ விளையாட்டா இவன் கார் ட்ரைவிங்கும் லாரி ட்ரைவிங்கும் கத்துண்டது இப்ப சமயத்துக்குக் கை கொடுத்திருக்கு.”

       சதாசிவத்துக்கு முகம் இருண்டது. அவரை மோசம் செய்த கூட்டாளியை அவன் ஏதும் தப்புச் செய்வதற்கு முன்பிருந்தே மீனாட்சிக்குப் பிடிக்காது. அவனைப்பற்றி அவரை அவள் எச்சரித்ததுண்டு. அவர்தான் அவளது கணிப்பை அலட்சியப்படுத்திவிட்டார். சமயம் வரும்போதெல்லாம்  மீனாட்சி சொல்லிக்காட்டத் தவறியதே இல்லை.

       “சரிம்மா. ஏதோ இப்போதைக்கு ஒரு வேலைன்னு கிடைச்சதில்ல?” என்ற கோபாலன் மேலே எதுவும் குத்தலாகப் பேச வேண்டாமென்று அவளுக்குச் சைகை செய்ய அவள் தம்ப்ளரைப் பெற்றுக்கொண்டு அப்பால் நகர்ந்தாள்.

       “நாளைக்கும் இதே ட்யூட்டிதானா?”                                        “இல்லேப்பா. நாளைக்கு எனக்கு வேற ரூட்ல ட்யூட்டி. நாளை நீக்கி இதே ட்யூட்டி…” என்ற கோபாலன் அந்த வாரத்துப் பத்திரிகை ஒன்றை எடுத்துப் புரட்டலானான்.

       … முன்றாம் நாள் பேருந்தில் ஓட்டுநர் இருக்கையை அடைந்து அமர்ந்த கோபாலனுக்கு ஒரு கசப்பான வியப்புக் காத்திருந்தது. அவன் ஓட்டுநர் இருக்கையின் எதிரே ஒட்டி வைத்திருந்த பிள்ளையார் படம் காணப்படவில்லை. கிழிக்கப்பட்டு விட்டிருந்தது. அதன் இடத்தில் ஏசுநாதரின் வண்ணப்படம் ஒட்டப்பெற்றிருந்தது. முந்திய நாள் ஓட்டுநர் பணியில் இருந்த விக்டர் வேலையாகத்தான் இருக்கவேண்டும் அது என்பது அவனுக்குப் புரிந்தது. அவனுக்கு முகம் கறுத்தது. அவனது எண்ண ஓட்டம் புரிந்தவனுக்குரிய தோழமையுடன் மாணிக்கம் அவன் காதருகே குனிந்து, “விக்டரோட வேலைப்பா. இதை இப்படியே விட்டுடக் கூடாது, தம்பி! என்ன திமிரு பாரு அவனுக்கு!” என்றான்.                                                           கோபாலன், “இப்ப எதுவும் பேசவேணாம், மாணிக்கண்ணே. நானும் பதிலுக்குப் பதில் ஏதாவது செய்யலாம்னுதான் இருக்கேன்…. அது சரி, நீங்க இதைப்பத்தி அந்தாள் கூட ஏதாச்சும் பேசினீங்களா?” என்றான்.                        “இல்லே, தம்பி. பிள்ளையார் படம் ஒட்டினது நீங்க. உங்களையும் ஒரு வார்த்தை கேக்காம எதுவும் பேசவேணாம்னுதான் சும்மா இருந்துட்டேன். தவிர நேத்து கிறிஸ்துமஸ் இல்லியா? வண்டியில கிறிஸ்துவங்க கும்பல் கொஞ்சம் ஜாஸ்தியாயிருந்திச்சு. நான் ஒண்ணு சொல்ல, அந்தாளு இன்னொண்ணு சொல்லன்னு ஏதாச்சும் தகராறுல முடிஞ்சா என்ன செய்யிறதுன்னு பொறுத்துக்கிட்டு கம்னு இருந்துட்டேன்…”                           “சரி…. இதுக்கு என்ன பதிலடி குடுக்கிறதுங்கிறதைப் பத்தி நாம அப்பால பேசலாம் …”

       … அன்று மாலை வீடு திரும்பியதும் கோபாலன் அது பற்றித் தன் அப்பாவிடம் கூறினான். அவன் அப்பா சதாசிவம் முதிர்ச்சி நிறைந்த சிந்தனையாளர். எனவே ஒரு நல்ல யோசனை சொல்லுவார் என்று அவன் எண்ணினான்.

       “அப்பா! எவ்வளவு திமிர் பாத்தீங்களாப்பா அவனுக்கு? பிள்ளையார் படத்தைச் சுரண்டி எடுத்துட்டு அந்த எடத்துல அதைவிடப் பெரிசா ஏசுகிறிஸ்துவோட படத்தை ஒட்டியிருக்கானே?”                               “நீ என்ன செய்யலாம்னு நினைக்கிறே, கோபால்?”                              “வேற என்ன? அதைச் சுரண்டி எடுத்துட்டு மறுபடியும் ஒரு பிள்ளையார் படத்தை ஒட்டிவைப்பேன்!”

சதாசிவம் சிரித்தார்: “கோபால்! நீ என்ன செய்யணும்கிறது பத்தி உடனேயே எம்மனசில ஒரு திட்டம் உருவாயிடுத்து. அதைப் பத்திச் சொல்றதுக்கு முந்தி நான் உங்கிட்ட ஒரு கேள்வி கேக்கணும் …”                    “என்னப்பா?”                                                             “இந்துத்துவம், இந்துத்துவம்கிறதா ஒரு வார்த்தை சமீப காலமா ரொம்ப அடிபட்டுண்டிருக்கே, அதுக்கு என்ன அர்த்தம்னு நீ நினைக்கிறே?”                      “இளிச்சவாய்த்தனம்னுதான்! வேற என்ன? இந்துக்கள் இளிச்சவாய்களாவும் கோழைகளாவும் இருந்து வந்திருக்கிறதுனாலதான் சிறுபான்மையினரோட கொட்டம் நாளுக்கு நாள் அதிகமாயிண்டிருக்கு! இந்துக்கள் தைரியசாலிகளா இருந்திருந்தா இந்த நாட்டில இஸ்லாமும் கிறிஸ்துவமும் இந்த அளவுக்கு வேரூன்றியிருக்குமாப்பா?”                         “கோபால்! ஆத்திரப்படாம பேசுப்பா. எம்மதமும் சம்மதமேன்னு சொல்ற ஒரே மதம் இந்துமதம்தாம்ப்பா. எந்த மதமும் மனுஷாளைப்  பொல்லாதவனாயிரு, மத்த மதத்தவங்களை எதிரிகளா நினைன்னு போதனை செய்யறதில்ல.  மனுஷாதான் மதம்கிறதைத் தப்பர்த்தம் பண்ணிண்டு ‘மதம் பிடிச்சு’ அலையறா. இன்னும் சொல்லப் போனா, பிற மதத்துக்காராளைப் புண்படுத்தாத மதம் நம்முடைய இந்து மதம். பிற மதங்களைக் குறை சொல்லாததும் நம்ம இந்து மதம். எல்லா மதங்களுமே கடவுளை யடையவும், மனுஷாளை மேம்படுத்தறதுக்காகவும் ஏற்பட்டதுங்கிறதை மறுக்காத மதம் இந்து மதம். உனக்கு ஒண்ணு தெரியுமா?”                                     “என்னப்பா”                                                              “நம்ம மகாத்மா காந்திக்கு அவருடைய இளம் வயசுல ஒரு சந்தேகம் வந்தது. அந்தக் காலத்துல, வெள்ளைக்காரனோட ஆட்சி கொடிகட்டிப் பறந்துண்டிருந்தப்ப, தெருவுக்குத் தெரு கிறிஸ்துவ மத போதகர்கள் அடிக்கடி நின்னு தங்களுடைய மதத்தைப் பத்திப் பிரசாரம் பண்ணுவாளாம். அது மட்டுமில்ல. இந்து மதத்தை ரொம்பவே கேலியும் கிண்டலும் பண்ணுவாளாம். கிறிஸ்துவர்களைத் தவிர மத்தவாளை யெல்லாம் ‘பாவிகளே! பாவிகளே’ ன்னுதான் சொல்லி அழைப்பாளாம். இதையெல்லாம் பாத்ததும் காந்திக்குத் தன்னோட மதத்தும் பேர்ல ஒரு சந்தேகம் வந்துடுத்து.  ‘நம்ம மதம் அவ்வளவு மோசமானதா யிருந்தா, அதுலேர்ந்து விலகி வேற ஒரு சிறந்த மதத்தைத் தழுவணும்கிற தீர்மானத்துக்கு வந்துட்டார் காந்தி. … அதுக்கு முன்னால அவர் என்ன பண்ணினார், தெரியுமா?”                                                    “என்னப்பா பண்ணினார்?”                                                      “உலகத்துல இருக்கிற முக்கியமான மதநூல்கள் எல்லாத்தையும் ஊன்றிப் படிச்சார். படிச்சு முடிச்சுட்டு அவர் என்ன முடிவுக்கு வந்தார்னு தெரியுமில்லியா?”                                                                  “இந்துவாவே இருக்கிறதுங்கிற முடிவுக்குத்தானே? அதான்  தெரியுமே அவர் மதம் மாறல்லேன்னு?”                                                      “அது சரி. ஆனா அதுக்கான காரணம் இன்னதுன்னு அவர்  சொன்னது பத்தி உனக்குத் தெரியுமா?”                                                     “தெரியாது. சொல்லுங்கோ.”                                              “ஒரு நிமிஷம்!” என்ற சதாசிவம் எழுந்து போய்த் தமது புத்தக அலமாரியைக் குடைந்து காந்தி அடிகள் நடத்திய் “யங் இண்டியா” இதழின் நகல் ஒன்றை எடுத்து வந்து, குறிப்பிட்ட பக்கத்தை விரித்து அவனிடம் கொடுத்து அதைப் படிக்கப் பணித்தார். கோபாலன் ஆர்வத்துடன் படிக்கலானான்:

       ‘எனக்குத் தெரிந்த உலகத்து மதங்கள் யாவற்றிலும் இந்து மதமே மற்ற

எந்த மதத்தை விடவும் அஹிம்சையை மிக அதிக அளவில் வலியுறுத்துவதாகப் பரிசீலனைக்குப் பிறகு அறிகிறேன். … இந்து மதம் பிற மதங்களை மதிக்கக் கற்றுக்கொடுப்பதோடு, அவற்றில் உள்ள நல்ல அம்சங்களை ஏற்கவும் அறிவுரை கூறுகிறது. எந்த ஒரு குறுகிய கோட்பாட்டுக்குள்ளும் இந்து மதம் தன்னை ஒடுக்கிக்கொள்ளவில்லை. மனித குலத்தை மட்டுமல்லாது, உலகத்தே வாழும் உயிரினங்கள் அனைத்தையும் இந்து மதம் நேசிக்கச் சொல்லுகிறது. எனக்குத் தெரிந்துள்ள எல்லா மதங்களிலும் மிக அதிக அளவில் சகிப்புத்தன்மையைக் கடைப்பிடித்து வருவது இந்து மதமேயாகும் ….’

      படித்துவிட்டு ஒரு பெருமூச்சுடன் அவன் அதைத் திருப்பிக் கொடுக்க, அதை வாங்கி அலமாரியில் பத்திரப்படுத்திய சதாசிவம், “அது மட்டுமா? ‘பிற மதங்களை இழிவாகப் பேசி மற்ற மதத்தினரைத் தன் மதத்துக்குப் பேச்சுச் சாதுரியத்தாலோ,  இல்லாவிடில் கட்டாயப்படுத்தியோ, அச்சுறுத்தியோ இழுக்காத மதமும் கூட!’ அப்படின்னும் காந்தி இன்னொரு கட்டுரையில் சொல்றார்…” என்றார்.

      கோபாலனுக்கு முகம் சிவந்தது. “இந்துக்கள் ரொம்பவும் சகிப்புத்தனத்தோட  இருக்கிறதுனாலதாம்ப்பா இந்த நாட்டுலே பிற நாட்டுக்காராள்ளாம் வந்து தங்கி, தங்களோட மதங்களைப் பரப்ப முடிஞ்சுது. கோழைத் தனத்துக்குப் பேரு சகிப்புத்தனமாப்பா?…”                                    “மனுஷ ரத்தம் சிந்தக்கூடாதுங்கற பெரிய நோக்கத்துக்குப் பேரு கோழைத்தனம்னு நீ சொன்னா நான் என்ன சொல்லி உன்னைக் கன்வின்ஸ் பண்றது? … தவிர நம்ம மேலயும் தப்பு இருக்கு, இல்லியா?  ‘தீண்டாமைங்கிறது எங்க சாஸ்திரங்கள்ளே இல்லே’ன்னு பீத்திண்டாப்ல ஆச்சா? சாஸ்திரங்கள்ள மட்டுமே நல்லதுகள் இருந்தாப் போறுமா? நாம எந்த அளவுக்கு அதையெல்லாம் அன்றாட வாழ்க்கையில கடைப்பிடிக்கிறோம்கிறதை  வச்சுத்தானே  மத்தவங்க நம்மள மதிப்பாங்க?”                                                                                                                                                 “போங்கப்பா. மத்த மதக்காரங்கள்ளாம் மட்டும் தங்களோட மத நூல்கள்ள சொல்லியிருக்கிறபடிதான் முழுக்க முழுக்க நடக்கிறாங்களாக்கும்! அப்படி இருந்தா, கட்டாய மத மாற்றம்கிறதே இருக்காதேப்பா? என்ன சொல்றேள்?”                                                                   “சரி. ஒத்துக்கறேன். ஆனா நடந்தது நடந்து போச்சு. அதையே கிளறிண்டிருந்தா என்ன அர்த்தம்?”                                                “என்ன அர்த்தமா! ரொம்ப நன்னாருக்குப்பா உங்க கேள்வி. அதுக்கு என்ன அர்த்தம்கிறதைத்தான் இப்ப அந்த விக்டர் எனக்கு எடுத்துச் சொல்லிட்டானே! நான் ஒட்டின பிள்ளையார் படத்தைக் கிழிச்சு வீசி எறியறதுக்கு அவனுக்கு என்ன உரிமை இருக்கு?”                                  “கோபால்! உணர்ச்சி வசப்படாதே. இதுக்கு நான் ஒரு வழி வெச்சிருக்கேன். அதும்படி நீ செஞ்சா இந்தப் பிரச்னைக்கு ஒரு நல்ல தீர்வு ஏற்படும். செய்வியா?”                                                            “என்னன்னு சொல்லுங்கோ முதல்ல.”

        அவர் சொன்னார். கேட்டு முடித்ததும் கோபாலனின்  முகத்தில் புன்சிரிப்புத் தோன்றியது: “நீங்க உண்மையிலேயே பெரிய ஆள்தாம்ப்பா. நிஜம்…மாவே மகாத்மா காந்தியோட தொண்டர்தான். அப்படியே செய்யறேன்.”

  … மறு நாள் கொஞ்சம் முன்னதாகவே வேலைக்குப் போன கோபாலன் சதாசிவத்தின் அறிவுரைப்படி, விக்டர் ஒட்டியிருந்த ஏசு கிறிஸ்துவுடைய படத்தை அப்படியே விட்டுவிட்டு, அதனருகே மறுபடியும் ஒரு பிள்ளையார் படத்தை ஒட்டினான். இரண்டு படங்களுக்கும் பொதுவாக, எம்மதமும் சம்மதமேஎன்கிற சொற்களைக் கொட்டை எழுத்துகளில் தாங்கிய ஒரு காகிதத்தை அவற்றுக்குக் கீழே ஒட்டினான். ஊதுபத்திகளை ஏற்றி இரண்டு படங்களுக்கும் கீழே இருந்த இடுக்குகளில் தனித் தனியாகச் செருகி வைத்தான்.

      கோபாலன் செய்தவற்றைப் பார்த்துக் கொண்டிருந்த மாணிக்கம், விழிகள் விரிய, “நீங்க பெரிய ஆளு, தம்பி! பதிலுக்குப் பதில் நாமும் அதே பாணியில நடந்துக்கிட்டோம்னா சண்டைக்கு ஒரு முடிவே இருக்காது. மெய்யாலுமே இந்தச் சண்டையில ‘விக்டர்’ நீங்கதான்! அந்த விக்டருக்கு  ‘விக்டரி’ இல்லே! … எனக்கும் கொஞ்சம் இங்கிலீஷ் வரும், தம்பி!” என்று கூறிய பின், எதையோ நினைத்துக் கொண்டவனுக்குரிய முகபாவத்துடன் வாய்விட்டு நகைத்தான்.

       “என்ன, மாணிக்கண்ணே, சிரிக்கிறீங்க?”

       “வேற ஒண்ணுமில்ல, தம்பி. நாளைக்கி டூட்டிக்கு வந்ததும் இதைப் பார்க்கப்போற விக்டரோட முகம் எப்படி அசடு வழிய மாறும்னு யோசிச்சுச் சிரிச்சேன்,” என்றான், மாணிக்கம்.

Series Navigationஏப்ரல் மாத ‘புத்தகம் பேசுது’ இதழ் குறித்து என் பார்வை
author

ஜோதிர்லதா கிரிஜா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *