என் மனம் நீ அறியாய்

author
1
0 minutes, 21 seconds Read
This entry is part 3 of 9 in the series 18 ஏப்ரல் 2021

கௌசல்யா ரங்கநாதன்

-1-
அந்த அதிகாலை வேளையில் என் பக்கத்து ஃஃப்ளாட்  நீரஜா, இன்றைக்கெல்லாம் இருந்தால் 45 க்குள் இருக்கும், வயது.  திருப்பாவை முதல் பாடலை   அதாவது “மார்கழி திங்கள், மதி நிறைந்த நன்னாளால்” என்று தொடங்கும் ஆண்டாள் பாசுரம்தனை பாடியதைக்கேட்டபோது என் மனம் 60 வருடங்களை  கடந்து போனது ஒரு நொடியினில்.  
தந்தையை இழந்து, பள்ளி படிப்பை அப்போதுதான் முடித்திருந்த நான்  தாய் வழி பாட்டன்  கிராமமான வலிவலத்தில் தாய், தம்பியுடன் அடைக்கலமாயிருந்த போது இது போலத்தான்  மார்கழி மாதங்களில் அதிகாலை 4 மணிக்கெல்லாம் அங்குள்ள அருள்மிகு மனத்துணைநாதன் உடனுறை மாழையொன்கண்ணி திருக்கோவிலிலிருந்து  எம்.எஸ்ஸின் சுநாதமான குரலில் திருப்பாவை  கேட்டு மனம் கொள்ளா உவகையுடன்  எழுந்து, பல் துலக்கி கோவில் திருக்குளத்தில்  நடுக்கும் குளிரையும் பொருட்படுத்தாமல்  குளித்து, முடித்து குளத்தை ஒட்டிய நந்தவனத்திலிருந்து செம்பருத்தி நந்தியாவட்டை , பவழமல்லி போன்ற பூக்களை கொய்து வீட்டுக்கு வந்து  தாத்தாவுடன் அவர் பூசித்து வந்த அருள்மிகு ஏகச்சக்கர நாராயணன் உடனுறை  தாயாருக்கென வெண் பொங்கலுடன் சேவித்திட போவோம்.  ஊம்.  இப்போது ஏன் பழங்கதை? இன்று, பல வருடங்களுக்கு பிறகு நீரஜா பாடிய திருப்பாவை என்னை கடந்த காலத்துக்கு, அதாவது 60 வருடங்களுக்கு முன், இட்டுச்சென்றது என்பதே உண்மை.  
“ஐய்யயோ.  இன்னைக்கு மார்கழி பிறக்குதா?மறந்தே போயிட்டேனே!  வாயிலில் கோலம் போடணும் இந்த மாசம் முச்சூடும்”என்றாள் என் மனைவி ஜானகி.  அவள் ஒரு கோலப் பித்து.  எதிலும் ஒரு செய் நேர்த்தி இருக்கும்.  எறும்பு போல சுறு சுறுப்பானவள்.  வெள்ளந்தி.  அதே சமயம் தாழ்வு மனப்பான்மை.”வாசல் கதவை திறக்கலையா இன்னம்?” என்றபோது, “ஆன்டி, குட் மார்னிங்”. என்ற நீரஜா என்னையும் பார்த்து “குட் மார்னிங் அங்கிள்” என்றாள் வாய் கொள்ளா மகிழ்ச்சியுடன்.” குட் மார்னிங்மா ! என்னம்மா இன்னைக்கு அதிகாலை கோலம்  எல்லாம்” என்றேன்…ஜானுவும்  அப்படியே கேட்க “நான் .. நான் .. இன்னைக்கு ரொம்ப சந்தோஷமாயிருக்கேன் அங்கிள், ஆன்டி” என்றாள்.  “என்றைக்கும் இப்படியே சந்தோஷமாயிரம்மா” என்றேன்.
“அங்கிள்  ..இன்னைக்கு…இன்னைக்கு “என்றவள் சற்றே பொறுத்து,
 -2-      
“என் பிள்ளையாண்டான் இன்னைக்கு ஸ்டேட்ஸிலிருந்து  மூணு வருஷங்களுக்கப்புறம் வரான்.  அதான் மகிழ்ச்சி.”என்றாள்..
“அப்படியா? குட்,. ஏம்மா அவனுக்கு இந்த முறையாவது ..”என்ற என் ம்னைவியைப் பார்த்து,
“ஆமாம் ஆன்டி.  ஒரு கலியாணத்தை பண்ணிடணும்னுதான் நினைக்கிறேன்.  ஆனா அவன் பிடி கொடுத்தே பேச மாட்டேன்றான். பார்ப்போம்.” என்றவள் “எனக்கு இன்னைக்கு  நிறைய வேலை இருக்கு.  சமைக்கணும் பிள்ளையாண்டானுக்கு பிடிச்சதை, அவன் அங்கே வேலைக்கும் போய்கிட்டு தானே சமைச்சும் சாப்பிட்டுகிட்டு லோல் படறான்.  அவன் நாக்கே மறத்து போயிருக்கும்”.என்று சொல்லி வீட்டு ஒரு துள்ளல், துடிப்புடன் உள்ளே போனாள் ஏதோவொரு பாடலை ஹம் செய்தவாறு..
நீரஜா ஒரு நல்ல அரசு வேலையில் தலைமைப் பொறுப்பில் இருக்கும் மிக, மிக, தைர்யமான பெண்மணி .  எங்களது அடுக்குமாடி குடியிருப்பில் மொத்தம்30 ஃபிளாட்டுகள்.  ஃபிளாட் கலாச்சாரப்படி, யாரும், யாருடனும் பேச வேண்டாம் . பார்க்கும்போது ஒரு புன்முறுவலாவது, ஊஹூம்! எங்கோ பார்ப்பது போலவோ செல்லில் பேசுவது போலவோ முகத்தை திருப்பிக்கொண்டு…  என்னே மனிதர்கள்.  பாரதி வாக்கில் சொல்வதென்றால் “இந்த நிலை கெட்ட மனிதரை  நினைத்துவிட்டால் என்றே பாடத்தோன்றும். நாள் முழுவதும் தனிமை வீட்டு சிறை.  டி.வி. மட்டுமே துணை என்றாகிவிட்டிருக்கிறது இன்றைய நகர வாழ்க்கை.  பெருமூச்சுதான் வருகிறது.  இந்த பக்கத்து வீட்டு நீரஜாவும்  விதிவிலக்கல்ல.  ஆரம்பத்தில் நீரஜா எங்களுக்கு  சிடுமூஞ்சியாய்த்தான் காணப்பட்டாள்.சமீபகாலம் வரை அவள் கணவனுடன் தான் வசித்து வந்தாள். ஒரே மகன் சதீஷ்.
காலை நேர கெடுபிடிகள் சென்னை போன்ற பெரு நகரங்களில் சகஜமானதொரு நிகழ்வுதானே. அப்படித்தான் நீரஜா வீட்டிலிருந்தும்  தினம், தினம் காச், மூச்சென்ற சத்தங்கள் வந்து கொண்டேதான் இருக்கும்.  அவள் கணவனுடன் சண்டை போட்டுக்கொண்டிருக்கிறாள் போலும்  என்றே நினைப்போம்.  எந்த சந்தர்ப்பத்திலும் நீரஜாவின் குரல் மட்டுமே மேலோங்கி  இருக்கும்.  அவள் கணவன் குரல் எப்படி இருக்கும் என்றே எங்கள் யாருக்கும் ஊஹூம்.  அது மட்டுமல்ல..  அவன் என்ன செய்கிறான்? எங்கு போகிறான்? என்ன வேலை ?. இது தேவையும் இல்லை மற்றவர்களுக்கு.  இன்றைய அவசர உலகில் அவரவர் பாடு அவரவர்களுக்கு.  எங்களுக்கும், குறிப்பாக, வம்பு வளர்ப்பது, பிறர் விஷயங்களில் தலையிடுவது, கேட்காமலேயே
ஆலோசனை சொல்வதெல்லாம் பிடிக்காத ஒன்று.   நீரஜாவும் எப்போதாவது எங்களை பார்த்தால் .  அதுவும் நேருக்கு நேராய், வேறு வழி இல்லாமல், ஒரு செயற்கை புன்னகை, ஸ்விட்ச் போட்டாற்போல அதாவது ஒரு நடிகனுக்கு, இயக்குனர்  “ஸ்டார்ட், ஆக்க்ஷன்” என்றதும் புன்னகைப்பது போல்.  நாங்களும் அதையே பின்பற்றுவோம்.  
அவள் ஒரே பிள்ளை, இங்கு படித்து முடித்த பின், ஸ்டேட்சில்  ஒரு வேலை கிடைத்து போனதாக நீரஜா காஷுவலாக  எங்களிடம் சொன்னாள்.  அது கூட ஏன், எங்களிடம் சொன்னாள் என்றே விளங்கவில்லை.  நாங்களும்” அப்படியா, கங்கிராட்ஸ் “என்றோம். பிறகு ஒரு நாள் அவளாகவே வலுவில் எங்களிடம் வந்து “எங்க பிள்ளையை அவ்வளவு தொலைவுக்கு அனுப்ப விருப்பம் இல்லைதான்.  ஆனால் பிள்ளையாண்டான் தான் பிடிவாதமாயிருந்தான் என்றாள்.  அவள் முகத்தில் வருத்தத்தின்  சாயல் . “வேலைக்குத்தானே போயிருக்கான்.கொஞ்ச காலம் பொறுத்துக்கம்மா..இது போல பிள்ளை பிறக்க நீ கொடுத்து வச்சிருக்கணும்..கவலைப்படாதே..மனசை திடமா வச்சுக்க.
என்றே ஆறுதல் சொன்னோம்..  நீரஜாவை தேடி யாரும் வருவதும், போவதும் இல்லை எப்போதும்.  அவர்கள்குடும்பத்தில் என்ன பிரச்சினையோ, நமக்கென்ன என்றிருந்தோம்.   இப்படிப்பட்ட நிலையில் தான் ஒரு நாள் காலை 9 மணியிருக்கும்.. நீரஜா  வீட்டை பூட்டிவிட்டு, எங்களிடம் வந்து”ஆன்டி, எனக்கொரு ஹெல்ப்” என்றாள்.  
“சொல்லும்மா  தயங்காம” என்றபோது, “இந்த சாவியை அவர் வந்தா கொஞ்சம் கொடுத்துட முடியுமா.  நான் கிளம்பறதுக்குள்ளாற அவர் வந்துடுவார்னுதான் பார்த்தேன். ஆனா வரலை.”என்ற போது”பரவாயில்லைம்மா.  இதுக்கு என்ன இவ்வளவு தயக்கம்? நாங்க   கொடுத்துடுடறம்” என்றோம்.  ஆனால் அன்று பூரா அவள் கணவர்  வரவே இல்லை.  மறு நாளும்,மறுநாளும், அதற்கடுத்தடுத்த நாட்களிலும்கூட ! ஊஹூம்! எங்களுக்கே என்னவோ போலாயிற்று, நீரஜாவை பார்க்கும் போதெல்லாம்..
இப்படியே ஒரு வாரம் போல அவள் தினம் வீட்டை பூட்டி சாவியை கொடுத்து “அவர் வந்தா கொடுத்துடுங்க” என்பதும்  மாலை அவள் வீடு திரும்பியதும்  நாங்களும் எதுவும் பேசாமல் சாவியை அவளிடம் கொடுப்பதும், குனிந்த தலை நிமிராமல் அவளும் எதுவுமே பேசாமல் சாவியை திருப்பி வாங்கிக்கொண்டு போவதுமாய் இருந்தாள்.  
ஆனாலும் ஒரு நாளேனும் அவளிடம் “எங்கேம்மா போயிருக்கார் உன் புருஷன்? என்று நாங்கள்  கேட்டதே இல்லை.   திடுமென்று எங்களை தூக்கியெறிந்து பேசிவிட்டால்?என்ற பயம்! இன்னொருவர் ரணத்தை குத்தி, கிளற நாங்கள் விரும்பவில்லை.  ஆனால் ஏதோவொன்று நடந்திருக்கிறது அவள் குடும்பத்தில் என்று மட்டுமே தோன்றியது.                                                                                          
  -3-
ஒரு நாள், அவள் என்ன நினைத்துக்கொண்டாளோ என்னவோ, எங்களிடம் சொன்னாள் “ஒரு இன்டர்வியூ அட்டெண்ட் பண்றேன்னு சொல்லிட்டு போனார் அன்னைக்கு.  அங்கே, அவரை செலக்ட் பண்ணிட்டாங்களாம். அது மட்டுமில்லை ஆன்டி! உடனடியாய் அங்கேயே ஜாயின் பண்ண சொல்லிட்டங்காளாம்.  அவரும் உடனடியாய் வேலையில் சேர்ந்துட்டாராம்.  நேர்ல வந்து விபரங்கள் சொல்றதா சொன்னார்”, என்று துணிந்து ஒரு பொய் சொன்னாள், என்பது பிறகுதான் எங்களுக்கு விளங்கியது.  
வெளியே போன அவள் கணவனுக்கு ஏதொவொன்று  நடந்திருக்கலாம் , வெளியில் சொல்லிக்கொள்ள முடியாத அளவுக்கு என்றே நாங்கள் நினைத்திருந்த வேளையில்,
அவளுக்கு ஒரு போன் கால் வர, பதறியடித்தவாறு எங்களிடம் கூட சொல்லாமல்,வீட்டை  பூட்டி சாவியைக்கூட கொடுக்காமல், வெளிறிய முகத்துடன்  எங்கோ
விரைந்தாள்.  ஒரு சில  நாட்கள் வரை வீடு பூட்டப்பட்டே இருந்தது.  பிறகு ஒரு நாள் வீடு திரும்பியவள்  சகஜமாய் இருப்பது போல நடித்தாள்.  அவளாக எதுவும் சொல்ல விழையாத போது நாங்களாய் எப்படி கேட்பது  என்பதால் எதுவும் பேசவில்லை.  ஆனாலும் “சாப்பிட்டியாம்மா? இல்லை ஏதாவது தரட்டுமா” என்று மட்டுமே கேட்டோம்.  என்ன மனத்திண்மை அவளுக்கு என்றே வியப்பாயிருந்தது.  பாரதி கண்ட புதுமைப்பெண்ணோ இவள்? ஒரு நடுத்தர வயதுப்பெண், கணவன் ஆதரவும் இல்லாமல், சுற்றத்தார், உறவினர்கள் என்று யார் ஆதரவும் இல்லாமல் பிள்ளையும்  அருகில் இல்லாமல் வேலைக்கும் போய்க்கொண்டு, அதுவும் தலைமைப்பொறுப்பு வகித்துக்கொண்டு அலுவலகத்திலும் தங்களை இவள் வழி நடத்துவதா?இவளை எப்படியாவது தங்கள் வழிக்கு கொண்டு வந்து விடலாம், மிரட்டி,உருட்டியாவது,என்ற எண்ணத்தில் அலட்சியப்படுத்துவர்கள் நடுவால், என்ன தைர்யம் வேண்டும் உனக்கு” என்று நினைத்து வியந்து போனோம்.   பிறகும் அடுத்தடுத்த நாட்களில் அவள் சகஜ நிலைக்கு திரும்ப,எங்கள் எண்ணம் பொய்த்து போயிற்று என்பதே உண்மை..ஏன், நாங்களாக அவள் பழைய  ஞாபகங்களை கிளறி வேதனைக்கு உட்படுத்த வேண்டும்?பாவமல்லவா அது! அவளும் கவலைப்படவில்லை..ஒன்றிரண்டு வார்த்தைகள், அதுவும் நாங்கள் தப்பாய் நினைத்துக்கொள்வோமோ என்று  பேசினால் மட்டுமே பேசுவோம்.  மற்றபடி எதையும் தோண்டி, துறுவ மாட்டோம்.  சில நாட்கள் காலை மட்டுமே சமைத்து சாப்பிடுவாள் நீரஜா.  மதியம் கான்டினில் சாப்பிடுவாளோ, சாப்பிட மாட்டாளோ!  அவள் வீட்டில் இருக்கும் நாட்களில் பக்கத்து ஹோட்டலிலிருந்து  டிபன் ஆர்டர் பண்ணி சாப்பிடுவாள்.  சனி, மற்றும் ஞாயிறுகளில் வீட்டுக்குளேயே முடங்கி கிடப்பாள்.  மதியத்துக்கு மேல் திடீரென வெளியே போய் வருவாள்.”எங்கேம்மா, போயிட்டு வரே இந்த கொளுத்தற வெயில்ல, என்று எப்படி அவளை கேட்பது? எங்களை தப்பாய்  நினைத்து விட்டால்,
 என்ற தயக்கம் எங்களுக்கு.   அவள் கண்களில் எப்போதுமே  ஒரு ஏக்கம் காணப்படும்.. இது பற்றி கேட்டாலும், “அதெல்லாம் எதுவுமில்லையே அங்கிள்/ஆன்டி” எனலாம்..  
“பாவங்க இந்தப் பெண் நீரஜா.  தன்னந்தனியாய் இருக்கா யார் ஆதரவும் இல்லாமல்.  புருசன்காரனுக்கு  என்னாச்சோ!இப்படிக்கூடவா ஒருத்தன் இருப்பான்!ஊம்..விதி.
பிள்ளையும் ஸ்டேட்ஸ் போய் 3 வருஷங்களாச்சு.  அவனுக்கும்அம்மா பத்தின நினைப்பு இருக்கிறதாவே தோணலை..என்ன பசங்க இவங்கள்ளாம்! என்பாள் ஜானகி.
“என்ன செய்யச்சொல்றே, சொல்லு.  மனுஷங்க தங்கள் பிரச்சினையை ரொம்ப வேண்டப்பட்டவங்க கிட்ட சொல்லி ஆறுதல், இல்லை யோசனை கேட்கலாம்.  ஆனா மனசுக்குள்ளயே போட்டு அழுத்தி வச்சுகிட்டா யார்தான் என்ன பண்ண முடியும் சொல்லு.  இந்தக்காலத்தில் பெத்த பிள்ளைகள், பெண்கள் கிட்டவே மனம் விட்டு சகஜமா ஒன்றிரண்டு வார்த்தைகள்கூட பேச முடியலை.ஊம்” என்பேன். எப்போதாவது அவள் மாலை வேளையில்  அலுவலகத்திலிருந்து, களைத்து, வீடு திரும்பி வாயிற் கதவை திறக்கும்போது, ஏதோ சத்தம் கேட்கிறதே, யாராய் இருக்கக்கூடும் என்றெண்ணி, நாங்களும்  ஏதேச்சையாய் எங்கள் வீட்டு வாயிற் கதவை திறக்க நேரும்போது,
 ஒருவருக்கொருவர்  சந்தித்துக்கொண்டால் சம்பிராதாயம் கருதி “இப்பத்தான் வரயாம்மா ஆபிசிலிருந்து , டயர்டாயிருக்கியே… காபி சாப்பிடறியா?” என்றால், “வேணாம் ஆன்டி.. இப்பத்தான் சாப்பிட்டேன் ..ஒரு ஃபிரண்ட் கூட.. கம்பெல் பண்ணினா அவள்,என்று நாசூக்காய் தவிர்த்து விடுவாள்.அதற்கு மேல் என்ன செய்ய முடியும்!  
எப்போதாவது ஒரு முறை வீட்டு வாயிற் கதவை தட்டி”எக்ஸ்கியூஸ் மீஆன்டி.  எனக்கு இன்னைக்கு ஒரு கொர்யர் தபால் வரும். அதை…….”என்று தயங்கும் போது,
“வாங்கி வைக்கிறோம்மா.  நீ கவலைப்படாம போய் வா” என்போம்.   அதே போல் காஸ் சிலிண்டர் வரும் போதும் சொல்லிப்போவாள்.  “தாங்க் யு ஆன்டி, அங்கிள், நான்… நான் உங்களுக்கு மாக்ஸிமம் ட்ரபிள் கொடுக்கிறேன்  போல இருக்கு உங்க வயசான காலத்தில்.” என்பாள்.  “நோ, நோ..  ஏன் இப்படியெல்லாம் நினைக்கிறேம்மா.  நீயும் எங்க மகளாட்டாம்தான் ” எனும் போது “ஊம் எல்லாத்துக்கும் ஒரு கொடுப்பினை வேணும்” என்பாள் கண்களில் வழியும் கண்ணீருடன்.”உனக்கு அம்மா, அப்பா” என்று ஒரு நாள் வாய் தவறி கேட்டுவீட்ட ஜானுவிடம், “பாவம் அவளே கவலையில் இருக்கிறப்ப, ஏன் பழைய நினைவுகளை கிளறனும் ஜானு.  உன்னால் முடிஞ்சா, அதுவும் பிரதி
பலன் எதுவும் எதிர் பார்க்காம உதவி பண்ணு . வேற எதுவும் வேணாமே.  அவரவர் வாழ்க்கையில் ஆயிரமாயிரம் பிரச்சினைகள்” என்றேன்.  “அங்கிள், உங்களையும், ஆன்டியையும் நினைச்சா எனக்கு பெருமையாய் இருக்கு.  உதவற குணம்.. பழசு எதையும் கிண்டி கிளறாம இருக்கிறது.  அன்பு மட்டுமே செலுத்தறது ..  இப்படியொரு
அம்மா, எனக்கு இருந்தும் இல்லைன்றாப்பல, பூர்வ ஜன்மாக்களில் என்ன பாவங்கள் செஞ்சிருக்கேனோ”என்றவளிடம், “அப்ப உனக்கு அம்மா இருக்காங்களா” என்றேன்.
-4-
“எனக்கொரு தாய் இருக்கின்றாள். அவள் அன்பு மனங்களில் வாழ்கின்றாள்னு” ஒரு அருமையான பாடல் என் நினைவுக்கு வருகிறது இப்ப.  அது மட்டுமல்ல”தாயில்லாமல்  நான் இல்லை..தானே எவரும் பிறப்பதில்லை..எனக்கொரு தாய் இருக்கின்றாள்” என்று பாடியவள் கண்களில் கண்ணீர்..குழந்தை போல் அழ ஆரம்பித்தாள்.சற்று
பொறுத்து, “என்னை மன்னிச்சிருங்க அங்கிள், ஆன்டி, கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டுடேன்.ஆமாம் அங்கிள் எனக்கொரு தாய் இருக்காங்கதான்”.
“அப்புறம் என்னம்மா? என்னாச்சு அவங்களுக்கு?ஏன் அவங்க இங்கே வரதில்லை?”
“அங்கிள் அவங்க என் தாயாய் நடந்துக்கலை” என்று நீரஜா சொல்லிக்கொண்டிருக்கையில் ஜானு குறுக்கிட்டு, “அட ஏங்க இப்ப வீண் கதையெல்லாம் கிளறணும்.?  இவ மனசு புண்பட்டு போகும்ல.நீ வாம்மா நீரு.. டயர்டாயிருப்பே. சாப்பிடு முதல்ல. அப்புறம் ரெஸ்ட் எடுத்துக்க.  ஆமாம். ஏதாவது இருக்கா, இல்லை இனிமேல்தான் செய்யணுமா.? இல்லை ஹோட்டல்லயிருந்து வாங்கிக்கிட்டு வந்திருக்கியா? ” என்ற போதும், எதுவுமே பேசாமல் ஒரு மெல்லிய புன்னகையை மட்டுமே தவழ விட்டாள்..
” எங்கிட்ட சப்பாத்தி இருக்கு.  சாப்பிடிறியா” என்றபோது” இரண்டு சப்பாத்தி மட்டுமே கொடுங்கம்மா.  நான் ரொம்ப பசியோட இருக்கேன்” என்றவளை வற்புறுத்தி ஐந்து சப்பாத்திகளுடன் டால் என்ற பருப்பையும் தொட்டுக்கொள்ள கொடுத்தோம்.எங்களுக்கு குருமா பிடிக்காதுமா..அதான் செய்யலை..என்றேன்..
“உண்ணும் அழகைப் பார்திருப்பாயே! உறங்க வைத்தே காத்திருப்பாயே! கண்ணை இமை போல்” என்ற பாடல்  தொலைக்காட்சி சானல் ஒன்றில் ஓடிக்கொண்டிருந்தது ,அப்போது ஆப்டாய்.  அது மனிதப் பிறவியோ, மற்ற ஜீவ ராசிகளோ  பசி என்பது அனைவருக்கும் பொதுவானதொன்று தானே!பசி என்று வருவோருக்கு, அன்புடன்,
ஏதாவதை உண்ணக்கொடுத்து அவர்கள் சாப்பிடுவதை பார்க்க ஆனந்தம் தானே பொங்கும்.  “உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே”  என்ன அற்புதமான பழமொழி.   அப்போது நீருவும் என்னிடம்”ஒரு நிமிஷம் அங்கிள்  .. கொஞ்சம் சவுண்டாய் போடறீங்களா  இந்த பாட்டை. என்றவள்”    ஊம்! இதுக்கும் மேலாய்த்தான் என் அம்மா என்னை ஒரு காலத்தில் உள்ளங்கையில்  வச்சு தாங்கினாங்க..காலப் போக்கில், ஊம்..எல்லாமே, கனவாய்.பழம் கதையாய்..போகட்டும் அங்கிள்..”Past is past”.
  -5-
” விடு நீரு.  வீட்டுக்கு வீடு வாயிற்படிதான். எங்கே இல்லை சோகமும், சுமைகளும், அழுத்தும் மன பாரங்களும்.  உன் பையன் எப்படியிருக்கானம் ஸ்டேட்சில் இப்ப” என்ற போது  மௌனம் காத்தாள்.  ” போய் படுத்து  தூங்கி ரெஸ்ட் எடு. உனக்கும் வேலை அதிகமாய் இருந்திருக்கும்”.”அங்கிள், ஆன்டி, எனக்கேன் இப்படியொரு அம்மா, அப்பா கிடைக்கலை.  இதுவாவது போகட்டும்னா பெத்த ஒரே பிள்ளை விட்டேத்தியா! ஊம்.. ஒரு தாய் மனசு என்ன பாடு படும்னு கொஞ்சமும் யோசிக்கிறதே இல்லை.
  படுத்தா தூக்கமா வருது எனக்கு.  ” என்ற போது ஏதொவொரு சோகம்  அவள் மனதை மிகவும் அழுத்திக்கொண்டிருக்கிறது போலும்  என்றே எண்ண தோன்றியது..
எப்படி அவளிடம் அம்மா, அப்பா என்பவர்கள் எல்லோருக்குமே, எப்போதுமே அன்பு செலுத்துபவர்களாய்த்தான் இருப்பார்கள் .  ஒரு சமயம் அம்மா கோபிச்சுகிட்டா  அப்பாகிட்ட சொல்லி ஆறுதலும், அப்பா கோபிச்சுகிட்டா அம்மா மடியில் ஆறுதலும் தேடிக்கலாம்.  இதைத்தான் ஆழ்வாரோ, நாயன்மாரோ , பெத்தவங்களை இழந்தவர் போலும், புலம்பி தவிக்கிறதா ஒருபாசுரம் உண்டு.  அதாவது, கடவுள் அவரை ரொம்ப சோதிக்கிறப்ப, அவர் சொல்லி முறையிடுவாராம் “ஒரு அன்னை அடித்தால் தந்தை அணைப்பார்.  தந்தை அடித்தால் தாய் அணைப்பாள்.இங்கு எனக்கு தந்தையும், தாயும் நீதானே!, நீ சோதனை செய்தால்  நான் எங்கு போய் முறையிடுவேன் ” என்பதாக வரும் அந்த பாசுரம்.  த பாரும்மா, மனித பிறவியில் மட்டுமல்ல, நான் உன்னை போரடிக்கிறேனோ? நீ அப்படியே நினச்சாலும் பரவாயில்லை..
ஆண்டவன்  படைத்த அனைத்து ஜீவ ராசிகளிலும் அன்பு மட்டுமே காணப்படும்.  ஒரு எறும்பு இறந்து கிடந்தால் அதைச்சுற்றி எத்தனை எறும்புகள்  அதைத்தூக்கிசெல்ல.  ஆடு, மாடு,யானை போன்ற மிருகங்களுக்கும் அதன் குழந்தைகளிடத்தில் அன்பு, பாசமும்,  உண்டு.  இது தான் இயற்கையின் நியதி, என்பதை எப்படி அவளிடம் எடுத்து சொல்வது.? சொன்னாலும்ஏற்றுக் கொள்ளும் மனோபாவம் வேண்டும். “எங்கம்மாவுக்கு,  எங்கிட்ட  துளியும் அன்போ, பாசமோ கிடையாது” எனச்சொல்லலாம்.  எங்களிடையே நாளடைவில் ஒரு மனத்தாங்கல் வந்து பேசுவதையே தவிர்க்கலாம்.  ஆனாலும் தாய்–மகள் உறவென்பது விட்டுப்போகாது அல்லவா என்றென்றும்.  எங்கள் தஞ்சை மாவட்டத்து பழமொழி ஒன்று உண்டு . அதாவது, “நீர் அடித்து நீர் விலகாது ” என்று. எங்கள் மௌனம் கலைத்து அவளே சொன்னாள். அங்கிள், ஆன்டி,
அட பெத்த தாய்தான் எங்கிட்ட இன்டிஃபரன்டாயிருக்காங்கனா, நான் பெத்ததும் கூடவா? ஊம்.இன்ணொண்ணு ! நான் பெத்ததுக்கு பாட்டி மேல அளவு கடந்த பாசம்.    
என் பிள்ளையாண்டான் எங்கிட்ட ஸ்டேட்சிலிருந்து பேசறப்பகூட “பாட்டி  எப்படி இருக்காங்கம்மா?போய் பார்த்தியா?பாவம் வயசான காலத்தில் பாட்டி எப்படியிருக்காங்களோ அதுவும்  தனியானுஒரே புலம்பல்.  நானும் தான் தனியா இருக்கேன், வேதனைகளை மனசு பூரா சுமந்துகிட்டு.  ஆபிசிலயும் பிரச்சினைகள், பிரச்சினைகள், பிரச்சினைகள்.  அட எனக்குனு வந்து வாய்ச்சதாவது அன்பா, பாசமா, ஆறுதலா நாலு வார்த்தைகள் பேசக்கூடாதா அங்கிள்!எல்லாத்துக்கும் கொடுப்பினை வேணும்..”
 என்றவள் , என்ன நினைத்துக்கொண்டாளோ என்னவோ “வரேன்  ஆன்டி, அங்கிள். எனக்கு தூக்கம் வருது” என்றாள்.பையன் ஸ்டேட்சுக்கு வேலைக்கு போய் 3 வருஷங்கள்  இருக்கும்ல.  அவனுக்கு ஏன் ஒரு கால் கட்டு போடக்கூடாது” என்று ஒரு முறை நாங்கள் பேச ஆரம்பித்தபோது கண்களில் நீர் மல்கிட–
-6-
“இப்படி எங்களவரோ, அதை விடுங்க.  என்னைப் பெத்தவளோ கேட்கலையே அங்கிள்.  கவலையும் படலையே! என் அம்மாவுக்கு எங்கிட்ட கோபம் இருக்கலாம்.  பேசாம இருக்கலாம் . பேரன்னு உருகி தவிக்கிறாங்களே,அவன் கிட்டயாவது சொல்லலாம்ல. அவனுக்கு புத்தி சொல்லலாம்ல அம்மாகிட்ட அன்பாயிருடானு.  நான்… நான் இவன்
ஒருத்தனுக்கோசரம் தான் என் உசிரை கைல பிடிச்சுகிட்டிருக்கேன்? வாழ்க்கையில எல்லா கஷ்டங்களையும் , வெளியில சொல்ல முடியாத வேதனைகளையும்  நான்அனுபவிச்சாச்சு ,டு எ மாக்சிமம் எக்ஸ்டென்ட்,  என்றாள் அன்று..இதற்கும் மேல் என்னதான் வயதில் மூத்தவர்களானாலும் இன்னொருவர் குடும்ப விவகாரத்தில் மூக்கை  நுழைப்பது தவறென்பதால், நாங்கள் மௌனமாய் இருந்து விடுவோம்.  பாவம்  நீரஜா, என்று மனத்தளவில் வேதனைதான் பட முடியும்..வேறென்ன செய்ய முடியும்!
 இன்றுள்ள மனிதர்கள் போல தானுண்டு தன் வேலையுண்டு,தவிர பணம், பணம், தலைமுறைகளுக்கு சொத்து சேர்த்திட வேண்டும்,கண் முன் கொலையே நடந்தாலும்,  என்று எங்களால் இருக்க முடியவில்லை..நாங்கள் போன தலைமுறையை சேர்ந்தவர்கள். அப்போது தான் எங்களுக்கே உரைத்தது, அவள் கணவன் எங்கே போனான்?எப்போதும் வீட்டிலேயே இருப்பவனுக்கு என்னாயிற்று? ஏன் அவனைப்பற்றி நீரஜா எதுவும் இதுவரையிலும் கூட எங்களிடம் சொல்லவில்லை?குழம்பி தவித்தோம்..
இது ஒரு உணர்வு பூர்வமான, அதாவது சென்ஸிடிவான விஷயம் என்பதால் அவளிடம் நாங்களும் எதுவும் கேட்க முடியவில்லை. ஆனாலும் கணவனும் இல்லாமல், ஒரே  மகனும் ஸ்டேட்சில் இருக்கும்போதும் இவள் இங்கு தனியே வசித்துக்கொண்டு, வேலைக்கும் போய் வரும் நீரஜாவின் மனத்திண்மை எங்களுக்கு நிரம்பவே பிடித்திருந்தது.
-7-.  
அதி காலையில் எழுந்து, குளித்து, வாயிலைப் பெருக்கி ,கோலம்  போட்டுக்கொண்டிருந்த நீரஜா,அன்று ஜானுவை பார்த்ததும் வழக்கத்துக்கு மாறாக “குட் மார்னிங் ஆன்டி.. அங்கிள் தூங்கிறாரா என்ன? ” என்ற போது ஜானு நீரஜாவிடம் கேட்டாள், “என்ன நீரஜா, இன்னைக்கு ஹாப்பி மூடில் இருக்காப்பல இருக்கு” என்றாள்.  
“எஸ் ஆன்டி, ஐயாம் ஸோ, ஸோ ஹாப்பி நௌ. எதுக்கோசரம்னு சொல்லுங்க பார்ப்போம்”, என்றாள் கலகல வென நாணயங்களை தரையில் உருட்டி விட்டாற் போல்.  அப்போது, வழக்கம் போல காலை வாக்கிங்  கிளம்பிய நான் ” குட் மார்னிங் நீரு.  நீ எதுக்காக ஹாப்பியாய் இருக்கேனு சொல்லட்டுமா. நீ எதிர்பார்த்துகிட்டிருக்கிற பிரமோ
ஷன் இப்ப..ஈஸின்டிட்” என்றபோது,”அதெல்லாம் இல்லை அங்கிள்.  ஜஸ்ட் எ பிரமோஷனுக்காக நான் இவ்வளவு ஹாப்பியாய் இருப்பேன்னு நினைச்சீங்களா என்ன? “
“அப்ப, வேற என்னவாம்?”
அங்கிள், கெஸ் வாட்? உங்களுக்கு 30 செகண்ட்ஸ் டைம் தரேன், அண்ட் யுவர் டைம் ஸ்டார்ட்ஸ் நௌ” என்றாள் டி.வி. க்விஸ்  பாணியில்.  
” உன் பூர்வீக சொத்து வியாஜியத்தில் இருக்கு பல வருடங்களாய்னு சொன்னியே, அது கிடைச்சுருச்சு.  அப்படித்தானே”?என்றபோதும், “நோ அங்கிள்..”என்றாள்.
“அப்ப உங்கம்மா, உங்கிட்ட உள்ள கோபம் மறந்து உன்னை தேடி வந்திருக்கலாம்.ஈஸின்டிட்? “
” இப்படி எதுவுமே இல்லை. இன்னைக்கு, என் பிள்ளையாண்டான் ஸ்டேட்சிலிருந்து வரான். இதை விடவா ஒரு பெத்த தாய்க்கு  சந்தோஷம் இருக்கு சொல்லுங்க”.
“குட்.  உண்மையிலே இது மகிழ்ச்சியான விஷயம். இந்த முறை அவனுக்கு ஒரு கால் கட்டு போட்டுட்டியானா, உன் பொறுப்பு தீர்ந்திச்சு.கலியாணம் பண்ணிக்கிட்டு
ஒய்போட let him go to States.நீயும் கூட  if necessary, VRS  வாங்கிகிட்டு போயிறலாம்ல.  அப்படி ஒரு எண்ணம்  இருந்திச்சு அங்கிள் என் மனசில் ஒரு சமயத்தில்.  ஆனா அவனே மறுபடி ஸ்டேட்ஸ் போறதாயில்லைனும்  இங்கேயே செட்டிலாயிடப்போறதாகவும்  சொல்லிக்கிட்டிருக்கான்.
 “தென் இட்ஸ் ஒகே.  த பாரம்மா  இன்னைக்கு நீ இருக்காப்பலவே என்றென்றும் மகிழ்ச்சியாய் இருக்கணும்னு எங்க குல தெய்வம் உப்பிலியப்பனை பிரார்த்திக்கறேன்”.
“தாங்க்யு அங்கிள்.  என் மேலயும் அன்பு காட்ட ஒருத்தரா?என்ற போது இடைமறித்த  ஜானு, “ஏன் நான் இல்லையா? என்னை மறந்துட்டியா” என்றாள் புன்னகையுடன்.
“ஆன்டி.. இந்த வார்த்தை கூட பொருந்தாது உங்களுக்கு.  எஸ்.  நீங்க என் அம்மாவுக்கும் மேல.  அம்மாவுக்கு ஒரு பெண் நன்றியெல்லாம் சொல்லலாமா?பிரபஞ்ச ரகசியத்தை ஒருக்கணம் நினைச்சுப்பார்த்தா பிரமிப்பாயிருக்கு, வியப்பாயும் இருக்கு.  எந்த ரத்த சம்பந்தமுமில்லாத நீங்களும், அங்கிளும் என் மேல பாசத்தை கொட்டறீங்க.  
ஆனா அம்மா! இவங்க பெத்தெடுத்தவங்களா, தத்தெடுத்து வளர்த்தாங்களானு நினைக்கத்தோணுது!  ஏன் எங்கிட்ட ஒட்டாம நடந்துக்கிறாங்களோனு விளங்கலைம்மா.  “
“த பாரம்மா நீரு,  ஒரு தாய்ன்றவ என்னைக்கும் தாய்தான். மனித பிறவியிலாகட்டும், மத்த ஜீவ ராசிகளிலாகட்டும். .ஏதோ ஒரு அபிப்பிராய பேதம் உங்களுக்குள்ளாற ஏற்பட்டிருக்கும்னு எனக்கு தோணுது.  அது கூட ஒரு நூலிழை சந்தேகம்தான்.   தப்பு யார் மேல , உன் மேலயா, உன் அம்மா மேலயா? என்ன நடந்திச்சு உங்களுக்காற?  
 நான் ஆராய்ச்சியெல்லாம் பண்ண விரும்பலை. ஒரு குடும்பம்னா கோப, தாபங்கள், பிரச்சினைகள் எல்லாம் இருக்கும்தான்.  புத்திமதிகள் சொல்றதும் உண்டுதான் . ஐ
டோன்ட் வான்ட் டு கோ இன் டீடைல். என்னைக்கேட்டா, காலம்தான் எல்லாத்துக்கும் அரு மருந்துனு சொல்ல முடியும்.  இதுவும் கடந்து போம்ன்ற மன நிலையை  நாம் உருவாக்கிகிணும்மா.  நீ நல்ல வேலையில் உனக்கும் கீழே  பலரை வச்சு வேலை வாங்கிற மானேஜிர்யல்  பொசிஷன்ல இருக்கிறவ. உன் அஃபீஷியல் கார்யர்ல தினம், தினம் எத்தனை, எத்தனையோ பிரச்சினைகளையும் ,  பலதரப்பட்ட  மனிதர்களையும் ஹாண்டில் பண்ணவேண்டியிருக்கும்தான்.  அப்பல்லாம் கோபம், வெறுப்பு, ஆத்திரம் எல்லாம் வரும்தான்.  ஆனா, நீ ரொம்ப நாசூக்கா, யார் மனமும் புண்படாம பிரச்சினையை சாமர்த்தியமா டீல் பண்ணுவே..நான் சொல்றது கரக்டா, தப்பானு சொல்லு..
அதை எல்லாம் வெளிக்காட்ட முடியுமோ உன்னால்? ஒரு குடும்பம்னறதும் அப்படித்தான். இப்ப, உன் பிள்ளையாண்டான் இங்கே வந்து என்ன செய்யப்போறானாம்?வேற
வேலைக்கு டிரை பண்ணறதா உத்தேசமா?இல்லை வேற..? ” என்ற போது , “அங்கிள்,  அவன் ஒரு வாரம் முன் ஸ்டேட்சை விட்டு கிளம்பறத்துக்கு முன்னால்அம்மா நான் ஒரு வழியாய் ஸ்டேட்சை விட்டு வந்துடப்போறேன்னு சொன்னான்.  ஆனா இப்ப ஜஸ்ட்  15 நாட்கள் லீவில் மட்டும்தான் வரப்போறதா சொல்றான்.  இந்தக்கால பசங்களை பத்தி எதுவும் தீர்மானமா சொல்ல முடியவில்லை..இன்னைக்கு இவனுக்காக விதவிதமாய் இவன் விரும்பி சாப்பிடறதெல்லாம் பார்த்து, பார்த்து செஞ்சு வச்சிருக்கேன் ஆன்டி” என்றவள், அவன் வருகைக்காக வழி மீது விழி வைத்து என்பார்களே அப்படி உள்ளுக்கும், வாயிலுக்குமாய் அலைந்து கொண்டே இருந்தாள் பதற்றத்துடன்..
என்ன இருந்தாலும் பெற்ற பிள்ளை அல்லவா ? ஆனால் அவன்?
-7-
என்னவோ வரவில்லை.  துடி துடித்து போனாள் பிள்ளையாண்டானுக்கு என்ன ஆயிற்றோ என்று..மோசமான வானிலை காரணமாய் ஃப்ளைட் அன்று இயக்கப்படவில்லையாம்.  பனிப்பொழிவு வேறு அதிகமாய் இருந்ததாம்..இதுகூட அன்றைக்கென்று, ஏதேச்சையாய்  தொலைகாட்சி பார்த்ததால்தான்.. ஆனால் அவன்,
அம்மா தன் வரவை எண்ணி துடித்துக்கொண்டிருப்பார்களே, கவலைப்படுவார்களே, உடனடியாய் தகவல் சொல்லி விட வேண்டுமென்றெல்லாம் அவன் கவலைப்பட்டதாகவே  ஊஹூம்!!, என்ன பிள்ளையாண்டன் இவன் என்றே தோன்றியது எங்களுக்கு..இருந்தாலும் வெளிப்படையாய் சொல்ல முடியுமா நீரஜாவிடம்?
“ஏன் ஆன்டீ இப்படி இருக்கான் இவன்?” என்று அழுகையூடு கேட்ட நீரஜாவுக்கு நாங்கள் என்ன பதில் சொல்லி தேற்ற முடியும்?
“இத பாரம்மா, அம்மாவைப் பார்க்கணும்னு பதற்றத்தில் இருக்கிறவனுக்கு இப்படி திடீர்னு ஃப்ளைட்  கான்சலனானதும்  ஏமாற்றமாய் கூட இருந்திருக்கலாம். அது மட்டுமல்லம்மா !வானிலை கொஞ்சம் சீரடைஞ்சு, ஃப்ளைட் கிளம்பிடாதா! இப்ப ஏன் அம்மாவை காபரா படுத்தணும்னு கூட ஒரு நினைப்பு இருந்திருக்கலாம். அம்மாவை பார்க்கணும்னு  துடிப்பு இருந்திருக்கும்ல, விடு”என்றாள் என் மனைவி.  ஆனால் எங்கள் பேச்சு அவளை எந்த விதத்திலும் சமாதானப்படுத்தவில்லை  என்றே தோன்றியது.  
அவள் சொல்வதும் நிசம்தானே.!  இன்றைய, அதி நவீன விஞ்ஞான , தொழில் நுட்ப உலகில், உலகம் உள்ளங்கையில்  என்றாகி விட்டிருக்கிற  சூழலில்  அவன் ஏன் தன் தாயை உடனடியாய் ஏர்போர்டை விட்டு இறங்கியதுமே தொடர்பு கொண்டு நிலைமையை விளக்கியிருக்ககூடாது?  நெட் மூலம் கூட சொல்லியிருக்கலாமே.!
என்னதான் படித்து, நல்ல வேலையில் பலரை வேலை வாங்கும் ஒரு உயர் பதவியில் இருப்பவரும், கணவன் கூட இல்லாவிட்டாலும், மற்ற உறவினர்கள் என்று யாருமே  இல்லாதபோதும், பிள்ளை பாசம் என்று வரும்போது மற்ற விஷயங்கள் பின் தள்ளப்பட்டு விடுகின்ற. நீரஜாவும் இதற்கு விதிவிலக்கு இல்லை.இதுதானே பாரத பண்பாடு!
பாசம், நேசம், பெற்றவர்களை மதித்து போற்றுதல் , அவர்தம் ஆலோசனைப்படி நடப்பது , உறவினர்களை, விருந்தினர்களை மதிப்பது என்று எல்லாமே! .பாவம் நீரு!
 இன்னொரு நாள் மறுபடி மகன் வரப்போவதாக செய்தி வரவே இந்த முறையாவது எதுவும் தடங்கல்  வராமல் இருக்க வேண்டுமே என்றெல்லாம் தவிப்பதும் சகஜம்தானே!    நீரஜாவும் அன்று விடுப்பெடுத்துக்கொண்டு நொடிக்கொரு முறை விமானம் வந்துவிட்டதா, ஷெட்யூல்ட் டைம்தானா, இல்லை லேட்டாகுமா என்றெல்லாம் கேட்ட வண்ணமேயிருந்தாள் போனில் பல பேர்களிடமும்..அவள் முகத்தில் ஒருவித அச்சமும் கூட காணப்பட்டது..
-8-
விமானம் குறித்த நேரத்தில் சென்னை விமான நிலையத்தை வந்தடைந்து விட்டதாம்.. எப்ப செக்யூர்டி செக் எல்லாம் முடிந்து , எப்ப வெளியே வருவானோ பிள்ளையாண்டான், எப்படி இருப்பானோ, மெலிஞ்சு, இல்லைனா குண்டா, இளைச்சு போயிருப்பானோ,பாவம்!  செல்ஃப் குக்கிங்  வேறயாம்” என்றாள் அங்கலாய்ப்புடன். ஒரு பெற்ற தாயின் மன நிலையை எங்களால் உணர்ந்து கொள்ள முடிகிறது. அது மட்டுமா? அவனுக்கு என்னவெல்லாம் பிடிக்கும் என்று அலைந்து, பார்த்து, பார்த்து வாங்கி வந்து சமைத்து வைத்துவிட்டு  … பாவம்! அவள் முகத்தில் ஒரு அயர்வு காணப்படுகிறது.ஆனால் அதை அவள் சற்றும் வெளிக்காட்டி கொள்ளவில்லை..

“அங்கிள், ஃப்ளைட் எப்பவோ ஷெட்யூல்ட் டைமுக்கு லாண்டாயிருச்சினு சொன்னாங்களே, ஆனா இன்னம் சதீஷ் வரலையே அங்கிள்?
“அப்படியா? கிட்டத்தட்ட 4 மணி நேரமாயிருச்சே.  இன்னமுமா, விமான நிலைய ஃபார்மாலீடீஸ்  முடியலையாம்?”
“கேட்டேனே , எப்பவோ முடிஞ்சுருச்சாம்”.”அப்ப ஐ ஹாவ் எ டவுட்”.
:என்ன அங்கிள் உங்க டவுட்? என்ற போது சொன்னேன்.  “ஒரு கால் இன்னைக்கும் அவன் வரலையோ என்னவோ.  பயப்படாதே.  திஸ் ஈஸ் ஒன்லி மை ப்ரஸம்ஷன் .”
“இல்லை அங்கிள்.அவன் சென்னை ஏர்போர்ட்ல லாண்டாயிட்டான்..  எப்படினு கேட்கறீங்களா? அவன் ஃப்ரண்ட் ஒருத்தனை ஏர்போர்ட்டுக்கு வரச்சொல்லியிருந்தானாம்.அவன்கிட்ட போன் பண்ணி கேட்டப்ப அவன் சொன்னான்” சதீஷ் பத்திரமா லாண்ட் ஆயிட்டான்னு..ஏன் ஆன்டி அவங்கிட்ட ஏதாச்சும் சொல்லணுமானும் கேட்டான்.”
   நானும் ஒண்ணும் வேணாம்பா.  நான் கவலைப்பட்டுகிட்டிருக்கேன்னு அவன்கிட்ட சொல்லி  ஏதாவது கால்  டாக்சி எங்கேஜ்  பண்ணிகிட்டாவது ஸ்டரைட்டா  இங்கேவரச்சொல்லு.  மத்த இடங்கள் எல்லாம் அப்புறமா பார்த்துக்கலாம்னு சொல்லு. அம்மா அவனுக்காக சாப்பிடாம காத்துகிட்டிருக்கிறதாவும் சொல்லுப்பானு..    அது
மட்டுமல்ல.  அவன் ஃப்ரெண்டையும்  கூட அழைச்சேன் வந்து ஒரு வாய் சாப்பிட்டுட்டு  போப்பானு.  அவனும் ஒகே ஆன்டினான்.  ஆனாலும் குழந்தை ஏன் இன்னமும் வரலைனு !!.பசி பொறுக்க மாட்டானே அவன்.  என்னாச்சு வழியில்னும்!! .  ஒரு கால் அவன் நண்பர்கள் ஏர்போர்ட்டுக்கே வந்து  எங்கேயாவது அழைச்சுக்கிட்டு போயிட்டாங்களோ? இல்லைனா அவன் சென்னை ஆபீசுக்கு  அவசர அவசிய வேலைகள் நிமித்தம்  போயிருப்பானோ?  ஊம்.  என்ன பிள்ளைகள்.  பாசமே துளியுமில்லாமல்.”
“என்ன நீரு.  இன்னமுமா பிள்ளை வரலை? என்று கேட்ட  ஜானகி,அவள் கண்களில்  கண்ணீர்  தெறித்து நிற்பது பார்த்து,சற்றுப் பொறுத்து மறுபடி ஜானகி சொன்னாள்,
“அசடு, அசடு.  எதுக்கு இப்ப அழறே?அதான் உன் பிள்ளையாண்டான் சென்னைக்கு வந்துட்டான்ல..எனக்கென்ன தோணுதுனா அவன் ஏகப்பட்ட லக்கேஜ்களோட வந்திருப்பான் ப்ரெண்ட்ஸ்களுக்கு கொடுக்க.. ஏன் அதையெல்லாம் இங்கே வீடுவரை சுமந்துகிட்டு வரணும்னு நினைச்சு, அதையெல்லாம் கொடுத்துவர போயிருக்கலாம்..
“மறுபடி போன் பண்ணித்தான் பாரேம்மா.  “
“அவன் ஆஃப் பண்ணி வச்சிருக்கான் ஆன்டி.  அவன்  ஃப்ரெண்ட் செல்போன் எடுத்துகிட்டு போகலையாம் ..காலையிலேயே  அவன் ஏர்போர்ட் பக்கம் உள்ள பி.சி.ஓ. ஒண்ணிலிருந்து  பேசினான்.அதனால் அவனையும் கான்டாக்ட் பண்ண முடியலை அங்கிள். “
“அப்படியா! விடு,விடு,  வந்துருவான். எங்கே போயிடப் போறான்? நீ போய் சாப்பிடு.அவன் வரவரை பட்டினி கிடக்காதே.”
“இல்லை ஆன்டி .  சதீஷை பார்க்காம எனக்கு சாப்பாடு இறங்காது” என்று அழவே  தொடங்கினாள்.  
“இதைத்தான் பெற்ற மனம் பித்து, பிள்ளை மனம் கல்லுனு சொல்லி வைத்தாங்களோ அன்று.
இதுக்கும் மேல் பக்கத்து பிளாட்காரங்களான நாங்கள்  எப்படி நீருவிடம் சொல்ல முடியும்?
ஆனாலும் நேரம் ஆக, ஆக, நீரு படும் வேதனை, துடிப்பு,  எல்லாமே எங்களுக்கு துல்லியாமாய் விளங்குகிறது.  
சோர்வான முகத்துடன் வாயிலுக்கும், உள்ளுக்குமாய் அவள் நடந்துகொண்டே இருக்கிறாள்.
இப்படியே அவள் மகனுக்காக மதியம்  3 மணி வரை  சாப்பிடாமல் காத்திருந்தவள் கண் அயர்ந்திருந்த  வேளையில் வாயிலில் கால் டாக்சி யிலிருந்து  மகன் இறங்கும்  சத்தம் கேட்டு, தூக்கம் விழித்து வாயிலில் நீரு போய் பார்த்தபோது அவள் செல்ல மகன் சதீஷ், கூடவே ஒரு மூதாட்டி..யாராய் இருக்ககூடும்! நீருவின் அம்மாவாக இருக்குமோ!
-10-
  நீருவும்  ஒருக்கணம் திகைத்து நின்றாள், அந்த மூதாட்டியை பார்த்து.. ஆனால் தன் அம்மாவை “வாஅம்மா உள்ளே.  ஏன் வாசல்லய நிற்கிறே? என்று  ஊஹூம்.
ஆனால் “வா பாட்டி உள்ளே” என்ற சதீஷிடம்,  பாட்டியும் “நான் வரலைடா கண்ணா.  நீ போய் உன் அம்மாவைப்பாரு .பாவம்டா அவ .  பெத்த மனசு துடி துடிக்கும்டா.
 “இல்லை பாட்டி. நீயும் உள்ளே வரதுனாதான் நான் போவேன்.  இல்லைனா என் லீவு முடியும் தன்னியும்  என் செல்ல பாட்டிகூடத்தான் இருப்பேன் ” என்றான்.
டேய், டேய், வேணாம்டா.  என்ன இருந்தாலும் முதல்ல பெத்த தாய்.  தாய்க்கு அப்புறம்தான் மத்த உறவுகள் எல்லாம், என்னையும் சேர்த்துதான் சொல்றேன்.  அவ மனசு  புண் படாம  நடந்துக்கடா.”அப்ப இந்த  உன் அட்வைஸெல்லாம் நீ பெத்த உன் பெண்ணுக்கும் பொருந்தும்தானே.  இல்லை உபதேசம் ஊருக்குதானா, சொல்லு பாட்டி.”
“டேய் கண்ணா.  நீ படிச்சவன். நிறைய விஷயங்கள் உனக்கு அத்துபடி. இப்ப ஏண்டா பழங்கதை எல்லாம்?  அம்மாவுக்கு சமமா யாரையும் பார்க்க முடியாதுடா.”இப்படி
தன் அம்மா பேச்சு கேட்டு,அப்படியே  ஒருக்கணம் விக்கி விதிர்விதித்து, மௌனமாய்,  நின்றாள் நீரஜா வாயிற்படியலேயே , மேலே எதுவும் பேசத் தோன்றாமல்..  
“ஏம்மா! உன்னை பெத்தவ உன் வீட்டு வாசல்ல வந்து  நிற்கிறா.  உள்ளே வானு !! என்று சதீஷ் சொன்ன  போதே,  நீருவின் அம்மா “வாசல்லயே என்ன தர்க்கம் வேண்டி
கிடக்கு. இவ என்னை கூப்பிட்டுத் தான் நான் உள்ளே வரணுமா.  நகருடி அன்னண்டே.  குறுக்கே நிற்காதே வழியில்” சொல்லியவாறு விருட்டென உள்ளே போனாள்.  
சற்று பொறுத்து வெளியே வந்த நீரு அழுதிருப்பாள் போலும்.  எங்களை பார்த்ததும் “ஆன்டி,, அங்கிள் நீங்க இரண்டு பேர்களும்  எங்க வீட்டுக்கு வாங்களேன்.  , சதீஷை பார்க்கதான்” என்றாள்.”:வரோம்.   let him take rest. அப்புறம் உன் அம்மா வந்திருக்காங்க கவனி” என்ற போதும், நீருவின் முகத்தில் எந்த சலனமும் இல்லை…  
“உன் அம்மா இங்கேதான் இருக்காங்களா”
“ஊம்””
“யார் கூட?””
“யார் கூடவும் இல்லை.  என் ஒருத்தியைத்தவிர அவங்களுக்கு  யாருமில்லை . பிடிவாதம் ஜாஸ்தி.  தனியாதான் இருப்பேன்னு அடம்.  மனுஷாளை மதிக்கிறதில்லை.
எதுக்கெடுத்தாலும் அட்வைஸ், அட்வைஸ் மழை தான்.   கேட்கலைனா சிடு, சிடுப்பு.  ஆனா பேரன் கிட்ட மட்டும் அவ்வளவு அன்னியோன்னியம்.  விடுங்க சிலருக்கு அம்மா நல்லா அமையறதில்லை.  நான் பெத்ததாவது  என் மேல அன்பா, பாசமா இருக்கலாமில்லையா? அதுக்கும் எனக்கு கொடுப்பினை இல்லை போல இருக்கு.”
“விடம்மா.  எல்லாம் ஒரு நாள் மாறிப்போகும். பிள்ளைக்கு சாப்பாடு  போடு.  உன் அம்மாவையும் சாப்பிடச்சொல்லு” என்ற போது மறுபடி விக்கி, அழத்தொடங்கினாள் நீரு..
“ஏம்மா இப்ப அழறே குழந்தையாட்டம்?” என்ற போது,நீரு கண்களில் வழியும் கண்ணீரை புடவைத் தலைப்பு கொண்டு துடைத்தவாறு, பேசத் தொடங்கினாள்..

-10-
“நான் இவனுக்கோசரம்  விடிகாலையிலேயே எழுந்து ஆசை, ஆசையாய் பார்த்து, பார்த்து என்னவெல்லாம் சமைச்சு வச்சிகிட்டு காத்துகிட்டிருக்கேன்.. ஆனா இவனானா, வெளியில் எங்கேயோ  சாப்பிட்டுட்டு சாவகாசமா வரான் இங்கே ஒரு ஆத்மா இவனுக்காக சாப்பிடாம காத்திருக்கும்ன்ற பிரக்யை கூட இல்லாம.
“ஓட்டல்ல சாப்பிட்டுட்டு வந்துட்டானா என்ன? இல்லை ஃபிரண்ட்ஸ்க வீடுகள்ள சாப்பிட்டானா?”என்ற எங்களைப் பார்த்து,
“அதெல்லாம் இல்லை அங்கிள்,ஆன்டி.. பாட்டி  வீட்டிலதான் சாப்பிட்டேம்மா..”என்றான் பிள்ளையாண்டான்..  
“பூ, இவ்வளவு தானே”.
“நான் .. நான் சாப்பிடாம காத்திருக்கேன்னு கூட நினைக்காம, அதுவும் இவன் ப்ரெண்ட்ஸ்க கிட்ட  சொல்லி அனுப்பியும்,  நேரா பாட்டி வீட்டுக்கே போய் வத்தல் குழம்பு, சுட்ட அப்பளம் போடு பாட்டினு கேட்டு சாப்பிடுட்டு வந்திருக்கான்.  ஏன் இதை எங்கிட்ட சொல்லிருந்தா நான் செஞ்சு வச்சிருக்க மாட்டேனா என்ன? “
“இப்ப என்னாயிருச்சுனு இப்படி கண் கலங்கறே? அவன் உன் அம்மா வீட்லதானே சாப்பிட்டான்”.
“அப்படியே வச்சுக்குவோம்.  அம்மா துடியாய் துடிச்சுக்கிட்டு இருப்பாங்கனு ஒரு பிள்ளைக்கு நினைப்பு, பதற்றம் இருக்க வேணாம்.  உடனே ஓடி வர வேணாம்? ஏண்டா கண்ணா இவ்வளவு நேரம்னு கேட்டா நக்கலடிக்கிறான்.  என்னைப்பார்த்தா இவனுக்கு இளக்காரமா போச்சு..பாட்டி கூட பேசிக்கிட்டிருந்தேன்றான்.. அப்புறம் டிபன் வேற சாப்பிட்டானாம் அங்கேயே தூங்கி ரெஸ்ட் எடுத்துட்டு.அப்பவாவது, நான் பாட்டி வீட்டில்தான் இருக்கேன்..பயப்படாதே! கொஞ்ச நேரத்தில்  வரேன்..  இனிமேல் நான்
இங்கேயே தானே இருக்கப்போறேனு ஒரு வார்த்தை!!  மனசு விட்டு போச்சு.  ஏன் இன்னமும் உயிருடன் இருக்கணும்? யாருக்காக வாழணும்னு தோணுது அங்கிள்,ஆன்டி. “
  “அப்படி என்னதான் சொன்னான்மா உன் பிள்ளையாண்டான், நீ வருத்தப்படற அளவுக்கு?சொல்லலாம்னா சொல்லு..உன் மன பாரமும் குறையும்ல ஓரளவுக்கு”
“என்ன சொன்னானா?  நெருப்பை அள்ளி கொட்டிட்டான் நெஞ்சில்.  அப்படியொரு எண்ணம்  இருந்திச்சாம் அவனக்கு.  ஆனா இப்ப  I have to re-consider my decision” றான்.. யாரோ இவன் மனசை நல்லா கலைச்சிருக்கணும்னு மட்டும் தோணுது. மறுபடி ஸ்டேட்சுக்கே போயிடறேன்றான். உங்ககிட்டயே சொல்லியிருக்கேன்,
ஏற்கனவே,  இவன் இங்கேயிருந்து போனது முதல் நான் நிம்மதியாய் இல்லைனு.?  தூக்கமே இல்லை இரவுகளில்.  இது விளங்குதா இவனுக்கு? போறானாம் மறுபடி ஸ்டேட்சுக்கே.  at least ஒரு கலியாணத்தை பண்ணிக்கிட்டு அங்கே செட்டிலாயிட்டா கூட நான் கவலைப்படப்போறதில்லை.  ஆனா அதுக்கும் இவன் பிடி  கொடுத்து பேசறதில்லை.  விடம்மா இப்ப என்ன என் கலியாணத்துக்கு அவசரம்ன்றான். இவன் மனசில் என்ன இருக்குனு ,ஊம்!.  ஒரு கால் ஸ்டேட்ஸ்  பிரஜை யாரையாவது !இவன்  கவலையே எனக்கு எப்பவும்.  மாதா, பிதா, குரு, தெய்வம் பாங்களே , இது ஏன் இவனுக்கு இன்னம் விளங்கலை? என்னதான் படிச்சு வெளி நாட்ல செட்டிலாயிருந்தாலும் பெத்தவன்ற நினைப்பே இவனுக்கு ஏன் இல்லை.  நானானா கிடந்து துடிக்கிறேன் பிள்ளை, பிள்ளைனு.  ஆனா இவன்? இவனுக்காக,ராப்பகல் கண் விழிச்சு, நான்
 பட்ட பாடுஅப்பப்பா .. இவன் அப்பா! ….” என்றவள் கண்களில் வழியும் கண்ணீரை துடைத்துக்கொண்டு “விடுங்க .. பழைய கசப்பான சம்பவங்களை இங்கே மறுபடி கிளற வேண்டாம்னு நினைக்கிறேன்.  நெஞ்சே வெடிச்சுடும்போல இருக்கு.  ஒத்தை ஆளா நான் வேலைக்கும் போய்கிட்டு,  எந்த பின்புலமும் இல்லாம, யாருடைய ஒத்தாசையும் இல்லாம போராடிக்கிட்டிருக்கேன் வாழ்க்கையிலேனு இவனுக்கு ஒருக்கணம் கூட தோணலையா என்ன!அவ்வளவு மர மண்டையா இவன்! நோ! நல்ல புத்திசாலிதான்..
ஒரு பெத்த தாயாய் நான் இவங்கிட்ட அன்பையும், பாசத்தையும் தவிர,வேற எதையும், எதையும்னா எதையும், பத்து பைசா கூட எதிர்பார்க்கலை.  தவிர வீடுகள், ஷேர்கள், ரொக்கம்னு எல்லாம் பாடுபட்டு யாருக்காக சேர்த்து வச்சிருக்கேன்  ஆன்டி.  ஒத்த பிள்ளையான இவனுக்காகத்தானே . ஆன்டி, சொன்னா வெட்ககேடு.. ஸ்டேட்சிலிருந்து  
இவனா எங்கிட்ட பேசினதே இல்லை.  நான்தான் எப்ப ஞாயிற்று கிழமை வரும், இவங்கூட பேசலாம்னு தவிச்சுகிட்டிருப்பேன்.  அப்பகூட ஒப்புக்கு இரண்டு வார்த்தைகள் பட்டும் படாம பேசுவான்.  நேரமாச்சும்மா  வேலை இருக்கும்பான்.  அப்புறமா பேசலாம்பான்.  அந்த அப்புறம்ன்றது  அடுத்த ஞாயிறுதான். அப்பவும் இப்படித்தான் கால்ல சுடு தண்ணியை கொட்டிக்கிட்டாப்பல .ஆன்டி,அப்பல்லாம் எனக்கு அழுகை பொத்துக்கிட்டு வரும்.. ஆனா,வாய் விட்டு அழவும் முடியாம தவிப்பேன், தத்தளிப்பேன்.
மனசு விட்டுப்போகும் எனக்கு அப்பல்லாம்.  என்ன குறை வச்சேன் இவனுக்குனு தோணும் அப்பல்லாம்.  ஏனிப்படி பாசமே இல்லாம, அம்மா தனியா யார் சப்போர்டும் இல்லாம ஆபீசுக்கும் போய்கிட்டு, வேளைக்கு சாப்பிடாம இருப்பாங்கனு நினைக்காம இருக்கானேன்னு தோணும்.  என்னை கட்டிகிட்டவன்தான் ஒழுங்கா இல்லை. பெத்ததுமா!.  இப்பக்கூட பாருங்க ஆன்டி,பட்டும் படாம கேட்டதுக்கு மட்டும் கடன் எழவேனு .. I am sorry to use this ugly word.எங்கிட்டதான் இவனுக்கு அன்பில்லையே தவிர, என்னை பெத்தவகிட்ட எவ்வளவு பாசம் காட்டாறான்..உருகி தவிக்கிறான். பாட்டி,பாட்டி, பாட்டி எப்படி இருக்காங்க?நீ போய் பார்த்தியா பாட்டியைனு!  
அவங்களாவது, “அம்மாகிட்ட பாசாமயிருனு”  சொல்ல வேணாமோ?  ஏன் என் அம்மாவுக்கு தோணலை  ஆன்டி” என்று நீரஜா அழுது புலம்பிக்கொண்டிருந்த போதுவாயிற் பக்கம் வந்த சதீஷ்,என் மனைவியை பார்த்து”வாங்க ஆன்டி, அங்கிள் நீங்களும்தான். கம் இன் அண்ட் பீ சீட்டட்”என்றவன்  சகஜமாய் பேச ஆரம்பித்தான்..சற்று நேரம் அங்கு அமைதி நிலவியது..பிறகு அவன்  கண்ணீருடன்,தலை குனிந்தவாறு மெல்லிய குரலில் பேச ஆரம்பித்தான்..
-12-
“நான் ஏன் ஸ்டேட்ஸ்ல  வேலைக்கு போனேன்?  பணத்துக்காக மட்டும் இல்லை.  சிலருக்கு சில விஷயங்களை உணர வைக்கத்தான்.  நான் மட்டும் அங்கே நிம்மதியாய் இருக்கேனா என்ன!  என் மனசு படாதபாடு பாடு பட்டுகிட்டிருக்கு இவங்களை  நினைச்சா..என்னால் பாசத்தை வெளிப்படையாய் எல்லாம் கொட்ட முடியாது.  அதுக்கு
அவசியமும் இல்லை.  நான் ஸ்டேட்சில வேலையும் பார்த்துகிட்டு பி.எச்டியும் பண்ணிகிட்டிருக்கேன்,  in one of the uiniversity. என்ன சப்ஜெக்ட்ல ஆராய்ச்சினு நீங்க
கேட்கலாம்.  “பாரதப்பண்பாடு, கலை, கலாசாரம், வாழ்வியல் முறைகள், மனித உறவுகள் இதெல்லாம் பத்திதான்.  மாத்ரு தேவோ பவ, பித்ரு தேவோ பவ, ஆசார்ய தேவோ பவனு பெத்தவங்களை, கற்றுகொடுக்கிற ஆசானை கடவுளா பாவிக்கணும்னு!  எவ்வளவு ஒசந்த தத்துவம்.. இங்கேதான் கணவனை கடவுளா பாவிக்கிற ஒரு status, அதா
வது மன நிலைமை உண்டு, அவன் என்னதான் கொடுமைக்காரனாய் இருந்தாலும்!அது மட்டுமா? இங்கே மட்டும்தான் உறவுகளுக்கு மதிப்பு கொடுக்கிறோம்.  எவ்வளவு உறவுகள் இங்கே.அண்ணன், தம்பிகள், அக்கா, தங்கைகள், மாமா, மாமி, அத்தை, சித்தி. மற்றும் ஒண்ணுவிட்ட, இரண்டுவிட்ட சொந்தங்கள்னு! அப்பப்பா!பிள்ளைகளை  
பெற்று,பாசமுடன் வளர்த்து, கலியாணமும் பண்ணிக்கொடுத்து பேரன், பேத்திகள் எடுத்து அவங்களுக்காகவே சொச்ச காலத்தை தியாகம் பண்ணி! வெளி நாடுகளில் எல்லாம், பெத்தவங்க, ஒரு பக்கம், குழந்தைகள் இன்னொரு பக்கம், குழந்தைகளை கவனிக்கனே “பேபி சிட்டர்கள்”, இல்லைனா, “கிரஷ்”.ஆனா இங்கேதான் உறவுக்
கூட்டம்,அதாவது அன்பை கொட்டற கூட்டம். ஒரு நாள், கிழமை, பண்டிகைகள்னா, இந்த கூட்டம் ஒரு இடத்தில் ஒண்ணா கூடி, தங்கள் மகிழ்ச்சியை வெளிக்காட்டி!
 அப்பப்பா!  பணம் கோடிகளில் சம்பாதிச்சுடலாம்.  ஆனா, அன்பை, பாசத்தை, சம்பாதிக்க முடியாது. மூத்தவங்களை வணங்கறது, ஆசிகள் பெறுவதுனு என்னவொரு அற்புத கலாசாரம் நம்ம கலாசாரம்னு நினைக்கிறப்ப மெய் சிலிர்த்துப் போகுது. இதுதான் “பாரத பண்பாடுன்றது”..உலகத்தில் வேற எங்கேயும் பார்க்க முடியாத ஒண்ணு!
இந்த என் ஆராய்ச்சிக்கு அங்கே எவ்வளவு அப்¡£சியேஷன்? வாவ்னு கொண்டாடறவங்க எவ்வளவு பேர்கள்!பட், இங்கே .. வெட்கமாயிருக்கு, வேதனையாயும் இருக்கு.  
தி கிரேட் அலெக்சாண்டர், உலகம் முழுக்க வெற்றி கண்டு, ஒரு குடையின் கீழ்  கொண்டு வந்தவர், இறுதி காலத்தில், தன் மரணத்தருவாயில்  தன்னைச்சேர்ந்தவங்க கிட்ட ஒரு வேண்டுகோள் விடுத்தாராம்.  தன் மரணத்துக்கு பிறகு தன் உடலைப் புதைக்கிறப்ப தன் இரு கைகளை, பூமிக்கு வெளியே மக்கள் பார்க்கிறாப்பல வச்சு புதைக்கணும்னு சென்னாராம்.  ஏன் இப்படிஒரு விசித்திரமான வேண்டுகோள்னு கேட்டவங்ககிட்ட, அவர் சொன்னாராம். ” தி கிரேட் அலெக்சாண்டர், உலகம் முழுக்க ஜெயிச்சு, ஒரு குடையின் கீழ்  கொண்டு வந்தவர், இந்த உலகத்தைவிட்டு போறப்ப தன்னோட  எதையும் கொண்டு போகலைனு மக்கள் உணரட்டும்னு! ஆனா, இன்னைய உலகம்! ஊம்!
சொல்லவே வெட்கமா, வேதனையா, இருக்கு. பந்த பாசங்களுக்கு இடம்கொடுக்காம பணம், பணம்னு பணத்து பின்னாலேயே சுத்திகிட்டிருக்கு.  அதனால்தான் நான் இனி இங்கேயே தங்கிடலாம்னு பாரதம் வந்தேன்.  ஆனா,இங்கே,  என் வீட்டையே என்னால் மாத்த முடியலைன்றப்ப, மத்தவங்களை எப்படி,எப்படி நான் மாத்தறதாம்!
 ஸோ, நான் மறுபடி  with a heavy heart States போயிடலாம்னு நினைக்கிறேன்.” என்றான் கண்களில் வழியும் கண்ணீருடன்..அவனை பார்க்க பாவமாய் இருந்தது..  
” குழந்தை, உன் மனசில இப்படி ஒரு ஏக்கமா?  நானும், இதையெல்லாம் நினைச்சிப் பார்க்க தவறிட்டேன். வயசுதான் ஆச்சு எனக்கு..முதிர்ச்சி வரலை. நானே இப்படினா,
எப்படி என் பெண்கிட்ட முதிர்ச்சியை எதிர்பார்க்க முடியும்?  நானும் வீம்பு பிடிச்சவளாகவே இருந்துட்டேன்னு நினைக்கிறப்ப எனக்கு வெட்கமாயும், வேதனையாயும் இருக்கு.  நீர் அடிச்சு, நீர் விலகுமாம்பாங்க. யார் எங்கிட்ட வீம்பு பிடிச்சு பேசாம இருக்கிறது? நான் பெத்த குழந்தைனு விட்டுகொடுத்து போகாம நானும் போட்டா,போட்டி, போட்டுட்டேன்னு நினைக்கிறப்ப, என் மனசு கிடந்து அடிச்சுக்குது..  என் பேரன் வயசில சின்னவனாய் இருந்தாலும், என்ன மன முதிர்ச்சி.. ” என்ற பாட்டி, தன் மகள் இரு கைகளையும், பேரன் கைகளையும்  பற்றிக்கொண்டாள். சற்று நேரம் அங்கு ஒரு அமைதி நிலவியது..இருவரையும் பார்த்தவாறே இருந்த்வர்,  “சதீஷ், சதீஷ், டேய், சதீஷ்
கண்ணா என்னை , என்னை மட்டும் இல்லை.  நான் எத்தனை காலம் இருப்பேனோ,  உன் அம்மாவையும் தனியே இங்கே விட்டுட்டு  வெளி நாடு போயிடாதேடா.  பாவம் அவளுக்குத்தான்உன்னை விட்டா யார் இருக்கா? என்ற போது “நிச்சயமாய் நான் அப்படியெல்லாம் செய்ய மாட்டேன்.  எஸ் கிராண்மா .  நான் ஏதாவது தப்பா பேசியிருந்தா  என்னை மன்னிச்சுருங்க” என்ற போது,
-13-
 “போடா, போ..  இங்கே இத்தனை வயசிலயும் என் உசிரை பிடிச்சு வச்சுகிட்டு நான் ஏன் இருக்கேன் இங்கே? என் பேரன்  எங்க கூடவே , தப்பு, தப்புப்பா.  உன்னை பெத்தவ கூடவே இருக்கணும்.. அவ மனம் கோணாம நீ நடந்துக்கணும்.  உங்கம்மாவை கடைசி வரை பக்கத்திலிருந்து அன்பு செலுத்தி பார்த்துக்கணும்பா நீ.  அதுக்கு இரண்டு விஷயங்கள் பண்ணனும் நீ.  ஒண்ணு நீ உங்கம்மாகிட்ட அன்பா நடந்துக்கணும்.  அப்புறம் நீ ஒரு கலியாணத்தை  பண்ணிகிட்டு ஒரு குழந்தையை பெத்து உன் அம்மா கிட்ட கொடுக்கணும்.  பாவம்டா அவ!.வாழ்க்கைல என்ன சுகத்தைடா கண்டா ? எத்தனையோ கனவுகள் இருந்திருக்கும் அவ மனசிலயும், இல்லையா!இப்ப,
நினைச்சாக்கூட,  பத்திக்கிட்டு வருது. இவளுக்கு நான் என்ன குறை வச்சேன் ? இவ அப்பா அல்பாயுசில போயிட்டப்ப, இவளை, படிக்க வச்சு ஒரு வேலையும் வாங்கிக்  கொடுத்து,இவ விருப்பப்பட்டவன் நல்லவனில்லை, படிப்பும், வேலையும் இல்லை,குடிகாரன், பொறுப்பில்லாதவன்னு, எவ்வளவோ எடுத்து சொல்லியும் கேட்காம என்னை  இவ விரோதியாவே நினைச்சா.  கடவுள் விட்ட வழினு  இருந்துட்டேன். ஒரு நாள் அவன் நல்லா குடிச்சுட்டு தெருவில தள்ளாடிக்கிட்டே வந்து ஒரு வான்ல அடிபட்டுஆன் தி ஸ்பாட்டில போனப்புவும், அது என் சாபத்திலதான்னு என்னையே சாடித் தீர்த்தா உங்க அம்மா.. அப்பவும் கூட தான் செஞ்ச தப்பை  கொஞ்சமும் உணராம,என்னையே
மறுபடி,மறுபடி, திட்டித் தீர்த்தா, பார்க்கிற இடங்களில் எல்லாம்..அப்புறமும் என்னை கிட்டவே நெருங்க விடலை இவ.  ஒரு பெத்த தாய் எப்படிடா ஒரு பெண் கெட்டு அழிஞ்சு போகணும்னு நினைப்பா? ஆனாலும் எனக்குள்ளேயும் இவ ஏன் அநியாயமா தன் வாழ்க்கையை பாழாக்கிக்கிட்டாளேன்ற ஒரு ஆதங்கம் இருந்தது..அது எந்தவொரு
 தாய்க்கும் இருக்கும்தானேனு ஏண்டா இவ இன்னைக்கு வரை நினைச்சுப்பார்க்காம என்னை ஜன்ம விரோதியாவே ..    இதை நினைச்சு நான் நல்லா தூங்கி பல மாதங்களாச்சுடா.  நான் தவிக்கிற தவிப்பு என் ஜன்ம விரோதிக்கு கூட வரக்கூடாதுடா.ஆனா பாட்டினு அன்போட  தேடி வர உங்கிட்ட எப்படிடா நான் முகத்தை காட்ட முடியும்?
உனக்கு அப்பாவோட அன்பும், ஆதரவும், கிடைக்கலை .ஸ்கூலுக்கு போறது, வரது, படிக்கிறதுனு ரொடீன் வாழ்க்கை உனக்கு அலுப்பை தந்திருக்கும், நீ  வீடு திரும்பினப்புறமும்  தன்னந்தனியா வெறுட், வெறுட்டுனு மோட்டுவளையை பார்த்துகிட்டு.!!  உன்னைப்போல ஒரு நிலைமை யாருக்கும் வரக்கூடாதுடா கண்ணா.    ஆனா ஒண்ணுடா, இப்ப நீ ஸ்டேட்சிலிருந்து  திரும்பியதும்,நீ அலட்சியமாய் இருந்தது தப்புடா கண்ணா! பெத்த தாய்தான் ஒரு பிள்ளைக்கு முதல் தெய்வம்..
உன்னை ஆவலுடன் எதிர்பார்த்துகிட்டிருந்த அம்மாவை முதல்ல பார்க்காம என்னை பார்க்க வந்தது  தப்புடா.  ஒரு தாயா அவ மனசு என்ன பாடுபடும்னு வேதனையை அனுபவிக்கிறவடா நான், அதுவும் பல வருஷங்களா.  டேய் என் நிலைமை சத்தியமா வேற யாருக்கும், என் விரோதிக்கு கூட வர வேண்டாம்பா”, என்ற போது,
“பாட்டி எனக்கு,  அம்மா தவிக்கிற தவிப்பு , அதுக்கு மேல உன் தவிப்பு எல்லாமே விளங்குது. அம்மாவின் கடு முகம்.  அப்பாவின் பொறுப்பில்லாத்தனம்,  இப்படி எல்லாமே.ஒரு பொறுப்புள்ள தாயா நீ ஒவ்வொரு கால கட்டதிலயும் அம்மா உன்னை என்ன  பேசினாலும் நீ அமைதியா அம்மாவுக்கு எவ்வளவு புத்திமதிகள் சொல்லியிருப்பேனும் , கண்கூடா பார்த்திருக்கேன் சில சமயங்களில்.  ஆனா அம்மா யார் பேச்சையும் கேட்காம,எதையும் தீர யோசிக்காம, தன்னிச்சையாய், மனம் போன போக்கில், அகங்காரம்
பிடிச்சு உன்னை தூக்கி எறிஞ்சு பேசி.  சே என்ன மனுஷி இவனு எனக்கு அப்பல்லாம் தோணும்.  “அம்மா என்றால் அன்பு”.  பெண்கள்  சாந்த ஸ்வரூபியானவங்கனு படிச்சுருக்கேன்.  ஆனா அம்மா?அப்பத்தான் முடிவு பண்ணினேன் அன்பும், பாசமும் இல்லாத இங்கே ஏன் இருக்கணும்னு.. மனித உணர்வுகளை மதிக்காதவங்க கூட ஏன் ஒரே வீட்டில வாழனும்னும் எனக்கு தோணுது. கலியாணம் பண்ணிக்க,கலியாணம் பண்ணிக்க, அத்தோட எங்க கடமை தீர்ந்ததுனு,  அடிக்கடி
என்னை  அம்மாவும், நீயும் வற்புறுத்தறீங்க.  நான் தயக்கம் காட்டறப்ப அம்மா என் மேல சந்தேகம் கூட படறாங்க. தன்னை பெத்த அம்மாகிட்டவே பாசம் இல்லாதவங்க எப்படி பாட்டி வெளியிலிருந்து வர ஒரு இளம் பெண் மேல பாசமாய் இருப்பாங்க?ஸப்போஸ் இவங்களுக்குள்ள ஒத்துப்போகலைனா என் வாழ்க்கைல கேள்விக்குறியா போயிடும். நான் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அம்மாவையும், உன்னையும் விட்டுட்டு தனிக்குடித்தனம் போறதை விரும்பலை..இது சத்தியமான வார்த்தை..அத்தோட,
 என்னையே நம்பி வரவ, மனம் கோணாம வச்சுக்கணும்னு  நினைக்கிறேன். அதான் மறுபடி ஸ்டேட்ஸுக்கே திரும்பி போயிடலாம்னு முடிவு பண்ணிட்டேன்”என்றபோது
“தப்புடா.. உன் முடிவு தப்பு. வாழ்க்கைன்றது கடலுக்கு ஒப்பானது.  அதாண்டா சம்சாரம் சாகரம்னு சொல்வாங்க.  வாழ்க்கைல வர பிரச்சினைகளை எதிர்கொள்ள நீ பழகிக்கணும்.  சவால்களை சமாளிக்கவும்தான்.. இந்த பாட்டிக்கு உன் நல் வாழ்வு,  உன் அம்மாவின் நல் வாழ்க்கைதாண்டா  முக்கியம்.  இதுக்காக நான் எதையும் எதிர்கொள்ள,
சித்தமாய் இருக்கேண்டா”.  இவ்வளவு பேச்சு வார்த்தைகள் பாட்டிக்கும், பேரனுக்கும் இடையே நடந்துகொண்டிருந்தும், அங்கிருந்த நீரஜா எதுவுமே வாய் திறக்கவில்லை.  
-14-
நீரஜா எங்களிடம் அழுது புலம்பிய தருணங்கள் தான் எத்தனை.  அதாவது தன் ஒரே மகனுக்கு தன் மீது, பாசமே இல்லை என்று.  அதே போல தன் தாய்க்கும் என்றும். ஆனால் இப்போது விளங்குது தவறு முழுக்க, நீரஜா மீது என்று .இதற்குதான் அந்த காலத்தில் கூட்டு குடும்பம், வீட்டில் மூத்தவர்கள் கண்காணிப்பு , அவர்கள் வழி நடத்திலில் குடும்பத்தை கோப்பியமாய் கொண்டு சென்றது,சின்ன,சின்ன,உப்பு பெறாத விஷயம் என்பார்களே அப்படிப்பட்ட பிரச்சினைகள் தலை தூக்கும்போதெல்லாம்,
மூத்தவர்கள் குறுக்கிட்டு சமாதானம் செய்து வைப்பது என்றெல்லாம்.  ஊம்.  அந்த காலம் இனி வருமோ என்று மனம் ஏங்கி தவிக்கிறது.சற்றே மௌனம் நிலவிய இடை வேளையில் நீரஜா “வாடா சாப்பிட.  உனக்காக நான் எவ்வளவெல்லாம் செஞ்சு வச்சிருக்கேன்னு தம்பட்டம் அடிச்சுக்க விரும்பலை.  பகவான் கண்ணனை சமாதானம் பேச போகச்சொன்னப்ப, அவர் மாமுனி விதுரர் ஓட்டின தேர்ல கௌரவர்களை பார்க்க போனப்ப, பல சந்தேகங்களை  கண்ணனுக்கு தேர் ஓட்டிக்கிட்டே  விதுரர் கண்ணனிடம் கேட்டாராம்.  எங்கிட்ட அழுகின வாழைப்பழங்கள் மட்டும்தான் கொஞ்சம் இருக்கு.  பகவான் இதை ஏத்துப்பாரானு.  உடனே பகவானும் கொடுப்பானு கேட்டவுடன் சந்தோஷம் மிகுதியால் பகவான்கிட்ட பேச்சு கொடுத்துகிட்டே அந்த அழுகின வாழைப்பழங்களை எடுத்து, பழத்தை கீழே கடாசிட்டு, தோலை மட்டுமே, அப்படி தோலை கொடுக்கிறோமேன்ற பிரக்யை கூட
இல்லாம கொடுக்க, பகவான் கண்ணபிரானும் தோலை வாங்கி ஆர்வமுடன் உண்டாராம்.  ஒரு சந்தர்பத்தில் அவர் தவறு உணர்ந்து கண்ணனிடம் மன்னிப்பு கேட்டுக்கிட்டாராம் .பகவானும், பக்தன் ஒருவன் அன்புடன் கொடுக்கிற எதையும் தான் விரும்பி ஏத்துப்பேன் அது பச்சை இலையோ, காய்ந்த சருகோ, அழுகின  பதார்த்தமோ, இல்லை ஒரு ஸ்பூன் தண்ணியே ஆனாலும்னு  சொன்னாராம்.அப்படிதான் நினைக்கத்தோணுடா  இப்ப எனக்கு.   அம்மாவை காட்டிலும்  அன்பு காட்டற உன்  பாட்டி போட்ட ரசம் சாதம்,சுட்ட அப்பளம், உனக்கு தேவாம்ருதமாய் இருந்திருக்கு.  அதே போல நொய் உப்புமா, சட்டினி, காபி எல்லாம்..  உனக்கு கிடைச்ச அந்த பாக்கியம் எனக்கு அருகிருந்தும் கிடைக்கலைடா கண்ணா.  எல்லாமே என்  வீண் வீம்பாலதான்னு இப்ப உணற்றேன்.   இப்பவும் நான் பாட்டியைதான், பாட்டி என்ன நினைச்சுக்கிட்டாலும் குற்றம்
சொல்வேன்.  ஏன்னு கேட்டா,  சின்ன வயசிலிருந்தே நான் எது கேட்டாலும்  உடனடியாய் கிடைச்சிரும்.  கிடைக்கலைனா அடம் பண்ணி  சாதிச்சுக்குவேன்.   எல்லாமே என் இஷ்டப்படிதான் நடக்கணும்.  என் விருப்பத்துக்கு விரோதமா எதுவும் நடக்ககூடாது.  எஸ்.  என் படிப்பு, விஷயத்தில, வேலைல, வாழ்க்கைத்துணையை அவசரமாதேர்ந்தெடுத்ததில, அவர் அகால மரணம், அம்மா சாபத்திலனு ஒரு எண்ணத்தை வளர்த்துக்கிட்டேன்.  எதிர்பார்த்தாபல  என் வாழ்க்கை அமையலைனு ஒரு விரக்தி. நான் இப்படியெல்லாம் நடந்துகிட்டது உன் மனசை எப்படியெல்லாம் பாதிச்சிருக்கும்னு நான் இப்ப உணற்றேன்,” என்ற நீரஜா தன் அம்மா பக்கம் திரும்பி “அம்மா என்னை மன்னிச்சிரு,  உன் பேரனை  உன் கையில ஒப்படைச்சுடறேன்.இப்பத்தான் என் கண்கள் திறந்தது..மாயை விலகியது..மன்னிச்சிரம்மா!மன்னிச்சிரம்மா.இன்னொண்ணுமா,
அவன் மறுபடி வெளிநாடு எல்லாம்   போக வேண்டாம்னு  சொல்லும்மா.  பிளீஸ் அம்மா” என்ற போது சதீஷ் குறுக்கிட்டு “இனிமே பாட்டியும், நீயும் இங்கேயே ஒற்றுமையா இருக்கிறதாய் இருந்தாதான் நான் இங்கே இருக்கிறதை பத்தி யோசிப்பேன்” என்றான்.
                                                                                                     ———–      

Series Navigationஏப்ரல் மாத ‘புத்தகம் பேசுது’ இதழ் குறித்து என் பார்வைஒரு கதை ஒரு கருத்து
author

Similar Posts

Comments

  1. Avatar
    jananesan says:

    அன்பின் வழியில் பூசல் தீரும் என்ற வள்ளுவத்தை உணர்ச்சி பொங்கும் கதையாக படைத்து வாசகர்களை நெகிழ்வித்திருக்கிறார் கௌசல்யா ரங்கநாதன். வாழ்த்துகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *