(முதல் முதல் அமைச்சர்)
கோ. மன்றவாணன்
நெய்வேலி நிலக்கரி சுரங்கம் தோண்டுவதற்குச் சுற்றியுள்ள ஊர்களை எல்லாம் கையகப்படுத்தும்போது…. வள்ளலார் வாழ்ந்த கருங்குழி, மேட்டுக்குப்பம், வடலூர் ஆகிய ஊர்கள் எப்படி தப்பித்தன என்று யாரேனும் நினைத்துப் பார்த்தது உண்டா? ஓமந்தூர் பெரிய வளைவு இராமசாமி ரெட்டியாரின் கடும் முயற்சிதான் அதற்குக் காரணம்.
அப்படியா… யார் அவர்? என்றுதான் இன்றைய தலைமுறையினர் கேட்பார்கள்.
விடுதலை பெற்ற இந்தியாவில் சென்னை மாநிலத்தின் முதல் முதல் அமைச்சராக இருந்த பெருமைக்கு உரியவர் அவர். உங்கள் ஊர் நூலகத்தில் தேடினால் ஓமந்தூராரைப் பற்றி ஒரு புத்தகமும் கிடைக்காது. அத்தி பூத்ததுபோல் அவரைப் பற்றி விவசாய முதலமைச்சர் என்ற தலைப்பில் பல ஆண்டுகளுக்கு முன் சோமலெ ஒரு புத்தகம் எழுதி இருக்கிறார். அதைப் பார்க்கும் பாக்கியம்கூட நமக்குக் கிடைக்காது.. வேறு யாரேனும் எழுதி இருக்கிறார்களா என்று தெரியவில்லை.
இந்நிலையில்
ஓமந்தூர் இராமசாமி ரெட்டியார் (முதல் முதலமைச்சர்) என்ற பெயரில் புதிதாக ஒரு நூல் 2021 பிப்ரவரியில் வெளிவந்து உள்ளது. இந்த அரிய நூலை எழுதியவர் கோவி. ஜெயராமன். மொத்தமே 83 பக்கங்கள் கொண்ட வரலாற்று நூல்.
பொதுவாக ஒருவரின் வாழ்க்கை வரலாற்றை எழுதினால்… அவரைப் போல் உலகில் யாருமே இல்லை என்பது போல மிகுஉயர்வு நவிற்சியாக எழுதுவதே வழக்கமாக உள்ளது. அதிலும் அவர் தன் சாதிக்காரர் என்றால் அவரைத் தெய்வமாகவே சித்திரித்துவிடுகிறார்கள். ஆனால் கோவி. ஜெயராமன் எழுதிய இந்த நூலில் எதையும் மிகைப்படுத்தாமல் எழுதி இருக்கிறார். தேவை இல்லாத சொல் என்று எதுவும் இல்லை.
உள்ளது உள்ளபடி வரலாற்றுச் செய்திகளை எழுதினால் சுவை இருக்காது. விறுவிறுப்பு இருக்காது எனச் சொல்வோர் உண்டு. ஓமந்தூராரின் வரலாற்றுத் தகவல்களைக் கோவி. ஜெயராமன் உள்ளது உள்ளபடிதான் எழுதி இருக்கிறார். படிக்க நூலைக் கையில் எடுத்தேன். படித்து முடித்த பிறகே மேசையில் வைத்தேன். அந்த அளவுக்கு இந்நூல் உயிரோட்டமாக இருந்தது.
ஒவ்வொரு பத்தியிலும் இடம்பெற்ற வரலாற்றுத் தகவல்களைப் படிக்கப் படிக்க ஆர்வம் கூடிக்கொண்டே போனது. இவரின் ஒரு பத்தியைப் பிறர் எழுதினால் கண் காது மூக்கு வைத்து அவற்றில் போலி ஆபரணங்களைப் பூட்டி ஆறு பக்கங்களுக்குமேல் எழுதி ஆரவாரம் செய்து இருப்பார்கள்.
ஓமந்தூரார் வரலாற்றைப் பன்னிரண்டு தலைப்புகளில் பகிர்ந்து எழுதியுள்ள முறை நன்று, அந்தத் தலைப்புகள் வருமாறு :
- குடும்பம்,
- கட்சி, அரசியல் பணிகள்,
- விடுதலை இயக்கமும் சிறைவாழ்க்கையும்,
- சென்னை மாகாண முதல்வர்,
- நெஞ்சுக்கு நேர்மை,
- விவசாய முதல்வர்,
- ஆன்மீக அரசியல்,
- தாழ்த்தப்பட்டோருக்கு நீதி,
- தமிழுக்குத் தொண்டு,
- கடலூர் அஞ்சலை அம்மாளும் வடலூர் ஓமந்தூராரும்,
- வடலூர் தவவாழ்வு,
- நான் கண்ட ஓ.பி.ஆர்.
ஓமந்தூராரைப் பற்றிய செய்திகளும் அவரைச் சுற்றி நடந்த வரலாற்றுச் செய்திகளும் அடுத்துவரும் தலைமுறைகள் அறிய வேண்டியவை. தந்தை, தாய், மனைவி, மகன் ஆகியோர் அடுத்தடுத்து இறந்த நிலையில் அவர் ஒரு வெள்ளை வேட்டி வெள்ளைச் சட்டைத் துறவியாகவே வாழ்ந்து இருக்கிறார். ஆன்மீக அரசியல் என்று ஒரு முழக்கம் தற்காலத்தில் முன்வைக்கப்படுகிறது. அதை முன்னரே செயலில் காண்பித்தவராக ஓமந்தூரார் இருந்துள்ளார். துறவிகளோடு தொடர்ந்து நல்லுறவு வைத்திருந்தாலும் அரசு நிர்வாகத்தில் அவர்களின் தலையீட்டை அவர் அனுமதிக்கவில்லை.
நூல் மதிப்புரையின் ஊடாக, நூல்தலைவனைப் பற்றி வாசகர்கள் கொஞ்சம் தெரிந்துகொள்ள வேண்டும். அதற்காகச் சில துளிகள்…
ஓமந்தூரார் அதிகம் படிக்கவில்லை. இருந்தாலும் திண்டிவனத்தில் உள்ள வால்டர் ஸ்கட்டர் உயர்நிலைப் பள்ளியில் சில ஆண்டுகள் படித்தார். அப்போது அவருடன் படித்துக் கொண்டிருந்த மாணவர் 1907 பிப்ரவரி 13 ஆம் தேதி காஞ்சி காமகோடி பீடத்தின் அதிபதி ஆனார். ஸ்ரீ ஜெகத்குரு சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள்தான் அந்த மாணவர். அலிகார் பல்கலைக் கழகத்தை உருவாக்கிய திரு. சையது அகமதுகான் என்பவரும் இவருடன் படித்த சக மாணவரே.
(இணையத்தின் பல பதிவுகளில் ஓமந்தூராரை வழக்கறிஞர் எனத் தவறாகக் குறிப்பிட்டுள்ளார்கள். சரி பார்க்காமல் தமிழ் இந்து நாளிதழிலும் அவரை வழக்கறிஞர் என எழுதி உள்ளார்கள். எந்தப் பொருள் ஆனாலும் இணையம் சொல்வன எல்லாம் உண்மை என்று பேதை நெஞ்சம் நம்புகிறதே…)
ஓமந்தூராருடைய இயற்பெயர் இராமசாமி. இவருடைய வீட்டின் பெயர் பெரிய வளைவு. இரண்டையும் இணைத்து ஓமந்தூர் பெரிய வளைவு இராமசாமி ரெட்டியார் என்று அழைக்கப்பட்டார். சுருக்கம் கருதி ஓமந்தூரார் என்றும் ஓபிஆர் என்றும் பின்னாளில் அழைக்கப்பட்டார். இவருடைய தந்தையார் பெயர் முத்துராம ரெட்டியார். ஆனால் தந்தையாரின் தலைப்பெழுத்து ஓபிஆர் என்பதில் இல்லாமல் போனதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை.
அமாவாசை தோறும் தன் நண்பர்களுடன் சேர்ந்து பாரத மாதா படத்தையும் காந்தி படத்தையும் கைகளில் ஏந்திக்கொண்டு தெருத் தெருவாக சுதந்திர எழுச்சிப் பாடல்களைப் பாடியபடி கதர்த் துணிகள் விற்றுள்ளார். இதைப் படிக்கும்போது அந்தக் காலத்து இளைஞர்களிடம் பொங்கி எழுந்த சுதந்திர உணர்வை ஊகிக்கலாம்.
1921இல் அன்னிபெசண்ட் அம்மையார் தலைமையில் கடலூரில் பிரம்ம ஞான சபை மாநாட்டை நடத்திக் கொடுத்துள்ளார். அம்மையாரோடு உரையாடியும் உள்ளார்.
1922 முதல் திண்டிவனம் காங்கிரஸ் கட்சித் தலைவராகச் செயல்பட்டார். 1930 முதல் 1937 வரை தென்னார்க்காடு மாவட்டக் காங்கிரஸ் கட்சித் தலைவராக இருந்தார். 1938 இல் நடந்த சென்னை மாநிலக் காங்கிரஸ் கட்சித் தலைவர் தேர்தலில் தன்னை எதிர்த்து நின்ற சத்தியமூர்த்தியைவிட 35 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி அடைந்தார். அடுத்த முறையும் தலைவராக ஓமந்தூராரே தொடர வேண்டும் என்று காமராசர் இராஜாஜி ஆகியோர் வற்புறுத்தினர். ஆனால் இவர் மறுத்துவிட்டார்.
1938, 1946 ஆகிய ஆண்டுகளில் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். இவரை முதலமைச்சராக இருக்கப் பல மாதங்களாகப் பலரும் வற்புறுத்தினார்கள். இவர் சம்மதிக்கவில்லை. பின்னர் திருவண்ணாமலை பெருந்துறவி ரமணர் அவர்களின் ஆலோசனை கேட்டே முதலமைச்சராக இருக்க இசைவு தந்தார். இந்தியா விடுதலை பெறுவதற்கு முன்பே 23-03-1947 இல் சென்னை மாநில முதலமைச்சர் பொறுப்பை ஏற்றார். சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதற்கு ஏற்ப… முதல் அமைச்சர் ஆனாலும் சாதாரண மனிதரைப் போல் நடந்துகொண்டார்
இந்தியா விடுதலை பெற்ற போது, 1947 ஆகஸ்ட் 15 அன்று காலை கோட்டையில் தேசியக் கொடியை ஓமந்தூரார் ஏற்றினார். பதவி ஏற்பு உறுதிமொழி கூறி சுதந்திர இந்தியாவில் சென்னை மாகாணத்தின் முதல் அமைச்சராகப் பதவி ஏற்றுக்கொண்டார்.
இந்தியா சுதந்திரம் பெற்ற போது, பிரிட்டிஷாரான ஐசிஎஸ் அதிகாரிகள் விரும்பினால் இந்தியாவில் தொடர்ந்து பணியாற்றலாம் என்று சர்தார் வல்லபாய் பட்டேல் கேட்டுக்கொண்டார். ஆனால் ஓமந்தூரார் பிரிட்டிஷ் அதிகாரிகளிடம் உங்கள் பணி எங்களுக்குத் தேவை இல்லை. புறப்படுங்கள் என்று கண்டிப்பாகச் சொல்லிவிட்டார்.
காந்தி அடிகள் இறந்த போது துடிதுடித்துப் போனார். அப்போது இவர் முதல் அமைச்சராக இருந்தார். தில்லிக்கு நேரில் சென்று திருச்சாம்பலை வாங்கி வந்தார். அதைக் கரைக்கும் முன்பாகத் தன் வீட்டு வழிபாட்டு அறையில் வைத்து வணங்கினார். மேல்சட்டை அணியாமல் திருச்சாம்பல் கலசத்தைக் கையில் ஏந்தியவாறு ஊர்வலமாகச் சென்று கடலில் கரைத்தார்.
சென்னை மாநிலத்தின் இலச்சினையாக உள்ள திருவில்லிப்புத்தூர் கோவில் கோபுரத்தைத் தேர்வு செய்தவர் இவரே. கோபுரம் ஒரு சமயச் சின்னம். மதச்சார்பற்ற அரசில் இதை அனுமதிக்கக் கூடாது என்று சிலர் நேருவிடம் முறையிட்டனர். ஓமந்தூராரிடம் நேரு விளக்கம் கேட்டார். திராவிடக் கட்டடக் கலையின் அடையாளம்தான் கோபுரம் என்று பதில் அளித்தார். மேலும் காந்தியின் நண்பர் சி.எப்.ஆண்ட்ரூஸ் திருப்பத்தூரில் கோபுரத்துடன் ஒரு தேவாலயத்தைக் கட்டி இருப்பதையும் சுட்டிக் காட்டினார். .
காந்தி அடிகளுடனும் நேருவுடனும் பலமுறை கருத்து வேறுபாடுகள் கொண்டிருந்தார். அவற்றை நேரடியாகவும் வெளிப்படுத்தினார். இது தொடர்பான தகவல்கள் நம்மை வியக்க வைக்கின்றன. பட்டை தீட்டப்பட்ட வைரம் என்று பாராட்டுவது வழக்கம். ஆனால் நேருவோ, ஓமந்தூராரைப் பட்டை தீட்டப்படாத வைரக்கல் என்று பாராட்டினார். அப்படிச் சொன்னதற்கு ஓமந்தூராரின் கண்டிப்பும் கறாரும் முரட்டுப் பிடிவாதமும் காரணங்களாக இருக்கலாம்.
கம்யூனல் ஜிஓ என்றும் விகிதாச்சார பிரதிநிதித்துவம் என்றும் அந்தக் காலத்தில் குறிப்பிடப்பட்ட இடஒதுக்கீடு சம்பந்தமாக சில திருத்தங்களையும் இவர் கொண்டுவந்தார். அதன்படி மொத்த பதவிகள் 14 என்றால் பிராமணருக்கு 2, கிறிஸ்தவருக்கு 1, இஸ்லாமியருக்கு 1, ஆதி திராவிடருக்கு 2, பிற்பட்டோருக்கு 2, பிராமணர் அல்லாத மற்றவர்களுக்கு 6 என்ற விகிதத்தில் வேலை வாய்ப்புகள் வழங்கிட வேண்டும் என்று உத்தரவு இட்டார். பிராமணருக்கும் இடஒதுக்கீடு சலுகையை வழங்கி இருக்கிறார்.
தன் ஆட்சிக் காலத்தில் வேளாண்மைக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுத்தார். தமிழ்நாட்டைப் பொறுத்த வரையில் இவர்தான் விவசாய முதல்வர். விவசாயத்தில் அதிக அனுபவ ஞானம் கொண்டவர். விவசாயச் சீர்திருத்தமும் சம நிலையும் என்ற புத்தகத்தையும் எழுதி உள்ளார்.
முதல்வராக இருந்த காலத்தில் அவர் இயற்றிய சட்டங்களும் திட்டங்களும் செயல்பாடுகளும் சரித்திரம் பேசும் சாதனைகளாக மாறிவிட்டன.
ஓமந்தூராரின் கண்டிப்பு கறார் தன்மை, நேர்மை பிடிவாதம் காரணமாக பல எதிர்ப்புகளும் எழுந்தன. அவரைப் பதவியில் இருந்து விலக வைக்க முயற்சிகள் நடந்தன. 06-04-1949 அன்று முதல் அமைச்சர் பொறுப்பிலிருந்து விலகினார். அன்றே அரசு இல்லத்தைக் காலி செய்துவிட்டு ஊர் திரும்பிவிட்டார்.
அரசாங்க அலுவலகப் பணியாளர் பெறும் ஊதியத்திற்கும் விவசாயக் கூலியாள் பெறும் ஊதியத்திற்கும் இடையே உள்ள இடைவெளியைச் சுருக்க வேண்டும் என்பதில் வலுவான கருத்துக் கொண்டிருந்தார். இவரின் இந்தச் சிந்தனையை இன்று முன்னெடுப்பார் யாரும் இல்லை.
ரமணர் நோய்வாய்ப்பட்டு இருந்த காலத்தில் அவருடனே இருந்து சேவை செய்தார். இவரின் மடியில்தான் ரமணர் உயிர் துறந்தார். அரசியலில் இருந்து விலகி வடலூரில் வாழ்ந்த போது, பல உயர்பதவிகள் தேடி வந்தன. ஏற்கவில்லை.
ஓமந்தூரார் நிறுவிய வள்ளலார் குருகுலம் பள்ளி விடுதியில் தங்கிப் படித்தவர் இந்த நூலாசிரியர். ஓமந்தூராரின் கண்காணிப்பில் வளர்ந்தவர். வடலூர் ஞான சபையில் திருப்பணிகள் நடந்த சமயம். அப்பணிகளை மேற்பார்வையிட ஓமந்தூரார் ஞானசபைக்குச் செல்லும்போது அவருக்கு உதவியாக மாணவனாக இருந்த கோவி. ஜெயராமன் ஒருமுறை சென்றார். ஜோதி தரிசன அறையின் கீழ் உள்ள நிலவறையில் ஓமந்தூரார் படி இறங்கிய போது அவரைத் தாங்கியவாறு சென்றார். அந்த நிலவறையில்தான் வள்ளலார் தியானம் செய்வது வழக்கமாம். அது குளிர்சாதனம் பொருத்தப்பட்ட அறைபோல் இருந்ததாம். ஞான சபையின் நுழைவாயிலில் இருக்கும் யானைச் சிற்பங்களின் காதுகள் வழியாக அந்தப் பாதாள அறைக்குள் வெளிக்காற்று நுழையும்படி கட்டுமானத்தை வள்ளலார் அமைத்துள்ளார் என்று வியக்கிறார் நூலாசிரியர். அந்த நிலவறையில் யாரையும் அனுமதிப்பது இல்லை. அந்நிலையில் வள்ளலார் தவம்புரிந்த நிலவறையைக் காணும் வாய்ப்பைப் பெற்றதைப் பெருமையாகச் சொல்கிறார் கோவி. ஜெயராமன்.
இந்த வரலாற்று நூலை இப்படி முடிக்கிறார்.
“நான் பள்ளியில் முதல் மாணவனாகத் தேர்ச்சி அடைந்த போது ஓமந்தூரார் உயிரோடு இருந்திருந்தால் அவருடைய ஆசி எனக்குக் கூடுதலாகக் கிடைத்திருக்கும். அதன்வழியே என் வளர்ச்சி இன்னும் உயர்நிலை அடைந்திருக்க வாய்ப்பு ஏற்பட்டிருக்கும் என்ற நம்பிக்கை எனக்குள்ளே இன்றும் உள்ளது.”
முடிவாக….
இந்த நூலைப் படித்து முடிக்கும்போது, இன்றைய அரசியல்வாதிகள் மீது உங்களுக்குக் கோபம் ஏற்படலாம்.
…………………………………………………………………………..
நூல் : ஓமந்தூர் இராமசாமி ரெட்டியார் (முதல் முதல் அமைச்சர்)
நூல் :ஆசிரியர் : கோவி. ஜெயராமன்
வெளியீடு : பெண்ணைப் பதிப்பகம், 12, கல்லூரி ஆசிரியர் நகர், உண்ணாமுலைச் சாவடி, கோண்டூர் அஞ்சல், கடலூர் – 607006. விலை : ரூபாய் 70 பக்கங்கள் : 83
நூல் ஆசிரியர் அலைபேசி : 9442746411
குறிப்பு : நான் படிக்க விரும்பிய போது இந்த நூலைக் கொடுத்து உதவிய எழுத்தாளர் வளவ. துரையன் அவர்களுக்கு நன்றி.
- அந்தப் பார்வையின் அர்த்தம் !
- சைனா புதிய தனது விண்வெளி நிலையம் அமைக்க முதற் கட்ட அரங்கை ஏவி உள்ளது
- படித்தோம் சொல்கின்றோம்:
- ‘உயிரே” ………………
- சொல்வனம் 245 ஆம் இதழ் வெளியீடு அறிக்கை
- செவ்வாய்த் தளவூர்தி யிலிருந்து இயங்கிய காற்றாடி ஊர்தியின் முதல் வெற்றிப் பயணம்
- சிறுகதை வாசிப்பு லா.ச.ரா. – ஒரு நாயும் ஒரு மனிதனும்.
- இரண்டாவது அலை
- ஓமந்தூர் இராமசாமி ரெட்டியார் – (முதல் முதல் அமைச்சர்) -நூல் மதிப்பீடு
- கவிதையும் ரசனையும்
- புலரட்டும் புதுவாழ்வு
- ஜேம்ஸின் மலர்ச்சாலை
- யதார்த்தம்
- மீளுதல்…
- மீன்குஞ்சு
- நெஞ்சில் உரமுமின்றி
- அஞ்சலி- பதஞ்சலி- பாஞ்சாலி