பாவண்ணன் கண்ட பெங்களூரு, நான் கண்ட பாவண்ணன்

author
0 minutes, 2 seconds Read
This entry is part 1 of 15 in the series 16 மே 2021

ரவி ரத்தினசபாபதி

 

‘நாடா கொன்றோ, காடா கொன்றோ; அவலா கொன்றோ, மிசையா கொன்றோ; எவ்வழி நல்லவர் ஆடவர் அவ்வழி நல்லை; வாழிய நிலனே. ஔவையாரின் இந்த வரிகள்தாம் இந்த நூலைப் படித்து முடித்ததும் நினைவுக்கு வந்தன. மலையோ சமவெளியோ செழிப்பான இடமோ, சிறப்பான மனிதர்களால்தான் அந்த இடம் புகழடைகிறது. அவர்களின் பங்களிப்புகளே, பெங்களூரு போன்ற நகரங்கள் உருவாவதற்கும், மானுடம் உய்வதற்கும் உதவியாக இருந்திருக்கின்றன. பாவண்ணனின் விவரிப்புகள் அதனை உறுதிசெய்கின்றன.

 

நடை, நடை, நடை. இடைவிடாத நடையுலாக்களின் மூலம் பெங்களூருவை எத்தனை முறை அவர் சுற்றிப் பார்த்தாரோ? வேலைக்குச் சேர்ந்த நாட்களிலிருந்தே ஒரு வழக்கமான ஒன்றாக, அதைப் பழக்கப்படுத்திக் கொண்டுள்ளார். இந்த விவரிப்புகளை எழுத ஊற்றாக இருந்திருக்கின்றன. எவரிடமும் தயக்கமற்ற உரையாடலும், எதிரிலிருப்பவரின் தயக்கத்தை உடைக்கும் இனிமையான பேச்சும் அணுகுமுறையும் இதனைச் சாத்தியமாகியுள்ளன. ஏதோ ஓர் எதிர்காலத்தில் இதையெல்லாம் எழுத வேண்டும் என்று குறிப்புகள் ஏற்கனவே எழுதி வைத்திருந்தாரோ? இந்தச் சந்தேகம் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. இல்லை நினைவுகளின் அடுக்கிலிருந்து அவற்றை மீட்டெடுத்து எழுதியிருக்கிறார்; அப்படியெனில், அவருடைய அசாத்திய நினைவாற்றலை வியந்து பாராட்டுவதை தவிர வேறுவழியில்லை. அவருடன் பணி புரிந்தோரில் பலரும், பழக்கமானவர்களில் பெரும்பாலோரும், நண்பர்களில் அனைவருமே-அவர் புத்தகம் விற்பனை செய்பவராக இருக்கட்டும், அல்லது, கேஸட் விற்பவராக இருக்கட்டும், பூங்காவில் தற்செயலாக சந்தித்து உரையாடும் நபராக இருக்கட்டும்- அனைவருமே இலக்கியம் அறிந்தவர்களாக, நாடகம் குறித்துப் பேசுபவர்களாக, பெங்களூரின் வரலாற்றை அறிந்தவர்களாக, விவரங்களைத் தடையின்றி அள்ளித்தரும் தகவல் சுரங்கங்களாக இருக்கின்றனர். இதுவும் வியப்பிற்குரிய விஷயம்..

நூலில் அவர் அதிகம் பேசவில்லை. கேள்விகளை மட்டுமே கேட்கிறார். விவரிப்பதுமில்லை. அனைத்து விஷயங்களையும் தனது சகா மூலமோ, பழக்கமானவர் அல்லது நண்பரின் மூலமோ அதனைச் செய்கிறார். பலனாக பல்வேறு விஷயங்கள் பல்வேறு நபர்கள் மூலம் நமக்குக் கிடைக்கின்றன. மனிதர்களைப் பேச வைத்துவிட்டு பாவண்ணன் ஒதுங்கிவிடுகிறார். பெங்களூருவின் புகழ் பெற்ற கட்டிடங்கள், இடங்கள் ஆகியவற்றை விவரிக்கும் படைப்பாகத்தான் இருக்கும் என்ற எண்ணத்துடன் உள்ளே நுழைபவர்களுக்கு வியப்பு காத்திருக்கிறது. அந்த மாநகரத்தின் உயிர் எங்கிருக்கிறது, அதன் நாளங்களும் தசைகளும் எவை என்று கண்டறிந்து அறிமுகப்படுத்தும் ஆசிரியர் அவற்றோடு வரலாற்றையும் இணைத்தே வழங்குகிறார். மனிதர்களை, புகழ்பெற்ற மனிதர்களை, தன்னலமற்ற பங்களிப்பாளர்களைச் சந்திக்கும் அதேநேரத்தில், வரலாற்றுப் பக்கங்களிலும் நுழைந்து வெளி வருகிறோம். விவரிப்புகள் வெறும் சொற்கள் அல்ல. விவரிக்க எண்ணும் விஷயத்தை உணர்வோடு விவரிக்கிறார். ஏரியோ, கோவிலோ, கோட்டையோ, பூங்காவோ, மனிதர்களோ – அவர் பயன்படுத்தும் சொற்களும் எழுப்பும் உணர்வுகளும், அவற்றோடு நம்மையும் பின்னிப் பிணைக்கின்றன. பாவண்ணன்

 

ஒவ்வொன்றையும் எவ்வளவு உணர்வுப்பூர்வமாக அணுகியுள்ளார் என்பதை விளங்கிக் கொள்ள முடிகிறது. பெங்களூரு இன்றைக்கு எப்படி இருக்கிறது என்று ஓரளவு எல்லோருக்கும் தெரியும். ஆனால், பாவண்ணனின் அன்றைய பெங்களூரு, ஏரிகளால், திரும்பிய இடமெல்லாம் தம் கிளைகளால் வானத்தில் விதானமைத்து நிழல் சாலைகளை உருவாக்கிய மரங்கள் அடர்ந்த சாலைகளாக, மணம் மிகுந்த பூக்கள் பூத்துக் குலுங்கும் மரங்களின் வரிசைகள் நிரம்பிய சாலைகளாக, நாடகத்தையும் இலக்கியத்தையும் போற்றிப் பாதுகாத்த, மேலான ‘மனிதர்களால்’ நிரம்பிய மாநகரமாக இருந்திருக்கிறது. கப்பன் பார்க்கும், லால் பாக்கும் உருவான விதம் சுவாரஸ்யமாகச் சொல்லப்படுவது மட்டுமின்றி, அவற்றை முதன் முதலில் பார்த்தபோது எப்படி பசுஞ்சோலைகளாக, பறவைகளும் மயில்களும் விளையாடும் இடங்களாக இருந்தன என்பதையும் விவரிக்கிறார். ஹெச்.எம்.டி. நிறுவனம் உருவாக்கிய பூங்காக் கடிகாரம். வாழ்க்கையே கருணையும் குரூரம் நிறைந்ததாக இருக்கும்போது, இயற்கையில் நில அமைப்பு பாறையும் பசும் சோலைகளுமாக அமைந்திருந்தால் என்ன?

 

பெங்களூருவை உருவாக்கி அமைத்த கெம்பேகௌடா அதன் நான்கு புறங்களிலும் அமைத்திருந்த கோபுரங்களைத் தேடிக் கண்டடைவது ஒரு சுவாரஸ்யமான விவரிப்பு. கூடவே துறைசார்ந்த பணியின் முக்கியத்துவத்தையும், அதிலிருந்த சிரமத்தையும் தொட்டுக்காட்டிவிடுகிறார். பணியில் அவர் எவ்வளவு அர்ப்பணிப்புடன் இருந்தார் என்பதை ஆங்காங்கே தூவப்படும் சில வரிகளில் நாம் உணர்ந்துகொள்ள முடிகிறது. கோபுரங்களை தேடுவதில் அவருக்கு வழிகாட்டி, ஷங்கரப்பா என்ற துறைசார்ந்த சகா. அவரது ஊரான வளவனூர் ஏரியை நினைவூட்டும் அல்சூர் ஏரியில் படகுச்சவாரி செய்யும் இளைஞன் ஒருவன் கரையில் நடக்கும் இளம் பெண்ணொருத்தியைப் பார்த்து, ‘ஏரிக்கரை மேலே போறவளே பெண் மயிலே’ என்று பாடியதை ஞாபகம் வைத்து பதியும்போது இளைஞர் பாவண்ணன் நம் கண்முன் வருகிறார். அந்த இளைஞனின் உடை ஆகாய வண்ணம் என்று கூறும்போது ஆச்சரியமாக இருக்கிறது. வாழ்க்கைக்கு வழிதேடி வந்த மக்கள், தங்களோடு ஜலதுர்கையையும் கொண்டுவந்திருக்கலாம் என்ற செய்தி, சிறுதெய்வ வழிபாடு செய்வோரிடம் காணப்படும் மரபை, அதாவது தங்களுடன் தங்களது தெய்வத்தையும் அவர்கள் அழைத்துச் செல்வார்கள் என்ற செய்தியுடன் ஒத்துப்போகிறது. பச்சை மரங்களின் நிழல் நீரில், காதில் தொங்கும் குண்டலங்களாகக் காட்சியளித்தன. ’அக்கா குயிலை’ கண்டுபிடித்ததும் அவர் மட்டுமல்ல நாமும் அதைப் பார்த்து பரவசம் அடைகிறோம். தந்தை மீதிருக்கும் அழியா பாசத்தால், அவர் இறந்த பிறகும் அவர் நினைவு வரும்போதெல்லாம் தந்தை வாட்ச்மேனாக நின்றிருந்த இடத்தை நாள் முழுதும் பார்த்துக் கொண்டிருந்துவிட்டு வீடு திரும்பும் அய்யாசாமியின் வழியாக மெட்ராஸ் எஞ்சினியர்ஸ் குரூப் 1834ல் பெங்களூர் வந்ததும் அதன் வரலாறும் பதிவாகிறது. இந்தப் பகுதியை மராத்தியர்களிடமிருந்தும் பிரெஞ்சுக்காரர்களிடமிருந்தும் பாதுகாக்க இந்தியாவிலேயே மிகப்பெரிய இராணுவப் பிரிவான மெட்ராஸ் இராணுவத்திலிருந்து எம்.இ.ஜி. இங்கு வருகிறது.

 

அய்யாசாமிக்குத் தேநீர் மீது மட்டும் ரசனை இல்லை. வரலாற்றையும் சஸ்பென்ஸோடு சுவையாகக் சொல்லுகிறார்: மர்பி டவுன், பேகம் மஹால். மிகப் பெரும் பணக்காரியான பேகம், உழைக்கும் மக்கள் அவளது பங்களாவுக்கு வெளியில் பிழைப்பிற்காக ஏதோ வேலை செய்துகொண்டும், இரவு நேரத்தில் அங்கேயே நடைபாதையில் தங்கிவிடுவதையும் இரக்க மனதுடன் அனுமதிக்கிறார்; காரை விட்டு இறங்கி வீட்டிற்குள் வரும்போது, அவர்களுடன் ஓரிரு வார்த்தைகள் பேசிவிட்டுத்தான் உள்ளே செல்வார்; கணவர் மேல் கோபத்துடன் திடீரென்று ஒருநாள் சொல்லிக்கொள்ளாமல் பேகம் மறைந்துபோனதும் அதன்பிறகு சில நாட்கள் கழித்து கணவனும் சென்றபிறகு அந்த இடம் மனித நடமாட்டமற்ற தோட்டமாக மாறியதும் ஒரு துயரக் கதை. ’மொத்த பெங்களூரையும் மூத்தவர்களுக்கு எழுதி வச்ச கடவுள் எம்.ஜி.ரோட்ட மட்டும் இளமைக்கு எழுதிவைத்துவிட்டான்’ என்று எம்.ஜி.ரோடின் அழகும் வரலாறும் ராம்தேவ் என்பவர் மூலம் விவரிக்கப்படுகிறது.

ஜேசுதாசன் என்ற நண்பர் வின்ஸ்டன் சர்ச்சில் பிரே பண்ணின சர்ச்சிற்கு நம்மை அழைத்துச்செல்கிறார். உலகத்தில் உள்ள அனைவரையும் தழுவிக்கொள்ளக் கைவிரித்து நிற்பதுபோல் நின்றிருக்கும் சிலுவை. என்ன ஒரு கற்பனை. கிறித்துவ காருண்யத்தின் சாட்சி. தஞ்சாவூரைச் சேர்ந்த அனந்தராவ் மைசூர் சமஸ்தானத்தில் வேலை பார்க்கும் போது பம்பாயில் வேலை பார்த்த விஸ்வேஸ்வரய்யா என்ற எஞ்சினியரை அழைத்துவந்து சிவசமுத்திரம் அணைக்கட்டைக் கட்டியவர் என்ற வரலாற்றுத் தகவலைச் சொல்லும் பல்ராம், பீடாவை ஒரு தங்க நாணயத்தைப் போல் அதை வாங்கி வாயில் வைத்துக்கொள்கிறார்; அவர் முகத்தில் பரவும் பரவசமும் ஆனந்தமும். அவரது நாவலொன்றில், வெற்றிலை பாக்கு போட்டுக்கொண்டு, அந்த கலவை ஒன்று

 

சேர்ந்து சுவை உச்சம் கொள்வதை ’மேளம் கட்டுதல்’ என்று தி.ஜானகி ராமன் குறிப்பிட்டிருப்பது எனக்கு நினைவுக்கு வந்தது. தியேட்டர் திறப்புவிழாவிற்கு மொரார்ஜி தேசாய் வருகை; இந்திப் படம் காட்டியதால் தகராறு. சப்தம் போடாமல் காரில் திரும்பிவிடுகிறார் தேசாய். இன்றைக்குத் தமிழ், அன்றைக்கு இந்தியோ எனத் தோன்றுகிறது. அந்த அத்தியாயத்தில் அன்னம்மா தேவியைப் பற்றி எழுதும் பாவண்ணன் இன்றைக்குக் காணாமல் போய்விட்ட ’ஆகாயக் கூரைக்கு அப்பால் நிறைந்து ததும்பும் ஏரியையும், காற்றிலசையும் வயல் வெளிகளையும்’ பதிவிட்டு நினைவேக்கத்தை உண்டாக்குகிறார். விமான விபத்தொன்றையும், அதனையொட்டிய அவலக் குரல்களைக் குறிப்பிடும் பெருமாள் என்பவர் வழியாக நம்பிக்கையூட்டும் நிகழ்வுகள் பதிவாகின்றன. ’கோவிந்தம்மாள் பெண்கள் பள்ளி 1886’, அதற்கு முன்பே தோன்றிய ‘திருக்குலத்தார் பள்ளி 1883’. முதலாவது பெண்களுக்கென்ற உருவான தனிப் பள்ளி. இரண்டாவது தாழ்த்தப்பட்டவர்க்கானது. மற்றவர்கள் படிக்கும் பள்ளிகளில் அவர்களுக்கு அனுமதியில்லை என்பதால், திவான்பகதூர் ஆர்க்காடு நாராயணசாமி முதலியார் என்பவர் தோற்றுவித்தது. பெருமாள், ’படிப்புங்கறது பெரிய வரம். சாதி என்கிற தகுதியக் கடந்து வேற ஒரு தகுதியைக் கொடுக்குது. அந்த வரத்தைக் கொடுத்தது இந்த பள்ளிக்கூடங்கள் தான்’ என்று பேசும் சொற்கள் பாவண்ணனுக்குள் உலவும் காந்தியையும் சமத்துவ மனப்பான்மையையும் வெளிப்படுத்துகின்றன. பஞ்சம் ஒன்றின்போது, மைசூர் பெங்களூரு ரயில்வே பாதையை போடவைத்து, மூன்று ஆண்டுகள் பஞ்சத்திலிருந்து மக்களைக் காத்தவர் நாராயணசாமி முதலியார் என்ற வரலாறும் இங்கு பதிவாகிறது. பாட்டீல் என்பவர் மூலம் விவேகானந்தரின் பெங்களூரு வருகை; கோவிந்தராஜன் என்பவர் வழியாக இறந்துபோன முன்னோர்களுக்கு வழிபாடு செய்யும் மயான கொள்ளை (கிறித்துவர்களின் கல்லறைத் திருவிழா?); பணிராஜ ஹெக்டே வழியாகக் கன்னடத்தின் மிகப் பெரும் கலைச்செல்வமான யட்சகானம் நமக்கு விவரிக்கப்படுகிறது. யட்ச கானத்தில் தெங்கு திட்டு படகு திட்டு என்று இரண்டு வகை இருக்கிறது. நாடகமாக இருந்தாலும், அல்லது இதைப்போன்ற கலைவடிவங்களும் பெருமளவிற்கு மக்களால் விரும்பிப் பார்க்கப்பட்டன; காசு கொடுத்து யட்ச கானத்தைப் பார்ப்பதற்குக் கூட்டம் அலைமோதியது என்றும் பதிவு செய்கிறார்.

 

திகளர்கள் என்ற சமூகத்தினர் மகாபாரதத்துடன் ஏதோ வகையில் தொடர்பு கொண்டவர்களாக இருந்தனர் என்பதைக் குறிப்பிடும் ஆசிரியர், திரௌபதை சிலையின் தலையில் அனல் வடிவ மகுடத்தைக் கண்டதாக எழுதுகிறார். அனலில் பிறந்தவள்தானே அவள். வாழ்வில் கைதூக்கி விட்டவரின் நினைவு நாளன்று ஆண்டுதோறும் அவருக்கு மாலை சார்த்திவரும் ரங்கசாமி, சீனா மணியைப் பற்றி விவரிக்கிறார். சென்னை செயிண்ட் தாமஸ் மவுண்டிலிருந்து கொண்டுவரப்பட்டது என்று அதன் ரிஷிமூலத்தையும் அவரே சொல்கிறார். மெத்தப் படித்து, வேலையையும் விட்டு புத்தக் கடை நடத்தும் குல்கர்னியை அறிமுகம் செய்யும் ஆசிரியர், மகனுக்கு நல்ல புத்தகங்களையும் ஆர்.கே.நாராயணனையும் காட்டித் தந்த ஷான் பாக் பற்றி எழுதுகிறார்.

மனைவி மேடையில் மாரடைப்பால் இறந்துபோனது அறிந்தும் நாடகத்தைத் தொடர்ந்து நடத்தி முடித்தவர் குப்பி வீரண்ணா போன்றவர்களால் சினிமாவை விட நாடகம் பிரபலமாக இருந்தது; புகழ்பெற்ற கலைஞர்கள் ராஜ்குமார், பாலகிருஷ்ணா, ஜி.வி அய்யர், பி.வி.காரந்த் ஆகியோர் அவரது நிறுவனத்திலிருந்து வந்தவர்கள் என்ற வரலாற்றைச் சொல்கிறார் ஜி.என்.எல்.ராவ். நவீன பெங்களூருவை உருவாக்கி, அதற்கு மின்சாரத்தைக் கொண்டுவந்த சேஷாத்ரி என்ற தமிழர் தான் மேட்டூர் அணை கட்டுவதற்கும் அங்கிருந்து மின் வசதி ஏற்பாடு செய்தார் என்ற வரலாறு பல்ராம் மூலம் வெளிவருகிறது. காந்தியர் ரங்காராவ் அலுவலக ஊழியர் ராதா பாய் மூலமாக அறிமுகமாகிறார். தாழ்த்தப்பட்டோரும் நீர் எடுக்கும் வகையில் வெட்டப்பட்டு காந்தி வந்து நீரருந்திய கிணறு, தூர்ந்து கிடப்பதைப் பார்த்து, பாவண்ணனைப் போலவே நாமும் வருந்துகிறோம். அரசாங்க வேலை என்பது கடவுளின் வேலை என்ற சொற்கள் (மக்கள் சேவை மகேசன் சேவை) பொறிக்கப்பட்டிருக்கும் விதான் சௌதாவை கட்டுவதற்கு 5000 சிறைக்கைதிகள் பயன்பட்டனர். திறப்பு விழா அன்று அனைவருக்கும் விடுதலை செய்யப்பட்டனர் என்ற தகவலோடு அதனை உருவாக்கியவர் மாணிக்கம் என்ற தமிழர். என்று விவரிக்கிறார் பிரசாத். சென்னையில் தடுக்கிவிழுந்தால் தெலுங்கு பேசும் மக்கள் போல், பெங்களூருவில் தமிழ் பேசுவோர். பெங்களூரூவின் வரலாற்றுப் பக்கங்களில் தமிழர்களின் பங்களிப்பைப் பேசும் பக்கங்கள் நிச்சயம் அதிகம். சென்பக தெருவை மஞ்சுநாத் என்பவர் மூலம் அறிந்துகொள்ளும் நாம், இன்று அந்த இடம் மரங்களுடன் இருக்குமா, கட்டிடங்களாக மாறியிருக்குமா என்று யோசிக்க தொடங்கிவிடுகிறோம்.

 

பெங்களூருவின் சில கோவில்கள் பற்றிப் பேசும் சௌரிராஜன், அவை சோழர்களால் கட்டப்பட்டிருக்கலாம்; ஒரு நூற்றைம்பது ஆண்டுகள் இந்த வட்டாரம் சோழர்களின் ஆட்சியில் இருந்திருக்கலாம் என்கிறார். சண்முகசுந்தரத்தோடு சென்ற நூலகங்கள், ஜிகேராமசாமியோடு பார்த்த நாடகங்கள், ராமகிருஷ்ணனோடு வேர்க்கடலைத் திருவிழா.

அல்லா பக்‌ஷின் குஜிரி மார்க்கெட், நம்ம சென்னையின் புதுப்பேட்டையை நினைவூட்டுகிறது. ரேவண்ணாவின் புத்தகக்கடை காதர்பாயின் பூர்வீகம் நம்மை எங்கோ இழுத்துச் செல்கிறது. அந்தச் சூழல் விவரிக்கப்படும்போது சூழலோடு ஒன்றிப்போய் அந்தக் காலத்திற்கே நாமும் சென்றுவிடுவது எழுத்தின் வெற்றி. ஹிந்திப் பாடல்கள், சினிமா. பெங்களூரைக் காப்பதற்கு ஹஸ்ரத் ஹமீத்ஷா, ஹஸ்ரத் முகீப்ஷா என்ற இரு சூஃபிகள் சண்டையிட்டு இறந்துபோன வரலாற்றை நாஸர் என்பவர் கூறுகிறார். அவர்களது தர்க்காவிற்குச் செல்லும் ஆசிரியர், மறையவிருக்கும் சூரியனின் சிவந்த வட்டத்தையும், ரத்தக் குளமென அடிவானம் சிவந்து தளும்பியதையும் காட்சிப்படுத்தும் போது, அந்த வீரர்களின் தியாகம் இன்னும் சிறப்பாக நமக்குள் பதிகிறது. உச்சக்கட்டமாக கிட்டெல் என்ற ஜெர்மானிய மத போதகர் கன்னட மொழிக்கு ஆற்றிய சேவை – அவர் உருவாக்கிய கிட்டெல் அகராதி மூலம் பதிவாகிறது. திரு.பல்ராம் இதனை விவரிக்கிறார். நமக்கு உடனே வீரமாமுனிவரும் கால்டுவெல்லும் நினைவுக்கு வரலாம். சௌரஸ்யாவின் புல்லாங்குழல், பெங்களூருவில் பணி புரிந்த மேயோ, அந்தமானில் சிறைச்சாலை வாசலில் கொலை செய்யப்பட்டது, காந்தியரான தனது அப்பாவின் குரலைக் கேட்க ஜெயிலுக்கு வருகை தரும் சதாசிவராவ் என்று பெங்களூரூ நகரின் அன்றைய ஆன்மாவை பாவண்ணன் பதிவு செய்கிறார். பறவைகள் பறந்தன என்று ஒற்றை வரியால் சொல்லிப்போகலாம். ஆனால், ஒவ்வொரு பறவையின் பெயரையும் குறிப்பிடுகிறார். வெறுமனே மரங்கள் அடர்ந்த சாலை என்று அவர் எழுதவில்லை; எந்தெந்த மரங்கள் அந்தச்சாலையில் இருந்தன என விவரிக்கிறார். கேட்கும் பாடல்கள், பார்க்கும் நாடகங்கள் எனும்போதும் விசாலமான அவரது புரிதல் அழகாகப் பதிவு செய்யப்படுகிறது.

 

எதிர்வினையாற்றாத தமிழ்ச்சூழலை ஓரிடத்தில் வருத்தத்துடன் அவர் பதிவு செய்கிறார், கிரீஷ் கர்னாடின் தலெதெண்ட தமிழில் பலிபீடம் என்ற பெயரில் மொழிபெயர்க்கப்படுகிறது. பல முறை போடப்பட்ட நாடகம் அது. எந்தக் குழுவாவது இதை மேடையேற்ற அணுகியிருக்கிறார்களா? என்ற கர்னாடின் கேள்விக்கு, இனிமேல் அணுகலாம் என்ற பதிலைத் தருகிறார். ஆனால் ‘நான் எதிர்பார்த்த எந்த எதிர்வினையும் தமிழ்ச்சூழலில் எழவில்லை’ என்ற பதிவு நாடகத்திற்கு மட்டும் தானா என்ற கேள்வியை நமக்குள் எழுப்புகிறது.

கர்நாடக மண்ணிற்குச் சொந்தமான ஒருவர் எவ்வளவு உணர்வோடு எழுதுவாரோ அப்படித்தான் இந்த நூலை பாவண்ணன் எழுதியுள்ளார். ’யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற வரிகளுக்கான எடுத்துக்காட்டு. இங்கு வாழும் ஒரு கன்னடர் சென்னை பற்றியோ அல்லது வேறு எந்தவொரு தமிழ் நகரம் பற்றியும் இப்படி ஒரு பதிவை எழுதியிருக்கிறாரா? எழுதுவாரா? சில ஆங்கிலச் சொற்களுக்கு நல்ல தமிழ்ப் பெயர்களை, எளிதாக, என்னவென்று புரிந்து கொள்ளும் வண்ணம் பாவண்ணன் தந்திருக்கிறார். கரித்தாள்-கார்பன் பேப்பர், இலக்குப் பலகை- டார்கெட் போர்ட். மற்றொரு அழகான சொல், சொல்வைப்புமுறை. மனைவியின் அனுசரணையையும் இப்பணிக்கெல்லாம் அவர் பின்புலமாக இருந்ததையும் மறைவாகச் சுட்டும் ஆசிரியர், மகனின் வளர்ச்சியையும் அழகாகச் சொல்லிவிடுகிறார். நூலின் தொடக்கத்தில் கையைப் பிடித்து நடக்கும் மயன், ஓரிடத்தில் கெம்பேகௌடா கட்டிய கோட்டையின் கதையைச் சொல்லுமளவிற்கு வளர்ந்து விடுகிறார். நாமும் அந்தக் கால பெங்களூருவிற்குச் சென்று வந்துவிடுகிறோம். நன்றி, பாவண்ணன் சார். (சந்தியா பதிப்பக வெளியீடு; பக்கங்கள் 296; விலை ரூ.300; 04424896979)

Series Navigationஉங்களைக் காத்துக்கொள்ள எளிய வழிமுறைகள் – கரோனா சமூகத் தொற்றாக மாறிவிட்டது
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *