இல்லத்தரசி – உருது மூலம் –இஸ்மத் சுக்தாய்

author
0 minutes, 3 seconds Read
This entry is part 10 of 13 in the series 13 ஜூன் 2021

தமிழில்- பென்னேசன்


புதிய வேலைக்காரியாக மீர்ஸாவின் வீட்டில் லாஜ்ஜோ நுழைந்ததும் அந்த தெருவே அமளி துமளிப் பட்டது.    துடைப்பத்தை வெறுமனே நான்கைந்து முறை அப்படியும் இப்படியும் அதுவரை ஆட்டிக் கதை பண்ணிக் கொண்டிருந்த தெருக்கூட்டுபவன் எப்போதும் இல்லாதபடி மீண்டும் மீண்டும் அழுத்தி அழுத்தித் தேய்த்து தரையை சுத்தமாக்கிக் கொண்டிருந்தான்.   வழக்கமாக  தண்ணீரைக் கூட்டி கழுநீர் போல வீடுகளுக்கு பால் ஊற்றிக் கொண்டிருந்த பால்காரன் கூட இப்போது  நுரை தளும்பிய கெட்டியான பாலை அந்த வீட்டுக்கு ஊற்றத் தொடங்கினான்.

நாணம் கொண்டவள் என்ற அர்த்தத்தில் “லாஜ்ஜோ” என்று அவளுக்கு யார் பெயரிட்டது என்று தெரியவில்லை.  லஜ்ஜை,  கூச்சம் போன்ற வார்த்தைகளுக்கு அவளுடைய உலகில் எப்போதும் இடம் கிடையாது.   யாருக்கு பிறந்து  எப்படி தெருவுக்கு வந்தாள்  என்பது அந்த ஊரில் யாருக்கும் தெரியாது.  அடுத்தவர்கள் வீசி எறியும் மிச்சத்தில் உடலையும் வயதையும் வளர்த்த  அவள் இப்போது அடுத்தவர்களிடம் இருந்து அனைத்தையும் பிடுங்கி தன்னுடைய வயிற்றை நிரப்பும்  நிலைமைக்கு   வளர்ந்து இருந்தாள்.     விலைமதிக்க முடியாத சொத்தாக திரேகம்  ஒன்றே   என்று அவளுக்கு அமைந்தது.     நாளடைவில் தன் வயதையொத்த விடலைகளிடம் வாழ்க்கையின் அனைத்து  ரகசியங்கள் பற்றிய அறிவை முற்றாக வளர்த்துக கொண்டு  கடிவாளமற்ற பெண் குதிரையாக   ஊரில் அலைந்து திரிந்தாள்.

தொழில் சார்ந்த கொள்கை பொறுத்தவரை எந்த  தடுமாற்றமோ, சச்சரவோ என்றும் அவளிடம் இருந்தது இல்லை.  ரொக்கமாக யாராவது கொடுத்தால் பிரமாதம்.  இல்லை என்றால் கடனுக்கு உடலுறவு.  யாருக்காவது கடனாகவும் கொடுக்க முடியவில்லை என்றாலும் தருமத்துக்கு  தரவும் ஆயத்தமாக இருந்தாள்.  

“ஏண்டீ, உனக்கு வெட்கமாக இல்லையா?”

            “இருக்கே” என்று கன்னம் சிவக்க வெட்கத்துடன் பதிலளித்து விட்டு ஓடிவிடுவாள்.

            “என்றாவது ஒருநாள்  விரலை சுட்டுக் கொள்ளப் போகிறாய்…”

லாஜ்ஜோ எதையும் லட்சியப்படுத்த மாட்டாள்.  இனிப்போ கசப்போ எதையும் ஒரே மாதிரி பாவிப்பாள்.  கருகருவென்ற விழிகளுடன், குட்டியாக வெளுப்பான பல்வரிசையுடன், வெளுத்த நிறத்தில் முற்றிலும் அப்பாவியாக காட்சியளிப்பாள். மதர்த்து  நிற்கும்  இளமையை அவளிடம் காண்பவர்களை  பல நேரங்களில் செயலிழக்க வைத்தாள்.

மீர்ஸா திருமணம் செய்து கொள்ளாமல் ஒண்டிக்கட்டையாக இருந்தான்.   ரொட்டிக்கு மாவு பிசைவது, இடுவது போன்ற அன்றாட வேலைகள்   வாழ்க்கையை அவனுக்கு நரகமாக்கி வந்தது.   பஜாரில்  சிறிய அளவில் மளிகை பொருட்களை விற்கும் கடையை வைத்து இருந்தான்.   அதை      “ஜெனரல் ஸ்டோர்ஸ்” என்று பகட்டாக பெயரிட்டு அழைத்து வந்தான்.   வீட்டில் அதிக நேரம் செலவிட முடியாமலும் நிக்காஹ் செய்து கொள்ள முடியாத படியும்   கடை அவனை மிகவும் பரபரப்பாக வைத்திருந்தது.  சில நேரங்களில்   வியாபாரம் அவனை முற்றிலும் திவால் ஆக்குவது போல  படு மந்தமாக இருக்கும்.  சில நேரங்களில் மொய்த்துத் தள்ளும் வாடிக்கையாளர்களின் கூட்டம் எந்த வகையிலும் அவனுக்கு ஓய்வு அளிக்காத வகையில் அமைந்து இருக்கும்.

மீர்ஸாவின் நண்பன் பக்ஸி,  பேருந்து நிலையம் ஒன்றில் இருந்து லாஜ்ஜோவை அழைத்து வந்தான்.  அவனுடைய மனைவி பேறுகாலத்தில் இருந்தாள்.  வீட்டில்   வேலைக்காரிக்கான தேவை முற்றிலும் அவசியமாக இருந்தது.      மனைவிக்கு குழந்தை பிறந்த உடனே லாஜ்ஜோ வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டாள்.  ஆனால் அவள் அதை பொருட்படுத்தவில்லை.  இது போல பல  வீடுகளில் பலமுறை அடித்து உதைத்து துரத்துவது  ஏற்கனவே அவளுக்கு பழகி இருந்தது.  இருந்தாலும் பக்ஸி அவள் மீது தணியாத மோகம் கொண்டிருந்தான்.  ஆனால் திடீரென்று வெளிநாடு ஒன்றில் அவனுக்கு வேலை கிடைத்தது. தான் வெளிநாட்டுக்கு போகும் போது இவளை ஏன் நண்பன்  மீர்ஸாவுக்கு   பரிசாக அளிக்கக் கூடாது என்று யோசித்தான்.  மீர்ஸா வேசிகளிடம் அடிக்கடி செல்வதால் நிறைய பணத்தை இழந்து கொண்டிருக்கிறான்.  இலவசமாக கிடைக்கும் இந்த விருந்தை அவனுக்கு ஏன் நட்புக்கு பரிசாக அளித்து விட்டு வெளிநாடு செல்லக் கூடாது என்று நினைத்தான்.

“லா ஹாலா வலா குவ்வத்…. முறை தவறிப் பிறந்த பெண்ணை   வீட்டில்  எல்லாம் வைத்துக் கொள்ள முடியாது” என்று மிகவும் பதட்டத்துடன் பதிலளித்தான்  மீர்ஸா.

“அட விடுப்பா… வீட்டில் சின்னச் சின்ன வேலைகளை அவள் செய்வாள்” என்று அவனை சம்மதிக்க வைக்க முயற்சித்தான் பக்ஸி.

“வேண்டாம்பா… அவளை என் தலையில்  கட்டாதே.  நீ ஏன் அவளை உன்னோடு வெளிநாட்டுக்கு  அழைத்துப் போகக் கூடாது?

“பயணச்சீட்டு எனக்கு மட்டும் தான் கொடுத்து இருக்கிறார்கள்.  முழு குடும்பத்துக்கும் இல்லை” என்றான் பக்சி.

ஆனால் லாஜ்ஜோ ஏற்கனவே மீர்ஸா வீட்டின் சமையலறை மீது படையெடுத்து விட்டாள்.  பாவாடையை வரிந்து சுருட்டிக் கட்டி பரபரவென்று வேலைகளை தொடங்கி விட்டாள்.   மூங்கில் கழியொன்றில் துடைப்பத்தை இறுக்கக் கட்டி வீடெல்லாம் சுற்றிச் சுற்றி சுத்தம் செய்து கொண்டிருந்தாள்.  மீர்ஸா அவளை வேண்டாம் என்றது பற்றி பக்ஸி அவளிடம் கூறியபோது அவள் அதை லட்சியப்படுத்த வில்லை.  பாத்திரங்களை எல்லாம் சமையலறை மாடத்தில் அடுக்கி வைக்குமாறு அவனிடம் சொல்லி விட்டு வெளியில் குழாயில் தண்ணீர் பிடித்து வருவதற்கு பாத்திரத்தை எடுத்துச்சென்றாள்.

“மீர்ஸா உன்னை வேண்டாம் என்கிறான்.   வேண்டும் என்றால் மீண்டும் என் வீட்டுக்கு  உன்னை அழைத்துப்போய் விடுகிறேன்” என்று பக்ஸி அவளிடம் சொன்னான்.

“நீ என்ன என் புருஷனா?  ஏதோ என்னை புகுந்த வீட்டுக்கு கொண்டு விடுவது போல சொல்கிறாயே?  நீ போய்த்தொலை.  நான்  பார்த்துக் கொள்கிறேன்”

கோபத்தின் உச்சிக்குப் போன பக்ஸி அவளை ஏறுமாறாகத் திட்டத் தொடங்கினான்.    உன்னைப் போன்ற கேடு கெட்ட ஜென்மத்தை தலையில் தூக்கி வைத்துக் கொண்டது என்னோட தவறுதான்” என்றும் கூச்சலிட்டான்.

அதற்கு   லாஜ்ஜோ வாயில் இருந்து கன்னாபின்னாவென்று மிகவும் மோசமான வசவுகள் வெடித்துச் சிதறின.  பக்ஸி எதுவும் பேசாது திகைத்து நின்றான்.

லாஜ்ஜோவை தன் தலையில் கட்டி விட்டு பக்ஸி வெளிநாட்டுக்கு கிளம்பிச் சென்றது மீர்ஸாவின் துயரத்தை இன்னும் அதிகமாக்கியது.  வீட்டுக்கு அருகில் இருந்த மசூதி ஒன்றில் மாலை வேளைகளில் தஞ்சம் அடைந்தான்.  இனி அதிகரிக்கப் போகும் செலவு பற்றி மிகவும் கவலை கொண்டான்.    அவன் அறிந்த வரை அவள் ஒரு களவாணி.  இனி வீட்டில் என்னவெல்லாம் களவு போகப் போகிறதோ என்ற கலக்கத்தில் ஆழ்ந்தான்.

மாலை நேரத் தொழுகையை முடித்து வீட்டுக்குத் திரும்பிய மீர்ஸா ஒரு கணம் அப்படியே ஸ்தம்பித்து நின்றான்.  ஒருவேளை மரித்துப் போன தன் அம்மி தான் திரும்பி வந்து விட்டாளோ என்று நினைக்கும் அளவு வீட்டில் மண் பாண்டங்கள், தேய்த்து வைக்கப்பட்ட இரும்பு வாணலி, லாந்தர் விளக்கு என்று எல்லாம் புதிது போல பளபளவென்று தேய்த்துக் கழுவி முறையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தது.

“மியான், உங்களுக்கு சாப்பாடு எடுத்து வரட்டுமா?”

“சாப்பாடா?

“தயாரா இருக்கு.  உட்காருங்க.  சூடாக ரொட்டி கொண்டு வர்றேன்” என்று அவனுடைய பதிலுக்கு காத்திராமல் பரபரவென்று சமையலறைக்குப் போனாள் லாஜ்ஜோ.

கீரையை மசித்து வேகவைத்த உருளைக்கிழங்குடன் சப்ஜி,  கடுகு, சீரகம் தாளித்த பயித்தம்பருப்பு தால் –  அம்மி செய்தது போல அதே சுவையில்…. அவனுக்கு தொண்டை அடைத்துக் கொண்டது.

“இந்த கீரை, பருப்பு எல்லாம் வாங்க உனக்கு எங்கிருந்து பணம் கிடைத்தது?”

“லாலாவிடம் கடனுக்கு வாங்கினேன்”

“பணத்தை திருப்பிக் கொடுத்து விடுகிறேன்”

“பணத்தையா?  திருப்பியா?”

“ஆமாம்.  என்னால் சம்பளம் கொடுத்து வேலைக்காரி எல்லாம் வைத்துக் கொள்ள முடியாது”.

“யாருக்கு சம்பளம் வேண்டும்”

“ஆனால்…”

“சாப்பாடு அத்தனை சூடாக இல்லை தானே? என்று கூறிக்கொண்டே சமையலறையை நோக்கி நழுவிச்சென்றாள் லாஜ்ஜோ.  ஏதோ எல்லாம் ஒரேயடியாக  தீர்மானத்துக்கு வந்தது போலத் தோன்றியது.  ரொட்டி, சப்ஜி, எல்லாமே நல்ல சூடாக இருந்தது என்று அவளிடம் சொல்ல வேண்டும் என்று நினைத்தான் மீர்ஸா.  ஆனால் லாஜ்ஜோ மேலும் சூடான ரொட்டிகளை கொண்டு வருவதற்காக பரபரப்புடன் சமையலறைக்கும் கூடத்துக்குமாக நடந்து கொண்டிருந்தாள்.  யாரோ சமையலறையில் அவளுக்கு உதவிக்கு இருப்பது போல எல்லாமே மிகவும் வேகமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. 

“சரி… சரி… எல்லாவற்றையும் காலையில் பார்த்துக் கொள்ளலாம் என்பது போல மீர்ஸா தனது அறைக்கு படுக்கச் சென்றான்.  வாழ்க்கையில் முதன் முறையாக ஒரே கூரையின் கீழ் ஒரு பெண்ணுடன் இரவைக் கழிப்பது அவனுக்கு முதல் அனுபவமாகவும் முற்றிலும் விசித்திரமாகவும்    இருப்பது போல அவனுக்குத் தோன்றியது.  மிகவும் களைப்பாக இருந்ததால் சீக்கிரம் தூங்கியும் போனான்.

காலை விடிந்ததும் மீர்ஸா  அவள் எப்போது வீட்டை விட்டுப் போகப்போகிறாள் என்ற கேள்வியை எழுப்பிய போது, “இல்லை மியான்….  நான் இங்கேதான் தங்கப் போகிறேன்”, என்று அறிவித்தாள் லாஜ்ஜோ.

“ஆனால்…”

“என் சமையல் பிடிக்கவில்லையா?

            “அப்படி இல்லை…”

“வீட்டை நான் சுத்தமாக வைத்துக் கொள்ளவில்லையா?”

“அப்படி எல்லாம் இல்லை.  ரொம்பவும் சுத்தமாகவே வைத்திருக்கிறாய்…”

“அப்புறம் என்ன பிரச்சினை? என்று லாஜ்ஜோ சீறினாள்.

லாஜ்ஜோவைப் பொறுத்தவரை இது கண்டதும் காதல் விவகாரம்.  அவள் மிகவும் காதல் வயப்பட்டிருந்தாள்.  மீர்ஸா மீது அல்ல – அந்த வீட்டின் மீது.  தனக்கு மேல் வீட்டு எஜமானி என்று யாரும் இல்லாமல் இந்த வீடு தன்  சொந்த வீடு மாதிரி  இருந்தது.    ஆணுக்கு வீடு எப்போதும் சொந்தமானது அல்ல.   அதிகபட்சமாக  வீட்டின் விருந்தாளி தான் அவன்.  அந்த வேசிமகன் பக்ஸி சரியான ஊசிப்போன கஞ்சி போல இருந்தான்.  முன்பு எருமையை கட்டி வைத்திருந்த சிறிய அறையை அவளுக்கு தன் வீட்டில்  ஒதுக்கியிருந்தான்.  பல நாட்களுக்கு முன்பு அந்த எருமை இறந்திருந்தது.  ஆனால் ஒருவகையான கெட்ட வாடையை அந்த அறை முழுதும் பரவி வைத்திருந்தது.  விஷவாயுவைப் போன்ற அந்த கெட்ட வீச்சம் லாஜ்ஜோவின் மூச்சிலும் ரத்தத்திலும் கலக்கத் தொடங்கி இருந்தது.  இவை எல்லாவற்றையும் மீறி பக்ஸி எப்போதும்  அவளை எதற்கு எடுத்தாலும் கடித்துக் குதறிக் கொண்டிருந்தான்.

இங்கு மீர்ஸா வீட்டில், அவளே அரசியாக இருந்தாள்.  மீர்ஸாவை முதன்முறையாக சந்தித்தபோதே அவன் மிகவும் எளிமையானவன் என்பதை கண்டறிந்தாள்.    ஒரு விருந்தாளியைப் போல தயங்கித் தயங்கி வீட்டுக்குள் நுழைவான்.  அவனுக்கு முன்னால்   எதை வைத்தாலும்   சந்தடியின்றி சாப்பிட்டு விடுவான்.  வீட்டு செலவுகளுக்காக லாஜ்ஜோவிடம் அடிக்கடி சிறிது பணம் கொடுத்து வந்தான்.  சில நேரங்களில் செலவு கணக்கை சரி பார்த்துக் கொள்வான்.  இந்த விஷயத்தில் அவள் தன்னை ஏமாற்றவில்லை என்று உணர்ந்து மனச்சமாதானம்  அடைந்தான்.

மீர்ஸா காலையில் வீட்டை விட்டு வெளியில் போனால் மாலையில் தான் வீடு திரும்பினான்.  வீட்டை சுத்தப்படுத்துவதிலும் பொருட்களை சரியாக அடுக்குவதிலும் முற்றத்தில் குளிப்பதுமாக லாஜ்ஜோ தன்னை சுறுசுறுப்பாக வைத்திருந்தாள்.  எப்போதாவது ராமுவின் பாட்டியிடம் அரட்டை அடிக்கப்போவாள்.    பருக்களும் வடுக்களும் முகமெங்கும் நிரம்பியவனாக இருந்த   ராமு, மீர்ஸாவின் சிறிய கடையில் பணியாளாக இருந்தான்.  லஜ்ஜோவை கண்ட முதல் பார்வையிலேயே அவள் மீது பெருத்த மோகம் கொண்டான் ராமு.  மீர்ஸா அடிக்கடி வேசிகள் தங்கியுள்ள வீட்டுக்கு போய்வருகிறான் என்று அவளிடம் போட்டுக் கொடுத்தான்.

இதயத்தில் ஆழமாக கத்தியை சொருகியது போலத் துடித்தாள் லாஜ்ஜோ.  அந்த வேசிகள்  சரியான சூனியக்காரிகள்.  மீர்ஸாவுக்கு இது தேவையற்ற பண விரயம்.  தான் எதற்காக இருக்கிறோம்.  இதுவரை, அவள் வேலை பார்த்த வீடுகளில் எல்லாம் எஜமானர்களுக்கு சகல வகைகளிலும் இன்பத்தை அவள் வாரி வழங்கியிருக்கிறாள்.  ஆனால் இங்கே?  ஒரு வார காலத்துக்கு ஏதோ பத்தினி போல கற்பு கெடாமல் கழிந்து விட்டது.  வேறு எங்கும் இதுபோல தான் அவமானம் அடையவில்லை  என்று வருத்தம் கொண்டாள்.  ஆண்-பெண் உறவு பற்றி  மிகவும் விசாலமான பார்வையை கொண்டு இருந்தாள்.   அவளைப் பொறுத்தவரை பாலுறவு என்பது வாழ்க்கையின் மிகவும் அற்புதமான அனுபவம்.  குறிப்பிட்ட வயதை அடைந்ததும் அவள் அந்த அனுபவத்துக்கு ஆட்பட்டாள்.  அப்போதிருந்து   அந்த விஷயத்தில் அவளுடைய ஆர்வம் அதீதமாக அதிகரித்துத்தான் வந்தது.   இந்த விஷயத்தில் எது சரி, எது தவறு என்று எடுத்துக்கூறுவதற்கு அவளுக்கு தாயோ, பாட்டியோ யாரும் கிடையாது.  இப்போது அவளுக்கு பல்வேறு தரப்புக்களில் இருந்தும் சூசகமாக அழைப்புகள் வந்தவண்ணம் இருந்தன.  ஆனால் அவை அனைத்தையும்   உதாசீனம் செய்தாள்.  இப்போது அவள் மீர்ஸாவின் பணிப்பெண்.  இது குறித்து அவனை வேறுயாரும் கேலி செய்வதற்கு அனுமதிக்கவே மாட்டாள்.

மீர்ஸா சமுத்திரத்தில் ஆழமாக புதையுண்ட பனிப்பாறையாக இருந்தான்.  ஆனால் அவனுக்கு உள்ளே அந்தரங்கமாக ஒரு எரிமலை கனன்று கொண்டிருந்தது.  அவனுடைய மனதை பூகம்பமாக ஒரு விஷயம் அதிர வைத்துக் கொண்டிருந்தது.   அந்த வேதனைத் தீயை   தெருவின்  விடலைப் பையன்கள் மேலும் ஊதிப் பெரிதாக்கி வந்தார்கள்.  லாஜ்ஜோவின் பெயரை அனைத்து உதடுகளும் உச்சரித்து வந்தன.   ஒருநாள் அவள் பால்காரன் முகத்தில் ஓங்கி குத்து விட்டிருந்தாள்.  பான் கடைக்காரன் முகத்தில் எருமூட்டையை எறிந்தாள்.  அவள் எங்கு சென்றாலும் மக்கள் தங்கள் அன்பை தங்கத்தட்டில் வைத்து அவளுக்கு பரிமாறத் தயாராக இருந்தார்கள்.  பள்ளி ஆசிரியர் அவளை எங்கு பார்க்க நேர்ந்தாலும் அவளுக்கு பல்வேறு ஆலோசனைகளை இலவசமாக வழங்கத் தொடங்கினார்.  அவளுடைய வளையல் சத்தம் மஸ்ஜித் விட்டு   வெளியில் வரும் முல்லாஜியை தீயதை ஒழிக்க இறைஞ்சுவதுபோல  “அயாத்-உல்-குர்ஸி” என்று எப்போதும் ஜெபிக்க வைக்கும்.

அன்று, மீர்ஸா மிகவும் மோசமான மனநிலையுடன் வீட்டுக்குள் நுழைந்தான்.  லஜ்ஜோ அப்போதுதான் குளித்து முடித்திருந்தாள்.  தோளின் மீது ஈரமான கூந்தல் மேகமாக விரிந்து படர்ந்து இருந்தது.  அடுப்பை  வேகமாக ஊதியதால் அவள் கன்னங்கள் சிவந்து கண்ணில் நீர் தளும்பி வடிந்தது.  மீர்ஸா ஒருமாதிரி கொதிநிலையில் வீட்டுக்குள் நுழைந்ததைக் கண்டு மெல்ல புன்முறுவலித்தாள்.  அவன் அமைதியாக உணவை எடுத்துக் கொண்டான்.  பிறகு விருவிருவென்று வெளியேறி மஸ்ஜித் சென்று விட்டா.  ஆனால் அவனுக்கு அங்கும் அமைதி கிட்டவில்லை.  வீட்டின் நினைவாகவே இருந்தது.  தாங்க முடியாமல் மீண்டும் வீட்டுக்கு திரும்பினான்.  வாசலில் லாஜ்ஜோ யாரோ ஒருவனிடம் சண்டை போட்டுக் கொண்டிருந்தாள்.  மீர்ஸாவை பார்த்ததும் அந்த மனிதன் வேகமாக நழுவினான்.

சந்தேகம் கொண்ட கணவனைப் போல, “யார் அது?” என்று கேட்டான்.

“ரக்வா.  பால்காரன்”

“ரக்வா?…

அவனிடம்   பல ஆண்டுகளாக பால் வாங்கி இருந்தாலும் மீர்ஸாவுக்கு இதுவரை அவன் பெயர் தெரியாது.

“பால்காரன்?”

“ஹூக்கா தயார் செய்யட்டுமா?” பேச்சை மாற்றுவது போல அவனைக் கேட்டாள் லாஜ்ஜோ.

“வேண்டாம்.  என்ன சொன்னான் அவன்?”

“அவனா?  இன்றில் இருந்து எவ்வளவு பால் வேண்டுமானாலும்  கொண்டு வருகிறேன் என்று சொன்னான்”.

“அதற்கு நீ என்ன சொன்னாய்?”

“நாசமாக போ.  வழக்கமாக கொண்டு வர்ற பாலையே கொண்டு வா” என்று சொன்னேன்.

“அப்புறம்?”

மீர்ஸா பொறாமையால் தீண்டப்பட்டிருந்தான்.

“தேவடியா மகனே… அந்தப் பாலை உங்கம்மாவுக்கு ஊட்டு” என்று சொன்னேன்.

“அயோக்கிய ராஸ்கல்…  இந்த ரக்வா ஒரு மோசமான ஆள்.  நாளையில் இருந்து அவன் கிட்டே பால் வாங்காதே.  வீட்டுக்கு வரும் வழியில் நானே கடையில் இருந்து வாங்கி வருகிறேன்”.

இரவு சாப்பிட்ட பிறகு மீர்ஸா கஞ்சி விரைப்புடன் சலவை செய்யப்பட்ட குர்த்தா-பைஜாமாவை அணிந்து கொண்டான்.  அத்தர் தடவிய சிறிய பஞ்சு உருண்டையை காதுகளில் திணித்துக் கொண்டு கனஜோராக வெளியில் கிளம்பினான்.  அவனை அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த லாஜ்ஜோ பொறாமைத் தீயில் எரிச்சலுற்றாள்.  வேசிகளை வாய்க்கு வந்தபடி திட்டத் தொடங்கினாள்.  மீர்ஸாவுக்கு தன்னுடைய கவர்ச்சி ஏதும் புலப்படவில்லையா?  இது எப்படி சாத்தியம்?

மீர்ஸா சந்திக்கச் சென்ற வேசி மற்றொரு வாடிக்கையாளனுடன் இருந்தாள்.  இது மீர்ஸாவுக்கு பெருத்த கோபத்தை அளித்தது.  அங்கிருந்து விருட்டென்று கிளம்பி லாலா கடைக்கு சென்று அங்கிருந்த ஸ்டூல் ஒன்றில் உட்கார்ந்து கொண்டான்.  அங்கு அரசியல், விலை உயர்வு ஆகியவை குறித்து அரட்டை அடித்து விட்டு கிளம்பினான்.  மிகவும் சோர்வுடனும் சிடுசிடுவென்றும் வீட்டுக்கு திரும்பியபோது மணி இரவு பதினொன்று ஆகி இருந்தது.  அவன் கட்டிலுக்கு அருகில் தண்ணீர் குடுவை ஒன்று வைக்கப்பட்டிருந்தது.  அதை அவன் கவனிக்கவில்லை.  சமையலறைக்கு சென்று குளிர்ந்த நீரை நிறையக் குடித்தான்.  ஆனால் அவன் உள்ளே கனன்ற தீ  அந்தத் தண்ணீரால் அணையவில்லை.

லேசாக திறந்திருந்த கதவு வழியாக  லாஜ்ஜோவின் தங்க நிறத்துடன் தண்டு போன்ற கூடிய கால்களை அவனால் காண முடிந்தது.  தூக்கத்தில்   புரண்டபோது அவளுடைய காலில் இருந்த கொலுசு லேசாக சிணுங்கியது.  கால்கள் மேலும் விரிந்து கொண்டன.  மீர்ஸா மேலும் ஒரு டம்ளர் தண்ணீரை குடித்து விட்டு “லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ்” (அல்லாஹ்வின் உதவியில்லாமல் (பாவங்களில் இருந்து) விலகிச் செல்லவோ (நல்லறங்கள்  புரிய) ஆற்றல் பெறவோ (மனிதனால்) முடியாது)  என்று ஜெபித்துக் கொண்டே படுக்கையில் விழுந்தான்.

அவனுடைய உடல் கொதிகலன் ஆனது.  படுக்கையில் மாறி மாறி புரண்டு கொண்டிருந்தான்.  அடிக்கடி தண்ணீர் குடித்ததால் வயிறு பெரிதாக உப்பி வந்தது. வா வா என்று அழைப்பு விடும் அந்தக் கால்கள் அவனை நிம்மதி இழக்கச் செய்தன.  விநோதமான பயம் தொண்டையை அடைத்தது.  அருகில் சென்று ஏதாவது முயற்சித்தால் அதை பெரிய விவகாரம் ஆக்கி விடுவாள் என்று தோன்றினாலும் அவன் மனதில் குடியிருந்த பிசாசு அவனை உசுப்பி விட்டுக் கொண்டே இருந்தது.  கட்டிலில் இருந்து சமையலறை வரை பலமுறை பல மைல்கள் நடப்பது போல மீண்டும் மீண்டும் நடந்துகொண்டிருந்தான்.  இதனால் மிகவும் களைப்படைந்தான்.

பிறகு எந்த பாதிப்பும் இலலாத வகையில் ஒரு எண்ணம் அவனுக்கு உதித்தது. அவளுடைய கால்கள் இப்படி பகிரங்கமாக விரிந்து இருக்கவில்லை என்றால் தனக்கு இத்தனை தாகம் எடுத்து இருக்காது.  இந்த யோசனை   சற்று தைரியம் தந்தது.  அவள் திடீரென்று விழித்துக் கொண்டால் என்ன செய்வது?  ஆனால் தன்னுடைய பாதுகாப்புக்காக அவன் இதை செய்தே ஆக வேண்டும் என்று நினைத்தான்.

செருப்பை கட்டிலின் கீழே அவிழ்த்து விட்டு மூச்சைப் பிடித்துக் கொண்டு பாதங்களின் நுனியை லேசாக ஊன்றி சந்தடியின்றி நடந்துசென்றான். அவளுடைய பாவாடையின் அடிமடிப்பைப் பிடித்து லேசாக கீழ்நோக்கி இழுத்தான்.    அவள் புழுக்கத்தால் அவதிப்படுவாள் என்றும் ஒரு நொடி  ஆதங்கப்பட்டான்.  எந்த முடிவையும் எட்ட முடியாது ஒரு கணம் நடுங்கிக் கொண்டே நின்றான்.  மனதை ஒருவழியாக திடப்படுத்திக் கொண்டதைப் போல திரும்பினான்.

கதவை நெருங்க முடியாத அளவுக்கு திடீரென அறைக்குள் ஒரு பூகம்பம் ஏற்பட்டது. லாஜ்ஜோ லேசாகப் புரண்டு படுத்து அவனுடைய கால்களை கெட்டியாகப் பிடித்துக்கொண்டாள்.  மீர்ஸா செயலற்று நின்றான். எழுந்து நின்று அவனை பின்புறமாக இறுக்க அணைத்து நின்றாள். இதற்கு முன்பு அவன் இதுபோன்ற அனுபவத்தை சந்தித்தது இல்லை.  அவளை பரிதாபமாக மன்றாடி நின்ற போது லாஜ்ஜோ அவனுக்கு தீவிரமாக வெறியேற்றிக் கொண்டிருந்தாள்.

 காலையில் இருவரும் சந்தித்தபோது ஏதோ புதுமணப் பெண்ணை பார்ப்பதுபோல மீர்ஸா மிகவும் வெட்கப்பட்டான்.  வெற்றி கண்ட பெருமையுடன் ஏதோ ஒரு பாட்டை முணுமுணுத்துக்கொண்டே பரோட்டாவின் ஓரப்பகுதிகளில் நெய் தடவிக் கொண்டிருந்தாள்ங    இரவின் நினைவுகள் எதுவும் அவள் கண்களில் பிரதிபலிக்கவில்லை.    வழக்கப்படி வாசற்படியில் உட்கார்ந்து ஈ ஓட்டத் தொடங்கினாள்.  தன்னிடம் இனி நிறைய கோரிக்கைகளை அவள் வைக்கக் கூடுமோ என்று மீர்ஸா லேசாக அச்சம் கொண்டான்.

அன்று மதிய உணவை எடுத்துக் கொண்டு   மீர்ஸா கடைக்கு வந்த போது அவள் நடையில் ஒரு புதிய துள்ளல் இருந்தது.   கடையில் லாஜ்ஜோவை பார்த்த கணத்தில் சாலையில் சென்று கொண்டிருந்தவர்கள் எல்லாம் கடைக்குள் வந்து மளிகை சாமான்களின் விலையை கேட்டு நின்றார்கள்.  சிலர் ஏதாவது பொருளை வாங்கவும் செய்தார்கள்.  மீர்ஸாவின் ஒப்புதல் இன்றி அவள் கேட்டவர்களுக்கு எல்லாம் கவர்ச்சியான புன்சிரிப்புடன் பொருள்களை நிறுத்தியும் பொட்டலம் கட்டிக் கொண்டும் இருந்தாள்.  மிகவும் குறைந்த நேரத்தில்  நாள் முழுதும் உட்கார்ந்தும் மீர்ஸா விற்பதை விட மிகவும் குறைந்த நேரத்தில் மிகவும் அதிகமான பொருட்களை அவள் விற்றாள்.  அவனுக்கு அது சுத்தமாகப் பிடிக்கவில்லை.

இப்போது மீர்ஸா ஒரு அரசனை விட அதிக செல்வந்தனாக இருந்தான்.  எடையும்   தோற்றப் பொலிவும் நாளுக்கு நாள் கூடியது.  ஜனங்களுக்கு அதன் காரணம் தெரியும்.  அதனால் பொறாமையாக உணர்ந்தார்கள்.  அதைப்பார்த்து மீர்ஸா சற்று தளர்வடைந்தான்.  லாஜ்ஜோ அவன் மீது அக்கறை எடுப்பது நாளுக்கு நாள் அதிகரிக்க அவனுக்கு அவள் மீதான பைத்தியமும் அதிகரித்தது. அதே நேரத்தில் அண்டை அயலில் இருப்பவர்களை கண்டு அவன் மிகுந்த அச்சமடைந்தான்.  ஒருவரை கிறுக்கு ஆக்கும் அவளுடைய ஜாலங்கள் பற்றி அவர்கள் அறிந்து இருந்தார்கள்.  அவள் முற்றாக கூச்சமே இல்லாமல் இருந்தாள்.  மீர்ஸாவுக்கு சாப்பாடு எடுத்து வரும் நேரத்தில் முழு பஜாரையும் அவள் பின்னால் கிறுக்கு பிடித்து அலைய வைத்தாள்.  கைக்குக் கிடைத்தவர்களை எல்லாம் கேலி செய்தாள்.  சிலரைப் பார்த்து கத்திரி போல விரல்களை வைத்து சைகை செய்தாள்.  சிலரிடம் கட்டை விரலை உயர்த்தி சவால் விடுத்தாள்.  பின்புறத்தை ஆட்டிக் கொண்டே கடையை அடைந்ததும் எதிர்ப்படுபவர்களை கெட்ட வார்த்தைகளில் திட்டிய போது மீர்ஸாவின் ரத்தம் மேலும் கொதிப்பு  அடையத் துவங்கியது.

“இனி நீ மத்தியானம் சாப்பாடு எடுத்துக் கொண்டு வராதே” என்று அவளிடம் கூறினான். 

“ஏன்?” லாஜ்ஜோவின் முகம் வாடிப்போனது.  நாள் முழுவதும் வீட்டில் அடைபட்டால் பைத்தியம் பிடித்துவிடும் என்று கவலைப்பட்டாள்.  கடைத்தெரு, அதற்கே உரிய சிரிப்புடனும் கிண்டல் கேலியுடனும் இனிமையான மாற்றாக அனுபவத்து வந்தாள்.   மதியம் அவள் கடைக்கு சாப்பாடு எடுத்து வராத போது மீர்ஸாவின் மனதில் பலவகையான சந்தேகங்கள் உழன்றன.  அப்போது அவள் என்ன செய்து கொண்டிருப்பாளோ என்று யோசித்துக் கொண்டிருப்பான்.  அவளை வேவு பார்ப்பது போல திடீர் என்று சொல்லாமல் கொள்ளாமல் வீட்டுக்குப்போய் அவள் முன்பு நிற்கத் தொடங்கினான்.  அவள் உடனே அதிக வேலைகள் செய்வது போல பாவனையில் ஈடுபடுவாள்.  அது அவனுடைய சந்தேகத்தை மேலும் அதிகப்படுத்தத் தொடங்கியது.

ஒரு நாள் எதிர்பாராத நேரத்தில் அவன் வீட்டில் நின்றான்.  அப்போது அவள்  ஓட்டை உடைசல் சாமான்களை விலைக்கு வாங்குபவனிடம் ஏதோ கதையடித்துக் கொண்டிருந்தாள்.  அவன் அவளைப் பார்த்து இளித்துக் கொண்டிருந்தான்.  மீர்ஸாவை கண்டதும் அவன் மெல்ல அங்கிருந்து நழுவினான்.  மீர்ஸா மிகுந்த கோபத்துடன்  அவளை எட்டி உதைத்தான்.   கழுத்தைப் பிடித்து நெரித்து கன்னத்தில் பளார் பளாரென்று அறைந்தான்.

“என்ன இது?” அவனுக்கு மூச்சு முட்டியது.

“நாசமாகப் போனவன் ஒரு சேர் எடைக்கு பத்தணா மட்டும்  தருவேன் என்றான்.  உங்கம்மாவுக்கு அந்தப் பணத்தைக் கொண்டு போய்க் கொடு” என்று அவனிடம் சொன்னேன்”

ஒரு சேருக்கு அப்போது பத்தணா தான் வாங்கும் விலையாக இருந்தது.

“உன்னை யார் தட்டுமுட்டு பொருட்களை விலைக்கு போடச் சொன்னது?” என்று மீர்ஸா கோபத்துடன் கர்ஜித்தான்.

அந்த தெருவின் சிறுவர்களுடன் அவள் கபடி விளையாடிய அந்த நாளில் அவன் கோபத்தின் உச்சிக்கே சென்றான்.  தீவிரமான விளையாட்டின் போக்கில் அவள் பாவாடை காற்றில் மேலெழும்பி  பறந்து கொண்டிருந்தது.  சிறுவர்கள் விளையாட்டில் தீவிரமாக இருந்தார்கள்.  ஆனால் அவர்களின் தகப்பன்களின் பார்வை அவளின் உயரே எழும்பிய பாவாடையில் நிலைத்து இருந்தது.   ஏற்கனவே அவர்கள் ஒவ்வொருவரும் முறை வைத்துக் கொண்டு லாஜ்ஜோவை தனக்கு வைப்பாட்டியாக வைத்துக் கொள்ள சம்மதத்தைக் கேட்டு அலைந்திருக்கிறார்கள்.  அவள் எல்லோரையும் அலட்சியப்படுத்தி விரட்டியிருக்கிறாள்.

மீர்ஸா பெருத்த அவமானத்துடன்  தலை குனிந்து அந்த இடத்தை விட்டு சத்தமின்றி நகர்ந்தான்.  அங்கிருந்த அனைவரும் அவனைப் பார்த்து சிரித்தார்கள்.  “அங்கே பார்…  ஏதோ அவள் இவனுக்கு நிஜமாகவே மனைவி என்கிற தோரணையில் வருத்தப்பட்டுப் போகிறான்” என்று கேலி பேசினார்கள்.

மீர்ஸா அவளை மிகவும் ஆழமாக நேசித்தான்.  அவளை விட்டுப் பிரிவது என்ற நினைப்பே அவனை பைத்தியம் பிடிக்க வைத்தது. கடையில் அவனால் அதிக நேரம் இருக்க முடியவில்லை.  யாராவது அவளை மேலும் அதிகமான  சலுகைகள்  தருவதாக ஆசை காட்டி இழுத்துச் சென்றுவிடுவார்களோ என்ற நினைப்பு அவனை மோசமாக அலைக்கழித்தது.

அவன் மிகவும் கஷ்டப்படுவதைப் பார்த்து மீரான் மியான் ஒருநாள் கேட்டார், “நீ ஏன் அவளை திருமணம் செய்து கொள்ளக் கூடாது?”

“லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ்” … இந்த கேடு கெட்டவளுடன் எப்படி திருமணம் போன்ற புனிதமான உறவில் பிணைத்துக்கொள்ள முடியும்?”  பலருடனும்  படுக்கையை பகிர்ந்துகொண்ட அவள் என்னுடைய மணப்பெண்ணாக எப்படி மாற முடியும்?

இருப்பினும் அன்று மாலையே அவன் வீட்டுக்கு திரும்பிய போது வீட்டில் அவள் இல்லை என்பதை அறிந்தபோது பூமி அவனுக்குக் கீழே சரிந்து விழுவதைப் போல அதிர்ச்சி அடைந்தான்.  அந்த அயோக்கியன் லாலா பல நாட்களாக அவள் பின்னால் நாய் மாதிரி அலைந்து கொண்டிருந்தான்.  அது ஒன்றும் பெரிய ரகசியம் கிடையாது.  அவள் தனக்கு வைப்பாட்டியானால் பெரிய பங்களா ஒன்றை அவள் பெயரில் எழுதி வைப்பதாக எல்லார் முன்னிலையிலும் பகிரங்கமாக அறிவித்தவன் அவன்.  ஏன், இவனுடைய நெருங்கிய நண்பனான மீரான் மியான் கூட அவளிடம் நயவஞ்சமாக தன்னுடைய விருப்பத்தை தெரிவித்து இருக்கிறான்.

மீர்ஸா மிகவும் குழப்பம் அடைந்து தரையில் உட்கார்ந்து இருந்தபோது லாஜ்ஜோ திரும்பி வந்தாள்.  ராமுவின் பாட்டிக்கு மசாஜ் செய்வதற்கு போயிருந்ததாக சொன்னாள். அன்று மாலையே அவளை திருமணம் செய்து கொள்வதாக தீர்மானம் செய்தான் மீர்ஜா.   குடும்ப கௌரவம் நாசமாகப் போனாலும் சரியே என்று நினைத்தான்.

“அதற்கு என்ன தேவை இப்போது?” என்று எதுவும் புரியாமல் கேட்டாள் லாஜ்ஜோ.

“ஏன்?  மற்றவர்களோடு அவிழ்த்துப் போட்டு அலைய வேண்டுமா?” 

“உனக்கு வெட்கமாக இல்லை? நான் ஏன் அலைய வேண்டும்”

“உன்னை பங்களாவில் குடிவைப்பேன் என்று அந்த ராவ்ஜி சொல்கிறான்”

 “அவன் பங்களாவை நான் காறிகூடத் துப்ப மாட்டேன்.  செருப்பை எடுத்து அவன் முகத்திலேயே எறிவேன்”.

பிறகு?

லாஜ்ஜோ திருமணம் என்ற தேவையை மீறியவளாக இருந்தாள்.  என்றும் இவனுடையவளாகவே இருப்பாள்.  திடீரென்று திருமணம் செய்து கொள்வேன் என்று மியான் சொல்லக் கூடிய அளவுக்கு அவள் என்ன குற்றம் புரிந்தாள்?  இதுபோன்ற எஜமானனிடம் வந்து அடைவதற்கு மிகுந்த அதிருஷ்டம் செய்திருக்க வேண்டும்.  அவன் தேவதூதனைப் போல இருந்தான். லாஜ்ஜோ பலருடைய கரங்களிலும் சிக்கி சீரழிந்திருக்கிறாள்.  அவளுடைய மற்ற எஜமானர்கள் அனைவரும் அவள் மீது வெறி கொண்டு அலைந்திருக்கிறார்கள்.  ஆனால் அவர்களின் வெறி தீர்ந்ததும் அவளை உதைத்து வெளியில் தள்ளியிருக்கிறார்கள்.  இதற்கு மாறாக மீர்ஸா மிகவும் மிருதுவாகவும் அன்பே உருவாகவும் இருக்கிறான்.    இரண்டு புதிய ஜோடி ஆடைகளும்  தங்க வளையலும் வாங்கித் தந்திருக்கிறான்.  அவளுடைய முன்னோர்களில் கூட யாரும் தன்னைப் போல தங்க நகை அணியும் அதிருஷ்டத்தை அடைந்து இருக்கமாட்டார்கள்.

திருமணம் பற்றி ராமுவின் பாட்டியிடம் மீர்ஸா சொன்னபோது அவளும் ஆச்சரியப்பட்டாள்.

“மியான், உன் கழுத்தில் நீயே ஏன் மணியைக் கட்டிக் கொள்கிறாய்?  அவள் ஏதாவது மாய்மாலம் செய்கிறாளா?   அப்படி ஏதாவது செய்தால்  நான்கு சாத்து சாத்திவிடு.  சரியாகி விடுவாள். ஒருத்தியை செருப்பைக் கழற்றி அடித்து பணிய வைக்கலாம் என்னும் போது இந்த கல்யாணம் கண்றாவி எல்லாம் எதுக்கு?”  என்றாள் கிழவி.

ஆனால் மீர்ஸா மிகவும் பிடிவாதமாக இருந்தான் – அவளை நிக்காஹ் முடித்தே ஆகவேண்டும்.  

“பெண்ணே, அவனுடைய மதம் குறித்து உனக்கு ஏதேனும் ஆட்சேபணை இருக்கிறதா?  என்று ராமுவின் பாட்டி அவளைக்கேட்டாள்.

“இல்லவே இல்லை.  அவரை எப்போதும் என் கணவனாகத்தான் பார்த்து வருகிறேன்” என்றாள் லாஜ்ஜோ.

லாஜ்ஜோ எப்போதும் மென்மையே வடிவாக இருந்தாள்.    வழியில் செல்லும் முகம் அறியாத வாடிக்கையாளனைக் கூட தன் கணவனாக வரித்து அவனுக்கு சேவை செய்திருக்கிறாள்.  தன்னுடைய காதலர்களிடம் அவள் எப்போதும் எதற்கும் கஞ்சத்தனம் காட்டியது கிடையாது.  அவளிடம் செல்வம் எதுவும் கிடையாது.  ஆனால்   தன்னுடைய உடல்-ஆவி என அனைத்தையும் தன்னுடன் படுத்தவர்களுக்கு   கொடுத்திருக்கிறாள்.  அதே நேரத்தில் அவர்களிடம் இருந்து மிகவும் அதிகமாக கறந்தும் இருக்கிறாள்.  ஆனால்  இவர்கள் அனைவரிடமிருந்தும் மீர்ஸா தனித்து நிற்பவன்.  அவனிடம் ஏற்பட்ட கொடுக்கல் வாங்கல் முற்றிலும் வேறான அனுபவத்தை   இதயத்தையே உருக்கும் வகையில்   அடைந்து இருக்கிறாள்.  மீர்ஸாவுடன் ஒப்பிடும்போது மற்றவர்கள் அவள் பார்வைக்கு பன்றிகளாகவே தெரிந்தனர்.  தன்னைப் பற்றிய மாயை எதுவும் அவளுக்கு கிடையாது.  பொதுவாக கன்னியர்தான் கல்யாணம் செய்து கொள்வார்கள்.  எப்போது தன் கன்னித்தன்மையை இழந்தாள் என்று அவளுக்கு நினைவில்லை.  யாருக்கும் மணப்பெண்ணாகும் தகுதி தனக்கு இல்லை என்று நினைத்தாள்.

லாஜ்ஜோ அழுதும் வாதாடியும் பார்த்தாள்.  ஆனால் மீர்ஸா கல்யாணம் செய்து கொள்வதில் உறுதியாக இருந்தான்.  ஓரிரவின் முகூர்த்த நேரத்தை தேர்ந்தெடுத்து இஷா தொழுகை முடிந்த பிறகு இருவரும் நிக்காஹ் செய்து கொண்டனர்.  கல்யாண வயதில் இருந்த பெண்கள் கல்யாணப் பாடல்களை பாடினார்கள்.  ஒரு குழுவினர் மாப்பிள்ளைக்காகவும் மற்றொரு குழுவினர் மணப்பெண்ணுக்குமாகப் பாடினார்கள்.

மீர்ஸா ஒரு புன்னகையுடன் நிக்காஹ்வுக்கு ஒப்புதல் அளித்தான்.  லாஜ்ஜோ (எ) கனீஜ் பாத்திமா மற்றும் மீர்ஜா இர்ஃபான் பெய்க் அன்றில் இருந்து கணவனும் மனைவியும் ஆனார்கள்.

  அவள் பாவாடை உடுத்த தடை விதித்து இறுக்கமான சூரிதார் பைஜாமா அணியுமாறு மீர்ஸா அவளுக்கு அறிவுறுத்தினான்.  எப்போதுமே  கால்களின் இடையில் போதிய  இடைவெளி இருந்துதான் லாஜ்ஜோ பழக்கப்பட்டிருந்தாள்.  இரு கால்களும் தனித்தனியாக நடுவில் ஒரு துணியுடன் இணைக்கப்பட்ட பைஜாமா அவளுக்கு மிகவும் அசௌகரியமாக இருந்தது.   பைஜாமாவின் கால் பகுதியை அடிக்கடி இழுத்து விட்டுக் கொண்டிருந்தாள்.  அதை அவிழ்த்து எறிந்து பாவாடைக்குள்   நுழைய முயற்சித்த போது திடீரென்று அறைக்குள் மீர்ஜா பிரவேசிக்கவே அவள் பதட்டத்தில் பாவாடையை கீழே நழுவ விட்டாள்.

““லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ்” …. மீர்ஸா வேதனையுடன் கத்திக் கொண்டே ஒரு போர்வையை எடுத்து அவள் மீது வீசி எறிந்தான்.  பிறகு நீண்ட உபதேசம் ஒன்றை செய்தான்.  அது அவள் தலைக்கு ஏறவில்லை.

அவளுடைய தவறு என்ன இருக்கிறது?  முன்பு இதே போல நடந்து இருந்தால் மீர்ஸா அவள் மீது வெறியுடன் பாய்ந்திருப்பான். ஆனால் இப்போது எதனாலோ தூண்டப்பட்டது போல அவளுடைய பாவாடையை தீயில் எறிந்து இருக்கிறான்.

மீர்ஸா எதையோ முணுமுணுத்துக் கொண்டே அங்கிருந்து வெளியேறினான்.  லாஜ்ஜோ விரக்தியுடனும் ஏமாற்றத்துடனும் தரையில் உட்கார்ந்து வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.  மீர்ஸா தன் மீது சுற்றிய போர்வையை தூக்கி எறிந்து விட்டு தன்னுடைய உடலை மேலும் கீழும் தீவிரமாக ஆராய்ந்து பார்த்தாள்.  ஒருவேளை தன்னை பெருவியாதி ஏதேனும் பீடித்து இருக்கிறதோ?  பெருகி வந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டே குழாயடியில் குளிக்கத் துவங்கினாள்.  பக்கத்து வீட்டு கொத்தனாரின் மகன் மித்துவா எப்போதும்   தன் வீட்டின் கூரை மீது ஏறி பட்டம் விடும் பாவனையில் அவள் குளிக்கும்போது எப்போதும் உற்றுப் பார்த்துக் கொண்டிருப்பான்.  அன்று அவள் மிகவும் மனச்சோர்வு அடைந்த நிலையில் இருந்ததால் கட்டை விரலை உயர்த்தி ஜாடை காட்டி அவனை திட்டவோ, செருப்பை வீசவோ, அல்லது வீட்டுக்குள் போகவோஅவள் முயற்சிக்கவில்லை.  ஆனால் எப்போதும் இல்லாத வழக்கமாக சால்வையால் உடல் முழுவதையும்  மூடிக் கொண்டாள்.

பிசாசின் பெருங்குடலைப் போன்று நீண்டிருந்த பைஜாமாவில் கனத்த மனத்துடன்  கால்களை நுழைத்துக் கொண்டாள்.  நிலைமையை மேலும் மோசமாக்கும் வகையில் பைஜாமாவின் நாடா அவள் இழுத்ததில் நழுவி துளைக்குள் சென்று விட்டது.  அவள் போட்ட கூச்சலில் பக்கத்து வீட்டுப்பெண் பில்லோ ஓடி வந்து நாடாவை சரிப்படுத்திக் கொடுத்தாள்.

“எந்த சனியன் பிடித்தவன் இதைக் கண்டுபிடித்தான்? ஒவ்வொரு முறை கழிப்பறை போகும் போதும் இதை அவிழ்த்து அவிழ்த்து மீண்டும் மாட்டித் தொலைக்க வேண்டியிருக்கிறது என்று அலுத்துக்கொண்டாள்.

மாலை மீர்ஸா வீட்டுக்கு திரும்பிய நேரத்தில்  நாடா மீண்டும் நழுவி ஓட்டைக்குள் சென்றது.  லாஜ்ஜோ பைஜாமாவை கையில் பிடித்துக் கொண்டு பரிதாபமாக நின்றிருந்தாள்.  இதைப்பார்த்த மீர்ஸா அவள் மீது பெருத்த மோகம் கொண்டு அவளை திடீரென்று இறுகப்பற்றிக் கையில் ஏந்தினான்.  பெரிய போராட்டத்துக்குப் பிறகு அந்த நாடாவின் ஒருமுனை கண்டுபிடிக்கப்பட்டு மீண்டும் பழையபடி பொருத்தப்பட்டது.  லாஜ்ஜோவும் மெல்ல மெல்ல தன் புதிய உடைக்கு பழக்கப்பட்டுப் போனாள்.

ஆனால் புதிதாக ஒரு பிரச்சினை முளைத்தது.   கல்யாணத்துக்கு முன்பு மயக்கம் அளித்து வந்த லஜ்ஜோவின் சல்லாபங்கள் மனைவியான பிறகு மீர்ஸாவுக்கு இப்போது அதிக சந்துஷ்டி அளிக்கவில்லை. இதுபோன்ற மலினமான தந்திரங்கள்   ஒழுக்கமான குடும்பத்தை சேர்ந்த பெண்களுக்கு அழகல்ல.  காதலுக்காக மீர்ஸாவை ஏங்க வைப்பவளாக,  அவனுடைய சமிக்ஞைகளை புரிந்து கொண்டு கன்னம் சிவக்க வெட்கப்படுகிறவளாக, அவன் கோபத்தை தணிக்கிறவளாக,  மிரட்டலுக்கு அடிபணிகிறவளாக  – மீர்ஸாவின் கனவு மனைவியாக அவளால்  மாற முடியவில்லை.  சாலையில் கிடக்கும் பலகைக் கல் போல அவள் இருந்தாள்.  பீடத்தில் பூஜைக்கு வைக்கப்படும் மலராக அவளால் மாறமுடியவில்லை.  மீர்ஸாவின் தொடர்ச்சியான கட்டுப்பாடுகள் அவளுடைய சுதந்திரத்தை கட்டுப்படுத்தும் வகையில் அமைந்திருந்தது.  ஒருவகையில் அவளை அடக்கி வைக்கவும் சீர்திருத்தவும் செய்தான்.  

தன்னால் ஒழுக்கமான பெண்ணாக அவளை மாற்ற முடிந்தது என்று மீர்ஸா ஒருவகையில் மகிழ்ச்சியடைந்தான்.  இப்போதெல்லாம் பரபரப்புடன் வீட்டுக்குத் திரும்ப வேண்டும் என்று உந்துதல் எதுவும் இல்லாமல் இருந்தான்.  மற்ற கணவர்களைப் போல நண்பர்களுடன் நேரத்தைக் கழித்தான்.  அதனால் பெண்டாட்டி தாசன் என்று அவனை யாரும் அழைக்கவில்லை.  ஒருவன் தன் வைப்பாட்டியை சந்தோஷப்படுத்த என்ன வேண்டுமானாலும் செய்யலாம்.  ஆனால் மனைவி என்பவள் வேறு வகையான தொட்டியில் வளர்க்கப்படும் மீன் ஆவாள்.

அவன் வீட்டில் இல்லாத நேரத்தில் பொழுதைக் கழிக்க ஒரு வேலைக்காரியை அமர்த்திக் கொள்ளலாம் என்று அவளிடம் மீர்ஸா கூறினான்.  லாஜ்ஜோ அவனை முறைத்துப் பார்த்தாள்.  அவன் விபச்சாரிகளிடம் சென்று கொண்டிருந்தது அவளுக்குத் தெரியும்.  மீர்ஸாவின் அண்டை வீட்டுக்காரர்களும் விபச்சாரிகளிடம் போகிறவர்கள் என்பதும் அவளுக்குத் தெரியும்.  ஆனால் அவளால் வீட்டில் இன்னொரு பெண்ணுடன் பங்கு போட்டுக் கொள்ள முடியாது.  யாராவது தன்னுடைய சமையலறையில் நுழைந்தாலோ அல்லது பளபளவென்று தேய்த்து வைத்த பாத்திரங்களில் கை வைத்தாலோ அவள் காலை முறித்து விடுவாள்.  அவளால் வேறொரு பெண்ணுடன் மீர்ஸாவை பங்கு போட்டுக் கொள்ள முடியும்.  ஆனால் அந்த வீட்டின் நிகரற்ற எஜமானி அவள் மட்டுமே.

அவளை வீட்டில் மனைவியாக நிறுவியதால் அவளுடைய இருப்பை மீர்ஸா முற்றாக மறந்து போனான்.  நான்கு வாரங்களுக்கு அவளுடன் ஒற்றை வார்த்தையில் மட்டுமே உரையாடலை தொடர்ந்தான்.  அவனுடைய வைப்பாட்டியாக அவள் இருந்தவரை எல்லோருக்கும் அவள் மீது கண் இருந்தது.  பண்பான ஒருவனை அவள்   மணந்து இருப்பதால் இப்போது அவள் எல்லோருக்கும் ஒருவகையில் தாயாக, சகோதரியாக, மகளாக மாறிப் போனாள்.  கொத்தனாரின் மகன் மித்துவா தவிர்த்து வேறு யாரும் வீட்டின் சணல் திரையைத்தாண்டி  பார்வையை உள்நோக்கி செலுத்தவில்லை.  அவன் இன்னும் அவளுக்கு விசுவாசமாக கூரை மீது ஏறி பட்டத்தை பறக்கவிட்டுக் கொண்டிருந்தான்.   காலையில் மீர்ஸா கடைக்கு கிளம்பிப் போனதும் லாஜ்ஜோ வழக்கமான வீட்டு வேலைகளை முடித்து விட்டு முற்றத்தில் குழாயடியில் குளிக்கப் போவாள். இப்போதெல்லாம் லாஜ்ஜோ தலை நிமிர்ந்து கூரையை எட்டிப் பார்ப்பது கிடையாது.

ஒரு நாள் இரவில் மீர்ஸா தன்னுடைய நண்பர்களுடன் தசராவை கொண்டாடுவதற்காக வீட்டுக்கு வெளியில் தங்கியிருந்தான்.  காலையில் வீட்டுக்கு வந்து அவசரமாகக் குளித்து விட்டு கடைக்கு கிளம்பிப் போனான்.  லாஜ்ஜோ மனம் புழுங்கினாள்.  அன்று அவளுடைய கண்கள் மற்றொரு முறை பக்கத்து வீட்டு மாடியை நோக்கிச் சென்றது.  மித்துவாவின் பார்வை அவளுடைய ஈர உடலை ஈட்டி  போலத் துளைத்துக் கொண்டிருந்தது.  அவனுடைய பட்டம் அறுந்து பறந்து விழுந்து லாஜ்ஜோவின் திறந்த முதுகை தழுவி நின்றது.  அவள் தன்னை மறந்தோ அல்லது வேண்டுமென்றோ பெருமூச்சு விட்டாள்.  உடலில் துவாலையை சுற்றிக் கொள்ளாமல் நிர்வாணமாக வீட்டுக்குள் ஓடினாள்.  குழாயை மூடாமல் வந்தது நினைவுக்கு வரவே மீண்டும் ஓடிப்போய் அவசரமமாக குழாயை மூடுவதற்காக முற்றத்துக்கு ஓடிப்போனாள்.

அந்த நாளுக்குப் பிறகு   லாஜ்ஜோ சணல் திரையை அடிக்கடி  ஒதுக்கிப் பார்த்து ஹல்வாயி கடைக்குப் போய் யாராவது தனக்கு தின்பண்டங்கள் வாங்கி வருவார்களா என்பது போல பார்க்கத் தொடங்கினாள்.  அப்போதெல்லாம் மீர்ஸாவின் வீட்டைச் சுற்றியே எப்போதும் மித்துவா அலைந்து கொண்டிருப்பதை அவளால் காண நேர்ந்தது.

“ஏய் மித்துவா, சாணிக்கூளத்தைப் போல நாள் முழுக்க ஒரே இடத்தில் நிற்காதே.  ஓடிப்போய் சாப்பிடுவதற்கு கச்சோரி வாங்கி வா.  கடைக்காரனிடம் ஊறுகாயில் தேவையான மிளகுப் பொடியை தூவிக் கொடுக்கச் சொல்” என்று கேட்டுக் கொள்வாள்.

மித்துவா இப்போதெல்லாம் அவளால் அதிகமாக ஈர்க்கப்பட்டவனாக இருந்தான்.  அவள் குழாயடியில் குளிக்கும் போது அவன் மாடியில் காணவில்லை என்றால் பிணங்கள் கூட தங்கள் கல்லறையில் இருந்து விழித்துக் கொள்ளும் வகையில் வெறும் வாளியை கடகடவென உருட்டி பெரிதாக சத்தம் எழுப்பத் தொடங்கினாள்.  அனைவருக்கும்   தாராளமாக வழங்கப்பட்டு வந்த காதல் இப்போது மித்துவாவுக்கு வெகுதாராளமாக கிடைத்து வந்தது.  மீர்ஸா மதிய உணவைத் தவற விட்டால் லஜ்ஜோ எப்போதும் அதை தேவையானவர்கள் யாருக்காவது  தந்து விடுவாள்.  அவளுடைய தாராள குணத்துக்கு வெகுவாக பாத்திரமானது இப்போது மித்துவாவைத் தவிர வேறுயாராக இருக்க முடியும்?

திருமண பந்தத்தில் அவளைக் கட்டிப் போட்டதால் அவளை இல்லத்தரசியாக மாற்றி விட்டதாக மீர்ஸா பெருத்த நம்பிக்கையுடன் இருந்தான்.  ஆனால், இப்போது அவன் கண்டது  போன்ற காட்சியை தானே தன்னுடைய கண்களால் காணாமல் இருந்தால் அவன் நம்பியிருக்க மாட்டான்.  எதிர்பாராத அந்த நேரத்தில் மீர்ஸாவை எதிர்பார்க்காத லாஜ்ஜோவால் லேசாக புன்னகைத்ததை தவிர வேறு எதுவும் செய்ய முடியவில்லை.  அவன் கண்ட காட்சி அவனை இவ்வளவு பயங்கரமாக கோபப்படுத்தும் என்று அவள் எதிர்பார்க்கவில்லை.  ஆனால் மித்துவாவுக்கு தெரிந்து இருந்தது.  வேஷ்டியை மின்னலாக சுருட்டி எடுத்த அவன் உயிரைக்காப்பாற்றிக் கொள்ள எடுத்த ஓட்டத்தில் மூன்று கிராமங்களை தாண்டிப் போன பிறகுதான் அவனால் ஓரிடத்தில் நின்று மூச்சுவிட முடிந்தது.

மீர்ஸா அவளை வெறி கொண்டு மாறி மாறித் தாக்கினான்.  லாஜ்ஜோவைத் தவிர வேறு ஏதாவது பெண்ணாக இருந்தால் அந்த அடியில் இந்நேரம் உயிர் போயிருக்கும்.  மித்துவாவை தன் மனைவியுடன் தவறான நிலையில் மீர்ஸா பார்த்து விட்டதாகவும் அவர்கள் இருவரையும் அவன் அடித்துக் கொன்று விட்டதாகவும் ஊரில் அங்கங்கு வதந்தி கிளம்பியது.  அவனுடைய குடும்ப கௌரவம் மண்ணோடு புதைந்து போனது. அனைவரும் அங்கங்கு நின்று வேடிக்கை பார்க்கத் தொடங்கினார்கள்.  ஆனால் மித்துவா தப்பித்து ஓடிப் போனதையும் லாஜ்ஜோ மட்டும் மீர்ஸாவிடம் மாட்டிக் கொண்டு முரட்டு அடியை வாங்கினாலும் உயிரோடு இருப்பதை அறிந்து பெருத்த ஏமாற்றம் அடைந்தார்கள்.  ராமுவின் பாட்டி அவளை தன் வீட்டுக்கு அழைத்துப் போய்விடுவாள்  என்றும் தங்களுக்குள் பேசிக்கொண்டார்கள்.

மீர்ஸா அவளை இதுபோல முரட்டுத்தனமாக சாத்து சாத்து என்று சாத்தியதில் லாஜ்ஜோ அவனை விட்டுப் போய்விடுவாள் என்று அனைவரும் நினைத்தார்கள்.  ஆனால் நடப்பு அந்த கற்பனைக்கு வெகுதூரத்தில் இருந்தது.  சொல்லப்போனால் அவர்களுக்கு இடையிலான பந்தம்  மேலும் இறுக்கமாக மாறியது.    அந்த வீட்டுக்கு வந்தபோது அவளுக்குத்தான் மீர்ஸா அதிகமாக தேவைப்பட்டான்.  அவளுடைய முந்தைய எஜமானர்கள் எல்லாம், அவள் அந்த வீடுகளுக்கு போனதும் மிக விரைவாகவோ அல்லது சற்று தாமதமாகவோ அவளுடைய காதலர்களாக மாறினார்கள்.  அப்படி காதலர்களாக அவர்கள் மாறியதும் சம்பளம் பற்றிய பேச்சே எழுந்தது கிடையாது.   எல்லாவற்றையும் விட அவளை அவர்கள் மிகவும் மோசமாக அடிக்கத் துவங்கினார்கள்.  சில நேரங்களில் தங்கள் நண்பர்களுடனும் அவளை பகிர்ந்து கொண்டார்கள்.  ஆனால் மீர்ஸா எப்போதும் மிகவும் நாகரிகமாக நடந்து கொண்டான்.  அவளை தன்னுடைய உடமையாகவே கருதத் தொடங்கினான்.  அவள் மீதான தன்னுடைய உரிமையை அடிக்கடி உறுதிப்படுத்திக் கொண்டான்.  அவளைப் பொறுத்தவரை அது மிகப்பெரிய கவுரவமாக இருந்தது.  இப்போது அவளை அவன் பயன்படுத்தவில்லை என்றாலும் அவன் மீது மிகவும் அன்பு கொண்டவளாகவே இருந்தாள்.  இந்த நிலையிலும் அவள் உள்ளம் மீர்ஸாவுக்காக ஏங்கியது.  உயிரைக் காப்பாற்றிக் கொள்ள அங்கிருந்து ஓடிவிடுமாறு அனைவரும் அவளை எச்சரிக்கை செய்தனர்.  ஆனால் அவர்கள் பேச்சை கேட்க அவள் தயாராக இல்லை.

குடும்ப கவுரவத்தை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்றால் அவளை கொல்வதுதான் வழி என்று மீர்ஸா நினைத்தான்.  ஆனால் மீரான் மியான் அவனை தடுத்து நிறுத்தினான்.  லாஜ்ஜோ பிழைத்துக் கொண்டாள்.  ஆனால் இவன் எங்கே தன் முகத்தை வைத்துக் கொள்வது?  உலகத்தை இப்போது எப்படி அவன் எதிர்கொள்வான்?

“முறைகெட்டவள் ஒருத்திக்காக உன்னுடைய முகத்தை சேற்றில் புதைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறாயா?

“அதுபற்றி எனக்கு அக்கறை இல்லை”

“அந்த முண்டைக்கு தலாக் கொடு.  அப்புறம் அவளை வீட்டை விட்டுத் துரத்து” என்று மீரான் மியான் அவனுக்கு ஆலோசனை வழங்கினான்.    நல்ல குடும்பத்தில் இருந்து அவள் வந்திருந்தால் அந்த கதையே வேறாக இருந்திருக்கும்”

மீர்ஸா அவளை அங்கேயே தலாக் செய்தான். மெஹர் தொகையாக முப்பத்து இரண்டு ரூபாயும் அவளுடைய மற்ற உடமைகளையும் ராமுவின் பாட்டி வீட்டுக்கு அனுப்பி வைத்தான்.

தலாக் பற்றி கேள்விப்பட்டதும் லாஜ்ஜோ நிம்மதிப் பெருமூச்சு விட்டாள்.  அவள் தோளில் இருந்து ஏதோ பாரத்தை இறக்கி வைத்தது போல உணர்ந்தாள்.  திருமணம் அவளுக்கு பொருந்தவில்லை.  இந்த எல்லா பிரச்சினையும் அந்த  திருமணத்தினால்தான்.  ஒரு வழியாக அது முடிந்து போனது நல்லதற்கே என்று நினைத்தாள்.

“மீர்ஸா சாஹிப்புக்கு என் மீது கோபம் இல்லை என்று நினைக்கிறேன்” என்று ராமுவின் பாட்டியிடம் கேட்டாள்.

“உன் முகத்தில் விழிக்க நாங்கள் விரும்பவில்லை.  உடனே இந்த இடத்தை காலி செய்து விட்டு வேறு எங்காவது போய்விடு”.

மீர்ஸா அவளுக்கு தலாக் கொடுத்தது பற்றியே ஊரெங்கும் பேச்சாக இருந்தது.  உடனே லாலா அவளுக்கு செய்தி அனுப்பினான் –

“பங்களா தயாராக இருக்கிறது”

“உங்க அம்மாவை அங்கே வச்சுக்கோ” என்று லாஜ்ஜோ அவனுக்கு பதில் அனுப்பினாள்.‘

மீர்ஸா கொடுத்த மெஹர் பணம் முப்பத்தி இரண்டு ரூபாயில் தனக்கு உணவும் தங்க இடமும் கொடுத்ததற்காக ராமுவின் பாட்டிக்கு பத்து ரூபாய் கொடுத்தாள்.  தன்னுடைய இறுக்கமான பைஜாமாக்களை ஷக்கூரின் தாயாருக்கு சிறு தொகைக்கு விற்றாள். இரு வாரங்களில் தன் சொந்தக் காலில் மீண்டும் எழுந்து நிற்கத் தொடங்கினாள்.  அந்த அடிகளை வாங்கிய பிறகு ஏதோ ஒன்று தன்னை கழுவி புனிதப்படுத்தியது போல உணர்ந்தாள்.  இந்த நினைப்பு அவளுடைய திரேகத்தில் முன்பை விட அதிகமாக பொலிவைக் கூட்டியது.  அவளுடைய இடுப்பசைவில் புதிய ஜாலம் கூடியது.    பஜாரில் பான் அல்லது கச்சோரி வாங்கச் சென்ற போது முழு பஜாரையும் சூறாவளியாக கலங்கடித்தாள்.  மீர்ஸாவுக்கு அப்போதெல்லாம் இதயத்தில் சொல்ல முடியாத வலி ஏற்படும்.

ஒருநாள், பஜாரில் பான்கடைக்காரனிடம் ஒரு ஏலக்காய்க்காக பெரிதாக சண்டை போட்டுக் கொண்டிருந்தாள்.  பான் கடைக்காரன் அவளைப் பார்த்து அநியாயத்துக்கு வழிந்து  கொண்டிருந்தான்.  அந்த வழியாகப் போன மீர்ஸா அந்தக் காட்சியை தவிர்க்கும் வகையில் சந்தடியின்றி வேகமாகக் கடந்து போனான்.

“மியான்…. நீ ஒரு கிறுக்கன்.  அவள் இஷ்டத்துக்கு என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளட்டுமே.  அவள் உனக்கு இப்போது யார்?” என்று மீரான் மியான் மீர்ஸாவிடம் கடுமையாக வாதிட்டான்.

“ என் மனைவியாக இருந்தவள்.  அதை எப்படி நான் ஒதுக்கித் தள்ள முடியும்?” என்று மீர்ஸா  பொருமினான்.

“அதனால் என்ன?  இப்போது அவள் உன் மனைவி இல்லையே.  என்னைக் கேட்டால் எப்போதுமே அவள் உன் மனைவியாக இருந்தது இல்லை”.

“எங்களுக்குள்ளே நடந்த நிக்காஹ்?”

“சுத்தமாக விதிமுறைக்கு பொருந்தாதது”

“என்ன சொல்கிறாய்?”

“பாய் ஜான், அந்த நிக்காஹ் எந்த வகையிலும் செல்லுபடியாகாது. அவள் யாருக்கு பிறந்தவள் என்று யாரால் சொல்ல முடியும்?  முறைதவறிப் பிறந்தவளோடு நடக்கும் நிக்காஹ்   ஹராம்.  கண்டிப்பாக தடுக்கப்படவேண்டியது”

“அப்படி என்றால் அந்த நிக்காஹ் எந்த விளைவும் ஏற்படுத்தாது?”

“நிச்சயமாக கிடையாது”

“அப்போது   என் குடும்ப கவுரவம் எந்த வகையிலும் பாதிப்பட்வில்லை என்று சொல்கிறாய்” என்று மீர்ஸா லேசாக புன்னகைத்தான்.  தலையில் இருந்து பெரிய பாரத்தை இறக்கி வைத்தது போல உணர்ந்தான்.

“நிச்சயமாக இல்லை”

“பிரமாதம்.  அப்போ அந்த தலாக்கும் இல்லை”

“ப்யாரே பாய்…  நிக்காஹ் என்பதே இல்லை. அதனால் தலாக் என்ற கேள்விக்கே இடமில்லை”

“அப்போ என்னோட மெஹர் பணம் முப்பத்து ரெண்டு ரூபாய் தண்டத்துக்கு குப்பையிலே போட்டது போல வீணாக போனது” என்று மிகுந்த வருத்தத்துடன் சொன்னான் மீர்ஸா.

இந்தப் பேச்சும் கிராமத்தில் அங்கங்கு பரவராக அடிபட்டது.  மீர்ஸாவுடன் லாஜ்ஜோவின் நிக்காஹ் செல்லுபடியாகாது.  அதனால் தலாக்கும் இல்லை.  இந்த பேரத்தில் மீர்ஸாவுக்கு முப்பத்து இரண்டு ரூபாய் நஷ்டம்.

லாஜ்ஜோவுக்கு இது பற்றித் தெரியவந்தபோது மகிழ்ச்சியில் கூத்தாடினாள்.  கல்யாணமும் தலாக்கும் முடிந்து போன கெட்ட கனவாக மாறிப்போனது.  பெரிய அளவில் நிம்மதியாக உணர்ந்தாள்.  அவள் அதிகமாக எதற்கு சந்தோஷப்பட்டாள் என்றால் அந்த சம்பவத்தால் மீர்ஸாவுக்கு கவுரவக் குறைச்சல் எதுவும் ஏற்படவில்லை என்பதே. அப்படி அவனுக்கு மானக்கேடாக ஏதாவது நடந்திருந்தால் அவள் மிகவும் வருத்தப்பட்டிருப்பாள்.  வைப்பாட்டியாக அவனுக்கு நல்ல வகையில்தான் சேவை செய்திருக்கிறோம்.  நல்லவேளை முறையான தகப்பனுக்கும் தாய்க்கும் பிறந்திருந்தால் இந்நேரம் அவள் பெரிய அளவில் பிரச்சினைகளை சந்திக்க நேரிட்டு இருக்கும்.

ராமுவின் பாட்டி வீட்டில் லாஜ்ஜோவுக்கு மூச்சுத் திணறியது.  மீர்ஸா வீட்டைத் தவிர அவள் வாழ்க்கையில் வீட்டு எஜமானியாக இருப்பதற்கு எங்குமே வாய்ப்பு கிடைத்தது இல்லை.  அந்த வீட்டை நினைத்து அவள் மிகவும் ஏங்கினாள்.   எதையாவது திருடுவார்கள் என்ற அச்சத்தில் மீர்ஸா யாரையும் அந்த வீட்டை பெருக்கக் கூட அனுமதிக்க மாட்டான்.   இந்நேரம் வீடே குப்பை கூளம் நிறைந்து களேபரமாக இருக்கும்.

மீர்ஸா கடைக்குப் போய்க் கொண்டிருந்தபோது லாஜ்ஜோ வழியில் அவனை நிறுத்தினாள்.

“மியான்… நாளையில் இருந்து மீண்டும் வேலைக்கு வரட்டுமா?” என்று குழைந்தபடி அவனைக் கேட்டாள்.

“லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ்…” தலை குனிந்தபடி மீர்ஸா வேகமாக நடையெடுத்து அவளைக் கடந்து சென்றான்.  எப்படி இருந்தாலும் ஒரு வேலைக்காரியை வீட்டுக்கு வைத்தாக வேண்டும்.  இந்த கேடு கெட்டவள் மீண்டும் வருவதற்கு ஆசைப்படுகிறாள்.  வந்து தொலையட்டுமே…”  என்று யோசனை அவனுக்குள் ஓடியது.

மறுநாள் வரை லாஜ்ஜோ காத்திருக்கவில்லை.  கூரை மீது பரபரவென்று ஏறி அந்த வீட்டுக்குள் குதித்தாள்.  பாவாடையை இழுத்து செருகிக் கொண்டு வேலையைத் தொடங்கினாள்.

மாலை  மீர்ஸா வீட்டுக்கு திரும்பியபோது வீடு இருந்த நிலையைப் பார்த்து மவுத் ஆன  தாயே மீண்டு வந்துவிட்டாளோ என்று நினைத்தான்.  வீடு படு சுத்தமாக இருந்தது.  பாத்திரங்கள் பளிச்சென்று கழுவப்பட்டு ஓழுங்குடன் அடுக்கப்பட்டிருந்தன.  புதிய தண்ணீர்க்குடுவை ஒன்று கட்டில் அருகில்   இருந்தது.  நன்கு தேய்த்துக் கழுவிய குவளை அதன் மேல் வைக்கப்பட்டிருந்தது.  மீர்ஸாவின் இதயம் உணர்ச்சியால் விம்மியது.  கறி கபாப் – ரொட்டியை  அமைதியாக சாப்பிடத் தொடங்கினான்.  வழக்கப்படி லாஜ்ஜோ சமையலறை வாயிற்படியில் அமர்ந்து அவனுக்கு வாகாக விசிறிக் கொண்டிருந்தாள்.

இரவு இரண்டு விரிப்புக்களை படுக்கை போல சமையலறையில் பரப்பி  தரையில் அவள் படுத்தபோது, மீர்ஸாவுக்கு மீண்டும் தண்ணீர் தாகம் வாட்டுவதாக உணர்ந்தான்.  சமையலறையில் லாஜ்ஜோவின் கொலுசு சத்தம் சிணுங்கிய போதெல்லாம் படுக்கையில் அங்கும் இங்கும் புரண்டு கொண்டிருந்தான்.

அவள் செய்யும் வேலைக்கு ஏற்ப அவளை தான் நடத்தவில்லை என்ற குற்ற உணர்வு அவனுக்கு உள்ளுக்குள் அதிகரிக்கத் தொடங்கியது.

“லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ் ….” சடாரென்று படுக்கையில் இருந்து எழுந்து பரபரப்புடன் உள்ளே சென்று அந்த இல்லத்தரசியை தன் கரங்களில் ஏந்திக் கொண்டான்.

-kpenneswaran@gmail.com

Series Navigationகுழந்தைகளை உயரத்தில் வைத்துப் பார்க்கும் நிலை வரவேண்டும் !3.ஔவையாரும் விநாயகப் பெருமானும்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *