தலைவியும் புதல்வனும்

This entry is part 8 of 13 in the series 13 ஜூன் 2021

வளவ. துரையன்

தமிழ்மொழியின் சங்க இலக்கியங்களில் அகத்துறை இலக்கியங்கள் குறிப்பிடத்தக்கவை. இன்னார் என்று பெயர் சுட்டப் பெறாத ஒத்த தலைவனும் தலைவியும் அக ஒழுக்கத்தில் புழங்குவதைக் காட்டுபவை அவை. அவற்றில் தலைவி கூற்று, தலைவன் கூற்று, தோழி கூற்று, தாய் கூற்று, செவிலி கூற்று, பாணன் கூற்று போன்றவற்றைப் பார்க்க முடிகிறது.

 

               “மங்கலம் என்ப மனைமாட்சி மற்றதன்

               நன்கலம் நன்மக்கட் பேறு”

                                       என்று திருவள்ளுவர் கூறுகிறார்.

 

திருமணம் புரிந்துகொண்ட தலைவனும் தலைவியும் நல்ல மக்களைப் பெறுதலே நல்லதோர் இல்லறத்துக்கு அணிகலனாகும். இக்காலத்தில் கூட மணமான பிறகு சில மாதங்கள் கழிந்த பின்னர் மணம் புரிந்து இல்லறத்தில் வாழ்பவரைப் பெரியவர்கள் காணின், “என்ன ஏதேனும் புழு, பூச்சி உண்டா” எனக் கேட்பதைப் பார்க்க முடிகிறது, பிள்ளைப் பேறு உண்டா என்பதையே அவர்கள் மறைமுகமாகக் கேட்கிறார்கள்.

 

இதில் கூட ஒரு நயம் கூறுவார்கள். புழு என்பது ஆண் மகவைக் குறிக்குமாம். ஏனெனில் புழு மண்ணிலேயே உழன்று கொண்டிருக்கும். அதுபோல் ஆணாகப் பிறந்தவன் பிறந்த வீட்டிலேயே இருக்கக் கூடியவன்; ஆனால் பெண்ணோ பிறந்த வீட்டை விட்டுவிட்டு தக்க காலத்தில் மணம்புரிந்து கொண்டு பிறந்த இல்லம் விட்டுப் பூச்சி போலப் பறந்து புகுந்த வீடு போய்ச் சேருபவள்.

 

சங்க காலத்து அகத்துறைப் பாடல்களிலும் தலைவன் தலைவி மணம்புரிந்த பின்னர் புதல்வன் பிறந்து இருப்பதைச் சில பாடல்கள் காட்டுகின்றன.

 

தலைவனும் தலைவியும் மணம்புரிந்து வாழ்கின்றனர். தலைவி கருக் கொள்கிறாள். தலைவன் சில நாள்கள் அவளைப் பிரிந்து பரத்தையர் இல்லம் செல்கிறான். பின்னர் அவன் மீண்டு தலைவியிடம் வருகிறான். அப்பொழுது அவனைப் பார்த்து, தலைவி கூறுவதாக ஐங்குறுநூறு கிழத்தி கூற்றுப் பத்தில் ஐந்தாம் பாடல் அமைந்துள்ளது.   

 

            ”கரும்புநடு பாத்தியில் கலித்த ஆம்பல்

சுரும்பு பசிகளையும் பெரும்புனல் ஊர!

புதல்வனை ஈன்றஎம் மேனி

முயங்கன்மோ தெய்யநின் மார்புசிதைப்பதுவே.”  

     

தலைவனின் ஊரைப் பற்றிச் சொல்லி அவனைத் தலைவி காட்டுகிறாள். கரும்பு நட்ட பாத்தியில் இயல்பாக ஆம்பல் செழித்து வளர்கிறது. அம்மலர்களின் தேன், வண்டுகளின் பசியைப் போக்குகிறது. அப்படிப்பட்ட வளமான ஊரின் தலைவன் அவன் எனபதைக் காட்டும் தலைவி, அவனிடம், “அண்மையில் புதல்வனை ஈன்ற என் மேனியைத் தழுவ வேண்டாம், அப்படித் தழுவினால் அது நின் மார்பின் அழகைச் சிதைக்கும்” என்று கூறுவதாக இப்பாடல் அமைந்துள்ளது.

 

புதல்வனை ஈன்ற தலைவியின் மேனியில் தீம்பால் மணம் கமழும். தலைவனின் மார்போ பூமாலையாலும், சந்தனத்தாலும் புது மணம் வீசிக்கொண்டிருக்கும். எனவேதான், “நீ என்னைத் தழுவினால் அது உன் மார்பின் கோலத்தைச் சிதைக்கும்” எனத் தலைவி உரைக்கிறாள். இதை,

           

             ”இனியே,

             புதல்வன் தடுத்த பாலொடு தடைஇத்,

             திதலை அணிந்த தேங்கொள் மென்முலை

            நறுஞ்சாந் தணிந்த கேழ்கிளர் அகலம்

            வீங்கமுயங்கல் யாம் வேண்டினமே,

             தீம்பால் படுதல் தாமஞ் சினரே.” 

 

என்று அகநானூறு [26] காட்டுகிறது.

 

தலைவியின் புதல்வன் இப்பொழுது தளர்நடைப் பருவத்தில் இருக்கிறான். தலைவன் அவனைக் காண விரும்பி வருகிறான். அப்பொழுது சிறு தேர் ஒன்றை உருட்டிக் கொண்டு புதல்வன் அதன் பின் தளர்நடையுடன் செல்கிறான். ”அப்படிப்பட்ட தன் புதல்வனைக் காண விரும்பி நீ வரும்போது உன்னைக் காணவிடாது பற்றிக் கொண்டு செல்லும் பரத்தை யாவள் எனக்குக் கூறுக; நான் சினத்தால் கேட்கவில்லை; என்னிடம் பொய்யுரைக்காமல் மெய்யினையே கூறுக” என்று தலைவி கேட்பதாக ஐங்குறுநூறு கிழத்தி கூற்றுப் பத்தின் ஆறாம் பாடல் காட்டுகிறது.

 

            ”உடலினென் அல்லேன்; பொய்யாது உரைமோ;

            யார்அவள் மகிழ்ந! தானே தேரொடு

            தளர்நடைப் புதல்வனை உள்ளிநின்

            வளமனை வருதலும், வௌவி யோளே”

 

தலைவி குழந்தையை ஈன்றெடுக்கிறாள். அதன் காரணமாக அவள் எந்த வகை ஒப்பனையும் இன்றி, மெலிந்த மேனியும், குழிந்த கண்களும், புலவு நாற்றமும் உடையவளாக இருக்கிறாள். அதனால் அவள் இப்பாடலில் தனக்கு உவமையாகப் பேயினைக் கூறுகிறாள்.

 

இப்பொழுது தலைவன் அவளிடம் வருகிறான். அவனிடத்தில். “வயல்களில் மீன்களை உண்ட நாரை  கழனியின் மருதமரத்தின் உச்சியில் போய்த் தங்கும் ஊரை உடையவனே! நான் இப்பொழுது மகவைப் பயந்து உருவம் மாறிப் பேயினை ஒத்து இருக்கிறேன். உன் பரத்தைப் பெண்டிர் தூய்மையும் நறு மணமும் கொண்டவர். எனவே நீ அவரிடத்திலேயே செல்க” என்கிறாள். ஐங்குறுநூறு கிழத்தி கூற்றுப் பத்தின் இறுதிப்பாடல் இதுவாகும்.

 

            பழனப் பல்மீன் அருந்த நாரை

            கழனி மருதின் சென்னிச் சேக்கும்

            மாநீர்ப் பொய்கை யாணர் ஊர!

            தூயர் நறியர்நின் பெண்டிர்;

            பேஎய் அனையர்யாம்; சேய்பயந் தனமே.”

 

“இப்பொழுது தலைவன் அழகு பொருந்தியவரிடத்தில் போய் இருக்கட்டும்; தான் நலம் பெற்றபின் தன்னிடம் வரட்டும்” என்னும் தலைவியின் எண்ணம் இங்கு மறைமுகமாகக் காட்டப்படுகிறது போலும்.

 

இவ்வாறு ஐங்குறு நூறு கிழத்தி கூற்றுப் பத்தில் நாம் தலைவியையும் அவள் புதல்வனையும் காணமுடிகிறது எனலாம்.

==================================================================

 

Series Navigationகொரோனா கற்றுக் கொடுத்த வாழ்வியல்குழந்தைகளை உயரத்தில் வைத்துப் பார்க்கும் நிலை வரவேண்டும் !
author

வளவ.துரையன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *