3.ஔவையாரும் விநாயகப் பெருமானும்

This entry is part 11 of 13 in the series 13 ஜூன் 2021

முனைவர் சி. சேதுராமன், தமிழாய்வுத் துறைத்தலைவர்,

மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி(தன்.,) புதுக்கோட்டை.

மின்னஞ்சல்: malar.sethu@gmail.com


ஔவையார் எப்போதும் விநாயகப் பெருமானை காலையில் வழிபாடு செய்வது வழக்கம்.
 புராண காலத்தில் ‌திருமாக்கோதை என்னும் சேரமான் பெருமாள் நாயனார்  ஒருவர் வாழ்ந்திருந்தார். அவர் சேர அரச மரபில் வந்தவர். அவர் சுந்தரமூர்த்தி நாயனார் அவர்களுக்கு நெருங்கிய நண்பர் ஆவார். ஒருசமயம் சுந்தரமூர்த்தி சுவாமிகளும் சேரமான் பெருமாள் நாயனாரும் சிவபெருமான் முன்பு சேரமான் பெருமாள் நாயனார் இயற்றிய பொன்வண்ணத்தாந்தாதியையும், ஆதியுலாவையும் அரங்கேற்றம் செய்யக் கைலாயமலையை நோக்கிச் செல்லத் தொடங்கினர். சுந்தரமூர்த்தி நாயனார் ஐராவத யானையின் மீது சென்றார். அதனைக் கண்ட சேரமான் பெருமாள் நாயனார் தனது குதிரையின் காதில் நமசிவாய என்ற ஐந்தெழுத்து மந்திரத்தைக் கூறியவுடன் குதிரை வானில் ஐராவத யானையைப் பின்பற்றிப் பறக்கத் தொடங்கியது. அவ்வாறு செல்லத் தொடங்கிய அவர்கள் வழியில் விநாயகரை வழிபாடு செய்து கொண்டிருந்த ஔவையாரைப் பார்த்து அவரையும் அழைத்தனர்.

அவர்கள் அழைத்ததைக் கண்ட ஔவையார் அவர்களுடன் சென்று கைலாயத்தில் நடைபெறும் அரங்கேற்றத்தைக் காண வேண்டும் என்று விரும்பினார். அதனால் விநாயகருக்கு வழிபாட்டினை விரைந்து செய்யத் தொடங்கினார்.

இதனைக் கண்ட விநாயகர் ஔவையை நோக்கி, ‘‘ஔவையே! வழக்கம்போல் வழிபாட்டினை விரைவாக அல்லாமல் மெதுவாகவே செய்வாயாக. அவர்கள் கைலாயத்திற்குச் செல்வதற்கு முன்னர் உன்னைக் கொண்டுபோய் அங்கு சேர்த்துவிடுகிறேன் என்று கூறினார். மேலும் ஔவையாரைப் பார்த்து, ‘‘நீ அனைவருக்காகவும் நிறையப் பாடல்கள் பாடியுள்ளாய். எனக்காக ஒரு பாடலைப் பாடுவாயாக’’ என்று கூறவும் ஔவையார், ‘‘சீதக் களபச் செந்தாமரையும்’’ என்ற விநாயகர் அகவலைப் பாடி வழிபட்டார்.

அவரது பாடலைக் கேட்டு இன்புற்ற விநாயகப்பெருமான்  ஔவையாரைத் தனது துதிக்கையால் தூக்கி கைலாயத்தில் சிவபெருமான் திருமுன்பு விட்டனர். ஔவையார் இறைவனை வணங்கி அங்கு சேர்ந்து இருந்தார். ஔவையார் அங்கு சேர்ந்த சில நேரம் கழிந்த பின்னரே சுந்தரரும் சேரமான் பெருமாள் நாயனாரும் வந்தனர். ஔவையார் தங்களுக்கு முன்பு வந்திருப்பதை அறிந்து வியப்பில் ஆழ்ந்தனர். அவரிடம் தங்களுக்கு முன் அங்கு வந்து சேர்ந்தது எவ்வாறு என்பதறியத் துடித்தனர். அவர்களது துடிப்பையும் வியப்பையும் கண்ட ஔவையார் அவர்களை அணுகி விநாயகப் பெருமான் தனக்கு அருள்புரிந்த திறத்தை எடுத்துரைத்து,

‘‘மதுர மொழிநல் லுமையாள் சிறுவன் மலரடியை

முதிர நினையவல் லார்க்கு அரிதோ? முகில் போல் முழங்கி,

அதி வருகின்ற யானையும் தேரும் அதன்பின்சென்ற

குதிரையும் காதம் கிழவியும் காதம் குலமன்னனே!’’

என்ற பாடலையும் பாடினார். ஔவையாரின் விருப்பத்தை ஒரு நொடிக்குள் விநாயகப் பெருமான் நிறைவேற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

       இதில் வேறொரு கதையையும் வழக்கில் வழங்கி வருகிறது. சுந்தரமூர்த்தி நாயனார் வீடுபேறடைய அனைத்தையும் துறந்து கைலாயத்திற்கு ஐராவத யானையின் மீது ஏறிச் சென்றார். அதனைக் கண்ட அவரது நண்பர் சேரமான்பெருமாள் நாயனார் தானும் கைலாயத்திற்குச் செல்ல விரும்பி தான் ஏறி வந்த குதிரையின் காதில் பாஞ்சாட்சர மந்திரத்தைக் கூற குதிரை ஐராவத யானையைப் பின்தொடர்ந்தது. தங்களது மன்னன் கைலாயம் செல்வதை அறிந்து அவரைக் காணாத அரச சுற்றத்தினர் அனைவரும் மாய்ந்தனர். அவர்களும் இறைவனை நோக்கிச்செல்வராயினர். அப்போது ஔவையைக் கண்ட சுந்தரரும் சேரமான் பெருமாள் நாயனாரும் கைலாயத்திற்கு வரவில்லையா எனக் கேட்க முன்னர் கூறப்பட்ட நிகழ்ச்சி நடைபெற்றது என்பர். இது ஔவைக்கு விநாயகப்பெருமான் அருளிய நிகழ்ச்சியாகும்.

Series Navigationஇல்லத்தரசி – உருது மூலம் –இஸ்மத் சுக்தாய்கண்ணதாசன்
author

முனைவர் சி.சேதுராமன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *