கிழவி

author
1
0 minutes, 1 second Read
This entry is part 10 of 10 in the series 27 ஜூன் 2021

வேல்விழிமோகன் 

கொஞ்சமாக இருந்த அந்த இடத்தில் பாட்டி நீட்டி உட்கார்ந்தாள்.. உட்காருவது கஷ்டமாக இருந்தது.. உடம்பெல்லாம் அங்கங்கே வலித்தது.. அருகில் பொது கழிவறை.. நாற்றம்.. வரிசையாக படுத்துக்கிடக்கும் ரிக்சா ஓட்டிகள்.. ஆலமரம்.. பழைய டி.எம்.எஸ் பாடல்.. நாயொன்று தூங்கிக்கொண்டிருந்தது.. டிபன் கடையில் இரண்டு பேர் வெற்றுடம்புடன் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்.. முக்கிய சாலையான அந்த இடத்தில் கொஞ்சம் தள்ளியிருந்த கோயிலின் வாசலில் நான்கைந்து பெண்கள் பூக்கட்டிக் கொண்டிருந்தார்கள்..

      அதில் ஒருத்தி “ஏய் கிழவி” என்றாள்..

      கிழவி திரும்பவில்லை.. அசதியாக இருந்தது..  டிபன்கடை அங்கம்மா ஓரக்கண்ணால் பார்த்து “சாப்பிடறியா..?”

      “வேணாம்.,”

      “தோச இருக்குது”

              “வேணாம்”

      “கம்பங்கஞ்சி..?”

              “வேணாம்”

      நிறைய காகங்கள் கீழே வந்து தரையில் கொத்திக் கொண்டிருந்தன.. “போனால் போகட்டும் போடா.. “ தொடர்ந்தது..  ரிக்சாக்களின் மடியில் மடிந்து தூங்கிக் கொண்டிருந்தவர்களின் உதட்டில் குறட்டை கேட்டது.. புள்ளி புள்ளியாக வெயில்.. இரண்டு குழந்தைகள் விரிந்திருந்த புடவையில் விளையாடிக் கொண்டிருந்தன.. பழக்கடைக்காரன் தள்ளு வண்டியை ஒரு ஓரமாக ;நிறுத்திவிட்டு மீசையை தடவிக்கொண்டு டிபன் கடைக்கு நகர்ந்தான்..

      “இட்லி இருக்காய்யா..?”

      “இல்ல.. தோச..?”

      “ரண்டுக் கொடு..”

      “சட்னி காலி ..”

      “கொடு.. கொடு”

      வாங்கிக்கொண்டு சாம்பாருடன் வண்டியருகே வsந்து அதற்குள் ஒரு வாய் போட்டுக்கொண்டவன் கிழவியை கவனித்து “சாப்புட்டியா..?” என்றான்..

      அவள் முகத்தை தரையில் புதைத்துக்கொண்டாள்.. இவன் சிரித்தபடி “வழக்கம்போல பையன்கிட்ட அடி உதையா..?” என்றான்..

                                 0000

      கிழவி எழுந்து வேறு பக்கம் நடந்து “ஏய் கெளவி.. கூப்புட்டா வரமாட்டியா..?” என்கிற பூக்காரியின் குரலைக் கடந்து இடதுபுறம் பிரிந்து இரண்டு மளிகைக் கடைகளை கடந்து  வேகவேகமாக நடக்க முயன்றாள்.. இடதுப் பக்கம் முதுகில்தான் நிறைய வலித்தது.. இது மூன்றாவது முறை… பத்து நாளைக்கு முன்புதான் தலையில் அடிபட்டு இரத்த காயத்துடன் இரண்டு நாள் ஆஸ்பத்திரியில் படுத்துவிட்டு வந்திருந்தாள்.. பயமாக இருக்கிறது.. இரத்தம்.. அவனுடைய ஆவேசம்.. குடி நாத்தம்.. அந்த தாடி.. வெறித்த கண்கள்.. ஒடுங்கிப்போய் உட்கார்ந்தாலும் அடிக்க கையை ஓங்கும் கோவம்.. அவன் மீதான பாசமெல்லாம் போய் வெறுப்பு வந்துவிட்டது..

      “என்னைய விட்டுட்டு போயிடு” என்று பலமுறை சொல்லிவிட்டாள்

      “நான் ஏன் போனும்.. நீ வேணா போ”

      ““நான் எங்க போறது?”

      “நான் மட்டும் எங்க போறது..?”

      “போயிடு.. எங்கயாச்சம்.. கண்ணுக்கு மறைவா.. போன மொற பொழச்சதே பெரிய விழயம்.. நான் வயசானவப்பா.. “

      “இதப்பாரு.. சும்மா பொலம்பாத.. ஊட்டுக்கு வந்தா நூறோ.. அம்பதோ கொடுத்துரு.. கம்னு ஆயிடறேன்.. எனக்கு உன்னய விட்டா ஆரு இருக்கா.. “

      “சரி.. நானே போய்டறென்..” தனக்குத்தானே முணுமுணுத்துக் கொண்டாள்.. மன்னார் வீதி வந்து இடதுபுறம் திரும்பி அங்கிருந்த பலகைக்கல் மீது கொஞ்ச நேரம் அமர்ந்தாள்.. ஒரு குதிரை வண்டி கடந்துப்போனது.. இரண்டு பெண்கள் சிரித்தபடியே போனார்கள்.. வெயில் காலடியில் விழுந்து சுட்டது.. சற்று தள்ளி குப்பைத் தொட்டியில் ஒரு ஆள் எதையோ நோண்டிக்கொண்டிருந்தான்.. எழுந்து நடந்தாள்.. முதுகு மீண்டும் வலித்தது.. “தனியா எங்க போறது..?.”. வெயிலில் அவள் மூச்சுக்காற்று வெப்பமாக வெளியே வந்தது..

                            000000

      பாக்யா மெஸ்ஸில் மின்விசிறி காற்றில் கல்லாவை திறந்நு திறந்து மூடிக்கொண்டிருந்த பெரியவர் பாட்டியை பார்த்ததும் ஒரு சிரிப்பு சிரித்தார்.. ஆனால் பாட்டி அங்கைய்யாவை கவனித்தது.. அங்கைய்யா இரண்டு டேபிளை தாண்டி பெரிய வாழையிலையில் சாதத்தை கொட்டிவிட்டு “சாம்பார் கொண்டாப்பா..” என்று அடுத்த டேபிளுக்கு நகர்ந்தான்..

      “அய்யா.. உங்களுக்கு..? ,, ரசமா.. மோரா.. ஒரு ஆம்லெட் கொண்டு வரச் சொல்லவா,,?”

      “இல்லை.. வேணாம்.. தண்ணி..”

      “சாருக்கு தண்ணிய கொடு.. அம்மா.. உங்களுக்கு..?.. சிக்கன் பிரியாணி.. மட்டன் பிரியாணி.. சாதம்.. ஆம்லெட்.. தலப்பொறியல்.. போட்டி வருவல்.. நாட்டுக்கோழி மசாலு.

      “சாதம் போதும்.. “

      “அம்மாவுக்கு சாதம்.. அப்படியே ஒரு மட்டன் பிரியாணி..”

      “டேய் அங்கி.. அங்கி.. “ அவன் திரும்பிப்பார்த்து “என்னங்கைய்யா..?”

      பெரியவர் பாட்டியை காட்ட அது ஒரு ஓரமாக போய் நின்றுக்கொண்டது… அவன் நான்கைந்து டேளிலில் ஆர்டர் கொடுத்துவிட்டு வியர்வையை துடைத்தபடி வந்தான்.. பாட்டியை அங்கே காணோம்.. பெரியவர் “இங்கதானே இருந்தது..” என்று வெளியே பார்க்க வேறுமுகங்களுக்கு நடுவே இவனும் தேடினான்..

      “காணோமே..”

                                 0000

      வீடு பழையப்பேட்டையில் பின்புறம் இருக்கிறது.. அது வீடு மாதிரிதான்.. அரசாங்க இடமான அந்த இடத்தில் இவள் கணவன் ஐம்பது வருடங்களுக்கு முன்பு இடத்தை வளைத்தபோது சுமார் நூறு நபர்களில் அவனும் ஒருவன்.. இன்று அது ரோ!ஸ் காலணியாக வளர்ந்து நிற்கிறது.. அவன்தான் இல்லை.. மூன்று வருடங்களுக்கு முன்பு அவன் இறக்கும்போது பின்னால் பையனால் வருத்தப்படுவோம் என்று தோணவில்லை.. அவன் இல்லாதது இப்போது தெரிகிறது.. “சாப்புட்டியா?” என்று கேட்காமல் இருக்கமாட்டான்.. வரும்போது சாப்பிடுவதற்கு ஏதாவது வாங்கிக்கொண்டு வருவான்.. “நான் வூடு புடிச்சதுக்கு நீதான் காரணம்.. எனக்கு குடும்பமுன்னு ஒன்னு இருக்கறது சந்தோழமா இருக்கு.. “ என்பான் அடிக்கடி..

      இந்த இடம் அவரவர்களுக்கு நிலையானது என்பது மாதிரி பல வருடங்கள் கழிந்து தெரிந்தபோது நிறைய பேர் வருத்தப்பட்டார்கள்.. பட்டா வாங்கி சம்பந்தப்பட்ட அரசியல்வாதிக்கு விழா எடுத்தார்கள்.. பத்திரிகைகளில் பட்டா செய்தியோடு பின்னனி கதை தெரிந்தப்பிறகு ஒரு சிலர் அந்தப்பகுதியை ஒட்டிய மலைமேடுகளில் இடம் பிடிக்க ஆரம்பித்தார்கள்.. இரவோடு இரவாக அவர்கள் துரத்தியடிக்கப்பட்டார்கள்..

      “இந்த இடம் நமக்கே சொந்தம்..” என்று ஒரு கோஷ்டி உருவானது.. அதில் இவள் கணவனும் ஒருத்தன்.. அடிதடி.. சாராயம்.. கோஷ்டி தகறாரு என்று அவன் கொஞ்சம் கொஞ்சமாக வேறு மாதிரி உருவானபோது “வேண்டாம்யா.. “ என்றாள்..

      “சும்மாரு.. இன்னொரு எடம் கெடைக்கப்போகுது.. அண்ணாசி சொல்லிட்டான்..”

      “வம்பு வேணாம்யா.. உயிருக்கு பாதுகாப்பு இல்லே.. பயமா இருக்கு”

      “பயப்படாதே.. அண்ணாசி பாத்துக்குவான்..”

      “அண்ணாசி.. அண்ணாசி.. அவம் மேல கொல கேசு இருக்காமே..”

      “இன்னிக்கு நமக்கு சொந்த ஊடு இருக்குதுன்னா அவன்தான் காரணம்.. பெனாத்தாதே,,”

      “பயமா இருக்குதுய்யா..”

      “எதுக்கு பயம் .. அண்ணாசி இருக்கும்போது.. “

      அவள் யோசித்து “வேற எங்கையாவது போய்டலாமாய்யா..?”

      அவன் திகைத்து.. “செலவில்லாம எடமும் கெடைச்சாச்சு.. வீடும் கட்டியாச்சு.. ஏதோ நம்மால முடிஞ்சது.. ஓலையும்.. ஓடும் வச்சு ரண்டு ரூமுக்கு வீடு மாதிரி அமைச்சாச்சு.. மத்தவங்களுக்கு எப்படியோ.. நமக்கு எப்புடின்னா மழை வந்தா நனையாம இருக்கோனும்.. எப்புடி..?”

      கிழவி கதவைத் திறந்தாள்.. சுவரெங்கும் அந்த நடிகனின் படம்.. நிறைய ஆணிகள் அறையப்பட்டு துணிகள் தொங்கிக்கொண்டிருந்தது..நடுவில் எம்.ஜி.ஆர்.. இரண்டு குரங்கு பொம்மைகள் கயிறில் கட்டி அந்தரங்கத்தில்.. அதற்கப்பால் ஒரு அறை.. சிறிய கட்டில்.. வெள்ளை கருப்பில் இவர்களது புகைப்படம்.. பக்கத்தில் சின்ன சின்ன அலங்காரத்தில் பையன் படங்கள்.. பெரும்பாலும் கருப்பு கண்ணாடியில்.. காலையில் எதையோ எடுத்து அவன் முதுகில் வீசியது நினைவுக்கு வந்தது..

      “ஆயா.. ஆயா,, “ குரல் வெளியிலிருந்து..

      “என்னாடி.. மனுஷிய நிம்மதியா இருக்க உடமாட்டீங்களா..?”

      மறு சத்தம் இல்லை.. “அடியே.. அடியே..” என்றாள.. சத்தம் இல்லை.. வெளியே வந்தாள்.. நேர்கோடு மாதிரி தெரு.. வீட்டுக்கு வீடு முன்னாடி சிறிய மரங்கள்.. திறந்த காவாய்.. நாற்றம்.. நாய்கள்.. ஒரு வீட்டின் பசுமாட்டு சாணி வாசனை சேர்ந்து வந்தது..இரண்டு மூன்று வீட்டிலிருந்து எட்டிப் பார்த்தார்கள்.. குரல் கொடுத்தவள் தூரமாக நின்று பார்த்துக்கொண்டிருந்தாள்..   

      “என்னாடி பம்மிட்டு.. சொல்றதை சொல்லித் தொலையேன்..”

      “உனக்கு விழயம் தெரியாதா..?”

      அவள் குரதில் பதட்டம்.. இவள் கொஞ்சம் நெருங்கி “என்னாடி.. என்னவோ பதபதங்குது..”

      “உம் பையனை போலிஸ்ல படிச்சுட்டு போய்ட்டாங்களாமே.. “

      “அச்சச்சோ.. என்னாடி ஆச்சுது..?”

      “கொஞ்ச நேரத்துக்கு முந்தி அண்ணாசியை போட்டுத் தள்ளிட்டாங்களாம்.. அதுல இவனும் ஒருத்தனாம்.. “

                            0000

      அங்கைய்யா பல்லை நோண்டிக்கொண்டிருந்தான்.. அது அவனது பழக்கம்.. முன்புறம் சேர்ந்த கூட்டம் கலைந்துப்போயிருந்தது.. மீண்டும் அந்த சாணி..கோமிய வாசனை.. உடன் இரண்டு பெரியவர்கள் வாயை தடவிக்கொண்டு உட்கார்ந்திருந்தார்கள்.. இவளுக்கு தொண்டை வரைக்கும் அடைத்து வெளியே வராமல் தவித்துக் கொண்டிருந்தது.. சற்றுத் தள்ளி ஆங்காங்கே கூடிப்பேசி பயத்தில் விலகிக் கொண்டிருந்தார்கள்..  ஒரு பெட்டிக்கடையும்.. அதற்கு அப்பால் எப்போதும் காரமாக எண்ணெய் வாசனையுடன் இருக்கும் போண்டா கடையையும் மூடியிருந்தார்கள்.. பாட்டி “முதுகு ரொப்ப வலிக்குது” என்றாள்..

      “கடைக்கு வந்தியே.. வந்திட்டு காணாம போய்ட்டா எப்புடி.?.. “

      “உன்னைய பாத்தா ஒரு ஆறுதலா இருக்குமுன்னுதான்..”

      “தெரியும்மா.. உன் ஊட்டுக்காரும் நானும் அதே கடைய பத்து வருழம் ஒன்னா வேல செஞ்சோம்.. மொதலாளிக்கு எங்க சிநேகிதம் தெரியும்.. இப்பக் கூட ஒரு நூறு ரூவா கொடுத்தனுப்பிச்சாரு.. கொடுத்துட்டு விசாரிச்சுட்டு வான்னு.. நானும் என்னவோ ஏதோன்னு ஓடியாந்தேன்.. இங்கன வந்தா வேற கதையில்ல ஓடுது.. “

      ஒரு பெரியவர்..”பழிக்குப் பழி,, அப்பன்காரன போட்டுத் தள்ளினாங்கள்ள. “

      இன்னொருவர் ..”அதுக்கு..?”

      பாட்டி “கம்முன்னு கெடங்க..” என்றாள்..

      “என்னத்த இருக்கறது.. பையனுக்கு பழி வாங்கற கோவம்.. முடுச்சுட்டான்.. அண்ணாசிக்கு உன் ஊட்டுக்காரன் வேற கோஷ்டிக்கு போனப்புறம் கை ஒடிஞ்சாப்ல ஆயிருச்சு.. சந்தர்ப்பம் பார்த்து பாலத்துப்பக்கம் போட்டுத் தள்ளிட்டான்.. பையனுக்கு முடுச்சு உளுந்தாச்சு.. அண்ணாசி மேல பகைய வச்சுட்டான்.. முடிச்சுட்டான்.. “

      பாட்டி அங்கைய்யாவிடம் “முதுகு வலிக்குதப்பா ரொம்ப”

      “ஆஸ்பிட்டலுக்கு போலாமாய்யா..”

      “கொஞ்சம் கூட்டிட்டுப் போய் கூட்டிக்கிட்டு வந்து வுட்டுடு.. “

      “செய்யறேன்.. வா போலாம்.. பெருசு.. கொஞ்சம் கெளம்புங்க.. “ வெளியே வந்து பக்கத்தில்.. “ஆட்டோ.. சைக்கிள் ரிக்சா ஏதாவது கெடைக்குமா.. ?”

      “ஆட்டோ பாருங்க.. அங்கன நிக்குது.. கூப்புட்டா..?”

      “வரச்சொல்லுங்க..”

      கிழவி தள்ளாடி வெளியே  வந்து ஆட்டோவில் உட்கார்ந்தபோது இரண்டு பெண்கள் இரண்டு பக்கமாய் ஏறி ஏறக்குறைய அணைத்து “கவர்மெண்டு ஆஸ்பிட்டலுக்கே போச்சொல்லு தம்பி.. ரொம்ப வலிக்குதா ஆயா.?.”

      அங்கைய்யா..”பேச்சுக் கொடுக்காதீங்க.. ஆயா.. ஜி.எச்.சுக்கே போய்டலாமா..?”

      “வேணாம்.. ஸ்டேஷன் பக்கம் வுடச்சொல்லு..” என்றாள் கிழவி..

                            0000

velvizhiimohan@gmail.com

Series Navigationஅடிவாரமும் மலையுச்சியும்
author

Similar Posts

Comments

  1. Avatar
    jananesan says:

    அடித்தட்டு மக்கள்வாழ்நிலை விவரிப்பு அருமை.வாழ்த்துகள் வேல்விழிமோகன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *