கபிரியல் காசியா மார்குவசின் ‘லவ் இன் த ரைம் ஒவ் கொலரா’ (Love in the time of cholera), எனக்கு மிகவும் பிடித்த நாவல். அந்த நாவலை அவுஸ்திரேலியா, விக்டோரியா மாநிலத்தில் உயர்தர வகுப்பினருக்கு (Year12), ஆங்கில இலக்கியப் பாடப் புத்தகமாக்க விரும்பியபோது, அதற்கு எதிராகப் பலர் போர்க்கொடி தூக்கினார்கள். ஒரு சிறிய சம்பவமே இதற்கான காரணம்;. அந்த நாவலில், காதலன் துறைமுகம் அருகே சந்தித்த ஒரு இளம் பெண்ணுடன் உடலுறவு கொள்கிறான். அந்தப் பெண் அப்போது, பல்லை ஒழுங்கு படுத்தும் கிளிப் அணிந்திருந்தாள் என நாவலில் சொல்லப் படுகிறது. பதினெட்டு வயதுக்கு உட்பட்டவர்களே அந்தக் கிளிப்பை அணிவததால், வயது குறைந்த (Underage) ஒரு பெண்ணுடன் உறவு வைத்ததாக அந்த விடயம் பார்க்கப்பட்டது. இது, சைல்ட் அபியூஸ் (Child abuse) என்ற வகைக்குள் அடங்குவதால், இந்த நாவல் பாடசாலை கல்வித் திட்டத்திலிருந்து விலக்கப்பட்டது.
இந்த நாவலில் கதாநாயகன் நற்குணமானவனாகக் காட்டப்படுவதால் கபிரியல் காசியா மார்குவசின், அத்துமீறலாக நான் இதைப் புரிந்து கொள்கிறேன். அதாவது தமிழ்த் திரைப்படத்தில் சிறந்த கணவனாகவும், காதலானாக வருபவன், பல தொடர் கொலைகளைச் செய்வான். ஆனால் தீயில், எஸ் பொன்னத்துரை இளம் சிறுமியுடன் உறவு வைப்பவனை அந்த காமத்தால் அழிபவனாகக் காட்டுவதால், எஸ்பொவின், தீ என்ற நாவலை என்னால் ஏற்றுக்கொள்ளமுடிகிறது.
60 வருடங்கள் முன்பாக எஸ் பொன்னுத்துரையால் எழுதப்பட்ட தீ, பலரால் பல கோணங்களில் பேசப்பட்டது. காமத்தைப் பேசும் நாவலாக எழுத்தாளர்களாலும், மறைத்து வைத்துப் படிக்க வேண்டிய நாவலாக வாசகர்களாலும், கொளுத்தப்படவேண்டியது என ஒழுக்க சீலர்களாலும் எழுதப்பட்டது. சுருக்கமாகச் சொன்னால் யானையைப் பார்த்த குருடர்களாகவே இந்த நாவலை எல்லோரும் பார்த்தார்கள். எஸ் பொன்னுத்துரை தவிர்த்து யாராவது ஒருவர் இந்த நாவலை எழுதியிருந்தால் இந்த நாவல் தமிழ் உலகில் மேலும் முக்கியப் படுத்தப்படிருக்கும். அதில் சோசலிச யதார்த்தத்தை யாராவது கண்டுபிடித்திருப்பார்கள்.
இந்த நாவலில், காமம் தீயாக உருவகப் படுத்தப்பட்டுள்ளது. இந்தத் தீ ‘எதை மூலப் பொருளாக் கொண்டு எரிகிறதோ, அதை அழித்து முடிவில் சாம்பலாக்கிறது’ என்ற படிமத்தின் வடிவமாகக் காட்டப்பட்டுள்ளது. அதைப் பலர் புரிந்துகொண்டார்களா? என்பது கேள்வி.
நாவலில் பல பெண்களுடன் உடலுறவில் ஈடுபட்ட நாயகன், இறுதியில், ருதுவாகாத இளம் பெண்ணை, அதுவும் ஒரு ஆசிரியராக இருப்பவன், உறவு வைக்கும் பகுதி வரும்போது என்னால் தொடர்ந்து படிக்க முடியவில்லை. சிறுவயதில் சிறார்களின் பாலியல் உறவுகளை ஏற்றுக்கொள்ளும் எனது மனதால், இங்கே ஒரு குருவாக, பிள்ளைகளுக்கு ஒழுக்கத்தைப் போதிக்கும் பொறுப்பில் உள்ளவர் நடந்து கொண்ட விதத்தை ஏற்க முடியவில்லை .
ஆனால் சற்று யோசித்தால், இவை நடக்காதவையா? அல்லது நாம் கேள்விப்படாத விடயங்களா? ஆசிரியர்கள், வைத்தியர்கள் என்போர், அவர்களுக்குப் பதவிகள் அளித்த மரியாதையையும் சந்தர்ப்பத்தையும் காலாதிகாலமாகத் துஷ்பிரயோகம் செய்வதில்லையா?
நாவலில் நம்பகத்தன்மை இருக்கவேண்டும். பாத்திரப் படைப்பு செறிதாக இருக்கவேண்டும். பாத்திரத்தின் செய்கைகள் மற்றும் மன ஓட்டங்களுக்குக் காரணங்கள் கற்பிக்கவேண்டும். இவை இந்த நாவலில் உள்ளன.
யோசப் சாமியாரால் விடுதியில் வைத்து ஒரு சிறுவனது அப்பாவித்தனம் சூறையாடப்பட்டு, வக்கிரம் விதைக்கப்படுகிறது. இது கூட வெகு சாதாரணமாக கல்லூரி விடுதி, மற்றும் குருத்துவப் (Seminary) பாடசாலைகளில் நடக்கும் விடயங்கள். ஆண் சிறுவர்கள் சூறையாடப்படும்போது அவர்கள் கருக்கொள்ளாததால் சமூகத்தில் அது பெரியதாக எடுத்துக் கொள்ளப்படுவதில்லை. கண்ணுக்குத் தெரியாதவற்றை நாம் கணக்கில் எடுப்பதில்லை, கடவுளைத் தவிர! ஆனால், இப்படி அப்பாவித்தனம் சூறையாடப்பட்டவர்கள் பிற்காலத்தில் சூறையாடியவர்களின் புதிய பதிப்பாகிறார்கள். அப்படியான ஒருவரே தீயின் கதாநாயகன்.
உண்மையான வரலாற்றை படித்து, நாம் புரிந்து கொள்வதன் மூலம் சமூகத்தைப் பரிந்து கொள்ள முடியும். ஆனால் இலக்கிய புனைவுகளே தனிமனிதர்களின் மனக்குகையின் வக்கிரங்களை அறியவைக்கும் சாதனம். நமது சமூகம் இலக்கியத்தையும் வரலாற்றையும் ஒதுக்கி விடுவதன் மூலம் நடந்தவை, மீண்டும் நடக்கின்றன..
தீயில் வரும் கதாநாயகன் மட்டுமே இங்கு பேசப்படவேண்டிய ஒரே பாத்திரம். மற்றைய பெண் பாத்திரங்கள் தட்டையானவை. ஒரு பாத்திரத்தின் உறுதியற்ற தன்மை, மற்றும் தோல்விகளுக்கு, காம உணர்வுகளின் மூலம் வடிகால் தேடும் பரிதாபத்துக்குரிய ஆண் பாத்திரமாக உருமாறுவதற்கு ஊக்கிகளாக வருகிறார்கள்.
எஸ். பொன்னுத்துரையின் தீ நாவலில் உள்ள மற்ற முக்கிய விடயம், மனவோட்டங்களின் வழியே கதையின் பெரும்பகுதி சொல்லப்படுவது . இது அக்கால தமிழ் நாவல்களில் அரிது. இதைச் சடங்கிலும் பயன் படுத்தியுள்ளார். எந்த புறச்சித்தரிப்புமற்ற நாவலாக வரும் நாவல் இது. பாத்திரத்தின் நினைவில் காமம் நதியாக ஓடியபோது, பல இடங்களில் கரையை மீறுகிறது என்பதாக உருவகிக்க முடியும். இப்படியான நாவல்கள் நம்மிடையே குறைவே.
குறையாக கருதுவது, தீயில் உள்ள பாலியல் எண்ணங்களை எழுதுவதற்குக் கூச்சப்பட்ட எஸ் பொன்னுத்துரை வைரமுத்துபோல் தேவையற்ற அலங்கார வார்த்தைகளால் இடறுவது நாவலின் குறைபாடு – ஆங்கிலத்தில் இதை ‘பேப்பில் புரோஸ்’ (Purple prose) என்பார்கள்.
காமமும் அதன் மீறல்களும், காலம் காலமாகத் தொடரும் என்பதால் எமது தலைமுறையில் மட்டுமல்ல, எதிர்கால தலைமுறையிலும் தீ தொடர்ச்சியாகப் பேசப்படும் செவ்வியல் நாவலாகும்.