வெங்கடேசன்
குவாக்காக்கள் சாதுவான பிராணிகள்.
வெறும் இலை தழைகளை உண்ணும்
தாவர பக்ஷினி.
ஒருத்தர்க்கும் யாதொரு தீங்கில்லை இவற்றால்,
அமைதியாக வாழ்கின்றன இத்தீவில்.
குடிபோதையில் நாங்கள் கால்பந்தாக உதைத்துச் சிதைத்தாலும்
மிகச்சாதுவாய் பழகுகின்றன – யாதொரு வன்மமும் பாராட்டாமல்.
எங்களிடம் போட்டோ எடுத்துக் கொள்கின்றன.
போட்டோவிற்கு புன்முறுவல் பூக்கின்றன.
அதுவும் அம்மா குவாக்காக்கள்
பரமார்த்திகள்.
தன் குட்டியை வயிற்றுப் பையில் சுமந்துகொண்டு
போட்டோவிற்கு எத்தனை பெருமையாய்
திருப்தியாய் மகிழ்ச்சியாய் போஸ் தருகின்றன.
எவ்வித எதிர்ப்பார்ப்புகளுமில்லை
இவ்வாழ்வில் இவைகளுக்கு,
ஏமாற்றமுமில்லை யாரிடமும்.
எதிர்காலத்தைப் பற்றிய கவலையுமில்லை.
உணவை சேமிப்பதுமில்லை.
நரிகளும் பூனைகளும் எங்களால் இத்தீவில்
கொண்டுவிடப்பட்ட புதிதில்
தம்மை வேட்டையாடுபவைகள் என்று கூடத்தெரியாமல்
நேசமாகவே பழகின.
நரிகளும் பூனைகளும் தங்களைத் தாக்க வந்த புதிதில்
என்ன செய்வதென்றறியாமல் திகைத்து உறைந்து நின்றன.
பின்னர் சுதாரித்துக் கொண்டோடத் துவங்கின.
மிக வேகமாக ஓடத்துவங்கின! தாவித்தாவித் துள்ளிக் குதித்தோடத்துவங்கின!
இன்றும் இத்தீவின் பூர்வீக நச்சுப் பாம்புகளுடனும் பருந்துகளுடனும் மற்றும்
கொண்டுவிடப்பட்ட நரிகளோடும் பூனைகளோடும் சமாதானமாகவே வாழ்கின்றன.
எதிர்த்துச் சண்டையிடத் தெரியவில்லை.
ஆபத்திலிருந்து தற்காத்துக் கொள்ளவும் தெரியவில்லை.
பரப்பிரம்மம் ஜெகந்நாதம்!
மிகவேகமாக ஓடுகின்றன!
தாவித்தாவித் துள்ளிக் குதித்தோடுகின்றன!
நரிகளோ பூனைகளோ வேட்டையாடத் துரத்தினால்
அம்மா குவாக்காக்கள் குட்டியைச் சாப்பிடத் தந்துவிட்டு
மிகவேகமாக ஓடுகின்றன! குட்டியைச் சுமந்து வேகமாக ஓடி தப்பிக்க முடியாதல்லவா?
தப்பிக்க முடியாமற்போனால் தாமே குட்டியுடன் இரையாகின்றன.
அதுவும் அம்மா குவாக்காக்கள் பரமார்த்திகள்.