நடந்தாய் வாழி, காவேரி – 3

author
0 minutes, 0 seconds Read
This entry is part 5 of 18 in the series 11 ஜூலை 2021

 

 

அழகியசிங்கர்

          இங்கே காவேரியைப் பற்றி ஒரு வரைப்படம் தருகிறார்கள்.  குடகுப் பிரதேசத்தில் பிரம்மகிரி மலையில் உற்பத்தியாகும் காவேரி,

        சித்தபூர் வரையில் கிழக்கு நோக்கிப் பாய்கிறது.  பின்னர் வடக்கே திரும்பி குஷால் நகர் என்னும் பிரேஸர் பேட்டைக்கு அருகில் மைசூர்.பிரதேசத்தைத் தொட்ட வண்ணம் இருபது மைல் தூரம் மைசூருக்கும் குடகுக்கும் இடையே ஓடுகிறது.  அதற்குப் பிறகு காவேரியின் ஓட்டத்தில் தென் கிழக்குப் பக்கமாக ஒரு திருப்பம் ஏற்படுகிறது.  மைசூர் பீடபூமிப் பிரதேசத்திற்குள் பிரவேசித்த பிறகு ஒரு பெரிய மலைப்பிளவு வழியாக ஓடி சஞ்சன் கட்டே என்ற இடத்தில் எண்பதடி உயரத்திலிருந்து நீர் வீழ்ச்சியாக விழுகிறது. மீண்டும் சிறிது வடக்கே திரும்பிப் பாயும் பொழுதுதான் ஹேமவதி காவேரியுடன் வந்து சேர்கிறது.  ஏற்கனவே குடகுப் பிரதேசத்தில் கனகாவும்கருகண்டகி ஹோலி , சிக்கோலி  ஹோலி  என்னும் சிற்றாறுகளும் காவேரியுடன் கலந்து விடுகின்றன.

         

மைசூர் ராஜ்ஜியத்தை விட்டுத் தமிழ் நாட்டுக்குள் வருவதற்கு முன் காவேரியுடன் கலக்கும் உபநதி அர்க்காவதி.  தலைக்காவேரியிலிருந்து காவிரிப்பூம்பட்டினத்திற்கருகே வங்கக் கடலில் சங்கமம் ஆகும் வரை காவேரியின் நீளம் 760 கிலோமீட்டர்கள்இதில் இருநூறு கிலோமீட்டர்கள் தூரம் மைசூர்ப் பிரதேசத்தில் பாய்கிறது.  எஞ்சிய பெரும் பாகமான 560 கிலோமீட்டர்கள் நீளம் தமிழ் நாட்டில் பாய்கிறது.

          காவேரி தமிழ்நாட்டில் சேலம் மாவட்டத்திற்குள் நுழைந்தவுடன் முதன் முதலில்  அவளுடன் சேரும் உபநதி தொட்டவள்ளி என்பது.

          இவர்கள் பயணத்தின் இரண்டாவது பகுதியாக அவர்கள் பயணம் மேற்கொண்டார்கள்.  நடந்தாய் வாழி காவேரி என்று கோவலனும் கண்ணகியும் நடந்த பாதையில் போவேமே என்று அவர்களுக்குத் தோன்றியது.

          சிலப்பதிகாரமும், பட்டினப்பாலையும் வர்ணித்த பூம்புகாரை நினைத்துக்கொண்டே நடக்கிறார்கள்.

சாயவனத்திலிருந்து புறப்பட்டதும் கடாரங்கொண்டான் என்ற பெயர் அவர்களை இழுத்தது.

          திருவலம்புரத்தில் வலம்புரி நாதர் கோயில். தலைக்காவேரிக்கு அடுத்த இடத்தை மயிலாடுதுறையே பிடித்துக்கொண்டிருக்கிறது.

          உவே சாமிநாதய்யர் உணர்ச்சி வசப்படாமல் ஒரு விஷயத்தைக் குறிப்பிடுகிறார். கோபாலவிருஷ்ண பாரதியார் நந்தன் சரித்திரக் கீர்த்தனைகள் இயற்றிவிட்டு, அதற்கு ஒரு அறிமுகப்பாயிரம் பெறுவதற்காக மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையின் வீட்டுக்கு நடையாக நடந்த கதை அது.  வெள்ளைத் தமிழாக இருக்கிறதென்று பிள்ளை தயங்கினார் போலிருக்கிறதுநடை நடையாக நடந்து, கடைசியில், பகல் வேளையில் பிள்ளையவர்கள் பூசை முடிந்து உண்டுவிட்டு இளைப்பாறும் வேளையில், வாசல் திண்ணையில் உட்கார்ந்து பாரதி இரண்டு மூன்று கீர்த்தனைகளைப் பாடினாராம்.அதைக் கேட்டு உருகி பிள்ளையவர்கள் பாயிரத்தை எழுதிக்கொடுத்தாராம்.

          கீழ்மணஞ்சேரியில் ஒரு தலக்கதைஇரு பெண்கள் தங்களுக்குப் பிறக்கும் குழந்தைகளைக் கணவன் – மனைவியாக ஆக்குவது என்று வாக்குக் கொடுத்துக்கொண்டார்கள்.  ஒருத்திக்குப் பிறந்தது பெண்.  இன்னொருத்திக்குப் பிறந்தது ஆமை.  அந்த ஆமை இறைவனை வணங்கி மானிட உருவம் பெற்று அந்தப் பெண்ணையே மணந்து கொண்டானாம்.

          உழக்கில் என்ன கிழக்கா மேற்கா?”

திருப்பனந்தாளில் பார்த்த சினிமாவைப்பற்றி நகைச்சுவையாக எழுதியிருக்கிறார்கள். கரையப்பார் என்று சொல்லப்படும் கடற்பகுதியில் பழைய புகாரின் சில பகுதிகள் மூழ்கி விட்டதாகத் தெரிகிறது. காவேரி கடலுடன் கலக்கும் பகுதியில் கரிகாலன் காலத்தில் புதுப்புனலாட்டு விழா நடைபெற்ற துறையைக் காண வேண்டுமென்று அவர்களுக்கு ஆசை.

          கிரேக்கப் புவியியல் நூல் ஆசிரியர் டாலமி கி.பி முதல் நூற்றாண்டில் குறிப்பிட்டிருந்த சபரீஸ்  எம்போரியம் என்ற இடம் காவேரிப் பூம்பட்டினம்தான் என்பது பின்னர் அங்குக் காணப்பட்ட கல்வெட்டு மூலமாகத் தெரிய வருகிறது.

          மணிமேகலை மணிபல்லவத்திற்குச் சென்று விட்டு ஐந்தாண்டுகள் கழித்துத் திரும்புவதற்குள் புகார் நகரம் கடலில் மூழ்கி விட்டது.  இறுதிக் கட்டமாக இருக்கலாம்.  

          கண்ணகிக்கு நீடித்த மண வாழ்க்கை வாய்ப்பு அளிக்காத புகாரின் அழிவு கோவலனும் கண்ணகியும் அந்த நகரை விட்டு நீங்கிய உடனேயே தொடங்கி இருக்க வேண்டும் என்று அவர்களில் ஒருவர் கருத்துத் தெரிவித்தார்.  

 

          திருப்பழனம்.   திருப்பழனம் பஞ்சபகேச பாகவதர் ஹரி கதையில் மனதைப் பறிகொடுக்காதவர்களே கிடையாது.  தீராத சிடுமூஞ்சிகளையெல்லாம் சிரிக்க வைப்பாராம் அவர்.  அவர் ஹாஸ்யங்களைக் கேட்டு ஆயிரக்கணக்கில் வயிறுகள் வெடித்திருக்கின்றனவாம்.  சபை முழுவதையும் சிரிக்க வைத்தது விட்டு அவர் மட்டும் முகத்தை உம்மென்று வைத்துக் கொண்டிருப்பாராம்.

          1924 ஆம் ஆண்டு வெள்ளத்தினால் ஏற்பட்ட விபத்தைப் பற்றி விவரிக்கத் தொடங்கினார். 

          காவேரியின் கிளை நதி என்ற பெயரை அடையும் தகுதி பெற்றது முதன் முதலில் கொள்ளிடம்தான்.

          கரூரை விட்டுப் புறப்பட்டு நெரூர் மார்க்கத்தில் செல்லும் பொழுதுதான் மீண்டும் காவேரியை அணுகும் சூழ்நிலை தோன்றிற்று. அந்தக் குறுகிய சாலையில் இரு மருங்கிலும் கரும்புத் தோட்டங்கள். காவிரியின் பாய்ச்சலெல்லாம் கருப்பஞ்சோலை, கழனியெல்லாம் கதிர் முத்தும் செந்நேற்சாலை என்று ச.து.சு யோகியர் வர்ணித்த காட்சி அவர்கள் கண்முன் எழுந்தது.

நெரூருக்குச் சென்று சதாசிவப்ரம்மத்தின் சமாதியைக் காணச் செல்கிறார்கள்.

          சதாசிவப் பிரம்மம் உபநிடதங்கள் விளக்கிய உண்மையின் மனித வடிவம்.  மனிதனுக்குள்ளே சர்வவியாபியான பரம்பொருள் உறையும் உண்மையின் ஆய்வுக்கூடம்.  வெளகீக மனிதனின் விவஹார நிலைகளைக் கடந்த பரமநிலையில் வாழ்ந்து சஞ்சரித்தவர். அனிமா சித்திகள் அலட்சியமாக்க úகைவரப் பெற்று, அவற்றையும் சட்டை செய்யாமல் பரமஹம்ச நிலையில் நிலைத்து நடமாடியவர்.குழந்தைகளின் மாசற்ற நிலையில் மயங்கி, அவர்களுக்கு தம் சித்திகளை வேடிக்கை காட்டுவார் என்று பாரம்பரியக் கதைகள் சொல்கின்றன.  சென்ற தலைமுறை விஞ்ஞானிகள் எதையும் அறிவால் எட்.ட முடியும் என்று நம்பினார்கள்.  இந்தத் தலைமுறை விஞ்ஞானிகள் அறிவையும் குழப்பும் அதிசயங்களைக் கண்டு வியந்து நிற்கிறார்கள்.   

          டாக்டர் சாமிநாத சாஸ்திரி, ஒரு நல்ல நகைச்சுவை எழுத்தாளர்.  மணிக்கொடி காலத்தில் களிராட்டை என்ற நகைச்சுவையும் தேசப்பற்றும் நிறைந்த ஒரு மாதப் பத்திரிகையை நடத்தி வந்தார்.  பேராசிரியர் அனந்தகிருஷணன் எழுத்தாளர்களின் நண்பன்.  அவருடைய இல்லத்தில் எழுத்தாளர்களாகக் கூடி இரவுகளில் விடிய விடியக் கொட்ட மடித்துக் கொண்டிருப்போம்.  யோகியார் கவிதை பாடபிச்சமூர்த்தி தத்துவம் பேச, வரா சிந்தனையைக் கிளற, மற்றவர்கள் இலக்கிய சாதனைகளைப் பற்றிக் கனவு கண்டு பொழுதைப் பொன்னாக்கிக் கொண்டிருப்போம் என்ற தகவலும் இப் புத்தகத்தில் வருகிறது.

 

          மொத்தத்தில் இந்தப் புத்தகம் மிகவும் உபயோகமான புத்தகம்.

          இதன் மூலம் தலவரலாறுகளையும், கோயில்களைப் பற்றியும் சரித்திர சம்பவங்களையும், தொன்மைக் கதைகளையும் தெரிந்து கொள்ள முடிகிறது. 

          மொத்தம் தி.ஜானகிராமன், சிட்டியுடன் சேர்ந்து இன்னும் 2 பேர்களும் இணைந்து சென்றார்கள்.  எல்லோரும் காரில்தான் பயணம் செய்தார்கள். முக்கியமாககலாஸôகரம் ராஜகோபால்பல இடங்களில் அவருடைய ஓவியங்களும், புகைப்படங்களும் இப் புத்தகத்திற்கு சிறப்புச் செய்கின்றன.

          இக் குழுவைச் சேர்ந்தவர்களுக்குக் காப்பி பைத்தியம் உண்டு.  காப்பிக்காகப் பல ஓட்டல்களுக்குப் போகிறார்கள். 

          குடகு மலையில் ஒரு திருமண வைபவம் எப்படி இருக்கிறது என்பதைக் காண்கிறார்கள்.

          ஒரு குறை இந்தப் புத்தகத்தில்.  எத்தனை நாட்கள் பயணம் செய்தார்கள் என்ற விபரம் குறிப்பிடப்படவில்லை. இப் புத்தகத்தை இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கலாம்.  முதல் பிரிவில் பல செய்திகள் சுவாரசியமாக விவரிக்கப்பட்டிருந்தன.

          இரண்டாவது பகுதியில் விஸ்தாரமான விவரிப்பு.அவர்களுக்குப் பயன்பட்ட நூல்கள் விவரம் இந்தப் புத்தகத்தின் இறுதியில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

          ஒருவர் வாசிப்பதோடு அல்லாமல் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டிய புத்தகம் இது.  

         

Series Navigationதுணைஎவர்சில்வர்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *