அவுஸ்திரேலியாவில் புலம்பெயர்ந்து வதியும் இலங்கை எழுத்தாளர் முருகபூபதியின் 70 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு, யாழ்ப்பாணம் ஜீவநதி வெளியீடாக வந்துள்ள “ கதைத் தொகுப்பின் கதை “ நூலில் இடம்பெற்றுள்ள 15 சிறுகதைகள் பற்றியும் 15 இலக்கிய வாசகர்களின் வாசிப்பு அனுபவங்களின் தொகுப்பு:
- கணங்கள்
ஈழத்து வாழ்வுவெளியிலிருந்து பிடுங்கி, அவுஸ்திரேலிய வாழ்வு வௌியில், அன்பின் பேரிணைப்பில் வாழுமாறு, காலம் நட்டுவைத்த, தமிழர் – சிங்களவர் என்ற ஈரினத்தாரின் பாதிப்பை, இன்னோர் முகத்தாற் சொல்கிறது, கணங்கள் என்ற சிறுகதை. இதில், கணவன் அரச ஆயுததாரிகளால் காணாமலாக்கப்படுகிறான். கணவனை இழந்த குடும்பப்பெண், தன் கதையைச் சொல்கிறாள். கணவன் இருக்கிறாரா இல்லையா எனத் தெரியாது, உளத் தேய்வுற்று, பின்னர் இறந்ததாக எண்ணி, கணவனை மகனில் கண்டு, அவனை வளர்க்கவே வாழ்வை ஓட்டுகிறாள் அவள். சொந்த உறவுகள் நிழல் தராதுபோக, மகனைத் தனக்கு அரண் ஆக்குகிறாள். மகனுக்காக வாழ்வுத் துயர் சுமந்து பயணிக்கிறாள். உறவுகளற்ற தன் மகனுக்கு, அப்பாவை இழந்த சிங்களச் சிறுவன் ஒருவன் உறுதுணையாக, அவள் மகிழ்கிறாள். அந்தச் சிங்களச் சிறுவனுக்கும் இவளே தாயாகிறாள். அவனும் அதை ஏற்கிறான். இதுதான் ‘கணங்கள்’ கதைச் சுருக்கம்.
இக்கதையில் மூன்று கருத்தியல்கள் முக்கியமானவை என்று கருதுகிறேன். ஒன்று: ‘திவச நாள்’ என்பது ஈழத்துச் சைவத்தமிழ்ப் புலத்தில் அடைந்த மாறுதல். ஒருவர் இறந்த திகதி தெரிந்தால் திதி இருக்கும். கணவன் காணாமலாக்கப்பட்டு, எப்போது சாகடிக்கப்பட்டார்? இன்னும் இருக்கிறாரா? இல்லையா? என்ற வினாக்களுக்கு விடை இல்லை. எனினும், இனிமேல் ‘அவர்’ வரார் என்பதை உணர்ந்துகொண்ட மனைவி, ”அவர் காணாமல் போன தினம்தான் எனக்கு அவருக்கான திவச நாள்” என்கிறாள். ”அவரை அழைத்துச்சென்ற தினம் வரும்போது விரதம் இருந்து, சுவாமி அறையிலிருக்கும் அவரது படத்துக்குப் படையல் போட்டு, மகன் வரும்வரையில் காத்திருந்து, அவனையும் படத்துக்கு முன்னால் நின்று வணங்கச்செய்துவிட்டுத்தான் அந்தப் படையலை இருவரும் சாப்பிடுவோம். அன்று வடை, பாயாசம் எல்லாம் செய்வேன். வருடம் ஒருமுறை வரும் திவச நாள்” என்கிறாள். தனது சமய நம்பிக்கையால் திவசம் கொடுக்கிறாள் என்பதை வெளிப்படையாகக் கதை காட்டுகிறதெனினும், திதிக்காகப் பஞ்சாங்கங்களை வைத்து வம்புக்கு வாய்ப் பத்திரிகைப் பட்டிமன்றம் பேசும் மூட நம்பிக்கையாளர் தலையில் மறைமுகமாக அடிக்கப்பட்டிருக்கிறது, முதலாவது முற்போக்கு ஆணி.
இரண்டு, போருக்குப் பிந்தைய ஈழத்துத் தமிழ்ச் சமூகத்தின் மறுமணம் பற்றிய கருத்து. கணவன் காணாமலாக்கப்படும்போது, மகனுக்கு ஐந்து வயது. காலச் சக்கரத்தைக் கண்ணீரோடு உருட்டுகிறாள். பல வருடங்களைக் கடக்கிறாள். நீள் துக்கம் அவளை நீங்கவில்லை. அப்போது மகன் தாயைக் கேட்கிறான், “ ஏனம்மா இப்படியே அப்பாவை நினைச்சுக்கொண்டே இருக்கிறீங்க… நீங்களும் இன்னுமொரு கலியாணம் செய்து எனக்கு ஒரு அப்பாவைத் தரலாம்தானே…? ” இந்தக் கேள்விக் கணை, பிள்ளைகளிடம் இருந்து எழுவதே ஒரு புரட்சிதான். இதனை ஒரு மகன் தன் தாயிடம் கேட்கும் கேள்விக் கணை என்று எண்ணிக் கடக்கமுடியாது. இது, ஒட்டுமொத்தத் தமிழ்ச் சமுதாயத்தை நோக்கி, நவீன வாழ்வு அறத்தை வேண்டித் தொடுக்கும் கேள்விக் கணை. கணவனை இழந்த பெண்ணின் மறுமணத்துக்கு முகம் சுளிக்கும் மானுடம் மறுத்த தமிழர் தலையிலும், கணவனை இழந்தாலும் இன்னொருவனைக் கைப்பிடிக்கும் மறுமணம் தகாதென மறுத்து, பெண் தலைமைக் குடும்ப வாழ்வைக் கருத்திற்கொள்ளாத பிற்போக்குப் புராணப் பிரசங்கிகள் தலையிலும் அடிக்கப்பட்டிருக்கிறது இரண்டாவது ஆணி.
மூன்று, போருக்குப் பின்னான இன்றைய நிலையிலாவது தமிழ்ச் சமூகம் புரிந்துகொள்ள வேண்டிய காலத்தால் மாறாத அன்பின் வழியான இன ஐக்கியம். கதையில், கணவனை இழந்த பெண்ணது மகனின் பள்ளிச் சகா நிமால். அவன், ”வீட்டுக்குள் வந்ததுமே ‘அம்மே..’ எனச் சொல்லி என்னைக் கட்டிக்கொண்டான்” என்று கூறும் அவள், “என்னை ‘அம்மே…’ என விளித்துக் கட்டிக்கொண்டதன் மூலம், எனக்கு இந்த நாட்டில் இன்னுமொரு பிள்ளை கிடைத்திருக்கிறான். எனது கண்கள் பனித்தன” என்று பெருமிதமுறுகிறாள். “ மகனே…’ என்னையும் அம்மே என்றே கூப்பிடு…” எனச் சொல்லி அவனது தலையைத் தடவினேன் ” என்று மகவாஞ்சையோடு சிங்கள மகனிடம் அன்பைப் பரிசளிக்கிறாள். மகன், தந்தையின் படத்தை வணங்கிவிட்டு வந்து நண்பன் நிமாலோடு தன் தாய் சுட்ட தோசையை உண்ணத் தயாராகிறான். அப்போது, சிங்கள நண்பனான நிமால், வாய்க்குள் ஏதோ முணுமுணுக்கிறான். அதைக் கண்ணுற்று ‘ மௌனப் பிரார்த்தனையா ’ என்ற தொனியில் பாராட்ட முற்படுகிறாள், தமிழ்த் தாய். அப்போது அவன், “ அம்மே இது கடவுளுக்கான மௌனம் இல்லை. எனது அப்பாவுக்கானது. எனது அப்பா ஆர்மியில் பிரிகேடியராக இருந்தவர். ஒரு தற்கொலைத் தாக்குதலில் கொல்லப்பட்டார். அவரது உடலைக் கூட்டி அள்ளியதாக அம்மே சொல்லியிருக்கிறாங்க. அப்போது எனக்கு இரண்டு வயதிருக்கும். அப்பாவின் முகத்தை அவரது படங்களில்தான் பார்த்திருக்கிறேன் ” என்கிறான். இந்த இடத்தில்தான், போரானது ஈரின மக்களுக்குள் விளைத்த ஒருமித்த பாதிப்பில் உளம் கசங்கிப்போவதுடன், அப்பாதிப்பிலும் பாதிப்புறாத, மானுட அன்பில் முடிச்சிடப்பட்ட ஈரின நல்லுறவை நயக்கவும் முடிகிறது. போருக்குப் பின்னும் ஈரினங்களுமே ஒன்றுக்கொன்று எதிர்நிலை எனக் காட்டி, இன்றும் இன உறவில் விரிசலைத் திட்டமிட்டு ஏற்படுத்தி, அரசியற் சுயலாபம் கருதிச் செயலாற்றும் பிற்போக்குத் தமிழ்த் தேசியவாதிகளின் தலையிலும், அடிப்படைச் சிங்களப் பௌத்தவாதிகளின் தலையிலும் ஒருங்கே அடிக்கப்பட்டிருக்கிறது இந்த மூன்றாவது ஆணி.
மேற்குறித்த மூன்று மெய்க் கருத்துகளையும், ஆசிரியர் இன்னும் கதைத்துவம் ததும்பச் சொல்லியிருக்கலாம். சொல்லியிருக்க வேண்டும். சொல்லும் சொல் அவாிடமுண்டு. எனினும், ஈழத்துச் தமிழ்ச் சமூகத்தின் நவ முன்னகர்வுக்கு, வெகுஜனத் தளத்திலான கருத்தியல் பிரசாரமும் கதையில் வேண்டியதே!
கலாநிதி செல்லத்துரை சுதர்சன். பேராதனை பல்கலைக்கழகம், இலங்கை.
—0—
- ஏலம்
முருகபூபதி அவர்களின் ஏலம் சிறுகதையில் புலம்பெயர்நாட்டில் (அவுஸ்திரேலியா) தாம் கண்ட வாழ்வியல் அனுபவங்களை உணர்வுபூர்வமாக சிற்பமாகவும் சிறுகதை வடிவமாகவும் வடித்து, படைத்துவிட்டார். ஒரு சிற்பத்தை கண்களால் ஊடுருவிப் பார்த்தால் அது ஆழமாக நம் மனதில் பதிந்துவிடுகிறது. அப்படித்தான் இச்சிறுகதையில் வரும் பாத்திரங்களும்.
உணர்வுபூர்வமான தனிமனித பிரச்சினைகளை உள்ளடக்கமாக கொண்டுவந்துள்ளார். ஏலம் – தலைப்பில் ஒரு சிறுகதையா ? ஆர்வமே மேலிட்டது ! ஒரு வாகனத்திற்கும் (கார்) திருமண வாழ்க்கைக்கும் ஒப்பீடு காண்பித்த சிறுகதை இது ! இதுவரையில் இப்படியொரு கருப்பொருளில் நான் எந்தவொரு சிறுகதையையும் சுவைக்கவில்லை.
புதியதை படைக்கமுனையும் ஒரு படைப்பாளியின் ஆர்வமும் திறமையும் ஒருசேர இவ்விடத்தில் கை கோர்த்துள்ளது. ஒரு மகள் தன் தந்தையிடம் கார் ஒன்று வாங்கித்தருமாறு கோரி, அதற்காக பெற்றோருடன் இணைந்து முழுப்பிரயத்தனங்களையும் மேற்கொண்டு ஏலத்தில் ஒரு காரை குறைந்த தொகையில் தெரிவுசெய்து, இறுதியில் தம்மிடமிருந்த பணத்திற்கு மேலதிகமாக ஒரு குறிப்பிட்ட தொகையைக் கையளிக்கவேண்டிய நிலையில் கார் வாங்கும் முயற்சியை கைவிட்டு பெற்றோருடன் வீடு திரும்புகின்றாள்.
இச் சிறுகதையின் கருப்பொருள் – திருமணவாழ்வும் ஏலம் போன்றது என்பதுதான் ! கார்களைப் போல மனிதவாழ்க்கையும் ஏலத்தில் விற்பனையாகும் பண்டங்கள் போலத்தான் இருக்கிறது என இப்படைப்பாளி சூட்சுமமாக கூறுகிறார்.
இலங்கையைப் பொறுத்தவரை கட்டாயம் காரில் பயணிக்கவேண்டிய தேவை இல்லை. முதலாளி வர்க்கத்தினருக்கும் அந்தச் சுரண்டலை ஆதரிக்கும் வர்க்கத்தினருக்கும் சுகபோகவாழ்வை ஆராதிக்கும் அடியார்களுக்கும் எமது நாட்டில் (இலங்கையில்) காரே கட்டில்.
அதைவிடுத்து ஏழைகள், மத்திய தரவர்க்கத்தினர் – அனைவரும் ‘பைக்’, சைக்கிள், முச்சக்கரவண்டி ஆகியவற்றை பயன்படுத்துகின்றனர். அல்லது பேருந்தில் பயணம் செய்கின்றனர். அவுஸ்திரேலியாவில் வாழும் மக்களின் வாழ்க்கைமுறை பற்றியோ காரிற்கு அவர்கள் கொடுக்கும் முக்கியத்துவம் பற்றியோ எமக்கு எதுவும் தெரியாது.
ஆனால் , அவுஸ்திரேலியாவில் வாழும் புலம்பெயர் தமிழர்கள் காரையும் வாழ்க்கையையும் ஒன்றாகப் பார்ப்பதையும் குகணேஸ்வரன் என்னும் தந்தைப்பாத்திரத்தை முன்னிறுத்தி முருகபூபதி படைத்திருப்பது சற்று சிந்திக்கவேண்டியதாகவே உள்ளது. அந்த விசாலமான மண்டபத்திற்கு வெளியே திறந்தவெளியில் ஏராளமான கார்கள் ஒழுங்காக வரிசைக்கிரமத்தில் நின்றன. சில கார்களுக்கு இலக்கத்தகடு இல்லை. ஃபினான்ஸில் எடுத்து பணம் ஒழுங்காக கடன் வட்டியுடன் செலுத்தாமையால் பறிக்கப்பட்ட கார்கள் என்று மகளுக்கு விளக்கம் சொன்னார் குகனேஸ்வரன்.
அத்துடன் அவர் நின்றிருக்கலாம். “ சொன்னபடி சீதனம் தரவில்லையென்று பெற்றவர்களிடம் அனுப்பப்படும் பெண்களைப் போன்றதுதான் இந்த இலக்கத்தகடு இல்லாத கார்களும்…” என குகனேஸ்வரன் என்னும் பாத்திரத்தினூடாக இப்படைப்பாளி கூறுவது நகைச்சுவை கலந்த சிந்தனைச் சிகரமாகவே வெளிப்பட்டு நிற்கின்றது.
அதுமட்டுமல்ல, ஒரு பெண்பிள்ளைக்கு தந்தையென்றமுறையில் திருமணம் செய்ய எத்தனிக்கும்போது எவ்வாறான இடையூறுகளையெல்லாம் சந்திக்க நேரிடும் என்பதையும் இச்சிறுகதை சித்திரித்துக்காட்டத் தவறவில்லை.
ஏலம் சிறுகதையில் இழையோடியிருக்கும் கார் வாங்கும் படலமும் ஒரு தந்தையும் மகளும் மனைவியும் நகைச்சுவையாகப் பார்க்கும் பாணியிலேயே நகர்கின்றது. ஆனால், அதன் உள்ளே மறைந்திருக்கும் தாற்பரியம் ஒருவருடைய வாழ்க்கைக்கு தோதான வாழ்க்கைத்துணையும் அவ்வளவு இலகுவானதல்ல என்பதும் பொருத்தமற்ற கார்கள் எவ்வாறு வாங்கியவர்களிடமே திருப்பி அனுப்பப்பட்டு இன்னொருவருக்கு ஏலத்தில் விற்பனை செய்யப்படுகிறதோ அது போலவே திருமணமாகி, விலகநேரும் பெண்களின் வாழ்க்கையும் என்கிறார் இப்படைப்பாளி.
மேலும் இச்சிறுகதையின் இறுதிப்பகுதி இன்னுமொரு படி மேலே சென்று படைப்பாளி தான் கூற விழைந்த விடயத்தை ஆணித்தரமாக வெளிப்படுத்துகின்றது. “வாழ்க்கைத்துணை தெரிவு செய்வதும் லேசுப்பட்ட வேலை இல்லைத்தான்” என்ற ஆசிரியரின் கூற்றினூடாக இதனை அறியமுடிகின்றது.
எழுத்தாளர் முருகபூபதி நகைச்சுவைப் பாணியுடன் சமூக யதார்த்தங்களையும் தனிமனித உணர்வோட்டங்களையும் உள்ளங்கை நெல்லிக்கனி போல சொல்லிவிடுபவர் என்பதை ஏலம் சிறுகதையும் எடுத்துக்காட்டிவிடுகின்றது.
வாழ்க்கைச் சிக்கல்களையும் யதார்த்தமாக இச்சிறுகதை வெளிப்படுத்தி நிற்கிறது. எனவே எழுத்தாளர் முருகபூபதி அவர்களின் ‘ஏலம்’ சிறுகதை இன்றைய இளைஞர்களும் பெற்றோர்களும் கட்டாயம் வாசிக்க வேண்டிய ஒன்று.
சி. ரஞ்சிதா – கெக்கிராவ – இலங்கை
—0—
- கதைத் தொகுப்பின் கதை
கதைத் தொகுப்பின் கதை – சிறுகதைக்குப்பின்னால் ஒரு உண்மைச்சம்பவம் இருப்பதுபோலத்தெரிகிறது.
கதைசொல்லியின் பால்யகாலத்தையும் அவரது ஆசிரியும் பற்றியதாக கதை நகர்த்தப்பட்டிருந்தாலும், புனைவாக வருமிடத்து, சிவகாமசுந்தரி என்ற ஆசிரியையின் பாத்திரவார்ப்பு, ஒடுக்கப்பட்ட பெண்ணை படிமமாக காண்பிக்கிறது.
அந்தப்பெண்ணை ஒரு இலக்கியப்படைப்பாளியாகவும் கதை சொல்லி அடையாளப்படுத்துகையில், அவளது கதைத்தொகுப்பின் வெளியீட்டுவிழாவில் பேசும் இலக்கியப்பேராசிரியரின், “ சிவகாமசுந்தரி என்ற பெண் ஆளுமையின் கதைகளில் பெண்ணிலை வாதம் உச்சத்தில் ஒலிக்கிறது “ என்ற கூற்றிலிருந்தும், “ கெட்ட கனவுகளை தூக்கி வீசும்படி “ கதை சொல்லியின் அம்மா இடும் கட்டளையிலிருந்தும் எழுத்தாளரின் மனதின் அடியாழத்தில் கனன்றுகொண்டிருக்கும் பெண்களின் துயரம், அடிமட்ட மக்களின் துன்பியல் என்பன துலக்கமாகின்றன. இதில் வரும் தொடர்ந்த உரையாடல்கள், முருகபூபதியின் இதர படைப்புகளுக்கு ஊடாகவும் வருவதை ரயில் வண்டித் தொடராக நாம் அவதானிக்கின்றோம்.
இக்கதையில் வரும் சுந்தரி ரீச்சரைப்போன்ற ஆயிரக்கணக்கான ஆசிரியைகள் உருவான சமூகத்தில், கொதி மாஸ்டர் நாகராஜா போன்றவர்களால் புண்பட்டவர்கள், அந்த ஆசிரியையால் மாற்றப்பட்டவர்கள் என இரு துருவங்களாக நகரும் தனிநபர்களை நாசூக்காக காண்பிக்கிறார்.
இது ஒரு பெண்ணின் கதை. அவள் வாழ்வில் வீசும் தென்றலும் புயலும் பற்றிய கதை. அப்பெண்ணின் உள்ளம், “ திருமணம் “என்ற சமூக நிறுவனத்தின் நம்பிக்கையை கேள்விகேட்கும் கதை. பெண்ணின் வாய் பூட்டப்பட்டிருக்கும் நிலையை லாவகமாக சித்திரித்துச்செல்லும் கதை.
பெண்ணின் உள்ளத்து உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்கவேண்டும் என்பதை விண்ணப்பிக்கும் ஒரு கடிதமாக இயங்கும் கதை. முருகபூபதியின் இதர கதைகளுக்கெல்லாம் விதை இட்ட கதையாக, அவுஸ்திரேலியா மெல்பன் நகரில் வாழும் முருகபூபதி கூறும் உண்மைக்கதையாக இதனை அனுமானிக்க முடிகிறது.
இக்கதை வாசகர்களாகிய எங்களையும் ஐம்பது ஆண்டுகள் பின்னோக்கிச்செல்ல வைக்கிறது. எல்லோர் மனதிலும் கதையின் கதை என்பது, பொதுவாக மன ஆழத்தில் புதைந்திருப்பது நிச்சயம் என்பதையும் நிதர்சனமாக எங்கள் மனக்கண்களில் பதியவைக்கிறார் முருகபூபதி.
இவர் கூறும் பெண்களின் சொல்லாத கதைகள் பல எங்கள் மன ஆழங்களில் சிக்குண்டு, கீழடி மண்ணில் புதையுண்ட பண்பாட்டுக்கோலங்கள் போன்று இருக்கின்றன. அவை வெளிக்கொணரப்படவேண்டும் என்ற அவாவை ஊட்டி நிற்கிறது இந்த கதைத் தொகுப்பின் கதை.
கலாநிதி பார்வதி கந்தசாமி – ஸ்காபரோ – கனடா.
—0—
- பார்வை
எழுத்தாளர்களின் பார்வை எப்பொழுதும் தனித்துவமானது. Brothers Karamazov நாவலில் Jesus Christ ஐ இந்த உலகத்திற்கு மறுமுறை வரவழைத்து, இன்றைய உலகின் மதத்தை காணவைத்து ஒரு சொல்லும் பேசாமல் திரும்ப அனுப்பி வைத்தது ஒரு எழுத்தாளனின் பார்வைதானே.
உலகமே அவலட்சணம் என கருதிய சூர்ப்பணகையை “செஞ்செவிய கஞ்சம் நிகர் சீறடியள் ஆகி “ என பாடியது ஒரு கவிஞனின் பார்வைதானே. அப்படி இருக்க, முருகபூபதியின் பார்வை மட்டும் எப்படி ஒரு சாதாரண மனிதனின் பார்வையாக இருக்க முடியும் ? இந்தக் கேள்வியே ‘பார்வை’ சிறுகதை வாசித்த கணத்தில் தோன்றியது.
தனித்துவமாக, நான் நினைத்துப் பார்க்காத கோணங்களில் முருகபூபதியின் பார்வை, இந்த சிறுகதையில் ஒளிரும் தருணங்களை பகிரவே விரும்புகிறேன்.
- எல்லா ரயில் மேடைகளிலும் பயணிகள் நெரிசலாக நிற்கிறார்கள். ஆனால் அந்த நெரிசல் சில கணம் தான். ரயில்கள் தோன்றி நகர்ந்து மறைவதும், மனிதர்கள் குவிந்து விட்டு மறைவதும் என்ற அவரது பார்வை, “All the world’s a stage, And all the men and women merely players. They have their exits and their entrances” என்ற ஷேக்ஸ்பியரின் பார்வைக்கு நிகரானது. ஒரு ரயில் நிலைய கூட்டத்தினுள் இந்தப் பார்வையால் அவர் சிந்தித்தது தனித்துவம், தத்துவம்.
- ” யாசகம் கேட்டு வந்தவனை ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாய் எதிர் கொள்ள , யாரும் கடிந்து கொள்ளவில்லை ” என்ற வரி. நான் இதுவரை பல ரயில் நிலையங்களில் யாசகம் கேட்டு வந்த பலரை கண்டிருக்கிறேன் . ஆனால் இந்த வரியை வாசித்த பின்புதான் யாரும் யாசகம் கேட்டு வருபவரை இந்த நாட்டில் கடிந்து கொள்ளவோ அல்லது நம் நாட்டைப் போல் “கை கால் நன்றாகதானே உள்ளது உழைத்து உண்ணலாமே ” என்பது போன்ற அறிவுரையோ வழங்குவதில்லை என சிந்தித்தேன். காரணம், வம்பு வளர்க்க வேண்டாம் என்ற நினைப்போ அல்லது துஷ்டனை கண்டால் தூர விலகு என்ற கற்பிதமோ தெரியவில்லை. ஆனால் இதை நுட்பமாக கவனித்து எழுதுவதற்கு முருகபூபதி போன்ற ஒரு எழுத்தாளரின் பார்வை தேவை.
- மௌனமானவர்கள் எல்லாம் ஊமைகள் அல்ல என்ற பார்வை பல கோணங்களில் விரிவடைந்து சிந்திக்க வைக்கக் கூடியது. மௌனமானவர்கள் கோழைகள் என்றோ, ஊமை என்றோ, எதுவும் அறியாதவர்கள் என்றோ இந்தச் சமூகம் கொண்ட பொதுப் புத்திக்கு ஒரு சிறு வாக்கியத்தின் மூலம் அவர் சுழற்றும் சாட்டை.
இறுதியில், ஒரு ரயில் மேடை இருக்கையை ஒரு அரசியல் இருக்கையுடன் முடிச்சு போட்ட இடத்தில், முருகபூபதியின் படைப்பு இந்தச் சமூகத்திற்கானது என உணர்த்தும் இடம். முருகபூபதி அவர்களுக்கு பாரதி என்றால் மிகவும் பிடிக்கும் எனத் தெரியும். பாரதியாக பிறந்திருந்தால் ஒரு கவிதையை அவருக்கு இயற்றி பரிசாக அளித்திருக்கலாம். ஆனால், உண்ண உணவில்லாமல் யாசகம் கேட்கும் மனிதனை கண்ட நேரத்தில், இதைத் தீர்க்க வேண்டிய இடத்தில் உள்ள பதவி இருக்கைகளில் அமர்ந்துள்ளவர்களை நினைத்து மனதில் ” தனியொருவனுக் குணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம் ” என்ற பாடல் அவர் மனதில் தோன்றி இருக்கும் என்று நினைக்கிறேன்.
அசோக் – மெல்பன் – அவுஸ்திரேலியா
—0—
- காத்தவராயன்
எழுத்தாளர் முருகபூபதி அனுபவங்களைப் பதிவு செய்வதில் வல்லவர். அது தனது நண்பர்களைப் பற்றியதாக இருக்கலாம், தனது நினைவுகளாகவும் அமையலாம், தனது பயணங்களாகக் கூட இருக்கும். அது போல தனது அனுபவப் பகிர்வையே காத்தவராயன் சிறுகதையாக எமக்குத் தந்துள்ளார்.
மொஸ்கோவில் மழை பெய்தால் கொழும்பில் குடைபிடிப்பார்கள் என்று இடதுசாரியினரை முன்பு கேலி செய்வதுண்டு, அது போன்று வன்னியில் மழை விட்டாலும், மெல்பனில் தூறல்விடாது.என்பதையே குறியீட்டில் உணர்த்துகிறது இந்தச்சிறுகதை.
வீட்டுக்கு விருந்துக்கு ஆட்களை அழைக்கும்போதும் முன்னெச்சரிக்கை தேவை. சீட்டுப்பிடித்து முரண்பட்டு பகைத்துக்கொண்டவர்கள், வெறும் ஈகோவால் முகங்களில்
விழிப்பதை தவிர்த்துக்கொள்பவர்கள், விருந்துகளில் குழப்பம் விளைவிப்பவர்கள்….
இத்தியாதி ரகங்களில் பலர் இருப்பதனால், “ யார் யார், யாருடன் சிநேகம், யார் யார், யாருடன் கோபம் “ என்பதையெல்லாம் நன்கு தெரிந்து வைத்துக்கொண்டுதான் வீட்டுக்கு
அழைக்கவேண்டும் “ என்ற வரிகளிலேயே புலம்பெயர்ந்தவர்களின் போலி முகங்களை கிழித்துக்காட்டுகிறது இச் சிறுகதை.
போலித் தமிழ்த்தேசியவாதிகளின் வீரத்தை “ உந்த சின்ன மழைக்குப்பயந்து ஓடுற நீங்களா தமிழ் ஈழம் காணப்போறீங்க…” என்றவரிகள் சுக்கு நூறாக்குகிறது.
எஸ் .கிருஷ்ணமூர்த்தி – மெல்பன் – அவுஸ்திரேலியா
—0—
- எங்கோ யாரோ யாருக்காகவோ….
கதை தொடங்கியதிலிருந்து சென்ற சம்பவக் கோர்வைகளும், கதை ஓட்டமும் பிரமாதம். இந்த அழகு தொய்வின்றிக் கதையை வாசிக்க வைத்தது.
போரின் பின்னர் பணிகள் ஏதுமின்றி படைகள் ஒரு நாட்டில் இருப்பின் என்ன ஆகும்…? இந்தச் சிந்தனை திடுக்குற வைத்தது. எல்லாம் ஆகி முடிந்து, இப்போது நிலைமை அதற்கும் பழக்கப்பட்டு விட்டது என்பது வேதனையான உண்மை.
வீட்டில் இதமான உறவு அமையாத சாரதியின் மனம் மூர்த்தியிடம் தந்தைப் பாசத்தையும், நெருக்கத்தையும் காண்கிறது. இயல்பாகவே ஒரு மகனுக்குரிய உரிமையை எடுத்துக்கொள்ளும் அக்கறை நெகிழ வைக்கிறது. அறம் தொகுதியின் சோற்றுக்கணக்கு கதையில் கெத்தேல் சாகிப்பிடம் அன்னையின் கையைத் தேடிய பையனைப் போல, இங்கு ஒருநேரச் சந்திப்பிலேயே மூர்த்தியிடம் தந்தைக்குரிய தோழமையை சாரதி உணர்ந்திருக்க வேண்டும்.
” நீங்களும் அவைகளுக்கு ஆதரவா சேர்? ” – எல்லாவிதத்தாலும் பாதிப்புத்தான் என்ற சமூக உண்மை.
‘ மரத்தில் ஒரு அணில் சுதந்திரமாக ஓடிக்கொண்டிருந்தது’, ‘அந்த மாமரத்தின் அணிலும் வேகமாகத் தாவி மறைந்தது’ – நடந்த உண்மை, நடப்பின் உண்மை இந்த வலியைப் பூடகமாகச் சொல்லி மனம் கனக்க வைக்கும் காட்சிப் படிமம்.
மண்ணுக்காக ஆயுதம் ஏந்தியோர் இன்று நடத்தப்படும் விதத்தை வெளிக்கொணர்வதே கதையின் நோக்கம். இவர்கள் இறுதிப்போரில் சந்தித்த இழப்பும், பாதிப்பும் தவிர நாம் செய்யும் அநீதிதான் இன்று கவனிக்கப்பட வேண்டியது.
ஒன்று இவர்கள் ஒதுக்கப்படுகிறார்கள். அல்லது உதவி எனும் பெயரில் கீழ்மைப்படுத்தப்படுகிறார்கள். நாம் எமக்கான எடைபோடும் இயல்பிலேயே இன்னொருவரைக் கணிக்கிறோம். இவர்களின் மனநிலையை நினைத்தும் பார்ப்பதில்லை. உதவி பெறுபவன் எனில் எமக்குத் தாழ்ந்து இருத்தல் வேண்டும். நாம் அதிலிருந்து விளம்பரம் தேட வேண்டும். உண்மையில் கடமை எனும் உணர்விருப்பின், நாம் தான் தாழ்ந்தவர் எனும் குற்ற உணர்வின் உண்மை உறுத்தினால், இவர்களை மேலும் காயப்படுத்த மாட்டோம். “Put yourself in others shoes” – இந்தச் சிந்தனை எமக்கு அவசியம். விளம்பரத்திற்காக உதவி செய்யும் எல்லாக் கரங்களையும், மனங்களையும் இந்தக்கதை தொட வேண்டும்.
சுபாஷினி சிகதரன் – மெல்பன் – அவுஸ்திரேலியா
—-0—-
- தினம்
முருகபூபதியின் ‘தினம்’ சற்று வித்தியாசமான சிறுகதை. உடலை விட்டுப் பிரிந்த உயிர் சொல்வதாக கதை நகர்கிறது. தாய்நாட்டில் வாழ்ந்து விடுதலைக்காக இழப்புகளையும், வலிகளையும், மன வேதனைகளையும் சுமந்த வாழ்வு ஒரு புறம், வளமான தேசங்களுக்குப் புலம்பெயர்ந்த எம்மவர்களின் இரட்டை வாழ்வு மறுபுறம் என்று இருவேறு இயற்கையைத் தெள்ளத் தெளிவாகக் காட்டுகிறது இச் சிறுகதை.
புலம்பெயர் தேசங்களில், இறுதிப் போருக்குப் பல்லாண்டுகளுக்கு முன்னரான காலத்தில் அதே போராட்டத்தைச் சொல்லி அடைக்கலம் பெற்று, அங்கு தம்மையும், தமது சந்ததிகளின் வாழ்வையும் கல்வியாலும், வசதிகளாலும் நிலையாக்கிக் கொண்டு, தாய் நாட்டின் விடுதலைக்காக உழைப்பவர்களாகத் தம்மை இனங்காட்டிக்கொண்டு தம்மளவில் உல்லாச வாழ்க்கை வாழும் எம்மவர்களையும், போர் தீவிரமடைந்த காலத்தில் புலம்பெயர்ந்து தட்டுத் தடுமாறி தமது வாழ்வைக் கொண்டு நடத்துகின்ற, அடுத்தடுத்து வரும் மாதாந்த பில்களுக்காகவும், கடன் அட்டை வாழ்வுக்காகவும் சிரமப்பட்டு ஒன்றுக்கு மேற்பட்ட மேலதிக வேலைகளைச் செய்து கஷ்டப்படும் இன்னொரு தரப்பையும் இக் கதையினூடு தரிசிக்க முடிகிறது.
போரில் ஏற்பட்ட இழப்புகளின் வேதனையையும், வலியையும், புலம்பெயர் நாடுகளில் தேசியத்தைப் பேசிப்பேசியே தம்மை வளப்படுத்தும் சிலரின் உண்மை முகங்களைத் தோலுரித்துக் காட்டுவதாகவும், வெளிநாட்டு வாழ்வில் எதிர்கொள்ளும், மனதுக்கு நெருக்கமற்ற உறவுகளையும், நட்புகளையும், நாட்டுக்கும், வசதிக்குமேற்ப மாற்றம்பெறும் எமது சடங்கு சம்பிரதாயங்களையும் நாசூக்காகச் சொல்லிச் செல்கிறது இக் கதை.
கந்தையா குமாரதாசன் – மெல்பன் – அவுஸ்திரேலியா
—0—
- அம்மம்மாவின் காதல்
வெளிநாட்டு அவசர வாழ்க்கையில் பேத்திக்கும் பாட்டிக்குமான இணைப்பின் வலிமையைக் கோடிட்டுக் காட்டுகிறது இந்தக் கதை.
பெற்றோர் மகளுடன் உரையாடக் கிடைக்கும் நேரம் அருகிப்போன நிலையில், தம்மிடையே இரகசியங்களைப் பரிமாறிக் கொள்ளுமளவுக்கு அம்மம்மாவுக்கும், பேத்திக்குமான உறவு ஆத்மார்த்தமானதாய் மாறி விடுகிறது. நிராசையாகிப் போன தன் காதலைக் கூட பேத்தியுடன் பகிர்ந்து கொள்ள, பதிலுக்கு அவளும் தன் காதலை துணிந்து சொல்லத் தைரியம் வருகிறது.
தலைப்பில் அம்மம்மாவின் காதல் என்று குறிப்பிட்டிருந்ததால் அதை விரிவாக ஆசிரியர் சொல்வாரோ என்ற எதிர்பார்ப்புடன் படித்த எனக்கு, அதை சுருக்கமாகவே சொல்லி முடித்து விட்டதாகப் பட்டது.
ஒரு வேளை ஒருதலைக் காதலாக இருந்ததன் காரணமாகவிருக்கலாம். அம்மம்மாக்கள் குடும்பத்துக்காக அம்மி போல தேய்ந்து, பிறகு ஓய்ந்து முதியோர் இல்லத்தில் சேர்க்கப்படும் யதார்த்தம், முதியோர் சங்கக் கூட்டத்தில் செல்லாக்காசாகிப் போன தங்கள் வாழ்வில் மீண்டும் புத்துயிர்ப்பைக் காண விழையும் இந்த மூத்த பிரசைகள், அதே நேரம் ஓடியோடி சம்பாதித்து வீடுகளை முதலீடுகளாக்க முயலும் நடுத்தர வயதுப் பெற்றோர், இவர்களுக்கிடையே வளரும் இளைய தலைமுறை என்று வெளிநாடு ஒன்றில் அன்றாடம் நிகழும் தமிழரின் சாதாரண வாழ்வோட்டங்களை சிக்கலற்ற, எளிமையான மொழி நடையிலேயே கூறிச் செல்கிறார் எழுத்தாளர் முருகபூபதி
கன்பரா யோகன் – கன்பரா – அவுஸ்திரேலியா
—0—
- எங்கள் ஊர் கோவூர்
முருகபூபதியின் எந்தவொரு பதிவுகளிலும் அவர் சார்ந்த எழுத்துத் துறையிலுள்ளவர்கள் பற்றிய விடயங்களும் அவரது வாழ்வின் தரிசனங்களும் இழையோடியிருக்கும்.
தான் கண்ட காட்சிகளை, கேட்ட செய்திகளை கதையாக்கம் செய்யும் வல்லமையும் கொண்டவர். முருகபூபதியின் “ எங்கள் ஊர் கோவூர்” சிறுகதையை வாசிக்குமுன்னர் அதன் தலைப்பைக் கண்டதும், நான் படித்துக்கொண்டிருந்த அந்த நாட்களில், அதாவது 60, 70 களில் பேய் – பிசாசு – செய்வினை – சூனியம் என்பதெல்லாம் மனப்பிரமை, பித்தலாட்டம் என்று கூறி, அதுபற்றிய விழிப்புணர்வை ஊட்டிச் செயற்பட்டு, அதுபற்றிய வாதப்பிரதி வாதங்களை நடத்தி, பத்திரிகைகளில் எழுதி சவால் விட்டுச் செயற்பட்ட தாடிக்காரக் கோவூரைப் பற்றியதான விடயங்கள்தான் இருக்கப் போகின்றது என நினைத்தவாறே கதைக்குள் சென்றேன்.
நாமறியாத புதிய செய்திகளும் கிடைக்கலாம் எனும் ஆர்வத்துடன் வாசிக்கத் தொடங்கினேன். ஆனால் , முருகபூபதி இலங்கையில் அன்று வாழ்ந்த பகுத்தறிவாளர் கோவூரை மீண்டும் தான் தற்போது வசிக்கும் ஆஸ்திரேலியாவில் கண்டுவிட்டேனோ என்ற அருட்டுணர்வில் இக்கதையை நகர்த்துகிறார்.
தான் அன்று சந்தித்த கோவூர் இறந்த பின்னர் தனது உடலை மருத்துவபீட மாணவர்களுக்கு வழங்கியவர். அதற்கு முன்பே மனைவி இறந்தபோது அவரது உடலையும் அவ்வாறு வழங்கியவர். அந்தச்செய்தியை ஆஸ்திரேலியாவில் காணும் அவரைப்போன்ற தோற்றமுள்ளவருக்கு சொல்கிறார் இந்தக் கதை சொல்லி.
அன்று மனைவியின் இறுதி நிகழ்வுச்செய்தியை இலங்கை வானொலியில் ஒலிபரப்புவதற்கு போராடியவர் அந்தக்கோவூர். ஆனால், இங்கே தன்னோடு முரண்பட்டு விலகி விட்டுச்சென்ற தனது மனைவியிடமிருந்து தனது செல்லநாயை காப்பாற்ற போராடும் இந்த டெனி என்ற கோவூர், இறுதியில் அந்த நாய் காணாமல் போனதும், அந்த ஏக்கத்திலேயே உயிர் இழக்கிறார்.
கதையின் முடிவில் ஒரு முடிச்சையும் கதை சொல்லி வைத்துள்ளார்.
அந்த முடிச்சை வாசகர்கள் அவிழ்ப்பார்கள்.
நவரட்ணம் வைத்திலிங்கம் – மெல்பன் – அவுஸ்திரேலியா
—0—
- நேர்காணல்
முருகபூபதி அவர்கள் தனது அரை நூற்றாண்டுகால எழுத்து அனுபவத்தின் முத்திரையை நேர்காணல் சிறுகதையில் பதித்திருக்கிறார். யாழ்ப்பாணச் சமூகத்தில் கடந்த அரை நூற்றாண்டுகால வாழ்வில் ஏற்பட்டுள்ள மாறுதல்களை, புதிய பிரச்சினைகளை, வாழ்வியல் மாற்றங்களை, மாறாத யாழ். சமூகத்தின் சீரழிந்த மனப்பாங்குகளின் தொடர்ச்சியை முருகபூபதி இச்சிறுகதையில் துல்லியமாகக் கொணர்கிறார்.
கல்வெட்டு எழுதும் யாழ்ப்பாணத்தின் பெரும் பண்பின் தொடர்ச்சியையும், இன்னும் திருமணம் பேசுவதில் ஒரு தரகர் இயங்கி வருவதின் அவசியத்தையும் கதையில் தொடுத்து நகரும் கதைப்பாணி சுவாரஸ்யமானது. ஸ்கைப்பில் மரண நிகழ்வுகளைப் பார்க்கும் அனுபவமும், முகநூல், வாட்ஸப், செட்டிங் என்று ஆணும் பெண்ணும் ஊடாடும் உலகில் கிளம்பும் பிரச்சினைகளும் சிறுகதையில் கதையோடு பின்னிப் பிணைந்து கதையின் சுவையான ஊட்டத்திற்கு துணை புரிகிறது.
பேரின்பத்தார் யாழ்ப்பாணத்தில் ஏற்பட்டுவரும் மாறுதல்களை நிதானமாக அனுமானிக்கும் அதேவேளை, பழைய யாழ்ப்பாண கலாசாரத்தின் வகைமாதிரிப்பாத்திரமாகவும் புனையப்பட்டிருக்கிறார்.
அவரது மனைவி பாக்கியலட்சுமி பேரின்பத்தாரைப் பார்க்க வந்திருக்கும் பையன், ‘கல்வெட்டு எழுத வந்தானா, கல்யாண வரன் பேசக் கேட்டு வந்திருக்கிறானா என்று தெரியவில்லை. கெதியா வாரீங்களா? நாடகம் பாதியில் நிக்குது’ என்று கேட்கும் இடம் பழுத்த வாழ்க்கை அனுபவத்தின் தெறிப்பாக விழுந்திருக்கிறது.
இன்றைய யாழ்ப்பாணச் சமூகத்தின் மன நிலையையும் புகலிட வாழ்வின் கையறு நிலையையும் நேர்காணல் நேர்த்தியாகப் பிரதிபலிக்கின்றது. அரை நூற்றாண்டு காலத் தொடர்ந்த எழுத்தின் வலிமையினைக் கதை கோடிட்டுக் காட்டவே செய்கிறது.
நவஜோதி ஜோகரட்னம் – இங்கிலாந்து
—0—
- காதலும் கடந்து போகும்
” எ திர்பாராத சம்பவங்களின் சங்கமம்தான் வாழ்க்கை. எல்லாமே கடந்து போகும். கொரோனா உட்பட” என்ற பிள்ளை ஐயாவின் வாசகங்கள் இந்தக் கதையின் சுருக்கம் என்பேன்.
திரைப்படங்களில் வருகின்ற சம்பவங்கள் போல கதை நகர்ந்து சென்றாலும், “நான்கு பேர் என்ன சொல்வார்கள்” என்ற எண்ணத்தில் உறவுகளே தன்னை விட்டு தூர விலகி நின்றபோதும், மிகப்பெரிய விடயத்தை செய்து முடித்த திருப்தியுடன் வெண்பற்கள் தெரியச் சிரிக்கின்ற பிள்ளை ஐயாவின் களங்கமற்ற சிரிப்பு போல கதையின் முடிவு வாசகர் உள்ளங்களில் தென்றலை வீசிச் செல்கிறது.
” இன்னார்க்கு இன்னாரென்று எழுதி வைத்தானே தேவன் அன்று ” என்ற கவியரசரின் பாடலுக்கு அமைய வாழ்க்கை சிலவேளைகளில் போடுகின்ற தவறான முடிச்சுகள், காலவோட்டத்தில் அவிழ்க்கப்பட்டு மீள் முடிச்சுகள் போடப்படுகின்றன என்பதை இந்தக் கதையினூடாக பதிவு செய்திருக்கிறார் முருகபூபதி.
இற்றைக்கு இருபது ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்த புதிதில் கன்பெரா ஆறுபடை முருகன் ஆலய தைப்பூச நன்னாளில் நானும் எனது மனைவியும் ஆலய அன்னதான நிகழ்வுக்காக காய்கறிகள் வெட்டி உதவி செய்து கொண்டிருந்தபோது வயதான அம்மா ஒருவர், “Do you know the meaning of your child and my child playing with our child” என்று கேட்டு அர்த்தம் சொல்லிச் சிரித்தபோது அதனை ஒரு கலாசார அதிர்ச்சியாக (cultural shock) மட்டுமே நினைத்திருந்தேன்.
ஆனால், அதனை சில நன்மைகளை, சந்தோஷங்களைத் தருகின்ற புதுப் புது அர்த்தங்களாக இந்தக் கதையூடாக அறிகின்றபோது மகிழ்ச்சி. கதை சொல்லியாக வருகின்ற எழுத்தாளருக்குக் கதை சொல்லியாக வருகின்ற பிள்ளை ஐயா அவர்கள் இயக்குநர், ஒளிப்பதிவாளர் பாலுமகேந்திராவின் படைப்புகளுக்கு பரம ரசிகர். காமெரா கவிஞர் பாலுமகேந்திராவின் கலைக்கண்கள் போல பிள்ளை ஐயாவும் வாழ்க்கைப் பாதையின் அனுபவங்களை பல கோணங்களில் அசைபோட்டு அடுத்த தலைமுறையினருக்கு மென்மையாகக் கடத்துகின்ற ஒரு முதிர்ந்த சமுதாயத்தின் பிரதிநிதியாக சித்தரிக்கப்படுகிறார்.
தயாபரன் – ரஞ்சிதமலர் – மூர்த்தி – சுகுணா – தயாபரன் – சுகுணா என்று காலம் போடுகின்ற முடிச்சுகளுக்கு தானும் கை கொடுத்திருக்கும் பிள்ளை ஐயா பெயருக்கு ஏற்றாற் போல் “சிசு” உள்ளம் படைத்தவர்.
இந்தக் கதையில் ஒரு காதல் கடந்து போகிறது. போகிற போக்கில் தொடர்ந்து வருகின்ற காதலைத், தான் விட்டுச்சென்ற இடத்தை நிரப்புவதற்கு வழிசமைத்துச் செல்கிறது. காதல் மட்டுமல்ல இந்தப் பூமிப்பந்தில் அனைத்துமே இவ்வாறுதான் கடந்து செல்கின்றன.
கலாநிதி கணேஷ் மணிவண்ணன்
மெல்பன் – அவுஸ்திரேலியா
—0—
- தாத்தாவும் பேத்தியும்
எழுத்தாளர் முருகபூபதி அவர்கள், ஏற்கனவே ‘ பாட்டி சொன்ன கதைகள்’ நூலைப் படைத்தவர். இன்று அவரே தாத்தாவாகிக் கதை சொல்வதுடன், தனது பேத்தி சொன்ன செய்திகளை எமக்குக் கதை வடிவில் தந்துள்ளார். ஆனால், அன்றுபோல வாயைப் பிளந்துகொண்டு பாட்டி சொல்வதையெல்லாம் குழந்தைக்கேயுரிய பேதமையுடன் கேட்ட காலமா இது? காலம் மாறித்தான் போய்விட்டது !
பேத்தியின் சின்னச்சின்னக் கொஞ்சல்களில் சொக்கிப்போகும் தாத்தா, அவரைத் தனது அன்புப்பிடியில் ஆட்டிவைக்கும் ஆறு வயதுப் பேத்தி ! இந்த இருவரிடையே பரிமாறப்படும் அன்பு என்ற நூலில் நெய்யப்பட்ட கதை இது.
நாமும் சற்றுநேரம் அவர்களது உலகில் சஞ்சரிக்கிறோம். தலைமுறை இடைவெளியைக் கடந்து, ஒருவரையொருவர் அறிந்தும் புரிந்தும் கொள்ள முனைகின்ற உரையாடல்கள் கதையைச் சுவையாக நகர்த்திச் செல்கின்றன. அவற்றின் வழியே, கதையின் மையப்புள்ளியை நோக்கி கதாசிரியர் எம்மை நகர்த்துவது, நயத்தற்குரியது.
குழந்தைகளின் உலகம் என்றுமே மாயாஜாலங்கள், வியப்பு, கற்பனை என்பவற்றால் பின்னப்பட்ட அழகிய உலகம். வளர்ந்தோரது உலகிற்கே உரிய கோமாளித்தனங்கள், சமூகப்பிளவுகள், அதீத சுயநலப்போக்குகள், மானுடத்தின் மீதான அவமதிப்புக்கள் என்பவற்றின் சுவடுகளை அவர்கள் அறியமாட்டார்கள்!
தனது பாடசாலையில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பிள்ளைகள் படிப்பதைப் பெருமையாகக் கூறி, ‘நைஸ் என்ன தாத்தா’ என்று இரசிக்கின்றாள் பேத்தி. சாதாரணமாகச் சொல்லப்பட்ட அந்த விடயம் தாத்தாவின் ஆழ்மனதில் குடிகொண்டிருக்கின்ற தீராத ஏக்கத்தைக் கிளறிவிடுகிறது. அது தாத்தாவின் தலைமுறையின் காயம்!
பன்மைத்துவக் கலாசாரத்தை ஒரு குழந்தை உள்ளத்துடன் எம்மால் அரவணைத்துக்கொள்ள முடியாதா? போகிறபோக்கில் ‘அப்பன்சாமி’ போல உபதேசிக்கப்பட்ட ‘பேருண்மை’ அல்லவா அது !
அந்தக் கேள்விக்கான விடையைத்தானே முழு உலகமுமே தேடிக் கொண்டிருக்கிறது!
வசந்தி தயாபரன் – கொழும்பு – இலங்கை
—-0—-
- அவள் அப்படித்தான்
மரபு — நவீனத்துவம் என்பவற்றுக்கிடையிலான முரண்பாடுகள், மோதல்களுக்கூடாகக் கதை பயணிக்கின்றது. பழைய தலைமுறை-புதிய தலைமுறை சார்ந்த பெண்களுக்கிடையிலான வாக்குவாதத்துடன் கதை விறுவிறுப்பாக ஆரம்பமாகின்றது.
அனைத்துலக மகளிர் தின விழாவின் இடைவேளையில் உணவு விற்பனை செய்யுமிடத்தில் பணிபுரியும் இளைஞனுக்கும், பிரபாலினிக்குமான உரையாடலானது, பிரபாலினி தனது வாழ்வு குறித்து எடுக்கவிருக்கும் முடிவினைச் சூசகமாக எதிர்வு கூறுகின்ற பாங்கில் அமைந்துள்ளமை நயத்தற்குரியது.
வலுவான, பிரதான பாத்திரப்படைப்பைக் கொண்ட இக்கதை தீவிர சமூக, இலக்கிய உரையாடல்களுக்கு இடமளிக்கின்றது.
இக்கதையில் பிரபாலினியின் தெரிவு, சிலர் மனதில் அதிர்வுகளை உண்டாக்கலாம். இது சமூகக் கட்டமைப்பின் ஆணிவேர் என்று பொதுவாகக் கருதப்படும் தந்தை, தாய், குழந்தைகளை உள்ளடக்கிய குடும்ப அமைப்பிற்கு முரணானது. தமிழ்ப் பண்பாட்டிற்குக் களங்கம் ஏற்படுத்தக் கூடியது என எண்ணலாம்.
மேலும், குழந்தை எவ்வாறு கணவனுக்குப் பதிலீடாக, பெண்ணுக்கு ஒரு துணையாக அமைய முடியும்? என்று கூடச் சிலர் தர்க்கரீதியாக யோசிக்கலாம். ஆனால், கதையின் முடிவு குறித்த இத்தகைய புறச் சிந்தனைகளிலே, கதை அழுத்தம் கொடுக்கும் “ குடும்பத்தில் பெண்ணுக்கு எதிரான ஆணின் வன்முறை ” என்ற பிரதான விடயத்தைத் தொலைத்து விடுவோம்.
பெண்கள், குழந்தைகள் பிரச்சினைகளில் தீவிர அக்கறையுள்ள பிரபாலினி இத்தகையதொரு தீர்மானத்தை எடுப்பதன் பின்னணியில் இருப்பவை தந்தை அவளின் தாய்க்கிழைத்த கொடுமைகளே ஆகும். குடும்பத்தில் ஆணின் வன்முறை என்பது மிக இயல்பாகிப் போய்விட்ட காரணத்தால், சமூகம் அதை ஒரு பெரிய ‘ பிரச்சினையாக ’ எடுத்துக் கொள்ளத் தவறிவிடுகின்றது.
மனைவி மீது கணவன் பிரயோகிக்கும் வன்முறையானது குழந்தைகளின் மனதில் எத்தகைய உளத்தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை இக்கதை சிறப்பாக எடுத்துக்காட்டுகின்றது. இதை ஒரு ஆண் எழுத்தாளரே சொல்லியிருப்பது இன்னும் சிறப்பு.
கலாநிதி மைதிலி தயாநிதி – ஸ்காபரோ – கனடா
—0—
|
மெல்பன் வானமுதம் வானொலியின் கதையும் காணமும் நிகழ்ச்சியினை தொகுத்து வழங்குவதற்காக சிறுகதைகளுக்கான தேடல்களை மேற்கொள்ளும் போது முருகபூபதி எழுதிய கொரோனோ கால உறவுகள் என்ற சிறுகதை கண்ணில் பட்டது.
கொரோனோவின் தீவிரம் மெல்பனில் இருந்த காலம் அது. கதையின் தலைப்பும் நடைமுறைக்கு ஏற்றாற்போல இருந்தவுடன் உடனே முடிவு செய்துவிட்டேன் கதையும் காணமுக்காக வானொலிவடிவம் ஆக்கிவிடுவதென்று.
கதைகளின் ஒவ்வொரு வரிகளும் எம் ஒவ்வொருவரின் கொரோனோ கால வாழ்க்கை முறையையும் மன உள்ளுணர்வுகளையும் தூண்டுவதைப்போல் இருந்தது. அதனாலோ என்னவோ, கதையும் காணமும் நிகழ்ச்சிக்காக கதைக்கேற்ற சினிமா பாடல்களை தெரிவு செய்யும் போது பெரும் கடினமாக இருக்கவில்லை.
ஒவ்வொரு பந்திகளை வாசிக்கும் போதும் அதற்கேற்ற சினிமா பாடல்கள் மனதிற்குள் இசை பாடின.
எமது நடைமுறை வாழ்வில் கொரோனோ ஏற்படுத்திய மாற்றங்களை தெள்ளத்தெளிவாக விவரித்துள்ளார் முருகபூபதி. அவரின் வாழ்வில் நடந்த நிகழ்வாகவே எம்மை காண வைத்திருக்கிறார்.
கதையினூடாகவே எவ்வாறான கொரோனோ கால பாதுகாப்பு சுகாதார நடைமுறைகளை பேண வேண்டும் என்ற கருத்துக்களை விவரித்திருப்பது வரவேற்கத்தக்கது. அதிலும் குறிப்பாக இயற்கையோடு இணைந்த மனிதவாழ்வில் மனிதன் பறவைகளைப் பார்த்து பொறாமைப்படும் காலம் இது என்பதை அழகாக புரிய வைத்திருக்கிறார்.
பறவைகளின் மொழி மனிதனுக்கு புரியுமென்றால் கொரோனோ காலத்தில் பறவைகளின் ஏளனப் பேச்சுக்கு ஆளாகியிருக்க நேர்ந்திருக்கும் போல . அந்த அளவுக்கு பறவைகளின் தடையில்லாத இயற்கை வாழ்க்கையை எம் கண் முன்னே கொண்டு வந்து ரசிக்க வைத்திருக்கிறார்.
மொத்தத்தில் கொரோனோ கால உறவுகள் சிறுகதை எமது அன்றாட இயந்திர வாழ்வில், கொரோனோ எப்படி புதிய இயற்கை உறவுகளை அடையாளம் காட்டியுள்ளது என்பதை அழகாக புரியவைத்துள்ளது.
சரண்யா தர்ஷன் – மெல்பன் – அவுஸ்திரேலியா
—0—
- 15. நடையில் வந்த பிரமை
நடையில் வந்த பிரமை சிறுகதை, முற்றுப்புள்ளிக்கு அப்பாலும் வாசகரை சிந்திக்கவைக்கிறது.
கதை சொல்லிக்கும், இறந்துவிட்ட எலிஸபெத்துக்குமிடையே நிகழ்ந்த அந்த அமானுஷ்ய சந்திப்பு, நிகழ்ந்ததா…? இல்லையா…? அது கதை சொல்லியின் பிரமையா, அப்படியும் இல்லையென்றால், அக்கதை சொல்லியின் மனைவி மூலம் வேப்பிலை அடிக்கவேண்டிவருமா..? முதலான பல எண்ணங்களை எழுப்பியது !
இக்கதையின் போக்கோடு இணைந்து, சமகால கொரோனோ வாழ்க்கை முறையின் யதார்த்தங்களையும் ( கிருமியோடு பரவிய சமூகப்பீதி, பயம், மன அழுத்தம், சமகால அரசியல் பூசல்கள், எனப்பல ) இழைத்துக்கொண்டு, நகர்த்தும் எழுத்தாளர் முருகபூபதியின் எழுத்தாற்றலுக்கு “ ஓ “ போடத்தான் வேண்டும்.
இன, மத, மொழி வேறுபாடுகளுக்கு அப்பால், சகமனிதர்களோடு மலரும் நட்பையும் புரிந்துணர்வையும் கதையின் இரண்டு பிரதான பாத்திரங்களான கதைசொல்லியும் அந்த எலிஸபெத்தும் மனிதநேயத்துடன் வாசகர்களுக்கு தெரியப்படுத்துகிறார்கள்.
பரஸ்பரம் நீரிழிவு உபாதை குறித்து கலந்துரையாடி, ஒருவர் நலனை ஒருவர் விசாரிக்கும் பண்புக்கூடாக சமூகவிழுமியத்தையும் இக்கதை சித்திரிக்கிறது.
உண்மைக்கும் புனைவுக்கும் இடையில் நகரும் கதை. புகலிடத்தில் மற்றவர்களில் சார்ந்திருக்கவிரும்பாத மனநிலையும் சித்திரிக்கப்படுகிறது. எதிர்பாராதவகையில் இடைவெளிபேணி வாழவேண்டிய சூழலில் சிக்கும்போது, சிநேகிதத்தை தேடி அலையும் இயல்பே எலிஸபெத்தின் திடீர் மறைவையும் ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிக்கிறது.
அந்தப்பிரமைதான் கதையின் அடிநாதம்.
நிவேதனா அச்சுதன் – மெல்பன் – அவுஸ்திரேலியா
—0—
- தூமலர் தூவித்தொழு
- ஒரு கதை ஒரு கருத்து – அசோகமித்திரனின் குருவிக்கூடு
- அருள்மிகு தெப்பக்குளம்…
- ஒளிப்படங்களும் நாமும்
- கவிதைகள்
- இந்துக்கோவில்களைப் பக்தர்கள் வசம் ஒப்படைக்கலாமா?
- பொக்கிஷம் !
- சொல்வனம் இணையப் பத்திரிகையின் 250 ஆம் இதழ்
- தி பேர்ட் கேஜ்
- அதுதான் வழி!
- (அனுபவக் கட்டுரை) – கெட்டகனவு தொழிற்சாலை
- ராக்கெட் விமான த்தில் முதன்முதல் விண்வெளி விளிம்புக்குப் பயணம் செய்து மீண்ட தீரர்
- வேட்டை
- மொழிப்பெருங்கருணை
- ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்
- பார்வதியம்மா
- கீறிக்கீறி உழுகிறோம் உண்கிறோம்
- தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]
- என்னை பற்றி
- 7.ஔவையாரும் சிலம்பியும்
- இவர்களின் பார்வையில் முருகபூபதியின் ஏழாவது கதைத் தொகுதி
- தமிழக பெண்களை மது அரக்கனிடமிருந்து விடுவிக்க தமிழ் நாட்டில் முழு மதுவிலக்கை அமுல்படுத்த பரிந்துரைகள்