வேதியியல் பொறியாளர்
நிறுவனர்,
நந்தினி வாய்ஸ் ஃபார் தி டிப்ரைடு,
M-60/1,4வது குறுக்கு தெரு,
பெசன்ட் நகர்
சென்னை 600090
Ph:044-24916037
மின்னஞ்சல்: nsvenkatchennai@gmail.com
குடிகாரக் கணவனிடம் அடிவாங்கும் மனைவி, குடிகார மகனிடம் அடிவாங்கும் தாய், இதுதான் தமிழ் நாட்டில் பல பெண்கள் சந்திக்கும் அவலநிலை. பெரும்பாலும் இத்தகைய சீர்கெட்ட நிலை ஏழைப் பெண்களிடம் காணப்படுகிறது. இதற்கு என்ன தீர்வு?
மதுவிலக்கின் கதை
தமிழ் நாட்டையும், குறிப்பாக ஏழைப் பெண்களின் நலனையும் காக்க, மதுவிலக்கு அவசியம் என்பதை உணர்ந்த மூதறிஞர் இராஜாஜி, மதுவிலக்கு சட்டத்தை 1937ம் ஆண்டு அமல்படுத்தினார். இந்த மதுவிலக்கு சட்டத்தை பல சமூகத்தினரும் ஆதரித்தனர். குறிப்பாக ஆதரித்தவர்களில் தந்தை பெரியாரும் ஒருவர். மூதறிஞர் இராஜாஜி 1937ம் ஆண்டு மதுவிலக்கு சட்டத்தினை அமல்படுத்தினாலும், அதற்கு ஏழு வருடங்களுக்கு முன்பாக, 1930ம் ஆண்டு தந்தை பெரியார், சுயமரியாதை இயக்க மாநாட்டில் மதுவிலக்கின் அவசியத்தைக் குறித்து விரிவாகப் பேசினார்.
மூதறிஞர் இராஜாஜி, தந்தை பெரியார், எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தி மேலும் பலர் மதுவிலக்குப் பிரச்சாரத்தை மேற்கொண்டதால், மது வாசனையில்லாத ஒரு இளைய சந்ததியினர் தமிழ் நாட்டில் வளர்ந்தனர். இந்த ஆக்கபூர்வமான நிலை 1971ம் ஆண்டு வரை தொடர்ந்தது.
கர்மவீரர் காமராசர், அறிஞர் அண்ணா, போன்றோர் முதலமைச்சராக இருந்த போது மதுவிலக்கு கைவிடப்படவில்லை. அறிஞர் அண்ணா, மேலும் பல ஆண்டுகள் தமிழ்நாட்டு முதலமைச்சராக பதவி வகித்திருந்தால், தமிழ் நாட்டில் மதுவிலக்கு சட்டம் தொடர்ந்து கடைபிடிக்கப்பட்டிருக்குமென்று பலர் எண்ணுகின்றனர்.
அறிஞர் அண்ணா மறைந்த பின் அடுத்த முதலமைச்சர் மதுவிலக்கை ரத்து செய்யத் தீர்மானித்தார். அதை கேட்டபொழுது பதறிப்போன மூதறிஞர் இராஜாஜி, முதலமைச்சரின் வீட்டிற்குச் சென்று, மதுவிலக்கை ரத்து செய்தால் தமிழ் நாட்டிற்கு ஏற்படக்கூடிய அவல நிலையினை விளக்கி, மதுவிலக்கை ரத்து செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். மூதறிஞர் இராஜாஜியின் கோரிக்கை அன்றைய முதலமைச்சரால் நிராகரிக்கப்பட்டது.
பெண்கள் படும்பாடு
குடிபோதையில் வந்த தந்தை எந்தக் காரணமுமில்லாமல் தாயை அடிப்பதைக் கண்ட பன்னிரண்டு வயது சிறுமி பதறிப்போனாள். அன்றே தீர்மானித்தாள். தான் ஒரு போலீஸ்காரியாகி தந்தையை அடித்து அவருக்குப் பாடம் கற்பிக்க வேண்டுமென்று.
கோலமாவு விற்று வாழ்க்கையை ஓட்டும் நடுத்தர வயதுப் பெண், அதிகாலை ஐந்து மணிக்கு தனக்கு நன்கு பரிச்சயமுள்ள வாடிக்கையாளர் வீட்டுக்கு சென்று, இரண்டு புடவைகள் வேண்டுமென்று கேட்டார். இதற்கு விளக்கம் கேட்ட போது, தனக்கு இரண்டு நல்ல புடவைகளே இருந்தது. அதனைக் குடிகாரக் கணவன் எடுத்துச் சென்று விலைக்கு விற்று சாராயம் வாங்கிக் குடித்துவிட்டார். என்னிடமுள்ள கிழிந்த புடவையை உடுத்தி வெளியில் செல்ல முடியாது. இதனால் தான் அதிகாலையில் வெளிச்சம் வருவதற்கு முன்பு வந்தேன் என்றார்.
குடித்து விட்டு வந்த தந்தை,மகனை பள்ளிக்கூடம் செல்ல வேண்டாம் என்றும், வேலைக்குச் சென்று பணம் சம்பாதிக்க வேண்டும் என்று கூறினார். மகனும் அவன் தாயாரும் மறுத்தனர். கோபமுற்ற தந்தை குடிபோதையுடன் வீட்டுக்கு வந்து, மகன் ஒரு கையில் புத்தகம் படித்துக் கொண்டு, மற்றொரு கையில் சாப்பிட்டுக் கொண்டிருந்த போது, சாப்பாட்டுத் தட்டில் மண்ணைப் போட்டார். இதனைக் கண்ட தாயார் துடிதுடித்துப் போனார்.
இது போன்ற பல துயரமான சம்பவங்கள் தமிழ் நாட்டுப் பெண்களின் அன்றாட வாழ்க்கையில் நடந்து கொண்டிருக்கிறது.
தமிழக அரசின் தவறான வாதங்கள்
மதுவிலக்கை ரத்து செய்யத் தயங்கும் தமிழக அரசு, இரண்டு தவறான வாதங்களை முன் வைக்கிறது.
மதுவிலக்கை அமல்படுத்தினால், கள்ளச் சாராயம் பெருகி உயிரிழப்பு ஏற்படும் என்பது ஒரு வாதம்.
மதுவிலக்கு அமலில் இருந்த போது கள்ளச் சாராயத்தினால் ஏற்பட்ட உயிரிழப்பைக் காட்டிலும், டாஸ்மாக் சாராயத்தினால் இன்று ஏற்படும் உயிரிழப்பு அதிகம் என்பதைக் காண்கின்றோம்.
தமிழ் நாட்டில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, தகாத உறவு, சாலை விபத்துக்கள் போன்ற காரணங்களினால், அன்றாடம் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு வேகமாகப் பரவி வரும் டாஸ்மாக் சாராய வியாபாரம் தான் காரணம் என்பது கண்கூடாகத் தெரிகிறது.
கள்ளச் சாராயத்தினால் உயிரிழப்பு கூடும் என்ற அரசாங்கத்தின் வாதம் தவறானது.
கள்ளச் சாராயத்தை ஒழிப்பதற்கு தீவிரமான மதுவிலக்குப் பிரச்சாரமும், கண்டிப்பான காவல்துறை நிர்வாகமும் தான் தேவை.
டாஸ்மாக் கடைகளை மூடினால் தமிழக அரசுக்கு வருமானம் குறைந்துவிடும். தற்போதுள்ள இக்கட்டான நிதிநிலையில் இது சாத்தியமல்ல என்பது தமிழக அரசின் இரண்டாவது வாதம். இது அரசின் போதுமான நிர்வாகத்திறமை இல்லை என்பதையும் மற்றும் ஏழைப் பெண்களின் நலனில் அக்கறை இல்லை என்பதையும் எடுத்துக் காட்டுகிறது. டாஸ்மாக் கடைகளை மூடிவிட்டு, இந்த வருவாய் இழப்பை ஈடு கட்ட பல வழிமுறைகள் உள்ளது என்பது பொருளாதார நிபுணர்களுக்குத் தெளிவாகப் புலப்படும்.
தமிழக அரசின் நிதிநிலையை பார்ப்போம்
டாஸ்மாக் மூலம் அரசாங்கத்திற்கு கிடைக்கும் வருவாய்
டாஸ்மாக்கிற்கு 11 டிஸ்டில்லரிகள் மற்றும் 7 மதுபான உற்பத்தி நிலையங்கள் மூலம் மது விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் அரசுக்கு கிடைக்கும் வருமானம்:
வருடம் ஏப்ரல் முதல் மார்ச் வரை |
வருமானம் |
2003-04 |
3,640 |
2004-05 |
4,872 |
2005-06 |
6,031 |
2006-07 |
7,474 |
2007-08 |
8,821 |
2008-09 |
10,602 |
2009-10 |
12,498 |
2010-11 |
14,965 |
2011-12 |
18,081 |
2012-13 |
21,681 |
2013-14 |
21,675 |
2014-15 |
24,165 |
2015-16 |
25,846 |
2016-17 |
26,995 |
2017-18 |
26,798 |
2018-19 |
31,158 |
2019-20 |
33,000 |
வருடாந்திர வளர்ச்சி விகிதம் (CAGR) — ஏப்ரல் 2003 முதல் மார்ச் 2020 வரை : 14.77%
ஆண்டொன்றுக்கு சுமார் 13 முதல் 14 சதவிகிதம் வரை தமிழ்நாட்டில் குடிமகன்கள், அதிகரித்து வருகின்றனர் என்பதை மேற்கண்ட புள்ளி விவரங்கள் எடுத்துக் காட்டுகிறது. இந்த நிலை நீடித்தால் அடுத்த பத்தாண்டுகளில் தமிழ் நாட்டின் நிலை எப்படி இருக்கும்? சமுதாயத்தின் அடித்தளமே ஆடிப்போகும்.
மாநிலம் வாரியாக மது விற்பனை — 2018-19ம் ஆண்டு
மாநிலம் |
மதுபான விற்பனை மூலம் வருவாய் (ரூ. கோடியில்) |
தமிழ்நாடு |
29,672 |
ஹரியானா |
19,703 |
மகாராஷ்டிரா |
18,000 |
கர்நாடகா |
15,332 |
உத்தரபிரதேசம் |
14,083 |
ஆந்திரா |
12,739 |
தெலுங்கானா |
12,144 |
மத்தியப் பிரதேசம் |
7,926 |
ராஜஸ்தான் |
5,585 |
பஞ்சாப் |
5,000 |
தமிழ் பண்பாடு, தமிழ் கலாச்சாரம், உலகத்திலேயே சிறந்தது என்று நாம் பெருமை கொள்கிறோம். ஆனால், தற்போது இந்தியாவிலேயே அதிகமாக சாராயம் விற்று பணம் சம்பாதிப்பது தமிழக அரசுதான்.
இது வெட்கப்பட வேண்டிய நிலை இல்லையா?
தமிழக அரசு நிதி – வரவு செலவு விபரங்கள் :
(ரூ. கோடியில்)
பொருள் |
2018-19 |
2019-20 |
2020-21 (திட்டப்பட்டியல்) |
ஏப்ரல் முதல் மார்ச் வரை |
|||
மொத்த செலவு |
2,43,053 |
2,70,256 |
3,00,390 |
வருவாய் (கடன் வாங்குவதைத் தவிர) |
1,80,655 |
1,97,334 |
2,24,739 |
கடன் |
47,936 |
67,838 |
74,107 |
தமிழக அரசின் கடன் ஒவ்வொரு ஆண்டும் கூடி வருகின்றது. தனிமனிதர் தனக்கு எத்தனை வருமானம் என்பதை அனுசரித்து, செலவு செய்வார்.அத்தியாவசிய காரணங்களுக்காக கடன் வாங்க நேரிட்டால், அதனை எப்படி திருப்பிக் கொடுப்பது என்று கவலைபடுவார். தமிழக அரசுக்கு இத்தகைய கவலை இல்லை போலும்.
அரசின் நிர்வாகம் மற்றும் அரசு யாருக்கும் சொந்தமில்லை. அரசின் பொருளாதாரம் எக்கேடு கெட்டால் நமக்கென்ன என்று ஆட்சியாளர்கள் நினைக்கின்றனரோ?
நிலுவையில் உள்ள கடன்-
(ரூ. கோடியில்)
விவரங்கள் |
2011-12 |
2017-18 |
2020-21 |
ஏப்ரல் முதல் மார்ச் வரை |
|||
மாநில அரசு நிலுவையில் உள்ள கடன் தொகை |
1,30,627 |
3,26,636 |
4,85,503 |
மாநில பொது துறை நிறுவனங்களின் கடன் தொகை |
47,769 |
1,67,844 |
2,91,302 |
மொத்த கடன் தொகை |
178,387 |
4,94,480 |
7,76,805 |
நிலுவையிலுள்ள மொத்த கடன் தமிழ் நாடு அரசின் எதிர்கால நிதிநிலைமையையும், பொருளாதாரத்தையும், வளர்ச்சியையும் கேள்விக்குறியாக்கி விட்டது. அமைச்சர்களும், அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் இந்த அவலமான நிலையைக் கண்டு கவலைப்படுகிறார்களா? செலவுகள் கட்டுப்படுத்தப்படவில்லை. கடன் சுமை கடுமையாக இருப்பினும், மேலும் மேலும் கடன் வாங்கி வட்டி சுமை கூடி நிதி நிலைமை மேலும் மோசமடைகிறது.
தமிழ்நாட்டில் எவ்வளவு டாஸ்மாக் மதுபானம் குடிக்கப்படுகிறது?
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட வெளிநாட்டு மதுபானம் (IMFL)
- வருடத்திற்கு சுமார் 52 கோடி லிட்டர்.
பீர் :
- வருடத்திற்கு சுமார் 25.20 கோடி லிட்டர்.
இத்தகவல் 15.4.2020 தேதியிட்ட டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழில் வெளியானது.
இத்தகைய அவலமான நிலைக்குத் தீர்வுகள் என்ன என்பதைப் பார்ப்போம்
மூன்று வருடங்களில் முழு மதுவிலக்கை அமல்படுத்தலாம்
- குடிபழக்கம் எல்லா வயதினரிடமும் பரவலாகி வருவதினால், ஒரே தவணையில் முழு மதுவிலக்கை அமல்படுத்துவது சாத்தியமல்ல.
- மூன்று வருடங்களில், ஒவ்வொரு ஆண்டிற்கும் 30 லிருந்து 35 சதவிகிதம் வரை மதுவிலக்கை அமல்படுத்துவது சாத்தியமாகும்.
- மதுவிலக்கை அமல்படுத்த டாஸ்மாக் கடைகளை மூடினால் போதாது. மதுவின் உற்பத்தியையும், விற்பனை அளவையும் கட்டுப்படுத்த வேண்டும்.
தளராத மதுவிலக்குப் பிரசாரம் தேவை
- மதுப்பழக்கத்தை ஒழிக்க சமூக ஆர்வலர்களும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும், பத்திரிகை மற்றும் செய்தித்தாள்களும் தளராத பிரசாரத்தைத் தொடர வேண்டும்.
- குடிப்பழக்கமில்லாத ஏழைக் குடும்பங்களைக் கண்டறிந்து தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள், அவர்களைப் பாராட்டி கௌரவிக்க வேண்டும். இது ஒரு தொடர் முயற்சி.
டாஸ்மாக் கடைகளை மூடுவதால், இழப்பு பொருளாதாரத்தை சீர்படுத்த பல வழிகள் உள்ளன
- டாஸ்மாக் கடைகளிடமிருந்து, தமிழ் நாட்டிற்கு கிடைக்கும் ஆண்டு வருமானம் ரூபாய் 31,000/- கோடி. கடன் சுமைக்கு தமிழ் நாடு அரசு செலுத்தும் வட்டி ஆண்டிற்கு இதனைவிட கூடுதல். கடன் சுமையை கணிசமாகக் குறைத்தால், டாஸ்மாக் வருமானம் தேவையில்லை.
உபரி ஆல்கஹாலால் தொழில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள்
முழு மதுவிலக்கை அமல்படுத்துவதால், தமிழ் நாட்டிற்குக் கிடைக்க கூடிய உபரி ஆல்கஹாலின் அளவு சுமாராக ஆண்டிற்கு 25 கோடி லிட்டர்.
இந்த ஆல்கஹாலைக் கொண்டு பல இலாபகரமான இரசாயன பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளை அமைக்கலாம்.
இதனால் தமிழகத்தில் வேலை வாய்ப்புகள் ஏற்படுவது மட்டுமின்றி, அரசுக்கு வரி (tax) மூலம் நல்ல வருமானமும் கிடைக்கும்
உபரி ஆல்கஹாலை கொண்டு தயாரிக்க ஏராளமான இரசாயன பொருட்கள் உள்ளன.
வரி ஏய்ப்பை தடுக்கும் முயற்சிகள் வேண்டும்
- உயர் நீதிமன்றம் கனிமவளத் துறையில் கொள்ளை போவதைத் தடுக்க வேண்டுமென்று கூறியுள்ளது. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்ற பழமொழி நினைவிற்கு வருகிறது.
- வரி ஏய்ப்பை தடுக்க அரசு மற்றும் அரசு சார்ந்த பொது துறை நிறுவனங்களின் அனைத்து மட்டங்களிலும் நேர்மையான அரசு நிர்வாகம் தேவை இந்த நிலையை தமிழக அரசினால் சாதிக்க முடியுமா என்பதே கவலை தரும் கேள்வி.
அரசு நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்க கூடாது.
தமிழ்நாட்டில் 70க்கும் மேற்பட்ட பொது துறை நிறுவனங்கள் உள்ளன. அவற்றில் 30க்கும் மேற்பட்டவை பெரும் நஷ்டத்தில் இயங்கி வருகின்றன.
- 2018–19 ம் நிதி ஆண்டில் தமிழக அரசுக்கு மின்துறை நிறுவனத்தின் மூலம் மட்டும் ரூபாய் 13176/- கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
- மேலும் மாநில போக்குவரத்து கழகத்தில் மார்ச் 2019 வரை மொத்தமாக ரூபாய் 21530/- கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
- மின்துறை நிறுவனம் சுமார் ரூ.2900/- கோடி அரசு சார்ந்த நுகர்வோர்களிடம் வசூலிக்கவில்லை என்ற செய்தி செய்தித்தாளில் வெளியாகியுள்ளது.
- தமிழ் நாடு அரசு மின்துறை நிறுவனங்களின் கடனை அடைப்பதற்கு
ரூபாய் 4563/- கோடி சமீபத்திய பட்ஜெட்டில் ஒதுக்கி உள்ளது. மேலும் அடுத்த ஆண்டில் ஏற்படக்கூடிய நஷ்டத்தை சமாளிக்க ரூபாய் 4266/- கோடி சமீபத்திய பட்ஜெட்டில் ஒதுக்கியுள்ளது.
- பல வருடங்களாக நஷ்டத்தில் இயங்கி வரும் அரசு/ பொதுத்துறை நிறுவனங்களை அரசினால், இலாபகரமாக செயல்படுத்த முடியமென்று கருத இயலவில்லை.
- நஷ்டத்தில் இயங்கி வரும் பொதுத்துறை நிறுவனங்களை அரசு தனியார் வசம் ஒப்படைக்க வேண்டும்.
அனாவசிய (அவசியமற்ற) இலவசங்களைத் தவிர்க்க வேண்டும்
- நினைவு மண்டபங்கள் கட்டுவதிலும், சிலைகள் நிறுவுவதிலும், தேவையில்லாத இலவசங்கள் வழங்குவதிலும், கோடிக்கணக்கான ரூபாய் செலவிடப்படுகிறது.
- ரூபாய் கோடிக்கணக்கில் போக்குவரத்து கழகங்கள் நஷ்டத்தில் இயங்கி வரும் நிலையில், பெண்கள் பேருந்துகளில் பயணம் செய்யும்போது பயண டிக்கெட் வாங்க வேண்டாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வருமானம் மேலும் பாதியாகக் குறையும். அரசுக்கு இவ்விழப்பினை ஈடு செய்ய எதேனும் மாற்று திட்டம் உண்டா? கடன் சுமை கூடும் பொழுது, தலைக்கு மேல் கடன், இதில் சாண் போனால் என்ன முழம் போனால் என்ன, என்று அரசு கருதுகிறதோ என எண்ணத் தோன்றுகிறது.
- மக்களுக்காக சேவை செய்கிறோம் என்று சொல்லி தேர்தலில் வெற்றி பெரும் MLA மற்றும் மந்திரிகளின் சம்பளம் மற்றும் இதர செலவுகளுக்காக ஆண்டிற்கு ரூ.30/- கோடி வரை செலவிடப்படுகிறது.
- இதுபோன்ற தவிர்க்க வேண்டிய அல்லது குறைக்கப்பட வேண்டிய அநாவசிய செலவுகள் ஏராளம்.
உபயோகிக்கப்படாத அரசு சொத்துக்களை விற்பனை செய்து அரசு கடனைக் குறைக்கலாம்.
- மூடிக்கிடக்கும் தொழிற்சாலைகள் மற்றும் உபயோகிக்கப்படாத அரசு சொத்துக்களை விற்பனை செய்வது அவசியம். இதனால் கடன் சுமையை கணிசமாக குறைக்க முடியும்.
5 ஆண்டுத் திட்டம் தேவை
தற்பொழுது பதவியேற்றுள்ள தமிழக அரசிற்கு ஐந்து ஆண்டுகள் இத்திட்டத்தினை நிறைவேற்ற கால அவகாசம் உள்ளது.
- 5 ஆண்டுகளுக்கான தொழில், பொருளாதார, சமூக, முன்னேற்றத்திற்கான திட்டத்தினை 2021ம் ஆண்டு முதல் அமல்படுத்தினால், 5 வருடங்களில் நம் தமிழகத்தின் நிலை அனைவரும் பாராட்டி மகிழ்ச்சி அடையும் நிலையில் மாறக்கூடும்.
முழு மதுவிலக்கு காலத்தின் கட்டாயம்
- தமிழ் நாட்டில் சமுதாயத்தின் அடித்தளம் பரவலான மது பழக்கத்தினால் சீரழிந்து வரும் நிலையில், இந்த மோசமான நிலைமை எக்காரணம் கொண்டும் தொடரக்கூடாது.
- பூரண மதுவிலக்கை அமல்படுத்துவதால் தமிழ் நாட்டின் முன்னேற்றத்தில் மாற்றமும், ஏழை குடும்பங்களின் பொருளாதாரத்தை நிலைநிறுத்தவும், பெண்களின் மீது வன்முறைகளைத் தவிர்க்கவும் முடியும்.
- மதுவிலக்கினால் பொருளாதாரப் பிரச்சனைகள் ஏற்படினும், மதுவிலக்கினை அமல்படுத்தி தமிழகப் பொருளாதாரத்தினை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்வதே திறமை உள்ள நிர்வாகத்தின் அறிகுறி.
- முழு மதுவிலக்கு பல ஆண்டுகளாக அமலில் உள்ள குஜராத் மாநிலத்தில் தனி மனித வருமானம் (per capita income) இந்தியாவிலேயே அதிகமாக உள்ளது.
- குறிக்கோளும் நிர்வாகத்திறமையும் இருப்பின் மது இல்லாத தமிழகத்தை வெற்றி பாதையில் கொண்டு செல்லலாம்.
- மேலும் தமிழகத்திற்கே உரிய பண்பாடு, கலாச்சாரம் போன்ற முக்கிய அம்சங்களை உலகிற்கு எடுத்துக்காட்ட முடியும்.
- தூமலர் தூவித்தொழு
- ஒரு கதை ஒரு கருத்து – அசோகமித்திரனின் குருவிக்கூடு
- அருள்மிகு தெப்பக்குளம்…
- ஒளிப்படங்களும் நாமும்
- கவிதைகள்
- இந்துக்கோவில்களைப் பக்தர்கள் வசம் ஒப்படைக்கலாமா?
- பொக்கிஷம் !
- சொல்வனம் இணையப் பத்திரிகையின் 250 ஆம் இதழ்
- தி பேர்ட் கேஜ்
- அதுதான் வழி!
- (அனுபவக் கட்டுரை) – கெட்டகனவு தொழிற்சாலை
- ராக்கெட் விமான த்தில் முதன்முதல் விண்வெளி விளிம்புக்குப் பயணம் செய்து மீண்ட தீரர்
- வேட்டை
- மொழிப்பெருங்கருணை
- ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்
- பார்வதியம்மா
- கீறிக்கீறி உழுகிறோம் உண்கிறோம்
- தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]
- என்னை பற்றி
- 7.ஔவையாரும் சிலம்பியும்
- இவர்களின் பார்வையில் முருகபூபதியின் ஏழாவது கதைத் தொகுதி
- தமிழக பெண்களை மது அரக்கனிடமிருந்து விடுவிக்க தமிழ் நாட்டில் முழு மதுவிலக்கை அமுல்படுத்த பரிந்துரைகள்