ப.ஜீவகாருண்யன்
துவாரகைக்கு வெளியே பிரபாச தீர்த்தக் கடற்கரையில் சண்டையிட்டு மடிந்த யாதவர்களில் முக்கியமானவர்களையும் சண்டையிடாமலே இறந்து போன பலராமன், கிருஷ்ணனையும் எரியூட்டும்போதே எனது நாடி, நரம்புகள் ஆடி அடங்கிவிட்டன.
குருக்ஷேத்திரப் போர்க்களத்தில் எதிரணியாய் நிற்கும் பிதாமகர் பீஷ்மர், ஆச்சாரியர் துரோணர், கிருபர் போன்ற மூத்தோர்கள் மற்றும் உற்றார் உறவினர்களை எதிர்க்க மனமின்றி தேர்த்தட்டில் நான் விரக்தியுடன் நின்ற போது என்னிடம் அன்றுவரை நான் கேட்டறியாத விநோதமாக எதை எதையோ சொல்லி, ‘நான் கடவுளின் அவதாரம்! எனது வார்த்தையை மறுத்து நடப்பவர்கள் யாராயினும் அவர்கள் நரகமடைவது திண்ணம்!’ எனப் பயமுறுத்தி என்னை வில்லெடுக்க வைத்தவன் கிருஷ்ணன்.
களத்தில் கலங்கி நின்ற எனக்கு, அன்று அவன் அணிவித்த மதி மயக்கமூட்டும் வசீகர வார்த்தைப் பூமாலையில் ஓரிதழும் ஒற்றைப் பூவும் உதிராமல், வாடாமல், வதங்காமல் மறக்கவியலாததாக இன்றும் எனது நெஞ்சில் நிலையாகிக் கிடக்கிறது.
போர்க்களத்தில், பின்னுரைக்கும் வகையில்தான் கிருஷ்ணன் அன்று தனது வார்த்தை விளையாட்டை என்னிடம் நிகழ்த்திக் காட்டினான். அன்று அவன் தனது தத்துவப் பிரசங்கத்தை, ‘அர்ச்சுனா! போர்க்களத்தில் ஒப்பாரிக்கு இடமேது?’ என்று தான் ஆரம்பித்தான். பிறகு தொடர்ந்தான்.
‘அர்ச்சுனா, திரண்டிருக்கும் இரு அணியின் வீரர்களில் வெல்லற்கரிய வில்லாளியாகிய நீ துயரப்படத் தகாதவர்களைக் குறித்துத் துயரப்படுகிறாய். மண்ணில் பிறப்பெடுத்த ஜீவராசிகள் அனைத்தும் உடல், உயிரால் பிணைந்தவை. இவற்றுள் உடல் அழியக் கூடியது. ஆனால், ஆன்மாவாகிய உயிர் நிலையானது; யாராலும் அழிக்க முடியாதது. பழைய துணியை-அழுக்குத் துணியை-நைந்த துணியைக் களைந்து விட்டு ஒருவன் புதிய துணியை உடுத்திக் கொள்வது போல உயிர் பழைய உடம்பை விட்டு விட்டுப் புதிதாக வேறு உடம்பை எடுத்துக் கொள்கிறது. ஆன்மாவாகிய உயிரை ஆயுதத்தால் சிதைக்க முடியாது. அக்கினியால் எரிக்க முடியாது. நீரால் நனைக்க முடியாது. காற்றினால் உலர்த்த முடியாது. ஆன்மாவைக் குறித்து அனேகர் அறிந்தவரில்லை. ‘ஆன்மா இல்லை’ என்று சாதிப்பவன் எதுவும் இல்லாதவனாகிறான். ‘ஆன்மா இருக்கிறது’ என்று அறிபவன் எல்லாம் உள்ளவனாக ஆகிறான். ஆன்மா ஆனந்தமயமான உடம்பின் ஆதாரமாக இருக்கிறது. ஆன்மா நித்தியமானது. எப்போதும் இருப்பது. ஆகவே நீ ஆன்மா குறித்துத் துயரப்படுவது தகாது.
‘அர்ச்சுனா, இதோ உன் கண்முன்னே களத்தில் நிற்பவர்கள் அனைவரும் ஏற்கனவே இறந்து போனவர்களே! ஏனெனில், மண்ணில் பிறந்து விழுந்த கணத்திலேயே உயிருக்கு மரணம் நிச்சயமாகி விடுகிறது. ‘நிலையானது’ என்று நான் சொல்லும் உயிராகக் கூடிய ஆன்மா எப்போதும்–யாருக்கும் கண்ணுக்குப் புலப்படுவதில்லை. ஒரு உடல் இறக்கும் போது அந்த உடலுக்குரிய ஆன்மா இன்னொரு உடல் சட்டகத்திற்குள் அடைக்கலமாகிறது. ஆகவே ஒருவன் இன்னொருவனைக் கொல்வதாகவோ கொல்லச் செய்வதாகவோ நினைப்பது அறியாமையே!
‘சத்வ, ரஜஸ், தமஸ் என்னும் முக்குணங்களால் உடல் ஆன்மாவுடன் பிணைக்கப்பட்டுள்ளது. இந்த முக்குணங்களின் கலவையில் ஏற்படும் வேறுபாடே ஒருவனின் பன்முகத் தன்மையை, குண நலன்களைத் தீர்மானிக்கிறது.
‘வருண தர்மத்தை வழுவாமல் கடைபிடிக்கும் க்ஷத்திரியன் தடையின்றிச் சொர்க்கத்தை அடைவான். நீ, அரசன்! நீ, உனக்குரிய குலதருமத்தைக் குறைவில்லாமல் செய்! போர் அரசனுக்குரிய அறம்! நீ நியாயமான போரைப் புரியவில்லையானால் சுவ தருமத்தையும் புகழையும் இழந்து நரகத்தை-பாவத்தை அடைவாய்! இகழ்ச்சி மரணத்தினும் கொடியது. நடக்க இருக்கும் போரில் நீ வெற்றியடையும் பட்சத்தில் மேதினியை ஆள்வாய்! ஒருவேளை கொல்லப்படுவாயானால் தவறாமல் சொர்க்கத்தை அடைவாய்! ஆகவே நீ, சுகத்தையும் துக்கத்தையும் வெற்றியையும் தோல்வியையும் ஒன்றாகப் பார்! பயனைக் கருதாதே! கடமையைச் செய்!
‘அர்ச்சுனா, உறுதியான அறிவுடையவன், ஆமை தனது அய்ம்புலன்களையும் ஓட்டுக்குள் அடக்கிக் கொள்வது போல விருப்பு-வெறுப்பு அற்றவனாகி விடுகிறான். அவனை துக்கம், ஆசை, பயம், கோபம் இவை அணுக மாட்டா. பற்றிலிருந்து ஆசையும் ஆசையிலிருந்து குரோதமும் குரோதத்திலிருந்து அறியாமையும் உண்டாகின்றன. இந்திரியங்களை வென்றவன் சாந்தியடைகிறான்; பிரம்மத்தை அடைகிறான்.
‘அர்ச்சுனா, நெருங்கிப் பழகும் நண்பன் என்னும் முறையில் என்னை நீ குறைத்து மதிப்பிடுகிறாய்! ஆனால், வாசுதேவ கிருஷ்ணனாகிய நான் ஆதியும் அந்தமும் ஆனவன். மண்ணில் தருமத்தை நிலை நிறுத்துவதற்காகக் கடவுள் தன்மையிலிருந்து விலகி ரத்தமும் சதையும் கொண்டு மானிடனாக உன்னெதிரே நிற்கிறேன். நடக்க இருக்கும் போரினால் எனக்கு எந்த நன்மையும் ஏற்படப் போவதில்லை. ஆனாலும் அதர்மம் அழிந்து தர்மம் நிலைபெற நான் எனது கடமையைச் செய்கிறேன். என்னைப் புறக்கணிப்போர் பிசாசுகளின் கருவறையில் மீண்டும் மீண்டும் உருவாகி பலப்பல பிறவிகளுக்குப் பிறகு நரகம் சேர்வார்கள். எங்கே கிருஷ்ணன் நான் இருக்கின்றேனோ அங்கே நிச்சயம் ஜெயம் உண்டு! எனது சொற்படி நடப்பவர்கள் தடைகளைத் தவிடு பொடியாக்கி முன்னேறுவார்கள். அகந்தையில் என்னைப் புறக்கணிப்பவர்கள் நிச்சயம் அழிவார்கள். காற்றில்லாத இடத்தில் எரியும் விளக்கு போல மனதை ஒரு நிலைப்படுத்திப் போரைத் துவக்கு! வில்லையும் அம்பறாத் தூணியையும் கையில் எடு! ‘எதிரே காட்சியளிக்கும் பீஷ்மர், கிருபர், துரோணர், துரியோதனாதியர் அனைவரும் அழிவற்ற ஆன்மாக்களே!’ என்னும் எண்ணத்துடன் அவர்கள் மீது அம்பைத் தொடு!’
‘ஆஹா! தயக்கம், மயக்கமில்லாமல் கல்லைக் ‘களிமண்!’ எனச் சொல்லும் கட்டில்லாக் கவிஞன் ஒருவனின் மனத் திண்மையில், எப்படி எனதிந்த ஆருயிர் நண்பனால் இத்தனைப் பொய்களைப் புனைந்துரைக்க முடிகிறது?’ என்று அன்று எனக்குள் ஓங்கிய வியப்பையுங் கடந்து முப்பத்தாறு ஆண்டுகளுக்கு முன் போர்க்களத்தில் என்னிடம் ஆன்மா, மறுபிறவி, சொர்க்கம், நரகம் என்று வார்த்தை விளையாட்டு நிகழ்த்திக் காட்டிய நண்பன் கிருஷ்ணன், சுபத்திரைக்கும் எனக்கும் பிறந்த அன்பு மகன் அபிமன்யு துரோணர் வகுத்த விபரீதமான வியூக வளையத்துக்குள் சிக்கி வீர மரணம் அடைந்த போது தங்கை மகனின் இறப்பைத் தாங்க முடியாதவனாகப் பாசறையில் கட்டற்று மதுவருந்திக் கதறியழுதது இப்போதும் எனது நெஞ்சில் நீங்காக் கேள்வியாகி நிற்கிறது.
‘ ‘நான் கடவுளின் அவதாரம்!’ எனக் கூறி களத்தில் அன்று என்னைப் பயமுறுத்திய நண்பன் கிருஷ்ணனின் அழிவற்ற கிழ ஆன்மா ஒரு வேளை அவனது அன்புக்குரிய மருமகன் அபிமன்யுவின் இளம் ஆன்மாவைத் தேடிச் சென்றிருக்குமோ? எங்கே சென்றிருக்கும் கிருஷ்ணனின் ஆன்மா? சொர்க்கத்திற்கா? அல்லது நரகத்திற்கா?’
உயிர் நண்பன் கிருஷ்ணனின் பிரிவில் உயிர் மீது ஆசையற்றுப் போன நான் நண்பன் கிருஷ்ணனின் மரணத்திற்காக ஆற்றொணாது அழுது அரற்றினேன். கிருஷ்ணனுடன் சேர்ந்து சிதையில் எரியத் துணிந்த அவனது துணைவியரை என்னால் தடுக்க இயலவில்லை. ஏழாம் நாளில் நண்பனுக்கும் அவன் மனைவியர்க்கும் இறுதிக் காரியங்களை இயன்ற அளவில் செய்து முடித்தவன், கிருஷ்ணனின் கொள்ளுப் பேரன் வஜ்ஜிரனை மற்றும் கடற்கரைச் சண்டையில் தப்பி மிச்சமாக நின்ற யாதவ ஆண்கள், பெண்களை, குழந்தைகளை உடன் அழைத்துக் கொண்டு கிருஷ்ணனின் தேரோட்டி தாருகனுடன் அஸ்தினாபுரம் புறப்பட்டேன். துவாரகையின் வீடுகளில் கனன்றெரிந்த தீ அணைக்கப்படவில்லை. ‘கட்டுத் தளைகளிலிருந்து விடுவித்து அநாதைகளாக எங்களைக் கைவிட்டுப் போகிறீர்களே!’ என்பது போல ஓங்கியொலித்த கால்நடைகளின் கதறல் கூக்குரலைக் காதுகள் கொண்டு கேட்க முடியவில்லை. வழியெங்கும் முற்றி விளைந்திருந்த நெல், கோதுமை, சோளப் பயிர்களைக் கண்ணீர்த் தளும்பும் காட்சிப் பதிவிலிருந்து தவிர்க்க இயலவில்லை. மக்கள் அனைவரும் ஓயாது அழுது அரற்றிக் கொண்டே வேறு வழியற்றவர்களாக என்னைப் பின் தொடர்ந்தனர்.
தேர்ந்த வில்லாளியாக திசைகளெல்லாம் புகழ் பெற்றிருந்த வீராதி வீரன்- விஜயன் எனக்குத் துயரம் நிறைந்த அந்தப் பயணத்தில் பேரவமானம் நேர்ந்தது. ‘தங்களையும் தங்கள் பொருட்களையும் அர்ச்சுனன் பாதுகாப்புடன் அஸ்தினாபுரம் கொண்டு சேர்ப்பான்!’ என்னும் நம்பிக்கையுடன் பயணப்பட்டவர்கள் பாதி வழியிலேயே பெரும் அவதிக்குள்ளானார்கள். ‘புதிய இடத்தில் வாழ்க்கைக்கு உதவும்!’ என்று உடன் கொண்டு வந்த முத்துகள், ரத்தினங்கள், வைர வைடூரியங்கள், தங்க ஆபரணங்கள், விலை மதிப்பில்லா அரிய பல பொருட்கள் அடங்கியிருந்த பொதிகள் அனைத்தையும் அவர்கள், திடீரென்று எங்கிருந்தோ குதிரைகளில் ஆர்ப்பரித்து வந்த முரட்டுக் கொள்ளைக் கூட்டத்தாரிடம் பறிகொடுத்துப் பதறினார்கள். பலர் இழந்தால் திரும்பப் பெற முடியாத தங்கள் இன்னுயிரை அவர்களிடம் போராடி இழந்தார்கள். இளம், நடு வயதுப் பெண்கள் எனது கண்களின் எதிரிலேயே நீர் வற்றியக் குளத்தில் எருமைகளின் குளம்புகளில் சிக்கிச் சீரழியும் தாமரை, அல்லி மலர்களாய் அந்தக் கொடிய கொள்ளைக் கூட்டத்தின் வசப்பட்டுக் கசங்கினார்கள். கொள்ளைக் கூட்டத்தாரிடம், ‘வில்லுக்கோர் விஜயன்!’ எனது அஸ்திரப் பிரயோகங்கள் மற்ற ஆண்கள், பெண்களின் எதிர் நடவடிக்கைகள் எதுவும் கொஞ்சமும் எடுபடவில்லை. கொள்ளையிட்ட பொருட்களுடன் தங்களின் விருப்பத்திற்குரிய பெண்களைச் சேர்த்திறுக்கிக் குதிரைகளில் கொண்டு செல்லும் கொள்ளையர்களைக் கையறு நிலையில் வேடிக்கை பார்க்கும் மனிதனாய் நின்றுவிட்ட நான், ‘அய்யோ! காப்பாற்றுங்கள்! காப்பாற்றுங்கள்!’ என்றுயர்ந்த பெண்களின் கூக்குரலுக்கு எதிர் வினை ஆற்ற இயலாத வெறுமையில் காதுகளைப் பொத்திக் கொண்டேன். கையில் காண்டீபம் இருக்கிறது. அம்பறாத் தூணியில் நல்ல அஸ்திரங்களும் இருக்கின்றன. எதிரிகளின் மீது எத்தனையோ அஸ்திரங்களை எத்தனையோ வகைகளில் எய்து பார்த்து விட்டேன். ஆனால் பலன்? ‘அய்யோ இப்படியொரு இழி நிலை ஏற்படும் எனத் தெரிந்திருந்தால் அண்ணன் பீமனை அல்லது நகுலன், சகாதேவனையாவது அழைத்து வந்திருப்பேனே!’ என்று வேதனைப் பட்டேன். எண்பத்து நான்கு வயதில் இறந்து போன கிருஷ்ணனின் சமவயதுக்காரனான கிழவன் நான் எனது வீரம் குறித்து இனியும் பெருமை பேசுவதில் அர்த்தமில்லை என்பதைப் புரிந்து கொண்டேன்.
நான் அஸ்தினாபுரம் வருவதற்காகக் காத்திருந்தவர் போன்றிருந்த அண்ணன் யுதிஷ்டிரரும் சகோதரர்கள் மூவரும் வழிப்பயணத்தில் நடைபெற்ற கொடுமைகளைக் கேள்வியுற்று நெஞ்சம் கலங்கினர்.
‘நடந்த கொடுமைகளுக்குக் காரணம் எனக்கு வயதாகி விட்டதுதான்!’ எனச் சொன்ன என்னிடம் அண்ணன் பீமன் தெளிவாகச் சொன்னார்.
‘உனக்கு மட்டும் வயதாகவில்லை, அர்ச்சுனா! எனக்கும் தான் வயதாகிவிட்டது. இத்தனைக் காலம் கையில் பூங்கொத்து போல விளையாடிய எனது ‘சத்ருகாதி’ கதை இப்போது பாரமாகத் தெரிகிறது. எனக்கும் இனிமேல் உன் நிலைமைதான் நேரும்! எனது கதாயுதமும் இனிமேல் நிச்சயம் எதிரிகளிடம் சோரும்! இதில் வருத்தப்படுவதற்கு ஒன்றுமில்லை!’
பீமனின் விளக்கம் சரியானதாகத்தான் தோன்றிற்று.
‘வில் வித்தையில் அர்ச்சுனனை வெற்றி கொள்வதற்கு ஆளில்லை!’ என்னும் புகழுக்காக ஆச்சாரியார் துரோணரிடம் மற்ற அரச குமாரர்களிலும் விசேஷமாக அல்லும் பகலும் அனவரதமும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் மேற்கொண்ட பயிற்சிகள் குறித்து எண்ணும் போது வியப்பு மேலிடுகிறது. ஆச்சாரியர் துரோணர் என்னைத் தனது அன்பு மகன் அசுவத்தாமனுக்கும் மேலான மகனெனக் கருதி எனக்கு வில் வித்தையின் அத்தனை நுணுக்கங்களையும் தயங்காது கற்றுக் கொடுத்தார். கற்றுக் கொடுத்ததோடு நில்லாமல் எனக்குக் கட்டளை ஒன்று இட்டார்.
‘அர்ச்சுனா, எனக்கென வாய்த்த இணையற்ற வீரன் நீ! எனக்கு நீ செயற்கரிய ஒரு உதவி செய்ய வேண்டும். வடமேற்கில் பாஞ்சால தேசத்தை ஆண்டு கொண்டிருக்கும் துருபதனும் நானும் ஒரு காலத்தில் அங்கிலேசர் என்னும் குருவிடம் ஒன்றாகக் கல்வி கற்றோம். பயிற்சிக் காலத்தில் குருவிடம் கற்க முடியாமல் போன விசேஷமான சில அஸ்திரப் பயிற்சிகளை என் வழியில் கற்றறிந்த துருபதன், ‘நண்பா, விற் பயிற்சியில் அரிய சில வித்தைகளைக் கற்றுக் கொடுத்திருக்கிறாய். இந்த உதவி சாதாரணமானதல்ல. செய்திருக்கும் உதவிக்கு இப்போது என்னால் தகுந்த கைம்மாறு செய்ய இயலாது. ஆனால், நான் பாஞ்சாலத்தின் அரசனாகப் பதவியேற்கும் நாளில் நீ செய்திருக்கும் இந்த உதவிக்கு நிச்சயம் நல்ல பிரதியுபகாரம் செய்வேன்; ராஜ்ஜியத்தில் ஒரு பகுதியைக் கூட கொடுப்பேன்!’ என்று அன்று உறுதி கூறினான். மைத்துனர் கிருபர் மூலம் பயிற்சி பெற்றுக் கொண்டிருந்த அரச குமாரர்கள் நீங்கள் பீஷ்மரின் உத்தரவின் பேரில் எனது சிஷ்யர்களாவதற்கு முன் நான் வறுமையில் தத்தளித்துக் கொண்டிருந்தேன். வறுமை விரட்டிய நிலையில் என்றோ ஒரு நாள் துருபதன் எனக்களித்த உறுதி மொழியை எண்ணி பாஞ்சாலத்தின் அரசனாகிவிட்ட அவனை அணுகினேன். உதவி கோரினேன்.
‘துருபதன், ‘நானெந்த உறுதி மொழியையும் அளிக்கவில்லை! தர்ப்பைப் புல் கையிலேந்த வேண்டிய பிராமணன் எனக்கு தனுர் வேதம் கற்றுக் கொடுத்தேன் என்கிறான் பார்த்தீர்களா!’ என்று அவையில் பலர் முன்னிலையில் என்னை அவமானப்படுத்தினான். இப்பொழுது நான் அவனை நேரில் எதிர் கொள்வதை அவமானமாகக் கருதுகிறேன். சிஷ்யனைக் கொண்டு அவனை ஜெயிக்க வேண்டுமென விரும்புகிறேன். ஆகவே, நீ பாஞ்சால துருபதனை எனது சிஷ்யன் என்னும் முறையில் வெற்றி கண்டு அவனை தேரில் கட்டிக் கொண்டு வர வேண்டும்! தேவையெனில் உனது விருப்பத்திற்குரியவர்களை உடன் அழைத்துச் செல்!’
மாதா, பிதா, குரு வார்த்தைகளை-கட்டளைகளை மறுதலிக்க முடியுமா? அதிலும் ஆச்சாரியர் துரோணர் குரு என்னும் நிலையையும் கடந்து தந்தையைப் போல் கொண்டாடப்பட வேண்டியவர். அரச குமாரர்கள் தாங்கள் கற்ற அஸ்திர-சஸ்திர வித்தைகளைப் பெரியவர்கள் எதிரில் நிகழ்த்திக் காட்டும் தருணத்தில் அர்ச்சுனன் எனக்கெதிராக சிலம்பக் கூடத்தில் களமாடிய கர்ணனை வெறுத்து ஒதுக்கியவர். ‘தனது சிஷ்யனின் திறனினும் மிஞ்சியவனாக வேறொருவன் இருந்து விடக்கூடாது!’ என்னும் எண்ணம் கொண்டவர். அப்படியொரு எண்ணம் கொண்டவராக இருந்த காரணத்தினால்தான் என்னைவிடவும் வில் திறனில் சிறந்தவனாக வளர்ந்து கொண்டிருந்த வேடுவன் ஏகலைவனின் கட்டை விரலை நானே அதிர்ச்சியுறும் அளவில் குரு தட்சணையாகப் பெற்றவர்.
அரண்மனைக்கு அருகே ஓடும் யமுனையின் மறுகரைக் காட்டிலிருந்து யமுனையை நீந்திக் கடந்து அரச குமாரர்களுக்கு துரோணர் அளிக்கும் பயிற்சியை மறைந்திருந்து கவனித்து வில் திறனை வளர்த்துக் கொண்ட பன்னிரண்டு வயதுகள் கொண்ட சிறுவன் ஏகலைவன், நிஷாத வேடுவர்களின் தலைவன் ஹிரண்யதனுசுவின் வளர்ப்புச் செல்லமகன். பல நாட்கள் மறைந்திருந்தே எங்களைக் கவனித்து வந்த ஏகலைவன் ஒருநாள் மறைவிலிருந்து வெளிப்பட்டான். கரடித்தோல் ஆடையும் சடை முடியும் கொண்ட கறுத்த சிறுவனை அரச குமாரர்கள் நாங்கள் அருவருப்புடன் பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில் எங்களின் இழிந்த பார்வையைப் பற்றி எள்ளளவும் கவலைப்படாதவனாக துரோணரை நோக்கி வந்த அவன் அவரது பாதங்களில் நெடுஞ்சாண் கிடையாகப் பணிந்து எழுந்தான். ‘வேடர் தலைவரின் மகன்! பெயர் ஏகலைவன்!’ என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டவனிடம், ‘என்ன வேண்டும்?’ எனச் சுருக்க வினா தொடுத்தார் துரோணர்.
‘நான் தங்களிடம் வில் வித்தை பயின்றிட விரும்புகிறேன். ஆச்சாரியார் அருள் செய்திட வேண்டும்!’ என்ற ஏகலைவனின் வேண்டுதலில் அதிர்ந்து போன துரோணர், அருகில் நின்ற அரசகுமாரர்கள் எங்கள் முகங்களைப் புதிதாகப் பார்ப்பது போல் பார்த்தார். ‘அரசகுமாரர்களுக்கான பயிற்சிச் சாலையில் நிஷாத வேடுவனுக்குப் பயிற்சியா?’ என்று அவர் எண்ணியிருக்க வேண்டும். அவர், ஏகலைவனிடம் நயமாகச் சொன்னார்.
‘குழந்தாய், எனக்கு ஏற்கனவே நிறைய சிஷ்யர்கள் இருக்கிறார்கள். கெளரவ, பாண்டவ அரசகுமாரர்களுடன் சேர்ந்தவர்களாக வேறு தேசங்களின் பதினைந்து- இருபது அரசகுமாரர்கள் இருக்கிறார்கள். இதற்கு மேல் இங்கே என்னால் யாருக்கும் பயிற்சி அளிக்க முடியாது. உன்னை என்னால் சிஷ்யனாக ஏற்க முடியாது!’
‘அப்படியானால் எவ்வாறு சுவாமி நான் வில் வித்தை பயில்வது?’
ஏகலைவனின் கேள்விக்குச் சிறிது நேர யோசனைக்குப் பிறகு துரோணர் பதில் சொன்னார்.
‘குருவாக உன்னை நான் ஆசீர்வதிக்கிறேன். உனக்கு நீயே குருவாக இருந்து வித்தையைக் கற்றுக் கொள்!’
கண்களில் நீர் வடிய துரோணரையும் அரசகுமாரர்கள் எங்களையும் கூர்மையுடன் பார்த்தபடி ஏமாற்றத்துடன் ஆற்றில் இறங்கிய ஏகலைவனை ஆறு மாதங்கள் கழிந்ததொரு நாளில் அரசகுமாரர்கள் நாங்களும் துரோணரும் நேரில் சந்திக்க நேர்ந்தது. எதிர்க்கரைக் காட்டுக்குள் வேட்டைப் பயிற்சிக்காகச் சென்ற எங்களுடன் வந்த எங்களின் செல்ல நாய், உடலில் ஒரு சிறிதும் காயமெதுவுமில்லாமல் அய்ந்து அம்புகளால் தைக்கப்பட்ட வாயுடன் எதிர் வந்தது கண்டு ஆச்சாரியர் உட்பட அனைவருமே அதிர்ந்து போனோம். அய்ந்து அம்புகளால் நாயின் வாயைத் தைக்கும் வித்தையை அதுவரையிலும் கற்றறியாத நான், ’வில் வித்தையில் என்னை வெல்வதற்கு ஆளில்லை!’ என்று கர்வம் கொண்டிருந்த நான்- உண்மையில் மிரண்டு போனேன்.
நாங்கள் அம்புகளால் நாயின் வாயைத் தைத்த மனிதனைத் தேடிச் சென்றோம். காட்டின் நடுவே பெரியதொரு ஆலமரத்தின் நிழலில் களிமண்ணால் துரோணர் போன்றதொரு சிலை அமைத்து தன்னந் தனியே விற்பயிற்சி செய்து கொண்டிருந்த ஏகலைவனை கண்டு அதிசயித்தோம். ஏகலைவனிடம், ‘யார் இந்த நாயின் வாயைத் தைத்தது?’ எனக் கேட்டார் துரோணர்.
துரோணரின் பாதங்களில் பணிந்தெழுந்த ஏகலைவன், ‘மன்னிக்க வேண்டும் குருவே! தோலாடை அணிந்து விற்பயிற்சி மேற்கொண்டிருக்கும் என்னை ஏதோ காட்டு மிருகமென எண்ணிக் குரைத்த காரணத்தில் நான் தான் இதன் வாயைத் தைத்தேன்!’ என்று ஒளிவு மறைவு ஏதுமின்றி நடந்ததைச் சொன்னான்.
துரோணர் எதிரே இருந்த சிலையைக் காட்டி, ‘என்ன இது?’ என்றார்.
‘மனதால் தங்களை குருவாக வரித்துக் கொண்ட நான், ‘குரு போல உருவம் இருக்க வேண்டும்!’ என்றெண்ணி இதை உருவாக்கினேன். தங்கள் தோற்றம் கொண்ட இந்த சிலையின் எதிரிலிருந்துதான் பயிற்சி மேற்கொள்கிறேன்.’ என்ற ஏகலைவனின் பதில் என்னையும் துரோணரையும் மற்றும் உடனிருந்தவர்கள் அனைவரையும் ஒருங்கே துணுக்குற வைத்தது.
துரோணரை ஏகலைவனிடமிருந்து விலக்கி தனியே அழைத்துச் சென்ற நான் அவரைக் கேள்விகளால் துளைத்தேன்.
‘ஆச்சாரியரே, உலகத்தில் என்னைவிட சிறந்த வில்லாளி இல்லையென்றீர்களே! அது உண்மையா? நீங்கள் என்னிடம் சொன்னது உண்மையானால் தனுர் வித்தையில் என்னைவிடவும் மேலானவனாக- இது வரையிலும் நானறியாத வித்தையை அறிந்தவனாக- இந்த ஏகலைவன் இருக்கின்றானே! ஏகலைவனின் இந்தத் திறனுக்குப் பிறகும் நான் உங்கள் கணக்கின் படி உலகத்தில் சிறந்த வில்லாளிதானா?’
எனது கேள்விகளின் கூர்மையில் திகைத்துக் கோபம் கொண்ட துரோணர், என்னுடைய கேள்விகளுக்கு பதில் சொல்ல இயலாதவராக ஏகலைவனை நெருங்கினார். அவனிடம் இயல்பு குலையாதவராகக் கேட்டார்.
‘ஏகலைவா, என்னைத்தானே குருவாக எண்ணிப் பயிற்சி மேற்கொள்கிறாய்?’
‘ஆமாம், குருவே!’
‘அப்படியானால் குருவுக்குரிய தட்சணையை நீ கொடுக்க வேண்டுமே!’
‘எளிய வேடுவன் நான். ஆனாலும் குரு தட்சணையாக என்ன வேண்டுமெனச் சொல்லுங்கள்! உயிரைக் கொடுத்தாவது உங்களுக்கு அதை அளிக்கிறேன்.’
‘அப்படியானால் உனது வலது கைக் கட்டை விரலை எனக்கு தட்சணையாகக் கொடு!’
குருவுக்கும் ஏகலைவனுக்குமிடையே என்ன நடக்கிறது என்பதை அரச குமாரர்கள் நாங்கள் உய்த்து உணர்வதற்கும் நேரமில்லாத வகையில் கத்தியொன்றின் மூலம் தனது வலது கைக் கட்டைவிரலை ‘நறுக்’கென வெட்டியெடுத்த ஏகலைவனின் செயலில் கூடிநின்ற நாங்கள் பேச்சு மூச்சு அற்றவர்களாகிப் போனோம். பெரிய ஆலம் இலை ஒன்றின் மீது வைத்து ஏகலைவன் தன்னிடம் நீட்டிய குருதிக் குழைவு கொண்ட கட்டை விரலைச் சஞ்சலமின்றி வாங்கிக் கொண்ட துரோணரின் குரூரம், ‘அடப் பாவி பிராமணா!’ என்று அதிர்ச்சியுற வைத்தது என்னை.
திரும்பி வரும் வழியில், ‘என்ன குருவே, இப்படிச் செய்து விட்டீர்கள்?’ என்ற என்னிடம் துரோணர் புன்னகை பூத்த முகத்துடன் சொன்னார்.
‘அர்ச்சுனா, இனிமேல் இந்தக் காட்டுவாசியால் வில்லெடுக்க முடியாது. மனிதர்கள் தத்தமக்குரிய வருண தர்மத்தை மீறக் கூடாது; மீற அனுமதிக்க முடியாது. வருண தர்மங்கள் மீறப்படுகின்ற போது சமுதாயத்தில் குழப்பங்கள் நேர்ந்து விடுகிறது. ஆக, எனது இந்தக் காரியத்தால் க்ஷத்திரியரின் வருணதர்மம் காப்பாற்றப்பட்டது! இனி நீ அஞ்ச வேண்டியதில்லை. வில் திறனில் இனியொருவன் உன்னை வெற்றி கொள்ள இயலாது!’
திகிலடைந்து போயிருந்த நான் தீவிரமாக யோசித்தேன்.
‘எப்படி இப்படி ஒரு கொடுமையைச் செய்ய முடிந்தது இந்தப் பிராமணரால்? பிராமணனாக பிராமணனுக்குரிய தர்ப்பைப் புல் ஏந்துவதை விடுத்து பிராமண தர்மம் தவறி க்ஷத்திரியத் தொழில் செய்து பிழைக்கும் இவரால் கொஞ்சமும் கூச்சமில்லாமல் எப்படி வருணதர்மம் பற்றிப் பேச முடிகிறது?’
வேடுவச் சிறுவனின் கட்டை விரலைத் தட்சணையாகப் பெற்ற துரோணரின் அநியாயம் உட்பட, எத்தனையோ கஷ்ட நஷ்டங்களுடன் எப்படியெல்லாமோ கற்றுக் கொண்ட எனது வில் திறன் இப்பொழுது என்னை விட்டுப் போய் விட்டது. காரணம் அண்ணன் பீமன் சொன்ன உண்மையில் வயதாகிவிட்டது. வில் திறனில் என்னிலும் வல்லமையுடன் வளர்ந்து கொண்டிருந்த ஏகலைவன் துரோணரின் தந்திரத்தில் தனது கட்டை விரலை இழந்து பறவைகளை, விலங்குகளை வலை வைத்துப் பிடிக்கும் வேடுவனாக முடக்கப்பட்டதை நினைக்கையில் இப்போதும் எனது நெஞ்சம் குமைகிறது-குமுறுகிறது. ஏகலைவனை போலவே கர்ணனும் என்னிலும் வில் திறனில் சிறிது மேம்பட்டவனாக இருந்தும் கிருஷ்ணனின் சூழ்ச்சிப் பின்னணியில் அவன் வீழ்த்தப்பட்ட கொடுமையும் கூட எனது நெஞ்சை வாளாய் அறுக்கிறது.
குருக்ஷேத்திரத்தின் பதினெட்டாம் நாள் போரில் இறந்துபடும் நொடிக்கு முன்பு வரையிலும் வில் திறனில் கர்ணன் என்னை அச்சுறுத்துபவனாகவே இருந்த போதிலும் எனக்கு நிகரற்றவனாகவே என்னால் அனுமானிக்கப்பட்டான். ஆனால், அவன் கிருஷ்ணனின் ஆலோசனைப்படி எனது காண்டீபத்தால் அநியாயமாகக் கொல்லப்பட்ட பிறகு தான் – அபிமன்யு அநியாயமாக இறக்க முன் நின்ற அசுவத்தாமன், துச்சாதனன், ஜெயத்ரதன் ஆகிய மூன்று கொடும் மகாரதர்களுடன் கர்ணன் துணையான காரணத்தையும் கடந்து- என்றோ நடந்து முடிந்த திரெளபதியின் சுயம்வரத்தில் திரெளபதியை மனைவியாகக் கைப் பிடிக்கும் தகுதி கொண்டிருந்ததையும் என்னால் உணர முடிந்தது. ‘எழிலரசி திரெளபதி எனக்கு மனைவியாகியிருக்க வேண்டியவள்! ‘சூதன் சுயம்வரத்தில் வில்லெடுக்கத் தகுதியற்றவன்!’ என்னும் முறையற்ற குறையுடன் என்னிடமிருந்து அவள் தட்டிப் பறிக்கப்பட்டாள்!’ என உள்ளூறிக் கிடந்த அவனது எண்ணத்தின் வன்மையினால் தான் திரெளபதி அன்று ஆடவர் நிறைந்த சபையில் அவமானப்பட நேர்ந்ததா?’ என்று நான் கர்ணனின் இறப்புக்குப் பின் மனம் குழம்பித் தவித்தேன்.
‘ ‘துருபதனை கொண்டு வாருங்கள்!’ என்ற துரோணரின் கட்டளை கேட்டு படையுடன் முந்தி வந்த துரியோதனனால் வெல்ல முடியாத என்னை துரியோதனனுக்குப் பிறகு சகோதரர்களுடன் சேர்ந்து வந்து நானே அதிசயிக்கும் வகையில் வெற்றி கொண்டு துரோணரின் முன் நிறுத்திய சிறந்த வில்லாளி அர்ச்சுனன் மருமகனானதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி!’ என்று மகன் திருஷ்டத்துய்மனிடம் மனம் திறந்த துருபதன், திரெளபதி எனது தாய் குந்தி மூலம் சகோதரர்கள் அய்வருக்கும் மனைவியென அறிவிக்கப்பட்டதில் கொந்தளித்த பின்னணியில் ஒருவேளை கர்ணன் அவருக்கு மருமகனாகியிருந்தால் குதூகலித்திருப்பாரோ?’ என்று இன்று நான் வேடிக்கையாக யோசித்துப் பார்க்கிறேன்.
அருகில் யாருமில்லாத சூழலில் சீருடனும் சீரிழந்தும் வளரும் எனது சிந்தனையைக் குலைப்பவராக அண்ணன் யுதிஷ்டிரர் குரல் கொடுக்கிறார்.
‘அர்ச்சுனா, எத்தனையோ சிரமங்களுடன் துவாரகையிலிருந்து யாதவர்களைக் கொண்டு வந்து சேர்த்திருக்கிறாய். யாதவர்களில் முக்கியமாக கிருஷ்ணனின் ஒற்றை வாரிசாக அவனது கொள்ளுப் பேரன் வஜ்ஜிரன் மட்டும் மிச்சமாகி வந்திருக்கிறான். உயிருக்குயிராய் இருந்த கிருஷ்ணனும் போய்விட்ட சூழ்நிலையில் குருக்ஷேத்திரப் போருக்குப் பிறகு முப்பத்தாறு ஆண்டுகள் நீடித்த ஆட்சி-அதிகாரம் எனக்குச் சலித்து விட்டது. ‘நம்மவர்களில் மிச்சமாயிருக்கும் அபிமன்யுவின் மகன் பரீக்ஷித்துவுக்கும் வஜ்ஜிரனுக்கும் குரு தேசத்தைப் பகிர்ந்தளிக்கலாம். பரீக்ஷித்துவை அஸ்தினாபுரத்திலும் வஜ்ஜிரனை இந்திரப்பிரஸ்தத்திலும் ஆட்சியிலமர்த்தலாம்’ என எண்ணுகிறேன். உனது எண்ணம் என்ன என்பது தெரிய வேண்டும்!’
எந்நாளும் அண்ணனின் விருப்பத்தை மீறாதவனாக வாழ்ந்து விட்ட நான் அண்ணனின் இந்த மேலான விருப்பத்தை மறுத்துச் சொல்ல என்ன இருக்கிறது? ஆனாலும் அவரிடம் நான் ஒற்றைக் கேள்வியை முன் வைத்தேன்.
‘இளைஞர்களிடம் ஆட்சியை ஒப்படைத்த பிறகு அண்ணனுக்கு முன்னோர்களின் வழியில் வானப்பிரஸ்தம் ஏகும் எண்ணமா?’ என்றேன்.
‘சரியாகச் சொன்னாய், அர்ச்சுனா! ஆனால், சொன்னதில் சிறிய திருத்தம் செய்து கொள்! முன்னோர்களின் வழியில் வானப்பிரஸ்தம் செல்வது எனது எண்ணமில்லை! நடை நடையாய் நடந்து வடக்குப் பெருமலையில் மெல்ல மெல்ல மேலேறி சொர்க்கம் சென்றடைவதே எனது எண்ணமும் விருப்பமும்!’
அண்ணனின் எண்ணத்தில்-விருப்பத்தில் அதிசயித்துப் போன நான், அவரிடம் ஒன்று கேட்க நினைத்தேன். ‘அண்ணா, சொர்க்கம் நோக்கிய பயணம் என்கிறீர்களே! நீங்கள் சொல்லுகின்ற சொர்க்கம் குருக்ஷேத்திரப் போர்க்களத்தில் எனது இனிய நண்பன் கிருஷ்ணன் என்னிடம் எடுத்துரைத்த அந்தச் சொர்க்கந்தானா?’ என்று கேட்க நினைத்தேன். ஆனால், கேட்கவில்லை.
***
- சிறுகதையை எப்படி எழுதாமல் இருக்க வேண்டும்?
- சுய இயங்கு செப்பெர்டு ராக்கெட் விண்சிமிழில் முதன்முதல் விண்வெளி விளிம்பில் மிதந்த நான்கு விண்வெளித் தீரர்கள்.
- இறுதிப் படியிலிருந்து- அர்ச்சுனன்
- இறுதிப் படியிலிருந்து – கிருஷ்ணன்
- நடிகர் சிவகுமாரின் கொங்கு தேன் – ஒரு பார்வை
- பிச்ச
- ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்
- குருட்ஷேத்திரம் 1 (பீஷ்மர் பெண்ணாசையை வெற்றி கண்ட பிதாமகர்)
- அறிவும் ஆற்றலும், துணிவும் மிகுந்த மைதிலி சிவராமன் ஓர் அரிய பெண்மணி
- நனவிடை தோய்தல்: 1983 கறுப்பு ஜூலையும் ஊடக வாழ்வு அனுபவமும்
- கவிதையும் ரசனையும் – 19