ஒரு கதை ஒரு கருத்து – இந்திரா பார்த்தசாரதி அஸ்வத்தாமா

author
4 minutes, 45 seconds Read
This entry is part 16 of 15 in the series 1 ஆகஸ்ட் 2021

 

அழகியசிங்கர்    

மாதம் இரு முறை நண்பர்களின் ஒத்துழைப்போடு கதைஞர்களின் கூட்டம் நடத்திக்கொண்டு வருகிறேன்.  இதுவரை 24 கதைஞர்களின் கதைகளை எடுத்துப் பேசிவிட்டோம்.

          போன கூட்டத்தில் அம்பையையும், இந்திரா  பார்த்தசாரதியையும் எடுத்துப் பேசினோம்.

          அம்பை கதைகள் தீவிரமாகப் பெண்கள் பிரச்சினையை ஆராய்கிறது.  ‘வீட்டின் மூலையில் ஒரு சமையலறை’ மாதிரி ஒரு கதையை அம்பை மட்டும்தான் அவ்வளவு திறமையாக எழுதியிருக்க முடியும்.

          இந்திரா பார்த்தசாரதி கதையோ நகைச்சுவையுடன் கூடிய எள்ளல் எல்லாக் கதைகளிலும் பரவிக் கிடக்கிறது.

          இதில் அஸ்வத்தாமா ஒரு விசேஷ கதை.  இதிலும் நகைச்சுவை மட்டுமல்லாது இன்றைய சமுதாயத்தைக் கிண்டலுடன் பார்க்கும் பார்வை இருக்கிறது.  மேலும் இது ஒரு மேஜிக்கல் ரியாலிஸ கதை. அதாவது மாய யதார்த்த கதை.

          இக் கதையின் தலைப்பைப் படித்தாலே நாம் ஊகிக்கலாம். இந்தக் கதைசொல்லியின் கூற்றாகக் கூறப்படுகிறது.  கதை சொல்லியும் கதைஞரும் ஒருவரே.  தன்னை முன்னிலைப் படுத்திக்கொண்டு கதையைக் கூறுகிறார்.

          இப்படி ஆரம்பிக்கிறது கதை : ‘எனக்குக் காலையில் நான்கு மணிக்கே விழிப்பு வந்துவிடும்.  என் வீட்டுக்கு வெளியே உள்ள காம்பவுண்டைச் சுற்றியிருக்கும் மின் விளக்குகள், புலர்ந்தும் புலராத வெளிச்ச மயக்கத்தைத் தோற்றுவிக்கும்.  எழுந்து மணியைப் பார்ப்பேன். மூன்று அல்லது நான்கு மணியாக இருக்கும் மூன்று மணியாக இருந்தால், மீண்டும் படுத்தால் தூக்கம் வருவதற்கான சாத்தியக் கூறு உண்டு.  நான்கு மணியாக இருந்தால் வராது.’

          வயதின் மூப்பின் அடிப்படையில் கதை சொல்லி தன்னைப் பற்றிச் சொல்கிறார்.  பின் அவர் எழுந்து ஒரு  தேனீர்  தானாகவே தயாரித்துக் குடிக்கிறார்.  காலை நேரத்தில் 45 நிமிடங்கள் பக்கத்திலிருக்கும் நாகேஸ்வரராவ் பூங்காவில் நடைப் பயிற்சியில் ஈடுபடுவார்.  

          கதை சொல்லி தன் இருப்பிடத்தில் தனியாக வாழ்ந்து வருகிறார்.   இந்த இடத்தில் பூங்காவில் நடமாடிக் கொண்டிருக்கும் மற்றவர்களைக் குறித்து ஒரு ரன்னிங் காமெண்டரி மாதிரி குறிப்பிடுகிறார்.

      நாகேஸ்வராவ் பூங்கா மைலாப்பூர் மத்தியத்தர வர்க்கத்தைப் பிரதிபலிக்கும் ஒரு சுவாரஸ்யமான இடம்.  கணவர்களிடம், மருமகள்கள் மீது குற்றம் சுமத்திக்கொண்டே, மூட்டுவலிக் கால்களுடன் கஷ்டப்பட்டு நடக்கும் நடுத்தர வயதைக் கடந்த பெண்கள், அவர்கள் சொல்வதை ஹ÷ம் ஹ÷ம் என்று தலை அசைத்து இயந்திர ரீதியாகக் கேட்டுக்கொண்டே வரும் அவர்களுடைய கணவர்கள், சட்ட நுணுக்கங்களை உரத்த குரலில் விவாதித்துக் கொண்டு செல்லும் வக்கீல்கள், வங்கி நிர்வாகிகள், காதை ஐ பாட் அலங்கரிக்க, ஜாக் செய்யும் இளம் பெண்கள், ஆண்கள். என்று பலதரப்பட்ட ஜன சமூகத்தை அங்குப் பார்க்கமுடியும்…என்று விவரித்துக்கொண்டே போகிறார். அன்று வழக்கத்துக்கு மீறி ஆறு சுற்றுகளுக்கும் மேல் சுற்றி விட்டார் கதைசொல்லி.  சற்று இளைப்பாறினால் தேவலை என்று தோன்றுகிறது.

          பூங்காவில் உட்கார இடம் பார்க்கிறார்.  ஒரு இடத்தில் யாரோ உட்கார்ந்து இருப்பதுபோல் அவர் கண்ணில் படுகிறது.

          அங்கே உட்கார்ந்திருப்பவரைப் பற்றி கதாசிரியர் இப்படி வர்ணிக்கிறார்.

          …அங்கு உட்கார்ந்திருப்பவரை இதற்கு முன் பூங்காவில் பார்த்ததில்லை.  வயது என்னவென்று நிர்ணயிக்கமுடியாத முகம். ஒரு சமயம் இளைஞன்போல் தோன்றியது.  கவனமாகப் பார்த்தால், நடு வயதுக்காரன் போல் தெரிந்தது.  இன்னும் சற்று ஊன்றிப் பார்த்தால் நல்ல வயதானவர்போல் பட்டது.  எனக்கு ஒன்றும் புரியவில்லை….

          கதைசொல்லிக்கே சந்தேகம் வந்து விடுகிறது.  அவருடைய தூக்கம் இன்னும் கலையவில்லையா என்று.  

          சில வினாடிகள் யோசித்த பிறகு அவர் மறு ஓரத்தில் உட்கார்ந்தார் கதைசொல்லி.

 

          திரும்பவும் பக்கத்தில் உட்கார்ந்திருந்தவரைப் பற்றி விவரிக்கிறார்.

          அவர் ஒரு நீண்ட கறுப்பு அங்கி அணிந்திருந்தார்.  அவருடைய உயரத்துக்கு அது எடுப்பாக இருந்தது.  அவர் கண்கள் மூடியிருந்தன.  தியானத்தில் இருப்பவர் போல் தோன்றியது.

          இந்த இடத்தில் கதைசொல்லி அவரைப் பற்றி ஆராய்வதை விட்டு விட்டு எழுந்து போய்விடலாமென்று நினைக்கிறார்.  ஆனால் கதைசொல்லிக்கு அவருடன் பேச வேண்டுமென்று அடக்க முடியாத ஆசை எனோ  ஏற்படுகிறது.

          “இன்னிக்கு வெதர் பரவாயில்லை,”என்று அவரிடம் பேச்சுக் கொடுக்கிறார் கதைசொல்லி.

          அவர் கதைசொல்லியைப் பார்த்தார் .  தீட்சண்யமான கண்கள். புன்னகை செய்தார்.

          “நான் தினம் இந்த பூங்காவுக்கு வரேன்.  உங்களை நான் பார்த்ததில்லை.  என் பேர் விஸ்வேஸ்வரன்”  என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறார் கதைசொல்லி என்கிற விஸ்வேஸ்வரன்.

          இனிமேல் இங்கு விஸ்வேஸ்வரன் என்ற பெயரில் கதைசொல்லியைக் கூப்பிடுவோம்.

          அதற்கு அந்த நபர், ‘பார்த்திருக்க முடியாது.  ஆனா என் பெயரைச் சொன்ன நீங்க என்னப் பத்திக் கேள்விப்பட்டிருக்கக்கூடும்’ என்றார் அவர்.

          உடனே விஸ்வேஸ்வரன் எதையெதையோ கற்பனை செய்தார். . கேள்விப்பட்டிருக்கலாமென்றால் என்ன? சினிமா நடிகரோ, அல்லது அரசியல்வாதியோ? உடையைப் பார்த்தால் ஸ்வாமிஜியாவும் இருக்கக்கூடும் என்று நினைக்கிறார்.

          ‘என் பேர் அஸ்வத்தாமா,’ என்று தன்னை அறிமுகப் படுத்திக் கொள்கிறார்.

          இந்த இடத்தில் அந்தப் பெயரைக் கேட்டவுடன், விஸ்வேஸ்வரன் நினைக்கிறார்.  அஸ்வத்தாமா…அவர் நினைவுக்கு வந்தவர் ஒரு பெண். தியாகராஜ பாகவதருடன் சிந்தாமணியில் நடித்தவர் என்றெல்லாம் யோசிக்கிறார்.

          “நான் சினிமாவில்   நடிச்சத்தில்லை.  நான் பெண்ணில்லை.  ஆண்”  என்கிறார்.

          தற்செயலாக விஸ்வேஸ்வரன், ‘மகாபாரத்து அசுவத்தாமாவைத் தெரியும்,’ என்று கூறுகிறார்.

          ‘நான்தான் அது’ என்கிறார் அஸ்வாத்தாமா.  முதலில் கேட்டவுடன் அவருக்கு எதாவது பைத்தியம் பிடித்துவிட்டதா என்று நினைக்கிறார் விஸ்வேஸ்வரன்.

          ‘தொடர்ந்து கனவு கொண்டிருக்கிறேனா அல்லது தூக்கத்தில் இருக்கிறேனா’ என்று நினைக்கிறார் விஸ்வேஸ்வரன்.

          மகாபரரத்து அஸ்வத்தாமா.  துரோணருடைய மகன்.

          “மகாபாரதத்திலே கிருஷ்ணன் எனக்கு என்ன சாபம் கொடுத்தான் ஞாபகமிருக்கா?” என்று கேட்டார் அவர்.

          “சாவே இல்லாம, நிரந்தரமா, அன்னம் ஆகாரமில்லாமல் உலகம் பூரா காலம் காலமா சுற்றி அலையணுங்கற சாபம். ” 

          “இந்தச் சாபத்தைப் பற்றி எனக்கு 3 சந்தேகங்கள்,” என்கிறார் விஸ்வேஸ்வரன். 

          “என்ன மூணு சந்தேகங்கள்”

          “கிருஷ்ணன் உங்களுக்குச் சாவு கிடையாதுன்னு சொன்னது, சாபமா, வாழ்த்தா?”

          “சாகாம எப்போதும் உயிரோடு இருக்கிறதைக் காட்டிலும் வேற நரகம் எதுவும் கிடையாதுன்னு கிருஷ்ணனுக்கு நிச்சயம் தெரியும்,”

          “அன்ன ஆகாரமில்லாம சிரஞ்சீவியா இருக்க முடியும்னா அது சாபமா?”

          “அன்ன ஆகாரமில்லா மன்னு கிருஷ்ணன் சொன்னானே தவிர. பசி எடுக்காதுன்னு அவன் சொல்லலே..வயத்துக்குள்ளே அக்னி இருக்கிறமாதிரி ஓர். உணர்வு.  இதை அனுபவிச்சுப் பாத்தாதான் புரியும்.  சரி, மூணாவது சந்தேகம்?”

          “உலகம் பூரா சுத்தணுங்கிறது சாபாமா?”

          “நான் நினைக்கிற இடத்துக்கு நினைச்ச மாத்திரத்திலே என்னாலே போக முடியாது. மனம் மாதிரி நிலைகொள்ளாமல் தவிக்கிற பொருள் வேறு எதுவுமே இல்லை.  அது எங்கே போகிறதோ அங்கேதான் என்னாலே போகமுடியும். இன்னிக்கு இது என்னை இங்கே நாகேஸ்வரராவ் பார்க்குக்குக் கூட்டிண்டு வந்திருக்கு.”

          இப்படியே இந்த உரையாடல் போய்க் கொண்டிருக்கிறது.  விஸ்வேஸ்வரனுக்கும், அஸ்வாத்தாமாவிற்கும்.  

          இந்தக் கதையின் மாய யதார்த்த உத்தி இங்கேதான் ஆரம்பிக்கிறது.  விஸ்வேஸ்வரன் என்கிற சாதாரண மானுடன் அஸ்வாத்தமாவை மகாபாரதத்தில் வரும் ஒரு கதாபாத்திரத்துடன் உரையாடுவதுபோல் எழுதியிருக்கிறார்.

          அஸ்வத்தாமாவிற்குப் பசி எடுக்கிறது.  வீட்டிற்கு அழைத்துப் போகிறார் விஸ்வேஸ்வரன். 

          ஒரு வரி வருகிறது. பக்கத்தில் போய்க்கொண்டிருந்தவர்கள் எங்களை உற்றுப் பார்த்தார்கள் என்று.

வீட்டிற்குப் போனவுடன், விஸ்வேஸ்வரன் தேநீர் போட்டுக்கொடுக்கிறார.

          தேநீரைக் குடித்தபடி,  ‘சோமபானம் குடித்ததுபோல இருக்கிறது,’

என்கிறார் அஸ்வத்தாமா. 

          அவர்கள் இருவருக்கும் உரையாடல் நடந்து கொண்டிருக்கிறது. 

          “நீங்க வெவ்வேறு யுகத்திலே இருந்திருக்கிங்க . காலம் மாறிண்டே வந்திண்டிருக்கு. போன யுகத்திலேந்து இப்போ வரைக்கும் பாத்திண்டே வர்ற உங்களுக்கு வாழ்க்கை சுவாரஸ்யமான்னா இருக்கணும்? புதுப்புது மதிப்பீடுகள்.  உலகச் சரித்திரத்திலே புதுப்புது அத்தியாயங்கள். வாழ்க்கை அலுத்துப் போக உங்களுக்குக் காரணமே இல்லையே..”

          “சரித்திரத்திலே புதுப்புது அத்தியாயங்கள் எழுதப்படறதா எனக்குத் தெரியலை.  ஒரே அத்தியாயம்தான் விதம் விதமா வெவ்வேறு பாஷைகளில் எழுதப்பட்டுண்டு வருதுங்கிறது என் அபிப்பிராயம்.”

“எல்லாக் காலத்திலேயும் எதிர்ப்பு இருந்திருக்கு.  இது ஒண்ணும் புதுசில்லே.  துரியோதனன், ஒரு தேர்ப் பாகன் மகனை அங்க தேசத்துக்கு அதிபதி ஆக்கலியா? கர்ணன் க்ஷத்திரியன்தான்னு அவனுக்கு அப்போ தெரியாது.  இது எப்பேர்ப்பட்ட புரட்சி.அந்தக் காலத்திலே. துரியோதனன் மேலே எனக்கு மதிப்பு ஏற்பட்டதற்கு இது ஒரு முக்கிய காரணம்.”

           இப்படி இந்த உரையாடல் போய்க்கொண்டிருக்கிறது. 

          “எல்லாம் அப்படியேதான் இருக்கு.  வடிவம்தான் மாறியிருக்கே தவிர, அடிமை, ஆண்டை – அடிமை மனோபாவம் மாறவில்லை. இந்தக் காலத்துல ப்யூரோக்ராட், பாண்ட், சட்டை போட்டுண்டு, மந்திரி சொல்றதுக்கெல்லாம், அது சரியோ தப்போ மறு வார்த்தை சொல்லாம சொன்னபடியெல்லாம் கேக்கறான்.   அடிமைத்தனம் எங்கே போச்சு? அந்தக் காலத்திலே ராஜா, இப்போ மந்திரி.  அதுதானே வித்தியாசம்?”

          ராத்திரி தங்கி விட்டுப் போகும்படி விஸ்வேஸ்வரன் சொல்கிறார். அதற்கு அஷ்வத்தாமா பதில் சொல்லவில்லை. 

            அவர் தாம் கொண்டு வந்த பையை எடுத்தார்.  அதைத் திறந்து காட்டினார்.

 

          பை நிறையப் பூக்கள்.  ஒன்று கூட வாடாமல், புதுப்பொலிவுடன் ஒளிர்ந்தன.

ஆனால் எதற்காகத் திறந்து   காட்டினாரென்று விஸ்வவேஸ்வரனுக்குப் புரியவில்லை.  

          அஸ்வத்தாமாஏன் ராத்திரி எந்த இடத்திலும் தங்கறதில்லை என்பதற்குக் காரணம் சொல்கிறார்.

          “ராத்திரியானா ஒரு வெறி வந்திடும். பக்கத்திலே யாரா இருந்தாலும் பார்க்கமாட்டேன்.  குழந்தைகள், பெண்கள், வயதானவங்க,  யாராக இருந்தாலும் சரி, கழுத்தை நெரிச்சுக் கொன்னுடுவேன்.”  அதனாலே ராத்திரி வருவதற்கு முன்னாலே ஜனங்களே இல்லாத இடத்துக்குப் போய் விடுவார் அஸ்வத்தாமா.

          “இதற்கும் இந்தப் பூக்களுக்கும் என்ன சம்பந்தம்?” என்று விஸ்வேஸ்வரன் நடுங்கிக்கொண்டு கேட்கிறார்.  

          அஸ்வத்தாமான் கிருஷ்ணன் சாபத்தைப் பற்றிக் குறிப்பிடுகிறார்.   சாப விமோசனம் எப்படி என்றால், ராத்திரி முழுவதும் அஸ்வத்தாமா கட்டுப்படுத்திக்கொள்ள முடிந்தால், அடுத்தநாள் காலையில் ஒரு பையிலே ஒரு பூவைப் பறித்துப் போட வேண்டும். எப்பப் பை நிறையறதோ அப்போது அவருக்கு சாப விமோசனம்.  

          அஸ்வத் தாமானுக்கு விஸ்வேஸரன் வீட்டில் சாப விமோசனம் கிடைக்கிறது.

          மகிழ்ச்சியுடன் பையிலிருந்த பூக்களை எடுத்து வாரி இறைத்தார்.  அறை முழுவதும் மலர்கள்.  வண்ணம் வண்ணமான மலர்கள்.இத்தனை மலர்களா அந்தப் பையிலிருந்தன.

          இந்த அழகான காட்சியை மனதில் வாங்கிக்கொண்டு விஸ்வேஸ்வரன் தூங்கி விடுகிறார்.

          அப்போது ஆலய மணி ஒலிப்பதுபோல் கேட்கிறது,  திடீரென்று விஸ்வேஸ்வரன் விழித்துக் கொள்கிறார். மணி ஏழு. வேலைக்காரி வந்து விட்டாள். கதவைத் திறக்கிறார்.

          “பத்து நிமிடமா மணி அடிக்கிறேன்.  எனக்குப் பயமாப் போயிடுத்து,” என்கிறாள். 

          அறைக்குள் நுழைந்ததும்,  ‘இந்தாங்க’ என்கிறாள்.

          ‘வாசல்ல மாட்டியிருந்துச்சு..பூக்கார    அம்மா 

வச்சிட்டுப் போயிருக்காங்க போலிருக்கு. நீங்க பூசைக்குப் பூ கேட்டீங்களா?’ என்ற கேள்விக்கு விஸ்வேஸ்வரன் பதில் சொல்லவில்லை. அவருக்குத் திகைப்பாக இருந்தது.

 

          இந்தக் கதையில் இந்திரா பார்த்தசாரதி அஸ்வத்தாமா என்ற புராண கதாபாத்திரத்தை உருவாக்கிப் புனைந்திருக்கிறார்.  இது எனக்கு மேஜிக்கல் ரியலிஸமாகப் படுகிறது.   

 

         

 

 

Series Navigationஒடுக்கம்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *