நீங்க ரொம்ப நல்லவர்

This entry is part 12 of 15 in the series 1 ஆகஸ்ட் 2021

 

 

ஜோதிர்லதா கிரிஜா

(2.1.1972 கல்கி-யில் வந்தது.   “இப்படியும் ஒருத்தி” எனும் சேது அலமி பிரசுரம் வெளியிட்ட தொகுப்பில் உள்ளது.)

       ‘பாங்க்’கில் ஒரே கூட்டம். மாசக் கடைசியானதால், போட்ட பணத்தை எடுக்கிறவர்களின் நெரிசல் எக்கச்சக்கமாக இருந்தது.

       “இப்படி ரெண்டு மூணு பேர் ஒரே சமயத்துலே கையை விட்டா  எப்படி? நான் டோக்கன் நம்பர் சொல்றேன். அதுக்கப்புறம் ஒவ்வொருத்தராக் கையை நீட்டினா எனக்கும் சௌகரியம், உங்களுக்கும் சௌகரியம் …” என்ற பெண் குரல் கணீரென்று ஒலித்த பிறகுதான் அந்தக் கௌண்டரில் இருந்தது பெண் என்பது தெரிந்தது. ஆனால், முகத்தைப் பார்க்க முடியவில்லை.

      அந்த அதட்டலுக்குப் பிறகு கௌண்டருக்கு அருகே நின்றிருந்தவர்கள் கூடியவரை தள்ளி நிற்கலானார்கள். கும்பலின் பெரும்பகுதி கலைந்து சென்ற பிறகுதான் என்னால் அவளைப் பார்க்க முடிந்தது. பார்த்தவன் கொஞ்சம் திடுக்கிட்டுத்தான் போனேன்.  ‘அவளாக இருக்குமா? … அவளாகத்தான் இருக்கும். தலைமயிரின் அடர்த்தி கொஞ்சம் குறைந்திருந்ததையும், வயசு ஏறி இருந்ததையும் தவிர, அவள் முகத்தோற்றம் இன்னார் என்று கண்டுகொள்ள முடியாதபடி அப்படியொன்றும் மாறிவிடவில்லை. உண்மையைச் சொல்லப் போனால், அவளுக்கு ஆகியிருந்த வயசுக்கு அவள் அதிக இளமையோடு இருந்தாள் என்றுதான் தோன்றியது,

       பெரிய கண்களின் குறுகுறுப்பும் துடிப்பும் மறைந்து அவற்றில் ஒரு நிதானம் வந்திருந்தது. ஆழ்ந்து கவனித்த போது, அந்த நிதானத்துக்கு அப்பால் ஒரு துயரம் ஒளிந்திருந்ததாகவும் எனக்குத் தோன்றியது. ஆண்டுக்கணக்காக நிலைத்துவிட்ட துயரம் அது என்று கூடப்பட்டது.                                  இவையெல்லாம் என் பிரமையாகக் கூட இருக்கலாம் என்கிற நினைப்பும் உடனெழுந்த  போது, என்னையுமறியாமல் அவள் கழுத்தைப் பார்த்தேன். கனமான ஒரு முறுக்குச் சங்கிலி அவள் கழுத்தை அணி செய்தது.  தாலிச் சரடுக்குப் பதிலாகப் பெண்கள் அணியும் ‘கொடி’ அது என்பது புரிந்த போது, இந்தக் காலத்தில் மணமாகாத பெண்கள் கூட அந்தப் பாணியில் சங்கிலி போட்டுக் கொள்ளுவதைப் பற்றிய நினைப்பும் உடனெழுந்தது. எனவே, அவளுக்கு மணமாகியிருக்குமா இருக்காதா என்பதைப் பற்றி எந்த முடிவுக்கும் வர முடியாமல் நான் அவள் முகத்தை நோக்கினேன். அவள் பார்வையும் என் மேல் விழுந்தது.

      என்னை அடையாளம் கண்டுகொண்டதற்கான எழுச்சி அவள் கண்களில் காணப்பட்டதாகத் தெரியவில்லை. கௌண்டருக்கு அருகே நின்றிருந்த மற்றவர்களைப் பார்த்த அதே பார்வைதான் அது. என் மனத்தில் ஏமாற்றம் சூழ்ந்தது. இவள் நம்மைத் தெரிந்து கொள்ளுவதால் நமக்கு என்ன ஆகவேண்டும் என்கிற சமாதானமும் உடனெழுந்தது.

      எனக்கு அருகில் நின்றிருந்த ஒருவன் கால்சராய்ப் பையினின்று ஒரு சிறு கண்ணாடியை எடுத்துத் தலை வாரிக் கொள்ளலானான். இள வட்டம். தற்செயலாக என் முகம் அந்தக் கண்ணாடியில் தெரிந்த போது நான் கூனிக்குறுகிப் போனேன். தலையின் நரைப்பும், முகத்தின் சதைக்குறைவும், மூன்று நாளைய தாடியால் கூடியிருந்த மூப்பும் திடீரென்று என்னையும் கௌரியையும் ஒப்பிட வைத்து, ஓர் அவமானத்தின் பிடியில் என்னைச் சிக்கவைத்தன. நாற்பது ஆண்டுகள் என் இளமையைச் சிதைத்திருக்கிற அளவுக்கு அவள் வாழ்ந்துள்ள முப்பத்து மூன்று ஆண்டுகள் அவளது இளமையைச் சிதைக்கவில்லை என்பது தெளிவாகத் தெரிந்த போது, அவள் என்னைத் தெரிந்து கொள்ளாமல் இருப்பதே மேல் என்று கூட நினைக்க வைக்கிற  சிறுமைக்கு நான் உட்பட்டேன்.                                 

அவள் எனது டோக்கன் எண்ணிக்கையைச் சொல்லி அழைத்ததும் நான் கௌண்டருக்குள் கையை நீட்டினேன்.    என் முகத்தைப் பாராமல் அடையாளத் தகட்டைப் பெற்றுக் கொண்ட கௌரி, “பத்து ரூபா நோட்டாத் தரட்டுமா, இல்லே அஞ்சு ரூபாயா?” என்று கேட்டுவிட்டு நிமர்ந்து என்னைப் பார்த்தாள்.

       “பத்து ரூபாயாவே குடுங்கோ,” என்றவாறு நான் அவள் முகத்தில் பதித்த பார்வையை அகற்றாமல் அவள் கண்களுக்குள் ஆழ்ந்து நோக்கினேன்.

       அவள் தன் இமைகளைத் தாழ்த்திக்கொண்டு ரூபாய் நோட்டுகளை எண்ணத் தொடங்கினாள். ரூபாய்த் தாள்களை எண்ணுவதற்காக அவள் இமைகளைத் தாழ்த்தினாளா, அல்லது என் பார்வையைத் தாள மாட்டாமல்  அப்படிச் செய்தாளா என்பதை என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை.

      பணத்தை வாங்கி நான் அப்படியே பையில் போட்டுக்கொண்டதும், “ஒரு தடவை நீங்களும் எண்ணிப் பார்த்துடுங்கோ,” என்றாள் அவள்.

       “நீங்கள் எண்ணினப்போ நான் பார்த்துண்டுதானே இருந்தேன்?” என்று புன்னகை செய்தேன்.

       ‘பாஸ் புக்’ கை அவள் தன் விரலால் நகர்த்தினாள். எடுத்த எடுப்பில் அவளுக்கு என்னைத் தெரியாவிட்டாலும், ‘பாஸ் புக்’கில் இருந்த என் பெயரைப் பார்த்ததும், அந்தப் பெயரால் அவள் நினைவுகள் கிளறப்பட்டு, அதன் விளைவாக நான் “அவ” னாக இருக்குமோ என்று ஐயுற்று  என்னிடம் ஏற்பட்டுள்ள மாறுதல்களை மீறி என்னைக் கண்டுபிடித்திருப்பாள் என்கிற நம்பிக்கை என்னுள் எழுந்ததும், “என்னைத் தெரியறதா?” என்று கேட்டுவிட்டேன்.

 “ஓ! தெரியறதே! நீங்க நுழைஞ்சதுமே உங்களைப் பார்த்துட்டேனே!” என்றாள், புன்னகையுடன். அவள் குரலில் தெறித்த இயல்பான சகஜம் என்னைத் திணற அடித்தது.  புன்னகையில் துயரத்தின் சாயலோ, குரலில் தேசலோ இல்லை என்பது தெளிவாகப் புரிந்த போது அதிர்ச்சியாக இருந்தது.

       நான் கட்டடத்துக்குள் நுழைந்த போதே அவள் என்னைக் கவனித்துவிட்டதற்கான சிறு அடையாளமும் அவள் முகத்தில் இதுகாறும் புலப்படவில்லை என்பதை நினைத்துப் பார்த்த போது தன் உணர்ச்சிகளை வெளிக்காட்டிக்கொள்ளாத அளவுக்கு இவள் ஆழமானவள் என்று தோன்றிற்று. ஒருகால் நான் இவளைக் கவனிப்பதற்கு முன்னதாகவே இவள் என்னைக் கவனித்துவிட்டதால் கிடைத்த இடை நேரத்தைத் தன் மனவெழுச்சிகளைச் சமனப்படுத்திக்கொள்ள இவள் பயன்படுத்திக் கொண்டிருந்திருப்பாளோ என்றும் எண்ணினேன். அதுதான் உண்மை என்று தோன்றியது.

      நான் அவளைப் பார்ப்பதற்கு முன்னால் அவள் என்னைப் பார்த்தும், என்னை அறிந்தவளாக அவள் காட்டிக்கொள்ளவில்லை என்பதும், நான்தான் ஓர் ஆண்பிள்ளைக்குரிய அசட்டுத்தனத்துடன் அவளோடு பேச்சுக் கொடுத்தேன் என்பதும் என்னை அவமானப்படுத்தின.

      ஆயினும், மேற்கொண்டு அவளோடு பேச்சைத் தொடர்ந்து இந்தப் பதினைந்து வருட இடைக்காலத்தில் அவள் வாழ்க்கையில் ஏற்பட்டிருக்கக்கூடிய மாறுதல்களைப் பற்றி அறியும் ஆவல் என்னை உந்தியதால், அந்த அவமான உணர்ச்சியை விழுங்கிவிட்டு அவளை நோக்கிச் சிரித்தேன்.

       “நான் அடிக்கடி இந்த பாங்க்குக்கு வந்து போயிண்டிருக்கேன்.  ஆனா இன்னிக்குத்தான் இங்கே உங்களைப் பார்க்கிறேன்.”

       “ஆமா. கோயம்புத்தூர்லேர்ந்து ட்ரான்ஸ்ஃப்ர் ஆகி நான் போன மாசந்தான் இங்கே வந்தேன்.”

       “அப்படியா?” – மேற்கொண்டு என்ன கேட்பது என்று தோன்றாததால், நான் சில விநாடிகள் பேசாமல் இருந்தேன். எனக்குப் பிறகு பணம் வாங்க வேண்டியவர்கள் யாரும் இல்லாததால் நான் நகராமல் நின்றேன். பக்கத்துக் கௌண்டர்களிலும் யாருமில்லை.                                    “எத்தனை குழந்தைகள் இப்ப உங்களுக்கு?” என்று தயங்கியபடி நான் கேட்டதும், அவள் பற்கள் தெரிய அகலமாக ஒரு புன்னகை செய்தாள்.

       “எனக்குக் கல்யாணமே ஆகல்லே.”

       நான் திடுக்கிட்டு நின்றேன். அடிவயிற்றில் குபுகுபுவென்று ஒரு தீப்பந்தம் எரிந்து அதன் தழல் நெஞ்சுக்கூட்டுக்குள் புகுந்துவிட்டாற்போல் மனசு எரிந்தது. கண்கள் அகல அவளை அதிர்ச்சியோடு வெறித்துப் பார்த்த என்னை நோக்கி அவள் மறுபடியும் புன்னகை செய்தாள். மிகவும் இயல்பான புன்னகை. அப்படித்தான் எனக்குத் தோன்றியது. அல்லது உணர்ச்சிகளை மறைக்க முடிகிற சாகசமாய் இருக்கலாம். … இவளால் எப்படி இந்த மாதிரி சிரிக்க முடிகிறது?

       ‘ஏன் ஆகல்லே?’ என்று கேட்க நினைத்த நான், அதன் அநாகரிகம் கருதி, ‘ஏன் பண்ணிக்கல்லே?’ என்று கேட்பதற்காகத் தொண்டையைச் சரிசெய்துகொண்ட போது, “அம்மா! மானேஜர் உங்களைக் கூப்பிடறாரு,” என்று வேலையாள் ஒருவன் வந்து சொல்லவே, “எக்ஸ்க்யூஸ் மி. இதோ வந்துடறேன்,” என்று சொல்லிவிட்டு அவள் எழுந்து போனாள்.

       ‘எனக்குக் கல்யாணமே ஆகல்லே…’

      அவள் முன்னிலையில் எனக்கு ஏற்பட்ட அதிர்ச்சியைவிட, காலியான அவளது இருக்கையை வெறித்துப் பார்த்துக்கொண்டு, இறந்த காலத்தை அசை போட்டவாறு  நின்ற போது ஏற்பட்ட உறுத்தல் அதிகமாக இருந்தது.

                    இதுகாறும் அவளுக்கு மணமாகாதிருப்பதற்கு நானும் ஒரு காரணன் ஆயின், அதைச் சரிப்படுத்தும் வகையில் என்னால் ஏதாவது செய்ய முடியாதா என்று என் மனம் தவித்தது. மேலுக்குத் தெரிகிற அவளது நடவடிக்கையிலிருந்து அவளுக்கு என் மேல் வெறுப்பில்லை என்பதாக நான் நினைத்தேன். மேலும் அவளோடு பேசிப் பார்த்து என்னால் முடிந்ததை அவளுக்குச் செய்ய வேண்டும் என்கிற விரைவுணர்ச்சி என்னுள் எழுந்தது.

       ‘கொஞ்ச நேரம் உங்களோடு பேசணுமே’ என்று சொன்னல் அப்படியொன்றும் தப்பாக எடுத்துக்கொள்ளக் கூடியவள் அல்லள் என்றும் தோன்றிற்று. பதினைந்து ஆண்டுகளுக்கு முந்தியே இவள் மற்றப் பெண்களைக் காட்டிலும் துணிந்தவள் ஆயிற்றே. இல்லையென்றால், அப்படி ஒரு கடுதாசியை எனக்கு எழுதியிருப்பாளா?

      அவள் எழுதிய அந்தக் கடிதத்தைப் பற்றிய ஞாபகம் வந்ததும், என்னை வேதனை பிடுங்கித் தின்றது. பசுமரத்தாணி போல் நெஞ்சில் பதிந்திருந்த அந்தக் கடிதத்தின் சொல்லமைப்பும் என் நினைவில் தோன்றியது.

      “அன்புள்ள ஸ்ரீ ராமாமிர்தம் அவர்களுக்கு.

நமஸ்காரம். என்னிடமிருந்து வரும் இந்தக் கடிதம் உங்களுக்கு வியப்பை அளிக்கலாம். முன் பின் தெரியாத ஓர் ஆணுக்கு ஒரு பெண் கடிதம் எழுதுவது தவறுதான் என்பது எனக்குத் தெரிந்தாலும்  நீங்கள் எனது இந்தச் செய்கையைத் தப்பாக எடுத்துக்கொள்ள மாட்டீர்கள் என்று நம்பி இதை எழுதுகிறேன்.

உங்கள் தகப்பனார் ஆறாயிரம் வரதட்சிணை கேட்டுக் கடிதம் எழுதியதைப் பார்த்ததிலிருந்து என் தகப்பனார் இடிந்து போயிருக்கிறார். எங்களிடம் அவ்வளவு பணம் இல்லை. நாங்கள் ஏழைகள். எங்களால் கொடுக்க முடியும் தொகை மூவாயிரம்தான். என் மேல் இரக்கம் காட்டும்படி கேட்டுக்கொள்ளுகிறேன்.  என் தகப்பனாருக்குப் பிறகு நான் அநாதையாகிப் போவேன் என்கிற வருங்காலத்தைப் பற்றிய பயத்திலும், என்னைப் பற்றிய கவலையிலிருந்து என் தகப்பனாரை விடுவிக்கும் ஆவலிலும் வெட்கத்தை விட்டு அசட்டுத்தனமான இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். தவறானால் மன்னிக்கவும்.

இதுவரை என்னை இருபது பேர் பார்த்துவிட்டுப் போய்விட்டார்கள். ஒன்றும் சரிப்பட்டு வரவில்லை. பணத்தட்டுப்பாடுதான் … நீங்கள் கருணை காட்டுவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்.                                                                                               இப்படிக்கு,                                                            கௌரி

கௌரியின் கடிதம் வந்த போது நான் வீட்டில் இல்லை. மாலையில் வீடு திரும்பிய என்னிடம் அம்மா பிரிக்கப்பட்ட உறையை நீட்டினாள்.

கடிததத்தைப் படித்துவிட்டு நான் கூச்சத்துடன் அம்மாவை ஏறிட்டுப் பார்த்தேன். அம்மாவின் முகத்தில் கடுமை குடிகொண்டிருந்தது.

 “அவா பத்தாயிரம் குடுத்தாக்கூட இந்தப் பொண்ணு வேண்டாண்டா. சுத்த அடக்கங்கெட்ட பொண்ணா யிருக்கும் போலேருக்கு. … முன்னே பின்னே தெரியாத ஆம்பிளைக்குக் கடுதாசி எழுதறதாவது, கடுதாசி! கலி முத்திப் போச்சு! பொண்ணு படிச்சிருக்கணும்னியே? பார்த்துக்கோ படிச்ச லச்சணத்தை! …” – அம்மா என் பதிலுக்குக் காத்திராமல் கடிதத்தைப் பறித்துக் கிழித்தபடி அகன்றாள்.

அதற்குப் பிறகு கௌரியைப் பற்றித் தெரிந்துகொள்ளும் வாய்ப்பு எனக்குக் கிடைக்கவில்லை.

எனக்கு மணமாகிப் பல ஆண்டுகள் ஆகியும் கூட அவளுடைய ‘குறுகுறு’வென்ற பார்வையும் அன்புப் பிச்சை கேட்டு அவள் எனக்கு எழுதிய கடிதமும் அவ்வப்போது எனக்கு நினைவு வரும். அம்மாவின் சொல்லை மீறியும், அப்பாவை எதிர்த்தும் நான் கௌரியை மணந்து கொண்டிருக்கலாம்தான். ஆனால், முன்பின் தெரியாத ஆணுக்குக் கடிதம் எழுதுகிற அளவுக்குக் கௌரியிடம் இருந்த துணிச்சலில் பாதி கூட கூட என்னிடம் இல்லை. …

 ஐந்து நிமிடங்களில் கௌரி திரும்பி வந்தாள்.

 “உங்களைப் பத்திச் சொல்லுங்கோ. உங்களுக்கு எத்தனை குழந்தைகள்?”

 “எனக்குக் குழந்தைகள் இல்லை.”

அவள் கண்கள் சட்டென்று விரிந்தன. அவற்றில் தெரிந்த இரக்கத்தைக் கண்டு நான் சிறுமைப்படவில்லை. என் மனைவியைப் பற்றி இவள் ஏதாவது கேட்டால், அவள் இறந்து போய் இரண்டு ஆண்டுகள் ஆகிற உண்மையை இவளிடம் சொல்லக் கூடாது என்று நினைத்தேன். மனைவியை இழந்த நான் இவளை வலை வீசிப் பிடிக்கப் பார்க்கிறேன் என்று இவள் நினைத்துவிட்டால் என்ன செய்வது? ‘அன்று இவன் கோழை; இன்று தன்னலக்காரன்’ என்று நினைக்க மாட்டாளா?

கௌரி தனி மரமாக நிற்பதற்குக் காரணமாக இருந்த பல ஆண்களில் நானும் ஒருவன் என்கிற உறுத்தல் என்னை அரிக்கும் போது – உண்மையாகச் சொல்லுகிறேன் – நான் செய்துவிட்ட தீங்குக்குப் பரிகாரமாக இவளுக்கு ஏதாவது நல்லது செய்யவேண்டும் என்கிற தாபமே மேலிட்டது. நான் ஏதோ உட்கிடையான நோக்கம் கொண்டிருப்பதாக இவள் என்னைபற்றித் தவறாக எண்ணிவிடக் கூடாது என்பதால், நான் மனைவியை இழந்தவன் என்கிற உண்மையை அடியோடு மறைக்க விழைந்தேன்.

 “உங்களோடு கொஞ்ச நேரம் பேசணுமே?”

 அவள் முகத்தில் தோன்றிய வியப்புக்குறி விநாடி நேரத்தில் மறைந்தது.                               

“பேசலாமே! நீங்க அதோ அங்கே உக்காதிருங்கோ. நான் அஞ்சு நிமிஷத்துல வந்துடறேன். மணி ரெண்டாச்சு. இப்ப லஞ்ச் டைம்தான்,” என்றவாறு அவள் தன் இருக்கையில் உட்கார்ந்தாள்.

ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு அவளும் நானும் வெளியே வந்தோம்.

 “காப்பி சாப்பிடலாமா?” என்றேன்.    

 “வேண்டாம். எனக்குப் பசியே இல்லை. பேசிண்டே நடக்கலாமே?”

 மனித நடமாட்டமற்ற அந்தத் தெரு நாங்கள் பேசிக்கொண்டே நடப்பதற்குத் தோதாக இருந்தது.

 “அப்புறம் நீங்க ஏன் கல்யாணமே பண்ணிக்கல்லே?”

 அவள் சிரித்தாள்: “என்னோட கல்யாணத்தைப் பத்தி நான் நினைக்கிறதை நிறுத்தி எத்தனையோ நாளாயிடுத்து. நீங்க பார்த்துட்டுப் போனதுக்கு அப்புறம் வந்த ஒருத்தர் பணம் வேண்டாம்னார். ஆனா வியாதிக்காரர். வியாதிக்காராளையும் வயசானவாளையும் கல்யாணம் பண்ணிக்கிற பெண்கள் எப்பப் பாரு புருஷனோட சந்தேகத்துலேயே பொசுங்கிண்டிருக்கணும். … அதனாலே முடியாதுன்னுட்டேன். அடுத்த வருஷமே அப்பா காலமாயிட்டார். படிச்ச படிப்பு வீண் போகாமெ இப்ப வேலை பார்த்து வயித்தைக் கழுவிண்டிருக்கேன் …”

 “உங்க வாழ்க்கை பாழாயிட்டதுக்கு நான்தான் காரணம். உங்க கடுதாசியை நினைச்சு அப்பப்போ நான் வருத்தப்படுவேன்… அன்னிக்கு அப்பா-அம்மாவை எதிர்க்க முடியாத கோழையா இருந்தோமேன்னு நினைச்சு, நினைச்சு வருத்தப்படுவேன். வெக்கப்படுவேன். சத்தியமாச் சொல்றேன். உங்க முன்னாலே நான் ஒரு புழுன்னு எனக்குத் தோண்றது. குற்றவாளி மாதிரிக் குறுகிப் போறேன்…” – எனது ஆண்மையை வெற்றி கொண்டு பெண்மையின் சின்னமான கண்ணீர் திமிறிக்கொண்டு புறப்பட்டதால் விளைந்த கண்களின்  சிவப்பை அவள் பார்த்து விடாமல் இருப்பதற்காக நான் முகத்தைத் திருப்பிக் கொண்டேன்.

 “நோ, நோ. அப்படி யெல்லாம் சொல்லாதீங்கோ. இதெல்லாம் அவாவா தலையெழுத்து. யாருடைய துனபத்துக்கும் மனுஷா காரணமில்லே. அவாவா பண்ணின பாவம்தான் காரணம்…”

 கௌரி தொடர்ந்து சொன்னாள்: “என்னமோ உங்க மேலே ஒரு நம்பிக்கை ஏற்பட்டது. நீங்க நல்லவர்னு தோணித்து. அதனாலேதான் என் வெக்கத்தை விட்டுக் கடுதாசி எழுதினேன். எல்லாருக்குமே எழுதிப்பிட முடியுமா?”

 ‘அவா பத்தாயிரம் குடுத்தாக்கூட இந்தப் பொண்ணு வேண்டாண்டா’ என்ற அம்மாவின் குரல் என் காதுகளில் ஒலித்தது.

 “அப்படின்னா, இப்ப உங்களுக்கு யாருமே இல்லையா?”

 “கடவுள் இருக்காரே! மனுஷா மேலே இருந்த நம்பிக்கை போனதுக்கப்புறம் கடவளைத்தானே நம்பணும்?”

 எனக்குச் சுருக்கென்றது.

 “தனியாவா இருக்கேள்?”

 “ஆமா. ஒரு ஹாஸ்டல்லே இருக்கேன். என் மாதிரிப் பொண்ணுகளுக்காகத்தான் இப்போ ஹாஸ்டல்கள் நிறைய வந்திருக்கே?”

“உங்களுக்கு ஏத்தவனா ஒருத்தனை நான் பார்க்கட்டுமா?”             

“வேண்டாம், வேண்டாம். என் வயசுக்கு ஏத்த கல்யாணமாகாத பிரம்மச்சாரி  கிடைக்கிறது கஷ்டம்.
அப்படியே கிடைச்சாலும் அந்த வயசு வரைக்கும் ஒழுக்கமான வாழ்க்கை வாழறவா ரொம்பக் குறைச்சல். அதனாலே கல்யாணம் ஆகிப் பெண்டாட்டியைப் பறிகொடுத்தவன்தான் கிடைப்பான். அவனுக்குக் குழந்தைகள் இருந்ததுன்னா தொலைஞ்சுது. வெறும் பிடுங்கல்தான். ஏன்? வாழ்க்கையே நரகந்தான். ஆயுசு பூராவும் அவனோட சந்தேகத்தைத் தீர்த்து வைக்கிறதுலேயே கழிஞ்சுடும்…”

 “குழந்தைகள் இல்லாத ஒரு  ‘விடோயரா’ இருந்தா?”

 கௌரி வாய்விட்டுச் சிரித்தாள். எங்களைக் கடந்து சென்ற சைக்கிள்காரன் திரும்பிப் பார்த்துவிட்டுச் சென்றான். கௌரியின் சிரிப்பு அவ்வளவு சத்தமாக இருந்தது.

 “நான் இப்படி இருக்கிறதுக்கு நீங்கதான் காரணம்னு நினைச்சிண்டிருக்கேளா என்ன? இல்லவே இல்லை. தலையெழுத்துன்னு ஒண்ணு தனியா இருக்கத்தான் இருக்கு. யாருடைய தலையெழுத்துக்கும் பிறத்தியார் பொறுப்பில்லே. தவிர கல்யாணம் பண்ணிக்கிறதுக்கும் ஒரு வயசு, போக்கு இருக்கு, இல்லையா?”

 “அப்படி என்ன வயசாயிடுத்து உங்களுக்கு? யாரும் உங்களை இருபத்தெட்டுக்கு மேலே மதிக்கவே மாட்டா.”

  “இருக்கலாம். ஆனா இருபத்தெட்டுங்கிறது சின்ன வயசா என்ன? அந்த வயசுக்கு மேலே பண்ணிக்கிற கல்யாணம், ‘ஆடி கழிஞ்ச அஞ்சாம் நாள் கோழி வெட்டிக் கும்பிட்ற கதை’தான். அந்த எண்ணமே என்னைவிட்டுப் போய் ரொம்ப நாளாச்சு. … வயசு போயிட்டப்புறம் பண்ணிக்கிற கல்யாணத்துல என்ன இருக்கு? அந்த வயசைத் தாண்டினப்புறம் ஒரு பொண்ணு களர்நிலம்தான். அதுக்கு அப்புறம் பண்ணிக்கிற கல்யாணமும் உயிரில்லாத கல்யாணம்தான். நான் ஏதோ ‘ஃபிசிகல் ஆஸ்பெட்டை’ப் பத்திப் பேசறேன்னு நினைக்கப்படாது. மனசு உற்சாகமிழந்து போயிட்றது. கல்யாணத்துக்கு மனசு அதிக முக்கியமில்லையா? அஞ்சு வயசுலே ஒரு குழந்தைக்குப் பொம்மை மேலே ஏற்பட்ற ஆசை அது வளர்ந்து பெரிசானப்புறம் அதுக்கு இருக்குமா? அததுக்குன்னு அந்தந்த வயசு இருக்கு இல்லையா?”

முகத்தில் எந்த உணர்ச்சியையும் காட்டாமல், ஏதோ பாடம் ஒப்பிப்பது போல் அவள் சொன்ன ஒவ்வொரு சொல்லும் என் நெஞ்சில் சுருக் சுருக்கென்று ஊசியாய் நுழைந்து உறுத்தியது.

 “சரி, போகட்டும். கூடப் பிறந்த சகோதரன் மாதிரி நான் உங்களை அப்பப்போ வந்து பார்த்துட்டுப் போறதுக்கு நீங்க ஆட்சேபணை சொல்ல மாட்டேளே?”

 கௌரி சட்டென்று நிமிர்ந்து என்னைப் பார்த்தாள். நன்றியால் அவள் கண்களில் ஈரம் கசிந்திருந்தது.

 “தாராளமா வாங்கோ. ஐ வில் பி வெரி ஹேப்பி …”

 “உங்களுக்கு ஏதாவது உதவிகள் வேணும்னா தயங்காம கேளுங்கோ. … நீங்க என்னதான் தலையெழுத்தைப் பத்திச் சொல்லி என்னை சமாதானப்படுத்தப் பார்த்தாலும், என் அப்பா-அம்மாவை எதிர்க்கிற ஒரு தைரியம் அன்னிக்கு எனக்கு இருந்திருந்தா, உங்க தலையெழுத்து இப்படி ஆகியிருக்குமாங்கற கேள்வியிலேர்ந்து என்னால தப்பவே முடியல்லே.”

 “நீங்க ரொம்ப நல்லவர். அதனாலேதான் உங்களுக்கு இப்படியெல்லாம் தோண்றது …”

மறுபடியும் திமிறப் பார்த்த கண்ணீரை உள்ளுக்கு இழுத்துக்கொள்ள முயன்றேன்.

……. 

Series Navigationஇறுதிப் படியிலிருந்து – துரியோதனன்அறிஞர் அண்ணா போற்றிய அக்கிரகாரத்து அதிசய மனிதர்!
author

ஜோதிர்லதா கிரிஜா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *