ஜோதிர்லதா கிரிஜா
(கண்ணதாசன், ஜூன் 1978 இதழில் வந்த சிறுகதை. “ஜோதிர்லதா கிரிஜா கதைகள்” எனும் கலைஞன் பதிப்பகத் தொகுப்பில் உள்ளது.)
நான் அறைக்குள் நுழைந்ததைப் பார்த்ததும், என்னிடமிருந்து எதையோ மறைக்க விரும்பிய அவசரத்துடன் அம்மா அதுகாறும் தான் திறந்து வைத்துக்கொண்டிருந்த பெட்டியைச் சட்டென்று மூடியது மாதிரி எனக்குத் தோன்றிற்று. இதனால் எனக்கு ஒரு வகை ஆவலும் சிறிது அவநம்பிக்கையும் ஏற்பட்டன. ஆனால், அம்மா பெட்டியை அவசரமாக மூடிப் பூட்டியதைக் கவனிக்காதவள் போன்று என் முகத்தை உணர்ச்சியற்று வைத்துக்கொண்டவாறு, “இன்னிக்கு என்ன சமையல் பண்ணப் போறேம்மா? வாழைக்காய் இருக்கு போலிருக்கே? பொடிமாஸ் பண்ணேம்மா. பொடிமாஸ் சாப்பிட்டு எத்தனை நாளாச்சு!” என்றேன்.
கொத்துச் சாவியை இருப்பில் செருகிக்கொண்ட அம்மா, “உங்கப்பாவைக் கேளு, பொடிமாஸ் பண்ணலாமான்னு!” என்றவாறு அறையை விட்டு வெளியே போனாள்.
நான் அப்பாவைத் தேடிக்கொண்டு வாசற்பக்கத்துக்குப் போனேன். அப்பா நாற்காலியில் சரிந்து உட்கார்ந்துகொண்டு, வழக்கம் போல் பத்திரிகைக் கதையொன்றைப் படித்துக் கொண்டிருந்தார். அப்பாவின் பொழுது போக்குப் படிப்புத்தான். ஒரு கதை விடமாட்டார்.
நான் அவருக்கு முன்னால் போய் நின்றதும், அப்பா தலையை உயர்த்தி, “என்னம்மா?” என்றார். நான் சொன்னேன். அப்பா மலர்ச்சியுடன் வாழைக்காய்ப் பொடிமாஸ் பண்ண அனுமதித்தார். எல்லாம் அப்பாவைக் கேட்டுத்தான் எங்கள் வீட்டில் நடக்கும். அப்படி ஒரு பழக்கம். இதைப் பற்றிய வியப்பில் நான் அவ்வப்போது ஆழ்வதுண்டு. என் தோழிகளின் வீடுகளில் எல்லாம் அப்படி இல்லை. இன்னும் சொல்லப் போனால், தாய்மார்களின் கைகளே ஓங்கியிருக்கும் சில வீடுகள் உண்டு. இதனால் எனக்கு மிகவும் வேடிக்கையாக இருக்கும். இது மட்டுமன்று. எங்கள் வீட்டில் அப்பாவும் அம்மாவும் கலகலப்பாக ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ள மாட்டார்கள். பேசிக்கொள்ளவே மாட்டார்கள் என்றே கூடச் சொல்லிவிடலாம். அயலார் முன்னிலையில் மட்டுமே இயல்பாக நடந்து கொள்ளுவார்கள். மற்ற நேரங்களில் எதிரும் புதிருமடிதான்! இது எதனால் என்று எனக்கு மிகவும் திகைப்பாக இருக்கும். ஆனால் அம்மாவிடம் கேட்க வாய் வந்ததே இல்லை. பல முறைகள் கேட்க முயன்று தோற்றுப் போயிருக்கிறேன். அப்பாவிடம் அதுபற்றிப் பேசுவது பற்றியோ நினைத்தும் பார்க்க முடியாது. எனவே அவர்கள் எலியும் பூனையுமாக இருப்பதன் ரகசியம் அம்மாவின் வாய் வழியாகத்தான் என்றேனும் தெரியவரும். தக்க சந்தர்ப்பத்துக்காகக் காத்துக் கொண்டிருக்கிறேன்.
இப்போது அம்மா மிகவும் அவசரம் காட்டிப் பெட்டியை மூடியதற்கும், அப்பாவும் அம்மாவும் பேசிக்கொள்ளாமல் இருப்பதற்கும் நிறைய தொடர்பு இருக்கவேண்டுமென்று தோன்றிற்று. என் ஆவல் மிகுதியாயிற்று.
அவர்கள் இருவருக்குமிடையே நல்ல உறவு இல்லை என்பது வெளியார் எவருக்கும் தெரியக்கூடாது என்பதில் அவர்கள் இருவருமே கவனமாக இருந்தார்கள். வெளிப்பார்வைக்கு எல்லாம் நல்லபடியாகவும், இயல்பாகவும் நடந்து கொண்டிருப்பதாகவே பார்ப்பவர்களுக்குத் தோன்றும். தம்பி ரமணனும் நானும் இதுபற்றி அடிக்கடி பேசுவதுண்டு. பெரியவளான நான் அப்பாவுக்கும் அம்மாவுக்குமிடையே நிலவிய கசப்பான உறவு வெளியார் யாருக்கும் தெரியக்கூடாது என்று ரமணனுக்குச் சொல்லி வைத்திருந்தேன். இயல்பாகவே அடக்கமான அவன் என் சொல்லுக்கு மதிப்பளித்துத்தான் நடந்து வருகிறான் என்றே நினைக்கிறேன். எங்கள் வீட்டில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால், அப்பாவுக்கு ரமணன் மேல் அவ்வளவாகப் பற்றுதல் கிடையாது. அவன் மிகவும் குள்ளமாகவும், அவ்வளவாக அழகில்லாதவனாகவும் இருந்தான் என்பது அதற்குக் காரணமாக இருக்கலாம் என்று கொஞ்ச நாள்களுக்கு முன் வரை நான் நினைத்துக்கொண்டிருந்தது சரியன்று என்பதாய் அண்மைக் காலமாக நினைக்கத் தலைப்பட்டிருக்கிறேன்.
அவனை அப்பா அவ்வளவாக நேசிக்காமல் இருப்பதற்கும், அம்மாவுக்கும் அவருக்குமிடையே நிலவும் விந்தையான உறவுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்க வேண்டும் என்பது மிக நன்றாய்ப் புரியத் தொடங்கியிருக்கிறது. இன்னும் விண்டும் விளக்கமாகவும் சொல்லப் போனால், அம்மாவின் நடத்தை மீது அப்பாவுக்குச் சந்தேகம் இருந்திருக்க வேண்டும் என்றே சொல்ல வேண்டியதிருக்கும். அப்படியானால், ‘யாரையும் அம்மாவையும் இணைத்து இந்த அப்பா சந்தேகப்படுகிறார்’ என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று அடிக்கடி நினைத்துக் கொள்ளுவேன். ஆனால், ஒன்றும் ஊகிக்கும்படியாக இல்லை.
என் மனம் அம்மாவின் ரகசியத்தை அறிய ஆலாய்ப் பறந்த பரப்புக்கு அம்மாவின் பெட்டியை ரகசியமாய்த் திறந்து பார்த்தால் விடை கிடைத்துவிடும் என்று இந்தக் கணத்திலிருந்து மனம் பரபரப்புக் கொள்ளத் தொடங்கிவிட்டது. இருந்தாலும் அது நடக்கக் கூடியதன்று. அம்மா சாவியை எப்போதும் இடுப்பிலேயெ வைத்துக்கொண்டிருப்பாள். குளிக்கப் போகும் போது கூட அதை எடுத்து வைத்துவிட்டுப் போகமட்டாள். குளியலறையிலேயே புடைவையைச் சுற்றிக்கொண்டு அதையும் இடுப்பில் செருகிக்கொள்ளுவாள்! அம்மா சாவியை விட்டுப் பிரியாமல் இருப்பதற்கு அந்தப் பெட்டியில் அம்மாவின் ரகசியம் புதைந்திருப்பதுதான் காரணமாக இருக்கவேண்டும். அம்மாவுக்குத் தெரியாமல் அதை எப்படித் திறப்பது எனும் யோசனையில் என் மனம் ஆழ்ந்தது. அது மிகவும் கடினமான வேலைதான். எனினும் தெரிந்து கொள்ளாவிட்டால் தலை வெடித்துப் போகும் போல் இருந்தது. அம்மாவின் பெட்டியைத் திறந்து பார்க்கும் வாய்ப்புக் கிடைக்காவிட்டாலும், அம்மாவின் ரகசியம் இன்னதென்பதை ஓரளவுக்குத் தெரிந்துகொள்ளும் வாய்ப்பு நான் சிறிதும் எதிர்பாராத வகையில் அன்றே கிடைத்தது. அன்று மாலை ஆறு மணிக்கு நான் சாமி விளக்கேற்றிவிட்டுக் கூடத்துக்கு வந்த போது வாசலில் நிழல் தட்டியது. யாரோ அப்பாவின் பெயரைச் சொல்லி மெதுவாக அழைத்ததும் கேட்டது.
நான் வாசல் பக்கம் போய்ப் பார்த்தேன். மிகவும் குள்ளமான ஒரு மனிதர் சிறிது தயங்கினாற்போல் நின்றுகொண்டிருந்தார். கறுப்பாய் இருந்தார். திறந்த மார்பு. பூணூல் பெரிதாக ஒரு புரி மாதிரி மார்பில் கிடந்தது. தொந்தியுடன் காணப்பட்டார்.
“பிச்சுமணி பொண்ணாம்மா நீ?” என்றார். “ஆமா. நீங்க யாரு?” “நான் அவனோட பழைய சிநேகிதன். சங்கரன்னு பேரு. அப்பா இல்லியா?” “வாங்கோ. உள்ளே வந்து உக்காருங்கோ. அப்பா ஆத்தங்கரைக்குப் போயிருக்கார்.” “இல்லேம்மா. நான் அப்புறமா வறேன். எப்ப வருவான்?”
‘ரொம்ப சிநேகிதம் போலிருக்கு. அவன், இவன்னு பேசறாரே?’ என்று எனக்குள் வியப்படைந்தபடி, “இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துடுவார் – கால் மணியிலே. உக்காருங்களேன் …” “இல்லேம்மா. நான் கால் மணி கழிச்சு வந்து பாக்கறேன். உங்கம்மா இருக்காளா?” இந்தக் கேள்வியை அவர் கேட்ட போது ஏற்கெனவே ரமணனின் குள்ளத்துக்கும் அவருக்கும் முடிச்சுப் போட்டுப் பார்த்து அம்மாவின் ரகசியத்தைப் பெருமளவுக்கு ஊகித்துவிட்ட எனக்கு, அவர் கண்களில் தெரிந்த பரபரப்பு அர்த்தம் நிறைந்ததாகவும் மர்மம் நிறைந்து விளங்கியதாகவும் தோன்றியது. அம்மாவையும் அவரையும் சந்திக்க வைத்துப் பேச வைத்தும் பார்க்கும் ஆவல் என்னுள் தலை தூக்கிற்று.
“இருக்கா. இதோ கூப்பிட்றேன்,” என்ற நான் உள்ளே போகத் திரும்பினேன். அவர், “வேணாம், கூப்பிட வேணாம்,” என்று அளவுக்கு மீறிய அவசரத்துடனும் மறுப்புடனும் சொல்லிவிட்டுப் படியிறங்கலானார். விரைவாக நடந்து சென்ற அவரது முதுகுப் புறத்தைப் பார்த்துக்கொண்டு சிறிது நேரம் வாசலிலேயே நின்றுவிட்டு நான் உள்ளே போனேன். கொல்லைப் பக்கத்திலிருந்து குடிநீருடன் உள்ளே வந்துகொண்டிருந்த அம்மா, “யாரு வந்திருந்தா? என்னமோ பேச்சுக்குரல் கேட்டுதே?” என்று விசாரித்துக்கொண்டே குடத்தை அடுக்களை மேடையில் இறக்கிவைத்தாள்.
“உனக்குத் தெரிஞ்ச குரலாம்மா?” என்று நான் வினவவும், அம்மா தலையைத் திருப்பி என்னைப் பார்த்தாள். கண்களில் சிறிது திகைப்புத் தெரிந்தது. என் கேள்வி ஒரு தினுசாக இருந்ததை அவள் ஊகித்துவிட்டது அவள் பார்த்த தினுசிலிருந்து தெரிந்தது. நான் அம்மாவின் பார்வையைத் தவிர்த்துக்கொண்டே, குடத்திலிருந்து தண்ணீர் சரித்துக் குடிக்கலானேன்.
“ஆமா. தெரிஞ்ச குரல்தான். அப்புறம் வறேன்னுட்டுப் போயிட்டாரா?” – அம்மாவின் குரல் கொஞ்சமும் தேசல் இல்லாமல் துப்புரவாக ஒலித்தது. “ஆமா. அப்பாவோட சிநேகிதராம். யாரோ சங்கரனாம். உன்னைக்கூட விசாரிச்சார். நான், நீ இருக்கேன்னு சொன்னேன். உள்ளே வந்து உக்காருங்கோன்னேன். அப்புறமா வறேன்னுட்டுப் போயிட்டார்.” “நல்ல காரியம் பண்ணினாய். உள்ளே வந்து உக்காந்து என் வயித்தெரிச்சலைக் கொட்டிக்காம போய்ச் சேர்ந்தாரே மனுஷன்! …” “யாரும்மா அது?” – என் குரல் நான் அடக்க முயன்ற ஆவல் சிறிதும் குறையாமல் ஒலித்தது. என் பார்வை நெடுமையாக அம்மாவின் மீது படிந்தது. அம்மா சில விநாடிகள் வரையில் பதில் சொல்லாமல் இருந்தாள். பிறகு பெரிதாக ஒரு மூச்சை உதிர்த்தாள். “பாலா! உனக்கு விவரம் தெரியற வயசு வந்ததுக்கு அப்புறம் அந்த விஷயத்தைச் சொல்லணும்னு இருந்தேன். இன்னிக்கு அதுக்கு நேரம் வந்துடுத்து. இப்ப வந்துட்டுப் போனாரே, அவரையும் என்னையும் சந்தேகப்பட்டுண்டுதான் உங்கப்பா என்னோட பேசறதையே நிறுத்திட்டார். சொல்றதுக்கே வாய் கூசறது. … ரமணன் தனக்குப் பொறந்த பிள்ளை இல்லேன்னு உங்கப்பாவுக்கு என் மேலே சந்தேகம். அதுக்கு ஏத்த மாதிரி அவன் குள்ளமா, கறுப்பா வேற இருக்கானா? அதனால உங்கப்பா சர்வ நிச்சயமாயிருக்கார் – ரமணன் தனக்குப் பொறக்கல்லேன்னு. உங்கப்பாவும் நானும் நல்ல உயரமாச்சே! அதனாலே!” என்ற அம்மா கண் கலங்கினாள்.
அம்மாவின் மேல் அந்தக் கணத்தில் எனக்கு இரக்கம் மேலிட்டது. அப்பாவின் ஐயம் அடிப்படை இல்லாமல் எழுந்திருக்குமா என்கிற கேள்வியும் மனத்தில் எழுந்தது. நான் பேசாமல் இருந்தேன். எத்தனையோ கேள்விகள் கேட்க நாவு துடித்தாலும் ஒன்றும் பேச முடியவில்லை.
“அவர் இப்போ இந்த ஊர்லே இல்லியாம்மா?” “இல்லே. அசலூர்லே உங்கப்பா கொஞ்ச நாள் இருந்தப்போ, இந்த சிநேகிதரைத்தான் என்னைப் பார்த்துக்கொள்ளச் சொல்லிட்டுப் போனார். ரெண்டு பேரும் பிராண சிநேகிதம். அப்பா இல்லாத நேரங்கள்ளே வந்து போயிண்டிருந்தார். அதனாலே உங்கப்பாவுக்கு எங்க மேலே சந்தேகம். அதுக்கு ஏத்தமாதிரி ரமணனும் கன்னங்கரேல்னும் கட்டுக்குட்டுனு குள்ளமாவும் வேற இருக்கானா? அவருக்கு சர்வ நிச்சயம் நாங்க ரெண்டு பேரும் தப்புப் பண்ணிட்டோம்னு!”
அம்மா நிறுத்திவிட்டுக் கண்களைத் தேய்த்துக்கொண்டாள். நான் அம்மாவின் மீது அளக்கிற பார்வையை படரவிட்டுக் கொண்டிருந்தேன். தாங்கள் தப்புப் பண்ணவில்லை எனும் சொற்கள் அம்மாவின் வாயிலிருந்து இன்னும் வரவில்லை என்கிற நிலை என் கவனத்துக்குத் தப்பாத தீவிரத்தோடு நான் அம்மாவைப் பார்த்துக்கொண்டிருந்தேன். அம்மா மிகவும் உள்ளுணர்வு கொண்டவள் என்பது அடுத்துப் பேசியதிலிருந்து புரிந்தது. “அம்மா பொய் சொல்றாளோன்னு தோணும் உனக்கு. நாங்க ரெண்டு பேரும் ஒரு பாவமும் அறியோம். ரமணன் அப்பாவையும் கொள்ளாம, என்னையும் கொள்ளாம இது மாதிரி, கறுப்பா, குள்ளமாப் பொறந்தது வெறும் தற்செயல்!” – அம்மாவின் குரல் கணீரென்று ஒலித்தாலும், எனக்கு நம்பிக்கை விழவில்லை. அப்பா சந்தேகப்பட்டதில் என்ன தவறு இருக்க முடியும் என்று கூட நினைக்கத் தலைப்பட்டேன். அம்மாவுக்குத் தெரியாமல் பெட்டியைத் திறந்து பார்த்துவிட்டால் மறைக்கப்பட்ட பகுதி வெளிவந்துவிடும் என்று நினைத்துக்கொண்டேன். ‘அந்த சங்கரன் எழுதிய காதல் கடுதாசிகளை எல்லாம் இந்த அம்மா பொக்கிஷம் மாதிரி பாதுகாத்திண்டிருக்காளோ? … அப்பாவுக்குத் தெரியவந்தா என்னவாகும் இந்த அம்மா கதி?’
“உனக்குக் கூட சந்தேகம் வரும். ஆனா நான் நிரபராதிங்கிறதை நிரூபிக்கிறதுக்கு எங்கிட்ட ஒரு ஆதாரம் இருக்கு!” – அம்மா மேலே தொடரும் முன் வாசலில் அப்பாவின் செருப்போசை கேட்டது.
“என்னம்மா அது?” “அப்புறம் சொல்றேன்.” “உங்க ரெண்டு பேரையும் அப்பா சந்தேகப்பட்டது அந்த சங்கர மாமாவுக்குத் தெரியுமா?” “தெரியும். உங்கப்பா நேரிடையாவே கேட்டுட்டார். அவர் அழுதார். ஆனா அப்பா மனசு இளகல்லே. அப்ப போனவர் இன்னிக்குத்தான் வறார். எதுக்கு வரணும்? வந்து மறுபடியும் குட்டையைக் குழப்பறதுக்கா?”
அப்பா செருப்புகளை உதறிவிட்டு உள்ளே வரத் தொடங்கியதும் எங்கள் பேச்சு நின்றது. அம்மா உள்ளே போய்விட்டாள். அப்பாவின் நண்பர் இன்னும் கொஞ்ச நேரத்தில் வர இருப்பது பற்றி நான் அவரிடம் சொன்னேன். அப்பாவின் முகம் விகாரமாயிற்று.
“எதுக்கு வறான் அந்த ராஸ்கல்? … அவன் மறுபடியும் வந்தான்னா, அவனை நான் பார்க்க முடியாதுன்னுட்டேன்னு சொல்லித் திருப்பி அனுப்பிடு. என்ன? … அது சரி, உள்ளே வந்து உக்காந்தானா?” “இல்லேப்பா. நான் உள்ளே வந்து உக்காரச் சொன்னேன். மாட்டேன்னுட்டார்.”
“உங்கம்மா அவனைப் பார்க்கல்லியா?” – அப்பா தம் குரலைத் தேசல் இல்லாமல் ஒலிக்க வைக்கச் சிரமப்பட்டது புரிந்தது.
“இல்லே. அம்மா கிணத்தடியிலே இருந்தா.”
… அன்றிரவு அம்மா பெட்டியிலேயே சாவியைச் செருகி வைத்துவிட்டு மறந்து போய்ப் படுத்துக்கொண்டு தூங்கிப்போனது எனக்காகவே போல் இருந்தது. நான் அறைக்கதவை உட்புறம் தாழிட்டுவிட்டுப் பெட்டியைத் திறந்தேன். பெட்டியின் அடியில் ஒரு மிகப் பழைய புகைப்படம் இருந்தது. அதில் வயதான கணவனும் மனைவியும் காணப்பட்டனர். கணவர் மிக மிகக் குள்ளமாக இருந்தார். நாற்காலியில் அமர்ந்திருந்தார். மனைவி பின்புறம் பணிவாக – தமது உயரத்தைக் குறைத்துக் காட்டிக்கொள்ளும் முயற்சியிலோ என்னவோ – முதுகைக் கூனிக்கொண்டு நின்றிருந்தாள்.
அந்த ஆணுக்கு அறுபது வயதுக்குக் குறைச்சல் இல்லை. தம் கால்கள் தரையில் பாவாத அளவுக்கு அவர் குள்ளமாக இருந்தார். அசிங்கமாகவும் இருந்தார். பற்கள் வெளியே துருத்திக்கொண்டிருந்தன. வக்கிரக்கண்கள். புகைப்படம் மிகவும் பழுப்பேறியிருந்தது. அது எடுக்கப்பட்டு நாற்பது ஆண்டுகளுக்கு மேல் ஆகியிருக்கும். அதில் காணப்பட்ட அறுபது வயதுக் கிழவர் நிச்சயம் சங்கரன் அல்லர். அப்படியானால் இவர் யார் எனும் குழப்பமான கேள்வி என்னைக் குடைந்தது. இதை அம்மா மர்மமாய்க் கட்டிக்காப்பதன் உட்கிடை மண்டையை என்னதான் உடைத்துக்கொண்டும் புரியவே இல்லை.
பெட்டியில் மர்மமான வேறு எந்தப் பொருளும் இல்லை. அம்மாவின் புடைவை, இரவிக்கைகள் இருந்தன. நான் அதை மூடிவிட்டுக் கதவைத் திறந்தேன். … தனது குற்றமின்மையை மெப்பிக்கத் தன்னிடம் ஓர் ஆதாரம் இருப்பதாக அம்மா சொன்னது வேறு ஞாபகம் வந்தவாறே இருந்தது. அது என்னவாக இருக்கும் என்பது விளங்கவேயில்லை. அப்படி ஒன்று இருக்குமானால், அதை வைத்து அம்மா ஏன் இந்த அப்பாவின் சந்தேகத்தைப் போக்கக்கூடாது என்கிற கேள்வியும் என்னுள் எழுந்தவாறாக இருந்தது.
மறு நாள் ஊரிலிருந்து வந்த அத்தையுடன் பத்திரிகைக் கதை ஒன்று பற்றிய விவாதத்தின் போது அப்பா சொன்னார்: “பாவம் பண்ணினா, அதோட சுமையைப் பொண்ணுதான் சுமக்க வேண்டியிருக்கு. ஆண் ஈசியாத் தப்பிச்சுட்றான். இதைப் பார்க்கிறப்போ பொண்ணாப் பொறக்கிறதே மகா பாவம்னு தோண்றது. தாய்மைங்கிறது ஒரு சாபக்கேடுதான்!” – கற்பிழந்து தாய்மையுற்ற ஒரு பெண்ணின் கதை அது
அடுக்களையில், பாயசத்தைக் கலக்கிக்கொண்டே, அம்மா கம்பீரமாகவும் அழுத்தந்திருத்தமாகவும் அதற்குப் பதிலடி கொடுத்தாள்: “இருக்கலாம். ஆனா, தன் பெண்டாட்டிக்குப் பொறந்த குழந்தை தன் குழந்தைதான்கிற நிச்சயம் ஆம்பிள்ளைக்கு இல்லே! அடுத்தாப்லே, தன் குழந்தையைத் தானே ஒரு பொண்ணு சுமக்கிறா. அது தன் குழந்தைதான்கிற நிச்சயம் அவளுக்கு இருக்கு. இந்த விஷயத்துலே சபிக்கப்பட்டது ஆம்பிள்ளைதான்னு நான் நினைக்கிறேன்.”
அம்மாவின் குரலில் ஒரு குத்தலும் கூடக் கலந்திருந்தது. அப்பாவின் முகம் மிகவும் சிவந்துவிட்டதைப் பார்த்தேன்.
அன்றிரவு அம்மாவைத் தனியாகப் பார்த்த போது, அம்மா சொன்ன “ஆதாரம்” பற்றிக் கேட்டேன். அம்மா தன் பெட்டியைத் திறந்து அந்தப் புகைப்படத்தை எடுத்துக் காட்டிவிட்டுச் சொன்னாள்: “இது என்னோட தாத்தா படம். எங்க தாத்தா படு குள்ளமாம். எனக்கே இந்த ஃபோட்டோ ஆறு மாசத்துக்கு முந்தி, பாட்டி செத்துப்போனப்போதான் கையிலே கிடைச்சுது. அதுக்கு முன்னாடி நான் இதைப் பார்த்தது கூட இல்லே. தாத்தாவையும் பார்த்ததில்லே. அவர் குள்ளம்கிறதும் அதுக்கு முன்னாடி எனக்குத் தெரியாது. எங்க பரம்பரையிலே ஒருத்தர் குள்ளமா இருந்ததுதான் ரமணனும் குள்ளமாயும் உங்க கொள்ளுத் தாத்தா மாதிரியே அழகில்லாமயும் இருக்கிறதுக்குக் காரணம். உங்கப்பாவுடைய சிநேகிதர் சங்கரனும் குள்ளமா, கறுப்பா, சுமாரா இருக்கிறது என்னோட துரதிருஷ்டம்!”
“நீ ஏன் இதை அப்பாகிட்டே காட்டல்லே? காட்டி நீ எந்தத் தப்பும் பண்ணல்லேன்றதை நிரூபிச்சிருந்திருக்கலாமே?”
அம்மா சிரித்தாள். சிரிப்பில் கசப்பு மண்டியது: “பன்னண்டு வருஷமா உங்கப்பா என்னை இந்த ஆத்துக்குள்ளேயே தள்ளி வெச்சுக் கொடுமைப்படுத்தியிருக்கார். சுடு சொல்லாலே அவர் என்னைப் பொசுக்காத நாளே கிடையாதுங்கலாம். ரமணன் தன் பிள்ளை இல்லையோன்ற சந்தேகத்தாலே அந்தப் பிள்ளை கிட்டவும் அன்பா ஆதரவா, ஒரு நல்ல தகப்பனாரா அவர் நடந்துக்கல்லே. இப்பப் போயி, என் நிரபராதித்தனத்தை நிரூபிக்கிறதாலே அவர் என்னைக் கொடுமைப் படுத்தினதெல்லாம் இல்லைன்னு ஆயிடுமா? நெஞ்சிலே அடி விழல்லேன்னுதான் ஆயிடுமா? என்னை இந்த அளவுக்குக் கொடுமைப்படுத்தின உங்கப்பாவுக்குத் தண்டனை என்ன, தெரியுமா? ரமணன் தன் குழந்தை இல்லைன்கிற நெனைப்பால அவருக்கு வர்ற எரிச்சலும் அருவருப்பும்தான்! அந்தக் கசப்போடவே அவர் காலம் முழுக்கக் கழியட்டும்!”
…….
- குருட்ஷேத்திரம் 5 (விதுரரின் தராசு என்றும் நியாயத்தின் பக்கமே சாய்ந்தது)
- விருட்சம் 117வது இதழ்
- அம்மாவின் அந்தரங்கம்
- இந்திய இரயில்தொடர் எஞ்சின்கள் நீரக வாயு [Hydrogen Fuel-Based] எரிசக்தி மூலம் இயங்கத் தொழில் நுணுக்க வளர்ச்சி
- நாயென்பது நாய் மட்டுமல்ல
- தப்பிப்பிழைத்தவன்
- ஆப்கானிஸ்தானின் முதல் பெண் தெருக் கலைஞரான ஷம்ஸியா ஹசானி
- படித்தோம் சொல்கின்றோம் : மக்கத்துச்சால்வை மண்ணும் மக்களும் சௌந்தர்ய உபாசகரின் எளிமையான வாழ்வை பேசும் சிறப்பு மலர்
- ஜென்
- குருட்ஷேத்திரம் 6 (பேய்களின் புகலிடமாய் இருந்தது சகுனியின் மனம்)
- ஓலைத்துடிப்புகள்
- இறுதிப் படியிலிருந்து – மாத்ரி
- இறுதிப் படியிலிருந்து – சகுனி
- குருட்ஷேத்திரம் 4 (அறத்தின் குரலை சூதன் என்று ஒதுக்கப் பார்த்தார்கள்)
- தூங்காமல் தூங்கி…
- பாகற்காய் விற்க வந்த சிறுமிகள்
- ஏப்பம்