ப.ஜீவகாருண்யன்
பாண்டு பிணமாகி விட்டார்.
‘ஆசை அதிகமாக இருக்கிறது. ஆனால், ஆசைக்கு உகந்ததாக உங்கள் உடல் ஒத்துழைக்க மறுக்கிறது. ‘மலையை முட்டி மோதிச் சாய்த்து விடலாம்!’ என்பது போன்ற உங்கள் மூர்க்க முயற்சி நிச்சயம் உடலுக்கும் உயிருக்கும் ஆபத்தைத்தான் விளைவிக்கும். ஏற்கனவே, உங்கள் விஷயத்தில் அளவுக்கு அதிகமாக நான் இசைந்து கொடுக்கிறேன். ‘காமக் கலையில் வல்லவர்கள் மத்ர தேசத்துப் பெண்கள்! என்னும் சொல்லாடலை மெய்ப்பித்துக் காட்டுகிறேன்!’ என்னும் எண்ணத்துடன் இயலாமையில் கிடக்கும் அரசரிடம் ஏதேதோ வித்தைகள் காட்டுகிறாய்! இது நல்லதல்ல!’ என்று அக்கா என் மீது கோபத்திலிருக்கிறார்கள். இன்று இயலாமையில் இருக்கிறீர்கள். ஆனால், இளமையின் உச்சத்திலிருக்கிறீர்கள். இன்னும் நிறைய காலம் இருக்கிறது. அதுவுமில்லாமல், ‘தொடர்ச்சியாக எடுத்துக் கொண்டு வரும் தேவர்களின் மருந்து விரைவில் பலன் கொடுக்கும்!’ எனக் கருதுகிறேன். ஆகவே, வீண் முயற்சி வேண்டாம். இன்னும் சிறிது காலம் அமைதியாக இருந்து பார்ப்பதே நல்லது!’ என்றும் இன்னும் பலவாறும் பாண்டு என்னை ஆட்கொள்ள முயற்சிக்கும் போதெல்லாம் சிறு பிள்ளைக்கு நல்லது சொல்வது போல என்னாலியன்ற அளவில் சொல்லியும்- பாண்டுவிடமிருந்து எவ்வளவோ ஒடுங்கி-ஒதுங்கியும் பலனில்லாமல் போயிற்று.
மாதங்கள் கணக்கற்றுக் கழிந்ததுதான் மிச்சம். நாங்கள் இருக்கும் இடத்திலிருந்து நான்கைந்து நாழிகை நடை தூர உயரத்திலிருக்கும் தேவருலகத்துக் கிழவன் ஒருவன், நாங்கள் கொடுத்த கோதுமை மாவு, வெல்லம், அரிசி, சோளம் போன்ற பொருட்களுக்குப் பிரதியுபகாரமாக அவ்வப்போது கொடுத்து வந்த மருந்து பாண்டுவின் திரேகத்தில் ‘ஆண்மை’ விஷயத்தில் சிறு சலனத்தையும் ஏற்படுத்தவில்லை. பெண்களை ஆட்கொள்ளும் விஷயத்தில் பாண்டுவின் திரேகம் பாறையினும் மோசமாக இறுகிப் போய்க் கிடந்தது.
என்னை வென்றுவிட மேற்கொண்ட முயற்சியில் தொடர்ந்து தோற்றுப் போன பாண்டு, ‘இனிமேல் தன்னால் எந்தப் பெண்ணையும் வெற்றி கொள்ள முடியாது!’ என்னும் எண்ணம் கொண்டவராக என்னிடம் ஏற்பட்ட தோல்வியில் துவண்டு பிணமாகி விட்டார்.
இமயத்தின் குளிர் மேவிய இந்தக் கந்தமாதன பர்வதத்திற்கு நாங்கள் வந்திருக்க வேண்டிய அவசியமில்லை. கருணையில்லாமல் காலம் எங்கள் மூவரையும் இங்கே கொண்டு வந்து சேர்த்து விட்டது. ஆண்டு முழுவதும் குளிரும் கோடையும் மிதமாக இருக்கும் மத்ர தேசத்திலிருந்து பாண்டுவுக்கு இரண்டாவது மனைவியாக அஸ்தினாபுரம் வந்தடைந்த போது அந்த நகரத்தின் கொளுத்தும் கோடையை, குருதியை உறைய வைத்து நடுக்கும் குளிரைத் தாங்கவியலாதவளாகத் தவித்தேன். இமயத்திற்கு மேற்கொண்ட ‘உல்லாசப் பயணம்’ இளமையின் துளிர்ப்பிலிருந்த எனக்கு இனிக்கத்தான் செய்தது. கந்தமாதனம் வந்தடைந்ததும் இமயத்தின் குளிர் மேவிய பனிச் சூழல், ‘ஆஹா! வாழ்க்கை முழுவதையுமே இங்குக் கழித்து விட்டால் என்ன? எதற்கு அஸ்தினாபுரம்?’ என்னும் எண்ணத்தை எனக்குள் ஏற்படுத்தியது. பாண்டு, குந்தி, மாத்ரி ஆகிய எங்கள் மூவரிடையே குறைகளைக் கடந்து இமய வாழ்க்கை இன்பம் நிறைந்ததாகத்தான் துவங்கியது. ‘இமயத்திற்கு வந்திருக்கும் இந்தப் பயணம் உல்லாசப் பயணமல்ல. இது பிள்ளைப் பேற்றுக்கான பயணம்!’ என்பது பிறகுதான் தெரிந்தது.
சுயம்வர வழியில் ஏற்கனவே குந்தியை மணம் முடித்திருந்த பாண்டுவுக்கு உடனுக்குடன் என்னை இரண்டாவது மனைவியாக்க, அவனி அய்ம்பத்தாறு தேசங்கள் அளவில் புகழ் கொண்ட கலிங்கத்துப் பட்டாடைகள், கண்கவரும் கம்பளி-பருத்தி ஆடைகள், புகழ் பெற்ற காம்போஜகக் குதிரைகள், நூற்றுக் கணக்கில் குன்றுகள் போன்ற யானைகள், பொன்- வெள்ளி ஆபரணங்கள், பலப்பல வடிவிலான பண்டம் பாத்திரங்கள் என பிதாமகர் பீஷ்மர் கொண்டு வந்த பெண்ணுக்கான சீர் வரிசை என்னை, எனது தந்தை ருதாயனை, சகோதரர் சல்லியனை மற்றும் பலரையும் ஒருங்கே மிரள வைத்தது.
‘தம்பி மகனுக்கு மனைவியாகப் போகும் பெண்ணுக்காக இத்தனை சீர் வரிசைகளா?’ என்ற எனது தந்தையின் ஒளிவு மறைவற்ற கேள்விக்கு, ‘ருதாயா, மாதவிக் கொடி போன்ற உனது பேரழகுப் பெண்ணுக்கு இந்த உலகம் முழுவதையும் கொடுத்தாலும் ஈடாகாது! நான் ஏதோ என்னாலியன்றதைக் கொடுத்துள்ளேன்!’ என்றுயர்ந்த பீஷ்மரின் அடக்கம் கூடிய பதிலில் அன்று நான் எனது அழகு குறித்து அளவில்லா கர்வம் கொண்டது மறைக்கவியலாத உண்மை. அண்ணன் குருடன் ஆன காரணத்தில் அண்டை அயல் தேசங்களையெல்லாம் வென்று குரு ராஜ்ஜியத்தை விஸ்தரித்த பாண்டுவுக்கு மனைவியாகப் போவதில்-இரண்டாவது மனைவி என்பதையெல்லாம் மறந்து மகிழ்ச்சியுலகத்தில் சஞ்சரிக்க ஆரம்பித்தேன். ‘எதிர்கால வாழ்க்கை இப்படியெல்லாம் இருக்கும்; இருக்க வேண்டும்!’ என்று எப்படியெல்லாமோ கனவுகளை வளர்த்துக் கொண்டேன்.
அண்ணன் சல்லியனும் எனது கனவுகளை வளர்ப்பவராக அஸ்தினாபுரம் குறித்து அதன் மனிதர்கள் குறித்து ஜால வார்த்தைகளில் தூபம் போட்டார்.
‘மாத்ரி, பாரத வர்ஷத்திலேயே மிகப் பெரிய தேசம் குரு ஜாங்கலம். அய்ம்பத்தாறு தேசத்து படை பலத்தை ஒன்றாகச் சேர்த்தாலும் அஸ்தினாபுரத்தின் அதிரதனின் ஒற்றைச் சேனைக்கு ஈடாகாது! அஸ்தினாபுரத்தில் வீரத்தில் சிறந்த பீஷ்மர், விவேகத்தில் சிறந்த விதுரர் போன்றவர்கள் இருக்கிறார்கள். உன்னை மணக்கப் போகும் பாண்டு மகாராஜன்தான் குரு தேசாதிபதியாகப் போகிறான்! நீ மகாராணிகளில் ஒருத்தி ஆகப் போகிறாய்! மாத்ரி நீ குருதேச மருமகளாகிய காரணத்தில் மகத்தான நமது மத்ர தேசம் பலப்படும். பீஷ்மரின் ஆதரவு மத்ரத்துக்கு நிலையாகும்.’
அண்ணனின் வார்த்தைகளை ஆமோதிப்பவளாக தலையசைத்தேன். கனவுச் சுகம் கலையாதவளாக அஸ்தினாபுரம் புறப்பட்டேன். ஆனால், அஸ்தினாபுரம் வந்தடைந்த சீக்கிரத்தில் எனது ஆசைக் கனவு சின்னஞ் சிறு அடையாளமும் அற்றதாக-அற்பாயுள் கொண்டதாக- அடியோடு கலைந்து விட்டது, ‘அண்டை-அயல் தேசங்களையெல்லாம் வென்றவர்! வல்லவர்! நல்லவர்! புஜபல கீர்த்தி மிகுந்தவர்!’ என்னும் புகழுக்குரிய கணவர் பாண்டு ஆண்மையற்றவர் என்பதை அனுபவத்தால் உணர்ந்த பொழுதில் அதிர்ந்து அலைக்கழிந்தேன். பாண்டுவுடனான வாழ்க்கை குறித்து நான் வளர்த்து வைத்திருந்த ஆசைக்கோட்டை அடியோடு தகர்ந்து தரை மட்டமாகி விட்டது; மாத்ரி எனது வாழ்க்கை, கழுதை புரண்டெழுந்த களமாகிவிட்டது.
யாரைக் குறை சொல்வது?
எனது வாழ்க்கையில் ஏற்பட்டு விட்ட கொடுமைக்கு பேரனுக்கு பெண் கேட்டு என்னைக் கொண்டு வந்த பீஷ்மரை குற்றவாளியாக்க முடியாது. அரசர்கள், இளவரசர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களைத் திருமணம் செய்து கொள்வது இயல்பாகியிருந்த நெறியில் தம்பி மகனுக்கு இரண்டாவது திருமணம் செய்து வைத்த பீஷ்மர், பாண்டு ஆண்மையற்றவர் என்பதை அறிந்திருக்க நியாயமில்லை.
பாழும் விதி குந்தி, மாத்ரி இளம்பெண்கள் எங்கள் வாழ்க்கையில் தன் போக்கில் தாறுமாறாக விளையாடி விட்டதாகத் தோன்றுகிறது. விதிதான் விளையாடி விட்டது என்றால் எத்தனை எத்தனையோ காரணங்களால் வீழ்ச்சியடைந்து விடுகின்ற ஒவ்வொரு மனித வாழ்விலும் விதிதான் விளையாடி விடுகிறதா? வீழ்ந்துபட்டவர்கள் எல்லோரும் சொல்கிறார்கள் ‘விதி! விதி!’ என்று. ஆனால், எனக்கு விதி என்றால் என்ன என்பதுதான் கொஞ்சமும் விளங்கவில்லை.
அரண்மனை சிறைச்சாலை போலாகி விட்டது எனக்கு. அங்கே அவ்வப்போது வந்து என்னைப் புரிந்து கொண்டு ஆறுதல் கூறுபவராக விதுரர் மட்டுமே இருந்தார். அவர் ஒரு முறை என்னிடம் சொன்னார்.
‘அரண்மனையின் அவலம் கண்டு கலங்காதே, மாத்ரி! இந்த அஸ்தினாபுரம் அரண்மனை மட்டுமல்ல. அனைத்து அரண்மனைகளுமே எப்போதும் சம்பவங்களால் நிறைந்து கிடக்கின்றன. அரண்மனைகளில் தனி மனிதத் துன்பம் குறித்து கவலைப்படுவதற்கு யாருக்கும் நேரம் இருப்பதில்லை; அக்கறையும் இருப்பதில்லை. கணவர்கள் இருந்தும் விதவைகளாக இருப்பவர்களின் உஷ்ணப் பெரு மூச்சுகளால் நிரம்பியிருக்கிறது அழகிய இந்த அரண்மனை. மனத்தை இறைவனை நோக்கித் திருப்பு. சாஸ்திரங்களில் நேரத்தைச் செலவிடு. எதையும் எதிர்பார்க்காதவர்களுக்கு எல்லாம் வந்து சேரும். எப்போதும் யாரையும் வெறுக்காதே!’
அன்பும் அருளும் நிறைந்த விதுரரின் சொல்லைப் புறக்கணிக்க முடியுமா? ஏற்றுக் கொண்டேன்.
கந்தமாதனம் வந்து சேர்ந்ததுமே விரைந்து என்னையும் குந்தியையும் தாயாக்கிவிட வேண்டும் என்னும் முனைப்பு கொண்டார், பாண்டு. தன்னால் பெண்களை ஆட்கொள்ள முடியாது என்பது உறுதியான நிலையில் அவர் மாற்று வழியை யோசித்தார். இரு பெண்களின் கருப்பையை எப்படி நிரப்புவது என்பதில் குழப்பமேற்பட்டது அவருக்கு. அஸ்தினாபுரத்திலிருந்து மூன்று மாதங்களுக்கு ஒரு முறை எங்களுக்குத் தேவைப்படும் பொருட்களைக் கோவேறு கழுதைகளில் கொண்டு வந்து தருபவர்கள், ‘அரசி காந்தாரி கர்ப்பமாய் இருப்பது போல் தெரிகிறது!’ எனச் சொன்ன தகவல் வெகுவாக அதிர்ச்சியில் ஆழ்த்திற்று அவரை. அதுவுமில்லாமல், ‘ ‘ராஜ்ஜியம் அரசன் என்பவன் இல்லாமல் இருக்கக்கூடாது’ என்னும் முடிவுடன் ‘குருடராயிருந்தாலும் பரவாயில்லை!’ என்று பீஷ்மர், திருதராஷ்டிரரை அரசராக்கி விட்டார்!’ எனக் கேள்வியுற்றதில் கோபத்தில் கொந்தளித்த அவர், ‘விதுரனை வரச் சொன்னேன் எனச் சொல்லுங்கள்!’ என்று கழுதைகளில் பொதிகள் கொண்டு வந்தவர்களுக்குக் கட்டளையிட்டார்; பெண்கள் எங்களிடம், ‘என்ன அநியாயம் பாருங்கள்! காலமெல்லாம் கஷ்டப்பட்டு ராஜ்ஜியத்தை விரிவு செய்தவன் நான். ஆனால், ‘ராஜ்ஜியம் அரசனில்லாமல் இருக்கக் கூடாது’ என்று குருடனுக்குப் பட்டமாம்! என்ன நினைத்து விட்டான் அந்தக் கிறுக்குக் கிழவன்?’ என்று தனது கோபக் கொந்தளிப்பைக் கொட்டித் தீர்த்தார்.
‘விதுரரை விரைந்து வரச் சொன்னது திருதராஷ்டிரருக்கு பீஷ்மர் பட்டம் சூட்டியது குறித்து பேசுவதற்காகத்தானிருக்கும்!’ என்று பெண்கள் நாங்கள் கொண்ட எண்ணம் தாமதமில்லாத விதுரரின் வருகைப் பின்னணியில் பொய்த்துப் போனது. பிறகுதான், ‘விதுரர், குந்திக்கு கர்ப்பதானம் செய்ய வரவழைக்கப் பட்டிருக்கிறார்!’ என்பது மெல்லப் புரிந்தது.
பாண்டு பெண்கள் எங்களிருவரையும் விதுரரையும் ஒருங்கே வைத்து ‘நியோகம்’ குறித்து விளக்கினார்.
‘ஆட்சிக் கட்டிலுக்கு வாரிசு தேவைப்படும் அடிப்படையில் சம்பந்தப்பட்ட பெண்களின் கணவன் இறந்து விட்டால், கணவன் மூலம் பெண், கர்ப்பம் தரிக்க முடியாத சூழல் நேர்ந்து விட்டால் கர்ப்பவதியாகும் தகுதிக்குரிய பெண் கணவனின் நெருங்கிய உறவினன் வழியில் அல்லது தெரிந்த பிராமணன் வழியில் குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்பது நியோகம் ஆகிறது.’ என்று நியோகம் குறித்து ஏதேதோ சொன்னவர் விதுரரிடம், ‘என்னால் பெண்களை ஆட்கொள்ள முடியவில்லை, விதுரா! ஆகவே, நீ குந்திக்குக் கர்ப்பதானம் செய்ய வேண்டும்!’ எனக் கேட்டுக் கொண்டார்.
அண்ணனின் வேண்டுதலுக்கு வெட்கப்பட்டவர் போல தெரிந்த விதுரர், ‘ ‘கரும்பு கசக்கும்!’ என்னும் யானையும் உண்டா?’ என்னும் நியதியில் தனயன் சொல்லைத் தட்டாத தம்பியாக குந்தியுடன் படுக்கையைப் பகிர்ந்து கொள்ளத் துவங்கினார். பிறகு குறைவில்லாமல் ஒன்றரை மாதங்கள் அளவில் குந்தியுடன் குதூகலித்தார். விதுரர் அஸ்தினாபுரம் சென்றடைந்த எட்டு மாதங்களில் யுதிஷ்டிரன் பிறந்தான்.
யுதிஷ்டிரனின் பிறப்பில் பூரித்துப் பொங்கிய பாண்டு, குந்திக்கு, ‘இரண்டாவது பிள்ளைக்கு யாரை ஏற்பாடு செய்வது?’ என்பதில் ஆர்வம் கொண்டார். நான், ‘குந்திதான் விதுரரின் மூலம் ஒரு பிள்ளைக்குத் தாயாகி விட்டாளே! பாண்டு என்னைப் பற்றி ஏன் யோசிக்க மறுக்கிறார்?’ என்று யோசித்தேன். ‘சரி, குந்தியின் இரண்டாவது பிள்ளைக்குப் பிறகு நம் முறையாக இருக்கும்.’ என்று ஆறுதலடைந்தேன். காத்திருந்தேன். தேவருலகத்து முரட்டு ஆஜானுபாகு மலை மனிதன்–பெருந்தீனிக்காரன்- ஒருவன் எளிதாக பாண்டுவின் வசப்பட்டான். மலை மனிதனுடன் உல்லாசமாக இருந்தது குந்தியின் வாழ்க்கை. குந்தி, மலை மனிதனுடன் மகிழ்ந்திருக்கும் பொழுதுகளில் பாண்டு என்னை ஆக்ரமிக்கும் முயற்சியில் இயந்திரப் பொம்மையைப் போல என் மீது விழுந்துப் புரண்டு தாங்கவொண்ணாத எரிச்சலை ஏற்படுத்துவது வழக்கமாயிற்று. ‘கொடுத்து வைத்தவள் குந்தி!’ என்று குமுறிக் கூக்குரலிட்டது மனம்.
மூன்று வாரங்கள் குந்தியுடன் ஏக போகமாய்-இன்பமாயிருந்த ஊசித்தாடி மலை மனிதன் சிறிது நாட்கள் தமது இனத்தாரிடம் தங்கித் திரும்பினான். குந்திக்கு இரண்டாவது பிள்ளைக்கான அறிகுறிகள் நிச்சயமானதும் பொதிச் சுமைகளுடன் எங்களிடம் விடை பெற்றுப் புறப்பட்டான். குந்தியின் இரண்டாவது பிள்ளை பீமன், ‘இப்படி ஒரு பெருத்த உடல் பெற்ற குழந்தையை எப்படிப் பெற்றெடுத்தாள் இந்த குந்தி’ என்று வியப்பூட்டும் வகையில் பிறப்பிலேயே பெருத்த உடல் கொண்டவனாக ‘திண்’னென்று இருந்தான்.
விதுரர், முரட்டு மலைமனிதன் இருவரையடுத்து எனக்கென பாண்டு அழைத்து வந்த மற்றொரு அழகிய மலை மனிதனை ஆணுறவில் சுகம் கண்டு அனுபவப் பட்டிருந்த குந்தி, பாண்டுவிடம் ஏதேதோ சொல்லி அபகரித்துக் கொண்டபோது, ‘அடிப்பாவி! ஏனடி என்னைப் பற்றி எள்ளளவும் யோசிக்க மறுக்கிறாய்?’ என்னும் எண்ணத்துடன் குந்தியைக் கொன்று கூறு போட்டுவிடும் பான்மையில் கோபம் பொங்கிற்று எனக்குள். ‘பொறுத்திருப்போம்! என்னதான் நடக்கிறது பார்ப்போம்!’ என்று கட்டறுந்த காளையாக மீறும் மனதை போராடிக் கட்டுக்குக்குள் கொண்டு வந்தேன்.
பாண்டுவின் தேடலில் மூன்றாவதாக அகப்பட்ட அழகிய மலை மனிதனுடன் அண்டைக் குடிலில் நடைபெறும் குந்தியின் ஆனந்தக் கொண்டாட்டத் தூண்டுதலில் எனது இருபது வயது இளம் பெண்ணுடல், ‘பிள்ளைப் பேறு!” என்பதை எளிதாகப் புறந்தள்ளி, ‘ஒரு ஆணுடன் உறவு!’ என்னும் ஒற்றைக் குறிக்கோளில் நிலை கொண்டு நின்றது. ‘அடங்கு! அடங்கு!’ என எத்தனை முயற்சித்தும் ஆணுடனான உறவு குறித்து உடல், உள்ளம் இரண்டிலும் ஒருங்கே ஓங்கிய விரகதாபம் அடங்க மறுத்தது. தனலிடைப்பட்ட புழுவாகத் தவித்துத் துடித்தேன். ’சீச்சீ! என்ன உடல்? என்ன மனம்?’ என்று எனக்குள் எழுந்த கேள்வியை மனம் கேலி செய்தது.
‘அடி, அப்பாவி மாத்ரி! உன்னையே நீ ஏன் கோபித்துக் கொள்கிறாய்? ஆணுடன் உறவு கொள்வது குறித்து உனக்குள் ஓங்கியுள்ள உணர்வு இயற்கையின் விதிப்படி நூற்றுக்கு நூறும் நியாயமானது. உலகம் தன்னில் அடங்கிய உயிர்களினிடையே ஆகும் உடல் உறவால்தான் இயக்கம் கொள்கிறது. உலக உயிர்களுக்கு அடிப்படை ஆதாரம் உணவு. அடுத்தது உடலுறவு. இன்னும் சொல்லப் போனால் உணவின்றி ஓடாய் ஒடுங்கி உயிர் வாதைப் படுகின்ற நிலையிலும் ஒரு நாய் தனது எதிர் பாலினத்தோடு உறவு கொள்ளப் படுகின்ற பாட்டை யோசித்துப் பார்க்க, ‘ஒரு வேளை உலக உயிர்களுக்கு உணவினும் உடலுறவுதான் பிரதானமோ?’ என்றும் எண்ணத் தோன்றுகிறது. மனிதர்கள் ஆறறிவு கொண்டவர்கள் என்பதெல்லாம் உலக இயக்க பரிபாலனத்தில் அர்த்தமற்ற கணக்கு. ஆக, உலகம் தனது உயிர்களினிடையே ஏற்படும் உறவென்னும் அச்சின் ஆதாரத்தில் அல்லவா இயக்கம் கொள்கிறது? பிறகென்ன?’
மறுத்துப் பேச வகையற்றதாக வளர்ந்த மனதின் விளக்கத்தில் வெயிலில் பிடுங்கி எறியப்பட்ட வள்ளிக் கொடியாகத் துவண்டு போனேன். ‘ச்சே! இப்படிப்பட்டதொரு இழிந்த வாழ்க்கை நீட்சியில் எப்படிக் கிடந்துழலுவது? உயிரைப் போக்கிக் கொண்டாலென்ன?’ என்று இடர்ப்பாடாக யோசித்தேன். ஆனால், அன்று என்னையும் மீறியதாக உயிர் மீது ஆசை மிச்சமாயிருந்த காரணத்தில் சாவிலிருந்து தப்பி விட்டேன். அன்று தப்பி விட்டேன். நிலையில்லாமல் நொடிக்கு நொடி நூறு கிளைகளுக்குத் தாவும் விசித்திரமான மனக்குரங்கு, குந்திக்கு மூன்றாவது பிள்ளையாக அர்ச்சுனன் பிறந்த பிறகு, இரட்டையர்களாக இளம் வயதிலிருந்த மலை மனிதர்கள் மூலம் ஒரே பிரசவத்தில் இரண்டு பிள்ளைகளை-நகுலன்-சகாதேவனை- நான் பெற்றெடுத்த பிறகு, ‘வேறொரு கிளைக்குத் தாவுகிறேன்!’ என்று விவரிக்க முடியாத வேகப் பிரயோகத்தில் மாத்ரி என்னை மரணப் படுகுழியில் தள்ளி விட்டது.
‘குருட்டு திருதராஷ்டிரன் காந்தாரி உட்பட்ட பதினோரு மனைவிகளுடன் மற்றும் விருப்பப்பட்ட காமக் கிழத்திகளுடன் கூடி எத்தனைப் பிள்ளைகள் வேண்டுமானாலும் பெற்றுக் கொள்ளட்டும். குந்திக்கு வழி வகை செய்தது போலவே தேவருலகத்து இரட்டையர்களுடன் குலவ அனுமதி கொடுத்தேன். நீயும் குறையில்லாமல் அதிசயம் போல-அழகுப் பதுமைகள் போல ஒரே பிரசவத்தில் இரட்டை ஆண்மகவுகளைப் பெற்றுக் கொடுத்து விட்டாய். ஆக, ‘அய்ந்து பிள்ளைகளுக்கு பாண்டு தந்தை!’ என்று அகிலம் சொல்லும் பாக்கியத்தை நீயும் குந்தியும் ஏற்படுத்திக் கொடுத்துள்ளீர்கள். ஆனாலும் மாத்ரி, இன்னும் எனக்கு நீ ஒரு உதவி செய்ய வேண்டும். தேவருலகத்து வைத்தியர் தொடர்ந்து கொடுத்து வரும் மருந்து. இப்பொழுது எனக்குள் நல்லதொரு மாற்றத்தை ஏற்படுத்தியிருப்பதாகத் தெரிகிறது. மறுப்பில்லாமல் எனக்கு நீ உதவ வேண்டும். குந்திக்கு மூன்று புதல்வர்கள் ஆன முறையில் என் மூலமாக இன்னும் ஒரு பிள்ளையை எனக்கு நீ பெற்றுத் தர வேண்டும். குந்தி ஆயிரம் வகையில் தடை சொல்வாள். ஆனால், எனக்கு நீ உதவ வேண்டும். மறுக்காதே, மாத்ரி!’
வேண்டும்! வேண்டும்! வேண்டும்! எத்தனை வேண்டும்? என்ன வேண்டும்?
எத்தனை மறுத்தும் பாண்டு கேட்கவேயில்லை. குந்தி, நாள்தோறும் என்னைக் கடிந்து கொண்டேயிருந்தாள்.
‘மாத்ரி, எத்தனையோ முறை எச்சரித்து விட்டேன். பாண்டு உனக்கு மட்டும் கணவரில்லை என்பதை மனதில் கொள்! அவரை வீணாகத் தூண்டுதலுக்கு ஆட்படுத்தாதே! ‘மத்ர தேசத்துப் பெண்கள் காமக்கலையில் வல்லவர்கள்!’ என்னும் எண்ணத்துடன் அவரிடம் உன் கைவரிசையைக் காட்டாதே! விபரீதம் விளைவிக்காதே!’
‘அடி, போடி சக்களத்தி! பெண்ணை ஆட் கொள்ளும் தகுதியற்று நாணறுந்த வில்லாக நாறிக் கிடக்கும் உனதருமை பாண்டுவை நானா தூண்டுதலுக்கு ஆட்படுத்துகிறேன்? மூடடி வாயை!’ என்று வார்த்தைகளால் குந்தியை குதறி விடத் துடிக்கும் மனதை, மூர்க்க முயற்சியுடன் கட்டுப்படுத்தினேன். ஆனாலும், ‘சத்சிருங்க மலைவரை சென்றுவரலாம். வா, மாத்ரி!’ என்ற பாண்டுவை மறுக்க முடியவில்லை.
‘குந்திக்கு அர்ச்சுனன் பிறந்ததையடுத்து பாண்டு எனக்கென அழைத்து வந்த ஆணழகர்களான இரட்டை இளைஞர்களிடம் கூட்டுக் கலவியாய் உயிரமுதம் உண்பது போல் நான் பெற்ற உடலின்பம் மீண்டும் எப்போது வாய்க்கும்? வாய்க்குமா அல்லது இரட்டையர்களுடன் சிலநாட்கள் அளவில் பெற்ற இன்பந்தான் எனக்கு வாழ்நாளில் ஆணுடனான இறுதி இன்பமா? இனிமேல் ஆடவன் ஒருவனுடன் உறவுச்சுகம் பெறுவதற்கு வழி வகையேயில்லையா?’ என்று ஆடவனுடனான உறவு குறித்து ஏங்கிக் கிடந்த எனக்கு பாண்டுவின் அழைப்பு, ‘சரி ஓயாது-ஒழியாது பலவருடங்களாக நம்பிக்கையுடன் சாப்பிட்டு வரும் தேவருலகத்து ஆசாமியின் மருந்து பாண்டுவுக்கு பலனளிக்கும் நன்னாளாக இன்னாள் இருந்தால் இருதரப்புக்கும் நல்லதுதானே? ‘நல்லது நடக்கும்!’ என்னும் நம்பிக்கையுடன் போய்த்தான் பார்ப்போமே!’ என்னும் எண்ணத்துடன் உடலுறவு ஆசை உந்தித் தள்ள குந்தியின் கூப்பாடு குறித்துக் கொஞ்சமும் கவலை கொள்ளாமல் மேய்ப்பனின் பின் செல்லும் ஆட்டுக்குட்டியாக பாண்டுவுடன் புறப்பட்டேன். ஆளரவம் அற்ற சத்சிருங்க மலை வெளியில் ஆடைகளை முழுதாக அகற்றி என்னை நிர்வாணப்படுத்திய பாண்டு ‘அப்படி மாத்ரி! இப்படி மாத்ரி! இன்னுங் கொஞ்சம் மாத்ரி!’ என்று எனது எண் ஜாண் உடலை வளைவும் நெளிவுமாக ஏழாயிரம் கோணல்களாக்கி வெறி கொண்ட மிருகமாக, மூர்க்கமாக என்னை ஆக்ரமிக்க முயற்சித்து- மூர்ச்சித்து வீழ்ந்தார். மூர்ச்சித்து விழுந்தவரை மெல்லப் புரட்ட்டினேன். மூச்சடங்கிப் போயிருந்தது.
வீரமும் விவேகமும் ஒருங்கே கொண்ட நல்ல மனிதர் பாண்டுவை பாழும் இயற்கை கொடூரமாக வஞ்சித்து விட்டது. பெண்களை மதிக்கக் கூடிய பாண்டு, பெண்ணுடன் உறவு கொள்ள முடியாதவராகிப் போன கொடுமையை என்னவென்று சொல்வது? பாண்டுவின் ஆண்மனம், ‘ஒரு முறையாவது பெண்ணை உடலால் வெற்றி கொண்டுவிட வேண்டும்!’ என்னும் வேட்கையுடன்-வெறியுடன் என்னிடமும் குந்தியிடமும் எத்தனையோ நாட்கள் அல்லாடி அலைக்கழிந்தது. ஆனாலும் அது ஒவ்வொரு நாளும் தோல்வியையே அனுபவமாகக் கண்டது. சரியோ, தவறோ நல்ல மனிதர் பாண்டுவின் இறப்புக்கு பாவி மாத்ரி நானும் ஒரு வகையில் காரணமாகிப் போனேன்.
மூர்ச்சித்து வீழ்ந்த மனிதர் மூச்சடங்கிப் போய் விட்டார் எனத் தெரிந்தும் நான் ஓவென்று கதறவில்லை. ஒப்பாரி வைக்கவில்லை. கசிந்துருகிக் கண்ணீர் சிந்தவில்லை. அதிர்ச்சியில் உறைந்து உருக்குலைந்து நிற்பவளுக்கு ஓலம், ஒப்பாரிக்கு இடமேது?
கணவன் என்ற பெயரில் காவலாக இருந்த பாண்டு இறந்து விட்டார். முத்து, இரத்தினமாக இருக்கும் எனதருமைக் குழந்தைகள் நகுலன்– சகாதேவனை வைத்துக் கொண்டு மூத்தவள் என்னும் முனைப்பில் இருக்கும் குந்தியுடன் சேர்ந்ததாக எதிர்காலம் எப்படியிருக்கப் போகிறதோ தெரியவில்லை. அண்டை அயல் தேசங்களில் புகழ் பெற்ற குரு ராஜ்ஜியத்தின் அஸ்தினாபுர அரண்மனை பாத்தியதையில் எதிர்வரும் நாட்களில் எனது குழந்தைகளுக்கு என்ன அங்கீகாரம் கிடைக்குமோ தெரியவில்லை. எந்த நல்லதும் கெட்டதும் காலத்தின் கையிலிருக்கிறது. என்ன நேரினும் எதிர் கொள்ளத்தான் வேண்டும்.
‘பாவிச் சண்டாளி! பாண்டு உன்னால்தான் உயிர் துறந்து விட்டார்!’ என்று குந்தி எழுப்பும் கூக்குரல் ஓலம் பொறுக்க முடியாமல் பொங்கி அடங்கினேன். பாண்டுவை எரிப்பதற்காக விறகுகள் அடுக்கப்பட்டன. விறகுகளின் மீது கிடத்தப்பட்ட பாண்டுவை எரித்து முடிக்கத் தேவையாகும் தீப்பந்தத்தை விறகுகளினிடையே பொருத்தினாள், குந்தி. புத்தி பேதலித்துப் போன பாழும் என் மனக்குரங்கு சற்றேனும் யோசிக்க எனக்கு இடங் கொடுக்கவில்லை. கனன்றெரியும் பாண்டுவின் சிதையுடன் சேர்ந்தெரியும் வகையில், பார்த்துக் கொண்டிருக்கும் குந்தி பதை பதைத்துக் கதறுவதைப் பற்றிக் கொஞ்சமும் கவலை கொள்ளாமல் விசுக்கென அது என்னை மரணக்குழிக்குள் வீழ்த்தி விட்டது.
‘அக்கா, நீ பெருந்தன்மை நிறைந்தவள். நான் உன்னைப் போல் விசால மனம் படைத்தவளில்லை. உன் குழந்தைகளை என் குழந்தைகளைப் போலப் பாவிக்க என்னால் ஆகாது. என் குழந்தைகளைத் தாயாக இருந்து காப்பாற்று!’ என்று குந்தியைப் பார்த்துக் கத்தினேன்.
பொய்யுரைக்கவில்லை. அக்கினித் தேவனின் ஆவல் கொண்ட தழுவல் நல்ல ஆணுடனான உறவு போல சுகமாய்த்தானிருக்கிறது.
***
- குருட்ஷேத்திரம் 5 (விதுரரின் தராசு என்றும் நியாயத்தின் பக்கமே சாய்ந்தது)
- விருட்சம் 117வது இதழ்
- அம்மாவின் அந்தரங்கம்
- இந்திய இரயில்தொடர் எஞ்சின்கள் நீரக வாயு [Hydrogen Fuel-Based] எரிசக்தி மூலம் இயங்கத் தொழில் நுணுக்க வளர்ச்சி
- நாயென்பது நாய் மட்டுமல்ல
- தப்பிப்பிழைத்தவன்
- ஆப்கானிஸ்தானின் முதல் பெண் தெருக் கலைஞரான ஷம்ஸியா ஹசானி
- படித்தோம் சொல்கின்றோம் : மக்கத்துச்சால்வை மண்ணும் மக்களும் சௌந்தர்ய உபாசகரின் எளிமையான வாழ்வை பேசும் சிறப்பு மலர்
- ஜென்
- குருட்ஷேத்திரம் 6 (பேய்களின் புகலிடமாய் இருந்தது சகுனியின் மனம்)
- ஓலைத்துடிப்புகள்
- இறுதிப் படியிலிருந்து – மாத்ரி
- இறுதிப் படியிலிருந்து – சகுனி
- குருட்ஷேத்திரம் 4 (அறத்தின் குரலை சூதன் என்று ஒதுக்கப் பார்த்தார்கள்)
- தூங்காமல் தூங்கி…
- பாகற்காய் விற்க வந்த சிறுமிகள்
- ஏப்பம்