காந்தார தேசத்து அரசன் சுபலன் மகள் காந்தாரியை திருதராஷ்டிரனுக்கு பேசி முடித்தார் பீஷ்மர். குருடனுக்கு தன் மகளைக் கட்டிவைப்பதா என சுபலன் யோசித்தபோது, அவனைக் கட்டாயப்படுத்தி ஒத்துக்கொள்ள வைத்தான் சகுனி. காந்தாரியின் சகோதரனான சகுனிக்கு, பேருக்கு திருதராஷ்டிரனை அரசனாக்கிவிட்டு அரசாங்கத்தை தான் நடத்தலாம் என்ற திட்டம் இருந்திருக்க வேண்டும். காந்தாரியோடு அஸ்தினாபுரம் வந்த சகுனியால் தனது திட்டத்தை செயல்படுத்த முடியவில்லை ஏனெனில் பீஷ்மர் குருதேசத்தை அரண் போல் காத்துவந்தார். சிலந்தி வலை பின்னி வைத்து அதில் சிக்கும் இரைக்காக காத்திருப்பது போல் சகுனி காத்திருந்தான். துரியோதனன் சகுனியின் பேச்சையே வேத வாக்காக நம்பினான். பாண்டுவின் மறைவுக்கு பின் தருமனுக்கு இளவரசு பட்டம் கட்டப்படுவதை சகுனி விரும்பவில்லை.
சகுனி தனது மருமகன் துரியோதனனை அரசனாக்க என்ன செய்யவும் தயாராக இருந்தான். நேரடியாக பாண்டவர்களுடன் மோதினால் ஜெயிக்க முடியாது தந்திரத்தால் அவர்களை வீழ்த்த வேண்டும் என்பதே சகுனியின் எண்ணம். திருதராஷ்டிரன் மூலம் பாண்டவர்களுக்கு அவர்களுக்குரிய பங்கினைப் பிரித்துக் கொடுத்து அவர்கள் அஸ்தினாபுரத்திலிருந்து வெளியேறி வாரணாவதத்தில் தங்கியபோது அரக்கு மாளிகைக்கு தீவைத்து பாண்டவர்களை கொல்லப் பார்த்ததும் சகுனியின் திட்டம் தான். இந்திரப்பிரஸ்தத்தில் தருமன் நடத்திய ராஜசூயயாகத்தில் கலந்துகொண்டு திரும்பும்போது, பாண்டவர்களுடன் மோதுவதைவிட அவர்களை ஒழித்துக்கட்டுவதே சிறந்ததென்றும், தருமனை சூதுக்கழைத்து அனைத்தையும் இழக்க வைக்கலாம் என்ற யோசனையை துரியோதனனிடம் தெரியப்படுத்தியதும் சகுனிதான்.
அஸ்தினாபுரத்துக்கு வாருங்கள் என விதுரர் அழைத்தால் பாண்டவர்களால் மறுக்க முடியாது என்று தெரிந்துதான் சகுனியின் யோசனைப்படி திருதராஷ்டிரன் விதுரரை அனுப்பிவைத்தான். வருகைதந்த பாண்டவர்களுக்கு
மண்டபத்தைச் சுற்றிக் காட்டியபின் எல்லோரும் அவையிலுள்ள இருக்கைகளில் வந்து அமர அப்போது துரியோதனன் உணவு கொள்ள இன்னும் காலமிருக்கிறது. அதுவரை ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டிராமல் சூதாடினால் என்ன என்று தருமனைப் பார்த்து கேட்க, தருமனோ என்னிடமுள்ள எவைகளையெல்லாம் கவர்ந்து செல்ல வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அதனைக் கேளுங்கள் இப்போதே கொடுத்துவிடுகிறேன் சூதாடித்தான் அதைப் பெறவேண்டும் என்பதல்ல என்கிறான். சகுனி சூதாடுவது என்பது சத்திரியருக்கே உரித்தான தருமம் தானே சூதாடப்பயந்தவன் போர்க்களத்தில் எப்படி நெஞ்சுரத்துடன் எதிரிகளை எதிர்கொள்வான் என ஏளனம் செய்கிறான். துரியோதனன் தருமனிடம் நீ எவ்வளவு பந்தயப்பொருளாக வைக்கிறாயோ அதைவிட இருமடங்கு பந்தயப்பொருளை சகுனிக்காக நான் வைக்கிறேன் என ஆசைகாட்டுகிறான்.
கர்ணன் இன்னும் ஒருபடி மேலே சென்று குருதேசம் யார் சாபத்தாலோ ஆண்மையில்லாத ஒருவனை அரியணையில் ஏற்றி அழகு பார்க்கிறது என்று தருமனை உசுப்பிவிட, தருமன் நான் போர்க்களத்தில் புறமுதுகுகாட்டி ஓடும் கோழையல்ல யுத்தத்தில் எனக்கு சமமானவர்களை எதிர்கொள்வது தான் எனது வழக்கம், நான் சூதுக்கு சம்மதிக்கிறேன் சத்தியம் தன்னை காத்துக்கொள்ளட்டும் என்கிறான். மனித மனம் சாத்தானின் குகையாகத்தான் இருக்கிறது அதில் குடியிருக்க தெய்வத்தை அழைத்தால் சோதனைகள் தான் வரும். சகுனியின் கைகளிலிருந்து உருண்ட பகடைக்காய் தர்மத்துக்கா துணை நிற்கும். ஆண்டாண்டு காலமாய் அதர்மத்தின் கால்வருடியாகவே தர்மம் இருந்துவந்துள்ளது. சத்தியத்தின்பால் ஈர்ப்பு கொண்ட ஒருசிலரையும் கடவுள் காப்பாற்றாமல் கைவிடுவாரேயானால் உலகம் கடவுள் பிடியிலிருந்து முற்றிலுமாக நழுவிவிடும்.
முத்துமாலை, தேர், நால்வகைப்படைகள், அரண்மனை, நாடு, சகோதரர்கள் என அனைத்தையுமே சூதாட்டத்தில் பணயம் வைத்து இழக்கிறான் தருமன். திரெளபதியை வைத்து ஆடேன் இழந்த எல்லாவற்றையும் மீட்டுவிடலாம் என்று சகுனி ஆசைகாட்ட, திரெளபதியையும் வைத்து இழந்து தருமன் தலைகுனிந்து நிற்கிறான். இங்கே தலைகுனிந்து நிற்பது தருமன் மட்டுமல்ல நல்லவர்களுக்கு என்றுமே துணையாய் நிற்க வேண்டிய கடவுளும் தான்.
- குருட்ஷேத்திரம் 5 (விதுரரின் தராசு என்றும் நியாயத்தின் பக்கமே சாய்ந்தது)
- விருட்சம் 117வது இதழ்
- அம்மாவின் அந்தரங்கம்
- இந்திய இரயில்தொடர் எஞ்சின்கள் நீரக வாயு [Hydrogen Fuel-Based] எரிசக்தி மூலம் இயங்கத் தொழில் நுணுக்க வளர்ச்சி
- நாயென்பது நாய் மட்டுமல்ல
- தப்பிப்பிழைத்தவன்
- ஆப்கானிஸ்தானின் முதல் பெண் தெருக் கலைஞரான ஷம்ஸியா ஹசானி
- படித்தோம் சொல்கின்றோம் : மக்கத்துச்சால்வை மண்ணும் மக்களும் சௌந்தர்ய உபாசகரின் எளிமையான வாழ்வை பேசும் சிறப்பு மலர்
- ஜென்
- குருட்ஷேத்திரம் 6 (பேய்களின் புகலிடமாய் இருந்தது சகுனியின் மனம்)
- ஓலைத்துடிப்புகள்
- இறுதிப் படியிலிருந்து – மாத்ரி
- இறுதிப் படியிலிருந்து – சகுனி
- குருட்ஷேத்திரம் 4 (அறத்தின் குரலை சூதன் என்று ஒதுக்கப் பார்த்தார்கள்)
- தூங்காமல் தூங்கி…
- பாகற்காய் விற்க வந்த சிறுமிகள்
- ஏப்பம்