அலைமகன்
செந்தூரனுக்கும் எனக்கும் எப்போது பழக்கம் ஏற்பட்டது என்று எனக்கு சரியாக ஞாபகம் இல்லை. ஆனால் ஒரு விஷயம் எனக்கு மிக உறுதியாக தெரியும். செந்தூரனின் தாய் தகப்பனை விடவும் எனக்குத்தான் அவனைப்பற்றி மிகவும் நன்றாகத்தெரியும். நான் அவனுடன் பழகிய காலத்திலிருந்து அவனுக்கு வகுப்பறை பாடங்களில் பெரிய அக்கறை எதுவும் இருந்ததில்லை. ஆனால் அவனொன்றும் மக்கு கிடையாது. மிக விசுவாசமாக பாடக்குறிப்புகளை பாடமாக்கி, படிப்பிக்கும் வாத்திமாருக்கு மிக நுணுக்கமாக வாளி வைத்து, அதையே பின்னர் பல்கலைக்கழகங்களிலும் தவறாமல் பின்பற்றி, பிறகு பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளர் பதவியைப்பெற்று, கடைசியில் புலமைப்பரிசில் ஒன்றுடன் அமெரிக்காவுக்கோ, ஐரோப்பாவுக்கோ சென்று குடியேறியதும் தீவிர தமிழ்ப்பற்றாளர்களாகவும், தமிழ்தேசியவாதிகளாகவும் உருமாறிவிடும் சகபாடிகளுடன் ஒப்பிடும்போது செந்தூரன் மிகவும் புத்திசாலி மாணவன்தான்.
செந்தூரனுக்கு பிடிக்காத விஷயங்கள் என்று சில இருந்தன. நிரந்தரமாக ஒரு இடத்திலே இருப்பது, வேலைக்குப்போவது போன்றவைதான் அவை. நடுத்தர வாழ்க்கை என்பது ஒரு நாட்பட்ட சாவு என்பது அவனது அசைக்கமுடியாத நம்பிக்கை. வேலைக்குப்போனால் அடிக்கடி ஊர் சுற்ற முடியாது. ஒரே இடத்தில இருப்பவன் செத்த பிணம் என்று அடிக்கடி சொல்லுவான். எதிர்காலம் குறித்த அச்சமும் பயமும் கொண்ட ஒரு கோழையான என்னை அவனது நட்பு கொஞ்சம் திருத்தியது என்றுதான் சொல்லவேண்டும்.
அவனது குடும்பமே ஒரு தீவிரமான சைவக்கார குடும்பம். பக்கத்துக்கோவில் திருவிழாவுக்கு பத்து நாட்கள் கடும் உபவாசமும், விரதமும் இருந்து, பதினோராம் நாள் வைரவர் மடை முடிந்தபின்னர் பன்னிரண்டாம் நாள் மதியம் பங்கு ஆட்டிறைச்சி அடிக்குமளவுக்கு கடுமையான சைவக்குடும்பம் அது. என்றாலும் இவனுக்கு மட்டும் வேதத்தில் சிறிது ஈடுபாடு ஏற்பட்டுவிட்டது. இத்தனைக்கும் அவனுக்கு ஒரு வேதக்காரன் கூட நண்பனாக இருந்ததில்லை.
“உயிர் வாழ எதை உண்பது என்றோ, உடலுக்கு எதை உடுத்துவது என்றோ கவலை கொள்ளாதீர். காகங்களைக் கவனியுங்கள்; அவை விதைப்பதுமில்லை, அறுப்பதுமில்லை, அவற்றுக்கு களஞ்சியமும் இல்லை. கடவுள் அவற்றுக்கும் உணவு அளிக்கிறார். நீங்கள் பறவைகளைவிட மேலானவர்கள் அல்லவா? காட்டுச் செடிகள் எப்படி வளர்கின்றன எனக் கூர்ந்து கவனியுங்கள்; அவை உழைப்பதும் இல்லை, நூற்பதுமில்லை. ஆனால் சாலமோன் கூடத் தம் மேன்மையிலெல்லாம் அவற்றில் ஒன்றைப்போல் அணிந்திருந்ததில்லை என நான் உங்களுக்குச் சொல்கிறேன்” என்ற புனித வேதாகமத்தின் லூக்கா வசனங்களை அடிக்கடி எனக்கு கவிதை போல சொல்லுவான். அற்புதமான தரிசனம்தான். ஆனால் பறவைகளுக்கு உயிர்வாழ்தலைத்தவிர மேலதிகமாக வேறு ஆசைகளோ, உலகை வழிநடத்த விரும்பும் இலட்சியங்களோ, அதிகார விருப்போ இல்லையென்பது யேசுவுக்குத்தெரியாதா என்ன? குறைந்தது ஒரு நாளைக்கு ஒரு தடவையாவது இந்த வசனம் அவன் வாயிலிருந்து வராமலிருந்ததில்லை. எனக்கென்னவோ இந்த வசனத்தினால் தான் அவனுக்கு வேதம் மீது ஈடுபாடு வந்திருக்கவேண்டும் என்று தோன்றியது. ஆனால் அவனுக்கு வேதத்தின் மீது ஈடுபாடு வர வேறொரு காரணமும் இருந்தது.
செட்டிகுளம் பரியாரி
வன்னியில் இருந்தபோது செந்தூரனுக்கு அடையாளம் தெரியாத கொடுநோய் வந்தது. உடல் முழுவதும் கொப்பளங்களும், தீராத வாந்தியுமாக வாட்டி எடுத்துவிட்டது. பத்து கிலோ மீட்டர் தள்ளி வவுனியா ஆஸ்பத்திரியில் காட்டியும் ஒன்றும் சரிவரவில்லை. வெடிமருந்தின் கந்தகத்துகள்கள் உடலில் நீண்ட காலம் படிந்தாலும் சிலபேருக்கு இப்பிடி வருமாம். நாளாக ஆக கொப்பளங்கள் உடைந்து சீழ் வடியத்தொடங்கியது. கொப்பளங்கள் உடைந்த இடத்தில தாங்கமுடியாத வலியும் வேதனையும். சாப்பாடு, மருந்து ஒன்றும் உள்ளே போகவில்லை. இப்போதைய நிலையில் கொழும்புக்கும் கொண்டுபோக முடியாது. நான் அவன் வீட்டுக்கு சென்று பார்த்தபோது ஏறத்தாழ சீவன் இழுத்துக்கொண்டிருந்தது. குனிந்து பார்த்த என்னிடம்;
“சாவை நாம் நினைத்தால் மட்டுமே அது நம்மை மின்னலை விட வேகமாக அணைத்துக்கொள்ளும்.” என்றான். இதை சொன்னபோது அவனது கண்கள் திடீரென்று ஒளிபெற்று மின்னின. இறுதியில் நான் செட்டிகுளம் பரியாரியிடம் கொண்டுபோக முடிவுசெய்தேன்.
வவுனியா செட்டிகுளத்தில் இருந்த பூரணம் பரியாரியார் பற்றி நிறைய கதைகள் உலவிக்கொண்டிருந்தன. பூரணம் பரியாரியார் ஒரு சாமியாராம். மந்திர தந்திரங்களில் வல்லவராம். ஒவ்வொரு மாதமும் முழுப்பூரணை நாளில் ஒரு ரகசிய பூசை செய்வாராம். அந்த பூசையில் கலந்துகொண்ட நோயாளிகளுக்கு எந்த தீராத வியாதியும் தீர்ந்துவிடுகிறதாம். செட்டிகுளத்தின் அயலில் பூரணம் பரியாரியைப்பற்றி ஒரு விதமான அச்சத்துடன் கூடிய பக்தியும், மரியாதையும் இருந்தது. எனினும் இவரைப்பற்றி ஆணையிறவுக்கு வடக்கே எவரும் அறிந்திருக்கவில்லை.
பூரணம் பரியாரியின் தகப்பனார் சில்லாலை சித்த வைத்தியத்தில் “ராஜ வைத்தியர்” சுவாம்பிள்ளை இன்னாசித்தம்பியின் பிரதம மருந்து கலவையாளராக இருந்தவர். இந்த சுவாம்பிள்ளை இன்னாசித்தம்பி வாழையடி வாழை மரபில் எட்டாம் இன்னாசித்தம்பி தலைமுறையை சேர்ந்தவர். இவர்களின் சித்த மருத்துவ பரம்பரையை மயில் முறைக்குலத்துரிமை என்பார்கள். மயில்க்குஞ்சுகளில் முதல் குஞ்சுக்கு மட்டுமே உச்சிக்கொண்டை முளைக்கும். அதுபோல இவர்களின் பரம்பரையில் முதல் ஆண் வாரிசுக்கு மட்டுமே சித்த மருத்துவம் செய்யும் உரிமை கைமாற்றப்படும். கம்பன் வீட்டு கட்டுதறிபோல இன்னாசித்தம்பி வீட்டு வேலைக்காரனும் ஒரு வைத்தியன்தான் என்று எனக்குத்தெரியும்.
யாழ்ப்பாணத்தில் சில்லாலை எனும் இந்த சிற்றூர் சின்ன இத்தாலி என்றும் குட்டி ரோம் என்றும் அழைக்கப்பட்டு வந்தது. சில்லாலையில் சைவக்காரரை மருந்துக்கும் காணமுடியாது. முழுவதும் ரோமன் கத்தோலிக்கர்களால் ஆன சிறிய கிராமம் அது. அங்கேதான் யாழ்ப்பாணத்தின் புகழ்பெற்ற கதிரைமாதா ஆலயம் இருக்கிறது. உலகிலேயே சில்லாலையிலும், லண்டன் வால்சின்ஹாம் தேவாலயத்திலும்தான் புனித அன்னை மேரி இயேசு பாலனுடன் கதிரையில் வீற்றிருக்கும் சுரூபம் இருக்கிறது.
செட்டிகுளம் பரியாரியிடம் செந்தூரனை கொண்டுபோனபோது மாலை நேரமாகவிருந்தது. பரியாரியார் பார்ப்பதற்கு பரியாரி போலவே தென்படவில்லை. மாறாக செல்வச்சந்நிதிக்கு வெளியேயுள்ள மரங்களுக்கு கீழே அமர்ந்திருக்கும் சாமியார் போல இருந்தார். அவர் இருந்த குடில் அடர்ந்த காட்டுக்கும் தாமரைகுளமொன்றுக்கும் நடுவிலே அமைந்திருந்தது. குடிலின் உள்ளே மூலிகை வாசனைகள் மூக்கை துளைத்தன.
செந்தூரனை நீண்ட மரக்கட்டிலில் கிடத்தி சோதித்தார் பரியாரியார். செந்தூரனோ அரைமயக்கத்தில் இருந்தான். உடல் முழுவதும் சீழ் ஒழுகி துர்நாற்றம் வேறு வரத்தொடங்கியிருந்தது. அவனின் கைகளில் நாடியைப்பிடித்து சிறிது நேரம் கண்ணை மூடியபடியிருந்தார் பூரணம் பரியாரி. பின்னர் குடிலில் இருக்கும் சிறிய மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் என்னை உற்றுநோக்கினார்.
“குடிப்ரவேசிகம் செய்தாலொழிய இவன் பிழைப்பது முடியாத காரியம். நாளை மறுதினம் வெசாக் முழுநிலவு. அன்றே சிகிச்சையை ஆரம்பித்துவிடலாம். அதுவரை இவன் இங்கே இருக்கட்டும்“. அவரது குரல் அசரீரி போல ஒலித்தது.
‘குடிப்ரவேசிகம்‘ என்ற சொல்லைக்கேட்டதும் எனக்கு நெஞ்சு துணுக்குற்றது. அந்த அமானுஸ்யமான இடத்தில எனக்கு உடல் சில்லிட்டது.
இந்த சிகிச்சை பற்றி நான் ஓரளவு தெரிந்துவைத்திருந்தேன். இந்த சிகிச்சை ஒரு மண்டலத்துக்கு நீடிக்குமாம். நோயாளி வெளிச்சமோ, காற்றோ புகாத ஒரு குடில் ஒன்றிலே ஒரு மண்டலம் முழுவதும் இருக்கவேண்டும். மருத்துவர் தரும் மருந்துகளையம், உணவையும் ஒரே சிந்தனையுடன் சாப்பிடவேண்டும். இந்த சிகிச்சையின் போது நகங்கள், முடி, பற்கள் எல்லாம் கொட்டி திரும்பவும் புதுசா முளைக்குமாம். மிகவும் கடினமான இந்த ரசாயன சிகிச்சைக்கு நோயாளியின் மனோபலம், ஆத்ம பலம் என்பன மிகவும் முக்கியம். இதன் முடிவில் இளமை பெருமளவு திரும்பிவிடுகிறதாம். கிட்டத்தட்ட ஒரு மறுபிறவி போலத்தான்.
காசியிலே 160 வயதுவரை வாழ்ந்த தபஸ்வி மகராஜ் எனும் ஜோகியிடம் இந்த சிகிச்சையைப் பெற்றாராம் முன்னாள் இந்தியத்தலைவர் பண்டித மதன்மோகன் மாளவியா. அவரும் கூட பாதியிலேயே வெளியேறிவிட்டதால் சிகிச்சை முழுப்பலனையும் அளிக்கவில்லையாம்.
ஆனால் இந்தச்சிகிச்சை இப்போது எங்கேயும் நடைமுறையில் இல்லை என்றே எல்லோரும் சொல்லி கேள்விப்பட்டிருக்கிறேன். இந்த பூரணம் பரியாரியார் அவ்வளவு சிறந்த மகாயோகியா என்ன? எனக்கு திடீரென்று ஒரு வித அவநம்பிக்கையும், செந்தூரனை நினைத்து பயமும் ஒரு சேர ஏற்பட்டன.
செந்தூரன் இப்போதே பாதி செத்துவிட்டான். இந்த பரியாரியை நம்பி மோசம் போனோமே என்று நொந்துகொண்டேன்.
எனது தயக்கத்தை உணர்ந்தவர் போல “தம்பி எல்லாத்தையும் கதிரை மாதா பார்த்துக்கொள்ளுவாள்! நீர் யோசிக்காமல் போய்வாரும்!” என்றார் பரியாரியார்.
மூன்றாம்நாள் அருகிலுள்ள சிறு குடிலுக்கு செந்தூரன் மாற்றப்பட்டான். நள்ளிரவு பன்னிரண்டு மணியளவில் பால் நிலவு மேகமூட்டம் எதுவுமில்லாமல் பொழிந்துகொண்டிருந்தது. மருந்துக்கும் கூட காற்றின் அசைவு இல்லை. பரியாரியார் சிறிய மருந்துக்குடுவையுடன் உள்ளே நுழைத்தார். சிறிது நேரத்தில் செந்தூரனின் அலறல் ஒன்று தோன்றி மறைந்தது. என்னை குடிலுக்கு அருகிலேயே செல்ல விடவில்லை. விடியும் வரையும் பரியாரியாரும் வெளியே வரவில்லை. நான் தூங்காமல் திகிலுடன் விழித்திருந்தேன். அதிகாலை ஐந்து மணியளவில் பூரணம் பரியாரி வெளியே வந்தார். நேரே என்னிடம்தான் வந்தார்.
“இனி நீ இங்கே வர வேண்டாம். சிகிச்சை முடிந்ததும் கதிரை மாதாவிடம் சொல்லி அனுப்புறன். நீ போகலாம்.” சொல்லிவிட்டு விறு விறுவென்று தனது குடிலுக்குள் நுழைந்துவிட்டார்.
ஒரு மண்டலம் முடிந்தது. நான் அதுவரை செந்தூரனுக்கு எதுவுமே ஆகக்கூடாது என்று மீசாலை சோலையம்மனை வேண்டிக்கொண்டிருந்தேன். சோலையம்மன் மிகவும் சக்தி வாய்ந்தவள். அத்தோடு செந்தூரனின் மனோபலத்தில் எனக்கு துளியளவும் சந்தேகம் இல்லை. நேரகாலத்துடன் இவனது வியாதியைப்பற்றி வவுனியா ராணுவத்தலைமையகத்தில் பேசி ஒருவாறு அனுராதபுரம் கொண்டுசெல்வதற்க்கான அனுமதி பெற்று வைத்திருந்தேன். உடனடியாக இன்று மாலையே செக்கலுக்கு முன்னர் செட்டிகுளத்தைவிட்டு கிளம்பவேண்டும்.
பரியாரியின் குடிலுக்கு சென்றதும் எனக்கு ஏற்பட்ட பிரமிப்புக்கு அளவே இல்லை. செந்தூரனுக்கு உடலில் கொப்பளங்கள் இருந்ததற்கான அடையாளங்களே இல்லை. உடலில் ஒரு தேஜஸான மினுமினுப்பு ஏறியிருந்தது. முன்னெப்போதுமில்லாதவாறு அவனது ஊறலான உடம்பு சற்று உப்பியிருந்தது. பாரியாரிக்கு முன்னால் கண்களை மூடி தியானத்திலிருந்தான். பூர்ணம் பரியாரி முழுநிலவொளியை தனக்கு சக்தி மூலம் உறிஞ்சி அவற்றை அருமருந்தாக மாற்றுவதாக செட்டிகுளத்தில் பட்டறை வைத்திருந்த செல்வராசு போன கிழமைதான் சொல்லியிருந்தான். அது உண்மையாக இருக்குமோ? எனது உதடு என்னை அறியாமலேயே “எல்லாம் கதிரை மாதாவின் மகிமை” என்று முணுமுணுத்தது.
நாங்கள் குடிலில் இருந்து விடைபெற்று கிளம்பியதும் ஒரே ஒரு வசனம் என்னுடன் ஒரு மண்டலத்துக்கு பிறகு பேசினான்;
“மச்சான் உடனடியாக சில்லாலை கதிரைமாதா கோவிலுக்கு போகோணும்; இண்டைக்கே!”
நாளைக்கு சோலையம்மனிடமும் போகோணும் என்று மறக்காமல் குறித்துவைத்துக்கொண்டேன். கதிரைமாதாவும் சோலையம்மனின் சொந்தக்காரிதான். இரண்டுபேரும் ஆச்சிமார் வேற!
கடலின் நடுவில்….
2009 யுத்தம் முடிவடைந்த பின்னர் ஆஸ்திரேலியா நோக்கி நிறைய கடற்பயணங்கள் ஆரம்பித்தன. செட்டிகுளம் முகாமிலிருந்து வந்ததும் செந்தூரன் உடனடியாக ஆஸ்திரேலியா புறப்பட்டுவிட்டான். மாத்தறையை சேர்ந்த சிங்கள ஆட்கடத்தல்காரன் ஒருவன் இவனிடம் சுளையாக 15 இலட்சத்தை கறந்திருந்தான். இவனுக்கு ஒன்றும் உடனடியாக பயணம் செய்யவேண்டிய தேவை எதுவும் இருக்கவில்லை. இருந்தாலும் எங்களையொத்த பெரும்பாலான பெடியன்கள் அப்போது இந்த மிக ஆபத்தான கடற்பயணத்தில் ஈடுபட்டிருந்தார்கள். இதிலே தப்பி ஆஸ்திரேலியா கரையை அடையிறது தண்ணிக்குள்ளால நெருப்பு கொண்டுபோகிற ஒரு வேலை.இருந்தாலும் கடல்வழி புலம்பெயர்வோர் எண்ணிக்கை குறைந்தபாடில்லை. நீர்கொழும்பிலிருந்து புறப்பட்ட படகு சரியாக 10 நாட்களின் பின் ஆஸ்திரேலியாவிலிருந்து 300 கிலோ மீட்டர் தூரத்தில் கவிழ்ந்தது. படகில் பயணம் செய்த 150 பேரும் கடலிலேயே மூழ்கிப்போனார்கள். செந்தூரன் மட்டுமே ஆஸ்திரேலிய எல்லைப்பாதுகாப்பு படைகளால் மீட்கப்பட்டான். அந்த மோசமான தண்ணீர்க்கண்டத்தில் தப்பியபிறகு இலங்கைக்கு நாடுகடத்தப்பட்ட செந்தூரனைக்கண்டதும் நான் சொன்னேன் “இனி இந்த ஜென்மத்தில் உனக்கு சாவு கிடையாது“.
15 இலட்சம் காசையும் இழந்து, நாடுகடத்தப்பட்ட அவனைப்பார்த்ததும் எனக்கு ஓரத்தில் அனுதாபம் சுரந்தது.
“இனிமேல் என்ன செய்யப்போகிறாய்?”
“அம்மாவின் காணி ஒண்டு சங்கானையில் இருக்கு! விற்றால் கனடாவுக்கு போகும் ஒரு ஏஜென்சிக்கு கட்டிவிடலாம். போனா ஒரு வருஷத்தில விட்ட எல்லாத்தையும் பிடிக்கலாம் மச்சான்!”
துளிகூட சோர்வோ, ஏமாற்றமோ இல்லாத தெளிவான குரல்.
“நீயும் வாவன். ஒரு ட்ரை ஒன்று போடுவம் கனடாவுக்கு!”
“வேணாம்! இங்கேயே ஒரு பிசினஸ் செய்வமென்று பார்க்கிறன், குடும்பமும் தனிய இங்க!”
சுவாரஸ்யமில்லாமல் பதிலளித்தேன். ஆனால், எனக்குத்தெரியும் இவ்வளவு ரிஸ்க்கினை இப்போது என்னால் எடுக்கவே முடியாது.
Baltimore
2016ம் ஆண்டு சர்வதேச மாநாடு ஒன்றுக்காக அமெரிக்காவுக்கு போயிருந்தேன். வாஷின்டனில் மாநாடு, உணவு, வதிவிடம் எல்லாம் ஏற்பாடாகியிருந்தது. மாநாடு முடிந்ததும் மேலும் ஒருவாரம் வசந்தத்தில் அமெரிக்காவை சுற்றிப்பார்க்க அருமையான வாய்ப்பு. நியூயார்க் சென்றுவர தீர்மானித்து புகையிரத நிலையத்தில முன்பதிவுசெய்த ரயிலில் செல்லக் காத்திருந்தேன். அங்கே மேலும் ஒரு ஆச்சரியம் காத்திருந்தது. ஒரே ரயிலில் நியூயார்க் செல்வதற்கு அங்கே வந்திருந்தான் செந்தூரன். கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களுக்குப்பிறகு பார்க்கிறேன். சரியாக ஒருமாதத்துக்கு முன்னர்தான் மெக்ஸிகோ வழியாக வந்திருந்தானாம். உண்மையில் அந்த வழியில் பெரும்பாலும் ஈழத்தமிழர்கள் வருவதில்லை. மிகவும் ஆபத்தான, உயிருக்கு துளியும் நிச்சயமில்லாத சாசகப்பயணம் அது. மெக்ஸிகோ பகுதியில் இருந்து அமெரிக்காவுக்கு நுழையும் வழியில் அரிசோனா பாலைவனம் மனிதர்களை தின்றுவிடக்காத்திருக்கிறது. பலவேளைகளில் எல்லை தாண்டும்போது மனிதாபிமான தன்னார்வத்தொண்டு நிறுவனங்களின் உதவி கிடைக்காவிட்டால் கருவாடாகிவிட நேரிடும். அரிசோனா பாலைவனமெங்கும் நீரின்றியும், கடும் வெப்பத்தாக்குதலாலும் உயிரிழந்த பன்னாட்டு அகதிகளின் மண்டையோடுகள் ஆங்காங்கு சிதறிக்கிடக்கின்றன. என்னன்னவோ கனவுகளுடனும், தேவைகளுடனும், புலத்துக்கு திரும்பிச்செல்லவிட்டால் இவர்களின் குடும்பங்களை தின்று ஏப்பம் விடுவதற்காக காத்திருக்கும் கடன்களுடனும் பயணிக்கும் இந்த அப்பாவி எளிய மனிதர்களை பாலைவனம் தின்று செரித்து, உணவுண்டுவிட்டு, அடுத்த இரைக்காக காத்துக்கிடக்கும் ராட்சத மலைப்பாம்பு போல வெகு அமைதியாக இருக்கிறது. அரிசோனா பாலைநிலத்தில் அகதிகளின் ஆத்மாக்கள் எக்காலத்திலும் ஓய்வெடுப்பதேயில்லை.
அமெரிக்க எல்லைக்கட்டுப்பாட்டு படைகளிடம் சிக்கினால் கடும் சித்திரவதைகளுக்கு உள்ளாக நேரிடலாம். துவக்குச்சூட்டு மரணமும் நேரலாம். உலகின் மிக ஆபத்தான சட்டவிரோத தரைவழி எல்லையூடாக வலு லாவகமாக தப்பிவந்த செந்தூரனைப்பார்க்கும் போது எனக்கு மலைப்பு ஏற்பட்டது. போதாதற்கு அவனுக்கு இரண்டு வருடங்களுக்கு முன்புதான் திருமணமாகியிருந்தது. கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகத்தில் விசாவுக்கு விண்ணப்பித்து, இரண்டு தடவைகள் நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்பட்டு, நிச்சயம் விசா கிடைக்கவேண்டும் என்பதற்காக தூதரக அதிகாரியிடம் அனாவசியமாக பம்மிக்கொண்டிருந்த என்னை நினைக்கும் போது எனக்கு மிகவும் அவமானமாக இருந்தது. வாழ்க்கையில் துணிவும், தன்னம்பிக்கையும் இருந்தால் பூமியில் எப்போதும் ஆயிரம் வழிகள் திறந்துகிடக்கின்றன.
அன்றைய பயணத்தில் நானும் அவனும் ஒரே பெட்டியில் அருகருகே அமர்ந்திருந்தோம். பெட்டியில் பெரும்பாலும் ஆசியர்கள், கறுப்பர்கள் மற்றும் ஒரு சில சீனர்கள். அரிதாக சில வெள்ளையர்கள்.
அந்த பயணம் மிகவும் இனிமையாக சென்றுகொண்டிருந்தது. எனக்கு அவன் எப்பிடி மெக்ஸிகோ ஊடாக தப்பிவந்தான் என்பதைக் கேட்பதில் மிகவும் ஆர்வமாக இருந்தது. இன்னும் ஒரு வாரத்துக்கு எனக்கு பேச்சுத்துணைக்கு கவலையில்லை. ரயில் Baltimore நகரை அண்மிக்கும்போதுதான் அந்த சம்பவம் நடந்தது. எங்களது பெட்டியை நோக்கி ஒரு வெள்ளை இளைஞன் வந்தான். வயது இருபத்தைந்துக்குள் இருக்கலாம். ‘அமெரிக்க‘ உயரம். தலை முழுவதுமாக மொட்டை அடித்து கைகள் முழுவதும் டாட்டூ வரைந்திருந்தான். கையற்ற பெனியனுடன் இருந்த அவனது இடுப்பில் பெரிய பட்டி ஒன்றும் இருந்தது. வலது கையில் பெருவிரலையும் ஆட்காட்டி விரலையும் சேர்த்து “சின் முத்திரை” போன்று பிடித்திருந்தான்.
நான் அவனது வினோதமான தோற்றத்தின் மீது செந்தூரனின் கவனத்தை ஈர்த்தேன். மூன்று வினாடிகள் மட்டுமே அவனை செந்தூரன் கூர்ந்து பார்த்தான். அடுத்தகணம் என்னை மிக வேகமாக இழுத்துக்கொண்டு எதிர்ப்பக்கம் புகையிரத பெட்டியின் கடைசியில் இருந்த பாத்ரூமுக்குள் மிக வேகமாக புகுந்து கதவை இறுக்கமாக மூடிக்கொண்டான். எனக்கு என்ன நடக்கிறது என்றே விளங்கவில்லை. நானும் அவனும் பாத்ரூமுக்குள் பூட்டிக்கொண்ட சில வினாடிகளில் ரெயில்ப்பெட்டி பெரும் துப்பாக்கி வேட்டுக்களால் அதிர்ந்தது. அன்று நாங்கள் பயணம் செய்த பெட்டியில் 27 பேர் பலியாகியிருந்தனர். நாங்கள் அமர்ந்திருந்த ஆசனத்தை சுற்றி பிணங்கள் ரத்த வெள்ளத்தில் கிடந்தன. நான் என்னை அறியாமலேயே “ஐயோ! சோலையம்மா!” என்று அலறினேன்.
அன்று என்னால் இரவு முழுவதும் உறங்கமுடியவில்லை. அனைத்து வேற்றின மக்களையும் சுட்டுத்தள்ளிய அந்த வெள்ளை இனவெறியனிடமிருந்து என்னைக் காப்பாற்றிய அந்த சக்தி எது? அவனது கை அடையாள முத்திரையை வைத்தே அடுத்தவினாடியில் நடக்கப்போவதை அனுமானித்த செந்தூரனின் மீது நன்றி உணர்வை விட பெரும் பிரமிப்புத்தான் உண்டாக்கியது. அவனது உள்ளுணர்வும் அதை செயற்படுத்தும் வேகமும் தான் என்னை அந்த இனவெறியனின் துப்பாக்கியிலிருந்து மயிரிழையில் பாதுகாத்திருக்கிறது.
சங்கானையில்…
நீண்ட காலமாக செந்தூரனை நான் சந்திக்கவில்லை. இரண்டு வருடங்களுக்கு முன்னர் தொலைபேசியில் கதைத்தது. அவனிடம் இருந்து விலகியிருக்கும் தருணங்கள் எப்போதும் சோர்வூட்டுபவை. அந்தந்த கணங்களில் வாழ்வதுபற்றி எவ்வளவோ ஞானிகள் சொல்லியிருக்கிறார்கள். நமக்கு கிடைக்கும் ஒவ்வொரு தருணமும் மிகவும் பெறுமதி வாய்ந்தது. உண்மையில் வாழ்வு என்பது கடந்த வினாடிக்கும் அடுத்த வினாடிக்கு இடையேயான தூரம்தான். அந்த தூரம்தான் பலவேளைகளில் எவ்வளவு நீண்டதாக இருக்கிறது. மிடில் கிளாஸ் வாழ்க்கை ஒருவனை வெறும் இயங்கும் சடப்பொருளாக மாற்றிவிடுகிறது. செந்தூரன் அருகில் இல்லாத தருணங்களில் எனக்கு இப்பிடியான எண்ணங்கள் தோன்றுவதை நினைத்து சிரித்துக்கொண்டேன்.
மீண்டும் நான் செந்தூரனை பற்றி அறிய நேர்ந்தபோது அந்தப்பொழுது தூரதிஷ்டமாக விடிந்தது. அவனது 42 வயதில் அவனது மரணச்சேதி எனக்கு சற்றுப்பிந்திய உதயன் பேப்பர் மூலமாக படிக்கக்கிடைத்தது. அப்போது அவன் மரணித்து ஒரு மாதம் முடிந்துவிட்டிருந்தது. அவன் ஒன்றும் சாசக பயணம் செய்துகொண்டிருக்கும்போது இறக்கவில்லை. அவனது மண்ணிலே, சங்கானையில் இறந்திருந்தான். எனக்கு இது தாங்கமுடியாத அதிர்ச்சி. எவ்வளவோ தருணங்களில் எனது ஆதர்சமாக இருந்தவன். பள்ளிப்பருவத்திலிருந்து தொடரும் மிக நீண்ட கால நட்பு. அமெரிக்காவில் எனது உயிரை காப்பாற்றியவன். வாழ்வில் ஒவ்வொரு நொடியிலும் உருவாகும் பிரச்சினைகளையும், ஆபத்துக்களையும் மிக நன்றாக உணர்ந்து அவற்றை கையாளும் அபாரமான திறன் கொண்டவன். வன்னியில் கொடும் யுத்தத்திலும், குடிப்ரவேசம் சிகிச்சையிலும், ஆஸ்திரேலிய கடல்பயணத்திலும், அரிசோனா பாலைவனத்திலும் மிக லாவகமாக தப்பிய அவனது வாழ்வு இப்பிடி அற்பமாகத்தான் முடியவேண்டுமா? எனக்கு அவனை செட்டிகுளம் பரியாரியிடம் அழைத்துச்செல்லும்போது அவன் சொன்ன வாசகங்கள் நினைவுக்கு வந்தன.
“நாம் அழைத்தால் மட்டுமே மரணம் எம்மை மின்னலைப்போல வந்து அணைத்துக்கொள்ளும்.” இப்போது அவனுக்கு சாவை அழைக்க எந்த தேவையும் இருந்திருக்காது. ஆனால், சங்கானை சந்தியில் உள்ள சாப்பாட்டுக்கடையில் அன்று காலையுணவு உண்டுகொண்டிருந்த வேளையிலே செந்தூரன் தொண்டையில் புட்டு விக்கித்தான் இறந்துபோனானாம். என்னைப்பொறுத்தவரை இது மிகவும் அநியாயமான சாவு.
காலைப்பொழுதில் அவனது வீட்டுக்கு சென்றிருந்தபோது அவனது தாய் தகப்பனும், மனுசியும் நின்றிருந்தனர். நான் என்னை அறிமுகப்படுத்திக்கொண்டேன். மனுசி எவ்வித பதிலும் சொல்லாமல் சடாரென்று முகத்தைத் திருப்பியபடி உள்ளே போனாள். அவனுக்கு இன்னும் குழந்தைகள் எதுவும் இல்லை என்று புரிந்தது. நான் அவனது திறமைகளையும், எனக்கு அமெரிக்காவில் உயிர்கொடுத்த சம்பவத்தையும் விரிவாக விளக்கிக்கொண்டிருந்தேன். எனக்கு உண்மையிலேயே கண்கள் கலங்கிப்போயிருந்தன.
“இவன் வீட்டுக்கும் பிரியோசனப்பட்டதில்ல; மனுஷிக்கும் பிரியோசனப்பட்டதில்ல; போதாக்குறைக்கு காணியையும் வித்து ஊர்ல கடனையும் வச்சிட்டு உருப்படாம போய் தொலைஞ்சிட்டுது மூதேவி!”
முற்றத்தில் பலமாக காறித்துப்பினார் தகப்பன். அவனது முழு வாழ்வின் மீதும் துப்பப்பட்ட எச்சில் அது. இனி எப்படிக்கழுவினாலும் ஒருகாலத்திலும் அவன்மீது விழுந்த அந்த எச்சிலை கழுவமுடியாது. அவரது முகம் முழுவதும் கசப்பும் வெறுப்பும் பரவி விகாரமாக மாறியிருந்தது. எனக்கும் அவனுக்குமான நீண்டகால சிநேகிதம் தொடர்பான கதைகள் அங்கு எவருக்கும் தேவைப்படவில்லை. விதியுடனான சூதாட்டத்தில் தோற்றுவிட்டால் அதனிடம் ஒரு துளியேனும் கருணையை எதிர்பார்க்கமுடியாது போலும்.
மனதில் உயர்ந்துநின்ற ஒரு விம்பம் சடாரென்று தாக்கப்பட்டதான ஒரு உணர்வு எனக்குள். சாசகமும், அனுபவமும் நிரம்பிய நாற்பத்திரெண்டு வருட வாழ்வுக்கு வெறும் ஒரேயொரு பொழிப்புரைதானா? மனதுக்குள் கசப்பும், துயரமும் பரவத்தொடங்கின. எவரிடமும் சொல்லிக்கொள்ளாமல் வீட்டை விட்டு வெளியேறி வீதியில் இறங்கி நடக்க ஆரம்பித்தேன்.
—முடிந்தது—
- குருட்ஷேத்திரம் 5 (விதுரரின் தராசு என்றும் நியாயத்தின் பக்கமே சாய்ந்தது)
- விருட்சம் 117வது இதழ்
- அம்மாவின் அந்தரங்கம்
- இந்திய இரயில்தொடர் எஞ்சின்கள் நீரக வாயு [Hydrogen Fuel-Based] எரிசக்தி மூலம் இயங்கத் தொழில் நுணுக்க வளர்ச்சி
- நாயென்பது நாய் மட்டுமல்ல
- தப்பிப்பிழைத்தவன்
- ஆப்கானிஸ்தானின் முதல் பெண் தெருக் கலைஞரான ஷம்ஸியா ஹசானி
- படித்தோம் சொல்கின்றோம் : மக்கத்துச்சால்வை மண்ணும் மக்களும் சௌந்தர்ய உபாசகரின் எளிமையான வாழ்வை பேசும் சிறப்பு மலர்
- ஜென்
- குருட்ஷேத்திரம் 6 (பேய்களின் புகலிடமாய் இருந்தது சகுனியின் மனம்)
- ஓலைத்துடிப்புகள்
- இறுதிப் படியிலிருந்து – மாத்ரி
- இறுதிப் படியிலிருந்து – சகுனி
- குருட்ஷேத்திரம் 4 (அறத்தின் குரலை சூதன் என்று ஒதுக்கப் பார்த்தார்கள்)
- தூங்காமல் தூங்கி…
- பாகற்காய் விற்க வந்த சிறுமிகள்
- ஏப்பம்