முருகபூபதி
பல வருடங்களுக்கு முன்னர் ஈழத்தின் மூத்த எழுத்தாளர் செ. கணேசலிங்கனின் மண்ணும் மக்களும் என்ற நாவல் வெளிவந்தது. அந்த நாவலை, அது அதிதீவிரவாதம் பேசுகிறது என்ற காரணத்தினால் தடைசெய்தார்கள்.
சில வருடங்களுக்கு முன்னர் ஈழத்தின் மற்றும் ஒரு இலக்கிய ஆளுமை எஸ். எல். எம். ஹனீபா எழுதிய மக்கத்துச்சால்வை என்ற கதைத்தொகுப்பு வெளியானது. ஹனீபாவின் எழுத்துக்களை பிடிக்காத சில அதிமேதைகள் அவரை கிறுக்கன் என்று வர்ணித்தனர்.
அதற்கு அவர், “ நான் கிறுக்கன் எண்டா, எதுக்கடா என்னுடைய எழுத்துக்களை படிக்காங்கள் … ? “ என்று எதிர்க்கேள்வி போட்டவர்.
மகாகவி பாரதியைக்கூட அவன் வாழ்ந்த காலத்தில் கிறுக்கன் என்றுதான் சிலர் அழைத்தார்கள். எங்கள் புகலிட நாட்டில் ஒரு கவிஞர் தனக்கு கிறுக்கு பாரதி என்றே புனைபெயரும் வைத்து, அதனையே தனது மின்னஞ்சல் முகவரியுமாக்கியிருக்கிறார்.
எனவே கிறுக்கு என்பது மோசமான சொல் அல்ல.
எஸ். எல். எம். ஹனீபா அவர்களின் வாழ்வையும் பணிகளையும் விரிவாகப் பதிவுசெய்யும் மக்கத்துச்சால்வை மண்ணும் மக்களும் சிறப்பு மலர், இந்த கொரோனோ காலத்திலும் எப்படியே விமானம் ஏறி, பசுபிக் சமுத்திரத்தையும் கடந்து, அவுஸ்திரேலியாவில் எனது வீட்டு வாசலை வந்தடைந்துவிட்டது.
அனுப்பிவைத்த மலரின் தொகுப்பாளரான மக்கத்துச்சால்வை வாசகர் வட்டத்தின் தலைவர் எழுத்தாளர் ஓட்டமாவடி அறபாத் அவர்களுக்கும், மலர் கிடைத்த தகவலை தாமதமின்றி மின்னஞ்சல் வாயிலாக தெரிவித்துவிட்டேன்.
இதில் ஒரு ஒற்றுமையையும் என்னால் அவதானிக்க முடிந்தது.
ஹனீபாவையும் அறபாத்தையும் நான் முதல் முதலில் சந்தித்தது 2010 டிசம்பரில் கிழக்கிலங்கையில்தான். நான் எனது இலக்கிய நண்பர்களுடன் 2011 ஜனவரியில் இணைந்து கொழும்பில் நடத்திய சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டுக்கான தகவல் அமர்வு நிகழ்ச்சிகளுக்காக இவர்களது வாழ்விடங்களுக்கு சென்றவேளையில்தான் அந்த முதல் சந்திப்பு நிகழ்ந்தது.
அதன்பின்னர் அறபாத்தை சந்திக்க சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. எனினும் ஹனீபாவை கடந்த 2019 இல் கிளிநொச்சியில் நடந்த 49 ஆவது இலக்கிய சந்திப்பில் காணமுடிந்தது. அந்த இரண்டு நாட்களும் மறக்கமுடியாத தருணங்கள். எனது நினைவறையில் சேமித்து வைத்துள்ளேன்.
எம்மத்தியில் நன்கு அறியப்பட்ட சில எழுத்தாளர்கள், அவர்களது பூர்வீக ஊரின் பெயரால் அல்லது அவர்கள் எழுதிப்புகழ்பெற்ற புத்தகத்தின் பெயரால் பிரபல்யமாகியிருப்பர்.
ஒரு கூடைக்கொழுந்து எனச்சொன்னவுடன் எமக்கு மலையக மூத்த படைப்பாளி என். எஸ். எம். இராமையா நினைவுக்கு வருவாரே, அதேபோன்று மக்கத்துச்சால்வை என்றவுடன் ஹனீபாதான் நினைவுக்கு வருவார்.
ஜெயமோகனின் விஷ்ணுபுரம் வாசகர் வட்டம், அவர் எழுதிய விஷ்ணுபுரம் நாவல் அதிகம் பேசப்பட்டதன் விளைவால் உருவானதுபோன்று, ஹனீபாவின் மக்கத்துச்சால்வை கதைத்தொகுதியினால் கிழக்கிலங்கையில் மக்கத்துச்சால்வை வாசகர் வட்டம் உருவாகியிருக்கிறது.
இந்த வாசகர் வட்டம் ஹனீபாவுக்காகவோ , அவரது புகழ் பரப்புவதற்காகவோ மாத்திரம் தோன்றவில்லை என்பதை இம்மலரின் முன்னுரை நம்பிக்கையின் நிழல் என்ற தலைப்பில் தரும் தகவல்கள் தெரிவித்துள்ளன.
இந்த வாசகர் வட்டம் சில இலக்கிய முயற்சிகளை முன்னெடுத்திருக்கிறது. அதில் ஒன்று இந்த சிறப்பு மலர்.
“ உனது சுயம் உனக்கே சொந்தம்… அன்பாக சக மனிதனை மதித்து வாழ்வோம். அடக்குமுறைக்கும் ஆணவத்துக்கும் பயந்து வாழ்வதைவிட அதை எதிர்த்து மடிதல் மேலானது “ என்ற எஸ். எல். எம். ஹனீபாவின் கூற்றோடு, அவர் தாவரங்களை காதலோடு நேசிக்கும் வண்ணப்படத்துடன் மலரின் ஆக்கங்கள் ஆரம்பமாகின்றன.
56 ஆக்கங்களுடன், மக்கத்துச்சால்வை வாசகர் வட்டத்தின் செயலாளர் எஸ். நளீமின் அன்பும் நன்றியும் குறிப்புகளுடன் இம்மலர் 220 பக்கங்களைக்கொண்டிருக்கிறது.
தான் வாழும் பிரதேசத்து மக்களின் மொழியைப்பேசி, அம்மக்களின் ஆத்மாவை தனது படைப்புகளில் பிரதிபலித்துக்கொண்டு இயங்கிவரும் ஹனீபாவின் இயல்புகளை சில ஆக்கங்கள் உணர்வுபூர்வமாகச் சொல்கின்றன.
மீராவோடை மண்ணில் சட்டி பானைத் தெருவில் 1946 ஆம் ஆண்டு கடலை நம்பி வாழ்ந்த தந்தைக்கும் மண்ணை நம்பி வாழ்ந்த தாய்க்கும் மூன்றாவது குழந்தையாக பிறந்திருக்கும் ஹனீபாவின் ஆரம்பக்கல்வி தொடக்கம், உயர் கல்வி, மற்றும் தொழில்துறை, பணியாற்றிய பிரதேசங்கள், இலக்கிய மற்றும் அரசியல், சமூக வாழ்க்கை பற்றி அறபாத் விரிவாகவே எழுதியிருக்கிறார்.
இந்தப்பதிவின் ஊடாக ஹனீபா பற்றிய முழுமையான தரிசனம் வாசகர்களுக்கு கிடைக்கிறது.
பேராசிரியர் எம். ஏ. நுஃமான் எழுதியிருக்கும் மநோரதியமும் யதார்த்தமும் என்ற ஹனீபாவின் சிறுகதைகள் குறித்த வாசிப்பு அனுபவம் வாசகரையும் உடன் அழைத்துச்செல்கிறது.
ஹனீபாவின் மக்கத்துச்சால்வை, அவளும் ஒரு பாற்கடல் ஆகிய தொகுதிகளில் இடம்பெற்ற கதைகள் பேசப்படுகின்றன.
நுஃமான், மிகவும் ஆழமாகவே இந்த ஆக்கத்தை எழுதியிருப்பது புலனாகிறது. நுனிப்புல் மேயாமல், ஹனீபாவின் படைப்பூக்கமும் படைப்பு மொழியும் எத்தகையது..? என்பதை விபரித்திருக்கின்றார்.
இக்கட்டுரைக்காக நுஃமான் செலவிட்டுள்ள நேரம் மிகவும் பெறுமதியானது என்றே சொல்லத்தோன்றுகிறது. எதிர்காலத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் எவரேனும் ஹனீபாவின் சிறுகதைகள் குறித்து MPhil ஆய்வு மேற்கொள்ள முன்வந்தால், நுஃமானின் இந்த வாசிப்பு அனுபவம் சிறந்த உசாத்துணையாகத் திகழும்.
வேதாந்தி எழுதியிருக்கும் எஸ். எல். எம். என்றொரு மைல்கல், என்ற ஆக்கம், ஹனீபாவின் வடக்கு – கிழக்கு மாகாண சபையின் அற்பாயுள் காலம் பற்றி நாம் அறியாத பல செய்திகளை பேசுகிறது.
“ கரிசல் காட்டுக்கு ஒரு கி. ராஜநாராயணன் என்றால் மட்டக்களப்பு தமிழுக்கு ஒரு எஸ். எல். எம். என்று தயக்கமின்றி சொல்லலாம் “ என்கிறார் மருத்துவர் எம். கே. முருகானந்தன்.
இலங்கைக்கு வருகை தரும் தமிழக எழுத்தாளர்கள் தமது பயணங்கள் பற்றி எழுதுவது அபூர்வம்.
முனைவர் அ. ராமசாமி, தனது முதலாவது பயணத்தில் சந்தித்த ஹனீபாவை மீண்டும் இரண்டாவது பயணத்திலும் சந்திக்கத்தக்கதாக தனது பயண நிகழ்ச்சி நிரலை தயாரித்துக்கொண்டதாக தனது அன்பின் அலைகளால் நிரப்புபவர் எஸ். எல். எம். ஹனீபா என்று தமது ஆக்கத்தை தொடங்குகிறார்.
இவரும் ஹனீபாவின் சில கதைகளை தொட்டுத் தனது வாசிப்பு அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.
“ ஹனீபா, கதைக்கும் விடயங்களின் அருமையும் அதில் காணப்படும் நகைச்சுவைகளும் அவற்றைக்கூறவேண்டியதன் அவசியமும் ஒருங்கே சேரும்போது தான் அடையும் ஆனந்தம் மிக அதிகம் “ என எழுதுகிறார் மு.கா. மு. மன்சூர்.
இவரது அனுபவம்தான் எனக்கும் கிளிநொச்சியில் மீண்டும் ஹனீபாவை சந்தித்தபோது கிட்டியது.
சுந்தரராமசாமி, ஹனீபாவுக்கு எழுதிய கடிதங்களையும் மேலும் சில கடிதங்களையும் மலர் தொகுப்பாளர்கள் தவறவிடாமல் மலரில் இணைத்துள்ளனர்.
என். ஆத்மா, எஸ். ராமகிருஷ்ணன், அஷ்ஷேய்க் எம். டீ. எம். றிஸ்வி, பேராசிரியர் செ. யோகராசா, ஏ. எல். பீர்முகம்மது, ஏ. எம். அப்துல் காதர், எஸ். றமீஸ் பர்ஸான், வி. ஏ. ஜுனைத் , நொயல் நடேசன், ஆபிதீன், ஜவாத்மரைக்கார், இளைய அப்துல்லா, நபீல், சாஜித், சிராஜ் மஸ்ஹ_ர் , அனார், கருணாகரன், டிசே தமிழன், அம்ரிதா ஏயெம், சப்ரி, எம். பௌசர், ஹஸீன், எஸ். நளீம், முருகபூபதி, ஏ.எம். றியாஸ் அகமட், தமயந்தி, சீவகன் பூபாலரட்ணம், இளங்கோ, தேவமுகுந்தன், மல்லியப்பு சந்தி திலகர், தெளிவத்தை ஜோசப், ஜெயமோகன், எச். எம். எம். இத்றீஸ் ஆகியோரின் ஆக்கங்களும் மலருக்கு மெருகூட்டுகின்றன.
அனைத்து ஆக்கங்களும் எஸ். எல். எம். ஹனீபாவின் மனிதநேயப்பண்புகளை நினைவூட்டுவனவாகவும், அவரது நகைச்சுவை உணர்வுகளை பகிர்ந்துகொள்வதாகவும் அமைந்துள்ளன.
அரசியலா …. சமூகமா… இலக்கியமா… குடும்பமா…. இதில் ஒரு எழுத்தாளன் எதனைத் தெரிவுசெய்யவேண்டும்..? என்ற கேள்வியை சுயமதிப்பீட்டுக்குட்படுத்தும் ஆக்கங்களாக சிலரது எழுத்துக்கள் ஹனீபாவின் மொழியிலேயே பேசுகின்றன.
வாழ்வை நாம் எழுதும்போது அதன் இடுக்குகளுக்குள்ளும் சென்று திரும்பவேண்டியிருக்கிறது என்பதையும் ஹனீபாவின் எழுத்துக்கள் அனைத்து தலைமுறை எழுத்தாளர்களுக்கும் சொல்லியிருப்பதும் இம்மலரின் உள்ளடகத்தின் தொனியாகியிருக்கிறது.
மக்கத்துச்சால்வை மண்ணும் மக்களும் சிறப்பு மலர், படைப்பு இலக்கியத்துறையிலும் இயற்கையை நேசிக்கும் பண்பிலும் தன்னை தொடர்ந்து ஈடுபடுத்தி வரும் ஒரு சௌந்தர்ய உபாசகரின் எளிமையான வாழ்வை அதன் உயிர்த்துடிப்போடு பேசுகிறது.
ஹனீபாவின் வாழ்வின் முக்கிய நிகழ்ச்சிகளில் எடுக்கப்பட்ட ஒளிப்படங்களும் மலரைச்சிறப்பிக்கின்றன. அத்துடன் அவரது சில முன்னைய ஆக்கங்களும் மீள் பிரசுரமாகியுள்ளன.
மலரின் பிரதிகளுக்கு:
மக்கத்து சால்வை வாசகர் வட்டம்
No. 159, MPCS Front Road, Mavadichenai, Valaichenai – 30400,
Sri lanka.
- குருட்ஷேத்திரம் 5 (விதுரரின் தராசு என்றும் நியாயத்தின் பக்கமே சாய்ந்தது)
- விருட்சம் 117வது இதழ்
- அம்மாவின் அந்தரங்கம்
- இந்திய இரயில்தொடர் எஞ்சின்கள் நீரக வாயு [Hydrogen Fuel-Based] எரிசக்தி மூலம் இயங்கத் தொழில் நுணுக்க வளர்ச்சி
- நாயென்பது நாய் மட்டுமல்ல
- தப்பிப்பிழைத்தவன்
- ஆப்கானிஸ்தானின் முதல் பெண் தெருக் கலைஞரான ஷம்ஸியா ஹசானி
- படித்தோம் சொல்கின்றோம் : மக்கத்துச்சால்வை மண்ணும் மக்களும் சௌந்தர்ய உபாசகரின் எளிமையான வாழ்வை பேசும் சிறப்பு மலர்
- ஜென்
- குருட்ஷேத்திரம் 6 (பேய்களின் புகலிடமாய் இருந்தது சகுனியின் மனம்)
- ஓலைத்துடிப்புகள்
- இறுதிப் படியிலிருந்து – மாத்ரி
- இறுதிப் படியிலிருந்து – சகுனி
- குருட்ஷேத்திரம் 4 (அறத்தின் குரலை சூதன் என்று ஒதுக்கப் பார்த்தார்கள்)
- தூங்காமல் தூங்கி…
- பாகற்காய் விற்க வந்த சிறுமிகள்
- ஏப்பம்