குமட்டல்

author
0 minutes, 0 seconds Read
This entry is part 7 of 10 in the series 26 செப்டம்பர் 2021

            வேல்விழிமோகன்   

 

அந்த பையன் போன் பண்ண பிறகு என்ன செய்வது என்று யோசித்தபடி கிருஷ்ணன் தன்னுடைய ஸ்கூட்டியை அந்த மரக்கடைக்கு முன்புறமாக நிறுத்தி சிறிது நேரம் யோசித்தான். பிறகு தன்னுடைய மனைவிக்கு போன் செய்து ஏதோ உல்லா..லா..லா.. பாடியபடி அவள் பேசியதும் “இன்னிக்கு என்னா சாப்பாடு..?” என்றான்.

அதற்கு அவள் “வ..வ்வ்வ்..வே..” என்று வைத்துவிட்டாள். இவன் சிரித்தபடி மறுபடி அந்த பையன் ராகவேந்திரா பற்றி யோசித்து “போலாமா.. வேண்டாமா..?” என்று தன்னையே கேட்டுக்கொண்டு பிறகு அதை இரண்டு மணி நேரத்துக்கு ஒத்திப்போட்டு இரண்டு விழயங்களை தீர்மானித்துக் கொண்டான்.

ஒன்று பையனின் கல்யாண விருந்துக்கான இடம் பக்கத்தில்தான். பத்து நிமிட பயணம் ஸ்கூட்டியில். இரண்டாவது ராகவேந்திரா  என்கிற பெயர் தனக்கு பிடிக்கும் என்பதை வைத்து ஆன்மீகத்துக்குள் நுழையாமல் அந்த பையனை பிடிக்கும் என்று எடுத்துக்கொண்டான். இப்போது இவன் சட்டென்று தன்னுடைய வீட்டுக்கு கிளம்பினான். மூன்றாவதாக இன்னொரு தீர்மானம் போட்டுக்கொண்டான். மதியம் போவது என்று முடிவானால் விருந்து சைவமென்றால் குறைவாகவும் அசைவமென்றால் அதிகமாகவும் சாப்பிடவேண்டும் என்று நினைத்துக்கொண்டான். இவனுடைய சாப்பாட்டு விதியில் இவன் கருணை பார்ப்பதில்லை. இது இவன் மனைவிக்கு மட்டும் தெரிந்த ரகசியமாக இருப்பது கூட இவனுக்கு பிடிக்கவில்லை. தான் சாப்பாட்டு விழயத்தில் பின்பற்றும் நவீன யோசனைகளை அல்லது பழமையான சாப்பாட்டு ராமன் பாணி உத்திகளை தன்னை தவிர வேறு யாருக்கும் தெரியக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறான். அப்படி இருந்தும் மனைவி ஒரு சில விழயங்களை கண்டுபிடித்தது இவனுக்கு ஆத்திரத்தை கொடுத்தபோது அதை மறைக்க தூய தமிழில் திருப்பி பதில் சொல்லி தமாசு பண்ண முயன்று அது வெற்றியா.. இல்லையா என்று இப்போது வரையிலும் குழப்பமாகவே இருக்கிறது.

அவன் வீட்டை நெருங்கியபோது நான்காவதாக ஒரு தீர்மானம் போட்டான். மதியம் அந்த விருந்துக்கு போகும் முடிவை தன் மனைவி தீர்மானிக்கட்டும் என்று..

வீடு வந்துவிட்டது. ஒரு குறுகிய சந்தில் நான்கைந்து வீடுகளை தாண்டி மொட்டையடித்தது போல வழவழப்பான கிரானைட் கற்களின் அலங்கரிப்பில் மெல்லிதான பழுத்த கருப்பு நிறத்தில் வீடு முழுக்க வெளிப்புறம் எப்போதும் போல தெரியும் அவனுக்கான அந்த அழகில் ஒரு நொடி அனுபவித்து பிறகு உள்ளே நுழைந்து வண்டியை ஒரு ஓரமாக நிறுத்திவிட்டு மூடிய கேட்டருகே நடந்து சென்று தானாக திறந்து உள்ளே நுழைந்தபோது மணக்க மணக்க வெளியே வந்தவளை கண்டுக்கொள்ளாமல் தன்னுடைய அறைக்கு போனான் அவன்..

அப்போதுதான் அந்த அறையில் தன்னுடைய உடலை கட்டிலின் மீது கிடத்தி சிறிது நேரம் படுத்திருந்துவிட்டு அலுப்புடன் வெளியே வந்த அவன் மனைவி அவனை பின்தொடர்ந்து அவன் கட்டிலின் மீது அப்படியே விழுந்ததும் அவன் முகத்தை பார்த்தவாறு “என்னாச்சு அய்யாவுக்கு..?”

“கோவம்..”

“ஏன்..?”

“நீ அழகு பழிச்சதுக்கு..” என்றவன் அவளுடைய திறந்த இடுப்பை பார்த்தவாறு “பக்கத்துல வந்து படுத்துக்கிறது..?”

“முடியாது..”

“நான் உன்னைய கெடுக்கமாட்டேன்..”

“நான் ஏற்கனவே கெட்டுப்போனவதான்..”

“என்னால..?”

“ஆமா..”

“நான் இப்ப அந்த மூடுல இல்லை. எனக்கு ஒரு விழயம் தெரிஞ்சா போதும். அதாவது மதியம் சாப்பாட்டுக்கு வெளியே போகலாமுன்னு..”

“போங்க..”

“நீயும் வர்றே..”

“முடியாது..” என்றவள் வாய்க்குள் நாக்கை சுழற்றியபடி ஒரு வித சிரிப்புடன் பக்கத்தில் உட்கார்ந்தபோது இவன் மறுபடியும் அவளின் இடுப்பை பார்த்து “என் மேல எனக்கு நம்பிக்கையிருக்குது..”

“அப்படியா..?”

“உன்னைய தொடமாட்டேன்னு..”

“நல்ல விழயம்தான்..”

“ஆனா ஒன்னு தெரியனும்..”

“சொல்லுங்க..”

“ஒரு சப்பாத்தி வைச்சா அதுக்கு தொட்டுக்க எது புடிக்கும் எனக்கு..?”

“முக்கடல குருமா..”

“களி புடிக்குமா எனக்கு..?”

“இல்ல..”

“தயிர்..?”

“இல்ல..”

“பால்..?”

“புடிக்கும்.. ஆனா மஞ்சா கலக்கனும்.. வெல்லம் போடனும். அப்பறம்.. ம்..” சற்று யோசித்து “அந்த வெல்லம் பனை வெல்லமா இருக்கனும்..”

“எனக்கு புடுச்ச சாப்பாடு..?” என்று அவன் கேட்டபோது “கல்யாணமாகி ரண்டு வருசம் ஆகுது.. டெஸ்ட் பண்ணறீங்களா..?”

“இருக்கலாம்..”

“கேள்விய கேளுங்க..”

“கேட்டுட்டேனே.. எனக்கு புடுச்ச சாப்பாடு..?”

“சாப்பாடு புடிக்காது. சப்பாத்தி புடிக்கும். பெரிய ரவ உப்புமா புடிக்கும்.. அப்பறம் காய் சோறு புடிக்கும்.. அப்பறமா வெந்தய கீரக்குழம்பு புடிக்கும்.. ஆனா..?”

“ஆனா..?”

“இதெல்லாம் விட உங்களுக்கு ரொம்ப புடுச்சுது ஒண்ணு இருக்குது..”

“சொல்லு..”

“அதை எப்படி சொல்ல..?” அவனருகில் வந்து அவன் முகத்தை வருடியபடி “வர வர அதிகமா ஏப்பம் வருது உங்களுக்கு.. காத்து வந்துட்டே இருக்குது. நிறைய சாப்புடறீங்க.. சந்தோசம். ஆனா ஒரு சில விசயத்த ஏத்துக்க முடியல.. உதாரணமா சிக்கன் காலை கடிக்கறது.. ஐஸ் மீனை வாங்கிட்டு வந்து வறுத்து பச்ச மொளகாய கடிச்சுட்டு சாப்புடறது.. இனிப்பு எதுவுமே எடுத்துக்காம ஆனா அந்த ரசகுல்லா கெடச்சா அப்படியே முழுங்கறது.. அப்பறமா வெளில பந்தில உக்காந்தா வேகமா பொதக்..பொதக்குன்னு சாப்பிடறது.. கடைசியா நான் சொன்னேன் பாருங்க.. உங்களுக்கு ரொம்ப புடுச்சது ஒண்ணு இருக்குதுன்னு..”

“ஆமா..”

“அதை சுத்தமா என்னால ஏத்துக்க முடியல..”

“என்னாது..?” என்று அவளது முகத்தையே பார்த்தபோது அவன் கை அவளது இடுப்பில் படர்வதை அவள் உணர்ந்து அந்த கையை லேசாக தள்ளிவிட்டு அவள் மௌனமாக இருப்பதை கவனித்து “என்னாது..? சீக்கரம் சொல்லு..”

“உங்ககிட்ட ஒரு விதமான வாசன வருது சில சமயம்..”

“எப்ப..?”

“நீங்க நைட்டுக்கு வீட்டுக்கு வரும்போது..”

“நான் குடிக்கறதில்லை..”

“அதில்லை..”

“பின்ன..?”

“அந்த வாசன ரொம்ப அருவருப்பா இருக்குது.. வாந்தி வர்ற மாதிரி..” என்றபோது அவன் அமைதியாக இருந்தான். அவளது இடுப்பிலிருந்து கையை எடுத்து தன்னுடைய தலைக்கு அடியில் வைத்துக்கொண்டு “அது என்னவா இருக்கும்..?”

“அது ஒரு நான்வெஜ்.. சிக்கன் இல்ல.. மட்டன் இல்ல.. மாடு.. அல்லது பன்னி..?” என்றபோது இவன் அமைதியாக மறுபடியும் “அடுத்து..?”

“ஆனா அதுவும் இல்ல.. அப்படீன்னா என்னவா இருக்கும்..?”

“அதுவும் இல்லைன்னா..?”

“மாடோ.. பன்னியோ இல்ல. இந்த ஊர்ல ரண்டுமே சாதாரணமா கிடைக்குது. சாயந்தர நேரத்துல கட வீதில.. கூட்டமா இருக்கற எடத்துல ரண்டையும் எண்ணைல போட்டு செவப்பா பிளாஸ்டிக் பேப்பர்ல வச்சு.. உவ்வே.. வே..” என்றபோது இவன் ஆத்திரமாக “அப்ப ஒவ்வொரு முறையும் அதுக்குதான் அந்த உவ்வேவா..?” என்று கத்தியபோது அவள் இயல்பாக “அதில்லை.. வந்து.. ம்.. நீங்க பேசினப்போ போன்ல கூட அந்த வாசன வந்த மாதிரி.. உம்..” என்று இழுத்தபோது அவன் அவளையே பார்த்தான்.

“அப்ப நான் நாத்தம் புடுச்சவன்..?”

“இல்ல..”

“என்னதான் சொல்ல வர்றே..?”

“அந்த வாசனைக்கு காரணம் மாடோ.. பன்னியோ இல்ல..”

“அப்படீன்னா..?”

“ஒரு யூகமாதான் சொல்லறேன்.. அதை தாண்டி வேற ஏதோ.. நீங்க ஏன் நான்வெஜ் சாப்படுறதை நிறுத்திடக்கூடாது..?”

“அது பழக்கமானது. அதில்லாம நான்தான் அதை பத்தி முடிவெடுக்கனும்..” என்றவன் வேறு பக்கமாக திரும்பி படுத்து அவள் மடி மீது காலை போட்டு “உனக்கு புடிக்கலைன்னா நீ கறி செய்யாத..”

“நான் அப்படி சொல்லலை..”

“சரி.. நான் சாப்புடலை இனிமே வீட்ல..” என்றபோது லேசாக சிரித்தான். அவன் சிரிப்பு இவளுக்கு பிடிக்காமல் “எடுத்தாந்து கொடுத்தா செஞ்சு தர்றேன். இல்லைன்னா எனக்கென்னா..?” என்று அவன் கால்களை தள்ளிவிட்டு எழுந்து வெளியே போனபோது இவன் அவளின் முதுகுக்கு கீழே பார்த்து ஏதோ முனகுவதை கேட்டு அவள் திரும்பி பார்த்தபோது “ஒண்ணுமில்லை..” என்றான்..

“எனக்கு காதுல விழுந்தது..”

“என்னான்னு..?”

“சாப்பாடு என்னோட ரகசியமுன்னு சொன்னது..”

“ஆனா அந்த ரகசியத்த கண்டுபுடுச்சிட்டியே..?”

“எதுன்னு தெரியலையே..?”

“தெரியலைன்னாலும் ஏதோ வித்தியாசமா சாப்பிடறான்னு கண்டுபுடுச்சது பெரிய விசயமாச்சே..” என்றபோது அவன் அவளுடைய கண்களை பார்த்து “ஆனா அது எதுன்னு உன்னால கண்டுபுடிக்கவே முடியாது.. காரணம் அந்த விசயத்துல நான் மகா முரடன்.. பாதி கண்டுபுடுச்சதுக்காக உனக்கு ஒரு ஷொட்டு.. ஆனா மீதி என்னோட சொந்த விழயம் அப்படீங்கறதால அது என்னோட போகட்டும்.. அந்த மீதிக்கு எனக்கு நானே என்னைய பாராட்டிக்கறேன்..”

அவள் அவனையே பார்த்தாள். பிறகு திரும்பி மெதுவாக நடந்தாள். அவள் முதுகில் அவனை பற்றிய வெறுப்பு தெரிந்தது. அவள் முகத்தில் குமட்டலும் அந்த வாசனைக்கான அலர்ஜியும் தெரிந்தபோது இவனுக்கு அது தெரிந்தது கூட வருத்தமாக இருந்த்து.

அவன் அவளுக்காக காத்திருந்தான். அவள் ஏறக்குறைய பத்து நிமிடம் கழித்து உள்ளே எட்டி பார்த்தபோது அவன் மரக்கட்டையாக கிடப்பதை பார்த்து அதே சமயம் அவன் கண்களை அவளை ஊடுருவதை பார்த்து “கேள்வி கேளு..”

அவள் அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள். அவனே சொன்னான் அவளை பார்த்து.. “நீ இப்படிதான் கேக்கறே உன் கண்ணால..” என்று நிறுத்தி “இப்பவும் அதை சாப்புட்டு வந்தாச்சான்னு..?”

                              0000

அப்படியே படுத்திருந்தவன் அவளை தொடர்ந்து கவனிப்பதை விட்டு வேறு பக்கமாக திரும்பி படுத்துக்கொண்டபோது மதியத்துக்கு மேல் எத்தனை மணிக்கு அந்த விருந்து மண்டபத்துக்கு போகலாம் என்று யோசித்தபோது அவள் அங்கிருந்து அகலுவதை மோப்பம் பிடித்துக்கொண்டு மறுபடியும் திரும்பி பார்த்தபோது அவள் அங்கேயே இருப்பதை கண்டு ஆச்சரியப்பட்டு “இங்கேதான் இருக்கியா..?” என்று சிரித்தான்.

அவள் அவனுக்கு பின்புறமாக அந்த சன்னல் வழியே வெளியே தெரியும் அந்த கோவிலின் மதில் சுவரை கவனித்தாள். பிறகு இடதுபுறம் அந்த சுவரின் ஆணியில் தொங்கும் அவனுடைய சட்டையை கவனித்தாள். அந்த சட்டையில் இருந்த நீளமான பாக்கெட்.. பிறகு காலரின் வளைவு.. தொங்கும் முழுக்கை மடிப்பு.. என்று இவனின் அடையாளமாக இருந்த அந்த சட்டையில் கூட அந்த வாசனை வருவது போலிருந்தது. உட்புறம் குழந்தை அழும் சத்தம். பக்கத்து வீட்டில் காலையிலிருந்து சண்டை. வாய் வார்த்தை வளர்ந்துக்கொண்டே போவது தெரிந்து இவள் “த்சொ..” என்று சலித்துக்கொண்டு இவனை பார்த்து “குழந்தை உள்ளாற தூங்கிட்டிருக்குது. சத்தம் போடாம பேசுங்கோ..”

“நான் இப்ப ஏதும் பேச விரும்பலை..”

“ஏதோ சொன்னீங்களே.. வெளிய சாப்பிட போகலாமுன்னு..”

“ஆமா.. ஆனா குழந்த தூங்குதே..”

“அது பச்ச புள்ள.. தூக்கிட்டு வெளிய போகப்படாது. எங்க விசேசம்..?”

“நேரு நகர்.. அங்க பூந்தோட்டம் பக்கம் அண்ணாமலை மண்டபம்..”

“யாருக்கு விசேசம்..?”

“ஒரு பையனுக்கு..”

“பையன்..?”

“ஆமா. ஆபிஸ் பக்கத்துல மீன் வளக்கற கட வச்சிருக்கான்.. வித விதமா.. கண்ணாடி கூண்டுக்குள்ளாற.. நமக்கு கூட சும்மாவே ஒண்ணு தர்றதா சொன்னான். நான்தான் வேணாமுன்னு சொல்லிட்டேன்..”

“அவன் எப்புடி பழக்கம்..?”

“சொன்னேனே.. பக்கத்துல இருக்கான்னு.. நாங்க ரண்டு பேரும் வேலையில்லாத நேரத்துல பின்னாடி போயிட்டு டீ குடிப்போம். ஊர் விசயம் பேசுவோம். அவன் சின்ன பையன்தான். அந்த கடைல வேல செய்யறதுக்கு வந்தவன். நடுவுல நாலு மாசம் நின்னுட்டான். ஓனரு ஏதோ சொல்லிட்டான்னு. பிறகு நான்தான் மறுபடியும் வரவழைச்சேன் ஓனருக்கிட்ட பேசி..”

“அதுவரைக்கும்..?”

“ஓனரேதான் பாத்துக்கிட்டான். ஆள் கிடைக்கலை. சம்பளம் கம்மியா தர்றாங்கன்னுதான் நின்னுட்டான் பையன். இன்னிக்கு அவனுக்குதான் ரிஷப்சன். கல்யாணம் விடிகாலைல கோயில்ல முடிஞ்சுருச்சு. நாலு மணிக்கு தாலி கட்டியிருப்பான். சொந்தக்காரங்க மட்டும் இருந்திருப்பாங்க. மதியம் போகலாமா வேணாமான்னு யோசனை செஞ்சுட்டு இருக்கேன்..” என்றபோது அவன் முகம் மாறிக்கொண்டே இருந்தது அவ்வபோது. இவளை பார்த்து செய்த புன்னகை ஏதோ நடப்பது போல உணர்த்தியது. அவன் அப்போது வயிற்றை பிடித்துக்கொண்டான். பிறகு ஓங்காரமாக சத்தம் போட்டபடி சமாளிப்பதற்குள் பீரிட்டு வெளியே வந்தது வாந்தி. தன் மீதும் படுக்கையின் மீதும் சிதறிக்கொண்டு மறுபடியும் “உவ்வே.. உவ்வே..” என்றபோது படுக்கையில் ஒரு பக்கம் முழுக்க நனைத்து தொடர்ந்து விநோதமாக “ஆவ்வ்…” என்றபோது அவள் மூக்கை பிடித்துகொண்டாள். அவன் முகம் முழுக்க இப்போது ஈரமாகி முடியாமல் மறுபடியும் நாக்கை வெளியே தள்ளியபோது அவள் குழந்தை அழுவதை உணர்ந்து தனது மூக்கை தொடர்ந்து மூடியபடியே அந்த அறையை விட்டு வெளியேறியபோது கதவை மூடிவிட்டு தன்னுடைய குழந்தை இருக்கும் பின்னறைக்கு சென்று தூளியில் படுத்தபடி மெல்லிதாக கத்திக்கொண்டிருந்த குழந்தையை வேகமாக சென்று வாரி அணைத்துக்கொண்டபோது குழந்தையின் அழுகுரல் நின்று தொடர்ந்து அவனுடைய சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது. அவள் தூளிக்கு அருகில் அமர்ந்து தன்னுடைய ரவிக்கையின் முன்பக்கம் விலக்கி இறுக்கமாக இருந்த பொத்தான்களை தளர்த்தி குழந்தையை கைகளால் சேர்த்துக்கொண்டபோது அந்த பால் தரும் உணர்வில் அந்த வாசனையை நீக்க முயன்றாள்.

அவளுக்கு அப்படி செய்ய முயன்றாலும் முகத்திலும் உடம்பிலும் அந்த வாசனை வந்து ஒட்டிக்கொண்ட மாதிரி உணர்ந்தபோது வேதனையில் குழந்தையின் முதுகை தடவியது கைகள். இப்போது சத்தம் ஏதுமில்லை. ஒரு சில வினாடிகள் அமைதியாக போன பிறகு அவன் இருந்த அறையின் கழிவறையில் குழாயில் தண்ணீர் இறங்கும் சத்தம் கேட்டது. இவளுக்கு இப்போது அந்த படுக்கையை சுத்தம் செய்ய வேண்டுமே என்கிற கவலை ஏற்பட்டது. அவளையறியாமல் “த்சொ..” என்று சொல்லிக்கொண்டாள். குழந்தை பால் குடிக்காமல் வாயை வைத்தவாறே தூங்கிவிட்டதை உணர்ந்து அப்படியே அமர்ந்திருந்தாள். அந்த குழந்தையின் மென்மையும் அதன் பெருமூச்சும் அவளை கொஞ்சம் சாந்தப்படுத்தியது. தன்னுடைய இரண்டு கைகளாலும் அதை இன்னும் அணைத்துக்கொண்டு கன்னத்தில் மென்மையாக மாறி மாறி முத்தம் கொடுத்துக்கொண்டாள். அது சிணுங்கியபோது அதன் உதடுகளில் முத்தம் கொடுத்தாள். குழந்தையின் பெருமூச்சு தன் முகத்தின் மீது பட்டபோது அடித்து பால் வாசனை அவளை இன்னும் இதமாக்கியது. அந்த கெட்ட வாசனையை மறந்துவிட்டது போலிருந்தது. இப்போது குழந்தையின் முதுகை தடவிக்கொண்டிருந்த கை லேசாக தளர்ந்து குழந்தையின் தலையை தடவியது. அந்த புசுபுசுப்பான மென்மையான முடிகள் அவளது விரல்களுக்குள் அலைந்தபோது அவளுக்கு தானும் அந்த குழந்தையின் உலகத்துக்குள் குழந்தையாக ஆகிவிட்ட மாதிரி தோன்றியது.

இப்போது தொடர்ந்து தண்ணீர் கொட்டும் சத்தமும் அவன் தொண்டையை கனைக்கும் சத்தமும் கேட்டது. பிறகு நிதானமாகி துணியை அலைக்கும் சத்தம்.. வாளியை இழுக்கும் சத்தம்.. மறுபடியும் துணியை அலைக்கும் சத்தம்.. பிறகு ஒன்றிண்டு நிமிடங்கள் கழிந்து அவன் படுத்திருந்த படுக்கை இழுபடும் சத்தம்.. மறுபடியும் குரலை கனைத்துக்கொள்ளும் சத்தம்.. அவன் உட்புறமாக கதவை தாளிடும் சத்தம்..

இவளுடைய கைகள் தொடர்ந்து குழந்தையை தடவியபோது அந்த அறையின் சத்தமும் தொடர்ந்தது. அவள் குழந்தையோடு சற்று தள்ளி தரையில் தன்னை நகர்த்தி சுவரோடு சேர்ந்து உட்கார்ந்தாள். பிறகு தன்னுடைய கண்களை மூடிக்கொண்டு அந்த சத்தத்திலிருந்து தப்ப முயன்றாள். இப்போது மறுபடியும் பாத்ரூமில் தண்ணீர் கொட்டும் சத்தம் கேட்டது. பிறகு மறுபடி துணியை அலைக்கும் சத்தம். தொடர்ந்து தண்ணீர் கொட்டுவது நின்று ஒரு சில நிமிடங்கள் கழிந்து அறையில் மறுபடியும் அந்த கட்டிலை சரிப்படுத்தும் சத்தம். தரையில் ஈரத்துணியை இழுக்கும் சத்தமும் கேட்டது. அந்த இழுவையில் அவனின் வெட்கமும் இயலாமையும் தெரிந்தது. தனக்குத்தானே அவமானமாக உணர்ந்ததும் தெரிந்தது. இன்னொரு புறம் மனைவி இல்லாத வெறுமையும் ஆறுதலை அவனுக்கு தந்திருப்பதாக இவள் நினைத்துக்கொண்டாள். பிறகு மறுபடி கழிவறை சத்தம்.. கனைக்கிறான். தண்ணீர் கொட்டுகிறது. நிற்கிறது. நடக்கும் சத்தம். கதவு திறக்கிறது. பிறகு வெளிப்புறம் நடக்கும் காலடியோசை. மாடிப்படியில் அந்த காலடியோசை தொடர்கிறது. அவன் சிறிது நேரம் கழித்து இறங்கி வருவது தெரிந்தது. நிதானமாக இவள் இருக்கும் அறைக்கு வந்து எட்டிப்பார்த்து சிரிக்கிறான். அவளிடம் “பினாயில் வாசன வருதா..?” என்கிறான்..

இவள் குழந்தையை பார்த்தபடியே “இல்ல..”

“எனக்கு வருதே..”

“எனக்கு அந்த கெட்ட வாசனைதான் வருது..”

“அது இப்ப இல்லை..”

“எனக்கு வருது.. அந்த வாசனை இல்லைன்னாலும்..” என்றபோது அவன் புரிந்துக்கொண்டு தன்னை வெறுப்புடன் திட்டிக்கொள்வது போல “இந்த மாதிரி ஆகுமுன்னு நினைக்கலை.. அந்த பையன் ஏமாத்திட்டான்..” என்று சொன்னவன் சட்டென்று பேசுவதை நிறுத்திவிட்டு இவளை குறுகுறுப்பாக பார்த்தான். இவள் இப்போது நிமிர்ந்து அவனை நேராக பார்த்துக் கொண்டேயிருக்கும்போது “அப்படி பாக்காத..”

“எந்த பையன்..?” என்றதும் இவன் விழித்து “பையன் இல்ல..ஆளு..”

“எந்த ஆளு..?”

“ம்.. அதாவது..” என்று இழுத்தபோது அவள் லேசாக சிரித்து “அந்த பையன் பேரென்ன..?”

இவன் அமைதியாக இருந்தான். அந்த வாசலை தாண்டி உட்புறமாக வந்து “குழந்தை தூங்குதா..?”

“அந்த பையன் பேரென்ன..?”

குழந்தையின் சிணுங்கல் சத்தம் லேசாக. அவளுடைய மேலுடை தளர்ந்திருப்பதை பார்த்து அவள் உதடுகளின் ஈரத்தை கவனிக்கிறான். சன்னல் வழியாக அடுத்த வீட்டின் சண்டை தொடர்ந்து மெல்லிதாக கேட்கிறது. யாரோ தெருவில் இருமிக்கொண்டே போகிறார்கள். எங்கிருந்தோ இங்கிலீஷ் பாட்டு கேட்கிறது. தண்ணீர் மோட்டார் ஓடும் சத்தம். கீரை விற்கிறவளின் சத்தம். சன்னலோரம் வெயில் தெரிகிறது. அவளுடைய உடம்பிலிருந்து ஏதோ வாசனை.. புதிதாக..

இவன் சிரித்தபடி “வழக்கமா வர்ற சோப்பு வாசனை வரலையே..?” என்று அவளை நோக்கி நகர முயன்றபோது அவள் பார்த்த பார்வையில் அங்கேயே சட்டென்று நின்று அடிக்குரலில் “பயமுறுத்தாத..”

“அந்த பையன் பேரென்ன..?”

“ராகவேந்திரா..”

“இன்னிக்கு அவனுக்கு கல்யாணம்..”

“ஆமா..”

“மதியம் ரிசப்ஷன்..”

“ஆமா..”

“இந்த கேப்புல ஏதோ சாப்புட்டிருக்கே..” என்று ஒத்தையில் பேசியபோது இவன் சந்தோசமாக “இப்படிதான் பேசனும் நீ.. வா.. போன்னு..”

“இது கெடக்குது. அந்த பையன் ஏமாத்திட்டான்னு சொன்னியே.. எப்புடி..?”

“அவன் நைட்டு தாபாக்கு போலாமுன்னு சொன்னான்..”

“உம்..”

“ஆனா போன் பண்ணா எடுக்கலை. காலைல போன் பண்ணிட்டு சாரி கேட்டுட்டு மதியம் சாப்பாட்டுக்கு வந்துடுங்கன்னு சொல்லிட்டு வச்சுட்டான். எனக்கென்னவோ சைவமா இருக்குமோன்னு தோணுது. அப்படியிருந்தா..?” என்று நிறுத்தியவன் அவள் தொரடர்ந்த கண்களால் கேள்வி கேட்பதை கவனித்து “அப்புடி இருந்தா போக வேணாமுன்னு நினைக்கறேன்..”

“அப்படீன்னா சாப்பாடுதான் முக்கியம் உங்களுக்கு..?”

“அப்படியில்லை..”

“அப்படிதான்..”

“அவன் எனக்கு மரியாத தரல. நைட்டு தாபால சாப்புடறதுக்கு ஒரு லிஸ்ட்டே வச்சுருந்தேன். ஆனா நடக்கலையே. காலைல போன் பண்ணப்போ நான் நைட்டுக்கெல்லாம் அவனைய திட்டிக்கிட்டிருந்ததை சொன்னப்ப கூட அதைய காதுல வாங்கிக்காம மதியம் சாப்பாட்டுக்கு வாங்கன்னு ஒத்தையா சொல்லி வச்சுட்டான்” என்றபோது அவள் கண்களில் இவன் மீதான கிண்டலை கவனித்து “அது அவன் தப்பு..” என்றான் உறுதியாக..

“அதனால..?”

“காலைல நம்ம ஆபிச தொறக்காம அத சாப்பிடறதுக்கு ஏற்பாடு பண்ணேன். சாப்புட்டேன். திருப்தியா இருந்துச்சு. சரியா வேகலை போல. அதான் வந்துருச்சு..” என்றவன் “ஆனா அந்த பையன புடிக்கும். ராகவேந்திரா நல்ல பையன். சின்ன பையனா இருந்தாலும் புத்தி அதிகம். நம்ம ஆபிஸ்ல பிரிண்டிங் தொழில பாத்துட்டு என்னைய வேலைக்கு வச்சுக்கோங்கன்னு கேட்டான். நான்தான் வேணாமுன்னு சொல்லிட்டேன். காரணம் அவனுக்கு கத்து கொடுக்கனும். சம்பளம் தரனும். இப்ப வர்றது சரியா இருக்கது. எதுக்கு வம்புன்னு சீக்கரமா கூப்பிட்டுக்கறேன்னு சொல்லியிருக்கேன். வேணாமுன்னு சொன்னீங்களேன்னு கேட்டான். இப்போதைக்கு வேண்டாம்னு சொன்னேன். சிரிச்சுட்டே நீங்க கூப்புடும்போது எனக்கு கல்யாணமாகி குழந்தைங்க ஆகி வேற வேலைக்கு நிறைய சம்பாதிக்க போயிடுவேன்னு சொன்னான். அப்படிதான் அவன் சொன்னா மாதிரியே ஆரம்பமாயிடுச்சு..” என்றவன் அவள் அவன் நடுவில் கனைப்பதை கவனிப்பதை பார்த்து “அந்த ரூம ஏறக்குறைய கழுவிட்டேன். துணிகளையும்.. பெட்டையும்.. தரையையும்.. மேலே காயப்போட்டுட்டேன் அலசி.. உனக்கு எந்த வேலையுமில்ல..”

“நான் வேற செய்யனுமாக்கும்..”

“தப்பு என்னோடது.. நான்தான் செஞ்சாகனும்..” என்றவன் ஒரு வித மென்மையுடன் ரொம்பவும் மெதுவாக “நான் என்ன சாப்பிடறேன்னு கண்டுபுடுச்சுட்டியா..?”

“இல்ல.. நீதான் சொல்லனும்..” என்றபோது இவன் உற்சாகமாகி “இப்படிதான் நீ.. வா.. போன்னு பேசனும்.  என்ன மரியாத வேண்டி கெடக்குது புருசன் பொண்டாட்டிக்குள்ள..”

“என்ன அது..?”

“ஆங்..” என்றவன் அவள் கண்களை நேரடியாக பார்த்து “அது என்னோட ரகசியம்..”

“ஆனா நான் பாதிக்கப்படறேனே..” என்றதும் யோசித்து “உண்மைதான்..”

“முதல்ல அந்த வாசன.. இப்ப வாந்தி.. வீட்ல இருக்கற காத்து கூட கெட்டுப்போறதா எனக்கு தோணுது.. இந்த குழந்தையோட ஆய்ல கூட பால் வாசனைதான் வருது. ஆனா உன்னோட உடம்பு பூராவும் அந்த நாத்தமே. நீ இனிமே தனியா சாப்புடு. தனியா படுத்துக்க. தனியா போ.. வா.. பொண்டாட்டிக்கிட்ட சாப்பாட்டு விழயத்த மறைக்கறவன் புருசனா எதுக்கு இருக்கனும்? நான் எதையாவது சாப்புட்டு உம்மேல வாந்தியெடுக்கட்டா..?” என்றபோது இவன் அப்படியே நட்டு வைத்த மாதிரி நின்றபடி அமைதியாக இருந்தான்.

“என்ன அது..?”

“அதுவா..?”

“நீ சொல்லலைன்னா உன்னைய டாக்டருக்கிட்ட கூட்டிக்கிட்டு போக வேண்டியிருக்கும். வரலைன்னா அத்தோட விட்டிருவேன். ஏதாவது பிரச்சனைன்னா பக்கத்து வீட்ல யாரையாவது கூட்டிக்கிட்டுதான் போகனும் நீ. வழியில.. ஆபிஸ்ல பிரச்சனைன்னா அங்கேயும் யாராவது தெரிஞ்சவங்க கூட்டிக்கிட்டு போனாதான் உண்டு. நானா வரமாட்டேன். கெட்ட பொண்டாட்டின்னு நாலு பேரு சொன்னாலும் அந்த நாலு காலி டப்பாங்கதான்  என்னைய தீர்மானிக்கறவங்களான்னு காறித்துப்பிட்டு போயிடுவேன். நீயே முடிவு பண்ணிக்க..” என்றபடி அவள் குழந்தையை மென்மையாக இரண்டு கைகளாலும் வாரி மறுபடி நிதானமாக அந்த தூளியருகே நகர்ந்து லேசாக எழுந்து முட்டி போட்டவாறே அந்த குழந்தையை தூளியில் கிடத்தியபோது தன்னுடைய முன்புறத்தை அவன் பார்த்துக்கொண்டிருப்பதை அறிந்து தூளியையும் குழந்தையின் தலையையும் சரி செய்து அதே சமயம் இன்னொரு கையால் முந்தானையை இழுத்து விட்டுக்கொண்டு ரவிக்கையின் பொத்தான்களை போட்டுக்கொண்டபோது அவன் அங்கிருந்து அகலுவதை கவனித்தாள்.

அவன் வெளியேறுவது தெரிந்தது. பிறகு ஸ்கூட்டியை உதைக்கும் சத்தம். பிறகு கிளம்பும் சத்தம். இவள் எழுந்து மெல்ல நடந்து வெளியே வந்தபோது அந்த சின்ன கேட் திறந்திருப்பதை கவனித்து படியில் இறங்கி பக்கமாக சென்று கேட்டை மூடிவிட்டு திரும்பும்போது உள்ளே அவனுடைய மொபைல் அடிப்பதை கவனித்து உள்ளே நுழைந்து முன் தாழ்வாரத்தில் தயங்கி நின்று பிறகு கதவை தாளிட்டு குழந்தை இருக்கும் அறைக்குள் நுழைந்து அந்த தூளியின் அருகில் தரையில் உட்கார்ந்து அப்படியே படுத்துக்கொண்டாள்.

பிறகு சட்டென்று எழுந்து இன்னமும் அடித்துக்கொண்டிருந்த அந்த மொபைலின் சத்தம் தன்னுடைய குழந்தையை எழுப்பிவிடுமோ என்கிற வேகத்தில் வேகமாக சென்று அந்த அறைக்குள் நுழைந்தபோது அவன் சொன்ன மாதிரி சுத்தமாகத்தான் இருந்தது. அலமாரியில் இருந்த மொபைலை எடுத்து முதலில் அதனை சைலண்டில் வைத்துவிட்டு யார் என கவனித்தவாறு குழுந்தை இருந்த அறைக்கு திரும்பியபோது அது பெயரில்லாத எண் என்பதை உணர்ந்து அப்படியே விட்டுவிடுகிறாள். பிறகு குழந்தையின் அருகில் சென்று அவனை யோசித்து எப்போது வேண்டுமானாலும் இப்போது வரலாம் என்று நினைத்தவாறே அந்த மொபைலை நோண்டினாள்.

அதில் கூட அந்த வாசனை வந்த மாதிரியிருந்தது. தான் அதிகமாக யோசிக்கிறோமோ என்று நினைத்து ஆனால் நிஜமாகவே அந்த வாசனை வருவது போல உணர்வுடன்  இருக்கிறோம் என்பதை புரிந்து வேகமாக அந்த அழைப்பு பட்டியலில் பார்த்தாள். ரவீந்தர்.. சௌகத்கான் பாய்.. அம்பலம்.. என்கிற பெயர்களுக்கு நடுவே பெயரில்லாத எண்கள் நிறைய இருந்தன. இப்போது ராகா என்கிற பெயரை கவனித்து யோசித்தாள்..

ராகா..?

ராகவேந்தர்.. ராகா.. உம்.. அந்த எண்ணை அழுத்தினாள். “பொதுவாக எம்மனசு தங்கம்..” ஓடியது.. “போட்டியின்னு…” என்று தொடர்ந்து ஒரு கட்டத்தில் நின்றது. “சே..” என்கிற அலுப்புடன் மறுபடியும் அழுத்த முயன்றபோது அதுவே கத்தியபோது சட்டென்று குழந்தையை பார்த்தபடி அழுத்தி காதில் வைத்தபோது “அண்ணா.. நான் மண்டபத்துலதான இருக்கேன். அக்காவோட வந்திருங்கோ.. இன்னும் தியேட்டர் சந்துலதான் இருக்கீங்களா..?” என்றபோது இவள் பதில் சொல்ல எத்தனித்து ஆனால் தன்னிச்சையாக நிறுத்தினாள். மொபைலையே கவனித்தவாறு இருந்தாள். அந்த குரல் வந்தபோது பக்கத்தில் நிறைய கலவையான குரல்களை கவனித்தாள். யாரோ “இருப்பா பேசிட்டிருக்கான். அப்பறம் எடுத்துக்கலாம் வீடியோவ..” என்று சொல்லுவது கேட்டது. இவள் அந்த அழைப்பை தேர்வு செய்து நீக்கிவிட்டு இணையத்தை ஆன் செய்து ஒரு காதை தெருவில் வைத்து குழந்தையை ஒரு கையால் லேசாக மேலும்.. கீழும் ஆட்டிவிட்டு கூகுளை தேடி திறந்து வீடியோவுக்கு போக யூ டியூபை அழுத்தினாள்.

உள்ளே போனதும் தேடுதலில் பட்டியலை தேடி அது திரையில் விரிந்தபோது பிரிண்டிங் டெக்னாலஜி பெயரில் நிறைய ஷார்ட் வீடியோக்கள் இருந்தன. ஜப்பானின் குறிப்பிட்ட அச்சுப்பொறியை பற்றி நிறைய நேரங்களில் திரும்ப திரும்ப பார்க்கப்பட்டதாக வரலாறு சொல்லி அவள் அதன் சிறப்பம்சம் பற்றி அமேசான் தளத்தில் விலைப்பட்டியலோடு முன்னோட்டத்தையும் அடிக்கடி கவனிக்கப்பட்டது தெரிந்து தன்னுடைய விரல்களை தரையில் தேய்த்துக்கொண்டாள். ஒரு சில தமிழ் வார்த்தைகளில் வெங்காய தோசை.. தேங்காய் புட்டு.. பனீர் சிக்கன்.. வாழைக்காய் பஜ்ஜி போன்ற வாசகங்கள் தென்பட்டது. இப்போது ஏதோ சத்தம் கேட்டு இன்னொரு காதை தீட்டிக்கொண்டபோது அந்த சத்தம் அவளை கடந்துபோனதை கவனித்து இப்போது வேகமாக இன்னும் பட்டியலில் தேடினாள்.

ஒரு சில இடங்களில் ஆண்மைக்கு வார்த்தைகள் தென்பட்டு “இத சாப்புடுங்க.. அத சாப்புடுங்க..” என்று கேள்விக்குறி வைத்து உள்ளே இழுத்திருந்தார்கள். ஒரு இடத்தில் பனை ஓலை மாதிரி எதையோ போட்டு “இந்த பழத்த சாப்புடுங்க.. அப்பறம் பாருங்க குதுச்சு விளையாடுவீங்க..” என்று காட்டியிருந்தார்கள். இந்த அந்தரங்கம் இவனுக்கு எதற்கு என்று அவள் நினைத்துக்கொண்டு அதற்கு மேல் தேடுதலில் சலிப்பு ஏற்பட்டபோது அதை தூக்கி வைத்துவிட்டு தன்னுடைய மொபைலை எடுக்கும்போது மீண்டும் அவனுடைய மொபைலை எடுத்து குரோமில் தேடிய தகவலுக்காக ஹிஸ்டரி போய் பார்த்தபோது பெரும்பாலும் அந்த நவீன அச்சுப்பொறிகளை பற்றியே இருந்தது. இதில் குறிப்பிட்ட அச்சு மென்பொருள் இலவச இணைப்பாக இரண்டு வருடங்களுக்கு என்று போட்டு அதே ஜப்பானின் ஆனால் வேறு நிறுவனத்தின் முன்னோட்டத்தில் அதிக கவனம் எடுத்திருந்தான். வழக்கம்போல ஒன்றிரண்டு செய்திகள்.. கிரிக்கெட் ஸ்கோர் தகவல்கள்.. பஜ்ஜி சொஜ்ஜி விழயங்களை தவிர குறிப்பாக தமிழில் தெரிந்த வார்த்தைகள் சமையலுக்கு சம்பந்தப்பட்டவையாக இருந்தன. எண்ணெய் இல்லாமல் சிக்கன் வறுவல் செய்வது எப்படி..? எண்ணெய் இல்லாமல் பிரியாணி செய்வது எப்படி..?

உம்..

அவள் இப்போது மறுபடியும் சத்தம் கேட்டு அந்த சத்தம் அந்த வண்டியின் சத்தமாக இல்லாமலிருப்பதை கவனித்து கொஞ்சம் தளர்ந்து அவனுடைய மொபைலை எடுத்துக்கொண்டு அந்த அறைக்கு போய் அந்த அலமாரியில் அவன் வைத்திருந்த இடத்தில் அந்த மொபைலை வைத்தபோது அந்த பினாயில் வாசனையை மீறி அந்த கெட்ட வாசனை அடித்துக்கொண்டேதான் இருந்தது. அது அவளது கற்பனையாக கூட இருக்கலாம் என்று நினைத்துக்கொண்டாலும் அது நிஜமாகவே காத்தோடு கலந்து அவளது மூக்கில் உறுத்தியபடி உடலுக்குள் நுழைய போராடுவது போல இருந்தது. இப்போது குமட்ட ஆரம்பித்தது. தான் அவனை மாதிரி வாந்தியெடுத்து அந்த அறையை மறுபடியும் அசுத்தம் செய்துவிடக்கூடாது என்கிற மாதிரி வேகமாக வெளியே வந்து குழந்தை இருக்கும் அறைக்கு வந்து குழந்தைக்கு அருகில் அமர்ந்துக்கொண்டாள்.

அப்போது குழந்தை மூத்தா போய் தரையிலிருந்து அந்த வாசனை வந்தபோது அவளுக்கு இதமாக இருந்தது. குழந்தை அந்த ஈரத்துக்கு சிணுங்கியபோது இவள் லேசாக மறுபடி மேலும் கீழும் ஆட்டிவிட்டு குழந்தையின் குரல் அடங்கியதும் அந்த மூத்தாவை பார்த்தபடியே தன்னுடைய மொபைலில் இருந்து ஒரு எண்ணுக்கு அழுத்தினாள். எதிர் குரல் கேட்டதும் “நான்தான்..” என்று சொல்லிவிட்டு “அண்ணாச்சி.. ஒரு சந்தேகம்..?”

“எங்கிட்டேயா..? உன்னை விடவாம்மா..?”

“பரவாயில்லை அண்ணாச்சி.. இது வேற..?”

“சொல்லும்மா..”

“இந்த ஊர்ல தியேட்டர் சந்துன்னு ஏதாவது இருக்கா..?”

“தியேட்டர் சந்தா..?”

“ஆமா..”

“தியேட்டருங்க தெரியும்.. அதென்ன தியேட்டர் சந்து..?” என்று எதிர்பக்கம் சந்தேகமாக கேட்டதும் இவள் அமைதியாகி “சரி.. எத்தனை தியேட்டருங்க இருக்குது..?”

“ஏம்மா..?”

“விவரம் வேணும்..”

“மொத்தம் மூணு.. ஆனா ரண்டுதான் இயங்குது..”

“அந்த ரண்டு..?”

“ஒண்ணு மெயின் ரோட்ல இருக்குது.. இன்னொன்னு பால்கோவா கம்பனி பக்கமா இருக்குது..”

“பால்கோவா கம்பனியா..?”

“அதாவது மாரியம்மன் கோவிலுக்கு போற வழியில.. தாசில்தார் ஆபிசை தாண்டி..”

“அக்கம் பக்கத்துல சந்துங்க இருக்குதா..?”

“புரியலை..”

“எனக்கு விவரம் வேணும்.. அவரு அந்தப்பக்கமா போயிட்டு குடுச்சுட்டு வர்ற மாதிரி தெரியுது.. அதுக்குதான்..” என்றபோது இவளுக்கு கொஞ்சம் வியர்த்திருந்தது. எழுந்து மின்விசிறியை போட்டபடி மீண்டும் குழந்தையருகே உட்கார்ந்தபோது அவர் தொடர்ந்து “அதுக்கு பக்கத்துல நாலஞ்சு சந்து பிரியுதும்மா.. மெயின் ரோட்ல இருக்கற தியேட்டருக்கு கூட ரண்டு பக்கமும் சந்துங்கதான்..”

“இல்லைண்ணா.. அதாவது தியேட்டர் சந்துன்னு ஒரு வார்த்த இருக்குது.. ஏதோ ஒரு இடத்துக்கு.. அது தியேட்டர ஒட்டிதான் இருக்கனும்..”

“அவரு குடிக்கு ஆரம்புச்சுட்டாரா..?”

“ஒரு சந்தேகம்.. அவ்வளவுதான்..”

“குடியா. வேற ஏதாவதா..? ஏதாவது பொம்பள.. கிம்பள..?”

“அப்படி தெரியலை..”

“நல்ல மனுசனாச்சே..?”

“அதுதான் கவலையா இருக்குது..”

“ஏதாவது பிரச்சனையா..?”

“இல்லை.. குடிக்கறது கூட தெரியலை.. ஆனா ஒரு சில சமயம் வாசனையா இருக்குது அவரு மேல..”

“நான் பத்து நிமிசம் கழிச்சு பேசவா..?”

“சரிண்ணே..” என்றவள் மொபைலை வைத்து விட்டு ஒரு துணியால் அந்த மூத்தாவை துடைத்துவிட்டு குழந்தையை லேசாக நிமிர்த்தி இடுப்பிலிருந்து துணியை உருவி அந்த இடத்தில் மென்மையாக துடைத்து அப்படியே காற்றோட்டமாக விட்டு மொபைல் சத்தம் வரும்போது குழந்தை விழித்துக்கொள்ளாமல் இருக்க சத்தத்தை குறைத்து அப்படியே உட்கார்ந்திருந்தபோது சட்டென்று மொபைலில்  இணையத்தை முடுக்கி தியேட்டர் சந்து என்று தமிழில் தட்டி ஊர் பெயரினை கூடவே போட்டு தேடலில் விட்டபோது ஒரு நொடி தயங்கி ஏதேதோ வந்து விழுந்தது. ஒரு இடத்தில் ஊர் பெயரோடு அந்த தியேட்டர் சந்து எழுத்துக்களாக தோன்றி அந்த பத்திரிகை செய்தியை காட்டி “தியேட்டர் சந்துக்கு அருகில் சாக்கடை வீசுவதாக பொதுமக்கள் புகார்..” என்ற செய்தியை படபடப்புடன் திறந்து உள்ளே போனதும் முதலிரண்டு வரிகளை தாண்டி “எல்ஐசி அருகே மூடப்பட்ட தியேட்டரின் பின்புறமாக..” என்பதோடு நிறுத்தி அவள் மொபைலை எடுத்து யாருடைய எண்ணையோ தேடியபோது அந்த ஸ்கூட்டி சத்தம் கேட்டது..

                              0000

கிருஷ்ணன் அவளை பார்த்தவாறு அந்த அறைக்குள் நுழைந்து அந்த அலமாரியில் மொபைலை எடுத்துக்கொண்டு வெளியே வந்து இவள் இருந்த இடத்தை பார்த்து உள்ளே நுழைந்து ஓரமாக இருந்த சேரில் உட்கார்ந்தபோது குழந்தை அசைந்ததை கவனித்து அதை அவள் மறுபடி மேலேயும் கீழேயும் நிதானமாக ஆட்டியதை பார்த்து “எனக்கு ஏதும் போன் வரலையா..?” என்றான் சிறிய குரலில்..

“இல்ல..”

“உம்.. என்ன சாப்பாடு..?”

“சாப்புட்டு வாந்தியெடுக்கறதுக்கா..?”

“அதுக்கெல்லாம் எடுக்கமாட்டேன்..”

“தியேட்டர் பக்கமா சாப்பிடறப்போதான் வாந்தி வருமா உனக்கு..?” என்றபோது அவன் விழித்து சட்டென்று சிரித்து “எந்த தியேட்டர்..?”

“தியேட்டர் சந்து.. எல்ஐசி பக்கமா..”

      “அந்த தியேட்டர மூடிட்டாங்களே..?”

      “அந்த சந்துலதான் சாப்பிடறது நீ.. அந்த நாத்தம் புடுச்ச கறியை..” என்றபோது அவன் மீண்டும் சிரித்து “தப்பு.. ஆனா உன்னோட புத்திசாலித்தனத்தை பாராட்டறேன். நீ என்னைய பத்தி நிறைய யோசிக்கறே.. அநேகமா என்னைய பத்தி யாருக்கிட்டேயோ கேட்டிருக்கே..” என்று தன்னுடைய மொபைலை பார்த்துக்கொண்டன் “சந்தோசம்.. இது புருசன் மேல இருக்கற அக்கறையா எடுத்துக்கறேன்.. தியேட்டர் சந்துல ஒரு கடை இருக்குது. என்னைய மாதிரியே ஒருத்தன் பிரிண்டிங் கடை வச்சிருக்கான். என்னைய விட கஸ்டமருங்க அதிகம். அவன்கிட்ட அடிக்கடி போவேன். ஒரு நிமிசம்..” என்றவன் யோசித்து அவளது முகத்தை பார்த்தபடி “புரிஞ்சது..” என்றான்..

      “என்னா..?”

      “நான் இன்னைக்கு அங்க  இருக்கும்போது அங்க இருக்கறதா ஒருத்தன்கிட்ட சொன்னேன். அது வந்து.. உம்.. அந்த பையன்தான்.. அதாவது ராகவேந்திரா.. அப்படி பாத்தா அவன்கிட்ட பேசியிருக்கே..” என்று சிரித்தவன் “இப்ப கூட இந்த நேரத்துல கூட மாப்ள கோலத்துல அவ்வளவு கூட்டத்திலேயும் பேசியிருப்பான். எம்மேல மரியாத. அவனுக்கு தொழில் கத்துக்கொடுத்து கடைல விட்டுட்டா நல்லா பாத்துக்குவான். நாணயமானவன். அவன்கிட்ட எனக்கு புடுச்சுதே சுறுசுறுப்புதான். அவனைய நம்பி கல்லாவ விட்டுட்டு போகலாம். எனக்கும் சுதந்தரமா இருக்கும். அவன் விழயத்துல தப்பு பண்ணிட்டேன். அவன் வேலைக்கு கேட்டப்பவே கடைல விட்டிருக்கனும்..” என்று சொன்னபோது இவள் நிதானமாக “அநேகமா அவனை ஒதுக்கினதுக்கு இதுதான் காரணமா இருக்கும்..”

      “என்ன..?”

      “அந்த வாசனை ரகசியம் அவனுக்கு தெரியுமுன்னு நினைக்கறேன்..” என்றபோது அமைதியாக இருந்தான். இவள் தொடர்ந்தாள்.

      “ஒண்ணு அவனுக்கும் இதுல பங்கிருக்கலாம். அல்லது உன்னைய மோப்பம் புடுச்சுருக்கலாம். இந்த விழயத்தை ரொம்ப சீக்ரெட்டா வச்சிருக்கறதா நினைக்கறப்ப அவன் கண்டுபுடுச்சது அவன் மேல வெறுப்பை கொடுத்திருக்கலாம். அதனாலதான அவன் வேலைக்கு கேட்டப்ப ஒதுக்கிட்டது. சரிதானே..?” என்றபோது அவன் தரையை பார்த்தான். இப்போது அவளுக்கு அழைப்பு வந்ததை கவனித்து எடுத்து பார்த்தபோது அந்த அண்ணாச்சிதான் “ஏம்மா.. தியேட்டர் சந்துதானே..?” என்றபோது இவன் முகத்தை பார்த்தவாறு “நானே கண்டுபுடுச்சுட்டேன் அண்ணாச்சி..”

“எல்ஐசி பக்கம்மா..”

“தெரியுமுண்ணே..”

“அந்த தியேட்டருக்கு பின்னாடி மெயின் ரோட்ல இருந்து இருக்குது. தியேட்டர் ரன்னிங்கல இருந்தப்போ ரொம்ப பேமஸ் அந்த சந்து. அந்த இடத்துல ஒரு ஓட்டல்ல பூனக்கறி போடறாங்கன்னு பேச்சு அடிபட்டு ஒரு முற போலிஸ் ரெய்டு போனப்ப பத்து பதனஞ்சு பூனைங்கல முழுசா தோலுருச்சு வச்சுருந்தாங்க இருட்டுல. அந்த ஓட்டல் ஓனர அரெஸ்ட் பண்ணிட்டாலும் அதுக்கு பின்னாடி கூட அதுக்குன்னு ஒரு கூட்டம் இருந்துச்சு அங்க..”

இவள் தொடர்ந்து அவன் முகத்தை பார்த்தவாறு குமட்டலுடன் “அச்சச்சே..”

“அத சாப்புட்டா ஆண்மை அதிகரிக்கமுன்னு ஓட்டல்காரன் வதந்திய பரப்பி நிறைய சம்பாதிச்சான். ஊர்ல நிறைய பூனைங்க காணாம போனது அப்பதான் தெரிஞ்சு அப்பறம் ஊர்ல எல்லா ஓட்டல்லேயும் ரெய்டு பண்ணாங்க. என்னா இழவோ.. அப்பறம் அந்த ஓட்டலு இப்பவும் இருக்குது. ஆனா கூட்டம் சேர்றதில்லை. காரணம் போலிஸ் கேசு ஆயிடுச்சுன்னு. ஆனா ஒரு சில இடத்துல இது ரகசியமா நடக்குதுன்னும் இப்ப கூட பூனைங்க காணாம போயிடுதுன்னும் பேச்சு இருக்குது. தியேட்டர் சந்துன்னாவே அந்த விழயம்தான் ஊர்காரங்களுக்கு ஞாபகம் வரும். அது சரிம்மா.. அந்த இடத்துல உன் வீட்டுக்காரனுக்கு என்னா வேலை..?”

“அந்த இடத்துல ஒயின்ஷாப்பு ஏதுமில்லையே..?”

“இல்லைம்மா.. ஆனா அந்த ஓட்டல்காரன் மேல பார் மாதிரி வச்சுருக்கான். போலிஸை சரிப்பண்ணி.. அதுலதான் அவனுக்கு வருமானம்.. என்னா இழவோ..” என்றவர் சலித்தபடி “இப்ப கூட பூனக்கறி வியாபாரம் நடக்கலாம்.. அந்த ஓட்டலுக்கு கறி சாப்புட போறாங்கன்னா ஒண்ணு தெரியாம போகனும்.. தெரிஞ்சு போறாங்கன்னா பூனக்கறிக்காக போறாங்கன்னு அர்த்தம்.. அந்த வதந்திய நம்பி.. எனக்கு அந்த விசயம் தெரியும்.. ஆனா அந்த ஏரியான்னு இப்பதான் தெரியுது..”

“சரிண்ணா..” என்று பேச்சை முடித்துக்கொண்டவள் இவனை தொடர்ந்து பார்த்தவாறே அமைதியாக இருந்தாள். பிறகு தன்னுடைய குழந்தையின் தூளியை பார்த்தவாறே “நமக்கு மட்டும்தான் உண்மை தெரியும்.. அந்த விழயத்துல உன்னால முடியறதில்லைன்னு.. ரொம்ப மூச்சு வாங்குவேன்னு.. பிறகு அரையும் குறையுமா உன் மேலேயே வெறுப்போட திரும்பி படுத்துக்குவேன்னு. ஆனா உன் டேஸ்ட் வேற போல” என்றவள் நிதானமாக குழந்தையை மறுபடி மேலேயும் கீழேயும் ஆட்டியவளாக இவன் மீதான பார்வையை விலக்காமல் கேட்டாள்..

“அந்த பையன்கிட்ட பேசறப்ப ஒரு செல்லம் தெரிஞ்சது உம்மேல..” என்றபடி அவன் கண்களை தொடர்ந்து பார்த்தவாறு இருந்தாள். அவன் வேறெங்கோ பார்த்தபடி உறைந்த மாதிரி இருந்தான். அவளிடமிருந்து ஏதோ சத்தம் வருவது போல தோன்றியது அவனுக்கு. அவளுடைய உடல் அசைவதாக கூட தோன்றியது அவனுக்கு. அவன் தன் பார்வையை விலக்காமல் அந்த எதிர்புற சுவரில் தொங்கிக்கொண்டிருந்த எட்டுக்கால் பூச்சியை பார்த்தவாறு இருந்தபோது அவன் மீது குபீரென்று வாந்தியெடுத்தாள் அவள்.. அவன் முகத்தை.. சட்டையை.. கைகளை நனைத்து மறுபடியும் எடுத்தபோது தொடைகள் மீது வழிந்தது. அப்போதும் அந்த பூச்சியையை பார்த்தவாறே இருந்தான் அவன்.

இப்போது குழந்தை அழ ஆரம்பித்தது..

                                    0000

  

Series Navigationஆதங்கம்குற்றம்….
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *