குரல்

This entry is part 9 of 10 in the series 26 செப்டம்பர் 2021

 

 

குணாவுக்கு பட்டணம் பற்றிய கனவுகள் இருந்தன. பிறந்ததில் இருந்து இப்போது பிளஸ் ட்டூ முடிக்கும் வரை அவன் அந்த ஊரை விட்டு வெளியே போனதே இல்லை. ஊருக்குப் போகிறோம் என்று ஆனதும், தான் இருக்கும் ஊரைப் பற்றி, ஊராடா இது, இங்க மனுசன் இருப்பானா, என்று எரிச்சல் வந்தது. அவனுடன் மரக் கட்டையை மட்டை என்ற பாவனையுடன், பந்து? ரப்பர் பந்துதான்… கிரிக்கெட் விளையாடும் பெரிய பிள்ளைகள் எல்லாரும் பஸ்சேறிப் போய் வேறு ஊர் பார்த்தவர்கள். அல்லது அவன் பொறாமைப் படுகிறான், என்று அவனிடம் பல ஊர் பார்த்ததாகப் புளுகுகிறவர்கள். அவர்களில் மணிவண்ணன்தான் சென்னை போய் காலேஜ் படித்தான். ஆனால் ஃபெயிலாகி திரும்பி வந்தாச்சி. இப்போது அவாள் ஊரில் நல்ல பெண்ணாய்ப் பார்த்து சைட் அடிக்க முயற்சி செய்தாகிறது.

மேல்நிலை வகுப்பு முடித்து இனி குணா கல்லூரி போக வேண்டும். அப்பாவிடம் அழுது கிழுது மதுரையில்தான் படிப்பேன் என்று சாதித்து விட்டான். “ஏல மார்க்கு ஒண்ணையும் காணம். இதுல இங்கதான் படிப்பேன், அங்கதான் படிப்பேன்னு அழிச்சாட்டியம் வேற. பேசாம இவனுக்கு ரெண்டு எருமைய வாங்கிக் கொடுங்க. மேய்ச்சித் திரியட்டும்…” என்றாள் அம்மா. “பாக்கறவாளுக்கு எருமை எது இவன் எதுன்னே தெரியாமப் போகும்.” இவன் தேற மாட்டான் என்பதில் அவளுக்குத் தீர்மானம் இருந்தது.

அப்பாதான் ஏமாளி. “ஏட்டி சித்த வாய மூடு. நாமளே நம்ம பிள்ளையக் கரிச்சிக் கொட்டறதா? அவன்தான் மருதைல காலேசுல போடுங்க. படிக்கேன்றான் இல்லே? பிள்ளைங்களை நம்பணுண்டி. நீ என்னியவே நம்ப மாட்டே… நம்ம பிள்ளைங்களை நாமளே நம்பாம எப்பிடி?” என்று எதிர் சவுண்டு விட்டார். நாப்பது வயசாகியும் அந்தாளுக்கு ஏமார்ற குணம் மாறவே இல்லை, என நினைத்துக் கொண்டான் குணா. நீரு அப்பிடியே இரும் ஐயா.

“மருதையும் வேணாம். குருதையும் வேணாம். மருதைல நமக்கு ஆரிருக்கா?” என்றாள் புவனேஸ்வரி. அவள் விடுவதாக இல்லை. இங்கயே அவன் எங்க புஸ்தகத்தைக் கையில் எடுத்தான். பொழுதன்னிக்கும் ஆட்டமும் பாட்டமும். துள்ளித் திரியறான். வயசுக்கேத்த பொறுப்பு வரவே இல்லை. நாய், காகம், ரயில், ஏரோப்பிளேன்னு அதே போல சத்தங் கொடுப்பான். கழுதையப் போல, நாய், குருவி போலக் கத்திக் காட்டறான். யானை போல, குதிரை போல எல்லா சவுண்டும், எங்க எப்போ எப்பிடிக் கத்துக்கிட்டான்னே தெரியல.

ரயிலோ ஏரோப்பிளேனோ பாத்ததே கிடையாது. சினிமாவில் பார்க்கிறதுதான். தகர டப்பா கிடைத்தால் தாளம் போடுவான். டங்கு டக்கர. டங்கு டக்கர. எல்லாத்துக்கும் ஒரே தாளம் தான். எதிர்வீட்டு பக்கத்து வீட்டுப் பசங்களைச் சுற்றி வைத்துக்கொண்டு சின்னச் சின்ன மேஜிக் எல்லாம் செய்வான். ஒரு நாய் அடுத்த தெருவுக்குள்ள நுழைஞ்சிருது. அதோட அதேதெரு நாய் எப்பிடிச் சண்டை போடுது, என்று இரண்டு நாய்களின் ஒலிகளையும் எழுப்புவான். இப்ப வேற்றுத் தெரு நாய் கடி பட்டு எப்பிடி முனகிக்கிட்டே பின் வாங்குது… என்று முனகல் சத்தங் கொடுப்பான். பிள்ளைங்கள் சிரிக்கும்.

படிப்பில் ஒரு மகத்துவமும் கிடையாது. ஆசை இருக்கு தாசில் பண்ண. கொடுப்பினை இருக்கு கழுதை மேய்க்கன்னு சொல்வாங்க. நாம படிக்க வைக்கதான் முடியும். அவன்தானே படிக்கணும், என்று இருந்தது அவளுக்கு. பிள்ளையை நினைத்தாலே அவளுக்கு ஆத்திரம் வந்தது. எதைப் பற்றியும் கவலைப் படறானில்லை. தெருவில் போகும்போதே தெருவில் கிடக்கும் கல்லை எத்திக்கிட்டே போறது. வாய்ல பாட்டு. சண்டியர்னு நினைப்பு. அதும், தெரியாத ஊர்ல இவனை எங்க எப்பிடி விடறது…

ஆ, நான் ஹாஸ்டல்ல படிப்பேன்லா, என நினைத்துக் கொண்டான் குணா. அத்தோடு ஆண் பெண் இரு பாலரும் படிக்கும் கல்லூரியாக இருந்தால் இன்னும் ஜோராய் இருக்கும். இங்கே ஆண்கள் பள்ளி, பெண்கள் பள்ளி அடுத்தடுத்து அமைந்தது. ஆனால் இருவரும் சேர்ந்து படிக்க இயலாது. பள்ளிக்கூடம் போக அல்லது வர, தூரத்தில் இருந்து அவளுகளைப் பார்க்கலாம். அதற்கே படபடப்பாய் இருக்கும். திடீரென்று ஒரு அவனோ, ஒரு அவளோ எதிரெதிரே வந்துவிட்டால் உடல் நடுங்கி வியர்த்து திகைத்து விடும். பிறகு அதே காட்சியை நினைத்து நினைத்து உள்ளுக்குள் பரவசம் தட்டும்.

மதுரையில் அப்பாவின் நண்பர் ஒருவர் வீட்டில் போய் இறங்கினார்கள். சௌந்தர பாண்டியன் அவங்க ஊர்க்காரர். அவர் பையனுக்கு மேல்படிப்பாகி, என்ன மேல் படிப்பு, ஐ டி ஐ. எலெக்ட்ரிசியன். மதுரையில் வேலை கிடைத்து, என்ன வேலை, சைக்கிளில் காரியரில் சாக்குப் பையில் உபகரணங்களுடன் போய் மின்சார ரிப்பேர் பார்த்தல்… அதனால் அவர் குடும்பத்தோடு மதுரைக்கு மாறி வந்தவர்.

அப்பாவுக்கும் அவருக்கும் கடிதாசிப் போக்குவரத்து உண்டு. அப்பா அவருக்குதான் குணா பற்றி தகவல் சொன்னார். உடனே பதிலும் வந்தது. “உன் பையனா? அடேடே அவன் காலேசு வந்துட்டாப்லயா? இங்கயே சேத்துருவோம். நம்ம வீட்லருந்தே போயிட்டு வரட்டும்” என்று அவர் பதில் போட்டு விட்டார். ஒருவிநாடி யோசனையாகி விட்டது குணாவுக்கு. என்றாலும் இப்போது அப்பாவை மறுத்துப் பேசுவது முதலுக்கே மோசமாகி விடும். மொதல்ல மதுரை போவம். அங்கபோயி மத்ததைப் பாத்துக்கலாம்.

மதுரை அடேங்கப்பா பெரிய ஊர். நம்மூருக்கு எல்லா ஊருமே பெரிய ஊர்தான்னு வெய்யி. திண்டுக்கல் ரோடு, டவுண் ஹால் ரோடு என்று நீளமாப் போயிட்டே இருக்கப்போவ். நம்ம ஊரு ஆறு ஆறரை விளக்கு வெச்சா அடங்கிரும். இங்க பார், ராத்திரி பத்து மணி வரை எவனும் வீட்டுக்கே போக மாட்டேங்கான். தெரு பூரா நிரம்பி வழியுது. தெரு முக்குகளில் எந்த ராத்திரியானாலும் டீக்கடைகள் திறந்திருக்கின்றன. எல்லாவனும் நின்னு டீ குடிக்கான். அங்கேயே திருநவேலி அல்வா கிடைக்கும். அம்பது அல்வா வாங்கினா, உள்ளங் கையைக் காட்டச் சொல்லி ஒரு கரண்டி மிக்சர் தர்றான்.

மதுரை கிறுகிறுப்பாய் இருந்தது. தெருவை அடைத்து முட்டி உயரத்தில் மரப் பட்டைகள் போட்டு பனியன், ஜெட்டி, ஈரிழைத் துண்டு, எதையெடுத்தாலும் அஞ்சு ரூவா என்று பொருட்கள் விற்கிறார்கள். ஏமாளிகளை நம்பி வியாபாரம். தெருவில் போகிற வருகிற ஆட்களை அண்ணாச்சி வாங்க, அண்ணாச்சி வாங்க, என்று ஹோட்டல்களுக்குக் கையைப் பிடித்து இழுக்காத குறையாக அழைக்கிறார்கள். சில கடைகளில் ரேடியோ பாட்டு பாடிட்டே இருந்தது. பச்சைக்கிளி முத்துச்சரம் முல்லைக்கொடி யாரோ? என்ன பாட்டு இது? ஏல இதுல என்ன கவிதை இருக்குது? பலசரக்குக் கடையில துவரம்பருப்பு, சர்க்கரை, நல்லெண்ணெய்னு லிஸ்டு கொடுத்தா மாதிரி? என்ன படம் அது? எம்ஜியார் நடித்த படம். உலகம் சுற்றும் வாலிபன். அதிர்ஷ்டக் காரன் அந்தாளு. நமக்கு மதுரையப் பாக்கவே இப்பதான் விடியல் வாய்க்குது.

பாத்திரக் கடை, ஜவுளிக் கடை ஒண்ணொண்ணும் உள்ளே உள்ளே பெரிய குகை மாதிரி போயிட்டே இருக்கு. பாத்திரக் கடை ஒன்றில் குண்டுப் பொம்பளை ஒருத்தி நுழைந்தாள். இதைத் தான் வெங்கலக் கடைல ஆனை புகுந்தாப் போல என்கிறார்களா. உயர வசம் வளர்ந்த கட்டடங்கள். மனுசாள் தொப்பி வைச்சாப் போல அடுக்கு மாடிகள். ஹாஜி மூஸா, ஜவுளி… கடைன்னு அடிச்சி கடல். மதுரைல எப்பிடிய்யா கடல் இருக்கும்?… என்று கிண்டலடித்தபடியே ஊரைச் சுற்றினால் நேரம் போவதே தெரியவில்லை. சித்திரை வீதி, மாசி வீதி, ஆவணி மூல வீதி, வெளி வீதின்னு சதுர சதுரமாய் கோவிலைச் சுற்றி தெருக்கள். சில ஊர்களில் மாட வீதி கூட இருக்கும். மதுரையில் இது தவிர நீள வகிடாய், அம்மன் சந்நிதி, சுவாமி சந்நிதி என்று தெருக்களை கவனித்தான். என்ன நடை. அலுக்கவே இல்லை. புது ஊரு இல்லா? அத்தனை கூட்ட நெரிசல் நடுவிலும் மாடுகளும் நாய்களும் அலைந்து திரிகின்றன. பிளாட்பார வியாபாரிகளுக்கு டிரம் டீ விற்றுக்கொண்டு சைக்கிளில்  திரியும் சில்லரை ஆட்கள்.

தெருவில் சுத்தினால் வீடு வரவே மனசு வர மாட்டேங்குது. மதுரைக் காரங்களே அப்படித்தானே இருக்காங்க. நம்ம ஊர்ல பஸ்சே அதிசயம். இங்க பாத்தியா மங்கம்மா சத்திரம் எதிரே ரயில்வே ஸ்டேஷனே இருக்கு. பாம்பு போல நீளப் படுத்த ஸ்டேஷன். கிடந்த பெருமாள் போல. ரயில் உலக மகா அதிசயம். இத்தனை மனுசாளை ஏத்திக்கிட்டு சுமையை இழுத்துப் போக முடியாம அது செனை மாடு கணக்கா கத்தறதைப் பாத்தா பாவமா இருந்தது. ரயில்ல ஏறி இன்ஜின் டிரைவர் சிகெரெட் குடிக்கிறான். ரயிலும் புகை விடுது. அவனும் புகை விடறான். இவன் வாய் வழியா புகை விட்டால் ரயிலு கொண்டை வழியா விடுது.

கல்லூரியில் சேர மறுநாள் போவதாக இருந்தார்கள். அப்பாவும் அவர் சகாவும் உட்கார்ந்து, விட்ட காலத்துப் பழைய கதைகள் பேசினார்கள் பேசினார்கள். அப்படிப் பேசினார்கள். அவன்பாட்டுக்கு ஊர் சுத்த என்று வெளியே வந்து விட்டான். சௌந்தர பாண்டியன் நல்ல மனுசர். பிரியமாய்ப் பழகினார். என்ன ஒரு வருத்தம் என்றால் அவருக்குப் பெண்பிள்ளை இல்லை. அதாவது வருத்தம் அவருக்கு இல்லை. அவனுக்குதான். அவர் வீடு தானப்ப முதலி தெருவில் இருந்தது. பாதி ராத்திரிக்குக் கூட அங்கே பரபரப்பு அடங்கவில்லை. டங் டங்கென்று இரும்பு குறுக்குக் கம்பியைத் தட்டியபடி ரிக்ஷாக்கள் கடந்து போய்க் கொண்டிருந்தன. தெருவில் நடுவே சிறிய நீளப் பாதை கோமணமாட்டம். இரண்டு பக்கமும் அடைத்துக் கடைகள். இத்தனையும் விற்கிறதா? எதை நம்பி இத்தனை சாமான் இறக்கி யிருக்கிறார்கள் தெரியவில்லை. ஒண்ணரை ஆளுக்கும் உயரமான பெரிய குடைகளை வெயில் மறைப்பாக வைத்துக் கொண்டு வியாபாரம். இப்ப புதுசா காசெட் வியாபாரம் வந்திருக்கிறது. எந்தப் படத்தின் பாடல் கேசட்டும் பிளாட்பாரங்களில் கிடைக்கிறது.

தெருவில் திடீரென்று ஒருத்தன் வந்து நின்று, கையில் நிறைய கவரிங் செய்ன், மோதிரம் வைத்திருக்கிறான். நகை என்றால் அதை ஏனோ அடர்த்தியான ரோஸ் வண்ணக் காகிதத்தில் பொதிகிறார்கள். அவன் கத்திக் கூவக் கூவ அதை வாங்க ஆட்கள் கூடுகிறார்கள். யாரும் வாங்காவிட்டால் அவனே ஆளை செட் செய்து வாங்குகிறா மாதிரி பாவ்லா செய்ய, மற்றவர்கள் ஈர்க்கப் பட்டு வியாபாரம் படிகிறது. இருபது முப்பது ரூபாய்க்கெல்லாம் வாச் கிடைத்தது.

இரவு தாமதமாக வீடு திரும்பினான் குணா. பசியே இல்லை. அப்பாவும் சௌந்தர பாண்டியனும் காத்திருந்தார்கள். “என்னடா வீட்டுக்கு வர மனசே இல்லியா உனக்கு?” என்று சௌந்தர பாண்டியன் சிரித்தார். அவனும் சிரித்தான். “காலைக் கழுவிட்டு சாப்பிட வா.” அப்படியே சாப்பிட உட்காரலாம் என்று பார்த்தவன் எழுந்து குளியல் அறைக்குப் போனான். ஊரில் என்றால் வீட்டு வாசலில் வாளியில் தண்ணீர் இருக்கும். காலைக் கழுவிவிட்டு உள்ளே வர வேண்டும்.

மாடி கட்டிய வீடுதான். அவன் தங்க என்று மாடியில் ஒரு அறை இருந்தது. மாடிப்படியை ஒட்டி கூடவே கட்டப்பட்ட அறை. அதைத் தவிர மொட்டைமாடி என்று நிறைய இடம் இருந்தது. நீளக் கொடி கட்டி யிருந்தார்கள். பக்கத்து வீட்டில் எதுவும் பெண் இருக்கிறதா தெரியவில்லை, என நினைத்துக் கொண்டான் குணா.

அப்பாவும் சௌந்தர பாண்டியனும் மொட்டை மாடியில் படுத்துக் கொண்டார்கள். பேசிப் பேசி அவர்களுக்கு அலுக்கவே இல்லை போல. குணாவின் அறை சிறியதாய் இருந்தது. தனி ஆள்தானே? படிக்க என்று ஒரு மேசை, நாற்காலி போட்டுக்கொள்ள வேண்டும். நாடாக் கட்டில் ஒன்று இருந்தது. அது போதும். கல்லூரி முடித்து அவன் மாடிக்கு ஏறி விட்டால் பிறகு கீழ் உள்ள ஆட்களுக்கு அவனால் தொந்தரவு இல்லை என்று இருந்தது. “படிக்க உனக்கு ரொம்ப வசதி. நல்லா படிக்கணும் பாத்துக்க தம்பி” என்றார் செளந்தர பாண்டியன்.

அவர் பிள்ளை தினகரன், சில சமயம் டியூப் லைட்டோ, மின் விசிறியோ வீட்டுக்கு கொண்டுவந்து ரிப்பேர் பார்ப்பான் போல இருந்தது. யாராவது அவனை வந்து வேலைக்குக் கூப்பிட்டுக் கொண்டே யிருந்தார்கள். எலக்ட்ரிஷியன் வேலைக்கு இத்தனை டிமாண்டா என்று ஆச்சர்யமாய் இருந்தது.

பாலத்தடியில் ஒரு கல்லூரி. அப்பா அவனை அங்கே அழைத்துப் போனார். வேதியியல் படிக்க என்று இடம் கேட்டார்கள். “மார்க் பத்தலயே. தாவரவியல் தரலாம். அப்பறம் வேதியியல் படிக்கிற ஆட்கள் யாராவது மெடிக்கல் கிடைத்துப் போனால், உங்களுக்கு வேதியியல் கிடைக்கும்” என்றார்கள். “என்னடா?” என்று அப்பா அவனைப் பார்த்தார். “சரிப்பா” என்று விட்டான். அவனுக்கு அந்தக் கல்லூரியைப் பிடித்து விட்டது. பெரிய வளாகம் அது. கல்லூரிக்குள் நுழையு முன்னாலேயே பெரிய காலி இடம். ஒரு பக்கமாக விளையாட்டுத் திடல் வேறு. கல்லூரிப் பிள்ளைகள் இல்லாமல் வெளி ஆட்கள் அங்கே வந்து கிரிக்கெட்டோ, கால்பந்தோ ஆடினார்கள். பாலம் ஏறி இறங்கினால் பஸ் நிலையம். அதைத் தாண்டி ஆ, ரயில் நிலையம். அதை ஒட்டி ரீகல் திரையரங்கம். அங்கே ஆங்கிலப் படங்கள் மாத்திரமே ஓடியது அவனுக்கு ஆச்சர்யமாய் இருந்தது. நம்மாளுங்களுக்கு தமிழே தகராறு. இதுல ஆங்கிலப் படம்லா யார் பாக்கப் போறா என்று இருந்தது.

அப்பா ஊருக்குக் கிளம்பிப் போனார். “நம்ம ஊர்ப் பக்கம் வாப்பா. வந்து ஒரு நாலு நாள் இருந்திட்டுப் போ,” என அப்பா செளந்தர பாண்டியனைக் கூப்பிட்டார். மீதிக் கதையை நம்ம ஊரில் வைத்துப் பேசுவார்களாய் இருக்கும். அவன் பக்கம் திரும்பி, “ஏல சௌந்தர் நல்ல மனுசன். அவரைப் படுத்தப்டாது. அந்த மட்டுக்கு என் முகத்துக்காக உனக்கு எல்லாம் செய்யிறான். அவங்க வீட்லயே சாப்பிட்டுக்க. காலேசுக்கு நடந்தே போயிறலாம் இல்லே? இத்தனை வசதி உளக்கு அமஞ்சது அதிர்ஷ்டம் தாம்ல” என்றார். அது உண்மைதான் என அவன் ஒத்துக் கொண்டான். மதுரைக்கு அவன் வந்ததே அதிர்ஷ்டம் என்று நினைத்தான் அவன்.

நம்ம வீடு போலவே அதுவும். சௌந்தர பாண்டியனும் ஒண்ணும் விவரம் பத்தாத ஆள்தான் என்று தோன்றியது. அந்தம்மா மூக்கில் துவாரங்களை அடைத்து பட்டை பட்டையாய் இரண்டு மூக்குத்தி போட்டிருந்தது. மூச்சு முட்டாதா என்று இருந்தது. அங்கயும் ‘மீனாட்சி’ ஆட்சிதான் போல, என்று இருந்தது. எதைப் பேசினாலும் சௌந்தர பாண்டியன் அந்தம்மா முகத்தைப் பார்த்தபடியே பேசினார். வேடிக்கையாய் இருந்தது. இவன் அப்பா அத்தனைக்கு இல்லை. என்றாலும் மனைவியை மீறி எதுவும் செய்ய யோசிப்பார். அவரை வளைக்க அவன் ஒருத்தனால் தான் முடியும். அவனிடம், குணாவிடம் மாத்திரம் அவர் இளக்கம் காட்டினார்.

தனியே மாடி அறை என்பது சௌகர்யமானது தான். தன் இஷ்டப்படி இருக்கலாம். அடுத்த வாரம் கல்லூரி திறந்து விடுவார்கள். “ஊருக்குப் போயிட்டு திரும்ப அடுத்த வாரமா வரலாமாடே,” என்று அப்பா கேட்டார். இவன் அதற்குள் ஊரை ஒரு எட்டு வளைய வந்து விடலாம் என்று பார்த்தான். யானைக்கல், சிம்மக்கல், வைகை நதி. கிழக்கு வாசல், தெற்கு வாசல் என்று ஊர் அடையாளங்கள் அவனை ஆச்சர்யப் படுத்தின. மதுரையைச் சுத்தின கழுதை கூட ஊரை விட்டுப் போகாது, என்று சும்மாவா சொல்கிறார்கள்.

ஆ தங்கம் தியேட்டர். ஆசியாவிலேயே பெரிய திரையரங்கம் அது என்று சொன்னார்கள். அந்த ஊரில் இருப்பதை நினைக்கவே நெஞ்சு விம்மியது. அப்பாவிடம் பெரிசாய்க் காசு இல்லை. கல்லூரியில் பணம் கட்டியபின், அவனிடம் இருநூறு தந்தார். அதையே அவன் எதிர்பாக்கவில்லை. பெரிய தொகைதான். “ஏல அத்தியாவசியமா இருந்தா செலவு பண்ணு. இல்லாட்டி பண்ணாதே..” என்றார். “எய்யா ஒரு டிரான்சிஸ்டர்…” என்று அவன் ஆரம்பித்தபோது, “பாத்தியா?” என முகம் மாறினார். “சரி சரி. அப்பறம் பாத்துக்கலாம்…” என்றான். “ஏலே காலேஜ் திறந்தால் புக்கு, நோட் புக்குன்னு காசு தேவைப்படும். யார்ட்டன்னு போயி நிப்பே?” என்றார் ஐயா. “ஆமாம். ஆமாம்” என்றான் அவன் பஸ் நிலையம் வரை அவர் கூடவே வந்தான். அவருக்கு அவனைப் பிரிய மனசே இல்லை. அவனோ இவரு எப்ப கிளம்புவாரு என்று காத்திருந்தான். பஸ்சில் ஏறி சோகமாய் அவர் ஜன்னல் வழியே எட்டிப் பார்த்து எதோ பேச வந்தார். அதற்குள் அவன் கிளம்பி யிருந்தான்.

பரபரப்பான ஊர் மதுரை. நேரம் போவதே தெரியாமல் போய்க் கொண்டிருந்தது. மீனாட்சி யம்மன் கோவில் எத்தனை பெரியது. எங்க ஊரே இந்த சைஸ்தான் இருக்கும், என்று தோன்றியது. அதில் பொற்றாமரைக் குளம் பார்க்கையில் இங்கே தான், நக்கீரர் பஸ்பமாக்கப் பட்டார், என நினைக்க சிலிர்த்தது. நெற்றிக் கண்ணைத் திறந்ததில் நக்கீரர் சாம்பலானார் என்றால், அந்தக் கண் இருக்கிற நெற்றி… அதுக்கு ஒண்ணுமே ஆகல்லியா?… என்று வழக்கம் போல அவன் மனம் கேலி யடித்தது. நம்ம புத்திசாலியோ இல்லியோ. அடுத்தவனை அப்பிடி ஒரு தட்டு தட்டி விட்டே வாழ்கிறது வழக்கமாப் போச்சு எனக்கு, என நினைத்தான்.

சௌந்தர பாண்டியன் பிரியமாய்ப் பழகினார். “இது உன் வீடு மாதிரிப்பா. வித்தியாசமா நினைக்காதே…” என்றார் அன்புடன். “நீரு வித்தியாசமா நினைக்காம இருந்தா சரி” என்று சொல்ல நினைத்து அடக்கிக் கொண்டான். வயசில் பெரியவர். கிண்டல் அடிப்பது, ஒரு நேரம் போல ஒரு நேரம் இருக்காது.

இரவுகளில் மொட்டை மாடியில் படுத்தால் பின்னிரவில் குளிர் வந்தது. கிராமத்தில் இருந்து வந்திருந்தான் என்பதால், உள் அறையில் ஜன்னலைச் சாத்தி வைத்துக் கொண்டு தூங்கினால் வியர்த்துக் கொட்டியது. என்ன செய்ய. பரவாயில்லை மாடிதானே, என்று ஜன்னலைத் திறந்து வைத்துக் கொண்டு தூங்கினான். ஒரு டிரான்சிஸ்டர் இருந்தால் ரேடியோ சிலோன் கேட்கலாம். பொங்கும் பூம்புனல் தொட்டு பாட்டு பாட்டாய் எத்தனை அருமையாய் நிகழ்ச்சி நடத்துகிறார்கள். கொஞ்ச நாள் போகட்டும். அப்பாவை இளக்கி வாங்கிவிடவேண்டும், என நினைத்துக் கொண்டான்.

நல்ல தூக்கத்தில் திடுதிப்பென்’று விழிப்பு வந்தது. என்னவோ சிறு சத்தம். எதோ குதித்த சத்தம். விழித்துக் கொண்டு பார்த்தான். பூனை ஒன்று உள்ளே வந்திருந்தது. அவன் எழுந்து கொண்டதும் கட்டிலடியில் போய் அது பதுங்கிக் கொண்டது. எத்தனை விரட்டியும் அது போகவில்லை. அந்த அறைக்குப் பழகிய பூனை போல இருந்தது. பிடிவாதமாய் அதை வெளியேற்றி விட்டு திரும்பப் படுத்துக் கொண்டான். நல்ல தூக்கத்தைப் பூனை கெடுத்து விட்டது. அவனுக்கு எரிச்சலாய் வந்தது.

அடுத்த அரை மணி நேரத்தில் திரும்ப மியாவ் என்று சத்தம் கேட்டு விழித்துக் கொண்டான். மொட்டை மாடியில் சௌந்தர பாண்டியன் படுத்துக் கொண்டிருந்தார். பூனைச் சத்தத்தில் அவரும் புரண்டு படுத்தார். கண்ணைத் திறக்காமலேயே “என்ன தம்பி, தொந்தரவா இருக்குதா?. அது பழகிய பூனை. போகாது…” என்று பேசினார்.

“விரட்டிறலாம் ஐயா…” என்றான் குணா. “விரட்டிருவியா?” என்று கேட்டார். “அது ரொம்ப சுலபம் ஐயா..” என்றவன், “அடுத்தவாட்டி வரட்டும்…” என்றான். “நாங்க எத்தனையோ தடவை முயற்சி பண்ணிட்டம். அது போவல்ல தம்பி” என்றார். “வேடிக்கையப் பாருங்க” என்றான் குணா.

அடுத்த முக்கால் மணி நேரத்தில் பூனை திரும்ப வந்தது. அது அறைக்குள் வரும் வரை அவன் காத்திருந்தான். சட்டென்று தெருநாய் போல அவன் ‘வவ் வவ்’ என உக்கிரமாய்க் குரல் கொடுத்தான். பதறி வெளியே பாய்ந்தது பூனை. நாய் ஒலியைக் கேட்டதும் சட்டென எழுந்து கொண்டார் சௌந்தர பாண்டியன். குணா ஜன்னல் வழியே புன்னகை செய்தான் அவரைப் பார்த்து. “பூனை இனிமேம வராது ஐயா” என்றான் குணா. “தேவலையே” என்றார் சௌந்தர பாண்டியன் நம்ப முடியாமல். “தம்பி நீ பொழைச்சிக்குவேப்பா” என்றார்.

எங்க ஐயாட்டச் சொல்லுங்க, என நினைத்துக் கொண்டான். திரும்ப கட்டிலில் படுத்துக் கொண்டபோது கொட்டாவி வந்தது.

 

(திண்ணை)

Series Navigationகுற்றம்….ஒரு கதை ஒரு கருத்து – சிட்டியின் அந்திமந்தாரை
author

எஸ். ஷங்கரநாராயணன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *