குரு அரவிந்தன்
இலங்கையில் இருக்கும் இயற்கைத் துறைமுகமான திருகோணமலை துறைமுகம்போல, ஹவாயிலும் ஒரு இயற்கைத் துறைமுகம் இருக்கின்றது. பேர்ள் ஹாபர் என்ற பெயரைக் கொண்ட இந்தத் துறைமுகம்தான் இரண்டாம் உலகயுத்தத்தின் திருப்புமுனையாக இருந்தது. இந்த பேர்ள் ஹாபர் துறைமுகம்தான் அமெரிக்காவின் பசுபிக்பிராந்திய முக்கியமான கடற்படைத் தளமாக இருந்தது. சுமார் 80 வருடங்களுக்கு முன், அதாவது 1941 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 7 ஆம் திகதி திடீரென உலகத்தையே திரும்பிப் பார்க்க வைத்தது இங்கே உள்ள பேர்ள் ஹாபர் என்ற இயற்கைத் துறைமுகம்.
அதற்குக் காரணம், யப்பானியரின் அதிரடித் தாக்குதலில் இந்தத் துறைமுகம் தரைமட்டமாக்கப்பட்டுச் செயலிழக்கப்பட்டதுதான். 2ஆம் உலக யுத்தத்தின் போது யப்பானின் கூட்டுப்படையினர் இரகசியமாக ஏற்கனவே திட்டமிட்டபடி, பேர்ள் ஹாபரின் தாக்குதலுக்குத் தயாரானார்கள். யப்பானின் ஆறு விமானந்தாங்கி யுத்தக் கப்பல்கள் 1941 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 21 ஆம் திகதி ஹவாய் தீவுகளை நோக்கிப் புறப்பட்டிருந்தன. இந்தக் கப்பல்களில் 360 தாக்குதல் விமானங்களும், 48 தற்பாதுகாப்பு விமானங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன. முதற்கட்டமாக யப்பானிய விமானங்கள் மூன்று பிரிவாகப் பிரிக்கப்பட்டு தாக்குதலுக்குத் தயாராகின. முதற்பிரிவு விமானங்கள் முக்கியமான நிலைகளைத் தாக்குவது, அதைத் தொடர்ந்து இரண்டாவது பிரிவு விமானங்கள் யுத்தக் கப்பல்களை தாக்கி அழிப்பது. மூன்றாவது பிரிவு விமானங்கள், தாக்கப்படாமல் எஞ்சியிருக்கும் நிலைகளைத் தேடி அழிப்பது.
90 நிமிடங்கள் நடந்த இந்தத் தாக்குதலில் பேர்ள் ஹாபரில் நின்ற அமெரிக்காவின் 18 கப்பல்கள் மூழ்கடிக்கப்பட்டன. இந்தத் தாக்குதலில் 2403 அமெரிக்கர்கள் கொல்லப்பட்டிருந்தனர். இத்தாக்குதலின் போது அவர்களின் தாய் மொழியான யப்பானிய மொழியிலேயே அவர்களின் உரையாடல் எல்லாம் இடம் பெற்றதாம். ஆங்கில மொழி பாவிக்கப்படாததால் அவர்களின் உரையாடல்களை இடைமறித்து ஒட்டுக் கேட்டவர்களால் கூட என்ன நடக்கிறது என்பதைப் விளங்கிக் கொள்ள முடியவில்லை. இந்தப் பிரமாண்டமான அதிரடித் தாக்குதலைக் கவனமாகத் திட்மிட்டுச் சாதித்துக் காட்டியவர் யப்பானிய அட்மிரல் யமாமோட்டோதான். யமாமோட்டோவின் இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அட்மிரல் நகுமோ சூச்சி (Nagumo Chuchi) என்பவர்தான் துணிந்து முன் வந்து தளத்தில் நின்று செயற்படுத்தினார். மிக முக்கியமான அழிப்பு நடவடிக்கைகள் முதல் 30 நிமிடத்திலேயே செய்து முடிக்கப்பட்டன. அரிசோனா, ஒக்லஹோமா, கலிபோர்ணியா, நிவாடா, வெஸ்ட்வேர்ஜினியா போன்ற யுத்தக்கப்பல்கள் துறைமுகத்தில் வைத்தே மூழ்கடிக்கப்பட்டன.
யப்பான் விமானத்தின் குண்டுத் தாக்குதலில் மூழ்கடிக்கப்பட்ட ‘அரிசோனா’ கப்பல் இப்பொழுதும் அதே இடத்தில் கடலுக்குள் மூழ்கிய நிலையில் இருக்கின்றது. இதற்கு அருகே நினைவு மண்டம் ஒன்று எழுப்பி இருக்கிறார்கள். மண்டபத்தில் இருந்து நீருக்குள் இருக்கும் கப்பலைப் பார்க்கக் கூடியதாக இருக்கின்றது. தாக்குதலின் போது, மரணித்தவர்களின் பெயர்கள் அங்கே இடம் பெற்றிருக்கின்றன. அமெரிக்கா கைப்பற்றிய ‘கெயிற்ரென்’ என்று சொல்லப்படுகின்ற யப்பானியர்களின் தண்ணீரில் செல்லக்கூடிய கறுப்பு நிறத்திலான தற்கொலை குண்டுதாக்கியை அங்கே பார்வைக்கு வைத்திருந்தார்கள். (One Man Japanese Suicide Torpedo).
பேர்ள்ஹாபர் கரையில் மௌனத் தூக்கம் போட்டுக் கொண்டிருந்தது பவ்பின் என்ற நீர்மூழ்கிக் கப்பல். இந்த நீர்மூழ்கி சுமார் 15 மேற்பட்ட பெரிய கப்பல்களைக் கடந்த காலங்களில் மூழ்கடித்திருந்தது. இந்த நீர்மூழ்கி விமான எதிர்ப்புப் பீரங்கியை தன்னகத்தே கொண்டது. 1944 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 22 ஆம் திகதி 445 அடி நீளமான ‘சுஷ்கிமா மாறு’ என்ற யப்பானியக் கப்பலை இரவு 10 மணியளவில் பவ்பின் மூழ்கடித்திருந்தது. 775 பள்ளிச் சிறார்கள் அதில் கொல்லப்பட்டார்கள். மூழ்கடிக்கப்பட்ட கப்லில் சிறார்கள் இருந்த விடயம் பவ்பின் மாலுமிகளுக்குத் தெரிந்திருக்கவில்லை. சுமார் 20 வருடங்களின் பின்தான் பவ்பின் மாலுமிகளுக்குத் தெரிய வந்தது. மூழ்கடிக்கப்பட்டிருந்த சுஷ்கிமா மாறு 33 வருடங்களின் பின் 1977 ஆம் ஆண்டு ஆழ்கடலில் இனங்காணப்பட்டது. யப்பானிய கவிஞர் ஒருவர் மரணித்த அந்த சிறுவர்களைப் பற்றி எழுதிய கவிதையில் இரண்டு வரிகளை ஆங்கிலத்தில் தருகின்றேன்.
‘They dreamed because they were alive. When they became victims, their dreams for the future died with them. ‘
இதை வாசித்தபோது, எனக்கு தாயகத்தில், விமானக் குண்டுவீச்சில் மரணித்த பள்ளிச் சிறார்களின் இனிய கனவுகளும் அவர்களுடனே மரணித்த நினைவுதான் வந்தது.
இரண்டாம் உலக யுத்தத்தின்போது அமெரிக்கா 52 நீர்மூழ்கிகளை இழந்திருந்தது. அதே சமயம் நீர்மூழ்கியில் இருந்த 3500 மாலுமிகள் வெவ்வேறு சம்பவங்களின் போது, இந்த யுத்தத்தில் இறந்து போயிருந்தனர். இந்த அதிரடித் தாக்குதலில் யப்பான் தரப்பில் அதிக சேதம் ஏற்படவில்லை. 29 விமானங்களையும் 5 நீர்மூழ்கி கப்பல்களையும் யப்பான் இழந்தது. இந்த அதிரடித் தாக்குதலில் 64 யப்பானிய வீரர்களும் கொல்லப்பட்டனர்.
தங்கள் நாட்டின் மீது இருந்த அதீத பற்றுக் காரணமாக 3862 யப்பானிய தற்கொலைப் படையினர் இரண்டாம் உலக யுத்தத்தின் போது தற்கொலைத் தாக்குதல் செய்து மரணமாகியிருந்தனர். சுமார் 7000 க்கும் அதிகமான அமெரிக்க கடற்படையினர் இப்படியான தற்கொலைத் தாக்குதலின் போது கொல்லப்பட்டிருந்தனர். யப்பானியர்களின் எண்ணிக்கைப்படி தற்கொலைப் படையினரால் சுமார் 81 கப்பல்கள் மூழ்கடிக்கப்பட்டும், 195 கப்பல்கள் சேதமாக்கப்பட்டும் இருந்தன. இரண்டாம் உலக யுத்தத்தின் போது ஆழ்கடலில் சென்ற யுத்தக் கப்பல்கள் எல்லாம் இந்த தற்கொலைப் படைக்கு அஞ்சியே பயணத்தை மேற்கொண்டன.
இதற்கு ஒரு முற்றுப் புள்ளி வைக்கும் நோக்கத்தோடுதான் அமெரிக்கா குரோஷிமா என்ற யப்பானிய தீவுமீது ஆகஸ்ட் மாதம் 6 ஆம் திகதி 1945 ஆம் ஆண்டு அணுக்குண்டுத் தாக்குதல் நடத்தி இருந்தது. இத்தாக்குதலில் சுமார் 80,000 மக்கள் அந்த இடத்திலேயே இறந்து போயிருந்தனர். அந்த அதிர்ச்சியில் இருந்து யப்பான் எழுந்திருக்குமுன் மீண்டும் மூன்றாவது நாள் நாகசாகி மீது அடுத்த அணுக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது. இத்தாக்குதலில் 40,000 பேர் கொல்லப்பட்டனர். இதன் காரணமாக வேறு வழியில்லாமல் யப்பான் சரணடைந்தது.
- தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]
- சைக்கிள்
- கன்னித்தீவு
- குருட்ஷேத்திரம் 25 (யட்சனுடன் சம்வாதம் செய்த தருமன்)
- குருட்ஷேத்திரம் 26 (தருமனின் வாயிலிருந்து வசைச் சொல் வந்து விழுந்தது)
- அ. முத்துலிங்கம் எழுதிய “ ஐந்து கால் மனிதன் “ வாசிப்பு அனுபவம்
- சூட்சுமம்
- மலர்களின் துயரம்
- வெப்ப யுகப் பிரளயம்!
- அதிரடித் தாக்குதலுக்கு உள்ளான ஹவாய் பேர்ள் ஹாபரின் நினைவுச் சின்னங்கள்
- கவிஞர் அ.வெண்ணிலா எழுதிய ‘கங்காபுரம்’ நாவலுக்கு விருது
- அற்ப சுகங்கள்
- ப.தனஞ்ஜெயன் கவிதைகள்
- மாதிரி மலர்கள்
- தமிழவனின் நடனக்காரியான 35 வயது எழுத்தாளர்
- அணுவியல் துறை வெப்ப சக்தி உற்பத்தியால் குளிர் & வெப்ப நாடுகள் பெறும் உறுதிப் பயன்பாடுகள்