வளவ. துரையன்
மதியும் அன்றொரு தீவிளைந்து
வளைந்து கொண்டது கங்கைமா
நதியும் வீசிய சீகரங்களின்
வந்து வந்து நலிந்ததே. [331]
[சீகரம்=நீர்த்துளி; நலிதல்=வற்றுதல்]
சிவபெருமானின் தலையில் சூடியிருந்த மதியும் தணலாய்ச் சுட்டது. அது வளைந்து போயிற்று. கங்கை ஆறும் நீர்த்துளிகளைச் சிந்தி சிந்தி வறண்டு போயிற்று.
சூடும் மஞ்சன ஆறுசுட்டது
கண்ணி சுட்டது; பண்டுதாம்
ஆடும் மஞ்சென மும்கொதித்தது;
இருப்ப ரோதனி ஐயரே! [332]
[மஞ்சனம்=குளியல்; பண்டு=முன்பு; ஐயர்=சிவபெருமான்]
சிவனின் தலையில் இருந்த குளிர்ந்த கங்கையும் சுட்டது; சுடியிருந்த மாலைகள் கொதித்தன. அவர் குளித்து மகிழும் நெருப்பும் அதிகம் சுட்டது; இதற்குப் பிறகும் சிவபெருமான் தேவியைப் பிரிந்து தனியே இருப்பாரா?
அன்று வானவர் உய்ய ஐயர்
மிடற்ற டக்கிய ஆலமே
சென்று வானவர் உயிர் கொளத்திரு
உள்ளம் வைத்தமை தெரியவே. [333]
[உய்ய=உயிர் பிழைக்க; ஐயர்=சிவபிரான்; மிடறு=கழுத்து; ஆலம்=நஞ்சு]
பழங்காலத்தில் திருப்பாற்கடலைக் கடைந்தபோதில் வெளியான நஞ்சை வானவர்கள் உயிர் பிழைப்பதற்காகத் தம் கண்டத்தில் அடக்கிய ஆலகால விஷத்தையே இன்று அதே வானவர்களைக் கொல்வதற்குப் பகவான் மனத்தில் எண்ணினார்.
காலை நெற்றியில் அகிலமும் சுடு
கனலி குறைபட இறைவர் தம்
மேலை நெற்றி விழிக்க வந்து
பணிந்து நின்றனன் வீரனே. [334]
[கனலி=நெருப்பு; வீரன்=வீரபத்திரன்]
இந்த உலகின் பகல் வெப்பமும் குறைவு எனக்கருதும்படும்படியாக உலகத்தையே அழிக்கக் கூடிய நெருப்பை உடைய நெற்றிக்கண்ணைப் பெருமான் திறந்தார். உடனே மாவீர்ராகிய வீரபத்திரர் வந்து தோன்றினார். அவர் சிவபெருமானைப் பணிந்து நின்றார்.
நின்ற வீரனை “மாமன் வேள்வி
தகர்க்க என்று நெடுஞ்சிலைக்
குன்றவீர்ர் பணித்தலும் பணி
யாமல் வந்தன கூளியே. [335]
[மாமன்=மாமனார் தக்கன்; சிலி=வில்; குன்ற வீரர்=மேருமலையை உடைய சிவன்; கூளி=பூதப் படைகள்]
தம் முன் நின்ற வீரபத்திரரிடம், “நம் மாமன் தக்கன் நடத்த நினைத்திருக்கும் வேள்வியைச் சென்று நீ அழித்திடுக” என்று முன்பு மேருமலையையே வில்லாகக் கொண்டிருந்த சிவபெருமான் கட்டளையிட. உடனே வேறு எவர் கட்டளையையும் எதிர்பார்க்காமலே பூதப்படைகள் வந்து சேர்ந்தன.
திரண்ட பூத பசாசம் ஆயிர
கோடிகோடி திறந்தவாய்
இரண்டுபாலும் உடன்செலத்திரு
மலைவலம் செய்து இறைஞ்சியே. [336]
[பசாசம்=பேய்; திரம்=வகை; இரண்டுபால்=இரண்டு பக்கம்; இறைஞ்சி=வணங்கி]
இப்படித் திரண்ட ஆயிரம் ஆயிரம் கோடி என்று கூறத்தக்க பலவகையான பூதப்பேய்கள் இரு பக்கங்களிலும் சூழ்ந்து வரும்படியாக வீரபத்திரர் சிவனை வணங்கிக் கையிலாய மலையை வலம் வந்தார்.
உலகும் ஊழியும் கொண்டு அமைந்ததோர்
இலகு வைதிகத் தேரில் ஏறியே. [337]
[இலகு=விளங்கும்; வைதிகத் தேர்=உருவாக்கப்பட்ட தேர்]
ஊழிக்காலத்தில் உலகங்கள் அழிந்தாலும் தான் மாட்டும் அழியாமல் விளங்கும்படி உருவாக்கப்பட்ட ஒரு தேரில் ஏறிக்கொண்டு வீரபத்திரர் புறப்பட்டார்.
மாக சந்திரமண்டலம் மழுங்க நின்று
ஏக சந்திரமண்டலம் எறிப்பவே. [338]
[மாகம்=ஆகாயம்; மழுங்க=மங்க; ஏக=ஒற்றை; எறிப்ப=ஒளி வீச]
வானத்திலிருக்கும் சந்திரமண்டலம் முழுதும் மங்கிப் போகும்படி ஒரு வெண்கொற்றக்குடை ஒளிவீசிடவும்,
மழைத் தென்றலால் வாடையால் வகுத்து
இழைத்த திவ்யசாமரை இரட்டவே. [339]
மழை=குளிர்ச்சி; வகுத்து=இரு பிரிவாக; திவ்யசாமரை=மேன்மையான வெண்சாமரம்; இரட்ட=வீச]
குளிர்ந்த தென்றலும், வாடைக்காற்றும் வந்து வீசுவது போல இருபக்கங்களிலும், இரு வெண்சாமரங்கள் வீசிடவும்,
கொள்ளையில் படு குலவராக மான்
வெள்ளெயிற்று முத்தாரம் மின்னவே. [340]
கொள்ளை=கூட்டம்; படு=அழிந்துபட்ட; வராகம்=பன்றி; எயிறு=பல்]
ஆதி வராகமான பன்றிக் கூட்டங்களின் தந்தமாகிய பற்களெல்லாம், முத்தாரமாக மார்பில் முன்னவும்.
- தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]
- சைக்கிள்
- கன்னித்தீவு
- குருட்ஷேத்திரம் 25 (யட்சனுடன் சம்வாதம் செய்த தருமன்)
- குருட்ஷேத்திரம் 26 (தருமனின் வாயிலிருந்து வசைச் சொல் வந்து விழுந்தது)
- அ. முத்துலிங்கம் எழுதிய “ ஐந்து கால் மனிதன் “ வாசிப்பு அனுபவம்
- சூட்சுமம்
- மலர்களின் துயரம்
- வெப்ப யுகப் பிரளயம்!
- அதிரடித் தாக்குதலுக்கு உள்ளான ஹவாய் பேர்ள் ஹாபரின் நினைவுச் சின்னங்கள்
- கவிஞர் அ.வெண்ணிலா எழுதிய ‘கங்காபுரம்’ நாவலுக்கு விருது
- அற்ப சுகங்கள்
- ப.தனஞ்ஜெயன் கவிதைகள்
- மாதிரி மலர்கள்
- தமிழவனின் நடனக்காரியான 35 வயது எழுத்தாளர்
- அணுவியல் துறை வெப்ப சக்தி உற்பத்தியால் குளிர் & வெப்ப நாடுகள் பெறும் உறுதிப் பயன்பாடுகள்