அற்ப சுகங்கள்

This entry is part 12 of 16 in the series 24 அக்டோபர் 2021

 

குப்பை வாளியில் இருக்கும் நெகிழிப்பையில் சேர்ந்திருக்கும் குப்பையையுடன், இரவு தூங்கப்போகும் முன் சேரும் குப்பையைபும் சேர்த்து,  காதுகளை இழுத்து முடிந்து, தோம்பில் தள்ளிவிட்டபின் இருக்கும் சுகம் இருக்கிறதே, அடடா! நீண்ட நேரம் பல்லிடுக்கில் மாட்டிக்கொண்டு அவஸ்தைப்படுத்திய கீரைத்துணுக்கு வெளியாகிவிட்டது போன்ற ஒரு சுகம் அது. அன்று இரவும் அப்படித்தான்.

மீதமாகிப்போன கொஞ்சம் பருப்பானம், மென்று சக்கையாய்த் துப்பிய முருங்கைக்காய், சில முட்டை ஓடுகள்,  சரியான கௌச்சி தெரியுமா? சென்ற ஆண்டு செப்டம்பர் மாதம் வைத்து குளிர்ப் பெட்டியில் மிச்சம் இருந்த மறந்துபோன தக்காளிச்சட்னி, பாதி பழைய தோசை, வாழைப்பழத்தோல் இன்னும்….இன்னும். எல்லாவற்றையும் அள்ளிக் கொட்டி காதுகளை இழுத்து முடிந்துவிட்டு, தோம்புக் கதவைத் திறக்கப் பார்த்தேன். முடியவில்லை. என் வீடு பத்தாவது மாடி. இது என்ன பாண்டியநாட்டுக்கு வந்த சோதனை. பணப்பெட்டகத்தின் இழுப்பறையில் இருக்கும் கைப்பிடி மாதிரி நான்கு விரல்கள் சரியாக நுழையும் தோம்புத்தொட்டிக் கதவை இரண்டு மூன்று முறை இழுத்துப் பார்த்தேன். இன்னும் ஒரு தடவை இழுத்தால் ‘கையோடு வந்துவிடுவேன்’ என்று பயமுறுத்தியது கைப்பிடி. என்ன செய்யலாம்? ஒரு கையில் கைப்பிடி. மறுகையில் திருப்புலி. லேசாக மேல் விளிம்பை நெம்பி இழுத்தேன். திறந்துகொண்டது. அப்பாடா! குப்பையைத் தள்ளிவிட்டு காதுகுடையும் சுகத்தை அனுபவிக்கலாம் என்றால், மீண்டும் கதவை மூட முடியவில்லை.

கைப்பிடியை இழுத்தால், ‘சாப்ஸ்டிக்’ கின் மண்டையை ஒரு சென்டிமீட்டர் வெட்டியதுபோல் ஒரு இரும்புத்துண்டு, தன் துளைக்குள் சென்றுவிடவேண்டும். மூடிவிட்டால் வெளியே வந்து திறக்காமல் கதவைப் பூட்டிக்கொள்ள வேண்டும். அதற்கு எழுதிய விதி அதுதான். உள்ளே போனால்தானே வெளியே வர. இப்ப என்ன செய்யலாம்? அப்படியே இருந்துவிட்டுப் போகட்டும் என்று கையை விட்டால் ‘மடால்’ என்று விழுந்துவிடுகிறது. அப்படியே விட்டால் அந்த சுகந்த மணம் வீட்டைச் சுற்றிப்பார்க்க ஆரம்பித்துவிடும்.

கூடத்தில் என் மனைவி ‘ஹாட்ஸ்டாரில் பிக்பாஸ் வராதாம்’ என்று ஹாஜராவிடம் சொல்லி, பத்துப்பவுன் தங்கச் சங்கிலியைத் தொலைத்து விட்டதுபோல் கவலைப்பட்டுக் கொண்டிருந்தார். தோம்புத்தொட்டிப் பிரச்சினை, கழிவுநீர் ஓடாத பிரச்சினை எல்லாம் அவரைப் பொருத்தவரை அடுத்த வீட்டுப் பிரச்சினை. நான்தான் மல்லுக்கு நிற்கவேண்டும். என்ன செய்யலாம்? அன்னாந்து பார்த்தேன். துணி காயப்போடும் குச்சிகள். என் நியூட்டன் மூளை வேலை செய்தது. ஒரு குச்சியை எடுத்தேன். என் வீட்டுத்தோம்பு, பாத்திரம் கழுவும் தொட்டிக்குக் கீழே தள்ளு கதவு போட்ட ஓர் அறைக்குள் இருந்தது. எதிரே கழிப்பறையின் சுவர். கழிப்ப்பறையின் சுவருக்கும், தோம்புக்கதவுக்கும் இடையே உள்ள தூரத்தை அளந்தேன். அந்த அளவில் இப்போது குச்சியை வெட்டவேண்டும். அரிவாள் இல்லையேல் கறி வெட்டும் கத்தி வேண்டும். இல்லை சின்ன ரம்பம் வேண்டும். எதுவுமே கைவசம் இல்லை. காய்கறி வெட்டும் கத்திதான் இருக்கிறது. அந்தக் கத்தியால் இந்தக் குச்சியை வெட்டும் கின்னஸ் சாதனையில் இறங்கினேன். குச்சியில் ‘டொக்டொக்’ கென்று கத்தி விழ, நெஞ்சு ‘திக்திக்’ கென்றது. இரவு 10 மணி. கீழ்வீட்டுக்காரன் 999ஐ அழைத்துவிடுவான். ஏற்கனவே ஒரு முறை செய்திருக்கிறான். என் மனைவி பிக்பாஸ் சேதியை சலிமாவிடம் சொல்லி அழுதுகொண்டிருக்கிறார். அப்பாடா! வெட்டி துண்டாக்கிவிட்டேன். கதவுக்கும் கழிவறை சுவருக்குமிடையே முட்டுக் கொடுத்து, அப்போதைக்கு சமாளித்துவிட்டேன். காலை எழுந்ததும் வீ.வ.க வை அழைக்கவேண்டும் .

பொழுது விடிந்தது. மணி 9. வீ.வ.க. வின் கொதி எண்ணை (ஹி,ஹி, ஹாட்லைன்) அழுத்தினேன். உனக்கு எந்த மொழியில் பதில் வேண்டும் என்று ஒரு கிளிக்குரல். பின் ஒரு பட்டியலை ஒப்புவித்தது. தவணை பற்றிய தகவலா, தவணை செலுத்த அவகாசம் வேண்டுமா, ஏதும் பளுதா என்று பத்துக் கேள்விகளைப் பட்டியலிட்டது. ‘வீட்டில் பளுது’ என்ற எண்ணை அழுத்தினேன். மீண்டும் ஒரு பெரிய பட்டியல். கூரையிலிருந்து காரை பெயர்கிறதா, தண்ணீர்க்குழாயில் கசிவா, கழிவுநீர் ஓடவில்லையா, …. இன்னும் இன்னும். தோம்புக்கதவு திறக்கமுடியவில்லையா என்ற முக்கியமான கேள்வி இல்லை. அதுவும் கழிவு சம்பந்தப்பட்டதுதானே. கழிவுநீர் ஓடவில்லை என்ற எண்ணை அழுத்தினேன். ‘உங்களுக்கு ஒரு இணைப்பு அனுப்பப்படும். அதை வருடுங்கள். குட்பை’ என்று அந்தக் கிளி சொல்லிவிட்டு தொலைபேசியை வைத்துவிட்டது. எப்போது வரும் இணைப்பு? வயிற்றைக் கலக்கிக் கொண்டு, இயற்கையின் அழைப்பு. தொலைபேசியை எடுத்துக்கொண்டே கழிவறைக்கு ஓடினேன். கழிவறையில் தொலைபேசி ‘கிளிங்’ என்றது. ஆம். அது குறுஞ்செய்தி ஒலிதான். வீ.வ.க தான் அனுப்பியிருக்கிறது. திறந்தேன். ஓர் இணைப்பு இருந்தது. வருடினேன். அதிலும் பட்டியல். ஒவ்வொரு மாதிரி வேலைக்கும் யாரை அழைக்கவேண்டும் என்ற நிறுவனங்களின் தொலைபேசி எண்கள். கூலியெல்லாம் ஒழுங்காகப் பேசிக்கொள். உங்களுக்குள் வழக்கென்றால் அதற்கு வீ.வ.க. பொறுப்பல்ல என்று மண்டையில் குட்டியது செய்தி. கழிவுநீரை வெளியேற்றும் நிறுவன எண்ணை அழைத்தேன். அட! என்ன ஆச்சரியம். உடனே எடுத்துவிட்டார். நீண்டநாள் இருந்த கழுத்துச் சுளுக்கு காணாமல் போன சுகம். ‘தோம்பு…..’ என்று தொடங்கியதுமே இன்னொரு எண்ணைத் தந்து ‘மெங்கை’ அழையுங்கள் என்றார்

‘என்ன மொங்கா?’

‘இல்லை. மெங் எம்.இ.என்.ஜி. எண்ணையாவது ஒழுங்கா எழுதிக்க’  எண்ணைச் சொன்னார். உடனே மொங்கை, சே! மெங்கை அழைத்தேன். அவரும் உடனே எடுத்தார். அவர் சுளுக்கெடுத்தார். இவர் மருந்து தடவி நீவிவிடுகிறார்.

‘ஹாய் மெங்’

‘நான் மெங் அல்ல மிங்’

‘ஓ. சரி. சாரி. வீ.வ.க. உங்கள் எண்ணைத் தந்தது’

‘சரி. நான் என்ன செய்ய வேண்டும்?’

‘என் தோம்பு……’

‘சரி. சரி. புதுசா மாத்தணுமா? ரிப்பேர் பண்ணனுமா?’

‘மாத்தினால் நல்லது’

‘350 வெள்ளியாகும். சரியென்றால் ஒரு மணி நேரத்தில் அளவெடுக்க வருவேன்.’

‘சரி’

‘350 வெள்ளியா? நமக்கு ஃபேன் போடவந்த அந்தப் பையாவை அழைக்கலாம்ல.’ என்றார் மனைவி. இப்போதுதான் பிக்பாஸ் இல்லாத ஒன்றை சிந்திக்க ஆரம்பித்திருக்கிறார்

‘அவன் எலக்ட்ரீசியன்.’ என்றேன்.

‘லூசு மாரிப்பேசாதீங்க. (ஹி.ஹி.. இதெல்லாம் சகஜமப்பா)  அவனுக்கு இந்த வேலையெல்லாம் பார்க்கும் ஆளுக தெரியும்னு சொன்னேன். ஆசிகா வீட்ல கூட கழுவுற  தொட்டித்தண்ணி ஓடலெ. மூர்த்தின்னு ஒரு பையன் வந்து பாத்தான். இப்ப நல்லா ஓடுது. ஆசிகாவையாவது கேட்ருக்கலாம்ல. 350 வெள்ளிங்கிறான். ஒடனே ஓகேங்கிறீங்க. ‘

சத்தம் கேட்டு, தூக்கத்தைத் தொலைத்துவிட்டு மகன் வந்தார்.

‘என்ன ஆரம்பிச்சாச்சா? இப்ப என்னா?’

‘தோம்புக்கதவு மூடவரலயாம், 350 வெள்ளியாம். ஒடனே ஓகேன்னுட்டாரு அத்தா’

‘ஏத்தா ஒரு வார்த்தெ எனக்கிட்ட கேட்ருக்கலாம்ல?’

‘நல்லாக் கேளுங்க தம்பீ. அதெத்தான் நா கேட்டேன்’

‘தோம்புப் பிரச்சினை தம்பி. நாளக்கி அவன் வந்து செய்வான்னு சொல்லமுடியாது. இப்ப என்ன.  எனக்கு என்னமோ யார்ட்டயும் கேக்கனும்னு தோனல. சொல்லிட்டேன்.’

‘ஏம்மா. அதான் அத்தா சொல்லிட்டாங்கள்ல. பிரச்னய விடுங்களே’

‘என் தோடு திருகாணி காணாப்போச்சு. ஒரு மாதமா சொல்லிக்கிட்டுருக்கேன். 100 வெள்ளிக்கு எனக்கிட்ட மூக்கால அழுவுறாரு. 350 வெள்ளியாம் தோம்புக்கு. ஒடனே ஓகேங்கிறாரு’

‘ஒங்களுக்குத் திருகாணி தானே வேணும். நா வாங்கித் தர்றேன். பிரச்சினயெ விடுங்க ’

அட! அந்த மொங், சே! மெங். சே! மிங் வந்துட்டான்.’

மாஸ்க் போட்டுக்கங்க என்று என்னை உஷார் படுத்திவிட்டு இரண்டு மாஸ்க்கைப் போட்டுக்கொண்டு, ஒரு பர்லாங் தூரத்தில் உட்கார்த்துகொண்டார் என் மனைவி.

ஹாய்!   ம்ம்ம்  மிங்!’

ஒரு தள்ளு வண்டியில் 3 கருப்புநிற பைகள். ஒரு பையை ஒரு கையால் சத்தியமாகத் தூக்கமுடியாது. அந்தப் பையின் ஓரத்தில் தையல் பிரிந்து லேசாக நீலவான நிறம் தெரிந்தது. அதுதான் உண்மையான நிறம். சிங்கப்பூர் சுதந்திரம் அடைந்தபோது அந்தப் பையை அவர் வாங்கியிருக்க வேண்டும். ஒரு பையைத் தூக்கிக் கொண்டு எனக்கு முந்தி படுக்கை அறைப்பக்கம் வேகமாகப் போனார்.

‘அது படுக்கை அறை. வலது பக்கம் திரும்புங்கள். அதுதான் சிக்கன் சே! கிச்சன்.’ ஏன் இப்படி ஒளர்றேன். சட்டென்று என்சிசி மாணவன் போல் வலது பக்கம் திரும்பி சல்யூட் அடிக்காத குறையாக நடந்தார். நான் முன்னே ஓடிப்போய் ‘இதுதான்’ என்று குச்சியைக் காட்டினேன். கழிவறைச்சுவருக்கும் தோம்புக் கதவுக்கும் குறுக்கே முட்டுக்கொடுத்த அந்தக் குச்சியை இழுத்தார். தோம்புக் கதவு தொப்பென்று விழுந்தது. மீண்டும் மூடி அந்தக் குச்சியை வைத்தார்.

‘அட1 நல்ல ஐடியாவா இருக்கே. இப்படியே இருக்கட்டுமே.’

அடப்பாவி இதச்சொல்லவா  உன்னைக் கூப்பிட்டேன். கதவைப் பாரப்பா ‘

‘அட நெம்பர் 1 அலுமினியம் தெரியுமா? இதெல்லாம் இப்ப வர்ஃறதில்ல தெரியுமா? இந்த சைஸும் இப்ப இல்ல தெரியுமா? இப்ப வர்றதெல்லாம் லேசான ஸ்டெயின்லெஸ் ஸ்டீல்தான் தெரியுமா? (எத்தனை தெரியுமா). அது 350 வெள்ளிதான். இது 500 வெள்ளி கொடுத்தாலும் கிடைக்காது தெரியுமா? சரி. பார்ப்போம். கதவைத் தூக்கி தன் முழங்காலில் தாங்கிக் கொண்டார். ஒரு பழைய கருப்பு டப்பாவை எடுத்தார். அதன் உண்மையான நிறம் தெரியவே இல்லை. டப்பாவைத் திறந்தார். ஆள்காட்டி விரலால் கொஞ்சம் களிம்பை, அட! கிரீஸ். எடுத்தார். கதவின் மேல் விளிம்பில் வந்து எட்டிப்பார்க்குமே அந்த ‘சாப்ஸ்டிக்’ மண்டையில் தடவினார் இன்னும் அதிகமாகத் தடவினார். ஒரு மரச்சுத்தியலால் லேசாகத் தட்டினார். அந்த மண்டை உள்ளே போய்விட்டு மீண்டும் திரும்பி வந்து ‘என்ன சேதி?’ என்றது. அதை மீண்டும் உள்ளே தள்ளி இன்னொரு கை கிரீஸை ஊட்டினார். அமுக்கி அமுக்கி விட்டார். ஸ்ப்ரிங் மாதிரி திரும்பி வந்து நலம் விசாரித்தது. அந்த கிரீஸை கதவின் எல்லா விளிம்புகளிலும் தடவினார். கரப்பான் பூச்சி மருந்துக் குப்பி மாதிரி ஒன்றை எடுத்தார். அதில் எலிவால் மாதிரி ஒரு குழாய் தொங்கியது. அதை எடுத்து கதவின் எல்லா ஓரங்களிலும் ‘புஸ்பஸ்’ என்று அடித்தார். சோப்பு நுரை மாதிரி ஏதோ பொங்கியது. அது என்ன எண்ணெயா? சோப்பா? தெரியவில்லை. இப்போது கைப்பிடியை இழுத்து கதவைச் சாத்தினார் கதவின் ஓரங்கள் உள்ளே போகமுடியா தென்று அடம் பிடித்தது. அந்த மரச் சுத்தியலை மீண்டும் எடுத்தார். அந்த ஓரங்களையெல்லாம் டொப்டொப்பென்று தட்டி சுளுக்கெடுத்தார். இன்னும் அடம் பிடித்தது. லேசாக உள்ளே தலையை விட்டு எட்டிப்பார்த்தார். அந்த எல்லை அவருக்குத் தெரியும்தானே. தலையை உள்ளே விடுவதற்கே ஆயிரம் வெள்ளி கொடுக்கலாம் என்று நினைத்துக் கொண்டேன். அட!அந்த மூலை இடிக்கிறது. அதையும் தட்டி சுளுக்கெடுத்தார். ஏதோ ஒரு படத்தில் ரஜினி வசனம் ஞாபகத்துக்கு வந்தது. ‘யாரு வேணாலும் தட்டலாம். எங்கே தட்டணும்? எப்படித் தட்டணும். அதுக்குத்தான் ஃபீஸ்.’ அந்த தோம்புக்குப் பக்கத்தில் ஊரிலிருந்து தூக்கிவந்த ஒரு  கல் அம்மியையும் குழவியையும் வைத்திருந்தேன்.

‘இதுல என்ன குப்பைதான் போட்றீங்களா. இல்ல. இதுமாதிரி பாராங்கல்லுகளைத் தூக்கிப் போட்றீங்களா? இப்புடி வளெஞ்சுருக்கு.’ மீண்டும் திறந்து மூடி சரிபார்த்துக் கொண்டார்.

‘இப்ப நீங்க தொறந்து மூடிப் பாருங்க’

நான் திறந்து மூடினேன். பூ மாதிரி திறந்து பூ மாதிரி மூடியது. அந்த இரும்புத் துண்டு ஒவ்வொரு முறையும் வணக்கும் சொல்லி உள்ளே போய் வெளியே வந்தது.

‘இனிமே பிரச்சினை இல்ல. அதுசரி இந்தத் தோம்பு எப்ப வாங்கினீங்க?’

‘நாங்க வாங்கல. வீடு வாங்கும்போதே இருந்துச்சு.’

‘வீடு எப்ப வாங்குனீங்க?’

‘2001ல’

அன்னாந்து பார்த்து கணக்குப் போட்டார். நல்லவேளை. கால்குலேட்டர் கேட்கவில்லை.

‘அட! 20 வருஷம் ஆயிடுச்சு. இன்னும் 20 வருஷத்துக்கு வேலெ செய்யும். இப்புடியே விட்ருங்க’

நான் தோம்பை மூடிவிட்டு பக்கத்தில் பார்த்தேன். அந்தக் குச்சி கிடந்தது. பார்க்கும்போதே குடலைப் புரட்டியது.

‘அது சரி. இப்பதான் புதுசா நாம மாத்தலியே. உங்க சார்ஜை சொல்லுங்க’

‘இதுக்கெல்லாம் காசு வாங்கினா என் தொழிலுக்கு தருமமில்ல சார். போக்குவரத்துச் செலவுக்கு 20 வெள்ளி குடுங்க.’

நான் 50 வெள்ளியை நீட்டினேன்.

‘சில்லரை இல்ல. பேநௌ ல அனுப்பிருங்க’ என்று சொல்லிவிட்டு, ‘அனுப்பீட்டியா, இங்கே வந்துருச்சா பாக்கிறேன்’ என்றெல்லாம் சரிபார்க்காமல் அந்தப் பையைத் தூக்கிக்கொண்டு அதே வேகத்தில் வெளியேறினார். ‘பேநௌ’ வில் அனுப்பிவிட்டு ‘அனுப்பிவிட்டேன். பார்த்துக்கொள்ளுங்கள்’ என்றேன். மின்தூக்கிக்குக் காத்திருந்தவர் ‘நன்றி’ சொல்லிவிட்டுப் புறப்பட்டார். அவர் வெளியே போனதும் பர்லாங் தூரத்தில் உட்கார்ந்திருந்த என் மனைவி கிட்ட வந்தார்.

‘அதான் போயிட்டாருல்ல. ரெண்டு மாஸ்க்கையும் கழட்டலாமுல்ல.’

கழட்டினார். ’20 வெள்ளியா? ரொம்ப நல்ல மனுஷங்க.’ என்றார்

‘இப்ப பேசுவீங்கடீ. நல்லாப் பேசுவீங்கடீ’ என்று மனசுக்குள் திட்டினேன். டீ,டீ என்று மனசுக்குள் திட்டியது சுகமாக இருந்தது. மனசுக்குள்தானே திட்டமுடியும்.

யூசுப் ராவுத்தர் ரஜித்


  

Series Navigationகவிஞர் அ.வெண்ணிலா எழுதிய ‘கங்காபுரம்’ நாவலுக்கு விருதுப.தனஞ்ஜெயன் கவிதைகள்
author

யூசுப் ராவுத்தர் ரஜித்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *