வாழ்க்கை தருவதற்கும் பிடுங்கிக் கொள்வதற்கும் அனுமதி கேட்பதில்லை. ஒவ்வொரு மனிதனும் பிறப்பால் தான் உயர்ந்தவன் என்றே நினைக்கிறான். ஏழைகளைவிட பணக்காரனே செல்வத்தைப் பற்றி அதிகம் சிந்திக்கிறான். மனிதனுக்கு அரியாசணத்தை தருவதும், கையில் திருவோடு தருவதும் வாழ்க்கை தான். மனிதன் ஆதாயம் கருதியே பொய் பேசுகிறான். வியாபாரத்தில் பிழைக்கத் தெரியாதவன் தான் உண்மை வழியில் நடப்பான் என்கிறான். இந்த உலகில் கொடுக்கின்ற கை மேலே இருக்கும், இரந்து வாங்குகின்ற கை கீழே தான் இருக்கும். தங்கக் கட்டிகளை பஞ்சு மெத்தைக்கு கீழே ஒளித்து வைத்துக் கொண்டு தூக்கம் வராமல் புரளுகிறான். வாழ்க்கை ஒரு வாய்ப்பு என அவன் உணருவதே இல்லை. எது தான் இங்கு நிரந்தரம் என்று அவன் யோசிப்பதே இல்லை. வந்தவர்களும் போனார்கள், வருகின்றவர்களும் போவார்கள். பணத்திற்கும் நிம்மதிக்கும் வெகுதூரம், ஒன்றை பெறுவதற்கு ஒன்றை இழந்துதான் ஆகவேண்டும்.
கடவுளைக் கூட சாம்ராஜ்யதாரியாகத்தான் இவன் எண்ணுகிறான். இவனுடைய நாட்டின் எல்லையை விட அவனுடைய நாட்டின் எல்லை மிகப்பெரியது அவ்வளவே. தான் செய்யும் செயலுக்கும் அதன் பலனுக்கும் தொடர்பு இருப்பதாக அவன் கருதுவதே இல்லை. வாழ்க்கை தான் கிரீடம் தருகிறது அது வாழ்வதற்கா வீழ்வதற்கா என யாருக்குத் தெரியும். யாரை ஏமாற்றி எப்படிப் பணம் பறிக்கலாம் என்பதே இவன் எண்ணமாக இருக்கும். காதற்ற ஊசியும் வாராது தான் இதை அவன் உணருவதே இல்லை. அவன் கனவுகளில் கூட பணமழைதான் பொழியும். வைரம் வெறும் கரித்துண்டு தான் இது அவனுக்குத் தெரியாது. மண்ணிலிருந்து தோன்றியவைகளுக்கு மதிப்பு தருவது யார்? இவன் வானத்தை அண்ணாந்து பார்ப்பதன் நோக்கமே பணமழை பெய்யாதா என்று தான். ஏழைகளுக்கு துண்டை விரித்துப் படுத்தால் தூக்கம் வந்துவிடும். அலமாரியை பூட்டினோமா என்று நினைத்தபடி படுப்பவனுக்கு பஞ்சுமெத்தைக் கூட முள்படுக்கை தான்.
விசித்திரமான சம்பவங்களால் ஆனது தான் இவ்வுலகம். உலகம் சக்கரவர்த்திகளையும், பேரழகிகளையும், பிச்சைக்காரர்களையும் கண்டிருக்கிறது. சாம்ராஜ்யங்கள் புதைமணலாக போனதை வரலாற்றில் இன்றும் நாம் படிக்கிறோம். தொட்டதெல்லாம் பொன்னானாலும் அவனுக்குப் போதாது. ஊருக்கு அவன் பணக்காரனாக இருந்தாலும், உள்ளுக்குள் கையேந்தும் பிச்சைக்காரனாகத்தான் இருந்து கொண்டிருப்பான். அவனுடைய மூளை லாபநட்டக் கண்க்குகளால் நிறைந்திருக்கும். கடவுளே கதவைத் தட்டினாலும் அவன் காதில் விழாது. வாழ்க்கை இது அல்லது அது என்று தேர்ந்தெடுக்கும் வாய்ப்பை யாருக்கும் வழங்குவதில்லை. நதியானால் இரு கரைகள் இருக்கத்தானே செய்யும். தோன்றினால் மறையத்தானே வேண்டும். இரவு பகல் ஆண் பெண் என எல்லாமே இரண்டாய்த்தானே இருக்கிறது. விதியின் போக்கு இப்படித்தான் இருக்கும் என ஆருடம் கூற முடியுமா? வரலாற்றுப் பிழைகளை திருத்துவதற்கு காலஇயந்திரத்திலா பயணிக்க முடியும். உன்னுடைய பணம் ஏழையின் பசியைப் போக்க பயன்படவில்லை என்றால் அது வெறும் குப்பைக் காகிதம்தான். வாரி வழங்காத உன்னிடம் செல்வம் சேருகிறதே எதற்காக அவனுடைய நாடகத்தில் நீ முக்கிய கதாபாத்திரம் அதற்காக.
மரணம் ஒரு விடுதலை, ஓய்வு, இளைப்பாறுதல். வாழ்க்கை மிகச் சாதாரணமானது. முற்றுப்புள்ளிதான் மகத்தானது. கடவுளின் இருப்பை அது நிலைநிறுத்துகிறது. இந்த உலகினில் ஜனனமும், மரணமும் அன்றாட நிகழ்வு. வாழ்க்கைப் பாதை நம்மை எங்கு கொண்டு போய்ச் சேர்க்கும் என யாருக்கும் தெரியாது. நதியின் இலக்கு கடல் தான் அல்லவா? தூரத்தில் தெரியும் வெளிச்சம் தானே நமக்கு நம்பிக்கைத் தருகிறது. நமது அன்றாட வாழ்க்கையில் விதியின் பங்கு பெரிதாக இருக்கிறது. காலச்சக்கரம் அனைத்தையும் கடந்து சென்று கொண்டே இருக்கிறது. அது யாருக்காகவும் காத்திருக்காது. காற்புள்ளியும், அரைப்புள்ளியும், முற்றுப்புள்ளியும் அவன் வைப்பது. சங்கரர் உலகம் மாயை என்றார். புத்தர் மரணத்துக்கு முக்கியத்துவம் கொடுத்தார். மரணம் மட்டுமே வாழ்க்கையை முழுமையடையச் செய்கிறது. ஒரு வட்டம் நிறைவுறுகிறது. விதை அழிகிறது. மனிதனால் மரணத்தை தள்ளிவைக்க முடிந்ததே தவிர வெற்றி காண முடியவில்லை. பட்டினத்தாரும், அருணகிரிநாதரும் பிறவாமை வரம் வேண்டியதற்கு காரணமில்லாமலா இருக்கும்.
தருமத்திலிருந்து சிறிதும் வழுவாதவன் தருமன். நல்லவர்கள் தானே சோதனைக்கு ஆட்படுத்தப்படுகிறார்கள். பதிமூன்று ஆண்டுகால வனவாசத்தில் அன்றைய தினம் பாண்டவர்கள் கானகத்தில் நெடுந்தொலைவு பயணப்பட்டுவிட்டனர். களைப்பு மேலிட மரத்தின் நிழலில் ஓய்வெடுத்த அவர்களுக்கு தாகம் ஏற்பட்டது. தருமன் சகாதேவனிடம் மரத்திலேறி நீர்நிலை அருகில் இருக்கின்றதா என பார்க்கச் சொன்னான். மரத்திலேறிய சகாதேவன் நீர் நிலையைக் கண்டான் தானே ஜலம் எடுத்து வருவதாகச் சொல்லி சென்றான். நீரில் கைவைக்க முனைந்தபோது ஒரு யட்சன் தோன்றினான். இது எனக்குச் சொந்தமான நீர்நிலை என்றும் தனது அனுமதியின்றி பருக இயலாது என்றும் அப்படி மீறி அருந்தினால் அடுத்தக் கணமே பிணமாகிவிடுவாய் என்றும் எச்சரிக்கிறான். அவனது பேச்சை பொருட்படுத்தாமல் சகாதேவன் நீரைப் பருக முற்பட பிணமாய் வீழ்ந்தான். சகாதேவனைத் தேடி வந்த நகுலனும் சகோதரன் மயக்கமுற்று வீழ்ந்து கிடக்கிறான் என எண்ணி நீரை எடுத்து முகத்தில் தெளிக்கலாம் என நீரை கைகளால் அள்ள முயல அதே யட்சன் தோன்றி மீண்டும் எச்சரித்தான். அதனை அலட்சியப்படுத்திய நகுலன் நீரை அள்ள முற்பட அவனும் பிணமாக சரிந்தான்.
இருவரையும் தேடிவந்த அர்ச்சுனனும் யட்சன் பேச்சை மதிக்காமல் வீரவசனம் பேசி பிணமாக சரிந்தான். மூவரையும் தேடி வந்த பீமனோ யட்சனை மதிக்காமல் ஏதோ பிதற்றுகிறான் என எண்ணி என் கதாயுதம் உனக்கு பதில் சொல்லும் என்று திமிறியவன் ஜலத்தை தொட்டவுடன் பிணமாகச் சரிந்தான். சகோதர்கள் நால்வரும் போய் வெகு நேரம் ஆகிவிட்டபடியால் தருமன் அவர்களைத் தேடி வருகிறான். நால்வரும் செத்துக் கிடக்கவே அதிர்ச்சி அடைகிறான். எந்த கைகலப்பு நிகழ்ந்ததற்கான அறிகுறி அங்கு காணப்படவில்லை பின் எப்படி என்று யோசிக்கிறான். நீர்நிலைக்குள் இறங்கி நீரை இரு கரங்களால் அள்ள யட்சன் தோன்றி என் கேள்விகளுக்கு பதில் சொல்லிவிட்டு ஜலத்தினை அள்ளு என்கிறான். தருமன் என்ன நடந்திருக்கும் யூகித்துக் கொள்கிறான். கேள் யட்சனே என்கிறான். யட்சன் பீடிகையுடன் உலகில் மிக ஆச்சரியமான விஷயம் எது என்கிறான். தருமன் கேள்விக்கு பதில் கூற ஆரம்பிக்கிறான். இந்த உலகில் மரணம் நிகழாத நாளே இல்லை. மனிதன் எத்திசையில் பயணித்தாலும் மரணமே அவன் முன் வந்து நிற்கிறது கைகொட்டிச் சிரிக்கிறது. எப்போது கதை முடியும் என்று யாருக்கும் தெரியாது. கண்டவர் விண்டிலர் தான். யாராலும் நுழைய முடியாத கோட்டைக்குள் மரண சர்ப்பம் மிக எளிதாக நுழைந்துவிடுகிறது.
பேரரசர்களும் பிச்சைக்காரர்களைப் போல் மரணத்தை முத்தமிடவே செய்கிறார்கள். மரணம் ஒருவனுக்கு எந்த ரூபத்தில் எதிர்ப்படும் என்று யாருக்கும் தெரியாது. மரணத்தின் முன்பு அனைவரும் சரணடைந்துதான் ஆக வேண்டும். எல்லா பயணங்களும் மரண ஊரை நோக்கியே இருக்கிறது. போற்றிப் பாதுகாத்த உடலை மரணம் எரித்துக் காட்டுகிறது. பேரழகிகளும் பிடி சாம்பலாய்த்தான் போகிறார்கள். நிரந்தரம் என்று எதுவுமே இப்பூமியில் இல்லை. ஆள்பவனுக்கு ஒரு விதி, ஆண்டிக்கு ஒரு விதி இங்கில்லை. எல்லோருக்கும் ஒரே விதி. பிச்சைக்காரனுக்கு என்ன நடக்கின்றதோ அதுவே பேரரசனுக்கும் நடக்கிறது. கூத்தாடிகள் அரிதாரம் களைத்து சென்று கொண்டே இருக்கிறார்கள். பூவுலகில் தர்மத்தை நிலைநாட்ட தர்மமே இறங்கி வேலை செய்கிறது. ஒருவனின் வாழ்க்கையில் மரணம் சேற்றை வாரி இரைக்கிறது. அவன் கட்டி வைத்த கோட்டைகள் நிர்மூலமாக்கப்படுகிறது. இதைக் கண்கூடாக காணும் மனிதன் தனக்கு மரணமே வராது தனது வாழ்வு சாசுவதம் என நினைக்கிறான். இதுவே உலகில் மிக ஆச்சரியமான விஷயம் என்று முடிக்கிறான் தருமன்.
யட்சன் தருமன் பதிலால் திருப்தி அடைந்து உனது சகோதரர்களில் ஒருவரை அழைத்து உயிர்த்தெழச் செய்யும் உரிமையை வழங்குகிறேன் என்கிறான். தருமனோ சிறிதும் யோசிக்காமல் நகுலனை உரக்கக் கூப்பிட்டு எழுப்புகிறான். யட்சன் ஆச்சரியப்படுகிறான். பலசாலி பீமன் வீழ்ந்து கிடக்கிறான். வில்லுக்கு விஜயன் அர்ச்சுனன் பிணமாகக் கிடக்கிறான். போர்க்களத்தில் எதிரிகளை பந்தாடக்கூடிய இவர்களை விட்டுவிட்டு நீ ஏன் நகுலனை எழுப்புகிறாய் என்று கேட்கிறான். தருமனோ எனது தந்தைக்கு எனது தாய் குந்தியும், மாத்ரியும் மனைவிமார்கள். குந்தியின் புத்ரன் நானொருவன் உயிருடன் இருக்கிறேன், மாத்ரியின் மைந்தன் ஒருவன் உயிரோடு இருப்பது தானே தர்மநீதியாகும் என்கிறான். யட்சன் மறைகிறான் தனது தர்மத்தை சோதித்தது தருமதேவதை என்பதை யுதிஷ்டிரன் அறிந்து கொள்கிறான். நால்வரும் உறங்கி எழுவதைப் போல் எழுகிறார்கள். அவர்களிடம் தருமனின் அறமே உங்களை காத்தது என்று சொல்லி மறைகிறது தர்மதேவதை. காலம் தொடர்ந்து பகடைக்காய்களை உருட்டியபடி இருக்கிறது.
ப.மதியழகன்
115,வள்ளலார் சாலை,
ஆர்.பி.சிவம் நகர்,
மன்னார்குடி – 614001.
திருவாரூர் மாவட்டம்.
cell:9597332952
Whatsapp: 9384251845
- தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]
- சைக்கிள்
- கன்னித்தீவு
- குருட்ஷேத்திரம் 25 (யட்சனுடன் சம்வாதம் செய்த தருமன்)
- குருட்ஷேத்திரம் 26 (தருமனின் வாயிலிருந்து வசைச் சொல் வந்து விழுந்தது)
- அ. முத்துலிங்கம் எழுதிய “ ஐந்து கால் மனிதன் “ வாசிப்பு அனுபவம்
- சூட்சுமம்
- மலர்களின் துயரம்
- வெப்ப யுகப் பிரளயம்!
- அதிரடித் தாக்குதலுக்கு உள்ளான ஹவாய் பேர்ள் ஹாபரின் நினைவுச் சின்னங்கள்
- கவிஞர் அ.வெண்ணிலா எழுதிய ‘கங்காபுரம்’ நாவலுக்கு விருது
- அற்ப சுகங்கள்
- ப.தனஞ்ஜெயன் கவிதைகள்
- மாதிரி மலர்கள்
- தமிழவனின் நடனக்காரியான 35 வயது எழுத்தாளர்
- அணுவியல் துறை வெப்ப சக்தி உற்பத்தியால் குளிர் & வெப்ப நாடுகள் பெறும் உறுதிப் பயன்பாடுகள்