அழகியசிங்கர்
நகுலன் கதையைப் படிக்கும்போது ஓர் அலாதியான உணர்வு ஏற்படுகிறது. கதையின் மூலம் அவரைப் பற்றியே சொல்கிறார் வேற எதாவது சொல்கிறாரா என்ற சந்தேகம் வந்து விடும்.
அதிகப் பக்கங்கள் அவர் கதைகள் எழுதவில்லை. மேலே குறிப்பிட்ட கதை ஒரு மூன்றரைப் பக்கக் கதை.
அவர் கதையை ஆரம்பிக்கும்போது அவர் அறையில் உட்கார்ந்திருப்பதாகத்தான் ஆரம்பிப்பார். அவர் ஒரு எட்டு வயதுக் குழந்தையை அறிமுகப்படுத்துகிறார். எப்படி? அது ஒரு கிராமத்தில் ஒரு சிறு வகுப்பில் படித்துக்கொண்டிருந்தது. கறுப்பிலும் கறுப்பு. அறிவு கனலும் கண்கள். அதன் பெயர் கலா. வீட்டில் சிமி என்று அழைக்கிறார்கள்.
பெரும்பாலும் நகுலன் கதைகள் அவருடைய சுய வரலாறா அல்லது கட்டுரையா என்ற சந்தேகம் வரும்.
அந்தக் குழந்தை கேட்கிறது ஒரு பாட்டுப் புத்தகம் கிடைக்குமா என்கிறது. புத்தகம் கொடுத்தால் அதற்கு விலை கொடுத்து வாங்க வேண்டாம் என்றது.
அவர் உடனே மலையாளத்தில் புது முத்திரைகள் என்ற கவிதைத் தொகுதியைக் கொடுத்த கணமே ஒரு ஐயம் ஏற்படுகிறது நகுலனுக்கு. ஒரு மலையாளப் புதுக்கவிதையை அணுக முடியுமாவென்று. அடுத்து, அதற்கு குஞ்சுண்ணி யின் கிக்கணிக் கவிதைகள் என்ற தொகுதியை (அதில் சித்திரங்கள் இருந்தன) யும் வாங்கிக் கொடுத்துள்ளார்.
அடுத்த நாள் காலையில் அந்தக் குழந்தை மாதவன் அய்யப்பத்து எழுதிய பணி அறைக்குள் என்ற கவிதையிஙூருந்து சில வரிகளை ஒரு உள்நாட்டத்துடன் இசை பூர்வமாகப் பாடிக்காண்பித்ததும் நகுலனுக்கு ஆச்சரியமாக இருந்தது. அக் குழந்தை இன்னும் சில கவிதைகளைப் பாடிக் காட்டி இவருக்கு ஒரே ஆச்சரியம்.
தன் பாட்டு வாத்தியார் பாடல்களை நன்றாகச் சொல்லிக் கொடுப்பார் என்றது குழந்தை.
நவீன மலையாளக் கவிதைகளில் குஞ்சுண்ணியிடம் நகுலனுக்கு ஒரு தனிப்பட்ட பிடிப்புண்டு. அவர் கவிதைகளை குழந்தைகளும், பெரியவர்களும் அனுபவிக்க முடியும்.
வரிவடிவம் ஒலி வடிவமாக கவிதையின் ஒலிச்சரடு விதம்விதமான தளங்களில் சுழித்துச் செல்வதைக் காண்கையில் அவைகளை கம்பன் வார்த்தைகளில் சொல்வதென்றால் செவிநுகர் கனிகள் என்றே சொல்ல வேண்டும்.
எல்லோரும் குழந்தையைப்பார்த்து கறுப்பி என்கிறார்கள். அதைக் கேட்டு அந்தக் குழந்தை எந்த சலனமும் அடையவில்லை.
ஒருநாள் திரும்பவும் வந்து அது நகுலனிடம் சொன்னது. மாமன் மூன்று கவிதைகள் எழுதியிருக்கிறேன் பாருங்கள், என்று காட்டுகிறது.
குழந்தை சுய லயிப்புடன் அக்கவிதைகளைப் படிக்க நகுலன் அவரை மறந்து கேட்டுக் கொண்டிருந்தார்.
கடைசியில் முடிக்கும்போது மறுபடியும் அவர் அறைக்குள் நகுலன் புகுந்து கொள்கிறார். குழந்தையில்லை, கவிதையில்லை தான் என்று சொல்லப்படும் நானும் இல்லை.
அறை மாத்திரம் இருந்தது என்று முடிக்கிறார். நகுலனுக்குத் தனிப்பட்ட அக்கறை ஏற்படக் காரணம், குழந்தை கவிதைப் புத்தகத்தை வாங்கிக்கொண்டு போகிறது. அதை அடுத்த முறை வரும்போது கவிதையைப் பாடுகிறது. பின் அதுவே கவிதை எழுதுகிறது.
ஒருசில கணங்கள் தன்னையே மறந்து விடுகிறார். ஒரு எட்டுவயதுபெண் குழந்தையும் மலையாளக் கவிதையும் என்று முடிக்கிறார்.
இதைப் படிக்கப் படிக்க நன்றாக யோசிக்க வேண்டிய கதைபோல் தோன்றுகிறது.
ஒருவர் இக்கதையை வாசிக்கும்போது நகுலன் என்ன எழுதியிருக்கிறார், இது கதையா என்று கேட்கலாம். மலையாளக் கவிதைகளை வாசிக்கும் சிறுமியிடம் ஒரு ஈடுபாடும், அக் குழந்தை அவர் மாதிரி கவிதை எழுதுவதில் காட்டுகிற தீவிரம்தான் இந்தக் கதை. கதையை முடிக்கும்போது குழந்தையை விட்டு விடுகிறார். தன்னைப் பற்றி ஒரு ஆத்ம விசாரணை நடத்துகிறார். அதனால்தான் கவிதை எதுவுமில்லை என்கிறார். குழந்தையும் இல்லை அவரும் இல்லை. எதுவுமில்லை. இக்கதையில் தன்னை அறிதல் என்பதைத் தெளிவு படுத்துகிறாரா?
கணையாழி 1992ல் வெளிவந்தது இக் கதை.
25.09.2021
- காற்றுவெளி கார்த்திகை 2021
- தீட்சண்யம்
- நண்பர் வீட்டு புதுமனை புகுவிழா
- மனசு
- ஜப்பானிய சிகோ கதைகள்
- 25 வது மணி
- சூடேறிய பூமியில் நாமென்ன செய்யலாம் ?
- வெப்ப யுகக் கீதை
- பெண் பிள்ளையானாலும் என் பிள்ளை
- “வள்ளுவத்தின் விரிவும் வீச்சும்”
- திருமந்திர சிந்தனைகள்: மூலரின் காலம், பெயர், இடம், வரலாறு
- சொல்லத்தோன்றும் சில……
- நகுலனின் ஓர் எட்டுவயதுப் பெண் குழந்தையும் நவீன மலையாளக் கவிதையும்