ஜோதிர்லதா கிரிஜா
(”சுமங்கலி” யின் 15.6.1987 இதழில் வெளியானது. “அது என்ன நியாயம்?’ எனும் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் வெளியிட்ட தொகுப்பில் உள்ளது.)
“இந்தத் தடவையாவது ஆண்பிள்ளையாப் பெத்துண்டு வாடியம்மா. இந்த வம்சம் தழைக்க வேண்டாமா? அதுக்குத்தான். பெண் குழந்தை தாழ்த்தின்னுட்டு இல்லே…” என்ற மாமியாரின் சொற்களை நினைத்துத் தனக்குப் பக்கத்தில் கிடத்தப்பட்டிருந்த நான்காவது பெண் குழந்தையின் மீது தன் பார்வை பட்டதும், அநுபமா மனசுக்குள் சிரித்துக்கொண்டாள்.
அநுபமாவின் பெற்றோர்களுக்கும் நான்காவதும் பெண்ணாகிப் போனதில் கொஞ்சம் ஏமாற்றம்தான். ஒரு குடும்பத்தில் எல்லாமே பெண் குழந்தைகளாகவோ அல்லது எல்லாமே ஆண் குழந்தைகளாகவோ இருப்பது சற்று சுவைக் குறைவுதான். குறைந்த பட்சம் ஆண் குழந்தைகள் நிறைய பிறக்கிற குடும்பத்தில் ஒரே ஒரு பெண்ணோ, அல்லது பெண் குழந்தைகள் நிறைய பிறக்கிற குடும்பத்தில் ஒரே ஒர் ஆணோ பிறந்தால்தான் வாழ்க்கை இனிக்கிறது.
அநுபமாவுக்குச் சிரிப்பு வந்தது. சற்றே ஒருக்களித்து, புதிய மகளைப் பார்த்தாள். முழு மனத்துடனான வரவேற்பு தனக்குக் கிடைக்கவில்லை என்பதை அறியாத அந்தப் புது மலர் கண் மூடிப் படுத்துக் கிடந்தது. அவளுக்கும் பிள்ளைக் குழந்தை ஒன்றாகிலும் வேண்டும் என்கிற ஆசை இருக்கத்தான் செய்தது. அதைப் பற்றி அவளே ஓரிரு தடவைகள் வாய்விட்டே சொன்னதுண்டுதான்.
ஆனால், அதற்காக, “அய்யோ!” என்று இடிந்து போக அவள் தயாராக இல்லை. படிப்பும் அறிவும் மிகுந்த அவள் மனம் அப்படி ஒரு குடி முழுகிவிட்டார்ப் போன்ற இழப்பு உணர்ச்சிக்கு ஆட்பட்டதே இல்லை. அவளுடைய அம்மாவுக்கும்தான் ஆறு குழந்தைகள் பிறந்தன. எல்லாமே பெண்கள்.
அவளுடைய அப்பா அறைக்கு வெளியே அம்மாவிடம் கேட்டது அவள் காதுகளில் நன்றாக விழுந்தது. “அநுபமாவுடைய புக்காத்துக்குக் கார்டு போட வேண்டியதுதானே?”
“போட வேண்டியதுதான். அவ மாமியாருக்குத்தான் மகா துக்கமா இருக்கும். அதுக்காக ஒரு பொண்ணைக் கரிச்சுக் கொட்ட மாட்டேன்,” என்ற அம்மாவின் பதிலும், அதைத் தொடர்ந்து அவள் வெளியிட்ட பெருமூச்சும் கூட அவள் காதுகளை வந்தடைந்தன.
‘அப்பா அதற்கு என்ன சொல்லப் போகிறார்?’ – கவனித்தாள்.
“எங்கம்மா உன்னைக் கரிச்சுக் கொட்டினதை ஞாபகப்படுத்தறியாக்கும்!”
என்று கேட்டுவிட்டு அவர் சிரிக்கவும் செய்தார்.
“கரிச்சுக் கொட்டினதோட மட்டுமா? உங்களுக்கு இன்னொரு கல்யாணமும்னா பண்ணி வைக்கப் பார்த்தா உங்கம்மா?”
“நான் அதுக்குத் துளி இடமாவது குடுத்தேனா? அதைச் சொல்லு.”
“சரி, சரி. கார்டை எழுதிப் போடுங்கோ.”
“ஜாடையெல்லாம் ஒண்ணும் சொல்றாப்ல இல்லே. ஒரு அஞ்சாறு மாசமாவது ஆனதுக்கு அப்புறந்தான் தெரியும்,” என்றபடி அவர் அவள் கணவனுக்குத் தாம் எழுதி இருந்த கடிதத்தை எடுத்து வந்து அவளிடம் நீட்டினார். அருகில் இருந்த நாற்காலியில் உட்கார்ந்தார்.
அம்மாவைக் காட்டிலும் அவளுக்கு அப்பாதான் அதிக நெருக்கம். அவர் உட்கார்ந்ததும், “அம்மா கிட்ட நீங்க சொன்னதை நான் கேட்டுண்டுதான் இருந்தேன். ஏம்ப்பா …ஆண் குழந்தை பிறக்கலைங்கிறதுக்காக உங்களுக்கு ரெண்டாங் கல்யாணம் பண்ணி வைக்கப் பார்த்தாளா பாட்டி?” என்று வினவிய மகளை அவர் வியப்புடன் பார்த்தார்.
“அதுக்கென்ன இப்போ?” என்று கேட்டுவிட்டு அவர் தமக்குள் திடீரன்று தோன்றிய ஓர் ஊகத்துடன் மகளைக் கவலையாய் ஏறிட்டார்.
“சும்மா கேட்டேம்ப்பா. … யாரு கண்டா? ஒரு வேளை எங்க மாமியாரும் அது மாதிரி என்னத்தையாவது அசட்டுப் பிசட்டுனு ஆரம்பிப்பாரோ என்னவோ? அதுக்குத்தான் கேட்டேன்,” என்றாள். ஒரு கோடி காண்பிக்கிறது மாதிரி தன் மாமியாரும் அப்படிப்பட்டவள்தான் என்பதை நாசூக்காகத் தெரிவிக்க முற்பட்டாள்.
“உங்க மாமியார் செய்யக்கூடியவதான்!”
அநுபமாவுக்குப் பதில் சொல்ல வாய் வரவில்லை. சில நொடிகள் மவுனத்தில் கழிந்த பிறகு, “இருக்காதாப்பா பின்னே? நாலும் பொண்ணுங்கிறச்சே கொஞ்சம் ஆத்திரம் வரத்தானே செய்யும்? ஒண்ணாவது பிள்ளையா இருக்கலாமேன்னு எனக்குந்தான் ஆசையா இருக்கு. … நீங்களுந்தானேப்பா ஆசைப்பட்டேள்?”
“உண்மைதாம்மா. என்னைப் பொறுத்த மட்டில ஆண் பிள்ளை ஒசத்தின்னோ, பொண்ணு தாழ்த்தின்னோ நினைக்கிறவனில்லே. அது உனக்கே தெரியும். அதனாலதானே உங்களை யெல்லாம் பிள்ளைக் குழந்தைகளைப் படிக்க வைக்கிற மாதிரி படிக்க வெச்சேன்? … ஆண் பிள்ளைகளைப் போல சம்பாதிச்சுப் போட்டேள். உங்க கல்யாணப் பாட்டை நீங்களே பார்த்துண்டேள். ஆனாலும், நீ சொல்றாப்ல, எல்லாமே பொண்ணா இருந்தா இந்தப் பாழும் மனசு ஒரு ஆம்பளைக் குழந்தைக்கு ஆசைப்படத்தான் செய்யறது …”
அம்மா வேதா துவைத்து உலர்த்திய குழந்தைத் துணிகளுடன் அங்கே வந்தாள்.
வேணுகோபாலன் கடிதத்தை எடுத்துக்கொண்டு கிளம்பினார். அவர் போன பிறகு, மகளருகே உட்கார்ந்துகொண்ட வேதா, “இப்பவும் பொண்ணாயிடுத்தேன்னு உங்க மாமியார் ஏதாவது சொல்லுவாளோ?” என்றாள்.
“பிள்ளைக் குழந்தை வேணும்னு உனக்கு ஆசை இருக்கத்தானே செய்யறது?”
“ஆமாம். இருக்குதான். அதுக்குன்னு என்ன பண்ண முடியும்? ஒண்ணு, பெத்துக்காம இருக்கணும். இல்லே, பெத்தாச்சுன்னா அதுகளைக் கரிச்சுக் கொட்டாம வளர்க்கணும்…. அம்மா! உனக்கொண்ணு தெரியுமோ?”
“என்னது?”
“ஒரு பொண்ணுக்கு வரிசையா பொண் குழந்தைகளாவே பொறந்தா அதுக்கு அவ ஜவாப்தாரி இல்லே. அவ புருஷந்தான் ஜவாப்தாரியாக்கும்!”
“இதென்னடி புதுக் கதையா இருக்கு?”
“அதுதாம்மா உண்மை. ஆணுடைய உடம்பு வாகு அப்படின்னா, ஒண்ணு ஆம்பளைகளாவே பொறந்திண்டிருக்கும். இல்லைன்னா, பொண்களாவே பொறந்துண்டிருக்கும்.”
வேதா கண் கொட்டாமல் மகளைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
… குழந்தை பிறந்த செய்தி கிடைத்ததற்கான அறிகுறியையே காட்டாமல் அநுபமாவின் புக்ககம் மவுனம் சாதித்தது. மற்றவர்களைப் பற்றிப் பரவாயில்லை. அவள் கணவன் துரையின் மவுனம்தான் எரிச்சலைக் கிளர்த்தியது.
மூன்றாவது பெண்ணாய்ப் பிறந்த சில மாதங்களுக்குப் பிறகு தனக்கும் அவனுக்குமிடையே நடந்த உரையாடல் அவளுக்கு ஞாபகம் வந்தது.
“என்ன அது இப்படிப் பண்ணிட்டே? இந்தத் தடவையாவது ஆம்பளையாக் குடுப்பேன்னு ஆவலோட எதிர்பார்த்தேனே …” – அவன் இவ்வாறு கேட்டது பற்றிக்கூட அவள் வருத்தப்படவில்லை. கேள்வியில் ஒலித்த குற்றச்சாட்டைத்தான் அவளால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. எனினும் பதில் சொல்லாமல் இருந்தாள்.
“உங்க குடும்பத்து வாகு போலிருக்கு. உங்கம்மாவுக்கும் எல்லாம் பொண் குழந்தைகள் தானே?” என்று அவன் மேலும் தொடர்ந்ததும்தான் அவள் கடைப்பிடித்த நாகரிகம் அவளைக் கைவிட்டது.
“எங்கம்மாவுக்கு வரிசையா எல்லாம் பொண்ணாவே பொறந்தது எங்கம்மா தப்பு இல்லே. அது எங்கப்பா தப்பு. அதே மாதிரி நான் வரிசையாப் பொண்ணாவே பெத்துக்குறதுக்கும் நான் காரணமில்லே. நீங்கதான் காரணம்.”
“என்னது? என்ன உளர்றே?”
“நான் ஒண்ணும் உளறல்லே. … உங்களுக்கும் அது தெரியும். போன மாசம் நான் கொண்டுவந்த பத்திரிகையிலே அது பத்தி வந்த கட்டுரையை நீங்க படிச்சதை நான் பார்த்தேன். ஆண்களோட வீரியத்துல ஆண் குரோமசோம்கள் அதிகமா யிருந்தா ஆண் குழந்தை பிறக்கும். அப்படி இல்லேன்னா, ஆண் குழந்தை பிறக்காதுன்னு ஒரு பெரிய லேடி டாக்டர் ஆதாரபூர்வமா எழுதி யிருந்ததை நானும் படிச்சேன்.”
துரை பொட்டில் அடிபட்டது போல் அடங்கிப் போய் வாயை மூடிக்கொண்டான். இருப்பினும் முகத்துச் சிவப்பு மறையவில்லை.
உடல்நலத்தை உத்தேசித்தும், அலுவலகத்தில் வேறு பணி புரிந்து கொண்டிருந்ததால், கைக்குழந்தை விளைவிக்கக் கூடிய சிக்கல்களைத் தவிர்க்குமுகமாகவும், குடும்பக்கட்டுப்பாட்டு முறைகளை அவன் கடைப்பிடிக்க வேண்டும் என்று சொன்னபோது அவன் அதை ஒப்புக்கொள்ளவில்லை. அவளையும் அதற்கு விடவில்லை.
இனிமேல் குழந்தை பெறவே கூடாது என்று இந்த நான்காம் பிள்ளைப்பேறு அவளை நினைக்க வைத்தது. …
ஒரு மாதம் கழித்து வேணுகோபாலன் அவள் கணவனுக்கு இன்னொரு கடிதம் எழுதினார். மகளையும், குழந்தையையும் அழைத்துக்கொண்டு வந்து விடுவதாக அதில் குறிப்பிட்டிருந்தார். அதற்கும் அவனிடமிருந்து பதில் இல்லை. எனினும் குறிப்பிட்ட நாளில் அவர் மகளுடன் சம்பந்தி வீட்டை அடைந்தார்.
வீட்டுக்குள் நுழைந்த அவர்களைப் பார்த்து வரவேற்கும் தோரணையில் ஒப்புக்காகத் தலையசைத்துவிட்டு மாமியார் உள்ளே போய்விட்டாள்.
“வாங்கோ, வாங்கோ,” என்று அசட்டுக்களை முகத்தில் பரவ மாமனாரைப் பார்த்துவிட்டுக் குற்ற உணர்வுடன் தலையைக் குனிந்துகொண்டான் துரை.
அநுபமா வெளிப்படையான ஆத்திரத்துடன் கணவனை ஏறிட்டுவிட்டு, ஓடிவந்து காலைக் கட்டிக்கொண்ட மற்றக் குழந்தைகளைக் கொஞ்சிய பின், தனது கடைக்குட்டியைச் சத்தமாக ஒரு முத்தமிட்டுவிட்டு, “என் ராஜாத்தி!” என்று அணைத்துக் கொண்டாள்.
வேணுகோபாலனுக்கு வந்த ஆத்திரத்துக்கு அளவே இல்லாது போயிற்று. அன்றே புறப்பட விரும்பினார். ஆனால் அநுபமா அதற்கு அனுமதிக்கவில்லை.
“எனக்கும் இந்த வீட்டில உரிமை இருக்குப்பா. ஒரு வாரமாவது இருந்துட்டுத்தான் நீங்க போகணும். தெரிஞ்சுதா?” என்று கண்டிப்பாகச் சொல்லிவிட்டாள்.
மறு நாள் காலையில் அநுபமா குளித்துக் கொண்டிருந்த போது, பக்கத்து வீட்டுக் கிழவியுடன் அவள் மாமியார் பேசிக் கொண்டிருந்தது வேணுகோபாலன் செவிகளில் வந்து விழுந்தது.
“இதுக்கு ஒரு வழி பண்ணலாம்னுதான் இருக்கேன். அவா வம்சத்துலயே எல்லாம் பொண்ணாப் பெத்துக்குற உடம்புதான். அதனாலதான் எம் மாட்டுப்பொண்ணுக்கு ஆம்பிளைப் பையனுக்குக் கொடுப்பனை இல்லாம இருக்கு. எம்பிள்ளைக்கு இன்னொரு கல்யாணம் பண்ணி வைக்கலாமான்னு பார்த்துண்டிருக்கேன். அதுக்கு மாட்டுப் பொண்ணோட சம்மதம் வேண்டி இருக்கும். போடுடி கையெழுத்தைன்னா, போட்றா!…”
வேணுகோபாலனுக்கு உடம்பு முழுக்க ஆடியது. ஆத்திரம் எழுந்தது. அடக்கிக் கொண்டார். சமயம் பார்த்துச் சம்பந்தியம்மாளை மட்டந்தட்டிவிட்டுத்தான் ஊருக்குக் கிளம்புவது என்று அந்தக் கணமே தீர்மானித்தார்.
மகளிடம் அதைப் பற்றிச் சொல்ல வேண்டும் என்று முதலில் நினைத்துப் பிறகு மனத்தை மாற்றிக்கொண்டார்.
அன்று பிற்பகல் துரையும் வேணுகோபாலனும் சாப்பிட உட்கார்ந்தார்கள். சம்பந்தியம்மாள் அடுக்களையில் ஓர் ஓரத்தில் உட்கார்ந்து கொண்டிருந்தாள். அநுபமாதான் பரிமாறினாள்.
“மாப்பிள்ளே! … இன்னிக்குக் காலம்பற உங்கம்மா பக்கத்து வீட்டு பாட்டிகிட்ட என்னமோ சொல்லிண்டிருந்தா. … எங்களுக்கும் அதுல வருத்தந்தான். ஏன் – நம்ம எல்லாருடைய வருத்தத்தையும் விட அநுபமாவுடைய வருத்தம் இன்னும் அதிகமாத்தான் இருக்கும். உங்கம்மாவுடைய ஆசை ரொம்ப நியாயமான ஆசைதான்,” என்று சொல்லி
நிறுத்தினார்.
அநுபமா வியப்புடன் அப்பாவைப் பார்த்தபடி நின்றாள். துரையும் மாமனாரை ஏறிட்டான்.
“ரெண்டாவது கல்யாணம் பண்ணி வைக்கிறதுல தப்பே இல்லைங்கிறதுதான் என்னோட அபிப்பிராயம். ஆனா, அநுபமா அதுக்குச் சம்மதிக்க மாட்டா …அதுதான் எனக்குக் கவலையா இருக்கு.”
அநுபமா அதிகரித்த திகைப்புடன் அப்பாவைப் பார்த்துக் கொண்டிருந்தாள். மாமியார் எழுந்து கூடத்துக்கு வந்தாள்.
“அம்மா, அநுபமா. அதுல தப்பே இல்லே. ரெண்டாவது கல்யாணத்துக்கு நீ சம்மதிக்கணும். உலகம் ரொம்ப மாறிண்டிருக்கு. மாப்பிள்ளையும் விஷயம் தெரிஞ்சவர். வரிசையாப் பொண்ணாவே பொறந்ததுன்னா அதுக்கு அவர்தான் காரணம்கிறது அவருக்கே தெரியும்! அதனால நீ ரெண்டாவது கல்யாணத்துக்குச் சம்மதம் குடுத்தா, உனக்கு ஏத்த மாப்பிள்ளையாப் பார்த்து ரெண்டாவது தடவை உனக்குக் கல்யாணம் பண்ணி வைக்கிறேன். என்ன சொல்றே?”
துரை, அவனுடைய அம்மா ஆகியோர் முகங்களி.ல் ஈயாடவில்லை.
……
- நிழல் பற்றிய சில குறிப்புகள்
- குருட்ஷேத்திரம் மகாபாரத தொடர் தொகுப்பாக அமேசானில்
- ஆண் வாரிசு
- பூமிக்கு அருகே வரும் நிரெஸ் விண்கல்லால் பாதிப்பு ஏற்படுமா?
- உரையாடல்
- ஞானவாபி
- குறும்படம் வெளியீடு
- குருட்ஷேத்திரம் 30(திருதராஷ்டிரனுக்கு விதுரர் சொன்ன சத்திரிய தர்மம்)
- கானல் தேசம் – வாசிப்பு அனுபவம்
- ஐந்து கவிதைகள்
- செட்டடக்கம் – ஒரு கடிதம்…ஒரு சொல்…
- குழந்தையின் சச்சதுரக் கப்பல்களும் சூறையாடுங் கடற்கொள்ளைக்காரர்களும்
- மறைந்துபோயுள்ள பல விடயங்களை படம்பிடித்துக் காட்டும் ‘கடவுளின் நாற்காலி’ நாவல் – நூல் ஆய்வு
- ஹவாயில் நடந்த புரட்சியின் போது அரசகுடும்பத்திற்கு என்ன நடந்தது?