ஞானவாபி

author
0 minutes, 0 seconds Read
This entry is part 6 of 14 in the series 28 நவம்பர் 2021

 

 –    எஸ்ஸார்சி

’ எட்ட நவுறு   உறமொற சாதி சனம் வாய்க்கர்சி போட்டாச்சி. மங்குடம் ஒடச்சிட்ட   உங்க ஜோலி அத்தோட சரி’

‘எத்தோட சரி’

‘ நாங்கதான இங்க  மயானத்துல சேத்த போட்டு வக்கோலு வச்சி சவத்த  மொழுவறது’

‘ ஜனத்துல   நாங்க   வேற.. நீ  சவத்துகிட்ட கிட்ட அப்பிடி இப்பிடி  வரவேண்டியதில்லே. நாங்க பாத்துகுவோம்’

‘சாமி நானு சொல்றத  செத்த காது கொடுத்து கேளு. இந்த ஊரு மண்ணு ஓடுற தண்ணி  வீசுற காத்து  அது அடிக்குற வாட்டம் மழை மப்பு   நீ கொண்ணாந்து இருக்குற வெறவு  வெரட்டி காஞ்சது ஈரம் வந்த சவத்துல ஆணு பொண்ணு பெரிசு சின்னது  வெசம் சாப்புட்டது  பலான காயிலா கண்டது  அது இதுன்னு இருக்குதுங்கறன்.’

’ எது எப்பிடி இருந்தாலும் நாங்க பாத்துகுவம் நீ  தூர  போ’

ஆங்கில  எழுத்து U கணக்கில் நாமம்  போட்டு  அரக்கு ஜரிகை வேட்டியை  கீழ்பாய்ச்சியாய்க் கட்டிக்கொண்ட  பெரியவர் சொல்லிக்கொண்டிருந்தார். காவிரியின் தென் கரை பெரு நகரத்து சவம் ஒன்றை எரிக்கத்தான் காவிரி தென்கரை ஓயாமரி சுடுகாட்டில் இத்தனைப் பாடு.

இரண்டு வெட்டியான்களும் அருகிருந்த   நெட்டை அலகு  ரெட்டைக்கழுகுகள் குலாவும் வன்னிமரத்தடியில் அமர்ந்து ஒருதரம் வெற்றிலை போட்டுக்கொண்டார்கள்.

‘எல பூரான் அண்ணிக்கி ராமம் போட்டுகிட்ட அய்யிரு கெராக்கி ஒண்ணு வந்துதே அதுவ பாட்டுக்கு நம்மள்ட்ட அந்த  சவத்த வுட்டுட்டு போயிடல’

‘  ’மாமாய் போன வெசாழக்கெழம அது.  ராமம் போட்டுகின அய்யிருவதான். வடகர காவேரி  அந்த ஊருதான்  அப்ப  ஒண்ணும் பிரச்சனையே வருல’

‘இது என்னா சேதி இம்மாம் புடிவாதம் ஆங்காரம்’

அந்தக்.  கேவி சார் வெட்டியான்களை நோக்கி வந்துகொண்டிருந்தார். கேவி . வங்கியொன்றில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். கட்டிய மனவி போயாயிற்று. குழந்தைகள் உண்டா என்பது தெரியவில்லை. ஓயாமரி வெட்டியான்களோடு எப்போதும் கூடவே இருக்கிறார். அதுதான் ஏன் என்று தெரியவில்லை. மயான ஊழியர்கள்  அவரை ’அய்யிரு எங்க சாமி. எங்க கூடத்தான் இருப்பாரு. நல்லது கெட்டது எதுன்னாலும் அந்த அய்யிருதான். ங்கிலீசு படிச்சவரு. பின்சன்  கனமா வருது.. கெடக்குட்டும்  எங்க  கம்புல  எங்களோட குந்தி இருக்க போவ  எல்லாத்துக்கும் ஒரு  மனசு வேணுமே’ என்பார்கள்.

‘ நீங்க  அந்த சவத்த  மொழுவுல கோணல் மாணலா கெடக்குது’ கேவிதான் கேட்டார்.

‘ இல்ல  சாமி நாங்க  சவம் கிட்டத்துல  வரக்கூடாதுன்னு  அந்த அய்யமாரு சொல்றாங்க’. பெறவு  எப்பிடியோ போவுட்டும்’ என்றான் பூரான்.

‘ தொடகூட்டதுன்னு சொன்னா . நாம கிட்ட ஏன் போவுணும் வுடு  வுட்டுடு அத.  ஆவுறது ஆவுட்டும்’ அடுத்த வெட்டியான்.

‘சாமி ராமம் போட்ட அய்யிருவ. போன வாரம் வந்தாங்க. அப்ப ஒண்ணும்  இப்பிடி சேதி இல்ல. நாங்கதான்  சவத்த மொழுவுணம்’ என்றான் பூரான்.

‘ராமம் எப்பிடி இருந்திச்சி’’                 

‘ நெத்தில தான்’

‘’ அப்பிடி இல்ல மாம்மோய், அந்த அய்யிருவளுக்கு மூக்குமேல ராமம் இருந்துச்சி. இந்த அய்யிருவுளுக்கு  அது மூக்கு தொட்டுகினு வருல நெத்தியோட சரியா போச்சி’ விளக்கமாய்ச்சொன்னான் அடுத்த வெட்டியான்.

‘அதாம்பா அதுல ரெண்டு சாதி இருக்கு.  ராமம் கீழ் எறக்கி ரவ மூக்கு மேல வந்தா அது தெங்கலம்பாங்க.  நெத்தியோட  வளச்சி  சுருட்டிகிட்டா அது வட கலம்பாங்க.  அதான் சாதியில கீழ மேலன்னு.  இருக்கும். அது எதுக்கு இப்ப’

என்றார் கேவி. .

‘ நீங்க பூச வுடுறவரு. இதுல கூடம் மூக்கு தொட்டு வுடுறது தொடாம வுடுறது எல்லாம் இருக்கா’ பூரான் சிரித்துக்கொண்டான்.

‘ ஒனக்கு தெரியாத சேதியா என்கிட்ட  கேக்குற.’’ என்றார் கேவி

கேவி சவம்  சேரு குழைத்து முழுகுகிற அந்த இடம்   நோக்கி.  வேக வேக மாகவே நடந்தார்.

‘ நானு  இப்ப அங்கே வர்ரேன்’ கத்தினார்

‘யாரும் இங்க வரவேண்டாம். இது சுயமாச்சாரியா காரியம். வேத்து மனுஷாள் வரப்பிடாது உங்களையும் சேத்துதான்’ அவருக்கு கட்டளை வந்தது.

கேவி அப்படியே நின்றார். திரும்பி அந்த வன்னிமரம் நோக்கி நடக்க ஆரம்பித்தார்..

கேவிக்கு  மனக்கிடங்கில்  நினைவு எத்தனையோ வருடங்கள் பின்னே சென்றது. தான் பிறந்த ஊரான தருமங்குடியில் தனது தந்தையோடு  வேத நாராயணப்பெருமாள் கோவில் சம்புரோக்‌ஷணத்தின் போதுதான்  ஒரு சாயரட்சை இப்படி நடந்தது

திருமடப்பள்ளியில் கோஷ்டி ஆரம்பமாகியது. சாப்பிடலாம் என அப்பாவோடு  கேவி அமர்ந்திருந்தார்.’ ’இங்க யாருப்பா ஸ்ரீவைஷ்ணவா கோஷ்டில ஸ்மார்த்தன் அவன எழுப்பு எழுப்பு ஒடனே எழுப்பு பாக்கி காரியம் கோவில்ல ஆகிறதா இல்லே.இந்த சம்புரோக்‌ஷண சமாச்சாரம் எல்லாத்தையும் அப்பிடி அப்பிடியே வுட்டுட்டு நாங்க  எல்லாரும் எங்க ஊர பாக்க கெளம்பிடறதா’ என்று ஒரு வைரக்கடுக்கன் அணிந்த நாமக்காரர் சத்தம்போடக் கேவியை அவர் தந்தையோடு வெளியே  போகச்செய்தனர். அவர்கள் பிறகு கதவு தாளிட்டுக்கொண்டனர்’.  திருமடப்பள்ளி  உள்ளாக கோஷ்டி தொடர்ந்தது.

‘ இதுல ஒண்ணும் தப்புல்ல .இது அவா அவா மொற. நம்மள ஒரு வெவரம் இல்லாதவன் அழச்சிண்டு போய்  பந்தி இலயில உக்காரவச்சீட்டான் நாமளும் போனது தப்பு.  பசி  நமக்கு’ என்று கேவியின் தந்தை சொன்னதும் நினைவுக்கு வந்ததது.

‘ என்னா சாமி. அப்பிடி  ஒரு யோசனை’ என்றான் பூரான்.

‘ ஒண்ணுமில்லே’ சமாளித்தார் கேவி..

ஒயாமரி சுடுகாட்டில் அன்று வெட்டியான்கள் இருவர் மட்டுமே இருந்தனர். கேவி அவர்களோடு  வழக்கம் போல் பேசிக்கொண்டு இருந்துவிட்டுத்தனது சிந்தாமணி ஜாகை நோக்கிப்புறப்பட்டார்.

அன்று இரவு  கருத்த மேக மூட்டம்.  ஈரக்காற்று.  அந்தச்சவம் சரியாக எரியவே இல்லை.

‘இன்னும் ரவ நேரம் ஆனா. வடகரை அய்யமாரு பால் தெளிக்கு  பொறப்பட்டு வந்துடுவாங்க. பொணம் இன்னும் சமஞ்சி சாம்பல் பூக்குல’ ’ என்றான் பூரான்.

கேவி  விடியற்காலையிலேயே எழுந்து ஓயாமரி சுடுகாட்டுக்குப்புறப்பட்டார்.  வாயில் இரும்பு கேட் ஓரமாய்  தன்  டூ வீலரை  நிறுத்திவிட்டு அவர்களை நோக்கி  மெல்ல வந்துகொண்டிருந்தார்.

‘வேல  இன்னும் முடியில’’

‘ நாங்கதான் கிட்ட போவுலயே சாரு’’

‘ அவுங்க கெளம்பி வந்துட்டா என்ன செய்யுவ’

‘ அவுங்கதானே  சவம் கிட்ட வராதேன்னு சொன்னது ’ என்றான்  பூரானுக்கு அடுத்த வெட்டியான்.

பூரான் கேவியையே பார்த்துக்கொண்டு நின்றான்.

‘ நீங்க சவத்தை  நல்லா எரிய வுட்டு  குறையை சரி பண்ணுங்க. நானு போயி அவுங்கள ரெண்டு மணி நேரம் தாமதமா  கெளம்பி இந்த பாலு தெளி  காரியத்துக்கு வரச்சொல்லுறன்’

சொல்லி விட்டு கேவி புறப்பட்டு வட கரை அக்கிரகாரம் சென்றார்.

மேலச்சித்திரை வீதி சாவு வீட்டின் வாயிலில் பெஞ்சும் நாற்காலியும்  கோணல் மாணலாய்க்கிடந்தன  சஞ்சயன நிகழ்வுக்கு உறவினர்  சிலர் கிளம்பிக்கொண்டிருந்தனர்.

 சவத்திற்கு கொள்ளி வைத்த காரியக்காரரைக்  கேவி அழைத்து த்தனியாகப்[பேசினார்.  அந்தச் சவம் இன்னும் எரியாத நிலையில் இருப்பதை அவருக்கு விளக்கினார். .இரண்டு மணி நேரம் தாமதமாக ஒய்யாமரிக்குப்புறப்படலாம் என்று சொல்லி முடித்தார்.

‘சவத்த சேத்த வச்சி முழுகறது  எப்பவும் சரியா இருக்கணும்’ என்றார் கேவி..

‘ அங்கதான் தப்பு நடந்து போச்சி. மயானத்தொழிலாளிய சொல்றத நாம என்னன்னு  கேக்கணும்  நீ வாய தெறக்காதேன்னு என்னத்தானே சொன்னார் அந்த’ வைரக்கடுக்கன் வாத்தியார்’’ என்றார் காரியக்காரர்..

 ஆக சம்பந்தப்பட்டவர்கள் ரெண்டு மணி தாமதித்து மயானம்  புறப்பட்டு ச்சென்றனர். அங்கு பூரானும் அடுத்தவனும் ஓயாமரியில் சவ எரிப்பு வேலையை ச்சரியாக முடித்து  தகன மேடையை சீராக வைத்திருந்தனர். பால் தெளி  காரியமும் ’ டாண்’ என்று முடிந்து போயிற்று.

இடுகாட்டு தொழிலாளிகள்  அந்த இருவருக்கும் பேசிய பணத்தைவிடக்கூடுதலாகவே ஐநூறு ஐநூறு என.  காரியக்காரர் கொடுத்து முடித்தார்.. கேவிக்கு த்தரவேண்டும் என்று ஞாபகமாய் எடுத்துவைத்த  ஒரு ஆயிரம் மட்டும் இன்னும் அவரிடம் பாக்கி இருந்தது.‘ 

 கேவிசாரு  எப்பிடி, இங்க, அவுரு யாரு’ என்றார் காரியக்காரர்.  

‘அத தான இந்த நிமிஷம் வரைக்கும் எங்க கையில சொல்லமாட்டேன்றாரு. பூச வுடுற அய்யிருதான். கவுச்சி கசமாலம்னு  எதுவும் துன்னமாட்டாரு. எந்த கெட்ட பயக்கமும் இல்ல  அவுருக்கு மாசா மாசம் பிஞ்சன் வருது வாங்குறாரு.அந்த காசில யும் பேர் பாதி எங்க ஆளுவுளுக்கு வச்சிகுன்னு குடுத்துடுவாரு  ஆனா  மசானத்து காரியம்னு வர்ர யாரும் ஒரு பைசாவ அவரண்ட தானம்னு கொடுத்துடலாம்னா அது முடியாது’ என்றான் பூரான்.

‘    இந்த கேவிசாரு யாரு  தகப்பனா தமயனா ஒரு செனேகிதமா அந்த சொடலமாடனேதானா, மாசாணமுத்தா, இல்ல கழுத்துல பாம்பு சுத்துன செவபெருமானா யாருன்னு இன்னவரைக்கும்  தெரியல’ என்றான்  பூரானுக்கு அடுத்து நின்ற மயானத்தொழிலாளி.

———————————————————————————..

Series Navigationஉரையாடல்குறும்படம் வெளியீடு
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *