கு.அழகர்சாமி
(1)
சொற்ப நிழலானாலும்
வெயிலில் ஒதுங்க
நிழல் உதவிய
தலை பரத்திய
நெடுந்
தென்னைகள்
காணோம்.
உச்சி வெயிலில்
உருகிய வெள்ளியாய்
தண்ணீர் தகதகத்துத்
தளும்பிய
கண்மாய்
காணோம்.
காற்று
தலை சாய்த்த
நிலத்
தலையணை
களத்து மேடு
காணோம்.
நெடுக வழியின்
இரு புறமும் நின்று
வரிசையில் வரவேற்ற
வாச
நெல் மணி
வயல்கள்
காணோம்.
பையனாய்ப் போன
வழி தானே என்று
பையப் போனேன்.
ஆனால்
என்னை அடையாளம் தெரிந்தவை
காணாதவையாய்
கண்டவை என்னை
அடையாளம் தெரியாதவையாய்
அந்நியனாய்க்
காணாமல் போனேன்
நான்.
(2)
அன்று
வெண் நாரைகளும்
உட்கார்ந்து இரசித்து
நீர் வாய்க்காலில்
நல் மீன்கள்
உண்டு ருசித்த
குளிர்ப் பச்சை
உடுத்திய
நாற்று
வயல்கள்.
இன்று
பசித்த காகங்கள்
இரைக்கு அலைகின்ற
வீதிகளில்
வெயிலில் வியர்த்து
நீட்டி நிமிர்ந்த
செத்த கட்டிடங்கள்.
கட்டிடங்கள்
வசிக்கச்
செய்யும்.
புசிக்கச்
செய்யுமா?
(3)
அன்று
ஊரில்
கடைசி வீடு
என் அப்பா வீடு.
அதன்
ஜன்னலைத் தட்டி
திறக்கச் சொல்லி
நெடுக,
நேச
நெல் வயல்கள்
கிட்டக்
கூட்டி வரும்
தூர
நெடுங்குன்றை.
இன்று அதே
நெடுங் குன்றைக்
கூட்டி வர
நெல் வயல்கள் காணோம்.
நெடுக வீடுகளாகி,
பின் வீடும் தொலைவாகிப் போக
ஜன்னல் திறக்கப்படாத
என் அப்பா வீடு-
நெடுங்குன்றம்
முன்பு தெரிந்தது போல்
தெரிய முடியாமல்
என் அப்பாவின் நினைவு போல்
தற்போது
நினைக்க இருக்கும்
எனக்கு.
கு.அழகர்சாமி
- பிரமிடுகள் எகிப்து நூலகங்கள்
- தன்னதி
- எங்கே பச்சை எரிசக்தி ?
- ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்
- விடியல் தூக்க சுகம்
- ஏட்டு நூல்களின் காலம் முடிகிறது….
- கிறிஸ்மஸ் கொண்டாட்டமும் ஆங்கில புதுவருடமும்
- இரண்டு நரிகள்
- சாபம்
- ஹாங்கிங் ரொக். விக்டோரியா
- வேடிக்கை மனிதரைப் போல
- நெல் வயல் நினைவுகள்
- பெரு வெடிப்பு நேர்ந்து பிரபஞ்சம் துவங்க வில்லை. எப்போதும் இருந்துள்ளது. பிரபஞ்சம் துவக்கமும் முடிவும் இல்லாதது.
- ஐரோப்பிய நாடுகளில் மாவட்டக் கணப்பளிக்க 300 MWe தொழிற்கூடக் கட்டமைப்பு சிற்றணுவுலை நிலையம் நிறுவத் திட்டங்கள்
- அழகியலும் அழுகுணியியலும்
- தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]
- வீரத்திருமகன்களுக்கு வீரவணக்கம்
- ஞானம்