நடேசன்
ஒரு சமூகத்தின் வணக்கத்தலமொன்றை உல்லாசப்பயண சுற்றுலா இடமாக மாற்றுவது இக்காலத்தில் அரிது. நடந்தால் உலகம் முழுவதும் கண்டிக்கும். மனித உரிமைக்கு எதிரான விடயமென ஜெனிவாவில் தீர்மானம் போடுவார்கள். 19 ஆம் நூற்றாண்டில் அவுஸ்திரேலிய காலனி ஆட்சியாளர்களுக்கு அந்தப் பிரச்சினையில்லை. இலகுவாகச் செய்ய முடிந்தது.
மெல்பனில் இருந்து 70 கிலோ மீட்டர் தொலைவில் ஹாங்கிங் ரொக்ஸ் ( Hanging Rocks) எனப்படும் இடம், 26000 வருடகாலமாக அவுஸ்திரேலிய ஆதிவாசிகளால் வணக்கத்துக்குரிய இடமாக இருந்தது. அவர்களது மத, மற்றும் இனத்துக்கான சடங்குகள் நடக்குமிடமாக மட்டுமல்லாது, இனக்குழுவின் சட்டங்களை உருவாக்கி, மற்றைய இனக்குழுவினரோடு சந்தித்து சமாதானம், வணிகம் மற்றும் உறவுகள் பற்றி பேசுமிடமாகவும் இருந்தது. அவுஸ்திரேலிய ஆதிவாசிகளிடம் இன்னமும் அவர்களுக்குப் பிரத்தியேக பல குற்றவியல் நடைமுறைகள் உள்ளன. இந்த இடம் அவர்களது வணக்கத்துக்குரிய இடம் மட்டுமல்ல பாராளுமன்றம், நீதிமன்றம், வணிக மன்றம், தூதரகம், எனப் பல விடயங்களை நடத்துமிடமாக இருந்தது.
கற்பாறைகளால் அமைந்துள்ள 718 மீட்டர் உயரமான குன்று ஹாங்கிங் ரொக்ஸ் ( Hanging Rocks) . ஆதி இனக் குழுவினருக்கு முக்கிய இடமான இந்த இடம் புவியியல் அமைப்பில் ஒரு காலத்தில் எரிமலையாக இருந்தது. பொங்கிய குளம்புகளிலிருந்து உருவாகிய இராட்சதப் பாறைகள் இங்குள்ளது. சில பாறைகள் தொங்கியபடி இருப்பதால் பிற்காலத்தில் இதற்கு ஹாங்கிங் ரொக்ஸ் என்ற பெயர் வந்தது .
ஆதி மனிதர்கள் 5000 வருடங்கள் வரையும், மலைகள், எரிமலைகளையும் , நதிகள் மற்றும் மரங்களைக்கூட அமானுஷ்ய சக்திகள் என நம்பினார்கள். அவற்றை தேவனாக உருவகம் செய்தார்கள். அதன்பின்பு விவசாயம் செய்த மனிதர்கள், கடவுளை தங்கள் மத்தியில், தங்களைப்போல் உருவகப்படுத்தி, ஆனால் தம்மிலும் சக்தி கூடியவர்கள் எனப் புனைந்தார்கள் . நமது இராமன், கிருஷ்ணன் கிரேக்கர்களது தெய்வங்களான அப்போலோ, சூஸ் என்பவர்கள் அப்படியானவர்கள். அவர்கள் மனிதர்களோடு பழகி, அவர்களோடு உறவு கொள்வார்கள். குழந்தை பெறுவார்கள் சில வேளைகளில் மனிதர்கள்போல் இறப்பார்கள்- மீண்டும் பிறப்பார்கள்.
பிற்காலத்திய மதங்கள், மக்களிலிருந்து தேவனைப் பிரித்து ஆகாயத்தில் எட்டாத தூரத்தில் வைத்துவிட்டது. தேவையான நேரத்தில் அவரது வார்த்தைகளை, உபதேசங்களை ஆகாயத்திலிருந்து தரவிறக்கம் செய்வார்கள். அதைக் கற்பாறையிலோ அல்லது பப்பரசிலோ எழுதி புனிதப்படுத்திவிடுவார்கள். நம்புபவர்களை ஒரு குழுவாக்கி பின்னர் மதமாக்கிவிடுவார்கள்.
அவுஸ்திரேலிய ஆதிவாசிகள், கற்கால நாகரிகத்தில் இருப்பவர்கள். இப்படியான சூக்குமங்கள் தெரியாதவர்கள்.
மலைகளிலும் பாறைகளிலும் தங்கள் தேவனை வணங்குமிடமாக்கி, ஓவியங்கள் வரைந்து புனிதப்படுத்துவார்கள். அப்படியான மூன்று இனக்குழுக்குழுகளுக்கு சொந்தமானதே ஹாங்கிங் ரொக்ஸ்.
20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பகாலத்தில் தனியார் பாடசாலையின் மாணவிகள் உல்லாசப் பிரயாணம் சென்று பின் காணாமல் போய்விட்டதான சம்பவம் 1967 ஆண்டில் பிக்னிக் அற் ஹாங்கிங் ரொக் என்ற நாவலாகியது. பின்பு 1975 இல் திரைப்படமாகி வெற்றியளித்தது. தற்பொழுது ஹாங்கிங் ரொக்ஸ் எனும்போது அந்தத் திரைப்படமே அவுஸ்திரேலியர்கள் மனதில் வரும் . ஆதிவாசிகளது புனித இடம் என்பது மறைந்து விட்டது. நாம் ரவிவர்மா தீட்டிய கடவுளரை நினைப்பதுபோல், அல்லது ஏ. பி . நாகராஜனால் உருவாக்கப்பட்ட சிவனையோ முருகனையோ நினைப்பதுபோல்.
விக்ரோரியா, தஸ்மேனியோ போன்ற இடங்களில் ஆதிவாசிகள்மேல் காலனித்துவ அரசால் அதிக அளவு வன்முறை ஏவப்பட்டு வெளியேற்றப்பட்டார்கள் . ஆதிவாசிகளது புனித இடம் என்பது மறைந்து விட்டது. சுற்றியுள்ள பிரதேசம் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியானதால் அவுஸ்திரேலிய காட்டுயிரினங்கள் வாழ்கின்றன. நாங்கள் அங்கு போகும் வழியில் ஒரு வாலபி எனப்படும் சிறிய மாசூப்பியல், என்ன விடயம்? ஏன் வந்தனீர்கள் என எம்மிடம் விசாரித்துச் சென்றது.
எனது மகள், ஒன்றரைக் கிலோமீட்டர் நடந்து உயரத்திற்கு ஏறவேண்டும். அம்மாவால் ஏறமுடியுமா எனப் பல முறை கேட்டு உறுதி செய்தபின்பு ஏறினோம். உச்சிக்குச் சென்றபோது ஏராளமான பாறைகள் வழியெங்கும் உள்ளன. ஒரு விதத்தில் செயற்கை இடுப்பைப் பொருத்திய எனது மனைவி சியாமளா ஏறியதும் சாதனையே. நான் என்றால் இந்த நிலையில் சுருண்டு படுத்திருப்பேன் என நினைத்து அங்குள்ள பகுதிகளைச் சுற்றிப் பார்த்துக்கொண்டிருந்தபோது, எண்பது வயதான ஒரு பெண் எந்தக் கைத்தடியும் இல்லாமல் உச்சிக்கு வந்து எங்களிடம் வழி கேட்டார். பெண்களின் அபாரசக்தியில் ஏற்படும் மதிப்பு ஒரு மெகா பைட்டில் என்னிடம் தரவிறக்கமானது .
30 வருடங்கள் மெல்பேனில் இருந்து ஒரு மணிநேர கார் பயணத்தில், பத்து டொலர் நுழைவுக் கட்டணத்தில் போகக்கூடிய இடத்திற்கு இதுவரைகாலமும் போகாமலிருந்தோம் என்ற நினைவும் கொரோனா வைரசாக வந்து சேர்ந்தது.
அருகில் இருப்பவற்றிற்கும், இலகுவாகக் கிடைப்பவற்றிற்கும் மரியாதை எப்பொழுதும் குறைவே எனச் சமாதானமடைந்தேன்.
- பிரமிடுகள் எகிப்து நூலகங்கள்
- தன்னதி
- எங்கே பச்சை எரிசக்தி ?
- ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்
- விடியல் தூக்க சுகம்
- ஏட்டு நூல்களின் காலம் முடிகிறது….
- கிறிஸ்மஸ் கொண்டாட்டமும் ஆங்கில புதுவருடமும்
- இரண்டு நரிகள்
- சாபம்
- ஹாங்கிங் ரொக். விக்டோரியா
- வேடிக்கை மனிதரைப் போல
- நெல் வயல் நினைவுகள்
- பெரு வெடிப்பு நேர்ந்து பிரபஞ்சம் துவங்க வில்லை. எப்போதும் இருந்துள்ளது. பிரபஞ்சம் துவக்கமும் முடிவும் இல்லாதது.
- ஐரோப்பிய நாடுகளில் மாவட்டக் கணப்பளிக்க 300 MWe தொழிற்கூடக் கட்டமைப்பு சிற்றணுவுலை நிலையம் நிறுவத் திட்டங்கள்
- அழகியலும் அழுகுணியியலும்
- தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]
- வீரத்திருமகன்களுக்கு வீரவணக்கம்
- ஞானம்