சக்கரங்கள் நிற்பதில்லை! – மெல்பனில் நடந்த மல்லிகை ஜீவா நினைவரங்கு !  ஒரு பார்வை

author
0 minutes, 3 seconds Read
This entry is part 2 of 6 in the series 26 டிசம்பர் 2021

 

 

 

                                                      கிறிஸ்டி நல்லரெத்தினம்

வாழ்க தமிழ்மொழி! 

வாழ்க தமிழ்மொழி!

வாழ்க தமிழ்மொழியே!

வாழ்க  நிரந்தரம்  வாழ்க  தமிழ்மொழி

வாழிய வாழியவே!

வான மளந்த தனைத்தும்  அளந்திடும்

வண்மொழி வாழியவே!…….. 

 

மகாகவி பாரதியின் தமிழ் வாழ்த்து திருமதி சரண்யா  மனோசங்கரின் குரலில் தேன் மதுரமாய்  அந்த மண்டபத்தை நிரப்புகிறது! இது மகாகவியின் நினைவு நூற்றாண்டு என்பதை நினைவுபடுத்துகிறது.

 

இம் மாதம்  19 ஆம் திகதி ஞாயிறு மாலை சரியாக  நான்கு மணி.  மெல்பனில் பேர்விக்   மூத்த பிரஜைகள் மண்டபத்தில்  அந்தக்குரல் ஒலிக்கிறது.

மண்டபத்தில் திரண்டிருந்து மக்கள் எழுந்து நின்று சிரம் தாழ்த்தி அமைதியாக செவிமடுக்கின்றனர்.  

 

நான் எனது கண்களை மெதுவாக  நிமிர்த்திப் பார்க்கிறேன். 

 

மேடையின் வலது பக்கத்தில் முறுக்கிய மீசைக்கூடாக மந்திரப் புன்னகையுடன்  என்னை  நோக்குகிறது மகாகவி பாரதியின் நேர்கொண்ட  அந்தப்  பார்வை. 

 

அப்போது நேரம் நான்கு மணி கடந்து ஒரு சில நிமிடங்கள்தான். விழா உரிய நேரத்தில் ஆரம்பமாகியிருக்கிறது என்பதை தெரிந்துகொண்டேன்.  அழைப்பிதழ் சொன்ன நேரம். சொன்னவாறு தொடங்கப்பட்டிருக்கிறது.

 

வரவேற்புரை நிகழ்த்திய திருமதி மேகானந்தா சிவராசா சொல்லச்சொல்ல சில மூத்த பிரஜைகள் மகாகவியின் உருவப்படத்திற்கு மங்கல விளக்கேற்றுகின்றனர்.

 

அவர்கள் ஏற்றி வைத்த குத்து விளக்கின் பஞ்ச முக தீபங்கள் உயிர்த்துடிப்புடன் ஒளியூட்டி  நினைவு நூற்றாண்டு கொண்டாடும் மகாகவியை ஆராதிக்கின்றன.

 

மேடையின் இடது பக்கத்தில் இந்த விழாவில் நினைவுகூரப்படும்  நாயகன் ஈழத்து இலக்கிய பிதாமகன் மல்லிகை ஜீவாவின் உருவப்படம்.   முருகபூபதி என்ற மேற்கிலங்கை கடற்கரையோரத்து மனிதனை எழுத்தாளனாக்கிய இலக்கியவாதியாக்கிய  மல்லிகை ஜீவா தனது  கன்னத்தில் கையூன்றியவாறு எம்மையெல்லாம்  பார்த்துக்கொண்டிருக்கிறார்.

 

இந்த ஆண்டின் தொடக்கத்தில் சமகால பெருந்தொற்றினால் எம்மை விட்டு பிரிந்த அவர், எம்மிடம் விட்டுச்சென்றிருப்பது அவர் பற்றிய நினைவுகளும், அவர் அறிமுகப்படுத்திய முருகபூபதி போன்ற எழுத்தாளர்களுமே !  

 

மல்லிகை ஜீவா அவர்களை நன்கு தெரிந்த அன்பர்கள், இலக்கியவாதிகள் அவரது படத்திற்கும் விளக்கேற்றி ரோஜா மலர் அஞ்சலி செலுத்துகின்றனர். அம்மலர்கள், ஈழத்தில் இலக்கியத்திற்காக மணம்பரப்பிய மல்லிகையின் சகோதரிகளாக ஜீவாவின் படத்திற்கு முன்னால் அமர்ந்திருக்கின்றனர்.

 

அவ்வாறு விளக்கேற்றியவர்களில் ஒருவரான திருமதி பானு ஶ்ரீகௌரி சங்கர், தனது குழந்தைப் பருவம் முதல் ஜீவாவை நன்கு அறிந்தவர் என்பதை எழுத்தாளர் முருகபூபதியின் ஏற்புரையிலிருந்தே தெரிந்துகொள்கின்றோம்.

 

சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் முருகபூபதியின் முதல் சிறுகதை கனவுகள் ஆயிரம் மல்லிகையில் வெளியானபோது, அதனை நயந்து மதிப்புரை எழுதிய ஜீவாவின் ஆத்ம நண்பரும் எழுத்தாளருமான முன்னாள் தபால் அதிபர் ரத்னசபாபதி ஐயரின் மூத்த மகள்தான் இந்த பானு என்பதையும் அறிந்துகொள்கின்றோம்.

 

சொந்தம் எப்போதும் தொடர்கதைதானே…? அது இலக்கியத்திற்கும் பொருந்தும் என்பதை இச்செய்திகள் ஊர்ஜிதப்படுத்துகின்றன.

 

மேடையில் இவ்வாறு ஒரு பக்கம் பாரதியும், மறுபக்கம் மல்லிகை ஜீவாவும் உருவப்படங்களாக ஆரோகணித்திருக்க, திருமதி மேகானந்தா சிவராசாவின் வரவேற்புரையில் இந்த அரங்கு எதற்காக நடத்தப்படுகிறது என்பதை மேலும் தெரிந்துகொள்கின்றோம்.

 

மூன்று அங்கங்களாக நடத்தப்பட்ட அனைத்து நிகழ்ச்சிகளும் மெல்பன் வாசகர் வட்டத்தின் ஒருங்கிணைப்பாளர், தேர்ந்த வாசகி திருமதி சாந்தி சிவக்குமார் அவர்களின் தலைமையில் ஆரம்பமாகின்றன.

 

அவர் முருகபூபதியின் இலக்கியப் பயணத்தின் பல மைல்கற்களை எம்முன்னே புரட்டிப் போடுகிறார்.  எதைச் சொல்வது? எழுதி வெளியிட்ட இருபதிற்கும் மேற்பட்ட நூல்களையா, தொட்டுச் சென்ற இலக்கிய நாயகர்களையா,   உருவாக்கிய எழுத்தாளர் –  வாசகர் வட்டங்களையா, மல்லிகை ஜீவாவுடன் நீடித்திருந்த  உடன் பிறவா சகோதர பிணைப்பையா, புலம் பெயர்ந்த நாட்டில் புதுப்பொலிவுடன் தமிழ் வளர்த்த கதையையா, நலிவுற்ற மாணவமணிகளுக்கு உதவிக்கரம் நீட்டிய கருணையையா, வயது  எழுபதைத் தாண்டியும்  தொடர்ச்சியாக எழுதும் அந்த உத்வேகத்தையா ….. எதைச் சொல்வது? 

 

சாந்தி சிவக்குமாரின் தலைமையுரையையடுத்து,  ஒரு பதின்மவயதுச்  செல்வன் , இந்த நாட்டில் பிறந்து இங்குள்ள பாரதி பள்ளியில் படித்த மாணவச்செல்வன்ரிஜன் பசுபதிதாசன்,  முருகபூபதியின் “பாட்டி சொன்ன கதைகள்” நூலின் சில கதைகளுக்கு  எம் கண்முன்னே வார்த்தையால் வண்ணம் சேர்க்கிறார்.

 

சில கதைகள் நம்மில் பலர் சிறு வயதாய் இருந்த போது கேட்ட நீதிக்கதைகள். இந்த  நூலை இலங்கை கல்வி அமைச்சு ஏற்று சிறுவர் இலக்கிய வரிசையில்  அங்கீகரித்திருப்பது இரட்டிப்பு மகிழ்ச்சியைத் தருகிறது.  

 

அடுத்து நிகழ்ச்சிக்கு மகுடம் வைத்தாற்போல் மல்லிகை ஜீவாவின் நினைவுச் சொற்பொழிவை எழுத்தாளரும் விலங்கு மருத்துவருமான  நடேசன் நிழ்த்துகிறார்.

 

அவரது  உரையின் நிறைவு இப்படிச் சொல்கிறது:

 

” என்னைப் பொறுத்தவரை டொமினிக் ஜீவாவை இடதுசாரியாகவோ, சாதி எதிர்ப்பாளராகவோ பதிப்பாளராகவோ அல்லது மல்லிகை ஆசிரியராகவோ பார்க்க விரும்புவது பருந்தின் செட்டையை வெட்டி கிளி போல் கூண்டுக்குள் அமைப்பதான விடயமாகும். ஜீவா முழு இலங்கைக்கும் சொந்தமான தீர்க்கதரிசனம் கொண்ட தமிழ் இலக்கியவாதி என நான் கருதுகிறேன்.  அவரை நாம் பல சந்ததிகள் கடந்தும் நினைவு கூருவோம்.” 

 

ஒரு இலக்கியவாதியின் தார்மீகப் போர் அனுபவம் அது.

28 – 01-2021 அன்று தனது  94 ஆவது அகவையில் இந்த முற்போக்கு சிற்றிதழாளரின் இதயம் துடிக்க மறந்து துயில் கொண்டது.  அறிவுத்தாகத்தையும் தன்மதிப்பையும் மட்டுமே ஆயுதமாகக்  கொண்டு விடாப்பிடியான தன்னம்பிக்கையுடன் ஈழத்து இலக்கிய உலகில் பயணித்த அந்த வெண்புரவி,   “ இனி இது போதும் ”  எனக் கூறி விடைபெற்றது.

 

நடேசன் தனது உரையில் இம்மாமனிதரின் இலக்கியப்  பயணத்தை மட்டும் சொல்லாமல்,  ஜீவா என்ற தனிமனிதனின்  கனவுகளை நனவாக்கும் பொறுப்பு சமகால இலக்கியவாதிகளுக்கும் எதிர்கால சந்ததிக்கும் உரித்தானது எனவும் வலியுறுத்தினார்.  

 

நடேசனின் உரையைத்  தொடர்ந்து இவ்விழாவில் வெளியிடப்பட்ட கட்டுரைத் தொகுதியான முருகபூபதியின்          ” நடந்தாய் வாழி களனி கங்கை ” நூலைப் பற்றிய எனது  வாசிப்பு அனுபவத்தை நான்  பகிர்ந்து கொண்டேன்.

 

 புதுமைப்பித்தனின் ‘ஆற்றங்கரை பிள்ளையார்’  சிறுகதைக்கும் இந்நூலின் சாரத்திற்கும் உள்ள பிணைப்பை பற்றியே என் ஆய்வு இருந்தது. இந் நூல் இப்போது “கிண்டிலில் ” கிடைக்கும் என்ற செய்தியையும் சொல்லி வைத்தேன். 

 

அடுத்து முருகபூபதியின் ஏழாவது புதிய கதைத்தொகுதியான  கதைத்தொகுப்பின் கதை நூல் பற்றிய தமது  வாசிப்பு அனுபவங்களை தேர்ந்த வாசகர்கள் திருமதி  கலாதேவி பாலசண்முகன், அசோக் ஜனார்த்தனன்  ஆகியோர்  சபையோரிடம் பகிர்ந்து கொண்டனர்.

 

இப்போது எனது பார்வையை சுழல விடுகின்றேன்.  மண்டபம் நிறைந்து  மக்கள்.  இரு மருங்கிலும் இலக்கிய ஆர்வலர்கள்  அமர்வதற்கு ஆசனம் இன்றி, நின்றவாறே நிகழ்ச்சிகளை செவிமடுப்பதையும் அவதானிக்கிறேன்.

 

இந்த பெருந்தொற்று  கொரோனோ  காலத்திலும் கூட ஒரு இலக்கியக் கூட்டத்திற்கு  இத்தனை ஆதரவாளர்கள் சமூகமளித்திருப்பது மறைந்த மல்லிகை ஜீவாவின் எழுத்துலகப் பயணத்தின் ஒரு வெற்றி என்றே சொல்வேன்.

அதுவும் ஒரு புகலிட நாட்டில். ஜீவா,  மல்லிகை ஆஸ்திரேலியா சிறப்பிதழும் வெளியிட்டார் என்ற தகவலும் இந்த நாட்டிற்கு பிந்தி வந்த எனக்கு கிடைத்த மற்றும் ஒரு செய்தியாகும்.

 

மேலும் இந்த நிகழ்விற்கு ஆதரவளித்த பல வானொலி, பத்திரிகை  மற்றும்  ஊடக காணொளித் தளங்களின்  பங்களிப்பையும் இங்கு விதந்து குறிப்பிடத்தான் வேண்டும். இந்நிகழ்வை முன்னிறுத்தி  தமது  ஊடகங்களில் வெளியிட்ட –  பதிவேற்றிய செய்திகளும் பேட்டிகளும் நிச்சயம் இலக்கிய ஆர்வலர்களின் கவனத்தை ஈர்த்தன என்பதும் உண்மை. 

 

சமூக இடைவெளி  பேணப்படும் இந்நாட்களில் இப்படி ஒரு இலக்கிய ஒன்றுகூடலை  வெற்றிகரமாக அதுவும் ஒரு புலம் பெயர்ந்த நாட்டில் நடத்தியது பெருமைக்குரியது. பாராட்டுக்குரியது!  

 

இந்த மைல்கல்லைப் பற்றி இலக்கிய உலகம்  எதிர்காலத்தில் பேசத்தான் போகிறது! 

 

சரி, இனி நிகழ்ச்சியை தொடர்வோமா? 

 

மெல்பனில் நன்கு அறியப்பட்ட சட்டத்தரணியும் அரசியல் விமர்சன எழுத்தாளருமான திரு. செல்வத்துரை  ரவீந்திரன் முருகபூபதியின்  மூன்று நூல்களையும் தனது  சிற்றுரையையடுத்து  சம்பிரதாய பூர்வமாக வெளியிட்டு வைக்கிறார்.

 

முருகபூபதியை நன்கு அறிந்த அன்பர்கள், சமூக ஆர்வலர்கள் திருவாளர்கள்  ‘சுந்தர்  ‘ சுந்தரமூர்த்தி,  முருகேசு நரேந்திரன், விக்கிரமசிங்கம், இப்ரகீம் ரஃபீக், கணக்காளர் முருகையா ஆகியோர் நூல்களின் சிறப்பு பிரதிகளை பெற்றுக்கொள்கின்றனர்.

 

அத்துடன் கதைத் தொகுப்பின் கதை நூலில் தமது விமர்சனத்தை எழுதிய கலாநிதி மணிவண்ணன், திருவாளர்கள் கந்தையா குமாரதாசன், நவரத்தினம் வைத்திலிங்கம்,  அசோக் ஜனார்த்தனன், திருமதி சரண்யா மனோசங்கர் ஆகியோருக்கும் நூலின் பிரதிகள் வழங்கப்பட்டன.

 

ஒரு சிந்தனை எழுத்தாளனின் எண்ணத்துளிகளில் கருத்தரித்து காகிதத்தை நனைத்து  நூலாக உருவெடுத்து இது போன்ற விழாக்களில் பூரணத்துவம் பெறுகின்றது.  ஒரு எழுத்தாளனின் பிரசவ வேதனை முற்றுப்பெறும் புள்ளிதான்  நூல் வெளியீட்டு விழா!

அந்தப்புள்ளியின் வெளிச்சத்தை   முருகபூபதி எனும் மூத்த படைப்பாளியின் கண்களில் நான் காண்கிறேன். 

 

இவ்விழாவில் மற்றும் ஒரு குறிப்பிடத்தகுந்த  விசேடமும் இடம்பெற்றது. “பாட்டி சொன்ன கதைகள்” நூல்களை பெற்றுக் கொண்ட அனைவரும் சிறுவர் சிறுமியரே! வாசிப்பின் முக்கியத்துவத்தின் வித்து அங்கு அந்த பிஞ்சு மனங்களில் விதைக்கப்பட்டது. பெருமையுடன் நூலை நெஞ்சிலணைத்து  புன்னகைக்கும்  இவர்களே எம் எதிர்கால வாசகர்கள்…. படைப்பாளிகள்! 

 

இந்த இலக்கிய விழாவில்  முருகபூபதி தனது  ஏற்புரையை அடுத்து நிகழ்த்துகிறார்.

 

 “ மல்லிகை ஜீவா இல்லாவிட்டால் நான் இல்லை  “   என்ற தன்னடக்க சொற்குவியலுடன் தொடங்குகிறது அவரது உரை.         ” எழுத்துலகத்திற்கு தன்னை  அழைத்து வந்தவர் ஜீவா  “ என நனவிடை தோய்ந்து பல சம்பவக் கோர்வைகளை எம்முன்னே பின்னிப் போகிறார்.  தனது  தாயார்  காலமானபோது எப்படி ஜீவா நீர்கொழும்பிற்கு  சக எழுத்தாளர்கள் பலருடனும் சென்று ஒரு பெறா மகனாய்  இறுதி நிகழ்வுகளில் நின்றார் என்பதைக் கூறும் போது அவரது  கண்கள் பனிக்கின்றன.. குரல் தடம் மாறுகிறது. ஒரு தூய நட்பின் அடர்த்தி தரும் வெகுமதி இது.  அணை போட முடியாத அன்பின் வெளிப்பாடு.

அவர் உரையின் சிறு பகுதியை கேட்போமா?

 

” கனவுகள் ஆயிரம்”  என்ற சிறுகதைதான் எனது முதலாவது இலக்கியபப்டைப்பு. அதற்கு முன்னர் வீரகேசரி நீர்கொழும்பு நிருபராக செய்திகளும் செய்திக்கட்டுரைகளும்தான் எழுதிக்கொண்டிருந்தேன். சில அரசியல் மற்றும் சமூக நிகழ்வுகள், இலக்கியக்கூட்டங்கள் தொடர்பாக செய்திகள் எழுதியிருந்தேன். மல்லிகை ஆசிரியர்  டொமினிக் ஜீவா 1970-1971 காலப்பகுதியில் யாழ்ப்பாணத்திலிருந்து மாதாந்தம் நீர்கொழும்புக்கு வரும்பொழுது

எனது கருத்துக்களை கூர்ந்து அவதானித்துவிட்டு,  ஒருநாள்,                     “ நிறைய விவாதிக்கிறீர். நீரும் எழுதலாமே” என்றார். அவர் தந்த உற்சாகத்தில் “கனவுகள்” என்ற சிறுகதையை எழுதி

மல்லிகைக்கு  அனுப்பினேன். “கனவுகள் ஆயிரம்” எனத்தலைப்பிட்டு அதனை மல்லிகை ஜூலை இதழில் பிரசுரித்தார். ஆச்சரியம் என்னவென்றால் 1972 ஆம் ஆண்டு எனது 21 வயது பிறந்த நாளன்று அதாவது ஜூலை 13 ஆம் திகதியன்று எனது வீட்டு முகவரிக்கு குறிப்பிட்ட மல்லிகை இதழ் தபாலில் வந்ததுதான். எனது முதலாவது இலக்கியக்குழந்தைதான் அது.  “

 

இந்த இலக்கிய ஒன்றுகூடலுக்கு மகுடம் வைத்தாற்போல் அமைந்தது அடுத்த நிகழ்வு.

மல்லிகை ஜீவா நினைவு விருது வழங்கும் வைபவம்!

“அக்கினிக்குஞ்சு”  ஆசிரியரும் கலை இலக்கிய ஊடகவியலாளரும், எழுத்தாளரும் நாடகக் கலைஞருமான திரு. யாழ். பாஸ்கர் இந்த உயர்ந்த விருதை பெற்று கெளரவிக்கப்படுகிறார். 

 

ஆஸ்திரேலியா, இலங்கை, இந்தியா, கனடா உட்பட ஜரோப்பிய நாடுகளைக் சேர்ந்த ஆக்க இலக்கியவாதிகளுக்கு சிறந்த களம் வழங்கி வரும் யாழ்.பாஸ்கரின் அயராத உழைப்பு வியந்து போற்றுதலுக்குரியது.

 

மல்லிகை ஜீவாவின் நினைவு விருது  இவரின் மகுடத்தில் இன்னொரு முத்து! 

 

சிட்னியில் இருந்து மூத்த கவிஞர் அம்பி எழுதியனுப்பிய  வாழ்த்துச்செய்தியை கவிஞர்  கல்லோடைக்கரன்  வாசித்து சமர்ப்பித்தார்.

 

மல்லிகை ஜீவா நினவு விருது ஏன் வழங்கப்படுகிறது என்பதை தெளிவுபடுத்தும் விருக்கான உரையை  எழுத்தாளர் திரு.  சங்கர சுப்பிரமணியன் வாசித்து சமர்ப்பித்தார்.

 

மல்லிகை ஜீவா நினைவு விருதினை விழாவின் தலைவி திருமதி  சாந்தி சிவக்குமார் வாசித்துவிட்டு, அக்கினிக்குஞ்சு யாழ். பாஸ்கருக்கு சமர்ப்பித்தார்.

 

யாழ். பாஸ்கர் தமது விருது ஏற்புரையை மிகுந்த தன்னடகத்துடன் நிகழ்த்தினார்.    “ ஒரு பெரிய இலக்கிய ஆளுமையின் பெயரில் தரப்படும் இந்த விருதை ஏற்கும் தகுதி எனக்கிருக்கிறதா.. ? என்றும் யோசித்துப்பார்த்தேன்.

இந்த விருது என்னை மேலும் மேலும் பொறுப்புணர்வுடன் அக்கினிக்குஞ்சு இணைய ஊடகத்தை நடத்துவதற்கு உத்வேகம் அளிக்கிறது.

மல்லிகை ஜீவா அவர்களை முன்மாதிரியாக ஏற்று எனது பணிகளை தொடருவேன்  “  என்றார்.

 

அவரது துணைவியார் திருமதி மாலா பாஸ்கருக்கு முருகபூபதியின் செல்லப்பேத்திமார் மாயா ஜேம்ஸ், ஆண்யா முகுந்தன் ஆகியோர் பூச்செண்டும், பரிசுப்பொருட்களும் வழங்கினர்.

 

 இப்போது இரவு 6-30  மணியை கடிகாரம் காட்டுகிறது. பொதிகளிலடைக்கப்பட்ட சிற்றுண்டிகள் பரிமாறப்படுகின்றன. இந் நிகழ்ச்சியை மிக நுணுக்கமாக திட்டமிட்டு நடத்தியதில் திருமதி மாலதி  முருகபூபதிக்கும் நிச்சயம் பங்குண்டு என்பதை இங்கு சொல்லித்தான் ஆக வேண்டும். 

 

இந்த ஒன்றுகூடலில் பல இலக்கிய ஆளுமைகளை முதல் தடவையாக தரிசிக்கிறேன். அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் நடப்பாண்டு தலைவி  திருமதி. சகுந்தலா கணநாதன், எழுத்தாளர்கள் பாடும்மீன் ஸ்ரீகந்தராஜா, நடேசன், ஜே.கே.,  மெல்பன் வாசகர் வட்டத்தை சேர்ந்தவர்கள் மற்றும்  கேசி தமிழ் மன்றத்தின் அங்கத்தவர்கள், இச்சங்கத்தின்  மூத்தோர்  அமைப்பின் பிரதிநிதிகள், கலை, இலக்கிய ஆர்வலர்கள் என பட்டியல் நீளுகிறது. 

 

முருகபூபதி அவர்கள் ஒரு  இலக்கிய இசையமைப்பாளன்தான்.  தனது இலக்கிய  இசைக்குழுவை ஒரு குச்சி கொண்டு வழி நடத்தித்  தனது  அன்பால் அனைவரையும்  அரவணைத்து ஒரு இனிய இலக்கிய நிகழ்வை இங்கு நடத்தி நிறைவுகண்டார். 

 

 “ ஜீவா இல்லாவிட்டால் தான் இல்லை  “  என்றவரின் குருதட்சணைதான் இந்த விழா!

 

இந்த விழாவின் போது முருகபூபதி  அரங்கில் அமர்ந்திருந்தது சொற்ப நிமிடங்களே.  அவரது  கால்களில் சக்கரம் பூட்டியது போல் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பில் மூழ்கி பம்பரமாய் சுற்றிவந்தார் இந்த எழுபதைத் தாண்டிய  இளைஞர். 

 

இவர் வேகம் யாருக்கு வரும்? 

 

சக்கரமாய் சுழன்று சிறுகதைகளும், நாவல்களும், பயண, கட்டுரை,  சிறுவர், கடித இலக்கியங்களை படைத்துக் கொண்டிருக்கும் இந்த எழுத்து இயந்திரம் எமக்கு ஓர் முன்னுதாரணமே! 

ஆம்!  சக்கரங்கள் நிற்பதில்லை! 

—0—

 

Series Navigationசொல்வனம் இணையப் பத்திரிகையின் 261 ஆம் இதழ்எமிலி டிக்கின்ஸன் கவிதைகள்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *