அவஸ்தை

This entry is part 9 of 15 in the series 9 ஜனவரி 2022

          –எஸ்ஸார்சி

       

கோதுமையை ரேஷன் கடையில் வாங்கினான்.. அதனை ச்சலித்தாயிற்று புடைத்தாயிற்று  கோதுமையில் உருண்டை உருண்டையாய்  இருந்த சிறு சிறு மண்கட்டி மட்டும் போகவில்லை. அது எப்படிப்போகும் அவனுக்கும் தெரியவில்லை அவளுக்கும் தெரியவில்லை.

அண்டை வீட்டு முத்துலட்சுமி யோசனை சொன்னார். ’கோதுமையை ’தண்ணீல நல்லா அலசுங்க. மங்கட்டி கரைஞ்சிடும். பெறவு தண்ணீல ரெண்டு வாட்டி அலசுங்க மண்ணு கரைஞ்சிபோயிடும்’

.  அந்தப்படிக்கு அலசிய  கோதுமையை  வெயிலில் உலர்த்தினான் ஆயிற்று’ . மண்கட்டி விடைபெற்றுக்கொண்டது. அதனை டூவீலரில் எடுத்துக்கொண்டு கடைத்தெருவுக்குப்போனான். மாவு  அரைக்கும் மெஷின் கடைவீதியில்தான் இருந்தது. மெஷினில் அவ்வளவாகக்கூட்டமும் இல்லை. கோதுமை அரைக்கக்காத்திருப்போரில் அவன் தான் ரெண்டாவது ஆள்.  மெஷின் ஆள் கோதுமையை நான்கு முறை போட்டு போட்டுத்தான் மாவு ஆக்கிகொடுத்துக்கொண்டிருந்தான்.

‘மாவ எடை மெஷின்ல வையுங்க’ மெஷின் ஆள் சத்தமாய்ச்சொன்னான். அருலில் மிளகாய் மெஷின் ஓடிக்கொண்டு இருந்தது. அந்த சத்தத்தில் எங்கே ஒருவர் பேசுவது கேட்பது. சாத்தியமே இல்லை. மிளகாய் அரைத்துக்கொடுப்பவரை ப்பார்ப்பதற்குப்பரிதாபமாக இருந்தது. கண்கள் இடுங்கி மூக்கு ஈசிக்கொண்டு அவர் போட்டிட்ருக்கும் பனியன் எல்லாம் மஞ்சளும் சிவப்புமாய் கறை கறையாய்த்திட்டு. மடித்துக்காட்டியிருக்கும் வேட்டியில் ஆயில் இத்யாதிகள் கறை.

‘ மூன்றரை கிலோ இருக்கு’  அவன்  எடைபார்த்து பதில் சொன்னான்.

‘ முப்பது ரூபாய் கொடுங்க’

கிலோவுக்கு ப்பத்து முப்பத்தைந்து ரூபாய் கேட்டிருக்கவேண்டும் ஆனால் முப்பது தானே கேட்டார். கொடுத்தான். ஐந்து ரூபாய் குறைத்ததில் அவன் அல்ப மனம் என்னவோ சாதித்துவிட்டதாய்க் குதியாளம் போட்டது.

மிளகாய்ப்பொடி அரைப்பது சும்மா இல்லை. அதனைக் கொட்டி கிண்டி ஆரபோட்டு எடுத்துப்போக வேண்டும். இல்லாவிட்டல்  லேசாக  ஒரு கருப்பு கலர் தென்படும். வீட்டில் அவளிடம்  மாட்டிக்கொள்வோம்.  கோதுமை பச்சரிசி அரைக்க அந்த மாதிரிக்கு சிங்கி நாதம் எல்லாம் அடிக்கவேண்டாம். அப்படியே மாவுப் பையோடு இல்லை  தூக்குவாளியோடு மெஷினிலிருந்து கிளம்பிவிடலாம்.

மெஷினைவிட்டு வெளியில் வந்தான். டூவீலரை ஸ்டார்ட் செய்தான்.

‘ஆமாம் மொபைல் போன் சட்டைப்பையில் காணோமே கொண்டு வந்தோம்தானே.. டூவீலர நிறுத்திவிட்டு பையை தடவினான். கையை விட்டு ப்பார்த்தான். பை காலியாக இருந்தது.  ஒரு பத்து ரூபாய் ரெண்டு ரூபாய் ஒரு ரூபாய் திட்டுக்கள் ஒன்று ஒன்று கிடந்தது. மொபைல் எடுத்து வரவில்லையா, இல்லை எடுத்து வந்தோமா ஒரே குழப்பமாக இருந்தது. விறு விறு என்று வீட்டிற்கு வந்தான். கோதுமை மாவு அரைத்துக்கொண்டு இத்தனை சீக்கிரமாய் த்திரும்பியது கண்டு அவன் மனைவிக்கு மகிழ்ச்சி வேறு.

‘ என்ன தேடு கிறீர்கள்’

‘ மொபைல் போன்’

‘ சட்டைப்பையில் வைத்துக்கொண்டு போனீர்கள் நான் பார்த்தேன்’

‘ அப்படியா நன்றாக நினைவிருக்கிறதா’

‘ ஆமாம்’ என்றாள்.

கணிப்பொறிக்கு ப்பக்கத்தில் வேலை எதுவும் இல்லாத லேண்ட் லைன் போன் எடுத்து அவன் எண்ணுக்கு 9443200455 அவனே போன் அடித்துப்பார்த்தான்..

‘  ’மொபைல் எண்ணுக்கு முன் 0 சேர்த்து டயல் செய்யவும்’ கட்டளை வந்தது. அப்படியே செய்தான்.  அந்த அஃறிணை ஜீவனுக்கு மனிதப் பிரச்சனை எல்லாம் புரியவா போகிறது.

‘ ‘ நீங்கள் டயல் செய்த தொலைபேசி  எண் தற்சமயம்  சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளது. பின்னர் முயற்சிக்கவும்’ அறிவிப்பு வந்தது.

சுவிட்ச் ஆஃப் என்று தொலைந்து போன போனிற்கு அறிவிப்பு வந்தால் கோவிந்தா தான் என்பது எல்லோருக்கும் தெரிந்த செய்தி..

‘ போச்சி போயிட்டுது போன்’ என்றான்.

‘ சுவிட் ஆஃப் அறிவிப்பு வருகிறதா’

‘ ஆமாம்’

‘ ஒரு எட்டு மெஷின் வரைக்கும் போய் ப்பார்த்து வாருங்கள்’

உடன் கிளம்பினான். அதே டூ வீலரில்  முன்னர் போய்வந்த வழி எல்லாம் கண்களை அகல விரித்துக்கொண்டுத் தேடினான்.

சிலர் என்ன? என்ன? என்றார்கள். மொபைல் போன் கீழே விழுந்து விட்டது தேடுகிறேன் பதில் சொன்னான்.

‘ போன அடிச்சி பாத்திங்களா’

‘ சுவிட்ச் ஆஃப் வருது

‘ இப்புறம் ஏன் மந்தரையில ரோட்டுல தேடுறீங்க’ சாலையில் போகிறவர்கள் சொன்னார்கள்.

 அவனை  யாரோ பொட்டில் அறைந்த மாதிரிக்கு இருந்தது. நேராக அந்தமெஷினுக்குப்போனான்

‘ அய்யா என் போனைக்காணும் தொலச்சிப்புட்டேன்’

‘இங்க எங்க இருக்கு அது போனதுதான். இனியா வரப்போவுது மே சட்ட ஜொபில மொபைல  வைப்பாங்களா’

மொபைலை உடன் லாக் செய்தாகவேண்டும். அருகில் உள்ள மொபைல் ரீசார்ஜ் செய்யும் கடைக்குப்போய்  மொத்த சேதியும்  சொன்னான். கஸ்டமர் சர்வீஸ் தொடர்பு கொண்டு சிம்மை லாக் செய்யும்  அந்தப் பெரிய வேலை ஒருவழியாய் முடிந்தது.

அன்று மாலை இரவு  எல்லாம் அவனை யாரும் அழைக்கவும் முடியாதே. அவன் மனைவி செல்போன் வழி மிக மிக வேண்டியவர்கள் மட்டும்  மொபைல்போன் தொலைந்த துக்கம் கேட்டார்கள். இரவு தூக்கம் ஏது?

மறு நாள் ஐந்து கிலோமீட்டர் டூவீலரில் பயணித்து கஸ்டமர் சர்வீஸ்  செண்டருக்குப்போய் ஆதார் காடு நகல் காட்டினான். மனு  ஒன்றுகொடுத்து டூப்லிகேட் சிம் வாங்கினான்.

மனைவியிடம் பேசிப்பேசி  கெஞ்சிக்கெஞ்சி அவளது ஏடிஎம் கார்டை வாங்கி வந்திருந்தான். அவன் கணக்கிலெல்லாம் காசுபணம் அவ்வளவுக்கு இருந்தால்தானே..

 டூப்லிகேட் சிம்மை க்கையில் எடுத்துக்கொண்டு ஒரு மொபைல் விற்பனை க்கடைக்குப்போனான். பத்தாயிரம் ரூபாயுக்குக் குறைந்து ஒரு   மொபைல் போன் வாங்க முடியாமல் திண்டாடினான். வேறு வழி.இல்லையே.  மனத்தை திடப்படுத்திக்கொண்டு எப்படியோ ஒரு மொபைலை. வாங்கி முடித்தான். சிம் போட்டு ப்பேசிப்பார்த்தான். முதல் கால். அந்தப் புது போனில்..

‘ இப்ப வாங்கியிருக்கீளே இது என்ன பெரிய போனா சின்ன போனா’

‘பெரிய போன்’

‘’ உங்க புத்தி  எப்ப திருந்தறது.’

அவள் பதிலுக்குச் சொன்னாள்.

கையில்  புதிய  கைபேசியோடு  முகத்தை த்தொங்க போட்டுக்கொண்டு வீட்டுக்குத்திரும்பினான். வீட்டில் நடந்தது என்ன என்பதைத்தான்  அவன் என்னிடம்  சொல்லவில்லை

.  எப்போதாவது அரிசி மிளக்கய்  இத்யாதிகள் அரைக்க மட்டும் மெஷின் பக்கம் வருகிறான்.

‘’  ரேஷன் கடைல போடுற கோதுமையை வாங்கி  நாம மெஷின்ல அரைச்சா,  அந்த  மாவுல  ஒரு வீச்சம் வருது’ ஜம்பமாய்ப் பொய்தான் பேசுகிறான்.

————————————

Series Navigationஎமிலி டிக்கின்ஸன் கவிதைகள்ஆனாலும் காத்துக் கொண்டிருக்கிறேன்!
author

எஸ்ஸார்சி

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *