ஒரு கதை ஒரு கருத்து

author
0 minutes, 6 seconds Read
This entry is part 14 of 15 in the series 9 ஜனவரி 2022

 

சுந்தர ராமசாமி கதைகள்  2

 

அழகியசிங்கர்

            பொதுவாகக் கதைகளைப் படிக்கிறோம்.  எத்தனை கதைகளை நாம் ஞாபகம் வைத்துக்கொள்கிறோம்.   இது மாதிரி யோசிக்கும் போது சுந்தர ராமசாமியின் கதைகளை உதாரணமாக எடுத்து வைத்துக்கொண்டேன்.

            இங்கு ஒரு சம்பத்தைக் குறிப்பிட வேண்டும் போல் தோன்றியது. விமர்சகர் வெங்கட் சாமிநாதன் வல்லிக்கண்ணனை இரக்கமில்லாமல் டெச்பேச் க்ளார்க் என்று கிண்டல் பண்ணியிருக்கிறார்.

            இந்தக் கிண்டலை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.  சமீபத்தில் சாகித்திய அக்காதெமி வெளியிட்ட அவருடைய சிறுகதைத் தொகுப்பை  வாங்கி வைத்துக்கொண்டேன்.  

            வல்லிக்கண்ணன் ஒரே ஒரு குற்றமாக வெங்கட் சாமிநாதன் கருதுவது.  எதாவது ஒரு புத்தகமாவது பத்திரிகையாவது எதாவது ஒரு புத்தகமாவது பத்திரிகையாவது வல்லிக்கண்ணனுக்கு யாராவது அனுப்பினால் அதைப் பாராட்டி ஒரு கடிதம் எழுதுவது.  தி.க.சியும், வல்லிகக்கண்ணனும் இந்தச் செயலை தொடர்ந்து இறுதி மூச்சுவரை செய்து கொண்டிருந்தார்கள்.

            என் விருட்சம் இதழை அவருக்கும் திகசிக்கும் அனுப்புவேன். அவர்கள் இருவர்களிடமிருந்து பதில்கள் வரும்.  மற்றவர்கள் கண்டுகொள்ள மாட்டார்கள்.  அப்போதுதான் தெரியும் எல்லோருக்கும் விருட்சம் போய்ச் சேர்ந்தது.

            ஒரு முறை வல்லிக்கண்ணனைப் பேசக் கூப்பிட்டேன். உடனே வல்லிக்கண்ணன் பேச வந்தார்.  தமிழ் நாவல்களைப் பற்றிப் பேசினார்.

            தமிழில் அப்போது வந்த தமிழ் நாவல்களை ஒப்பிக்கிற மாதிரி  கடகடவென்று கூறிக்கொண்டே போனார்.  கையில் எந்தக் குறிப்பும் வைத்திருக்கவில்லை.

            இப்போது நினைத்துப்பார்த்தால் இது பெரிய விஷயமாகத் தோன்றுகிறது.  தான் ரசித்த நாவல்களை ஞாபகத்திலிருந்து சொல்லிக் கொண்டே போனார்.

இது சாத்தியமா?  வல்லி க்கண்ணனுக்கு இது சாத்தியமாக இருந்தது. நான் டைரி எழுதுபவன்.  இரண்டு நாட்களுக்கு எழுதாமல் விட்டுவிட்டுத் திரும்பவும் இன்று எழுத முயற்சிக்கும்போது  முதல் இரண்டு நாட்களுக்கு நடந்தது பற்றி என்னால் எழுத முடியாது. பொதுவாக நம் வாழ்க்கை ஒரு  eventless life . ஒன்றுமில்லை. ஆனால் அதில் கூட தினசரி நிகழ்ச்சிகளை ஞாபகப்படுத்திக்கொண்டு பதிவு செய்ய முடிவதில்லை.

            இப்படி யோசிக்கும்போது வல்லிக்கண்ணன் ஞாபகம் வைத்துக்கொள்வதை நான் பெரிய விஷயமாக நினைக்கிறேன்.  நான் மூன்று முறை அசோகமித்திரனின் மானசரோவர் நாவலைப் படித்திருக்கிறேன்.  இப்போது கேட்டால் கூட முழுதாக ஞாபகத்திலிருந்து அந்த நாவலைக் கூற முடியாது.

            ஏகப்பட்ட சிறுகதைகளை வாசித்துக் கொண்டிருக்கிறேன்.  ஆனால் எல்லாம் சில நாட்களுக்குப் பிறகு மறந்து போய் விடுகிறது.  அதனால்தான் சுந்தர ராமசாமியின் கதைகளைப் படிக்கும்போது ஞாபகம் வைத்துக்கொள்வதைப் பற்றி யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

சுந்தர ராமசாமியின் கூட்டத்திற்குப் பிறகு இன்னும் இரண்டு கூட்டங்கள் நடத்தி விட்டேன். சல்மா கதைகளையும், ந.பிச்சமூர்த்தி கதைகளைப் பற்றி.  திரும்பவும் ஆறு கதைகள். அதற்கு அடுத்த கூட்டம். புதுமைப்பித்தன் மௌனி கதைகள்.  புதுமைப்பித்தன் கதையான கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும், மௌனியின் அழியாச்சுடர் கதையும்.  

            கதைகளை ஞாபகப்படுத்தும் முயற்சியில் எனக்கு ஒரு சோதனை.  திரும்பவும் என் மனதிற்குள் கதைகளைத் சொல்லிக் கொண்டேன்.

            கதைகள் ஞாபகத்திற்கு வர ஆரம்பித்து விட்டன.  ஆனால் கதையாசிரியர்கள் எழுதப்பட்ட விதத்தில் இல்லை.  ஞாபகப்படுத்திச் சொல்லும்போது சிலவற்றைத் தவற விட்டிருப்பேன்.

            புதுமைப்பித்தன் கதையான கடவுளும் கந்தசாமிப் பிள்ளை படிக்கும்போது. கடவுள் சாதாரண மனிதனாக கந்தசாமிப்பிள்ளையைப் பார்க்க வருகிறார்.  நம்மிடம் பேசிக்கொண்டிருப்பது கடவுள் என்று தெரிந்தும் சாதாரணமாக எடுத்துக்கொண்டிருக்கிறார் கந்தசாமிப் பிள்ளை. கந்தசாமிப்பிள்ளைக்கு கடவுளுடன் பேசுகிறோம் என்று எந்த ஆச்சரியமுமில்லை. இதுதான் கதையின் சாரம்சம்.  இந்தக் கதையில் பல சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.சிறப்பாக எழுதி உள்ளார் புதுமைப்பித்தன்.

அழியாச்சுடர் என்ற கதையைப் பார்ப்போம்.  மொத்தமே மூன்று கதா பாத்திரங்கள்தான்.  நண்பனைப் பார்க்க வருகிறான் கதைசொல்லி .  அவனிடம் நண்பன் தன் பால்ய காலத்தில் காதலித்த பெண்ணைப் பற்றிக் கூறுகிறான். ஒரு புத்தநிலையில் அவன் கூறிக்கொண்டே போகிறான். பின் அவனைப் பார்க்க முடியவில்லை என்று கதைசொல்லி மூலம் தெரிய வருகிறது.  

            இப்படித்தான் கதைகளை ஞாபகம் வைத்துக்கொள்ள முடியும் என்று எனக்குத் தோன்றுகிறது.  இன்னும் சில மாதங்கள் கழித்து இக் கதைகள் ஞாபகமிருக்குமா என்று தெரியவில்லை.  ஆனால் என்னால் திரும்பவும் சொல்ல முடியும் என்று நினைக்கிறேன். இது ஒரு சோதனை.  எனக்குள்ளேயே நான் வைத்துக்கொள்வது. ஆனால் ஒவ்வொரு முறை ஞாபகப்படுத்திக்கொண்டு சொல்லி ப் பார்த்துக்கொள்ள வேண்டும்.

            சுந்தர ராமசாமியின் கதையை எடுத்துக்கொள்வோம். ரத்னாபாயின் ஆங்கிலம். இந்தக் கதையின் ஒரு விசேஷம் ஆங்கில வார்த்தைகளையே பயன்படுத்தாமல் தமிழில் கதையை எழுதியிருக்கிறார். 

ஆங்கிலத்தில் திறமையாக எழுதக்கூடியவள் ரத்னாபாய். அதிகமாக ஆங்கில மொழியில் எழுதும் மோகத்தால் கற்பனைகளை எழுதுவாள்.  வாங்காத ஒரு புடவையை அவளுக்கு வர்ணித்து எழுதி விடுகிறாள். கண்ணனின் வேணுகானத்தையும் குழைத்து இதைப் படைத்திருப்பவனைக் கலைஞன் என்று நான் கூசாமல் அழைப்பேன் என்று ஆங்கிலத்தில் எழுதும் பெருமையுடன் ரத்னாபாய் எழுதிவிடுகிறா.

            இங்கே அம்புஜம் திரும்பவும் கடிதம் எழுதும்போது, ரத்னா உனது ஆங்கிலம்.  எத்தனை தடவை அதை வியந்தாயிற்று? என்று வியக்கிறாள். 

சுந்தரராமசாமி ஒரு இடத்தில் குறிப்பிடுகிறார். ‘ அதனுள் வினையின் விதைகளும் அடங்கியிருந்தன’ என்று. 

            ரத்னாபாய் விவரித்த புடவையை அம்புஜத்திற்கும், அவளுடைய நண்பர்களுக்கும் சேர்த்து மூன்று புடவைகள் வாங்கி அனுப்பும்படி கூறுகிறாள்.  

            கடிதத்தில் அம்புஜம் ‘தொந்தரவுதான் உனக்கு’ என்று எழுதியிருக்கிறாள். ரத்னாபாயும் ‘தொந்தரவு’தான் என்று முணுமுணுத்துக் கொள்கிறாள்.

            அவளுடைய தாயார் மீராபாய் டீச்சர் ஒவ்வொரு முறையும் வெளியே ரத்னாபாயை அழைத்துக்கொண்டு போகும்போது அவளைப் பார்க்க ஒவ்வொரு ஆணும் பெண்ணும் வயிறெரிந்து விட்டார்களாம் என்று குறிப்பிடுகிறார் சுந்தர ராமசாமி.  அவ்வளுவு அழகு நிரம்பியவளாம் ர்தனாபாய்.

            ஒவ்வொரு ஆணும் ரத்னாபாய்யைப்  பார்க்கும்போதும் தன் ஏக்கங்களைக் கடிதங்கள் மூலம் வெளிப்படுத்துவார்கள்.  மீரா பாய் அந்தக் கடிதங்களைப் படிப்பாள்.  ரத்னாபாய் ஆங்கிலம் மீது மோகம் என்று தெரிந்து, ஆங்கிலத்தில் காதல் கடிதங்கள் எழுதுவார்களாம்.

            எங்கள் ஊரில் அந்தக் காலத்திலிருந்த பெரிய வீட்டுப் பிள்ளைகளில் அநேகர் அவளுக்குக் காதல் கடிதங்கள் எழுதியிருந்தனர் என்று கதைசொல்லி  ஒரு இடத்தில் குறிப்பிடுகிறார்.  

            ரத்னாபாய் பள்ளிக்கூடத்தில் ஆசிரியராகச் சேர்ந்து பள்ளிக்கூடம் போகும் வழியில் ஜான்சனைப் பார்க்கிறாள்.  அவன் எளிமையைக் கண்டு அவள் மயங்கி விடுகிறாள்.  

            ‘உன்னைவிட அழகாக இருக்கிறது உன் ஆங்கிலம்’ என்கிறான் ஜான்சன்.  

திருமணம் ஆன பிறகு ,  ‘நான் ஒரு பொறுக்கி, என்னை நீ கட்டுப்படுத்த முடியாது.  நீ சீமாட்டி என்றால் உன் அம்மாவிடம் போய் இரு’ என்று குடிவெறியில் கத்துவான் ஜான்சன். 

            ‘நீர் ஒரு எளிமையான மனுசன் என்று நினைத்து நான் ஏமாந்து போய்விட்டேன்.  வாழ்க்கை எவ்வளவு பயங்கரம்’ என்றாள் ரத்தனாபாய்.  

            அப்போது, அவள் கணவன், ‘உன் ஆங்கிலத்தை வெறுக்கிறேன்’ என்று கத்துவான்.

            வங்கியில் தன் தங்க வளையல்களை அடகு வைத்துவிட்டு,  புடவை வாங்கும் கடைக்குப் போகிறாள்.  புதன் கிழமை மட்டும் நகைக்குப் பணம் கொடுப்பதாக அவர்கள் கூறுகிறார்கள்.

            ‘அன்று நான் எடுத்துக் கொண்டு போன மாதிரி சேலை வேண்டும்’ என்கிறாள் கடைப் பையன்களைப் பார்த்து.  எல்லோரும் முழிக்கிறார்கள்.

ரத்னா பாய் எடுக்காத சேலையை அவர்களிடம் கேட்கிறாள். ‘இவர்களைத் தண்டிப்பது என்னைப் போன்ற ஒரு ஸ்திரீக்கு அழகல்ல’ என்று ஆங்கிலத்தில் நினைக்கிறாள் என்கிறார் கதாசிரியர்.

            எதோ மூன்று புடவைகளை எடுத்து அனுப்பி விட்டாள் அம்புஜத்திற்கு.  

            அம்புஜத்திற்குக் கடிதம் எழுதுகிறாள் ஆங்கிலத்தில்.  அவள் எழுதிய கடிதத்தை ஏழெட்டுத் தடவை படித்துப் பார்த்தாள் ரத்னா.  அவளுக்கு ரொம்பவும் படித்திருந்தது. ‘ பாஷை ஒரு அற்புதம்.கடவுளே உனக்கு நன்றி’ என்றாள். திரும்பவும் கண்ணாடி முன்  நின்று சிறு அபிநயத்துடன் அந்தக் கடிதத்தைப் படித்தாள். 

            புதன் கிழமைக் காலையில் பேங்குக்குப் போக வேண்டும் என்ற சிரத்தையே ரத்னாபாய்க்கு ஏற்படவில்லை என்று முடிக்கிறார் கதாசிரியர்.

            இந்தக் கதையை எத்தனை நாட்களுக்கு நான் ஞாபகத்தில் வைத்திருக்க முடியும் என்று பார்க்கிறேன்.

          (09.01.2022)

Series Navigationவிடுதலை இந்தியாவில் விஞ்ஞானத் தமிழ் வளர்ச்சிகவிதை
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *