அழகியசிங்கர்
ஒரு வல்லின மாத ஏடு என்ற பெயரில் கசடதபற என்ற சிற்றேடு அக்டோபர் 1970 ஆம் ஆண்டு வெளிவந்தபோது, அது தமிழ்ச் சூழ்நிலையில் ஏற்படுத்திய தாக்கம் எளிதில் விவரிக்க இயலாது.
எழுத்து பத்திரிகையில் மட்டும் முதன் முதலாக அறிமுகமான புதுக்கவிதை கசடதபறவில் தன் கிளை பரப்பியது.
முதல் இதழிலே கவிதைக்கென்று ஒரு முத்திரையைப் பதிவிட்டது கசடதபற. ஒரு சமூக மாற்றத்தை கசடதபற இதழில் புதுக்கவிதை மூலம் வெளிப்பட்டது.
ஞானக்கூத்தன் ஆரம்பித்து முதல் இதழ் கசடதபற இதழில் 5 அல்லது 6 கவிதைகள் வெளிவந்திருக்கும். இதற்குமுன் சி. மணியின் நடை என்ற பத்திரிகை (7 இதழ்கள் வரை வெளிவந்திருக்கின்றன) புதுக்கவிதைக்கு முக்கியத்துவம் கொடுத்து வந்திருக்கின்றன.
கசடதபறவில் முதல் இதழில் வெளிவந்த பாலகுமாரனின் புதுக் கவிதையைப் பார்ப்போம்.
‘மனித பாவங்கள்’ என்ற தலைப்பில் எழுதப்பட்ட கவிதை.
இரட்டைத் தடங்களில்
எதிர்ப்பட்ட ரயில்கள்
ஒன்றை ஒன்று கண்டதும்
கண் சிமிட்டிக் கொண்டன
பொறி பறந்தது
நெருங்கி வந்ததும்
வந்தனம் கூறின
குழ லொலித்தது
பிரிந்து போகையில்
இகழ்ச்சி நிரைத்து
எச்சில் துப்பின
என் முகத்தில் கரி அடித்தது –
தடங்களைக் கடக்கையில் தெரிந்தது
ரயில்களின் சினேகிதம் கண்டு
கட்டைகள் குலுங்கிச் சிரிப்பது
70களில் எழுத வந்த கோபக்கார இஞைர்களின் துடிப்பான கவிதைகளைச் சரியாகப் பதிவு செய்தன கசடதபற.
அடுத்தது கோ.இராஜாராமின் சகுனம் என்ற கவிதை.
நீண்டதொரு காலம் போய்,
மீண்டுமொரு சந்திப்பு
அதற்கென விரைவாய் அடியெடுத்து வைத்தேன்
நிலைக்கும் அப்பால் தெருவிலே வந்தேன்
உற்சாகங் குமிழிட்டு உள்ளத்தை விரித்தது
நடையினிலே நான் மிதந்தேன்
பச பசவென்று உடலெடுத்த
பூனையொன்று குறுக்கிட்டது
சீயென்றேன். தூவென்றேன்
காணக் கூசினேன் பூனையை
திரும்பிவிட அடிவைத்தேன்
துள்ளி விழுந்தது.
துரிதமாய் வந்த காரினடியில்
துடித்துப் புரண்டது, பூனை
மனங் குமறிக் குமைந்தேன்.
கூசினேன்-என்னைக் காட்டிக்கொள்ள
கசடதபற காலத்தில் வெளிப்பட்ட கவிதைகள் எல்லாம் தெளிவாகவே க.நா.சு பாணியைப் பின்பற்ற ஆரம்பித்தன. எழுத்து காலத்தில் கவிதை சற்று சிக்கலாகவே வெளிப்பட்டது. சற்றுப் புரியாது. ஆனால் கசடதபறவில் இல்லை. பல புதிய இளைஞர்கள் கவிதைகள் எப்படி வர வேண்டுமென்று தீவிரமாக இருந்தார்கள்.
உண்மையில் கசடதபறவில் கவிதை என்றால் இப்படித்தான் இருக்கும் என்ற எந்த இலக்கணத்தையும் உருவாக்கவில்லை. கவிதை பற்றிப் பேசவில்லை. பத்திரிகைக்கு வந்திருந்த கவிதைகளைப் பிரசுரம் செய்ததோடு சரி.
அதனால் கவிதையின் தீவிரத்தன்மையைக் குறைப்பதுபோல் துணுக்குகளும் கவிதைகள் வடிவில் வந்து விழுந்தன. உதாரணமாக அம்பை பாலன் எழுதிய சந்தா என்ற கவிதை.
சந்தா
புரிகிறது: ஓராண்டும்
அரையாண்டும் கூட.
ஆயுள் சந்தாமட்டும்
புரியவில்லை.
ஆயுள் – எனக்கா ? அதுக்கா?
நகுலனின் மூன்று கவிதைகள் ஒரு வித்தியாசமான முயற்சி. கவிதைகளைப் பிரசுரம் செய்வதன் மூலம் கசடதபற கவிதையை எப்படி எதிர்பார்க்கிறது என்று தெளிவு படுத்துகிறது.
வட்டம் (1)
வாழ மனமில்லை
சாக இடமில்லை
வானில் மேகமில்லை
ஆனால்
வெய்யிலும் மடிக்கவில்லை
கந்தைக் குடைத்துணியெனக்
கிடக்கும்
தன்னினமொன்றைச்
சுற்றிச் சுற்றி வருமிக்
கறுப்பின் ஓலம் போல்
செத்துக் கிடக்கும்
சுசீலாவை
வட்டமிட்டு
வட்டமிட்டு
வட்டமிட்டு..
ஏற்கனவே புதுக்கவிதை எழுதி அனுபவம் வாய்ந்த நகுலன், ஞானக்கூத்தன் கவிதைகளும் கசடதபறவில் வெளிவந்துள்ளதால், கவிதைக்கொன்று முக்கியத்துவம் மிக்க ஏடாக மாறியுள்ளது கசடதபற. 70களில் இவ்வேடு வந்தபோது இதன் தாக்கம் முக்கியத்துவம் வாய்ந்ததாய் தோன்றியது.
இரண்டாவது இதழிலிலேயே முட்டையினுள் என்ற குந்தர் கிராஸ் கவிதையை கசடதபற வெளியிட்டுள்ளது. தன்னைச் சுற்றிலும் உலகம் முழுவதும் கவிதையின் போக்கை உணர்ந்துகொண்டு கவிதை வெளியிடுவதில் முக்கியத்துவம் காட்டியது கசடதபற.
கசடதபற மூன்றாவது இதழில் வெளி வந்த ஞானக்கூத்தனின் ‘மஹ்ஹான் காந்தீ மஹ்ஹான்’என்ற கவிதை பிரசுரமானவுடன் எல்லோருடைய கவனத்தையும் கவர்ந்தது.
கவிதை மூலம் சமூகம் பற்றிய பார்வையை அழுத்தமாகப் பதிவிடவும் முடியும் என்று காட்டியது கசடதபற. அதே சமயத்தில் அதையே அழுத்தமாகப் பதிவிடுகிறது பொதுஉடமை நாளிதழ்களுக்கும், வானம்பாடி இதழ்களுக்கும் சவால் விடுவதுபோல் இது அமைந்தது.
மொத்தத்தில் கசடதபற இதழ்களில் வெளிவந்த கவிதைகளை இன்னும் ஆராய வேண்டுமென்று தோன்றுகிறது