‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்) யின் 3 கவிதைகள்

This entry is part 8 of 17 in the series 23 ஜனவரி 2022

 

ரிஷி(லதா ராமகிருஷ்ணன்) யின் 3 கவிதைகள்

 

1.காலத்தால் அழியாத காலரைக்கால் கவிதை!

 

காலரைக்கால் கவிதையைக் கிறுக்கிமுடித்தபின்

காட்மாண்டுவிலொரு அறிமுகவிழாவும்

காணொளியிலொரு வர்ணமய வாசிப்பும்

கிட்டத்தட்ட ஐம்பதுபக்கங்களில்

பட்டுத்துணியில் கட்டப்பட்ட கட்டுரைகள் எட்டும்

கிட்டும்படி செய்தும்

அவை போதாதென்ற திட்டவட்டமான புரிதலுடன்

ஆறுவருடங்கள் கழித்து ஆரம்பமாகப்போகும்

தொன்றுதொட்ட முதல் இன்றைய கட்டம்வரை

சுட்டும்

தமிழிலக்கியத்திற்கான தொலைக்காட்சி சேனலின்

’லோகோ’விலும் அதை இடம்பெறச்செய்ய

ஆனமட்டும் பாடுபட்டுக்கொண்டிருக்கிறார்

ஆனானப்பட்ட கவி யவர்.

 

 

 

  1. மோதிரக் கைகளும், மகத்துவக் குட்டுகளும்

நான்கே சொற்களில் ஒரு கவிதைத்தொகுப்பைப்

பற்றிய முழுநிறைவான விமர்சனம் சாத்தியமா?

மந்திரமாவது சொல்

தந்திரமன்றி விமர்சனமில்லை என்றுகொள்

முன்முடிவுக்கேற்ப

தன்னிச்சையாகவோ

ஒருமித்த கருத்தாகவோ

’அவசியம் படிக்கவேண்டும் அனைவரும்’

என்றோ

’அனாவசியம். யாருக்குமே படிக்கப் பிடிக்காது’

என்றோ

எழுதிவிட்டாலாயிற்று.

அடிக்குறிப்பு:

இரண்டாயிரமோ இருபதாயிரமோ சர்க்குலேஷன் உள்ள பத்திரிகைக்கு இருப்பதெல்லாம் மோதிரக்கைகள்தானே!

 

 

  1. நீளாதிநீளங்களும் நீக்குபோக்குகளும்

 

இதுவரை எழுதப்பட்ட

சிறுகதைகளிலேயே

மிகவும் நீளமானது எழுதப்

பட்டிருப்பதாக

புதிய மோஸ்தரில் விளம்பரம்

தரப்பட்டிருந்தது.

சிலர் மர ஸ்கேலை எடுத்துக்

கொண்டனர்

சிலர் இரும்பு ஸ்கேலை எடுத்துக்

கொண்டனர்.

சிலர் ‘இஞ்ச் டேப் எடுத்துக்

கொண்டார்கள்

சிலர் கையால் முழம்போட

முடிவுசெய்தார்கள்.

ஆளாளுக்கு ஒரு அளவுகோலை

எடுத்துக்கொண்டபின்

அதி கவனமாக அளந்தார்கள்

அந்த ஒரேயொரு கதையைத்

திரும்பத்திரும்ப.

அவர்களுடைய அளவுகோல்கள் காட்டும்

வேறுபட்ட அளவுகளை

அவற்றின் வித்தியாசங்களை

அளவுகோல்களின் அளக்குங் கைகளின்

வேறுபட்ட நீளங்களை

ஆக்ரோஷமாய் அதி துல்லியமாய்

ஆங்காங்கே அடைமொழிகளோடும்

மேற்கோள்களோடும்

அழுத்தமாய்ச் சுட்டிக்காட்டியவா

றிருந்தார்கள்.

ஸ்கேலும் இஞ்சு டேப்பும்

ஸ்டேஷனரி கடைகளில்

அமோக விற்பனையாக

அலங்காரப் பொருளாகவோ

ஆய்வுக்கான கருப்பொருளாகவோ

அந்தஸ்துக்கான ஆஸ்தியாகவோ

பந்தோபஸ்துக்கான முன்னேற்

பாடாகவோ

முகக் கவசமாகவோ

மார்பில் பூணும் கேடயமாகவோ

மண்டைக்குப் பின்னாலான

ஒளிவட்டமாகவோ

அந்தக் கதை குறித்த கட்டுரை

யெழுத

அதியதிவேகமாக விலைகொடுத்து

வாங்கிக்கொண்டிருப்பவர்களின்

வாதப்பிரதிவாதங்களில் _

காலம் எழுதிய கதைகளையெல்லாம்

ஒன்றுவிடாமல் படித்தவர்

யாரென்ற விவரமும்

காலத்தினாற் செய்யப்பட்ட

அதி நீளக் கதை

யெதுவென்ற விவரமும்

கதை யென்ற ஒன்றுண்டு

என்ற விவரமும்

வெகு நேரத்திற்கு முன்பே

காணாமல் போயிருந்தன.

 

 

 

 

 

Series Navigationசாரு நிவேதிதா : வெளியிலிருந்து வந்தவன்உன் செல்வீகம் கற்பிக்கும் வறுமை -14
author

ரிஷி

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *