கவிதா மண்டலத்தில் சித்தன்

This entry is part 3 of 19 in the series 30 ஜனவரி 2022

 

          

     புதியமாதவி

. காதலும் வீரமும் மட்டுமே பாடுபொருளாக இருந்த தமிழ்ச் சமூகத்தில்

பக்தி இலக்கியங்கள் சரணாகதி தத்துவத்தை முன்னிறுத்த

ஆண் பெண் உறவை பாடுபொருளாக எடுத்துக்கொண்டன,

பெளத்தம் சமணம் தத்துவ விசாரணையை விட அறம்போதித்தலுக்கு

முக்கியத்துவம் கொடுத்தன. சித்தர்களின் காலம் தமிழ் மெய்யியல் தளத்தில் அதிகார மையத்திற்கு எதிரான குரல் மட்டுமல்ல. அதற்கான அறிவுப் பின்புலம் கொண்ட து. தேடல்களின் மூலம் வாழ்வின் அர்த்தப்பாடுகளை கண்டடைய முனைந்திருக்கிறது 

கவிதைகளை ஆன்மாவின் தேடலாக முன்வைத்ததில் சூஃபியிசம்  முக்கியமானது. கவிதையில் ‘ஆன்மாவின் நிழலை’ தரிசிக்கமுடியும் என்றார்கள் சூஃபிகள்.

பிறவிப்பெருங்கடல் நீந்தும் பயணத்தை 7 பள்ளத்தாக்குகளில் பயணித்து

மனிதப்பிறவி கண்டடையும் என்றார்கள்.

அந்த 7 நிலைகள் : நேசம், நெருக்கம், தீவிரமான காதல், பிரிவின்மை.

 சரணாகதி, பித்துநிலை, நான் ‘ அழிந்து ஒன்றாதல் என்று ஏழு படி நிலைகளில்

வைக்கிறார்கள். இதன் சாரம்சங்களை ‘ஏழு பள்ளத்தாக்குகள்” the secret of secrets  என்ற புத்தகத்தில் ஒஷோ பேசுகிறார்.

காதலின் சரணாகதியும் பித்து நிலையும் இறைவனுடன் ஒன்றாகும் ‘ நான்’ அழியும் அனுபவமாக , ரூமியின் கவிதைகளின் சாரமாக திகழ்கிறது. இத்தனை  நூற்றாண்டுகள் கடந்தும் மொழிகளின் எல்லைகள் கடந்தும் ரூமியின் கவிதைகள்  கவிதையின் நிழலாக தொடர்கின்றன.

இன்று இப்பெருங்கடலின் துளிகள் கவிதைகளாகி தமிழ்க் கவிதா மண்டலத்தின்

தத்துவ இடைவெளிகளின் தூரத்தை கடந்துவிடும் பயணத்தில்

தஞ்சை தவசியின் “நிழலற்ற தூரம்” முக்கியமானது.

 

“நீ கடலின் ஒரு துளியல்ல
ஒரு துளிக்குள் நிறைந்திருக்கும் கடல்” (என்பார் ரூமி)

தவசியின் ஒவ்வொரு கவிதைகளும் அதன் துளிகளும்

ரூமியின் இந்த வரிகளுக்கானவை.

தவசியின் கவிதைகள் எங்கும் “அம்மாவின் நேசம்” (1) முதல்படி.

“அசையும் மோனம்

அம்மாவில் புத்தனின் புன்னகை

கண்ட கவிதை மனம் உயிரின் மிச்சமாய்

பிறவி ஈரமாய் மகளைப் பார்க்கிறது.

‘”அப்பா மகள் உறவு அரூப தரிசனம்”

நேசம்,  இரண்டாவது நிலையில் நெருக்கமாகிறது. (2)

இந்த நெருக்கம் வாழ்க்கையின் புதிய அர்த்தங்களை புதிய சூழலில்

எழுதிப் பார்க்கிறது.

“தூக்கம் வராத நகரத்து தனிமையில்

முழுசாக யாரும் இறந்துப் போவதில்லை

வாழ்தலின் தீவிரமாகிறது. (3)

“பரபரப்பாயுள்ளது பூமிக்கோளம் சந்தைவெளி

குரல்வளையை நெருக்குகிறது உயிர்வாழ்தல்

இறப்பதற்காக வரவில்லை

நான் கடலோடு தனியாக இருக்கவிரும்புகிறேன்

பிரிவின்மையை (4) வெளிப்படுத்துகிறது.

வெளிச்சத்திற்கு வரும் உண்மை இதுதான்

கற்ற முழுதும் ஒருதாள் கனம்கூட இல்லை

 சரணாகதியாகிவிடுகிறது..(5)

அறிவியல் தோற்றுப்போன காலக்கோட்பாட்டு சூத்திரத்தை

கடந்துவிடும் பித்து மன நிலைக்குள்  (6)பயணித்து

பின்னோக்கி நகர்கிறது கருத்திருக்கும் காலம்

பூர்வீக பொம்மை துளைவழி ரத்தம் ததும்பிக் கசிகிறது.

இறுதியாக அந்த “  நான்”   ‘நானற்றவெளி’ யில்

ஒன்றுபோலவெ இருக்கிறது ஒன்றுமில்லாததாகி

கரைந்துவிடுகிறது.(7)

 கவிதை ஏழு பள்ளதாக்குகளைத் தாண்டி

பிறவிப்பெருங்கடலில் சங்கமித்துவிடுகிறது.

தவசி கவிதைமொழி வாசிப்பிலிருந்து மட்டும் வந்ததல்ல.

“விழிப்பில் பெறும் மொழி.”..அது விலகுவதில்லை.

கவிதையின்  நிழலாய் “நிழலற்ற தூரங்களைக் கடக்கிறது.

 

கவிதைகள் எங்கும் வாசகன் அறிந்தச் சொற்கள்

புதிய வாசலைத் திறக்கின்றன. அவரவர் கையிலிருக்கும்

சாவியைப்  பொறுத்து வெளிச்சத்தை தரிசிக்க முடியும்.

சூலுற்ற அப்பா, மெளனம் பொய், பூர்வீகப்பொம்மை,

துளைவழி ரத்தம், அந்த இன்னொன்று, படித்துறை,

நிறைகுடத்துடன் படியேற வேண்டும்,

தூண்டில் தீவு, சாக மறுக்கும் பிசாசுகள்,

வெளிவிரியும் சிதம்பரவிலாசம்,

ஒன்றுபோலவே இருக்கிறது ஒன்றுமில்லாதது

பேசிவிடாதீர்கள், விழிப்பு கலைந்துவிடும்..

என்று பக்கத்திற்கு பக்கம் ..

ஒவ்வொரு முறை வாசிக்கும்போதும்

விரிந்திருக்கும் சொல்வலைக்குள்

வாசகன் சிக்கிக்கொள்கிறான். அதிலிருந்து வெளிவருவதற்குள்

அவனுக்கு நீண்ட பயணம் தேவையாகிறது.

மீண்டும் ரூமியின் அதே குரல் நமக்குள் கேட்கிறது.

இந்த சொற்களை என் உதடுகளில் இருந்து உதிர்ப்பது யார் ?

என் கண்களின் மூலம் காண்பது யார் ?

எது ஆன்மா ?

என்னால் கேள்விகளை நிறுத்த இயலவில்லை.

 

 தவசி கவிதைகளின் வடிவம் :

 

தவசி கவிதைகளின்  தனித்துவமாக அதன் வடிவ நேர்த்தியை

சொல்ல வேண்டும்.  நவீன தமிழ்க்கவிதை இதை வரவில் வைக்கும்.

/ஆன்மாவை அரித்த விஷம்,  நரம்பு நோய் அகங்காரம், /

 /நான் சாகவேண்டும், சாக மறுக்கும் பிசாசுகள் யாரைத் தேடுகின்றன/ /வாழவேண்டும் என்ற எண்ணத்திலேயே வாழ்ககையை முடித்துக்கொள்ள முடியாது/

/வாழ்ந்து பார்க்க முடியாது, உயிருள்ள கருவாடு/

/வெளிவிரியும் சிதம்பரவிலாசம், கீறல்விடும் தனித்துயரம்./.. கவிதைக்குள் வரும் இந்த வரிகள் தனித்தனியாக வாசிக்கும்போது தனித்தனி கவிதைகளாகி இன்னொரு தளத்திற்குப் பயணிக்கின்றன. அதே வரிகள் ஒன்றாகி ஒரே கவிதையில் சேர்ந்து பயணிக்கும்போது அதற்கான வீச்சு கவிதையின் இன்னொரு வடிவமாகிறது. கவிதைகளின் “கொல்லாஜ்” வடிவம். தனித்தனி கவிதைவரிகள் சேர்ந்து குவிமையப்பொருளை நோக்கி கொண்டுவரும் போது கவிதைக்கு கிடைக்கும் புதியவடிவம். “  முக நூல் பின்னூட்டம்.

முக நூலில் தவசியின் கவிதை அறிமுகமாகும்போது அவர் கவிதையின்

வடிவத்தில் காணப்படும் உத்தி 0 கொலாஜ் கவிதைகள் – என்று கருத்து

தெரிவித்திருந்தேன். புத்தகவடிவில் நிழலற்ற தூரமாக அவர் கவிதைகளை

மொத்தமாக வாசிக்கும்போது அந்த வடிவ நேர்த்தியின் தனித்துவம்

பல்வேறு கவிதைகளில் இருக்கிறது.

சமகாலத்தை நிராகரிக்கும் எதுவும் இலக்கியமாவதில்லை.

அதை மிகச்சரியாகப் புரிந்து கொள்ளாதவன் முன்வைக்கும்

தத்துவஞானம் வெற்றுக்காகிதமாகிவிடும். கனமான தத்துவ

வெளிக்குள் பயணிக்கும் தவசியின் கவிதைகள் சமகாலத்தை

புறமாக்கி நம் அகவெளிக்குள் பயணிக்கும் வித்தைகள் புரிகின்றன.

அப்படியான ஒரு கவிதை..

      கடவுளற்ற பெண்ணுலகம்

அநீதியின் சாம்பல் படிந்த

தூக்குமரத்தடியில்

முடிவற்ற வட்டமிடுதல்களில்

இருள்திரண்ட கோரமுகங்களுடன்

நெளியும் துர்தேவன்கள்.

அடிநாக்கில் நஞ்சு நுனிநாக்கில் அமிர்தம்

கதவுதட்டி திறந்தமேனியைக் காவு கேட்கிறது

பிணந்தின்னும் வேட்டை நாய்களின் உலகம்.

 

வெளிச்சத்தை மறைக்கும் பொந்துகளில்

வெறித்த கண்களுடன் சீறும்

இருதலை நாகம்.

வழக்கமான துரோகம்

குழையும் வக்கிரம்.

 

காலப்புதரில்

நம்பிக்கைக்குரியவனுமில்லை.

நட்புக்குரியவனுமில்லை.

பூமி அசோகவனம்

மனசுக்குப் பக்கம்

தகப்பனாய் யாருமில்லை.

 

நினைவின் ரணங்களுடன்

அரைபட்ட தனிமை.

அம்மணத்தோடு

தொடர்பறுந்து கிடக்கிறது.

ஒண்டியாய் எரியும்

கடவுளற்ற பெண்ணுலகம்.

( பக் 47)

தவசியின் நிழலற்ற தூரம்… தூரங்கள் கடந்தும் பயணிக்க

வேண்டும்.

“படிகளில் ஏறுவது படிகளைத் தாண்டத்தான்”

கவிதை “சித்தனுக்கு”  வாழ்த்துகள்.

… கடவுளற்ற பெண்ணுலகிலிருந்து புதியமாதவி.

 

கவிதை தொகுப்பு:  நிழலற்ற தூரம்

கவிஞர் தஞ்சை தவசி.

அமிர்தாலயம் வெளியீடு.

104 பக், ரூ 100/

தமிழ்வெளி : 9094 005600.

 

 

Series Navigationகாற்றுவெளி மாசி மாத(2022) மின்னிதழ்  எது      பிறழ்வு?
author

புதிய மாதவி

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *