சார்ள்ஸ் டிக்கின்ஸ்- கிறேட் எக்பெக்ட்ரேசஸ் : Great Expectations

author
0 minutes, 17 seconds Read
This entry is part 2 of 7 in the series 20 பெப்ருவரி 2022

 

 

 

சில வருடங்களுக்கு  முன்னர்  நான் இங்கிலாந்திற்குச் சென்றபோது,   கென்ட் ( Kent) பகுதியில் வாழும்   என் நண்பன் ஒருவனிடம்  சென்றேன்.  அவன் என்னை,  அங்கு இடங்கள் காண்பிக்க  வெளியே அழைத்துச் சென்றான்.  முதலில் ஒரு   கோட்டையைப் பார்த்தபோது  பின்னர் மாலையாகிவிட்டது.  இறுதியில் ஆங்கில எழுத்தாளர்  சார்ள்ஸ் டிக்கின்ஸ் வாழ்ந்த வீட்டிற்கு   அவன் அழைத்துச் சென்றபோது,  இரவாகிவிட்டது.  பொம்மையாகச் செய்யப்பட்டு,  அவரது நாற்காலியில் மேசையின் முன்பாக அமர்ந்திருந்த சார்ள்ஸ் டிக்கின்ஸ்ஸின் முழு உருவத்தையும் யன்னலுடாக பார்க்க முடிந்தது. அதன்பின்னர்,  அதனைச் சுற்றிய பகுதிகளையும் பார்த்ததுடன் அவர், தனது நடைப்பயணத்தின் பின்பு சென்று  மது அருந்தும் மதுச்சாலையில், நாங்களும் மது அருந்திவிட்டு திரும்பினோம்.

சார்ள்ஸ் டிக்கின்ஸ் நாவல்கள் பற்றிய விரிவுரையைக் கேட்டிருந்தாலும்,  கையில் எடுத்துப் பார்த்துவிட்டு வைத்துவிடுவேன்.  காரணம் மிகவும் பழைய காலத்து  ( விக்டோரியன்)  ஆங்கிலமாக இருக்கும் . வாசிப்பதற்குக் கையில் ஆங்கில அகராதி,  பந்திக்குப் பந்தி  தேவைப்படும்.

மெல்பனில்,  நான் சமீபத்தில் வீடு மாறியபோது எனது மனைவி , எனது புத்தகங்களை அதிகமாக வீட்டில் வைத்திருப்பது,  வீட்டில் பெருமளவு  இடத்தை எடுக்கிறது  என்பார்.  ஆனால் ,  அவருக்கு மகளது பதினைந்து வருட பழைய பாடப்புத்தகங்களை  எறிய மனம் வராது.

 

அப்படி எறியாது உள்ளே எடுத்து வைத்திருந்த புத்தகங்களிலொன்று  கிறேட் எக்பெக்ட்ரேசன்(Great Expectation) – சார்ள்ஸ் டிக்கின்ஸின் முக்கியமான,  கடைசிக்கு முதலான ( Penultimate) நாவலாகக் கருதப்படுகிறது.  வாசிக்கத் தொடங்கினேன்.  இக்காலத்தில் அகராதி புரட்டத் தேவையில்லை . ஆங்கில வார்த்தைகளின் அர்த்தங்களை கைத்தொலைபேசி கூகுளில் பார்த்துப் புரிந்து கொள்ளமுடிந்தது.

ஆங்கில நாவலாசிரியரான  ஐயன் பொஸ்டர்(E.M Foster) சொல்லப்பட்ட கூற்றைப்பார்ப்போம்.

  “ஆங்கிலத்தில் எழுதிய நாவல்கள், பிரான்சிய மற்றும் ரஸ்சிய நாவல்களோடு ஒப்பிட முடியாதவை . மாசல் புருஸ்ட் (Marcel Proust),  லியோ  டால்டாய் (Leo Tolstoy),  தஸ்கோவிஸ்கி (Fyoder Dosteovsky) போன்று மக்களது உள்ளங்களை ஊடுருவிப் பார்த்தவர்களை   நாங்கள் உருவாக்கவில்லை.  இப்படிச் சொல்வது  பிரித்தானியத் தேசபக்திக்கு எதிரான விடயமாக இருந்தாலும்,  இங்கு நான் உண்மையைப் பேசவேண்டும். அதே நேரத்தில் ஆங்கில கவிதைகளிற்கு நிகராக உலகத்தில் எதுவுமில்லை.. “.               (

யதார்த்த நாவல் இலக்கிய  காலத்தில்,அதாவது இருபதாம் நூற்றாண்டுவரை , அது உண்மையான கருத்து.  அக்காலத்தில் பிரான்சிய நாவல்களில்,  காதல்- காமம்- விபச்சாரம் போன்ற விடயங்களைக் கருப்பொருளாக  எடுத்தாள முடிந்தது . பிரித்தானியரது விக்டோரிய கால  பழமை பேணும் கலாச்சாரத்தின் கட்டுப்பாடுகள் அதிகம் என்பது ஒரு பக்கம்,  அதைவிட  அக்காலத்தில் உருவாகிய நூலகங்கள்,  இப்படியான ஒழுக்க மீறல்  உள்ள புத்தகங்கள்,   ஒழுக்கக்கேட்டை உருவாக்குபவை என நூலகத்தில் வைக்க இடம் கொடுக்காது. நாவல்களை வார,  மாத வெளியீடுகளே,  வெளியிட்டு வந்ததால், அக்காலத்தில் இந்தக் கட்டுப்பாட்டை  மீறமுடியாது.

லோரன்சின் (D.H Lawrence),  லேடி சட்டர்லி லவ்வர் (Lady Chatterley’s Lover) என்ற புத்தகம் எழுதப்பட்டு,  30 வருடங்கள் (1960) பின்பாகவே பென்குவின் பதிப்பகத்தால் வெளியிடமுடிந்தது.  அதாவது கலையில் ஒழுக்க மீறல் இருக்கலாம் என்ற சட்டம் உருவாகிய பின்பே இது சாத்தியமானது.

ஆங்கில நாவல்களை படித்தபோது,  நாவல் என்பது சமூக மாற்றத்தோடு தோன்றி, பொருளாதார மாற்றங்களால் எப்படி  வளர்ந்து,  பரிணாமமடைந்தது என்ற வரலாற்றைத் தெளிவாகப்புரிய முடிந்தது.

இப்படியான படிமுறையான உருமாற்றம்  மற்றைய மொழிகளில் கிடைப்பது இல்லை. அத்துடன் நாவலில் எப்படியாகச் சிக்கலை  (Plot)) உருவாக்குவது,  நாவலை எப்படித் தொடங்குவது,  திடீரென எப்படி ஒரு விடயத்தைப் புகுத்துவது,  ஒன்றுக்கு மேற்பட்ட  சிக்கல்களை ( Multi plot) உருவாக்கி இணைப்பது , இரண்டு விடயங்களை ஒன்றோடு இணைப்பது (Juxtaposition) , திருப்தியான  முடிவை எப்படி உருவாக்குவது முதலான நுட்பமான  விடயங்களைப் புரிந்து கொள்ளமுடியும். ஒரு நாவலை விமர்சனப்படுத்தும்போது இந்த அளவுகோல்களே தேவைப்படுகிறது. நாவல்களில் மீறல்கள் செய்யமுடியாது என்பது இதன் அர்த்தமல்ல . ஆனால் ஒழுங்கைத் தெரியவேண்டும். அதை மீறும்போது,

விக்ரோரியன் காலம் என்பது 1820-1914 எனக் கிட்டத்தட்ட நூறு வருடங்கள் பிரித்தானிய  சாம்ராச்சியத்தின் கொடி புவியின்  அரைப் பகுதியெங்கும் பறந்த காலம். அக்காலத்தில்,   அரசியல்- சமூகம்- குடும்பம் என்பவற்றில்  உள்ள கட்டுப்பாடு,  அவர்களது ஆதிக்கத்திற்கு  உதவியாக இருந்தது.  அந்த சமூக அமைப்பில்  ஏராளமான பிற்போக்குத்தனங்கள் புரையோடி  இருந்தன. ஆண்கள் மற்றும் ஆதிக்கவர்க்கத்தினர் அளப்பரிய  சுதந்திரத்தை அனுபவித்தார்கள்.

 அவையாவன:  ஆண்கள் பொது இடத்திற்கும்,  பெண்கள் சமையலறைக்கும் உரியவர்கள்;வர்க்க பேதங்கள் நிலையானவை.  கனவான்கள்,  தொழில் செய்யும் மத்தியவர்க்கம் , இறுதியில் கூலித்தொழிலாளர்கள் அதன் கீழ் ஐரிஸ் மக்கள் என்று நிலையான தன்மை இருந்தது.  இங்கிலாந்தில் பிறந்தவர்களைத் தவிர மற்றவர்கள் கீழானவர்கள் என்ற சிந்தனையிலே பல நாடுகளை இலகுவாக , எந்த தயக்கமும் இன்றி காலனியாக வைத்திருக்க முடிந்தது.  பிற்காலத்தில்,  1917 பின்பு  நாம் பார்த்த கம்யூனிச சமூகம்,  மற்றும் தற்போது அரபு நாடுகளில் உள்ள அடிப்படை இஸ்லாமிய சமூகம் என்பன ஒரு விதத்தில் விக்டோரிய சமூகத்தின் கண்ணாடி விம்பங்களே.   இங்கு தனிமனித அபிலாசைகள் பின் தள்ளப்பட்டு ஒரு கூட்டத்தினதோ அல்லது மொத்த சமூகத்தின் நலன் முன் தள்ளப்படுதல் என்பதே முக்கி செயலாகிறது. .  தற்போது  மற்றைய மதத்தினரும் இதை காப்பியடிக்கின்றனர்.   இவை பல பெயர்களில்,  பல இடங்களில் உருவாகும் சாத்தியம் எதிர்காலத்தில் உள்ளது.

இக்கட்டுப்பாடுகள்,  ஆட்சியாளர்களுக்கு மக்களைத் தனிமனிதர்களாக கையாள்வதற்குப் பதிலாகக் கூட்டமாகக் கையாளும் வசதியைக்  கொடுக்கிறது.   மேலும் ஒரு புரியக்கூடிய  உதாரணத்தால் சொல்வதென்றால், தனி மனிதர் சிறுத்தைகள்போல் வித்தியாசமாக இருப்பார்கள். அவர்களை இப்படியான மதம்,  சமூகக் கோட்பாடு என்பவற்றால் ஒன்றாக்கிவிட்டால் செம்மறிகளாகிவிடுவார்கள்.  குருட்டு இடையனாலேயே அவர்களை மேய்க்க முடிகிறது.

விக்ரோரியா காலமே  பிரித்தானியச் சாம்ராச்சியத்தின் உச்சநிலையாகும்.   காமம்,   விபச்சாரம்,   ஓரினச்சேர்க்கை என்பன குற்றங்கள் மட்டுமல்ல  இலக்கியங்கலோ,  சிற்பங்களிலோ வரமுடியாது என்ற கட்டுப்பாடு இருந்தது . இப்படியான தன்மை பிரான்ஸிலோ மற்றைய ஐரோப்பிய நாடுகளிலோ இருக்கவில்லை.   இக்காலத்து பிரான்ஸ்  எழுத்தாளரே பால்சாக் (Balzac).  அவரது நூல் ஒன்று லெஸ்பியனிசத்தை (The Girl with the Golden Eyes)  ஒரு குறுநாவலின் கருப்பொருளாக்குகிறது.

பெரும்பாலான பழைய ஆங்கில நாவல்கள்,  குடும்ப விடயங்களாகவும் அத்துடன்  அங்கு நிலவும் வர்க்க வித்தியாசங்களை மீறுவதாகவும்,(Not to break, only bend )   பின்பு சமப்படுத்துபவையாகவும்  இருந்திருக்கும். வர்க்க முரண்கள் வன்முறையால் தீர்க்கப்பட முடியாதது . உயர் வகுப்பினர்,  கீழ் மட்டத்திலுள்ளவர்களை ஒருவித பொறுப்புணர்வுடன் (Guardianship) நடத்தவேண்டும்.  அத்துடன் நாவல் முடிவுகள் திருமணத்தில் (Comedic end) முடியும். ஜேன் ஓஸ்ரினின் (Jane Austin) நாவல்கள் இவற்றையே  கருப்பொருளாக்கி வெற்றியடைந்தன.

18  ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இங்கிலாந்திலும் வேல்ஸிலும் கிட்டத்தட்ட 500 விவாக ரத்துக்களே இருந்தன என்றால் பாருங்கள்.  சமூகம் எப்படி ஒழுங்காக இருந்திருக்கிறது!

 சாஸ்ஸ் டிக்கின்ஸ்சனின்,  கிறேட் எக்பெக்ட்ரேசன்  முதல்  அத்தியாயத்தில் நடந்த சம்பவம் , மர்மமான இழையாக   கடைசி அத்தியாயம் வரையும் ஊடுபாவாக ஓடுகிறது. இடையிடையே திருப்பங்கள் நம்மைக் குழப்பும்.  ஆனாலும் இறுதியில்,   அந்த இழையிலே சென்று முடியும்.

  கிறேட் எக்பெக்ட்ரேசன்  அனாதையாகத் தமக்கையால் வளர்க்கப்படும் பிப் என்ற ஏழை பையனின் கதை, அவனது  கதாபாத்திரத்தால்  சொல்லப்படுகிறது. தன்வயமாகச் சொல்லப்படுவதால் பிப் என்ற பாத்திரம் நமக்கு அழுத்தமாகப் படிந்துவிடும் கதாபாத்திரமாக ஆகிவிடுகிறது.

பிப்,  தனது  சிறுவயதில், கடற்கரையில் மறைந்திருந்த   குற்றவாளியான ஒருவனுக்கு விலங்கை வெட்டும் அரத்தை கொடுத்து உதவினான். குற்றவாளிக்கு உதவியதால் எப்பொழுதாவது உண்மை வெளிப்படும் என்று பயந்திருந்தான்.   அவன்  பாசமற்ற  தமக்கையால் வளர்க்கப்படும் காலத்தில்,  சீமாட்டி ஒருவரைச் சந்தித்து அவரின் அன்பைப் பெறுகிறான்.  அங்கே போய்வந்த காலத்தில் அந்த சீமாட்டியால் வளர்க்கப்படும் அழகிய சிறுமியிடம் மனதைப்  பறிகொடுக்கிறான் . அந்தச்  சிறுமி,  பின் சீமாட்டியாக வளர பிரான்ஸ் போகிறாள்.  அக்காலத்தில் பிப் கனவானாக வளர்வதற்கு லண்டன் அனுப்ப ஒழுங்கு நடக்கிறது.  அதற்கான பணம் ஒரு வழக்குரைஞர் மூலம் செலவழிக்கப்படுகிறது.

 இடையில் கொலை முயற்சி காதல் தோல்வி எனப் பல சம்பவங்கள் நடைபெறுகிறது.  

கதையின் இறுதியில் பிப்பிற்கு  பண உதவி செய்தவர்,  அவுஸ்திரேலியாவில் உள்ள செம்மறிப்பண்ணை உரிமையாளர் .  அவர் ஆரம்பத்தில் பிப்பின் உதவியால் தப்பியவர் எனத் தெரியவருகிறது. தனது நன்றிக் கடனாகவே பிப்பை கனவானாக்க முயல்கிறார். நாவலின்  இறுதியில் பிப்பின் இரு எதிர்காலத்தை நோக்கிய  கனவுகளான , ஆசைப்பட்ட பெண்ணை திருமணம் செய்வது.  மற்றையது  கனவானாகுவது என்ற இரண்டும் தோல்வியில் முடிகிறது.

பிப் ஆசைப்பட்ட  பெண்,  வேறு ஒருவரைத் திருமணம் செய்து பின்பு அந்தக்  கணவர் இறக்கிறார்.  பிப்பிற்கு  திருமணம் நடக்கவில்லை.  இருவரும் கதையின் இறுதியில் சந்திக்கிறார்கள்.  ஆனால்,  இருவரும் ஒன்று சேர்வதாக நாவல்  முடியவில்லை.

வழக்கமான ஆங்கில நாவலுக்குரிய திருமணம் (Comedic end) என்று  வழக்கமான முடிவிற்கு எதிராகச் சஞ்சிகையில் தொடராக சார்ள்ஸ் டிக்கின்ஸ் எழுதியபோதிலும்,  பின்பு புத்தகமாக வரும்பொழுது,  இருவரும் சந்தித்து இனிப் பிரிவதில்லை என்று சொல்லப்படுவதாக முடிக்கப்படுகிறது . அந்த நாவலையே என்னால் வாசிக்க முடிந்தது.

வார, மாத சஞ்சிகைகளில் நாவல் எழுதும்போது வாசகர்களது ரசனையைப் பார்த்து பின்பு பதிப்பாளர்களால் முடிவுகளை மாற்றமுடிந்தது. இதேபோல் தோமஸ் காடியின்  (Thomas Hardy’s Tess of the D Urbervilles ) ஒரு நாவலில் பாலியல் வன்முறை நடந்த விதம் நாவலின் பதிப்புகளுக்கேற்ப மாறுபடுகிறது .  

இக்காலத்தில் அந்த வசதிகள் இல்லை என நினைக்கிறேன்.

—0—

 

 

Series Navigationஇலக்கியப்பூக்கள் இதழ் 219ஒரு கதை ஒரு கருத்து – சா கந்தசாமியின் தமிழில் இரயில் கதைகள் -2
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *