மகாசிவராத்திரியும் மயானகாண்டமும் – அனுபவப் பகிர்வு

This entry is part 3 of 11 in the series 27 பெப்ருவரி 2022

 

 

 
 
குரு அரவிந்தன்
 
மாணவப் பருவத்தில் எதையுமே நாங்கள் விளையாட்டாக எடுத்துக் கொள்வோம். ஏன் எதற்கு அதைச் செய்கின்றோம் என்பது அனேகமாக எமக்குத் தெரியாது. பெரியவர்களைக் கணம் பண்ணும் பழக்கம் இருந்ததால், அவர்கள் சொல்வதை, செய்வதை நாமும் பின்பற்றுவோம். இப்படித்தான் தமிழர் பண்டிகைகள், மற்றும் குடும்பம், மதம் சார்ந்த நிகழ்வுகளை நாம் பின்பற்றினோம். ஓரளவு அனுபவமுதிர்ச்சி வந்தபின்தான், காலத்திற்கு ஏற்ப, அறிவியல் சார்ந்த சிந்தனைகளும் எம்மை வழிநடத்தக் கூடிய வகையில் எம்மை மாற்றிக் கொண்டோம். இன்று அதை நினைத்துப் பார்க்கும் போது, அந்த அனுபவங்களை இளைய தலைமுறையினருடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் பிறந்தது. இதற்குக் காரணம், போர்ச்சூழல் காரணமாக நாமும் எமது முன்னோரும் பரம்பரையாக வாழ்ந்த கங்கேசந்துறை அதியுயர் பாதுகாப்பு வலயமாக மாற்றப்பட்டிருப்பதுதான். போர் முடிந்து சுமார் 12 வருடங்கள் கழிந்து விட்ட நிலையிலும் இராணுவம் எமது மண்ணைவிட்டு வெளியேறாது நிரந்தரமாக அங்கே குடியிருப்பதால், புதிதாகப் பௌத்த விகாரைகள் எழுப்பப்பட்டு, எமது அடையாளங்கள் அங்கு அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. எனவேதான் கடந்தகால நிகழ்வுகளை, நீங்களும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற விருப்போடு உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன்.
 
மாணவப்பருவத்தில் காங்கேசந்துறையில் கல்லூரிவீதியில் உள்ள நடேஸ்வராக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தேன். எனது தந்தையார் அங்கே கனிஷ்ட பாடசாலையில் அதிபராக இருந்ததால், அவருடன் பள்ளிக்குச் செல்வேன். மாசி மாதத்தில் அனேகமாக எல்லோரும் மகாசிவராத்திரி விரதமிருப்பார்கள். சிவராத்தி அன்று கீரிமலைக்குச் சென்று நகுலேஸ்வரரை வழிபட்டு, கேணியில் நீராடி மறுநாள் வீடு திரும்புவோம். வழமையாக சிவராத்திரி அன்று இரவு நடேஸ்வராக் கல்லூரி மைதானத்தில் கலைஞர் கலாநிதி நடிகமணி வி. வி. வைரமுத்து குழுவினரின் மயானகாண்டம் இசை நாடகம் விடியும்வரை இடம் பெறும். மேடையில் ‘வசந்தகான சபா’ என்று பெரிதாக எழுதப்பட்ட பதாகை தொங்கவிடப்பட்டு இருக்கும். பாய்கள், சமுக்காளம் போன்றவற்றுடன் ஆர்வமுள்ளவர்கள் குடும்பமாக வந்திருந்து விளையாட்டு மைதானத்தில் இருந்து பார்ப்பார்கள். அனேகமாக விளையாட்டு மைதானம் நிறைந்திருக்கும். அரிச்சந்திரனாக வந்து கணிரென்ற குரலில் பாடி நடிப்பதென்பது இலகுவான காரியமல்ல என்பது எல்லோருக்கும் தெரியும். அரிச்சந்திரன் என்றால் வைரமுத்துதான், இசை நடன மரபுக்குப் புதுப் பொலிவு தந்தவர் என்று சொல்லுமளவிற்கு அவரது இயற்கையான நடிப்பாற்றல் இருந்தது. சிவராத்திரி மாசியில் வருவது போல, வைரமுத்துவும் மாசிமாதத்தில்தான் பிறந்திருந்தார். மயானகாண்டம் நாடகம் சுமார் 3000 தடவைக்கு மேலும், பக்தநந்தனார் 1000 தடவைக்கு மேலும் மேடை ஏறியதில் ஊர் மக்களான எங்களுக்கும் பெருமையே.
 
வருடத்தில் குறைந்தது இரண்டு தடவையாவது அவர் எனது தகப்பனாரைச் சந்திக்க குருவீதியில் உள்ள எங்கள் வீட்டிற்கு வருவது ஞாபகத்தில் நிற்கின்றது. ஓன்று பிள்ளைகளின் படிப்பு பற்றியதாய், எங்கள் தகப்பனாரிடம் வந்து ஆலோசனை கேட்பார். இன்னுமொன்று எனது தகப்பனார் காங்கேசந்துறை உள்ளுராட்சி பட்டினசபைத் தலைவராகவும் இருந்ததால், நடேஸ்வராக் கல்லூரி மைதானத்தில் நாடகம் போடுவதற்கு வேண்டிய இடத்திற்கான பரிந்துரைக்காக வருவார். சிவராத்திரி தினத்திலன்று அந்த மைதானம் அவருக்காகவே ஒதுக்கப்பட்டிருக்கும் என்று தந்தையார் சொல்வார். மேடையில் பார்க்கும் வைரமுத்துவுக்கும், நேரில் பார்க்கும் வைரமுத்துவுக்கும் நிறைய வித்தியாசத்தை நான் கண்டேன். வழியில் காணும்போது, தம்பி என்று அன்பாக அழைக்கும் அவர் மேடையில் அந்தப் பாத்திரமாகவே மாறிவிடுவார். எப்பொழுதும் எனது தந்தைமீது மதிப்பும், மரியாதையும் வைத்திருந்தார். நடேஸ்வராக் கல்லூரி நாடகம் ஒன்று போட்டிக்காக கொழும்பில் மேடை ஏற்றியபோது அவரும், காங்கேசந்துறையைச் சேர்ந்த அண்ணாவி நாகமுத்து என்பவரும் நாடகத்தின் வெற்றிக்கு பலவிதத்திலும் உதவியாக இருந்தார்கள். இசைக்கருவிகள் வாசிப்பதிலும், குறிப்பாக ஆர்மோனியம் வாசிப்பதில் திறமை மிக்கவராகத் திகழ்ந்தர். சுப்பையா மாஸ்டர் இயற்றிய நடேஸ்வராக் கல்லூரிக் கீதமான,
 
“போற்றுவோம் போற்றுவோம் போற்றுவோம் புகழும் நீதி கலைகள் மேவும் சிகரமாக திகழும் தாயை போற்றுவோம் போற்றுவோம் போற்றுவோம். பொலியும் ஆழி வளங்கள் யாவும் நிறை காங்கேசந்துறையிலே பொறையில் ‘நேர்மை நெறிநில்’ நீதி அறிவை ஊட்டும் முறையிலே கலை நலங்கள் எழில் பெறும் நடேஸ்வரா கல்லூரியில் கருணை வெள்ளம் பெருகி ஞான அருவி ஊறும் வாரியை போற்றுவோம் போற்றுவோம் போற்றுவோம்” என்ற கல்லூரிக்கீதத்திற்கு அந்த நாட்களில் இவர் ஆர்மோனிய இசை வழங்கியது இப்பொழுதும் காதுகளில் தேனருவியாகப் பாய்கிறது. இந்த இசையை வைத்தே, கல்லூரியின் கனடா பழையமாணவர் சங்க நிகழ்வுகளின் போது கல்லூரிக்கீதத்தை இசையோடு எங்களால் பாடமுடிந்தது.
தனது ஆளுமை மூலம் காங்கேசந்துறை மண்ணுக்குப் பெருமைதேடித் தந்த, எல்லோரோடும் அன்பாய் பழக்கூடிய இவருக்கு 1984 ஆம் ஆண்டு காங்கேசந்துறையில் மணிவிழா எடுத்துக் கௌரவித்திருந்தனர். 
 
இவரைக் கௌரவிக்கும் விதத்தில் நடேஸ்வராக்கல்லூரி மருங்கில் மக்கள் கலைஞர் அமைப்பினால் இவரது உருவச்சிலை ஒன்றும் இந்த பெப்ரவரி மாதம் 2022 காங்கேசந்துறையில் நிறுவப்பட்டுள்ளது. மகாஜனக்கல்லூரி நண்பரும், அதிபர் பொ. கனகசபாபதியின் மாணவனுமான யாழ்ப்பாண பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரும், பேராசிரியருமான என். சண்முகலிங்கன் அவர்கள் நடிகமணியின் சிலையைத் திரைநீக்கம் செய்து வைத்ததில் எமக்கும் பெருமையே. கலைஞர்கள் எம்மைவிட்டுப் பிரிந்தாலும், எங்கள் உள்ளங்களில் என்றும் நிறைந்திருப்பர்.
சிவராத்திரி அன்று பருத்தித்துறை – கீரிமலை வீதியும், மாவிட்டபுரம் – கீரிமலை வீதியும் பக்தர் கூட்டத்தால் நிறைந்திருக்கும். செல்வச்சந்நிதி பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் காங்கேசந்துறை வழியாகப் பஞ்சஈசுவரங்களில் ஒன்றான கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயத்திற்கு நடந்து வருவார்கள். மகாசிவராத்திரி தினத்தில் இலங்கையில் உள்ள நகுலேஸ்வரம், திருக்கேதீச்சரம், முன்னேஸ்வரம், தொண்டீஸ்வரம், திருக்கோணேஸ்வரம் ஆகிய பஞ்சஈசுவரங்களிலும் விசேட பூசைகள் இடம் பெறும்.
 
‘சிவனுக்குச் சிவராத்திரி, அம்மனுக்கு நவராத்திரி’ என்று பெரியோர்கள் சொல்வதுண்டு. இந்து மதத்தவர்களின் முக்கிய பண்டிகைகளில் மகா சிவராத்திரியும் ஒன்றாகும். அவனின்றி ஓரணுவும் அசையாது என்றது போல, ‘ஓம்’ என்ற பிரணவ மந்திரத்தில் மனமொன்றிப் போயிருந்த சிவபெருமானை அன்னை சக்தி எழுப்பியதால், சிவன் சினம் கொண்ட போது உருவானதே பிரபஞ்சம் என்ற நம்பிக்கையும் உண்டு. இதையே, அணுக்களின் மூலக்கூறுகள் தனிமங்களாகி, தனிமங்கள் பொருட்களாகி உருவானதுதான் இன்றைய நாம் காணும் பிரபஞ்சம் என்கிறது அறிவியல். சூரியன் கும்பராசியில் சஞ்சரிக்கும் காலமான மாசி மாதத்தில் தான் மகாசிவராத்திரி வருகிறது. ஒவ்வொரு மாதத்தின் சதுர்த்தி திதியும் சிவபெருமானுக்குரியதாக இருந்தாலும், ஒவ்வொரு ஆண்டும், இந்து நாட்காட்டியின்படி பால்குண மாதத்தின் தேய்பிறை (கிருஷ்ணபட்சம்) சதுர்த்தி திதியில் இரவில் மகா சிவராத்திரி கொண்டாடப்படுகிறது. அதனால் இந்த 2022 ஆண்டு மகா சிவராத்திரி மார்ச் மாதம் 1ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கொண்டாடப்படுகிறது. மகாசிவராத்திரி அன்று, விரதம் இருப்பதும், இரவு கண் விழிப்பதும், சிவதரிசனம் செய்வதும், அன்னதானம் செய்வதும் மிகுந்த புண்ணியங்களை சேர்க்கும் என்று சிவபக்தர்கள் நம்புகின்றார்கள். ஈசன் சிவபெருமானை வழிபடுவதன் மூலம் சிவனின் அனுகிரகத்தைப் பெறலாம் என்கிறது இந்துமதம். இந்த நாளின் சிறப்புகள் குறித்து திருவிளையாடல் புராணம், கருடபுராணம், கந்தபுராணம், பத்மபுராணம், அக்னிபுராணம் போன்ற பல்வேறு நூல்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
மகா சிவராத்திரி நாளில், இரவு முழுவதும் சிவாலயங்கள் திறந்திருப்பதால், பக்தர்களுக்காக ஒவ்வொரு காலப் பூஜைகளும் சிறப்பாக நடந்தேறும். முதல் கட்ட பூசை மார்ச் மாதம் முதலாம் திகதி மாலை 6:21 மணிக்கும், இரண்டாம் கட்ட பூசை இரவு 9:27 மணிக்கும், மூன்றாம் கட்ட பூசை மார்ச் மாதம் இரண்டாம் திகதி நள்ளிரவு 12:33 மணிக்கும், நான்காம் கட்ட பூசை காலை 3:39 மணிக்கும் ஆரம்பமாகும் என்று நாட்காட்டியில் குறிப்பிடப் பட்டிருக்கின்றது. நித்திய சிவராத்திரி, மாத சிவராத்திரி, பட்ச சிவராத்திரி, யோக சிவராத்திரி, மகா சிவராத்திரி என்று ஐந்து வகையான சிவராத்திரி விரதங்களைப் பக்தர்கள் கடைப்பிடிப்பதுண்டு.
 
நாங்கள் உயர் வகுப்பில் படிக்கும் போது காங்கேசந்துறைக்கு இரண்டு சினிமா திரை அரங்குகள் வந்து சேர்ந்தன. காங்கேசந்துறை – யாழ்ப்பாண வீதியில் இராஜநாயகித் திரையரங்கும், காங்கேசந்துறை – பருத்தித்துறை வீதியில் யாழ் திரையரங்கும் வந்ததால், இதுவரை காலமும் நாடகம் பார்த்த இளம் வயதினரை இந்தத் திரையரங்குகள் தம்வசப்படுத்திக் கொண்டன. அதனால் பெரியவர்கள் பக்தி மார்க்கத்தோடு மகாசிவராத்திரிக்கு நித்திரை முழித்திருக்க, இளையவர்களில் சிலர் மயானகாண்டம் நாடகம் பார்க்கப் போவதாகச் சொல்லிவிட்டு. பாதியில் எழுந்து சினிமா திரையரங்குகளுக்குப் போகத்தொடங்கிவிட்டார்கள். சிவராத்திரி அன்று மட்டும் விசேடமாக மூன்று காட்சிகள் திரையரங்கில் இடம் பெறும். இங்கே சிவாஜி படம் என்றால் அங்கே எம்ஜிஆர் படம் ஓடும். இரண்டு திரை அரங்குகளிலும் மாறிமாறிப் படம் பார்த்துவிட்டு அதிகாலையில் கீரிமலைக்குச் சென்று கேணியில் குளித்துவிட்டு, சிவன் கோயிலில் இருந்து விரதம் காத்தது போல, காலையில் நல்ல பிள்ளைகளாய் வீட்டிற்கு வந்து விடுவார்கள்.
 

‘சிவாய நம என்று சிந்தித்திருந்தால் அபாயம் ஒருநாளுமில்லை’ என்று முன்னோர்கள் சொன்னது போன்று, பல்லாயிரக் கணக்கான மைல்கள் புலம் பெயர்ந்து வாழ்ந்தாலும், மாசி மாதத்தில் மகாசிவராத்திரி வரும்போதெல்லாம் எனக்கு எங்கவூர் மயானகாண்டமும், கீரிமலையும் அந்தநாள் ஞாபகமாய் நினைவில் வரும். எங்கள் கனவுகளைக் கொடிய யுத்தம் தின்றுவிட்டாலும், எங்கிருந்தாலும் நினைவுகள் என்றும் துளிர்த்துக் கொண்டே இருக்கும். எம்மினம் விழுந்தாலும், எங்கிருந்தாலும் எழுந்து நிற்கும்.

Series Navigationஎமிலி டிக்கின்ஸன் கவிதைகள் -24 – 25தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]
author

குரு அரவிந்தன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *