அஞ்சுவாசல் கிட்டங்கி…

author
0 minutes, 1 second Read
This entry is part 11 of 15 in the series 13 மார்ச் 2022

 

 

மஹ்மூது நெய்னா .எஸ் – கீழக்கரை

 


காற்றடி காலம் அது..பொழுது புலரத் தொடங்கி இருந்தது..   வடக்கே ஊர் மக்களை திகிலூட்டும் அஞ்சுவாசல் கிட்டங்கி இருந்த திசையில் இருந்து ஆந்தைகளின் கூகை குளறல்கள் அலையோசையையும் மிஞ்சி காதில் சன்னமாக வந்து மோத தொடங்கியது… தூரத்தில்  தெரிந்த பழைய போர்ட்  ஆஃபீசை ஒட்டி இருந்த டச்சு அரசின் ரெஸிடண்ட்டாக இங்கு பணியில் இருந்த டெர்ரிக் ஓ’பிரைனின் நினைவுத்தூனில் யாரோ  மெழுகு வர்த்தி ஒன்றை ஏற்றி இருக்க வேண்டும் .. சுடர்விட்டு எரிந்து கொண்டிருப்பது சின்ன தீப்பொறி போல கண்ணுக்கு தெரிந்தது..

கிழக்கிலிருந்து ஓயாமல் வீசும் கொண்டல் காற்று கடத்தி வந்த மீனின் வெடுக்கு வாடை யாஸீனுக்கு பிடிக்கவில்லை போலும்.. மொபைல் போனை தீவிரமாக மேய்ந்துகொண்டிருந்தவன்  ஒரு மாதிரி முகத்தை சுளித்தான்…

நாங்கள் அமர்ந்திருந்த  கறுங்கல் பாலத்தின் கிழக்குப் பகுதியை நோக்கியவாறே… யாஸீனிடம்.. இன்னிக்கு நல்ல மீன் பாடு போல  மச்சான்… கொத்து கொத்தா வந்து இறங்கிட்டு இரிக்குது.. வாங்க என்னண்டு பாக்கலாம் .. என்றேன்

கடலுக்குள் மங்கலாக தெரிந்த அப்பா தீவுக்கு அப்பால் சூரியன் அஸ்தமித்துக் கொண்டிருக்கும் செவ்வானத்தை காட்டிய  யாஸீன் ” இருட்டப் போகுது வாங்க  போவலாம்” என அவசரபடுத்தினான்..

ஜெட்டி பாலத்தின் ஓரத்தில்  வரிசையாக கட்டப்படு இருந்த குட்டித் தூன்களில் முறுக்கு கயிற்றினை கட்டி,  நங்கூரமிட்டு மீன் பாடுக்கு போய் அப்பொழுதுதான் கரை திரும்பியிருந்த  பச்சை வர்ணம் பூசிய பெரிய லாஞ்ச் (படகு)ஒன்று
அலைகளின் தாளத்துக்கு ஏற்ப முன்னும் பின்னும் அசைந்தாடிக் கொண்டிருக்க…

லாஞ்சின் வெளிப்புறத்தில் வெள்ளை பெயிண்ட்டால் வரையப்பட்டிருந்த  ஆளுயர பிறையும் அதற்கு கீழ் எழுதப்பட்டிருந்த  ” முகைதீன் ஆண்டவர் துனை” யும் அந்த அந்தி கருக்கலில் தெளிவாகத்தான் தெரிந்தது.

கடலுக்குள் பெர்முடா முக்கோனம் போன்ற இடங்களில் வசித்து வருவதாக சொல்லப்படும் கப்பலை விழுங்கும் கடல் பிசாசுகளிடம் இருந்து  தப்பிக்க இந்த லாஞ்சுக்கு முகைதீன் ஆண்டகையின் “துனை”  தேவைப்பட்டிருக்கலாம்.

மீன்பாடுக்காஹ கடலுக்குள்ள வல்லம் போறதும் சரி, கோடி ரூவாய தன்னியில போடுறதும் ஒன்னுதான் … திரும்பி கரைக்கு வந்தாத்தானே நிச்சியம்..என்றான் யாஸீன்

உண்மைதான் ..இப்போதெல்லாம் பெரிய டீசல் மோட்டார் படகின் விலை விமானத்தின் விலையை தொடுமளவிற்கு விஞ்சி நின்று கொண்டிருக்கிறதாம்..

மரகத பச்சை நிற  மாளிகை ஒன்று கடலில் மிதப்பது போல தோன்றிய அந்த லாஞ்சின் நடுவே இருந்து படகின் அடித்தளத்துக்கு போகும் துளை வழியே  கினற்றுக்குள் கப்பி, கயிறு கட்டி நீரை வாரி இறைப்பது போல மீன்களை அலுமினிய வாளியில் இறைந்து கீழே கொட்டிக் கொண்டிருந்தனர்.

மன்னார் குடாவில் அதிகமாக பிடி படும் கும்பளா , பேச்சாலை , பருங்காரல் மீன்களும்,  தென்னங் கொடுவா மீனும், கண்ணாடி பாறையும் பாலத்தின் ஒரு ஓரத்தில்  குவிந்து கிடந்தது. படகின் கம்பத்தில் கட்டப்பட்டிருந்த  விளக்கொளியின் வெளிச்சம் தெறித்து மீன் குவியல்கள் ஒரு குட்டி வெள்ளி மலை போல் காட்சி தந்தது.

பாலத்தில் இருந்து நகர்ந்ததும்.. “நம்ம அஞ்சு வாச கிட்டங்கி வழியா போவலாமா..  எனக் கேட்டேன்.

தயக்கமும் லேசான பயமும் தொற்றிக் கொள்ள..
மஹ்ரிபு நேரமா  இருக்குதே.. மச்சான்…ஜின்னு நடமாட்டம் இரிக்கப்போவுது…. என்றான் யாஸீன்.

எனது பால்ய வயதில் மட்டுமல்ல.. இன்றும் கூட  கும்மிருட்டில் மூழ்கி கிடக்கும் அஞ்சுவாசல் கிட்டங்கி பெயரை உச்சரித்தாலே மனதுக்குள் திடுமென திகில் பரவ தொடங்கும்…

பொழுதுபட்டால் அஞ்சுவாசல் கிட்டங்கிக்குள் அமானுஷ்ய குரல்களும்,  விசும்பலும் கேட்பதாகவும், அந்தபகுதியில் “ஜின்னு” நடமாட்டம் இருப்பதாகவும் இன்றும் ஊரில் பரவலாக  பேசிக் கொள்கிறார்கள்..

உண்மையா என்று கேட்டால்
“அல்லாஹு ஆலம்”  என்பார்கள்..

ஜின்னு வாஸலாத்து இரிக்குதா? இல்லையா ஆலிம்ஷா  ?
சேக்குனாவிடம் ஒருமுறை கேட்டபோது தனது வென் தாடியை இடது கையால் நீவிக்கொண்டே எனது கண்களை உற்று நோக்கினார்..

“உம்ம கண்ணுக்கு புலப்படாத  விஷயங்களை விட உமக்கு புலப்படுற சங்கதிகள்ள நாட்டம் வையும்”.. என தோளில் போட்டிருந்த துண்டை உதறிவிட்டு நடையை விட்டார்கள்.

“கல்லு ஊட்டு கண்ணுமாக்கு வசியப்பட்ட ஜின்னு ஒன்னு ,  கோவிச்சிக்குட்டு ஒரு நா கண்ணுமாவ கொல்லையில இருந்த பாழடைஞ்ச  கினத்துக்குல இறக்கி உட்டுட்டுச்சாம்..

இஸ்முலாம்  ஓதிதான் மேல வந்தாஹலாம்”..  வாப்பிச்சா எப்போதோ  சொன்ன சிலிர்ப்பூட்டும் ஜின் கதைகளால் பயத்தில் உறைந்திருக்கிறேன்…

அப்போதெல்லாம் “மாலை மஹ்ரிபுல வெளியே வெட்டை சுத்தப்புடாது” என்ற உம்மாவின் கண்டிப்பையும் மீறி
கல்வீட்டு தின்னையில் சம்மனம் கூட்டி உட்கார்ந்து “ஜின்” கதைகளை அடிக்கடி சொல்லி எங்களை அச்சமூட்டுவது மதார் காக்காவுக்கு வழக்கம்….

மதார் காக்காவின்  விரல்களுக்கு இடையே சொக்கலால் சேட் கரிஞ்சுருட்டு  புகையை கக்கிக் கொண்டிருக்க..  கதையை அவர் சொல்ல தொடங்கும் போதே சுருட்டு புகையில் விட்டலாச்சாரியா திரைப்படங்கள் பார்ப்பது போன்று மாயலோகமும், மோகினிகளும் சுழன்று சுழன்று கண்களில் விரியும்…

சந்தன கூடு மாசம்ண்டு நெனைக்கிறேன்…ஒரு நாளு…சங்குகுளிக்க நல்லதன்னி தீவுக்கு போய்ட்டு திரும்பி வர்ரோம்… வல்லம் கரையை தட்டுன நேரம் ..நடுசாமம்  இரிக்கும்…அஞ்சுவாச கிட்டங்கில்ல  சரக்க எறக்கனும்..

பாழடைஞ்சு கெடந்த  கானா.ஆனா.மானா கிட்டங்கியை தாண்டித்தான் அஞ்சுவாச கிட்டங்கிக்கு போவனும்… காவலுக்கு இருந்த கணக்குபுள்ளை  கச்சி மரிக்காவை தேடுனா…. யாரோ முனுமுனுக்குற சத்தந்தான் கேக்குது… கிட்டங்கிக்கு உள்ள போனா… அங்க உச்சியில இருக்குற மரசட்டத்துல “வவ்வா” மாதிரி கச்சி மரிக்கா தொங்குறான்..

தரையில படுத்து கிடந்தவன பொல்லா ஜின்னு தலைகீழா தொங்க உட்டுட்டு போயிக்கிது… ஆவுசம்.. ஆவுசம்ண்டு அவன் குளறுனதுல..பதறிப்போயி எனக்கு ஜன்னி வந்துருச்சி..தம்பி.. ஏர்வாடிக்கு போய் தர்ஹாவுல ஒரு மாசம் படுத்த படுக்கையா கிடந்தேன்… மதார் காக்காவின்   கதைகள் பேய் கதை மன்னன் பி.டி. சாமியையும் மிஞ்சி கலவரப்படுத்தும்…

ஜின்னுகள் வந்து போவதை நடு நிசியில் சங்கு குளிக்க கடலுக்கு போகிறவர்கள் பல  முறை பார்த்ததாகவும்,  ஜின்களை வசியப்படுத்த தெரிந்த பொன்னானியிலிருந்து    ஏர்வாடிக்கு வரும் தங்கள் ஒருவர் முகம்பார்க்கும் கண்ணாடியில் நாம் முன்னோக்கி இருக்க .. கேரளா தங்கள் ஓதும் இஸ்முகளை கேட்டு நமக்கு பின்புறம் புகை வடிவில் விஸ்வரூபமெடுத்து ஜின் எழும்பி நிற்பதை கண்ணாடியில் பார்க்க முடிந்ததாகவும் மாதார் காக்கா சொல்வார்… வாய்க்கு வந்ததை காக்கா அளந்து விடுகிறார் என்றுதான் கிசுகிசுத்துக் கொள்வோம்..

இன்று சிதிலடைந்து கிடக்கும் அஞ்சாம் பாலமான பழைய படகுத்துறைக்கு நேர் எதிரில் , ஐந்து வாசல்களை கொண்ட டச்சுக்கள் காலத்தைய கடலோர பண்டக சாலையாக,  டச்சு அரசாங்கத்தின் ரெஸிடண்ட்டாக 17 ஆம் நூற்றாண்டில் இந்த் துறைமுகத்துக்கு  பொறுப்பில் இருந்த டெர்ரிக் ஓ பிரைனின் கட்டுப்பாட்டில் இருந்த பிரமாண்ட மாளிகைதான் அஞ்சுவாசல் கிட்டங்கி..

ஒரு காலத்தில் கம்பீரமாக  நிமிர்ந்து நின்று பரபரப்பாக இயங்கிய மாளிகையின் தோற்றம் உருக்குலைந்தாலும், அதே டச்சுக்களின் கட்டட கலை அம்சத்தை உள்வாங்கி இன்றும் பிரமிப்பை தந்தவாறுதான் இருக்கிறது
அஞ்சுவாசல் கிட்டங்கி. ஆனால் ஊர் மக்கள் அறியாமலேயே ஒரு எதிர்மறை எண்ணம் ஏற்பட்டு, இன்று புதிர்நிறைந்த, மர்மமான, அச்சமூட்டும்  இருளடைந்த ஆந்தைகளின் கோட்டமாக பராமரிப்பற்று கிடக்கிறது.

அஞ்சுவாசல் கிட்டங்கியை நாங்கள் நெருங்கிய போது, அதன் நடு நாயகமான  தேக்கு கதவுகளால் ஆன தலைவாசல் பிரமாண்டமாக தோன்றியது..கதவுகளுக்கு மேல் வடிவான அரபு எழுத்துக்களில் “ஸலவாத்துக்களும், ஆயத்து குர்ஸியும் பொறிக்கப்பட்டிருந்தது” பின்னாளில் இதனை விலைக்கு வாங்கிய கப்ப மரைக்கா ஒருவர் ரூஹானியத்துகள் அண்டாமல் பாதுகாக்க இதனை எழுதியிருக்க கூடும்…

அஞ்சுவாசல் கிட்டங்கியை கடந்து வெகு தூரம் வந்த பின்பும் கூட மனம் அதன் பிராமாண்டம் காட்டும் திகிலை தாங்கியே கூட வருகிறது.


17 ஆம் நூற்றாண்டில் டச்சுக்கள் கட்டுப்பாட்டில் இருந்த இந்த  கடற்புரம்  வாணிபத்தில் செழித்திருந்தது, கடலில் வெட்டி எடுக்கப்பட்ட சங்குகளும், குளிக்கப்பட்ட  முத்துக்களும் , கிராம்பு, மிளகு , கருவாடு,கொட்டை பாக்கு, மஸ்லின் துனிகள் என சரக்குகள் வர்த்தகத்தில் செழித்திருந்த துறைமுகத்தில் அஞ்சுவாசல் கிட்டங்கி அதி முக்கியத்துவத்துவம் வாய்ந்த கேந்திரமாக இருந்திருக்கிறது. டச்சுக்களும், ஆங்கிலேயரும், சேதுபதி சமஸ்தான அதிகாரிகளும் வந்து போகும் அதிகார பீடமான அஞ்சு வாசல் கிட்டங்கி அமானுஷ்யம் நிறைந்த திகிலூட்டும்  பாழடைந்த மாளிகையாக மாறிப்போனது ஏன்? கேள்விகள் மனடையை குடையத் துவங்கியது…

“அறிஞ்சு கொள்ளும்…”300 வருஷத்துக்கு முந்தி, சேது சீமைல  பகோடா பனம் மலை மாதிரி குவியல் குவியலா அஞ்சு வாசல் கிட்டங்கிலதான்  கொட்டி கிடக்கும்… டச்சுக்காரன் தினத்துக்கு கோனிப்பைல  அள்ளிக்கட்டி தூத்துக்குடி ஆபீசுக்கு தோனியில வச்சி அனுப்புறது வழக்கமா இருந்திக்கிது”  என்றார்கள் சேக்குனா…

போர்த்துகீயர் ஆதிக்கம் செய்த காலம் முதலே கடலில் மூழ்கி குளித்து கொண்டு வந்த  சங்குகள் அஞ்சுவாசல் கிட்டங்கியில் இருந்துதான் ஏற்றுமதியாகிக் கொண்டிருந்தன. சங்குகளில் பால் சங்கு, கவடா,மணிசங்கு, வென் சங்கு, பார் சங்கு, அரிய வகை வலம்புரிச் சங்குகள் இவையாவும் சங்கு வெட்டி தெருவுக்கு கொண்டுபோய்  சுத்தப்படுத்தப்பட்டு மெருகேற்றி  மீண்டும் அஞ்சு வாசல் கிட்டங்கிக்கு கொண்டு வரப்பட்டு பொதி கட்டி கப்பலில் வங்காளத்துக்கு அனுப்பி வைப்பார்களாம்..

மலையாள சாமுத்திரிகளின் கடற்படை அட்மிரலாக இருந்த  கள்ளிக்கோட்டை குஞ்சாலி மரைக்காயர் படை இந்த பகுதிக்கு வந்து,  போர்த்துகீய அதிகாரி ஜாவா ஃப்ளோரஸ் என்பவரை கொன்று போர்ட் ஆஃபீஸ் அருகே இருந்த கல்லறையில் புதைத்ததில் இருந்து அஞ்சுவாசல் கிட்டங்கியின் அமானுஷ்யங்கள் தொடர்கிறது…

ஜாவா ஃப்ளோரசின் கொலைக்கு பழி எடுக்க சபதம் செய்த கிழக்கு கடற்கரைக்கு பொறுப்பில் இருந்த போர்த்திகீய தளபதி அல்மன்ட் ரோ டி சூசா வங்காளத்துக்கு கப்பலில் செல்லும் வழியில்  இந்த துறைமுகத்தின்  கருவூலமாக  இருந்த  அஞ்சுவாசல் கிட்டங்கியை சூறையாடி பொருட்களை கொள்ளையடித்து, அங்கிருந்த தொழிலாளர்களை தீயிட்டு  கொளுத்தி கொன்று, கிட்டங்கியை கொலை களமாக்கி அந்தகாலத்திலேயே  திகிலூட்டி இருக்கிறான்…

ஆனா.. மச்சான்…கச்சி மரிக்காவை மரச்சட்டத்தில் தொங்கவிட்ட ஆவுசம்” தலை முடியை விரித்துப்போட்டுக்கிட்டு “ஆயிரம் ஜென்மங்கள் ” படத்துல வர்ற மாதிரி” வெள்ள  சேலை” கட்டிக்கிட்டு குறுக்கே நெடுக்கே வந்ததாத்தான் சொல்வாங்க  ” என்றான் யாஸீன்.. 

அப்படியா , அப்ப அது “சிஸ்லியா” வாக இருக்கலாம் என்றேன்…

யாருப்பா  “சிஸ்லியா” ..

ரெஸிடண்ட் டெர்ரிக் “ஓ” பிரைனின் மாலதீவு காதலிதான் சிஸ்லியா..

சும்மா எதையாவது கதை உடாதிய.. என்றான்..

“முஹல்ல தீவுல இருந்து மக்கத்துக்கு போன கப்பல் புயல்ல சிக்கி, திக்கு மாறி நம்ம ஊருக்கு வந்துருச்சாம்.. வந்த மக்கள அஞ்சுவாச கிட்டங்கில ஒரு மாசம் தங்க வச்சி கொழும்புக்கு திருப்பி அனுப்பி வச்சிக்கிறாஹ அந்தக்கால மனுஷருவ.. வாப்பிச்சா செவி வழியாக கேட்ட கதைகளை பகிர்ந்தது ஏராளாம்..

தேச தூரப்பயனி இப்னுபதூதா இங்கு வந்து சேர்ந்ததும் கூட அப்படித்தான்… மாலதீவில் இருந்து இப்படியாக மன்னார் கடலில் புயலில் சிக்கி  தத்தளிக்கும் கப்பல்கள்களில் பயனிப்பவர்களை பல முறை இந்த கரை காப்பாற்றி இருக்கிறது..  அப்படி மாலதீவில் இருந்து இங்கு வந்து டச்சு ரெஸிடண்ட்டின் மனைவியாகியவள்தான் ” சிஸ்லியா”. அப்படி வந்தவர்களுக்கு புகலிடமாக இருந்த அஞ்சுவாசல் கிட்டங்கி இன்று அமானுஷ்யத்தை உள்வாங்கி திகிலை தருவதும்
விநோதமாகத்தான் இருக்கிறது.

டைம் ஆச்சு.. சுப்ஹுக்கு எந்திரிக்கனும் .. வீட்டுக்கு போவலாம்.. என்றான் யாஸீன்..
தூக்கம் கண்களை சுழற்றிக் கொண்டது….  நான் பயனம் செய்து கொண்டிருந்த பெதிய படகு பணை உயர அலையில் சிக்கி கடலுக்குள் வீசப்படுகிறேன், மூழ்கடிக்கபட்டு கடலின் அடிப்பகுதியை நோக்கி வேகமாக இழுக்கப்படுகிறேன்…எங்கும் காரிருள்… பவளப்பாறைகளுக்கு நடுவே ஒளி வெள்ளமாக பிரமாண்ட  வலம்புரிசங்கு ஒன்று தனது வலது புற வாயால் என்னை மொத்தமாக உள் வாங்கிக் கொள்கிறது…..

அங்கு புனித அந்தோனியர் ஆலயத்தின் மனியோசை காதில் விழுகிறது.. மிடுக்குடன் நடக்கிறேன்.. டெர்ரிக் ஓ பிரைனும் , சிஸ்லியாவும் ” “வெல்கம் ஜெரால்ட்” எனக் கூறி என்னை அஞ்சுவாசல் கிட்டங்கியின் தலைவாசலில் நின்று வரவேற்று உள்ளே மரியாதை செய்து  அழைத்து செல்கின்றனர்..  உயர்ந்த  மரத்தூன்களும், தேக்கு மர நீள மேசையும்,  இருந்த உள் அலுவலக அறையில் அமர வைக்கப்படுகிறேன்… தலைக்கு மேலே பிரமாண்ட கண்ணாடி படிக விளக்குகள் தொங்கிக் கொண்டிருந்தது,  கம்பெனியின் வருடாந்திர  கணக்கு வழக்குகள் சரிபார்ககும் பணி தீவிரமாக தொடர்கிறது. இருப்பில்  40000 பக்கோடா பனம் குறைகிறது, சரக்குகளின் கையிருப்பு மோசடியாக திரிக்கபட்டிருக்கிறது. இது அபட்டமான கையாடல் என கூக்குரலிடுகிறேன்… விசாரனையின் பிடியில் சேதுபதி மன்னருக்கும், மரைக்காயருக்கு கொடுத்ததாக டெர்ரிக் ஓ பிரைன் பிரைன் சமாளிக்கிறார். விதி மீறல்… கும்பனியின் சட்டத்துக்கு எதிரானது எனக் குரல் எழுப்புகிறேன்… டெர்ரிக் ஓ பிரைன் பதட்டமடைகிறார், வியர்த்து கொட்டிக் கொண்டிருப்பதை பார்த்து …கொழும்பு தலைமை அலுவலகத்துக்கும், தூத்துக்குடி ரீஜனல் அலுவலகத்துக்கும் அறிக்கை அனுப்ப காகிதங்களை எடுக்கும் நொடியில் ..

 



மயங்கி சரியும்  டெர்ரிக் ஓ பிரைனை… சிஸ்லியா தாங்கிப் பிடித்து தண்ணீர் கொடுத்துக் கொண்டிருக்கிறாள்….புகட்டப்பட்ட தண்ணீர் உட்புகாமல், உதடுகளில் வழிந்து கொண்டிருக்கிறது..

நீ இவரை கொன்று விட்டாய் ஜெரால்ட்.. என்ற சிஸ்லியாவின் கண்களில் நெறுப்பு பொறியை பார்த்து.. விக்கித்து நிற்கிறேன்…

செம்புத் தட்டில் பணம்பழம் வெட்ட வைத்திருந்த கத்தியை எடுத்து என்னை நோக்கி பாய்ந்த சிஸ்லியாவை தடுக்க முனையும் வேகத்தில், அருகில் இருந்த கூரிய இரும்பு உளியை அவள் மீது குறியில்லாமல் மீது வீசுகிறேன்..

வீசிய உளி அவள் நெற்றிப்போட்டில் தாக்கி மயங்கி விழுகிறாள்.. குருதி கொப்பளித்து வழிய , கண்கள் அகலவிரிய, உடல் ஒரு மாதிரிய வெட்டி இழுத்துக்கொள்ளழ் சிஸ்லியா  மரணத்தை தழுவிக் கொண்டிருப்பதை அறிந்து..மனம் பதைபதைக்கிறது… பயத்தில் உறைகிறேன்..

“8 மனியாச்சு இன்னும் எந்திரிக்கலாயா” கண்மனி முதுகை தட்டியபோது  …நித்திரை கலைகிறேன்… விக்கித்துப் போகிறேன்..

மீண்டும் ஜெட்டிபாலம் செல்லும் முன்பு.. அஞ்சுவாசல் கிட்டங்கியை கடந்தபோது  யாஸினிடம் “மெழுகுதிரி..ஒன்னு வாங்குங்க மச்சான் ” போர்ட் ஆபீஸ் கல்லறைக்கு போய் ஏத்தி  வைக்கனும்… என்றேன்..

யாஸீன் ஒன்றும் புரியாமல்….சரி.. சில்லறை இருக்குதா .. என்றான்.

 

————————————————————————–

மஹ்மூது நெய்னா .எஸ் – கீழக்கரை

மின்னஞ்சல் : naina1973@gmail.com

 

Series Navigationநில்லாதே  போ பிணியே …புதிய வாழ்க்கையில் புதிய தலைமுறை – அந்நியர்கள் சுப்ரபாரதிமணியன் நாவல்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *