ஹமீது தம்பி
காலையில் கீழ்வானம் வெளுக்க ஆரம்பிக்குமுன்பே ,கரையை அடைந்துவிட்டது .
“தம்பிகளா எழுந்திருங்க’ என்று எழுப்பி விட்டார் கார்சா. இருவரும் பதறியபடி எழமுயன்றனர்.
ஒன்னும் அவசரமில்லை மெதுவா எழும்புங்க என்றார். வல்லம் கரைக்கு சிறிது தூரத்தில் நின்றிருந்தது .முதலில் ஹனீபா நீரில் இறங்கினான் .அவன் நெஞ்சுவரை ஆளம் இருந்தது .
தொடர்ந்து பாண்டியனும்,பாரியும் இறங்கினார் .ஏற்கனவே ஹனீபா கரையை நோக்கி நீந்திக்கொண்டிருந்தான் .நீந்தவேண்டிய தேவை இல்லாமல்தான் இருந்தது .நடந்தே போகலாம்தான் .இருந்தாலும் எல்லோரும் நீந்தியே கரை சேர்ந்தார்கள்.
கடைசியாக நெய்னாம்சா நீந்தி கரைக்கு வந்தார். எல்லோரும் சொட்டச்சொட்ட நனைந்திருந்தார்கள்.
அருகிலிருந்த தோப்பிற்கு அழைத்துச்சென்றார் கார்சா .
பனைமரங்கள் அதிகம் இருந்த அந்த தோப்பின் மூலையில் ஒரு குடிசை இருந்தது .அதை நோக்கி கார்சா முன்னாள் செல்ல ,மற்ற மூவரும் பின்தொடர்ந்து வந்தனர்.
அப்போது குடிசைக்குள்ளிருந்து வெளியேவந்தார் ஐம்பது வயது மதிக்கத்தக்க ஒருவர், நைனாம்ஷாக்கா என்ன தகவல் இல்லாம வந்திருக்கிய என்றபடி நைனாம்ஷாவை கட்டித்தழுவி வரவேற்றார்.
“கடிதாசு போட்டுட்டுவர்ற காரியமில்ல, நம்ம புள்ளங்க ரெண்டுபேர கூட்டிகிட்டு வரவேண்டி இருந்துச்சு. எல்லாம் திடீர் முடிவுதே .எப்பவும்போல ஒண்ட தயவு வேணும் சாமுனா “ என்றார் .
அதுக்கென்ன என்னால் முடிஞ்சத செய்றன் .உங்க பேச்ச எப்ப தட்டுனே ?என்றான் சாமுனா .
குடிசைக்குள் வந்தார்கள் . உள்ளே குடிசை என்று சொல்லமுடியாத அளவுக்கு வசதிகள் இருந்தது. மெத்தைவிரித்த இரண்டு பெரிய கட்டில்கள் இருந்தது .தனி அறைகளாக தடிக்கப்பட்டு இரண்டு மூன்று அறைகள் இருந்தன மேஜை ஒன்றின் மேல் பிலிப்ஸ் பெரிய சயிஸ் ரேடியோ சிங்களத்தில் செய்தி சொல்லிக்கொண்டிருந்தது .அப்போதுதான் பாரிக்கு தான் ஒரு வெளிநாட்டில் இருக்கிறோம் என்ற உணர்வு வந்தது .அந்த குடுசைவீட்டில் எல்லா வசதிகளும் இருந்தது .சாமுனாவின் மனைவி ஒரு அறையிலிருந்து வந்தாள். பிள்ளைகள் இருப்பதாக தெரியவில்லை .
அடுப்பாங்கரையை “குசுனி” என்றார்கள் .குசுனிக்குள் சாமுனா மனைவி எல்லோருக்கும் சாயா போட்டு கொண்டுவந்தாள்.
நைனாம்ஷா இருவரையும், சாமுனாவுக்கு இருவருக்கும் அறிமுகப்படுத்தினார் . பாண்டியனை பார்த்ததும் ,”தம்பிய தெரியுமே,.முன்னே ஒருதரம் பாத்திக்கிறேன். எரிக்கலம்பட்டி அம்பலார வீட்டுக்குத்தானே” என்றார் சாமுனா .ஆம் என்று தலையாட்டினான் பாண்டியன் .
அதுவரை வாயே துறக்காத பாண்டியன் அவர் கையை பற்றிக்கொண்டு “என்னய மன்னார் பஸ்சுல ஏத்தி உட்டுருங்க நா போயிருவே” என்றான்.
“இந்த தம்பி எங்க போவனும்?” என்றான் சாமுனா .
நைனாம்ஷா, “தம்பி நமக்கு வேண்டப்பட்ட குடும்பம் .கொழும்புக்கு போவனும் பத்திரமா மன்னார்ல ரயில் ஏத்தி உட்டுடு. தம்பி புதுசு . ரெம்ப ஜாக்கிரதையா அனுப்பு என்றார்.
கொழும்புல யார பாக்கணும்.நமக்கு தெரியாத நம்ம ஆட்கள் யார் இரிக்கா? என்று கேட்டான் .
“நம்ம வேண்டப்பட்ட குடும்பத்து புள்ள . வாப்பா சமீபத்துல மவுத்தாகிட்டாக.அதுதான் தெரிஞ்சவுக கடையில வேலைதேடி போறாரு” . என்றான் நைனாம்ஷா.
நா ஒன்னு சொல்றேன் எனக்கு தெரிஞ்ச ஹாஜியார் சீனங்கோட்டைல இரிக்கிராறு. கொழும்புல ஏகப்பட்ட யாவாரம் . பூர்விகம் நம்மபக்கம்தேன் .இங்கயே கல்யாணமுடிச்சிக்கிட்டு சீனங்கோட்டைல இப்போ செல்வாக்கான ஆளு . அவருக்கு சாமானுலா வந்தா நாந்தே எறக்கி கொண்டுக்குபோயிகுடுப்பன். நல்ல மனுஷன் .நீங்க சொன்னிங்கன்னா தம்பிய அவர்ட்ட சேத்து உடுரன்” என்றான் சாமுனா.
நைனாம்ஷா பாரியை பார்த்தான் .என்ன தம்பி போறியா ? என்றான். பாரிக்கு புதிய இடத்தில் எப்படி சமாளிப்போம் என்று பயந்து கொண்டிருந்தவனுக்கு இது சரியாகப்பட்டது .அங்கு ரயிலில் போவதும் ஆபத்தான விசயம்தான் என்று கேள்வி பட்டிருக்கிறான். இடையில் போலீஸ்காரனிடம் சந்தேககேசில் இந்தியாகாரன் என்று தெரிந்தால், பிறகு ஜெயில்தான் .அந்நிய நாட்டில் ஜெயில் வாழ்கையை பற்றி கள்ளத்தோணியில் போன பலரும் சொல்லக்கேட்டிருக்கிறான்..
“சரி காக்கா நான் போறேன் .எந்தவேலையானாலும் செய்வேன்’ என்றான்.
நைனாம்ஷாவுக்கும் திருப்தியாக இருந்தது .மாமாட்டே நா நல்லபடியா செந்துட்டேனு சொல்லுங்க. சேந்தபொறவு கடுதாசு போடுறேனு சொல்லுங்க என்றான்” பாரி .
“சரி.நல்லவிதமா இரு தம்பி.” என்று சொல்லிவிட்டு அன்று . இரவு நைனாம்ஷா விடைபெற்றுக்கொண்டார் .
அதுதான் பாரியும், நைனாம்ஷாவும் கடைசியாக சந்தித்துக்கொண்டது .பிறகு வாழ்நாளில் பாரி அவரை சந்திக்கவே இல்லை .
அன்று காலையே பாண்டியன் சாமுனாவுடன் எரிக்களம்பட்டிக்கு பஸ் ஏற போய்விட்டான் .
பாரிக்கு இரண்டுநாள் அந்த குடிசையிலேயே ,தங்கி இருக்கநேர்ந்தது . .கையிலிருந்த இந்திய ரூபாய் 300.௦௦ யும் சாமுனாவிடம்,கொடுத்தான். அவர் பதிலுக்கு 450 சிலோன் பணம் கொடுத்தார் .பத்திரமா வச்சிக்க தம்பி . ஹாஜியார் நல்ல மனுஷன்.அவர் நோக்கம்போல நடந்தா நல்லபடி பாத்துக்குவாரு என்றான் .அனேகமா நாளைக்கு அவர் சரக்குவரும். ஆள் அனுப்புவார். அவங்களோட சீனங்கோட்டைக்கு அனுப்புறேன் .வழியிலே எந்த பயமோ ,சோதனையோ இருக்காது.எல்லாத்துக்கு அல்லா போதுமானவன்.
சிறுது கருத்த தடித்த உருவத்துடன் கூடிய சாமுனாவின் மனைவியை அறிமுகப்படுத்தினார் .முகம் கலையாக .புன்முறுவலுடன் சாந்தமாக இருந்தது.எ பொஞ்சாதி ,உங்க ஊருபக்கம்தான். ஜொஹரா தம்பிக்கு பசியாற குடு ,என்ன இறிக்கிது? என்று கேட்டுவிட்டு ,எனக்கு கொஞ்சம் வெளியே வேலை இரிக்கிது .போயிட்டு வாறன்” என்று வெளியே குடையுடன் கிளம்பினார் .
சாமுனா மனைவி பண்ணும்,தொட்டுக்கொள்ள கருப்பட்டி பாகும் கொண்டுவந்தாள்.சாப்பிட பாரிக்கு பிடித்திருந்தது . .
சாமுண வெளியே போனதும், சாமுனாவின் மனைவி “ஊட்டுல யாருலாம் இருக்கிறாங்க”, என்று குடும்ப நிலவரங்களை கேட்டாள். பாரி பதிலை எதிர்பார்க்காமல் ,தன்னைப்பற்றி சொல்ல ஆரம்பித்தாள்.
நானும் உங்க ஊர் பக்கம் திருபுலாகுடிதான்.இவரு கல்யானமுடிச்சிக்கிட்டு வந்து பத்து வருசமாச்சு .நம்மூரு மாதிரி இல்லே .அங்கேயும் நாங்க வசதியா இல்ல .இங்கே இவர் எந்த குறையும் இல்லாமதே வச்சிக்கிறாக. ஆனாக்க எங்களுக்கு பிள்ளைங்க இல்ல. அந்த கொரதான். உன்ன பாத்ததும் எதம்பி யூசுப்பு ஞாபகம் வந்துருச்சி .ஒன்னைய மாதிரியே இருப்பான். இப்போ காலேஜிக்கி போறதா அத்தா எழுதி இருந்தாக “என்றாள்.
“நீ வெளியே போய்ராதே .காத்தோட்டமா ஜன்னல் பக்கத்துல,உங்காந்துக்குட்டு பாட்டுகேளு,.எனக்கு குசுனில ஆக்குரவேல இரிக்கிது. அவ்வோ லொஹர் தொளுவீட்டு வருவாக என்று சொல்லிவிட்டு குசுனிக்குள் நுழைந்தாள்.
ஜன்னல் போன்று அமைக்கப்பட்டிருந்த திறப்பின் முன் அங்கிருந்த நாற்காலியை எடுத்துப்போட்டுக்கொண்டு வெளியே பார்த்துக்கொண்டிருந்தான் .
வந்து இறங்கியதிலிருந்தே தொடர்ச்சியாக கடல் பாசி வாடையும் ,கருவாட்டு வாடையும் தொடர்ந்து இருந்தது.
வெளியே சிலர் மீனை கருவாட்டுக்கு காயப்போட்டுக்கொண்டிருந்தார்கள் . அதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தான். தான் ஒரு மீன்காரனின் மகன் என்றபோதிலும் ,அவன் தான் அதற்க்கு அன்னியமானவனாகவே கருதியிருந்தான் .தான் படித்துவிட்டு நல்ல வேலைக்குபோகவேண்டுமேன்பதே அவன் ஆசையாக நோக்கமாக இருந்தது .
ஏதோ தனக்கு தெரியாத விஷயத்தை பார்பதுபோல் பார்த்துக்கொண்டிர்ந்தான். சிறிய மீன்களை தென்னம் பாய்களை விரித்துக்காயப்போட்டுக்கொண்டிருந்தார்கள் . பின்னால் வந்து அவனை கவனித்த சாமுனாவின் மனைவி, “என்ன தம்பி கருவாட்டு வாட எப்புடி இரிக்கிது? எங்களுக்கு பழகிப்போய்ட்டு . உங்கட வாப்பா என்ன பண்றாங்கள்’” என்று கேட்டாள்.
“அவங்க மவுத்தானது இப்போதான் .நாப்பது இன்னும் வரலே.அவரும் மீ புடிக்கத்தான் போவாரு .போனவருதான் மையத்தா வந்தாக .நா கடல் தொழிலுக்கு போவ இஷ்டமில்லே ..உம்மாக்கும் ,வாப்பாக்கும் நான் படிச்சி நல்ல வேலக்கி போவணும்னு ஆசை. அல்லாட நாட்டம் வேறமாரி போச்சி” என்றான் பாரி .
“கவலைப்படாதே தம்பி,நலீம் ஹாஜியார் நல்ல மனுஷன் .நீ நல்லபடி நடந்தியனா நல்லபடி வச்சிக்குவாரு” என்றாள்.
“லாத்தா இங்க மீனுக்கு உப்பு தடவாமே சும்மா காயவக்கிராங்களே?” என்றான்.
இது சூட மீன் கருவாடு.உப்புலாம் தடவவேண்டியதில்லே .சூடமீன், தொண்டமீன் மாதிரி சின்னமீனுக்கு உப்பு தேவைப்படாது . பெரிய சீலா மீன் , வாலமீனுக்குதான் உப்பு தடவி ,சாக்க சுத்தி மண்ணுக்குள்ளே போதப்பாங்க .பொறவு வெயில்ல காயப்போடுவாங்க. மொல்லதீவுக்கு போயிருந்தம் .அங்கே மாசி மீனை , புகைப்போட்டு,கருவாடாக்குறாங்க .வொவ்வொரு வகமீனுக்கும் ,கருவாடாக்குறது வேறமாரிதேன்”என்றள் சாமுனாவின் மனைவி.
இன்னக்கி மாட்டுக்கறிதேன் ஆக்குனே.நீ சாப்புடுவியல்ல? என்றாள்
“இதுவர சாப்புட்டதில்ல.அதுனால என்ன இங்க சிலோன்ல மாட்டுக்கறி சகஜமா சாப்புடுவாங்கன்னு கேள்விப்பட்டீக்கிறேன்.சாப்புடுறேன் “ என்றான்.
அந்த கடும் கோடையில் மீன்களை ,கருவாடுகளாய்,மாற்றிக்கொண்டிருந்தது கடுமையான வெயில். ஜன்னலில் கடல்காற்று குளுமையை வீசிக்கொண்டிருந்தால் வெப்பத்தின் தாக்கம் பாரிக்கு தெரியவில்லை . அந்த கடல்காற்றும், இலங்கை வானொலியில் ஒலித்துக்கொண்டிருந்த ஏ.எம்.ராஜாவின் பாடலும் ,கடற்கரையின் மனமான மீன்வாடையுடன் வீசும் பாசியின் வாசனையும், இரவில் சரியாக உறங்காமல்,மீதமிருந்த உறக்கமும் கண்களை சுற்றிவர ,ஜன்னலில் முகம்புதைத்து நாற்காலியிலேயே உறங்கிப்போனான் பாரி.
சாமுனா தொழுதுவிட்டு சாப்பிடவந்திருந்தார் . ஜன்னலில் உறங்கிக்கொண்டிருந்த பாரியை எழுப்பமனமின்றி குளியலறையில் முகம் கைகால் அலம்புவிட்டு வெளியே வந்து துவாளையில் துடைத்துக்கொண்டிருந்தபோது , தெருவில் பனங்கிழங்கு விற்றுக்கொண்டு போனவரின் “கிழம்கோ” என்ற உறத்த சத்தம் எழுப்பி விட்டது .
“என்ன சாப்புடுவமா?” என்று கேட்டார் சாமுனா .பாரியின் பதில், வருவதற்குள் குசுணியை நோக்கி ஏ புள்ள சமையல் முடிஞ்சா ?என்றார் .”ஓம் உக்காருங்கோ “ என்று உள்ளிருந்து பதில் வந்தது .
பாரி எழுந்து நின்று சோம்பல் முறித்தான் “.தம்பி பாத்துரூம்லே முகம் கழுவிட்டு வாங்க” என்றார் மாமுனா.
இருவரும் பனை மரத்தில் செய்யப்பட்டிருந்த மேஜையின் முன் போடப்பட்டிருந்த நாற்காலியில் அமர்ந்தார்கள் .
ஜொஹரா பிங்கான் கோப்பைகளில் கருப்பரிசி சோறு, மாட்டுக்கறி குழம்பு , முருங்கைக்காய் பச்சடியும் , வெங்காயம் எலுமிச்சை ஊறுகாய் சம்பல் ஒன்று ,புளியாணம் (ரசம்) ஆகியவை பரிமாரினாள் .
அலுமினிய தட்டில் தவிர வேறு வகை தட்டில் சாப்பிட்டரியாத பாரிக்கு,அது பெரிய விருந்தாகப்பட்டது.
“என்ன பத்துக்கிட்டீக்ற? சாப்புடு” என்றார் சாமுனா.கருப்பரிசி சோறு முதல்முரையாக சாப்பிட யோசித்தபோது, அதன் ருசி பிடித்திருந்தது. மாட்டுக்கறியும் மிக ருசியாக இருந்தது .ஆனால் காரம் ,இதுவரை அவன் வாழ்நாளில் சாப்பிடாத காரம்.அடிக்கடி தண்ணீர் குடித்து ஆசுவசப்படித்துக்கொண்டான் .
அப்போது அருகில் வந்து அவர்களை கவனித்துக்கொண்டிருந்த ஜொஹரா “என்ன தம்பி ஓரப்பா இரிக்கிதா? சிலோனில இந்த ஒரப்பு கொரவு.இன்னும் ஜாஸ்தியா இரிக்கும்.பழயிக்க” என்றாள்.
“லாத்தா உங்க சமையல் பிரமாதமா இரிக்கிது. .இந்த ஓரப்புதான் சமாளிக்கணும் .இப்புடி நல்ல சாப்பாடு சாப்புட்டு கொள்ள நாளாச்சு” என்றான் பாரி .
சாமுனா “இது என்ன சாப்பாடு நாளையிலேந்து, நலீம் ஹாஜியார் வீட்டு சாப்பாடு. அவர் ஊட்டுல பெரிய குசினில தினம் ஒரு இருபத்தஞ்சி பேருக்காவது ஆக்குவாங்க .வர்றவங்க போரவங்கனு தினம் தடபுடலா இருக்கும் .ஹாஜியாரே நாளக்கி வருறாங்க .சாமான் ராத்திரிக்கி வருது .உன்னபத்தி தகவல் எழுதிட்டேன் .உன்னையும் கூட்டிக்கிட்டுபோவாறு .நல்ல மனுஷன் .நல்லபடியா இருந்தா நல்லபடி செய்வாரு” என்றார் .
அந்த குடிசைக்குள் அடைந்து கிடப்பது ஏதோ சிறைவைத்திருப்பதை போல இருந்த பாரிக்கு நாளை ஹாஜியாரே வருகிறார் என்ற விஷயம் உற்சாகப்படுத்தியது .
சாப்பிட்டதும் மாமுனா “ராத்திரி சரியா தூங்கி இரிக்கமாட்டே.இப்போ நல்லா தூங்கி ரெஸ்டெடுத்துக்க. நாளக்காலயிலே ஹாஜியரோட சீனங்கோட்டைக்குபயணம் போவனும்” என்றார்.
“காக்கா முன்னப்பின்ன தெரியாத எனக்கி ,இவ்வளவு உதவி செய்யிறிய.என்னிக்கும் மறக்க மாட்டேன்.என்றான் பாரி .
தம்பி, நைனாமதுக்கும் எனக்கும் உள்ள உறவு இன்னிக்கி நேத்து வந்ததில்லே. நானும் அவனும் வேதாலக்காரங்கதான் . சின்ன வயசிலேயே இங்கே, ஊட்டுல சண்டபுடிச்சிக்கிட்டு வந்துட்டேன். நைனாம்ஷா தூரத்து சொந்தம்னாலும்,இப்போ எனக்கு சொந்தம்னு சொல்லிக்க அவன உட்டா யாருமில்லே . ஜொஹராவ எனக்கு கல்யாணம் முடிச்சி தந்தது மொதக்கொண்டு அவந்தேன் .அவன் வேண்டிய புள்ளேன்னு சொல்லிப்புட்டான் .உன்னே நல்ல இடத்துல செக்கவேண்டியது எ கடம” என்றார் மாமுனா.
காக்கா, தூங்கீட்டு,அசருக்கு பொறவு கொஞ்சம் ஊர சுத்திப்பாக்கட்டா? என்றான் பாரி.
“இங்கே வல்வெட்டி துறையில, பாக்க என்ன இரிக்கிது. நம்ம ஊர்வ மாதிரித்தேன் . ஆனால் நம்ம ஆக்கள் கோரவு .எல்லாம் கிறிஸ்தவ மார்தான் .அதோட வெளியாள்னு தெரிஞ்சா உடனே பொலிஸ் கிட்ட விபரம் போவும் .பொறவு வம்புதேன் .எனக்கு பொலீசிலே ஆட்க தெரியும்.இருந்தாலும் பொறப்படுற நேரத்துல தொந்தரவு வேணாம் .அங்கே சீனங்கோட்டைல ஹாஜியாரிடம் போயிட்டா உன்னே எவனும் எதுவும் கேக்கமுடியாது. அந்த பக்கம் ரெம்ப செல்வாக்கான ஆளு ஹாஜியார் .சிறிமாவோ ஆச்சி இரிந்தாலும் ,சேன நாயக்க ஆச்சி இரிந்தாலும், ஹாஜியாரோட எல்லாரும் நல்லமாரிதான் .” என்றார் சாமுனா.
“எனக்கி சாப்புட்டதும் அரமணிக்கி தூங்கோனும்” , என்று சாமுனா அறைக்குள் தூங்கப்போனார் .ஜொஹரா குசினியில் சாப்பிட போனாள்.
பாரி முன்னறையில் கிடந்த கட்டிலில் உறங்கி ,விழித்தபோது, நன்கு இருட்டி இருந்தது .ஜோஹரா அரிக்கன் விளக்குகளை துடைத்து ,மண்ணெண்ணெய் ஊற்றி ஏற்றிக்கொண்டிருந்தாள் .
“தம்பி முளிச்சிட்டியா? மொவத்த கழுவீட்டு வா .சாயா கொண்டுக்குட்டுவாறேன் .அவ்வோ வெளிய போயிட்டாக .இனி இசா தொழுவிட்டுத்தே வருவாக .
முகம்கழுவிவிட்டு வந்தபோது பிங்கான் கோப்பையில் சாயாவோடு வந்தால் ஜொஹரா.
சாயா வித்தியாசமாக இருந்தது . வெல்லம் போட்டிருந்தது .”இங்க சீணிக்கு ரெம்ப தட்டுப்பாடு .உனக்கு வெல்லம் சாயா பிடிக்குதா ? ”என்றாள் ஜொஹரா.
“எனக்கு வெல்ல வாசன புடிக்கும் .நல்லா போட்டிக்கிரிய “ என்றான் . ஊருலையும் சீணிக்கு தட்டுப்பாடு அப்பப்ப வரும்போது உம்மா வெல்ல சாயாதான் போட்டுதருவாங்க .எனக்கு வெள்ளசாயா மனம் புடிக்கும் .நீங்க இஞ்சி ,ஏலக்காயிலாம் போட்டிக்கிரிய .ரொம்ப நல்லா இரிக்கிது” என்றான் பாரி .
“ஊட்டுல யார்யாருலாம் இருக்குறாக ?”என்றாள் ஜொஹரா .
“உம்மாவும் ,தங்கச்சியுந்தேன். மாமா பாத்துக்குவாக .இருந்தாலும் மாமா ஊடு கொஞ்சம் தொலவு .வேலவெட்டியா திரியிரவ்வோ.அடிக்கடி வந்து பாக்க முடியாது .” ஊடு தோட்டக்காட்டுக்குள்ளே இரிக்கிது,பக்கத்துல ஒன்னு ,ரெண்டுபேறுதான் இறிக்கிறாங்க . .எல்லாத்துக்கும் அல்லாவே நம்பிதேன் இரிக்கிரம்.” என்றான் பாரி .சொல்லும்போதே அழுகை முட்டிக்கொண்டு வந்தது .ஜொஹரா பார்த்துவிடக்கூடாது என்று கட்டுப்படுத்திக்கொண்டான் . இருந்தபோதும் ,அவன் உடைந்த குரல் சோகத்தை காட்டிக்கொடுத்தது .
கவலப்படாத தம்பி .அல்லா ஒரு வழிய மூடுனா ,இன்னொண்ண தொரப்பான் .நீ யோசிக்காம ஹாஜியார்ட சேந்து ,நல்லவிதமா நடந்துக்க .ஊருக்கு காசு அனுப்பு .அத எதிர்பாத்துக்குட்டுதே இருப்பாக .இங்க சிலோணுல குடி சாஸ்தி .அந்த பழக்கமுலா மானாம் .ஹாஜியார் சொல்ர படி கேளு . அல்லா நன்மையதருவான் என்றால் ஜொஹரா .
“லாத்தா நீங்க சொன்னது எங்க உம்மா சொன்னது மாதிரி இரிக்கிது .கட்டாப்பா அப்புடியே நடப்பேன் லாத்தா” என்றான் .
ராத்ரிக்கி இடியப்பமும் ,பகல்ல உள்ள கறியானமும் இரிக்கிது .சாப்புடுவியா ? இல்ல வேற என்னமாச்சிம் செய்யவா .அவ்வோ என்ன வச்சாலும் மறு பேச்சில்லாம சாப்புட்டுட்டு போயிருவாக .மனுசனுக்கு நல்லா இருக்குது ,இல்லேன்னு சொல்லத்தெரியாது .இங்க இசா தொழுவக்கி பொறவு ஊரே ஓரங்கபோயிரும். அவ்வோவந்ததும் சாப்பாடு வக்கிறேன் .சாப்புட்டு தூங்கு . நாளக்கி ஹாஜியார் வரப்போறதா சொன்னாக . சுபுஹ்ள சீக்கிரமா எழும்பி குளிச்சிட்டு ரெடியா இரி “என்றாள் ஜொஹரா .
5
இரவு முழுதும் அநேகமாக பாரியால் தூங்கமுடியவில்லை . அரைத்தூக்கத்தில் ஏதேதோ நினைவுகளும், கனவுகளும் திரைப்படம்போல் வந்துபோய்க்கொண்டிருந்தது . “
தாயையும் தங்கையையும் பற்றிய நினைவுகள்அவனில்லாமல் அவர்கள் எப்படி சமாளிப்பார்கள் ?மாமா பார்த்துக்கொள்வாரா? .
“ மைமூனா எப்படி இருப்பாள் ?தன் பிரிவை எப்படி எடுத்துக்கொள்வாள் ?எனக்காக காத்திருப்பாளா ? என்னை நினைத்துக்கொண்டிருப்பாளா? நான் திரும்பி வரும்போது மறந்து போய்விட்டிருப்பாளா ? நான் அவர்களையெல்லாம் திரும்ப பார்க்கும் காலம் எப்போது வரும் ? இப்படி வருங்காலம் பற்றி நினைவுகளும் ,
தம்பி கவலை படாதே நான் இருக்குறேன் என்று வாப்பா கனவில் வந்து ஆறுதல் சொல்வதுபோலவும், அவர்கள் ஒரு அழகிய தீவில் சந்தித்துகொள்வதை போலவும் ,அப்போது சாமுனா வருவது போலவும் ,அவரிடம் தன்னை வாப்பா ஒப்படைத்து நல்லா பாத்துக்குங்க என்று சொல்வது போலவும் ,கனவுகளும் வந்துபோனது .
பிறகு மைமூன அதே தீவில் உள்ளே இருந்து வருகிறாள் . மாமா எப்புடி இருக்குறிய என்று வாப்பாவிடம் கேட்கும் மைமூனா ? என்று கனவுலகம் சிறுதுநேரம் ஆக்கிரமித்தது .
ஆனால் அவை முழுமையான தூக்கமாக இல்லை . அதை உடலில் இருந்த அசதி , உணர்த்தியது.
விடியலில் எழுந்த பாரி ,ஏற்கனவே சாமுனா எழுந்து கொல்லையிலிருந்து வந்துகொண்டிருந்தார். தான் நேரம்கழித்து எழுந்துவிட்டோமோ என்ற உறுத்தலுடன்,அவரை பார்த்தான் . அவர் நல்லா தூங்குனியா? இன்னும் தூங்கனும்னா தூங்கு .ஹாஜியார் வர எப்புடியும் ஓம்பது மணியாவும்” என்றார் .
“இல்லை நல்ல தூங்கிட்டேன்” என்று சமாதானமாய் சொன்னான் .” சரி குளுச்சுட்டு ரெடியாவு” ஹாஜியாரே வர்றதா சொல்லிவிட்டிக்கிறாரு.சாதரணமா வர்ற மனுஷன்இல்லே . .உன்ன பாக்கத்தே வறாருன்னு நெனைக்கிறன்” .நல்ல மனுஷன் பாத்து நடந்துக்க” என்றார் சாமுனா .
பின்னர் குசுனிக்குள்ளிருந்து வந்த ஜோஹராவிடம் , “ஹாஜியாரும் வந்துருவாரு .பசியாற என்ன செஞ்சீக்ர “என்றார் .
“இடியப்பமும் ,அப்பமும் இரிக்கிது ,கோழி ஆக்கிகிரென்.வட்டிலப்பமும் வச்சிக்கிறன் .போதும்ல “ என்றாள் ஜொஹரா.
‘போதும் போதும் காலையிலே நாஸ்டா அதுக்குமேல ஓடாது ‘ என்றார் .
பாரி குளிப்பதற்கு கொல்லைக்கு போனான் .
“தம்பி மொதல்ல பல்லு வெளக்கிட்டு ,சாயாகுடிச்சிட்டு போ. அதுக்கு பொறவு குளிக்கலாம்’ என்றால் ஜொஹரா .
அவள் சொன்னதுபோல சாயகுடித்து விட்டு குளிக்கப்போனான் .
தலாமரத்தில் தண்ணீர் இறைத்து குளித்தது ஊரில் குளிப்பதுபோல் இருந்தது .ஊரைப்போன்றே அந்த கிணற்று நீரும் சிறிது உப்புகறிப்போடு இருந்தது .வித்தியாசம்தேரியவில்லை .
அநேகமாக சேதுபூமியோடு இந்த இலங்கையின் மன்னார் பகுதி எந்தவகையிலும் வித்தியாசமில்லை .எல்லை இட்டிருப்பது சில மைல் இடைவெளியில் இந்த வளைகுடா கடல்தான் .மக்களை பிரித்து அவர்கள் பேசும் மொழியின் வட்டார நிறங்களையும் மாற்றி இருக்கிறது .
குளித்துவிட்டுபோனபோது “பசியாறுரியா தம்பி ?“ என்றாள் ஜொஹரா .
“இல்ல லாத்தா, எல்லாரும் வந்தபொறவு சாப்புடரனே “என்றான் பாரி.
சாதரணமாக வெள்ளை கைவைத்த பனியனோடு , கலர் சாரம் அணிந்திருக்கும் மாமுனா ,வெள்ளை முழுக்கை சட்டையோடு , பச்சை கட்டம்போட்டம் போட்ட வெள்ளை சாரம் உடுத்தி புதிய தோற்றத்தில் வந்தார் . எப்போதும் போல தலையில் இருந்த வெள்ளை நிற நெய்த வட்ட தொப்பி , புதிதாக இருந்தது .
எதிர்பார்த்ததுபோல் ,சரியாக ஒன்பதுமணியளவில் ,ஒரு ஹில்மன் கார் வீட்டு வாசலில் வந்து நின்றது .இந்த பகுதியில் அந்த மாதிரி பெரிய கார் பார்ப்பது அபூர்வம் .கொழும்பு ,கண்டி போன்ற நகரங்களில் பார்க்கமுடிகிற கார் அது .
சாமுனா காரின் கதவை திறந்து விட்டார் .வாட்ட சாட்டமான ,அரபிகள்போல் உயரமான ,நல்ல சிவந்த நிறத்துடன் இறங்கிய நபர்தான் ஹாஜியார் என்பது யாரும் சொல்லாமலே பாரிக்கு தெரிந்தது .
இறங்கியதும் , சமுனாவும் அவரும் கட்டி தழுவி சலாம் சொல்லிக்கொண்டார்கள் .தெருவில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள் கூட்டம் ,காரை சூழ்ந்துகொண்டது .வாலிப வயது காரின் டிரைவர் ,அவர்கள் காரை தொட்டுவிடாமல் விரட்டிக்கொண்டிருந்தான் .
ஹாஜியார் வீட்டுக்குள் (குடிலுக்குள் ) வந்ததும் அவருடைய முழு உருவத்தையும் அருகில் பார்த்தபோது ,பாரிக்கு பெரிய மரியாதை அவர்மேல் தோன்றியது .
அவர் போட்டிருந்த நீண்ட கருப்பு குஞ்சத்துடன் கூடிய சிகப்பு துருக்கித்தொப்பி,அவர் உயரத்தை இன்னும் உயர்த்திக்காட்டியது .தூய வெள்ளைநிறத்தில் முழுக்கை சட்டை அணிந்திருந்தார் . அவற்றில் தங்கநிறத்திலான பித்தான்கள் இருந்தன ..கைகளில் மாணிக்க கற்கள் பதிக்கப்பட்ட வெள்ளி மோதிரம் அணிந்திருந்தார் . கையில் விலை உயர்ந்த, பெரிய தங்க நிற (உர்லூஸ்) வாட்ச் அணிந்திருந்தார். நூறாம் நம்பர் மவுலானா சாரம் தும்பை நிறத்தில் உடுத்தி இருந்தார் . சட்டை பையில் விலை உயர்ந்த பேனா குத்தப்பட்டிருந்தத். கண்ணில் தடித்த பிரேம் கண்ணாடி அணிந்திருந்தார் .அவை பாரிக்கு பார்த்தமாத்திரத்தில் நன்கு படித்த ,மார்க்கத்தில் பிடிப்புள்ள பெருந்தனக்காரர் என்பதை தோற்றமும் ,செயலும் உணர்த்தியது .
மாமுனா கையிலிருந்த சிறிய துவாலையால் மரநாற்காலியை துடைத்து ,அவரை அதில் அமரவேண்டினார் . அவர் “அல்ஹம்துலில்லாஹ்” என்று சொல்லிக்கொண்டு அமர்ந்தார் .
ஹாஜியார் “என்ன சாமுனா ஊடு நல்லவசதியாதே இரிக்கிது . ஏ சிமிண்டு வீடா கட்டல ? சொல்லு நா கட்டிதாரன் “ என்றார் ஹாஜியார் .
“நீங்க சொன்னதே போதும் .எனக்கு புள்ளகுட்டி இல்லே .இதுபோதும் .இங்க எல்லா சவுரியமும் இரிக்கிது .இந்த பரக்கத்து போதும் .அல்ஹம்துல்லில்லாஹ் .சிமிண்டு ஊடு கட்டுனா அத்தன கண்ணும் இங்கேதே இரிக்கும் . இந்த ஊர்ள நம்மட ஆட்கள் ரொம்ப கோரவு .சோனவன் ஊடு கட்டுரான்நாக்கா மத்தவங்களுக்கு பொறுக்காது . நிம்மதிதே முக்கியம் ஹாஜியார் .உங்களுக்கு தெரியாததில்லே .” என்றார் மாமுனா .
அதுவரை எல்லாவற்றையும் கவனித்துக்கொண்டு மூலையில் நின்ற பாரியை அழைத்தார் மாமுனா .
“நா எழுதிய பொடியன் இவந்தே” என்றார் மாமுனா.
பார்த்ததும் ஹாஜியாருக்கு பிடித்து விட்டது என்பது அவர் முகத்தில் புன்முறுவலாக வெளிப்பட்டது .
“பேறு என்ன ? தம்பி” என்றார் ஹாஜியார் .
“புஹாரி, எல்லாரும் பாரின்னு கூப்புடுவாங்க” என்றான் .
இது புஹாரி நாயகத்தோட பேரு .அவருக்கு வர்சா வர்சம் புஹாரி சரீபு எங்கட ஊர்ல நடத்துவோம் . அவரோட ஹதீச மக்களுக்கு ஒருமாசம் பூர உலமாக்கள, ஆலிம்கள வச்சி பிரச்சாரம் செய்வோம் . பெரிய விழாவா இரிக்கும் . நமக்கு குரானும் ,ஹதீசும்தானே இஸ்லாம் .’என்றார் . அவர் கோர்த்த ஹதீஸ்தான் ஒத்துக்கொள்ளப்பட்டவை’ என்றார் ஹாஜியார் .
அவர் யார்னு தெரியுமா “என்று பாரியிடம் கேட்டார் .
தெரியும் என்று தலையாட்டினான் .
ஓதிக்ரியா ? படிச்சிக்ரியா ? என்று கேட்டார் ஹாஜியார் .
குரான் முழுசும் பத்து வயசுலேயே முடிச்சுட்டேன் . இப்போ எஸ்செஸ்செல்சி படிச்சிக்கிடீந்தேன் .அப்போதான் வாப்பா மவுதாயிட்டாக” என்றான் பாரி .
“சரி, மத்தது பொறவு பேசுவம்.ஒரு தொழுவ உடாம தொழுவவேனும்”என்றார் ஹாஜியார் .
சரி என்று தலையாட்டினான் பாரி .
ஜொஹரா குசுநியிலிருந்து வந்து ,கதவோரம் நின்றபடி “சோகமா இரிக்கிரியலா ஹாஜியார் ? என்றாள்.
“ரப்பில் ஆலமீன் தயவுல நல்ல இருக்குறன். நீ நல்ல இரிக்கியா, ஒருதடவ நீயும் ,மாமுனாவோட சீனங்கோட்டைக்கி வாங்க . ஊட்டுக்காரியும் புள்ளையளும் பாக்க ஆசப்படுவாக” என்றார் ஹாஜியார் .
“இன்சா அல்லா வர்றோம்” .
“பசியாற வக்கவா? “என்றாள் ஜொஹரா .
“நல்ல பசி . வை மா .” என்றார் ஹாஜியார் .
பனைமர மேஜையில் அழகிய பூப்போட்ட மேஜை விரிப்பு விரித்து,இடியப்பம் ,அப்பம் ,கோழிக்கறி , வட்டிலப்பம் என்று பீங்கான் தட்டுகளில் மேஜையில் அடுக்கினாள் ஜொஹரா .
“நவுபரை கூப்பிடு மாமுனா” என்றார் ஹாஜியார் .
மாமுனா ,வெளியே போய் காரில் உட்கார்ந்திருந்த ட்ரைவர் நவுபரை “வா தம்பி சாப்பிடலாம்” என்று கூப்பிட்டார் .
“நா பொறவு தனியா சாப்புட்டுகொள்ரன். நீங்க சாப்புடுங்க “என்றான் . ஹாஜியாரோடு சாப்பிட சந்கோஜப்படுவது தெரிந்தது. ஹாஜியாரிடம்போய் சொன்னபோது .அவரே வெளியே வந்து “என்ன நவுபர் என்ன விஷயம் .சாப்பிடவர என்ன வெக்கம் .எல்லாம் நாமதானே .பசியாறிட்டு சீக்கிரம் கிளம்பனும். நாம ராத்திரி இஷாக்கு பொறவு கெளம்புனது .இன்னும் பிரயாண அலுப்பு போக இல்லே?இதோட போயிரனும் .ராவைக்கி தூங்க சீனங்கோட்டைல இரிக்கணும் .வா .வந்து நல்லா சாப்புடு .போரவழிலே ஓட்டல்ல நல்ல சாப்பாடு கெடக்கிறது மிச்சம் கஷ்டம் . போய் கொல்லைல மொகம் கை கால் கழுவிட்டு சீக்கிரம் வா .பசியாறீட்டு கிளம்புவம்”என்றார் ஹாஜியார் .
மறுபேச்சில்லாமல் நவுபர் சாமுனவுடன் கொல்லைப்பக்கம் போனான் .
ஹாஜியார் சாப்பாட்டு மேஜை முன் நாற்காலியில் அமர்ந்து கொண்டு பாரியையும் ‘தம்பி இங்கவந்து உக்காரு “ என்று சாப்பிட அழைத்தார் .
அவருடைய அந்த சகஜமான பழக்கவழக்கங்கள் பாரிக்கு பிடித்திருந்தது .அவர் அருகில் சென்று அமர்ந்ததும் மேலும் அவனைப்பற்றிய விபரங்களை கேட்டார் .
“ஓன்னை நம்பித்தே உன் குடும்பம் இரிக்கிது .ஒனக்கு நல்ல வேல தர்றேன் .நல்லபடியா இரிக்கணும் “ என்றார் ஹாஜியார் .
சாமுனவும், நவுபரும் ,கொல்லையிலிருந்து வந்தார்கள் . நால்வரும் மேஜைமுன் அமர்ந்தார்கள் .
‘இன்னும் என்ன யோசனை பண்றீங்க ? ஆரம்பிங்க என்று சொல்லிவிட்டு பிஸ்மி சொல்லி சாப்பிட ஆரம்பித்தார் ஹாஜியார் .அவரை தொடர்ந்து மற்றவர்களும் தங்கள் தட்டுகளில் உணவுகளை எடுத்துவைத்துக்கொண்டு சாப்பிட ஆரம்பித்தார்கள்
நோம்பு பெருநாள் ,ஹஜ்ஜிப்பெருநாள்,போன்ற பெருநாட்களின்தான் பாரி இப்படி விசேசமாக சாப்பிட்டிருக்கிறான் .சாதாரண நாட்களில் ,பழைய சோறு மோர் ,ஊறுகாயுடன் ,அல்லது விற்றுவரும் இடியப்பத்தோடு நேற்றைய மீன் ஆனமும்தான் . இங்கு எல்லாமே புதிதான் . அல்லா நல்லவழி காண்பிக்கிறான் என்று தோன்றியது பாரிக்கு .
இந்த சாப்பாடு பெருநாட்களில் உம்மா செய்யும் சமையல்போலவே இருந்தது .ஜொஹரா லாத்தாவும் நம்மூர் பக்கம்தானே ? அதனால் அதே பக்குவம் இருக்கும் என்று நினைத்தான் .வட்டிலப்பமும் உம்மா வைக்கும் வட்டிலப்பம்போல் இருந்தது .உம்மா போல் கருப்பட்டிபோட்டு செய்திருந்தார்கள் .
அவனையும் மறந்து வயிறுமுட்ட சாப்பிட்டான் பாரி .
இடையில் ஹாஜியார் “நல்லா சாபுடுங்கோ ,இனி ராத்ரிக்கி ஊடு போய் சேருறவர சரியான சாப்பாடு கிடைக்காது” என்றார்.
பாரி ஜோஹராவிடம் போய்ட்டுவாறன் லாத்தா என்று சொன்னபோது ,கண்களிலிருந்து இரண்டு சொட்டு கண்ணீர் வந்து உருண்டது .காரணம் புரியவில்லை .பார்த்த ஜோஹராவுக்கும் அழுகை வந்துவிட்டது . சேலை தலைப்பால் முகத்தை மூடிக்கொண்டு கண்ணீரை தொடைத்துக்கொண்டாள். ஆனால் அவளையும் மீறிய விம்மல் ஒலி வெளியில் வந்தது .ஒரு நாள் பழகியதில் இத்தனை பிரிவின் வலியா ? இருவருக்கும் புரியவில்லை .
உண்மையில் பாரிக்கு உம்மாவையும் , சகோதரியையும் பிரியும்போது மறைந்திருந்த அல்லது அடங்கி இருந்த உணர்சி வெள்ளம்தான் ஜொஹரா லாத்தாவின் பிரிவின்போது உடைத்துக்கொண்டு வெளிவருகிறது என்று பட்டது .
ஜொஹராவுக்கு இந்தியாவில் கல்லூரியில் படிக்கும் தம்பியின் பிரிவு மனதில் பட்டது .
அன்பிற்கும் ,பாசத்திற்கும் பாகுபாடுகள் கிடையாது .எங்கேயும் எப்போதும் தோன்றலாம் . அவை இல்லாமல் போகும் நாளில் மனிதம் மரித்துப்போயிருக்கும்,
- கவிதையும் ரசனையும் – 27 – கானப்ரியன் கவிதைகள்
- காற்றில்லாத கடற்கரை
- அன்பு வழியும் அதிதி – வரத.ராஜமாணிக்கம் நாவல் மதிப்புரை
- தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]
- கொரோனோ தொற்றிய நாய்
- அணு ஆயுதப் புளுடோனியம் ஆக்கிய விஞ்ஞானி கெலென் ஸீபோர்க்
- கதிரியக்கம், கதிரியக்க விளைவுகள், கதிரியக்கப் பாதுகாப்பு முறைகள்
- அந்நிய மண்ணில்
- எமிலி டிக்கின்ஸன் கவிதைகள் – 27
- நில்லாதே போ பிணியே …
- அஞ்சுவாசல் கிட்டங்கி…
- புதிய வாழ்க்கையில் புதிய தலைமுறை – அந்நியர்கள் சுப்ரபாரதிமணியன் நாவல்
- பாடம்
- துருக்கி நாட்டில் நடந்த ரஸ்யா – உக்ரைன் பேச்சுவார்த்தையின் அடுத்த கட்ட நகர்வு என்ன?
- எஸ் சாமிநாதன் விருது வழங்கும் விழா