உக்ரைன் மீது ரஸ்யாவின் ‘கைப்பர்சோனிக்  ஏவுகணைத்’ தாக்குதல்

This entry is part 5 of 14 in the series 27 மார்ச் 2022

 

 

குரு அரவிந்தன்
 
துடுப்பாட்டத்தில் ஓட்டங்களை எண்ணுவது போல, ரஸ்ய – உக்ரைன் யுத்தத்தில் நாட்களை எண்ண வேண்டிய துர்ப்பாக்கிய நிலை எமக்கு ஏற்பட்டிருக்கின்றது. சர்வதேச விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும் போது, கனடாவில் அந்தந்த நாட்டு ரசிகர்கள் தங்கள் நாட்டுக் கொடிகளைத் தங்கள் வண்டிகளில் பறக்கவிடுவது சாதாரண நிகழ்வாக இருக்கும். ஆனால் இம்முறை உக்ரைன் கொடிகளைப் பறக்க விட்டபடி செல்லும் பல வண்டிகளை வீதிகளில் காணமுடிகின்றது. இன்றுடன் யுத்தம் ஆரம்பித்து 27 நாட்களாகிவிட்டன. ரஸ்யா தனது ஆயுதப் பலத்தை மேற்கு நாடுகளுக்குக் காட்டுவதற்காக 18 ஆம் திகதி பரிட்சார்த்தமாக உக்ரைனில் மேற்கே உள்ள டெல்யாரின் என்ற கிராமத்தில் இருந்த இராணுவ ஆயுதக் களஞ்சியத்தை ‘கைப்பர்சோனிக் ஏவுகணை’ மூலம் தாக்கி அழித்திருக்கின்றது. இந்த ஏவுகணை ஒலியைவிட 5 மடங்கு வேகம் கொண்டதால், இந்த ஏவுகணையைத் தாக்கி அழிப்பது கடினமானது. அமெரிக்காவிடம் தற்போது இருக்கும் பாதுகாப்பு ராடர்களால் இதைக் கண்டுபிடிப்பது கடினமாக இருக்கலாம் என்று ஆய்வாளர் கருதுகின்றனர். இது போன்ற ஏவுகணைத் தாக்குதலில் இருந்து பாதுகாக்கக்கூடிய இரும்புக் கவசங்கள் கொண்ட 3 கப்பல்கள் அமெரிக்காவிடம் இருந்தாலும், இன்னும் அவை வெள்ளோட்டம் விடப்படவில்லை.
 
இத்தகைய ஏவகணைகளில் அணுவாயுதம் இணைக்கப்பட்டால், தடுத்து அழிக்க முடியாத நிலை ஏற்படலாம். சென்ற டிசெம்பர் மாதம் தங்களிடம் இத்தகைய ஆயுதங்கள் இருப்பதாக ரஸ்ய அதிபர் புதின் தெரிவித்திருந்தார். அது வெறும் வாய் வார்த்தை அல்ல என்பதைச் செய்கையிலும் காட்டி இருக்கின்றார். முதலாவது ஏவுகணைத் தாக்குதலை நம்பாதவர்களுக்காக இரண்டாவது தடவையாகவும் கருங்கடலில் உள்ள கப்பலில் இருந்து அதிவேக ஹைப்பர்சோனிக் ஏவுகணைத் தாக்குதல் நடத்தி இருக்கிறார்கள். இத்தடவை உக்ரேனிய கவசவாகனங்களைப் பழுதுபார்க்கும் தொழிற்சாலை மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெரிகின்றது. உக்ரைனின் எரிபொருள் சேமிப்பு நிலையங்களையும் இத்தகைய ஏவுகணைகளைக் கொண்டு அழிக்கப்போவதாக ரஸ்யா குறிப்பிட்டிருக்கின்றது.
 
ரஸ்யாவின் உக்கிரமான தாக்குதலுக்கு உக்ரைனின் தலைநகரான கீவ், இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ், துறைமுக நகரமான மரியுபோல் ஆகியன உள்ளாகி இருக்கின்றன. எறிகணைத் தாக்குதலும், விமானத் தாக்குதலுமே இப்பகுதியில் அதிகமாக நடைபெறுகின்றன. இந்த மூன்று இடங்களும் ரஸ்யாவிடம் விழும் பட்சத்தில், உளரீதியாக உக்ரைன் மக்கள் வலு இழந்து விடுவார்கள். அதனால்தான் ரஸ்யா இந்த மூன்று இடங்களையும் குறிவைத்துத் தாக்குகின்றது. இதில் ரஸ்யா கவனமாகச் செயற்படாவிட்டால், ஏதாவது ஒரு காரணத்தைக் காட்டி உலகநாடுகள் தலையை நுழைக்கக் காத்திருக்கின்றன என்பது ரஸ்யா அறிந்ததே! அப்படி நடந்தால், இரண்டாம் உலக யுத்தத்தின் போது ஒதுங்கியிருந்த அமெரிக்கா எப்படி உள்வாங்கப்பட்டதோ, அதேபோல  இப்போது ஒதுங்கி இருக்கும் சீனா மறைமுகமாக ரஸ்யாவுக்கு உதவ முன்வரலாம். அப்படி ஒன்று நடக்கும் பட்சத்தில் அது உலக யுத்தமாக மாறிவிட வாய்ப்புண்டு. செஞ்சோற்றுக் கடன் தீர்க்க இந்தியா மௌனமாக இருக்கின்றது.
 
உக்ரைனுடனான ரஸ்ய யுத்தம் காரணமாக உக்ரேன் மக்கள் அகதிகளாக்கப் பட்டிருக்கின்றனர். பொதுவாக யுத்தம் என்று வரும்போது இரண்டு பக்கத்திலும் மக்கள் அகதிகளாக்கப் படுவதுண்டு. ஆனால் இதுவரை ஒரு பக்கத்து மக்கள், அதாவது உக்ரைன் மக்கள் மட்டுமே அகதிகளாக்கப் பட்டிருக்கின்றனர். காரணம் உக்ரைன் இதுவரை ரஸ்யாவைத் தாக்கவில்லை, தற்பாதுகாப்பு யுத்தமே மேற்கொள்கிறார்கள். உக்ரைன் திருப்பித் தாக்கத் தொடங்கினால், அது உலக யுத்தமாக மாறிவிட வாய்ப்புண்டு. அகதிகளாக்கப் பட்டவர்களில் இடம் பெயர்ந்த உக்ரைன் மக்களும், புலம் பெயர்ந்த உக்ரைன் மக்களும் இடம் பெறுவர். ஐ.நா.வின் புலம்பெயர்ந்தோர் அறிக்கையின் படி இதுவரை 30 இலட்சம் 20 ஆயிரம் உக்ரைன் மக்கள் அயல் நாடுகளுக்குப் புலம் பெயர்ந்து இருக்கிறார்கள். 6.5 மில்லியன் மக்கள் உக்ரைன் நாட்டுக்குள்ளேயே வெவ்வேறு இடங்களுக்கு இடம் பெயர்ந்து இருக்கிறார்கள். 12 மில்லியன் மக்கள் இடம் பெயர்ந்து போவதற்கு முடியாமல் யுத்தம் நடைபெறும் பகுதிகளில் அகப்பட்டுத் தவிக்கிறார்கள். பாலங்களும், போக்குவரத்து பாதைகளும் குண்டு வீசி அழிக்கப்பட்டதாலும், ஊரடங்குச் சட்டம் நடைமுறைப் படுத்தப் பட்டிருப்பதாலும் அப்பகுதிகளில் இருந்து மக்கள் வெளியேற முடியாமல் சிக்கித் தவிக்கிறார்கள்.
 
உக்ரைனில் ரஸ்யாவின் விமானத்தாக்குதல், எறிகணைத் தாக்குதல் போன்றவற்றால் கொல்லப்பட்ட 109 குழந்தைகளின் நினைவாக, அஞ்சலி செலுத்தும் வகையில் குழந்தைகள் பாவித்த தொட்டில் வண்டிகளைப் பிள்ளைகளின் சமாதி போலப் பொது இடமான லிவில் நகரமண்டபத்திக்கு முன்னால் சென்ற வாரம் வரிசையாக நிறுத்தி வைத்திருந்தபோது, பலரின் மனதையும் உருகவைத்துக் கண்களை நனைய வைத்தது. ஒன்றுமே அறியா அப்பாவிக் குழந்தைகள் இலக்கு வைக்கப்பட்டுக் கொல்லப்பட்டபோது, யாராக இருந்தால் என்ன, அந்தப் பெற்றோரின் மனம் என்ன பாடுபட்டிருக்கும் என்பது ஒவ்வொரு பெற்றோரும் வலியோடு நினைத்துப் பார்த்திருப்பார்கள். எப்பொழுதுமே யுத்தம் என்று வந்துவிட்டால், இயலாமையின் வெளிப்பாடாய் பெண்களும், குழந்தைகளும்தான் மனநோயாளர்களான எதிரிகளால் முதலில் இரையாக்கப் படுகின்றார்கள். மக்களை உளரீதியாகப் பலவீனப் படுத்துவதுதான் இதன் முதல் நோக்கம். இது போன்ற ஒரு நிலைமை இலங்கைத் தமிழர்களுக்கும் யுத்தகாலத்தில் பல தடவை நடந்தது நினைவிருக்கலாம். கல்வியறிவூட்டும் புனிதமான கோயில்கள்தான் பாடசாலைகள் என்று தெரிந்தும், பாடசாலைகள் மீது விமானத் தாக்குதல் நடத்தப்பட்டுச் சிறார்களைப் பலி எடுத்துவிட்டு, அதற்குப் பயங்கரவாத முத்திரை குத்தப்பட்டதும் மக்கள் நினைவை விட்டு என்றென்றும் அகலப் போவதில்லை.
 
இதற்கிடையே ரஸ்ய சரக்கு விமானம் ஒன்று ரொறன்ரோ பியர்சன் விமான நிலையத்தில் அவசரமாகத் தரை இறங்கி இருந்தது. உக்ரைன் விவகாரத்தில் ரஸ்ய விமானங்களுக்குத் தடைவிதித்திருந்த நிலையில், முன்னறிவிப்பு இல்லாமல் தரை இறக்கப்பட்டதால், திரும்பவும் புறப்பட்டுச் செல்வதற்கு வொல்கா டினிபிர் நிறுவனத்திற்குச் சொந்தமான இந்த விமானத்திற்குத் தடைவிதிக்கப்பட்டதால், தற்போது விமானத் தரிப்பிடம் ‘என்’ இல் நிறுத்தப்பட்டிருக்கின்றது. இந்த விமானம் சீனாவில் இருந்து அலாஸ்கா அங்கரேய்ச் வழியாக கனடாவுக்கு வந்திருந்தது.
 
கனடாவின் கடற்படைக் கப்பலான எச்.எம்.சி.எஸ். கலிபாக்ஸ் சென்ற சனிக்கிழமை நேட்டோ அமைப்பின் வட அட்லாண்டிக் பால்டிக் பிரதேச பாதுகாப்புக்கு உதவுவதற்காக கலிபாக்ஸில் இருந்து புறப்பட்டுச் சென்றது. 1992 ஆம் ஆண்டு முதல் சேவையில் இருக்கும் இந்தக் கப்பல் 440 அடி நீளமானது. நீர்மூழ்கி எதிர்ப்பு, மற்றும் ஹெலிகொப்டர் வசதிகளைக் கொண்டது. 253 கடற்படை வீரர்களைக் கொண்ட இந்தக் கடற்படைக் கப்பல் புறப்பட்ட போது அவர்களின் குடும்பத்தினரும் அங்கு வந்து பிரியாவிடை கொடுத்து அனுப்பினார்கள். இந்தக் கப்பல் தொடர்ந்து அடுத்த ஆறு மாதங்களுக்கு அப்பகுதியில் கடமையில் ஈடுபடும். ஏற்கனவே அனுப்பப்பட்ட எச்.எம்.சி.எஸ். மொன்றியல் கடற்படைக் கப்பலுடன் இணைந்து கலிபாக்ஸ் செயற்படும். தமிழரான கனடா பாதுகாப்பு அமைச்சர் அனிட்டா ஆனந்த் அவர்கள் உத்தியோக பூர்வமாகக் கப்பலை வழியனுப்பி வைத்தார். அட்டவணை நிகழ்ச்சி நிரலின்படி இந்தக் கப்பல் அடுத்த வாரம் மத்திய கிழக்கிற்குச் செல்ல இருந்தது, ஆனால் தற்போதைய உக்ரைன் – ரஸ்யா அவசர நிலை காரணமாகப் பால்டிக் நோக்கித் திசை திருப்பப்பட்டது.
 
இதுவரை ரஸ்ய இராணுவ வீரர்கள் 14,400 பேர்வரை இந்த யுத்தத்தில் கொல்லப்பட்டிருப்பதாக உக்ரைன் அறிவித்திருக்கின்றது. இதைவிட 95 யுத்த விமானங்கள், 115 ஹெலிகொப்டர்கள், 1470 கனரகவாகனங்கள், 213 பீரங்கிகள் போன்றவையும் உக்ரைன் இராணுவ வீரர்களால் அழிக்கப்பட்டிருக்கின்றன. ரஸ்யாவின் பக்கத்து நாடான பெலாரஸ்ஸை ரஸ்யா தனது ராணுவத் தேவைகளுக்காகப் பயன்படுத்துவதும் இப்போது அம்பலமாகி இருக்கின்றது. பெலாரஸின் ஹோம் விமான நிலையத்தில் இருந்து உக்ரைன் நோக்கித் தாக்குதல் டரோன் புறப்பட்டதை வீடியோ படங்கள் வெளிப்படுத்தியிருந்தன.
 
இந்த யுத்தம் சம்பந்தமாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் காணொளி மூலமாக ஆலோசனை நடத்தியிருந்தார்கள். நேட்டோ நாடுகளின் தலைவர்களையும், ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்களையும் சந்திப்பதற்காக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் பெல்ஜியம், மற்றும் போலாந்து ஆகிய நாடுகளுக்குச் செல்ல இருக்கின்றார். அவரைப் போலாந்தின் எல்லையில் உள்ள உக்ரைன் நாட்டுக்கும் வரும்படி முன்னாள் உக்ரைன் அதிபர் வேண்டுகோள் விடுத்திருந்தார். இந்த யுத்தம் இப்போதைக்கு முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்க முடியவில்லை, வல்லரசுகளின் ஆயுதப் பலப்பரீட்சை யுத்தமாகவே இது இருக்கப் போகின்றது.
 
Series Navigationபட்டறை என்ற சொல்…எமிலி டிக்கின்சன் கவிதைகள் – 29
author

குரு அரவிந்தன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *