பட்டறை என்ற சொல்…

author
2
0 minutes, 21 seconds Read
This entry is part 4 of 14 in the series 27 மார்ச் 2022

 

 

 

கோ. மன்றவாணன்

 

உலோகத் தொழில், மர வேலை செய்யும் இடத்தைத்தான் பட்டறை என்ற சொல் குறிக்கும். ஆனால் அந்தச் சொல்லைக் கொண்டு உருவாக்கும் கூத்துப் பட்டறை, செந்தமிழ்ப் பட்டறை, பேச்சுப் பட்டறை, கவிதைப் பட்டறை போன்ற சொல்கூட்டுகள் தவறானவை என்று சிலர் வாதிடுகிறார்கள்.

இந்தப் பட்டறை என்ற சொல்கூட, பட்டடை என்னும் சொல்லில் இருந்து வந்ததாகச் சிலர் சொல்கிறார்கள். படு என்பதுதான் அதன் வேர்ச்சொல்லாக இருக்கும். படு என்ற சொல் செயல்படுதலைக் குறிக்கும். அனுபவத்தைக் குறிக்கும். படு என்ற சொல்லில் இருந்து பாடு என்ற சொல் வந்திருக்கும்.“பட்டது போதும் பெண்ணாலே இதைப் பட்டினத்தாரும் சொன்னாரே…” என்ற பாடலில் பட்டது என்பது செயல் அனுபவத்தை வெளிப்படுத்துகிறது. “பட்ட பாட்டுக்கு எந்தப் பயனும் கிடைக்கவில்லை” என்ற பேச்சு வழக்கும் உண்டு. பட்டறிவு என்ற சொல்லும் அனுபவ அறிவைத்தான் குறிக்கும் என்பது உங்கள் எல்லாருக்கும் தெரிந்ததுதான்.

அனுபவத்தின் வாயிலாக ஒன்றைக் கற்றுத் தேர்வதற்கு உரிய இடத்தையும் பட்டறை என்ற சொல் குறிக்கிறது.

Workshop என்ற ஆங்கிலச் சொல்லுக்குத் தமிழில் பட்டறை என்ற சொல் பொருந்துகிறது. பட்டறை என்ற சொல், பழந்தமிழ் இலக்கியங்களில் கிடைக்கவில்லை. இந்தச் சொல் மக்கள் வழக்கில் நெடுங்காலமாக இருந்து வருகிறது.

உலோகம், மரம் தொடர்பான பணி நடக்கும் இடத்தைக் குறிக்கத்தான் பட்டறை என்ற சொல்லை நம் முன்னோர் பயன்படுத்தி வந்தார்கள் என்பது உண்மைதான். ஆனால் ஒரு சொல்லுக்குப் பல பொருள்கள் தமிழில் உண்டு என்பதை மறுக்க முடியாது. பட்டறைக்கு இயந்திரம், தொழிற்சாலை, வீட்டின் உத்திரம், மக்கள் கூட்டம், நெல் சேமிக்கும் சாக்கு, தோணி தாங்கி போன்ற பொருள்களும் உண்டு.

Workshop என்ற ஆங்கிலச் சொல்லுக்கு ஆக்ஸ்போர்டு அகரமுதலி கீழ்க்கண்டவாறு பொருள்கள் தருகிறது.

  1. ஒரு குறிப்பிட்ட பொருள் பற்றி அறிய, குறிப்பாக விவாதங்கள் அல்லது செயல்பாடுகளில் பங்கேற்பதன் மூலம் ஒரு குழுவாக மக்கள் கூடும் நிகழ்வு. (An occasion, when a group of people meet to learn about a particular subject, especially by taking part in discussions or activities.)
  2. பொருட்கள் தயாரிக்கப்படும் அல்லது பழுது நீக்கப்படும் அறை அல்லது கட்டடம். (A room or building, in which, goods are manufactured or repaired.)

மெரியம் வெப்ஸ்டர் அகரமுதலி தரும் பொருள்கள் வருமாறு :

  1. தயாரிப்பு அல்லது கைவினைப் பொருட்கள் செய்யும் ஒரு சிறிய நிறுவனம் (A small establishment where manufacturing or handicrafts are carried on)
  2. பணிமனை, பணியறை (WORK ROOM)
  3. ஒரு குறிப்பிட்ட துறையில் உள்ள நுட்பங்களை மற்றும் திறன்களை அறிவதற்கான முனைப்புக் கல்வித் திட்டம். (A usually brief intensive educational program for a relatively small group of people that focuses especially on techniques and skills in a particular field.)

ஆங்கில அகரமுதலிகள்படி ஒர்க் ஷாப் என்ற சொல், தொழில்நடக்கும் இடத்தையும் குறிக்கிறது. ஒரு பொருள் அல்லது திறன்நுட்பம் பற்றிச் செயல் / விவாதம் மூலமாகக் கற்றுத் தேர்வதற்கான நிகழ்வையும் குறிக்கிறது.

சென்னைப் பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ள ஆங்கிலம் – தமிழ்ச் சொற்களஞ்சியத்திலும் ஒர்க் ஷாப் என்பதற்குப் பட்டறை, பணிப்பட்டறை, பயிலரங்கு ஆகிய பொருள்கள் தரப்பட்டு உள்ளன.

தமிழில் வெறும் பட்டறை என்று சொன்னால் கொல்லுப் பட்டறையா, தச்சுப் பட்டறையா என்று தெரியாது. அதனால் தொழிலைக் குறிப்பாகச் சொல்வதற்கு முன்சொல் இணைக்கிறோம்.

அதுபோல் செயல்வழி கற்றல் நி்கழ்விலும் வெறும் பட்டறை என்று குறிப்பிடாமல் பேச்சுப் பட்டறை, கவிதைப் பட்டறை என்று முன்சொல் இட்டுக் குறிப்பிடுகிறோம். எனவே குழப்பம் வராது.

“செந்தமிழ்ப்  பயிற்சிப்  பட்டறை என்றால் இங்கே தமிழை உடைத்து அறுத்து ஏதும் செய்வாரோ?” என்று இடக்காகக் கேள்வியும் எழுப்பித் தமக்குள் பெருமிதம் கொள்கிறார்கள் சில புலவர்கள். மழமழ மாம்பழக் கன்னம் என்று எழுதினால், கடித்துப் பார்த்தால் தித்திக்குமா என்று கேட்பார்கள் போலும்.

ஒரு தச்சுப் பட்டறையில் ஒழுங்கற்ற மரத்தை அறுத்து, இழைத்து, ஒழுங்குபடுத்திப் பயன்தரும் பொருள்களாக மாற்றுகிறார்கள். அதுபோல் பட்டறையில் ஒரு பொருளை உருவாக்குவதுபோல் கவிதைப் பட்டறையில் நல்ல கவிதையை உருவாக்கும் திறனைப் பெறலாம். மொழிப் பட்டறையில் பிழையற்ற மொழிநடையைக் கற்கலாம். கூத்துப் பட்டறையில் பல்வேறு கலைத்திறன்களைப் பயிலலாம். போதிக்கும் அறிவு மறந்து போகலாம். புரியாமலும் போகலாம்.  செயல்மூலம் சாதிக்கும் அறிவோ நம் வாழ்நாள் முழுவதும் கூடவே வரும். பட்டறையில் கழிக்கப்பட்ட கூளங்கள் இருக்கும். இத்தகைய திறன் வளர்க்கும் பட்டறையில் நம் தவறுகள் கழிக்கப்பட்டு இருக்கும்.

பேச்சுப் பட்டறை என்றால் அங்கே சிறந்த பேச்சாளர்கள் உருவாகலாம். கடலூரில் பேச்சுப் பட்டறை என்ற அமைப்பு இருந்தது. வாரம் தோறும் சிலர் கூடிப் பல்வேறு தலைப்புகளில் பேசிப் பயிற்சி பெற்றார்கள்.

நாடகப் பயிற்சி அளிக்கிற இடத்தை / அமைப்பைக் கூத்துப் பட்டறை என்று சொன்னால் என்ன குறைந்துவிடும்? எப்படித் தவறு நேர்ந்துவிடும்? கூத்துப் பட்டறை என்று கூறாமல் கூத்துப் பயிற்சிக் களம் என்று சொல்ல வேண்டும் என்கிறார்கள். கவிதைப் பட்டறையைக் கவிதைப் பயிற்சிப் பள்ளி என்று சொல்ல வேண்டும் என்கிறார்கள். மூன்று சொற்களைக் கொண்டு சொல்லாக்கம் செய்வது சிறப்பு ஆகாது.

பொருள் உருவாக்கும் பட்டறையின் தன்மையை ஒத்திருப்பதால்… திறன் உருவாக்கும் இடத்தைக் குறிக்கவும் பட்டறை என்ற சொல் ஒத்து வருகிறது..

கவியரங்கம் என்பதற்கும் கவிதைப் பட்டறை என்பதற்கும் வேறுபாடு உண்டு. கவியரங்கில் கவிதை படிப்பார்கள். கவிதைப் பட்டறையில் கவிதை சொல்லவும் கவிதையைச் செப்பம் செய்யவும் கவிநுட்பங்கள் கற்கவும் வாய்ப்புகள் கிடைக்கும். பட்டறையில் தரமான பொருள் உருவாவது போல், இத்தகைய திறன்வளர்ப்புப் பட்டறையில் நல்ல கலைஞர்கள் / கவிஞர்கள் / வல்லுநர்கள் உருவாகுவார்கள்.

ஆக…. கவிதைப் பட்டறை, கூத்துப் பட்டறை என்று சொல்லலாம்.

மேலோட்டமாக ஆய்ந்தால் பட்டறை என்ற சொல்லைப் பட்டு + அறை என்று பிரிக்கலாம். பட்டு என்ற சொல் பட்டு அறிதலை / செயலை உணர்த்துகிறது. அறை என்று சொல் பட்டு அறியும் இடத்தைக் குறிக்கிறது. ஆக… பட்டறை என்ற சொல் இயற்கையாகவே ஒர்க் ஷாப் என்ற ஆங்கில சொல் வழக்குகளுக்குப் பொருந்தி வருகிறது.

WORKSHOP என்ற ஆங்கிலச் சொல்லாட்சியை அப்படியே மொழிபெயர்த்துப் பயன்படுத்த தமிழ் என்ன பிச்சைக்கார மொழியா என்று கேட்கிறார்கள். தமிழின் பெரும்பான்மையான கலைச்சொற்கள் ஆங்கிலம் உள்ளிட்ட பிற மொழிச் சொற்களை மொழிபெயர்த்துச் செய்தவையே. அவ்வாறு மொழி பெயர்க்கத் தமிழ் வளமாகவும் உள்ளது. இது தமிழுக்குப் பெருமையே.

புதுப்புதுக் கலைகளும் புதுப்புதுக் கருவிகளும் புதுப்புதுத் துறை அறிவுகளும் மேலை நாடுகளில்தாம் உள்ளன. அவற்றை நாம் மொழிபெயர்த்துத்தான் ஆக வேண்டும். அப்படிச் செய்வதுதான் தமிழுக்கு வளர்ச்சி ஆகும். தமிழை அடுத்த அடுத்த நூற்றாண்டுகளுக்குக் கொண்டு செல்லும் வழிமுறையும் இதுதான். இதைப் பாரதியார் நூறாண்டுகளுக்கு முன்னமே சொல்லி உள்ளார்.

“புத்தம் புதிய கலைகள் – பஞ்ச

பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும்

மெத்த வளருது மேற்கே – அந்த

மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை”

என்ற வசை, தமிழ்மொழிக்கு ஏற்படாமல் இருக்கவே

“சென்றிடுவீர் எட்டுத் திக்கும் – கலைச்

செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்குச் சேர்ப்பீர்” என்றார் பாரதியார்.

பட்டறை என்ற சொல்கூட ஒர்க் ஷாப் என்ற சொல்லின் மொழி பெயர்ப்பு இல்லை. ஒர்க் ஷாப் என்பதை மொழி பெயர்க்க வேண்டுமானால் பணிமனை என்றுதான் மொழி பெயர்க்க வேண்டும். பணிக்கடை என்று மொழி பெயர்த்தால் நகைப்புக்கு உள்ளாகிவிடும். பட்டறை என்ற சொல் பணிமனை என்பதைவிடப் பொருள்செழுமை வாய்ந்த சொல். தமிழிலேயே உருவான மக்களின் சொல்.

தற்கால மொழி வளர்ச்சிக்கு ஏற்ப, பட்டறை என்ற சொல்லானது பொருள் உருவாக்கும் இடத்தையும் குறிக்கும். நுட்பங்ளைக் கற்றுத் தேர்வதற்கான இடத்தையும் குறிக்கும். இவற்றை இன்றைய தமிழ் ஏற்றுக்கொண்டது. மக்களும் பயன்படுத்தி வருகிறார்கள். க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதியும் இணைத்துக்கொண்டது.

தமிழ் மேலும் மேலும் மெருகு ஏறித்தான் வருகிறது. நம் புலவர்கள்தாம் துருப்பிடித்துக் கொண்டிருக்கிறார்கள்..

 

Series Navigation“அந்த நாட்களில் மழை அதிகம்” என்ற அஜயன் பாலாவின் புத்தகத்தை முன் வைத்துஉக்ரைன் மீது ரஸ்யாவின் ‘கைப்பர்சோனிக்  ஏவுகணைத்’ தாக்குதல்
author

Similar Posts

2 Comments

  1. Avatar
    Valavaduraiyan says:

    பட்டறை குறித்த மன்றவாணனின் ஆய்வு பல ஐயங்களைப் போக்குகிறய்ஹு. பாராட்டுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *